Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts
Wednesday, May 17, 2017
Sunday, January 15, 2017
கேபிடலிஸம், சோஸியலிஸம், கம்யூனிஸம்
ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும்.
ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாகியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது.
சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான்.
நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது?
அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான்.
ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.
ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய்.
ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய்.
எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.
மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர்.
இதைக் கண்ட இன்னொருவனுக்கு தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது.
அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று.
இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் தாங்களும் சுரங்கம் வெட்ட முனையவே... முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
ஏரியின் நீரை கிராமத்திற்கு கொண்டுவர தாங்களே முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்க தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது என கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்கு கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.
மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.
அது மட்டுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது.
இதுதாங்க முதலாளித்துவம்.
உண்மையை இப்பொழுது ஆராய்வோம்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உழைப்பு மற்றும் அறிவு.
மத்தபடி அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது.
சாதாரண மனிதன் தன் உழைப்பினால் தினம் தினம் சம்பாதிக்கிறான்.
அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். தன்னைச் சுற்றி இருப்போரின் பிரச்சனைகளைப் பார்க்கிறான்.
அந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறான். அங்கே தன் உழைப்பையும், தான் சேகரித்த செல்வத்தையும் முதலீடாக்குகிறான்.
தன்னுடைய அறிவினால் பிரச்சனைகளைக் குறைப்பதால் அவன் தான் கைவைத்த இயற்கை வளங்களை தனதாக்கிக் கொள்கிறான்.
அதாவது தனது அறிவு மற்றும் பண பலத்தினால் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளத்தைத் தனதாக்கிக் கொண்டு விற்க ஆரம்பிக்கிறான்.
அவன் உழைப்பை விற்கவில்லை. விற்றிருந்தால் அவன் அன்றாடங்காய்ச்சி ஆகியிருப்பான். அது பொதுவுடைமை தத்துவம்.
அவன் அறிவை விற்கவில்லை. விற்றிருந்தால் அது ஊர் பொதுகாரியமாக மாறி இருக்கும். ஊரே சேர்ந்து சுரங்கம் வெட்டி, மிகக் குறைந்த செலவில் தண்ணீர் அருந்தியிருப்பார்கள். பராமரிப்புசெலவிற்காகும் தொகை மட்டுமே மக்கள் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அது சோஷியலிஸம்.
இரண்டையும் விட்டு ஊருக்கே பொதுவான இயற்கை வளம், ஊருக்கே பொதுவான நிலம் ஆகியவற்றை தனதாக்கிக் கொண்டு, பொதுச் சொத்தான இயற்கை வளத்தை விற்றதால் அவன் மிகப் பெரிய பணக்காரனாக ஆகிறான்.
இந்தப் பணம் அவன் இன்னுமொரு இடத்தில் இன்னுமொரு விஷயத்தில் முதலீடாகி இன்னும் பலமடங்கு இலாபம் தரும். இது முதலாளித்துவம்.
அதாவது முதலாளித்துவத்தில் பொதுச்சொத்துக்களை தனியார் கைப்பற்றுவதே மிக முக்கிய அடிப்படையாகிப் போகிறது. அதனால் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் பணக்காரர்கள், அவர்களை அண்டிப்பிழைப்போர்கள் மற்றும் ஏழைகள் என மூன்று பிரிவினைகள் உண்டாகின்றனர்.
இவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்.
முதலாளித்துவத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிவதால் பல பெரிய காரியங்களை முதலீடு செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு ஆதாரம் தங்கள் உழைப்பை விற்கும் ஏழைகளும், அறிவை விற்கும் அண்டிப் பிழைப்பவர்களும்.
அறிவை விற்பவர்களை மயக்கத்தில் வைத்திருப்பதும், உழைப்பை விற்பவர்களை அறியாமையில் வைத்திருப்பதும் முதலாளிகளின் தந்திரங்கள்.
உழைப்பை விற்பவர்களும் அறிவை விற்பவர்களும் விழித்துக் கொண்டால் முதலாளித்துவம் ஒழிந்து போகும். அதை தடுக்கவே கன்ஸ்யூமரிஸம் எனப்படும் நுகர்வு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. இது உலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது என்ற உண்மையை ஆழக்குழிதோண்டி புதைத்து விடுகிறது.
ஆக முதலாளித்துவத்தில் மட்டுமே பெரும் பணக்காரர்கள் உருவாகிறார்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள், அவற்றை விற்றே மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.
அவர்களை அண்டிப்பிழைக்கும் அறிவாளிகள் தங்கள் பங்கிற்கு முதலாளிகளுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்க வாய்ப்புகளை உண்டாக்கி அதில் பெறும் சன்மானங்களால் சிறிது சிறிதாக தாங்களும் முதலாளிகளாக முயற்சிக்கிறார்கள். ஆனாலும் இவர்களால் பண முதலைகளுடன் மோதி இயற்கை வளங்களை கைப்பற்ற முடியாததால் பலர் வெறும் ஜால்ராக்களாகவே முடிந்து போகிறார்கள். இங்கேதான் பெருமுதலாளிகள் ஆகுபவர்கள் செல்வத்தை மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி மேல் நோக்கி பயணிக்கிறார்கள்.
ஆனால் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னேறவே முடிவதில்லை. அவர்கள் தங்கள் வம்சங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்கிறார்கள்.
செல்வமும் அதிகாரமும் கைகோர்த்துக் கொண்டால் உழைப்பும் கல்வியும் அங்கே அடிமைகளாகி விடுகின்றன.
இன்று நமது நாட்டின் நிலையும் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. சோஷியலிஸத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.
Tuesday, July 12, 2016
காற்று வெளியிடை!!!
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(காற்று)
நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் - நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
(காற்று)
காற்றின் குணங்கள் பல.
அதை ஸ்பரிசத்தால் மட்டுமே உணர முடியும். கையில் பிடித்தால் நழுவி விலகும்.
காற்றில் தென்றலும் உண்டு புயலும் உண்டு.
பல்வேறு சுழிவுகள் தோன்றி மறையும் அற்புத விந்தை உலகம் காற்றுவெளி.
கையில் பிடித்தால் நழுவும் இடை கொண்ட கண்ணம்மா.
இழுத்து அணைக்கிறார், இலாவகமாய் அவள் இடை பிடியிலிருந்து நழுவுகிறது.
நீரிடை என்று சொல்லி இருக்கலாமே ஏன் காற்று இடை என்று சொன்னார்?
நீருக்கு கொள்ளும் கலன் தேவை. காற்றுக்குத் தேவையில்லை.
நீர் நீ குடித்தால்தான் உன்னுள் புகும். காற்று தன்னிஷ்டப்படி நுழைந்து விடும்.
நீரிலிருந்து ஒதுங்கி விடலாம்.. காற்றிலிருந்து இயலாது
அவர் நினைவு முழுதும் ஆக்ரமிருத்திருக்கும் காற்று அவள் இடை.
அவள் இடையில் முகம் புதைந்த அவர் சொல்லுகிறார்.
காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.
இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.
தன் காதலியுடன் கொண்ட உறவினை எண்ணிப்பாடுவது.
காற்று மட்டுமே நமக்கு இடையிலிருக்க உன்னுடன் கொண்ட காதல் உறவினை எண்ணிப்பார்க்கிறேன்.
அமுது ஊறுகின்ற இதழ் அவளுடையது.
இதழமிழ்தத்தமிழ்ந்தமிழ்ந்து வழியும் தமிழமுதம்.
அவள் விழிகள் ஊறிய நிலவு.
நிலவை எடுத்து அமிழ்தில் அமிழ்த்தி ஊறவைத்ததைப் போன்ற விழிகள்.
அவள் கண்மூடினால்
அது அமாவாசை.
மெல்ல விழி திறந்தால்
மூன்றாம் பிறை.
அரைக்கண் என்றால்
அஷ்டமி.
விழி விரியப்
பார்த்தால் பௌர்ணமி.
அரைக்கண்ணை விட சற்றே
அதிகம் திறந்து
நாணினால் அவள்
நவமி
உன்
ஓர் விழி
மூடித் திறப்பதில் ஒரு மாதம்
ஓடிவிடுகிறது
தூய பொன் பத்தரை மாற்று.
அவள் மேனி தூயபொன் இல்லையாம். பத்து மாற்றுதான் அவள் மேனி. ஏன்?
பத்தரை மாற்றுப் பொன் உறுதியற்றது. அதில் வடிவு அமைவது சிரமம்.
பத்து மாற்றென்றால் அது 22 கேரட் தங்கம் போல. அதனால் உறுதியான கட்டான மேனி அமையும்.
வையம் என்றால் உலகம் என்று பொருளென்றாலும், வையம், அதாவது வைக்கப்படும் இடம் என்று பொருள்.
அவள் அவரின் உலகம். அவள் மீது அவர் படர்ந்திருக்கும் வேளையில்.
அந்த நிலவுக்கண்கள், அமுத இதழ்கள் காற்றிடை ஆகியவை வேறு நினைவே வராமல் அமுதுண்ணும் அமரனாகவே அவரை மாற்றி விடுகிறதாம்.
கண்ணம்மாவே நீயே எனது இனிய உயிர்
எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.
உன்னையே பெரும் பொற்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.
எந்தன் வாயினிலே அமுதூறுதே...
முதல் பத்தியில் அவள் இதழ் அமிழ்த ஊற்று என்றவர் இப்பத்தியில் தன் வாயில் அமிழ்து ஊறுகிறது என்கிறார். மறைமுகமாக தான் அவளின் இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்ததைச் சொல்கிறார்.
கண்ணம்மா, கண்ணம்மா... கண்ணம்மா எனப் பலமுறைச் சொல்கிறார்.... பேர் சொல்ல அமுதூறுகிறது என தான் முத்தம் கொடுத்த சேதியை மறைக்க.
உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே
இந்த வரி மிக முக்கியம்.. உயிரைத் தீயாக உருவகப்படுத்துகிறார்.
சோதி என்றால் அதுவும் தீதான், அப்படியென்றால்?
உயிர் தீயென்றால் தீ உயிர்தானே.
உயிரின் உயிரே உயிரின் உயிரே .... என்று எளிமையாகச் சொல்லலாம்.
தீ எரிக்கும் தன்மை உடையது.. எப்படிப்பட்ட எரித்தல் என்றால் அதற்கு எல்லாம் சமம். எதையுமே எரிக்கும். காதலும் அப்படியே. அதற்கு யாரைப் பீடிக்கிறோம் என்ற வித்தியாசமில்லை.
காதல் பிடித்தவனின் உயிரை அது எரிக்கும்.
சிந்தனை என்பது யோசனை.
சித்தம் என்பது இறுதியான உறுதியான முடிவு.
உன்னைத் தவிர எதையுமே சிந்திக்க முடியவில்லை. உன்னை மட்டுமே அடைய விரும்புகிறேன் என்கிறார் கண்ணம்மாவை நோக்கி.
இப்போ கண்ணம்மாவை கண்ணனாக்கி விளக்கம்.
உலகமே கண்ணனின் வயிற்றில் உள்ளது என்கிறது விசுவரூப தரிசனக்கோலம்.
அப்படியானால் வயிற்றைச் சுற்றி அமைந்த காற்றுவெளிதானே கண்ணனின் இடையாக இருக்க முடியும்.
காதல் என்பது பரமாத்மா ஜீவாத்மா மீது கொண்டிருக்கும் பற்று.
காற்றையே இடையாகக் கொண்டக் கண்ணனே, பரமாத்மாவான நீ ஜீவாத்மாக்களின் மீதும் காட்டும் காதலை எண்ணி மகிழ்கிறேன்.
உன் வாயிலிருந்து வரும் சொற்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரத்துவம் தரும் அமிழ்தம். உன் கண்கள் அருள்பொழியும் ஈர நிலவு.
கண்ணனின் அவதாரம் பத்து. எனவே அவர் பத்து மாற்றுப் பொன். மாறுடும் பத்து அவதார உடல் கொண்டவன் அவன்.
அந்தக் கண்ணனிடம் பாரதியார் என்ன வேண்டுகிறார்.
இந்த பூமியில் நான் வாழும் காலம் வரை, என் நினைவு உன்னை விட்டு விலகாமல் இருக்க அருள் செய். உன் நினைவிலேயே திளைத்து, ஊறி, விண்ணுலகம் அடையும் போது உன்னுலகம் அடைய வை என்று வேண்டுகிறார்.
கண்ணனே நீயே எனது இனிய உயிர்.
எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.
உன்னையே பெரும்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.
கண்ணா, கண்ணா என்று அழைப்பது மிக இனிமையாக இருக்கிறது, அந்த நாமத்தின் இனிமையால் வாயினில் அமுதூறுகிறது.
இறைவன் ஆன்மாவுக்குள் ஆன்மாவாக இருக்கிறான் என்பதை உயிர்த்தீயினிலே வளர் ஜோதியே சொல்கிறது.
கண்ணனே சிந்தனை முழுதும் வியாபித்து இருக்கிறான். கண்ணனே அவரின் அடைய விரும்பும் சித்தமாக உறுதிப் பொருளாகவும் இருக்கிறான்.
ஆக கண்ணன் - கண்ணம்மா எதைக் கருப்பொருளாக எடுத்தாலும் பொருந்துவதாக இந்தப் பாட்டு இருக்கிறது.
Monday, January 18, 2016
ஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1
தமிழரும் காளைகளும்
காளைகள்
வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை
வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளைகள் தமிழரின் குடும்ப உறுப்பினர்கள்.
காளைகளை அடிமையாக்கி விவசாயம் செய்யவில்லை தமிழன். காளைகள் விவசாயத்தில்
பங்குதாரர்களாக உள்ளன. இருவரும் சேர்ந்து உழைத்து இருவர் வயிற்றையும்
நிரப்பிக் கொள்கின்றனர்.
மனிதனுக்கு தானியங்கள், காளைகளுக்கு பசுந்தழைகள்.
மனிதனுக்கு எண்ணை. காளைகளுக்குப் புண்ணாக்கு. காளை உழைப்பை கொடுக்க மனிதன்
அறிவை பங்களித்து விவசாயம் செய்கிறான்.
| சிந்து சமவெளியில் கிடைத்த காங்கேயம் காளை உருவம். |
5000 ஆண்டுகளுக்கு முன்பான
சிந்து சமவெளி நாகரீகத்தைச் சார்ந்த காங்கேயம் காளைகள் இன்னும் உயிர்ப்போடு
இருப்பது தமிழனின் நாகரீகத்தால் மட்டுமே.
தமிழன் காளைகளுக்கு உணவை
மட்டும் கொடுப்பதில்லை. காளை சமுதாயத்தை கட்டிக் காக்கிறான். அதற்கு
முழுமையான பல தலைமுறைக்கான வாழ்வியலையும் அமைத்துக் கொடுத்திருக்கிறான்.
ஜல்லிக்கட்டு என்பது மாட்டினத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரோக்யமாக
தமிழனுடன் இணைந்து உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல்
உன்னதம். இந்த அறிவியல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமலேயே தமிழன்
செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தமிழ் சான்றோரின் நுண்ணறிவு 5000
ஆண்டுகளுக்கு முன்னரே இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்ட தத்துவங்களை
செயல்முறையில் கலாச்சாரமாக மாற்றி இருக்கிறது.
உலகில் எந்த நாகரீகத்தாலும் இப்படி வீட்டு விலங்குகளைக் காக்க முடியவில்லை. ஏன்?
அதற்குக் காரணம் இன்று “காருண்ய மூர்த்திகள்” என்று தங்களைத் தாங்களே
அழைத்துக் கொள்ளும் “PETA” போன்ற கொடூர சிந்தனை படைத்த அமைப்புகள்.
உயிர் என்பதற்கு அறிவியலார் விளக்கம்
உயிர் என்பது ஒரு செல் அல்லது பல செல்களை அடிப்படையாக கொண்டது.
உயிரின் பண்புகள்
அதற்கு வரையறுக்கப்பட்ட வடிவம் இருக்கும்.
அவை சக்தியை இயற்கையிலிருந்து பெறும்
உயிர் உள்ளவை வளரும்.
சூழ்னிலைகளுக்கு ஏற்ப மாறும்.
புறத்தூண்டலுக்கு வினையாற்றும்
இந்த ஆறு பண்புகளை சொல்லிவிட்டு கடைசியாக மிக முக்கியமாக அறிவியலார்
சொல்வது,
உயிர் என்பது இனப்பெருக்கம் செய்யும்.
செயற்கையாக மாற்றப்பட்ட
ஜீனை ஒரு கிருமியின் செல்லில் செலுத்தி அந்த ஜீன்செல் இனப்பெருக்கம்
செய்ததை அறிவியலின் மிகப் பெரிய வெற்றியாக சமீபத்தில் கொண்டாடினோம் ஞாபகம்
இருக்கிறதா?
உயிர் என்றாலே இனப்பெருக்கம் செய்யக் கூடியது, அது இயலாவிட்டால் அது செத்ததற்கு சமம்.
அறிவியல் பூர்வமாக “உயிருள்ளது” என்பதன் பொருள் அது இனவிருத்தி
செய்யக்கூடிய ஒன்று என்று பொருள்.
இனவிருத்தி செய்வதை முழுமையாகத் தடை
செய்வது என்பது கொலைக்குச் சமமான குற்றமாகும்.
PETA போன்றவை
பெருஞ்செல்வரல்லாத மனிதர்களிடம் விலங்குகள் இயல்பாக எளிமையாக வளர்வதை
விரும்புவதில்லை. காரணம் ஏழைகளும் விலங்குகளை வளர்த்தால் அது செல்வச்
செழிப்பின் அடையாளமாக, கௌரவமாக ஆக்கப்பட இயலாது.
அப்படியானால் என்ன
செய்ய வேண்டுமெனில், ஏழைகளுடன் வசிக்கும் பிராணிகள் அழிக்கப்படவேண்டும்.
அதை நேரடியாக கொல்லக் கூடாது. கருணை தேவதை முகமூடி அணிந்து கொண்டு செய்ய
வேண்டும்.
முதலில் ஆதரவில்லா பிராணிகளை நாங்கள் காக்கிறோம்
என்றார்கள். பின்னர், பாதுகாக்க இயலாது என அவற்றில் 95% சதவிகிதத்தை
கருணைக் கொலை செய்தனர்.
அடுத்து ஆண்மை நீக்கம் செய்வதை அறிமுகப்படுத்தினார்கள், அதன் விளைவு அடுத்த சந்ததியே இல்லாமல் செய்வது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களை எல்லாம் மலடாக்கி விட்டால்
நாட்டில் வறுமை ஒழிந்து விடும் என்பது போல கொடூரமானது PETA வின் இந்தப்
பிரச்சாரம்.
அடுத்து ஏழைகளையும் பிராணிகளையும் பிணைக்கும் கலாச்சார அடிப்படைகளை வேறோடு பிடுங்கி நீக்குவதே PETA வின் நோக்கம்.
இதற்காக நாகரீகங்களில் ஏழைகளுக்கும் பிராணிகளுக்கும் உள்ள பிணைப்புகளை குறிவைத்து தாக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இதெல்லாம் எதற்காக என்றால், பிராணி வளர்ப்பு செல்வந்தர்களின் கௌரவத்தைக்
காட்டுவதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அதை வியாபாரமாக்கி
இனப்பெருக்கம், உணவு, மருத்துவம், பாதுகாப்பு, சவ ஊர்வலம், இறுதிச்சடங்கு
என பல மடங்கு லாபம் தரும் வியாபாரமாக நடத்தமுடியும்.
உண்மையில்
இவர்கள் சொல்லுவது போல் ஜல்லிக் கட்டு கொடூரம் என்றால் உடற்பயிற்சி செய்வது
கொடூரம். விளையாட்டுப் போட்டிகள் கொடூரமோ கொடூரம்.
ஜல்லிக்கட்டு
என்பது மாட்டினத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரோக்யமாக தமிழனுடன் இணைந்து
உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் உன்னதம். இந்த அறிவியல்
உன்னதத்தை புரிந்து கொள்ளாமலேயே தமிழன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான்.
தமிழ் சான்றோரின் நுண்ணறிவு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்று அறிவியலால்
நிரூபிக்கப்பட்ட தத்துவங்களை செயல்முறையில் கலாச்சாரமாக மாற்றி இருக்கிறது.
| ஹரப்பாவில் கிடைத்த ஜல்லிக்கட்டு போன்ற அடையாளம். |
ஒரு ஆரோக்யமான, வலிமையான சந்ததியை உருவாக்கி அதனால் உலகிற்கு உதவும்
உன்னதமான காரியங்கள் செய்தல். இதுவே பிறப்பின் நோக்கம் என்கிறது இந்துமதம்.
அதனாலேயே புத்திரன் இல்லாதோர் “புத்” என்னும் நரகத்தில் வீழ்வர் என்றனர்.
எப்படி நமக்கு வலிமையான சந்ததிகள் தேவையோ அப்படி காளைகளுக்கும் வலிமையான
சந்ததிகள் கிடைத்தால்தான் காளை இனம் பூமியில் இன்னும் பல்லாயிரம்
ஆண்டுகாலம் வாழ முடியும். அந்த வலிமையான சந்ததியை உருவாக்க ஒரு முறை தேவை,
அவை கலாச்சாரத்தில் நீக்கமறக் கலந்து இருந்தால்தான் அது பல்லாயிரம்
ஆண்டுகள் நீடிக்க முடியும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சார முறையே
“ஜல்லிக்கட்டு” ஆகும்.
வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை உன்னிப்பாக
கவனித்தவன் தமிழன். அவற்றிடமிருந்து அவன் கற்ற பாடங்களை காளைகளின்
வாழ்வியலில் சேர்த்தான்.
ஜல்லிக்கட்டு என்பதை இனப்பெருக்கம்
செய்யத்தகுதியான காளைகளையும், மனிதர்களையும் அடையாளம் காட்டும் ஒரு யுக்தி,
இவனை மணந்தால் வலிமையான புத்திரன் கிடைப்பான் என பெண்ணுக்கு அடையாளம்
காட்டுவது ஜல்லிக்கட்டு.
அதே போல் இக்காளை வலிமையானது. இதன் மரபணுக்கள்
வலிமையானவை,இதன் மூலம் சிறந்த மாடுகளின் சந்ததிகளை உருவாக்கலாம் என
காளைகளையும் அடையாளப்படுத்துகிறது ஜல்லிக்கட்டு.
மனித வாழ்வையும் காளை வாழ்வியலையும் உலகத்தில் யாராவது இப்படி சமமாக கருதியதுண்டா?
தொடரும்.
Sunday, November 15, 2015
உயர்ந்த நட்புக்கு உதாரணம்!
உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?
அடிக்கடி இது என் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. தமிழ் சமுதாயமே இன்று
உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதன்மையாக உயர்த்திப் பேசிக்
கொண்டிருக்கிறது,
கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? நட்பே உயர்ந்தது என்றார் ஒருவர்..
மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா என்றேன்.. பதில் வரவில்லை.
துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..
அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டு சோற்றில் ஒரு
கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின்
தட்டில் உண்பானாம்.
இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம்
அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு
கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.
கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர்.. அப்படியானால் ஏன்
பீஷ்மர் அவனை அவமானப்படுத்திய போது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக்
கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக
எண்ணினான்.. அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்க்களைக்
கொடுத்தான்..
கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது..
உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப்
பேசுகிறோம்.
அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான்.
நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது
நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான்.
அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான்.
அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட
கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை
எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...
கண்ணன் - அர்ஜூனன் உறவு நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.
கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன..
இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது..
ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும்.
நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை.
உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.
உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல
கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..
என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.
இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.
இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..
நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.
நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.
நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.
உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக்
கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை
தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?
உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க
பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை
வளர்த்த அப்பாக்கள் உண்டு...
நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா? கர்ணன் என்பீர்கள். அது மட்டுமே உங்களின் பதிலாக இருக்க முடியும். தவறு. அவன் துரியோதனனை சந்திக்கும் வரை வளர்த்த அதிரதனுக்கும் இராதைக்கும் என்ன செய்தான்?
நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே
உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள்
தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..
கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே
நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு
அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.
நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.
பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்நிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.
உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை
தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின்
ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும்.
உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....
கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே.
Friday, November 6, 2015
செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்?
1) உப்பிட்டவனுக்காக உடனின்று போர் புரியும் கர்ணன், துரோணர், பீஷ்மர், சல்லியன்
2) உப்பிட்டவனாதலால் எதிர்த்தும் உடனின்றும் போரிடாது நடுநிலை வகிக்கும் விதுரர்.
3) உப்பிட்டவனாயிருந்தும் எதிர்த்து போர் புரிந்த யுயுத்சு.
இம்மூவகையினரில் யார் செய்தது தர்மம்?
செஞ்சோற்றுக் கடன் என்பதே மாயை ஆகும்.
உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாம் இறைவனின் சொத்துகள். இது
அனைத்து உயிரினங்களுக்கும் பொது. அதை ஒருவன் தன்னுடையது என எண்ணுவது
மமகாரம் என்ற மலம் ஆகும்.
கொடுப்பது, எடுப்பது எல்லாம் யாருடைய உடமை?
யாருடையதுமல்ல. அது முன்பும் இருந்தது. பின்பும்
இருக்கப்போகிறது.
மரத்தின் பழம் யாருக்குச் சொந்தம்?
விதை தந்த மரத்திற்கா?
மரம்
நிற்கும் பூமிக்கா?
நீர்தந்த ஆற்றிற்கா?
நீரைத் திருப்பி விட்ட மனிதனுக்கா?
மரம் ஏறிப் பறித்தவனுக்கா?
அதை இன்னொன்றைக் கொடுத்து
வாங்கியவனுக்கா?
இதில் யார் யாருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்?
எதுவும் யாருக்கும் சொந்தமில்லாத பொழுது, யார் கொடுப்பது? யார் பெறுவது?
நாம் சரி என்று நினைப்பது மட்டுமே தர்மம் அல்ல. தர்மம் அதி சூட்சமமானது.
தன்னுயிர் காத்தோன், தன் மானம் காத்தோன், தனக்கு உணவிட்டோன்
இவர்களுக்கெல்லாம் அடிமைகளாகிக் கொண்டிருந்தால் இறைவன் இருப்பது மறந்து
போகத்தான் செய்யும். இது, "தான்" என்னும் அகங்காரத்தின் வெளிப்பாடாகும்.
அப்படிப் பார்த்தால் நாம் இறைவனுக்குத்தான் செஞ்சோற்றுக்
கடன்பட்டிருக்கிறோம். உயிரையும், உடலையும் உலகையும் தந்தவன் அவனே.
அதை
விட மிகப்பெரிய கடன் எது? அதை அடைக்காமல் சின்னச்சின்ன சில்லறை ஏமாற்றுக்
கடனைப் பற்றிக் கவலைப்படுவானேன்?
ஆக செஞ்சோற்றுக் கடன் செய்கிறேன் என தர்மத்தின் எதிர்பக்கம் நிற்பது அகங்காரம் ஆகும்.
செஞ்சோற்றுக் கடன் என்ற
வார்த்தை விரித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. அதுதான் நிலைமை.
நாடு
முன்னோர்கள் உருவாக்கியது. உருவாக்கியர்கள் மக்கள்.
திருதிராஷ்டிரனுக்கோ,
துரியோதனனுக்கோ உரிமை வந்தது என நாம் சொல்வது தர்மக் கற்பனையே ஆகும்.
அதையே
வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். பிறப்பினால்
இப்பூமியில் சகலருக்கும் சகல உரிமைகளிலும் சம உரிமை உண்டு.
செஞ்சோற்றுக் கடனின் உச்சபட்சம் ஒன்றையும் பாருங்கள். பிள்ளையாரே உனக்கு
எத்தனை தேங்காய் உடைச்சேன், கொஞ்சமாவது நன்றி இருக்கா உனக்கு? எனத்
திட்டுகிறான் பக்தன்.
உண்மையில் உடமை என்ற ஒன்று இல்லவே இல்லை எனப் பகவத் கீதையும் சொல்கிறது. அலெக்ஸாண்டரும் தன் இறுதிக் காலத்தில் சொன்னார். .
ஆக கர்ணன், பீஷ்மர், துரோணர் போன்ற செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறேன் என்ற அகங்காரிகள் சிறந்தவர்கள் அல்ல.
நல்லதைச் செய்தல் பிறவியின் கடமை. புரத்தலும் அதில் ஒன்றுதான். என் உயிர்
காப்பாற்றிய ஒரு மருத்துவர் ஒரு உயிர்க்கொல்லி தொற்றுவியாதியை என்னைப்
பரப்பச் சொல்கிறார். நான் செய்யலாமா? கூடாதா?
செய்வதுதான் செஞ்சோற்றுக்
கடன் என்பீர்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது.
ஏனென்றால் பிறந்தது முதல் அன்றுவரை என்னைக் காப்பாற்றி வந்தது மருத்துவர்
அல்ல. உலகம்.
உலகில் உள்ள மக்களின் வேறுபட்ட உழைப்புகள், இயற்கை. நான்
என்பங்கு உழைப்பைச் சமூகத்திற்குத் தந்தேன் வாழ்ந்தேன். அச்சமூகத்திற்கு
இதை விட மிகமிக அதிகம் செஞ்சோற்றுக் கடன் பட்டிருக்கிறேன்.
உன் உயிரை மட்டுமே கொடுக்க உனக்கு உரிமை உண்டு. அடுத்தவன் உயிரை ஏன் எடுக்கிறாய் என்பதுதான் இங்கே தொக்கி நிற்பதாகும்.
உடல் தந்த அன்னை தந்தையே குழந்தையைக் கொல்லுதல் தவறு என்கிறோம். தர்மமல்ல என்கிறோம். காரணம் உயிர் தந்தது இறைவன்.
தர்மம் மிகச் சூட்சுமமானது.
பீஷ்மரோ, கர்ணனோ, துரோணரோ, சல்லியனோ தர்மத்தை
தம் அளவில் மட்டுமே யோசித்தார்கள். எனக்கு உணவிட்டான், என் மானம் காத்தான்,
நான் சபதம் செய்தேன். நான் உணவுண்டு வாக்களித்தேன். அதனால் போர்புரிவேன் என.
ஆனால் தர்மம்
அவ்வளவு சிறியது அல்ல. செஞ்சோற்றுக் கடன் என்றால் இவர்கள் தம் உயிரை
மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர, அடுத்தவர் உயிரைப் பறிக்கக் கூடாது. அதுவும் நல்லது
செய்பவர்களென தான் அதிதீவிரமாக நம்புபவரின் உயிரை?
அது எப்படித் தர்மமாகும்?
செஞ்சோற்றுக் கடன் என்றுச் சொல்லி வெறும்
சாப்பாட்டிற்காக / மரியாதைக்காக / வாக்குத்தவறாமைக்காக கூலிப்படையாளியாக மாறு
என்றா சொல்லித் தருகிறது தர்மம்? இல்லையே!
யுயுத்சு, தர்மனின் பக்கம் நிற்கிறான். தான் சரி என்று நினைக்கும்
ஒன்றிற்காகப் போராடுகிறான். இவன் இவர்களை விடச் சிறந்தவன் ஆவான்.
சுயதர்மத்தை பெரிதாக மதித்தவர்கள் கர்ண, சல்லிய, பீஷ்ம, துரோணர்கள். பொதுதர்மத்தை
பெரிதாக மதித்தான் யுயுத்சு. ஆனால் இதுதான் தர்மம் என்ற மாயையால்
கட்டுண்டவர்கள் இவர்கள். சுயதர்மத்தை விட பொதுதர்மம் உயர்ந்தது. ஆனால்
சுயதர்மத்திற்கும் பொதுதர்மத்திற்கும் முரண் வரக்காரணம் என்னவென்றால்
அதைத்தான் மாயை என்கிறோம்.
தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.
இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர்
இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது.
கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து
வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும்
சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய,
திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார்.
பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும்
சகதியும் அப்பிய கிருஷ்ணன்.
கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும்.
இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க
வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை
உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு
விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும்
என்கிறார்.
9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன்
போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு
அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான்
விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில்
சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர்
உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால்
சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார்.
அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய
வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான்.
நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற
அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என்
வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு
தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும்
பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..
இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன்.
பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது
என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.
அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு
பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ
அதைச் செய்தார்.
துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத்
தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு
சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார்.
மகாபாரதமே குழப்பத்தையும் தருகிறது. பொறுமையுடன் இருந்தால் தெளிவையும் தருகிறது.
வாய்மை என்பது என்ன என்று வள்ளுவர்
சொல்லும்பொழுது பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின்
என்கிறார். ஆக பொதுதர்மத்திற்காக சுயதர்மத்தை விடுதலே தர்மம் என்ற
விதிப்படி யுயுத்சு உயர்கிறான்.
ஆனால் மிக
உயர்ந்தவன் அல்ல. ஏனென்றால குருஷேத்திரத்தில் மடிந்தது
சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அல்லவே.. எத்தனை கோடி மனிதர்கள் மாண்டனர்?
எதற்காக இத்தனை உயிர்கள் சாய்க்கப்பட்டது? மன்னர் குலம், பிராமணர் குலம்
தவிர மற்ற உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? விழும் ஒவ்வொரு உயிருக்கான
தர்மக்கணக்கு என்ன? அடுத்தவர் உயிர் மீது யாருக்கும் உரிமை இல்லை.
விதுரர், இவர் செய்த செயல்தான் தர்மம். ஏனெனில் அவர் தன் கடமையை மட்டுமே
செய்கிறார். செய்கின்ற பணிக்கு உரிய பலனை மட்டுமே அனுபவிக்கிறார்.
அத்தினாபுரத்தில் குடிசையில் வாழ்ந்த ஒரே மந்திரி இவர்தான். எதிலும் இவன்
பெருமையை எடுத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் நல்லதை மட்டுமே உரைத்தார்.
எந்த உயிரென்றாலும் சமமாகப் பார்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக
எப்பக்கமும் சாராமல் இறைவனை மட்டுமே சார்ந்தார்.
விதுரர் மஹாபாரதப் போரில் மட்டுமல்ல எந்தப் போரிலும் பங்கு கொள்ளவில்லை.
தன் அண்ணன் மன்னன், பெரியப்பா பெரிய வீரர், அண்ணன் மகன்கள் பெருவீரர்கள்
என்ற மாயையில் சிக்காதவர்.
உடல்-உயிர்-உலகம் என அனைத்தையும் கொடுத்த இறைவனுக்கு உண்மையாகவும்,
அகங்காரம், மமகாரம் மற்றும் மாயைகளில் சிக்காத விதுரனுடையதே உண்மையானச்
செஞ்சோற்றுக் கடன்.
இவரிடம் அகங்ககாரம் இல்லை. மமகாரம் இல்லை. இவர் யார் பக்கம் சார்ந்தும்
இல்லை. தர்மம் தன்னைக் காத்துக் கொள்ளும் என்பதில் உறுதியானவர். இவர்
யாரையுமே அழிக்கவில்லை, எல்லாம் ஒரு காரணத்தினால்தான் என்பதில் நம்பிக்கை
கொண்டவர்.
கண்ணன் மற்றும் விதுரனின் உறவு மிக அற்புதமானது. தான் மறையும் முன்பு கூட
உத்பவர் மூலம் விதுரனுக்கு பல தர்மங்களை, தத்துவங்களை விதுரனுக்குத்
தருகிறார் கண்ணன்.
எல்லாம் இறைவனால் என்று என்பவன் செஞ்சோற்றுக் கடன் என்ற மாயையில் சிக்கிக்
கொள்வதில்லை. ஏனென்றால் நீ எனக்கு உயிர் உதவி செய்திருந்தாலும் சரி
செய்திருக்கா விட்டாலும் சரி, சரியானதை, கருணையுள்ளதை, தருமத்தைச் செய்வேன்
என்கிறான். அவன் கொடுத்தவனுக்கும் உயிர் கொடுப்பான். கொடுக்காதானுகும்
உயிர் கொடுப்பான்.
அப்படி இல்லாமல் இது நான், இது என்னுடையது, இது அவனுடையது என் மாயையால்
மயக்கப்பட்டவருக்கு மட்டுமே செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தையே உண்டு.
செஞ்சோற்றுக் கடன் என்பது இறைவனுக்கு உண்மையாய் இருப்பது ஆகும்.. அதனால் விதுரனே செஞ்சோற்றுக் கடன் தர்மத்தை சரியாக கடைபிடித்தார்.
Friday, October 30, 2015
படிப்பது எப்படி?
படிக்கறதெல்லாம் அப்ப ஞாபகம் இருந்திச்சு இப்ப மறந்திருச்சி.
கேள்வியைக் கொஞ்சம் டிவிஸ்ட் பண்ணிட்டாம்பா. குழம்பிட்டேன்.
இது எங்கியோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் சரியா ஞாபகமில்ல.
இப்படி புலம்புபவர்கள் ஆயிரம் பேர் உண்டு, ஆனால் சிலர் நீங்க எதைச் சொன்னாலும் அதைப் பற்றி 4 மணி நேரம் சொற்பொழிவு செய்வார்கள்.
இதை அனைவருமே எளிதில் சாத்தியமாக்கலாம். ஆனால் அதற்குத் தேவை பயிற்சி செய்யும் மனம்.
கஜினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும். மூளையில் இரண்டு விதமான நினைவகங்கள் உண்டு.
1. ஷார்ட் டெர்ம் மெமரி
2. லாங்க் டெர்ம் மெமரி
நாம் இப்பொழுது படிப்பவை நினைப்பவை எல்லாமே ஷார்ட் டெர்ம் மெமரியில்தான் பதிவாகும்.
உதாரணமாக உங்களிடம் செப்டெம்பர் 30, 2015 மதியம் என்ன லஞ்ச் சாப்பிட்டீங்க என்றால் திருதிருவென முழிப்பீர்கள். காரணம் அது தற்காலிக நினைவகத்தில் இருந்தது. அதேசமயம் உங்கள் பிறந்த நாள் டின்னர் என்ன என்று கேட்டால், ஞாபகம் இருக்க சாத்தியம் இருக்கிறது, அதை நீங்கள் கொண்டாடி இருந்தால்...
அதையே இன்னும் 5 வருடம் கழித்து கேட்டால் மறந்திருக்க வாய்ப்புண்டு.
மூளையில் நீண்ட கால நினைவகத்தில் ஒரு தகவல் இடம் பெற வேண்டுமென்றால் அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்.
1. அதற்கென்று ஒரு தொடுப்பு இருக்க வேண்டும். உதாரணமாக ஆம்பூர் என்றவுடன் பிரியாணி ஞாபகம் வரும். விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டீன் ஞாபகம் வருவார், அதற்கென TAG அதாவது குறிப்பிணைப்பு இருக்க வேண்டும். பிறந்த நாளைக்கு ஹோட்டல் உமர்கோட்டில் பார்ட்டி. இப்படி எதோ ஒன்று. உதாரணமாக என் அண்ணன் இறந்தது நவம்பர் 4, 2006. இதற்கான தொடுப்புகள் : அண்ணனின் பிறந்த நாள் நவம்பர் 11. அதற்கு ஒரு வாரம் முன்பு இறந்தார். 2007 ல் நாங்கள் புதுவீடு கிரஹப்பிரவேசம் செய்தோம் அதற்கு முதலாமாண்டு இறந்தார். இப்படி இணைப்புகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் முதலே தெரிந்த ஒன்றோடு இணைத்து டேக் செய்து வைக்கவேண்டும்.
2. அதைப் பற்றி பலமுறை எண்ணியோ, பேசியோ இருக்க வேண்டும்.. பாபநாசம் படத்தில் கமல் 2 ஆம் தேதியை அனைவர் மனதிலும் பதிய வைப்பது போல் பலமுறை அதை பரிச்சயப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது அதைப் பற்றி பலரிடம் பலமுறை பேசவேண்டும். நாம் விரும்பும் நடிகர்களின் படவரிசை பாடல் வரிகள் மனதில் பதிவது இப்படித்தான். கிரிக்கெட்டின் புள்ளி விவரங்கள் மனதில் பதிவது இப்படித்தான். மாணவர்கள் முதன் முறை TAG செய்து படித்த பின் பாடங்களை தங்களுக்குள் குழு விவாதம் செய்வதால் மனதில் ஆழமாக பதியும். வெகு சிலரால் மட்டும் தனக்குள்ளேயே விவாதம் செய்து கொள்ள இயலும். அதற்கான வழிமுறை கீழே
3. கீழே உள்ள படத்தை கவனியுங்கள்
இதுதான் நமது சர்க்யூட் டயாக்ராம். நமக்கு ஐந்து வகை உணர்வுகள் உண்டு. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்வு என ஐந்து உணர்வுகள். இதில் பார்த்தல், கேட்டல் மூலமே நாம் அதிகம் கற்கிறோம்.
ஒரு தகவலைப் படித்த உடனே, கண்ணை மூடி அதை காட்சியாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். புரிந்திருந்தால் காட்சியாக்குவது எளிது. உதாரணமாக சூரியகிரஹணத்தில் சூரியனை நிலா மறைக்கிறது. இதை நம்மால் கற்பனை செய்ய முடியும். நிலா வட்டம், சூரியன் வட்டம், மஞ்சள் வட்டத்தை கருப்பு வட்டம் மறைக்கிறது.
இதை இரண்டு மூன்று முறை பதிவு செய்துவிட்டால் மேலே படிக்கும் பொழுது எளிதாக இருக்கும். அடுத்து பகுதி சூரிய கிரகணம்..
பகுதி சூரிய கிரகணம் என்றால் சூரியனில் ஒரு பகுதி மட்டுமே மறையும். ஒரு கையை இன்னொரு கையால் மறைத்தால் முழுதாக மறையும். ஆனால் இரண்டு கைகளும் ஒரே மையம் இல்லாமல் சற்று விலகி இருந்தால்? உடனே நமக்கு மாஸ்டர் கார்ட் சிம்பள் ஞாபகம் வரும். ஒரு மஞ்சள் வட்டம், ஒரு கருப்பு வட்டம். கொஞ்சம் மஞ்சள் வட்டம் கருப்பு வட்டத்தால் மறைக்கப்பட்டது புரியும்.
அடுத்து கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால்? கங்கணம் என்றால் வளையல். அதாவது மஞ்சள் வட்டம் பெரிது. கருப்புவட்டம் சிறியது. அப்படி இருக்கும் பொழுது கருப்பு வட்டத்தால் மஞ்சள் வட்டத்தை மறைத்தால் மஞ்சள் வளையம் தெரியும். அதேதான். அதான் கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால் வளையல். இப்போது கங்கண சூரிய கிரகணம் எப்போ வரும்னு பார்ப்போம். சூரியனின் மையமும் சந்திரனின் மையமும் நேர் கோட்டில் இருக்கணும். சூரியம் பெரிதாக இருக்கணும். எப்போ சூரியன் பெரியதா இருக்கும்? பூமி நீள்வட்டப் பாதையில் சுத்தி வருது. அதில் ஒரு பக்கப் பாதி சூரியனுக்கு அருகே இருக்கும். ஜனவரி 7 என்கிறது என் நினைவடுக்கு. அதே போல் சந்திரன் சின்னதாக இருக்கணும். அதாவது சந்திரன் பூமியில் இருந்து நீள்வட்டப்பாதையில் தொலைவில் இருக்கணும். சந்திரன் 27 நாட்களுக்கு ஒரு முறை அருகில் வரும். அமாவாசையோ 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அதனால் எதோ ஒரு அமாவாசை அன்றுதான் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பிருக்கு.
இந்த விரிவான அலசலில் தெரியும் இன்னொரு சேதி, குளிர்காலத்தில் அதாவது கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் மட்டுமே கங்கண சூரிய கிரகணம் சாத்தியம்.
இப்படி முழுமையாக படித்ததை மனதிற்குள் உங்களால் அப்படியே ஒரு மஞ்சள் வட்டம், கருப்பு வட்டம் கொண்டு காட்சிப் படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.
படத்தில் பாருங்கள், சிவப்பு வண்ணமிட்ட பாதைகள் தெரியும், சூரிய கிரகணம் பற்றி நான் விவரித்ததை வரிக்கு வரி மனதில் நினைத்தீர்கள் என்றால் அது அந்த சிவப்பு பாதையில் பயணிப்பதை குறிக்கும்.
சூரியன் மஞ்சள் உருண்டை. சந்திரன் கருப்பு உருண்டை, முழு கிரகணம். மஞ்சளை விட கருப்பு பெரிசு அல்லது சமம். ஒரே மையம். பகுதி கிரகணம் மையங்கள் தள்ளி உள்ளன. கங்கண கிரகணம். கறுப்பு வட்டம் சிறிது. வளையல். இப்படி மனதில் பிட்டு பிட்டாக முழு விவரங்களும் தொடுப்புகளுடன் நீண்ட கால நினைவகத்திற்கு செல்ல ஆரம்பிக்கும்.
அடுத்த நாள் இதை இன்னொருவனுக்கு சொல்லித் தரலாம். அல்லது விவாதிக்கலாம். இரண்டு வட்டங்களைக் கொண்டு கிரகணத்தின் பல நிலைகளை மனதில் காணலாம்.
இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் சூரிய கிரகணம் பற்றி நினைத்தாலே அருவியாக மனதில் இருந்து தகவல்கள் கொட்டும். இந்த சூரிய கிரகண வகைகளை மட்டும் உங்களால் சரியா புரிந்து கொள்ள முடிந்தால் அவ்வளவுதாங்க படிப்பு. படிக்கும் போது மனதில் அது பற்றிய உருவங்களைப் பார்க்கணும்.
இதில் கடைசியா மன உணர்வு என்று ஒரு டப்பா இருக்கு பாத்தீங்களா, அது படிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் தூண்டப்படுவது. நீங்கள் மேற்கண்ட முறையில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அது ஆக்டிவேட் ஆகும். ஒரு விஷயத்தைப் படிக்கும் பொழுது அது சம்பந்தமான பல தகவல்களை அது உங்களுக்குத் தயாராக எடுத்துத் தரும்.
கபில் என்றால் 434 என்ற எண்ணையும், அவுட் ஸ்விங்கரையும் விவியன் ரிச்சர்ட்ஸை அவுட்டாக்கியதும் நினைவுக்கு வரும். அதை இந்த உணர்வு கொண்டு வரும். இந்த உணர்வு டப்பா வேலை செய்ய ஆரம்பித்தால் அதன் பின்னால் படிப்பது மிக எளிதாகி விடும். எதை படித்தாலும் புரிய ஆரம்பிக்கும். மற்றவர்கள் சாதாரணமாக வாசிக்கும் வேகத்தில் நாம் ஆழமாக வாசிக்க ஆரம்பித்து விடுவோம்.
Tuesday, October 27, 2015
Tuesday, July 8, 2014
Thursday, July 29, 2010
தலைவாழை இலை சாப்பாடு!!!
தலை வாழை இலை போட்டுச் சாப்பிடும்போது பலருக்கு ஏற்படும் சந்தேகம் இலையை எப்படிப் போடறது என்பதுதான்,
நுனி இலை இடது கை பக்கமா வருகிற மாதிரி போடணும் என்று சொல்லி மேதாவியா ஒரு பெரிய புன்னகையை காட்டுவாங்க...
சரி அதுக்கு மேல இதில என்ன இருக்கு என்று கேட்டா...
ஹி ஹி வேற என்ன இருக்குன்னு ஹிளிப்பாங்க. சரிங்க ஏன் நுனி இலை இடது பக்கம் என்றால் நூத்தில் ஒருவர் தான் வலது கையால் பிசைந்து சாப்பிடறதால வலது பக்கம் அதிக இடம் தேவைன்னு சொல்வாங்க.
அதுசரி எதை எதை எங்கே வைக்கிறோம் அப்படின்னு எதாவது வரைமுறை இருக்கா?
இருக்கே...
நூறு பேர் கிட்ட போய் என் இடது பக்கம் நுனி இலை வரணும் என்று கேட்டால்..
அந்த நூறு பேரில் ஒருத்தர் மட்டுமே கீழ்கண்ட பதிலைச் சொல்லுவார்.
பிசைஞ்சு சாப்பிட வசதிக்காக.. நாம வலது கையால் சாப்பிடுகிறோம். அதனால் நாம் சாதத்தை பிசைவது வலதுபக்கம். அதனால் வலது பக்கம் அகலமாக வருவது மாதிரி வாழை இலையை போடுகிறோம்.
வலது பக்கம் கீழ்பகுதி சாதம் இருக்கும். சாப்பிட்டு பிடிக்காததை அப்படியே இடது பக்கம் ஷிப்ட் பண்ணிடலாம்.
மேல்பக்கம் வலதுபுறமிருந்து நாம் சாப்பிட வேண்டிய வரிசையில் பக்க உணவு வகைகள் உண்டு.
உணவுடன் முதலில் சாப்பிட வேண்டியது தொகையல் / சட்னி.போன்ற்வை.
இனிப்பு முதலில் சாப்பிட வேண்டும் என்றால் இடப்பாகத்தில் கீழேயும், கடைசியாக சாப்பிடுவது என்றால் பொறியலுக்கு அடுத்ததாகவும் இடம் பிடிக்கும். அப்பளம் பொரியலின் அருகிலேயே இருக்கும்.
அடுத்து கடைசியாக ஊறுகாய், மற்றும் உப்பு ஆகியவை வைக்கப் படும்.
வாழைப்பழம் இருந்தால் அது இடதுபக்கம் வைக்கப்படும்.
இந்த அமைப்பு, சாப்பிட வேண்டிய வரிசை முறை, எளிதில் அடைவது அப்புறம் சுவை கலக்காமல் உணவருந்துவது ஆகிய மூன்று விஷயங்களுக்கு உதவுகிறது.
இடதுபக்கம் நுனிவாழை இருப்பதால் தண்ணீரை அந்தப் பக்கம் வைப்பது நல்லது.
உப்பு என்பது எப்போதாவது உபயோகப்படுத்தும் ஒன்று. இதை வாழை இலையில் இடது பக்கம் மேல் பகுதியில் வைக்கணும்.

இந்த வரிசை கட்டாயமா என்றால் இல்லைதான். ஆனால் ஆய்வுப் பூர்வமாக வரிசை சரியாக இருந்தால் உணவு வீணாவது குறைகிறது.
------------------------------------------------------------------------------------------
Monday, June 28, 2010
தமிழ் செம்மொழி மாநாடு!!!
செம்மொழி' என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அது பிற மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்.
இதிலெல்லாம் சிறப்பு வாய்ந்த வாழும் செம்மொழி தமிழுக்கு அணி செய்யும் விதமாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்து புதுப் பொலிவுடன் திகழும் இந்த வேளையில், கோவை மாநகரத்தில் இந்த ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரையில் ஐந்து நாட்களுக்கு சிறப்பாக நடந்தது.
தமிழர் தலைவர் கலைஞர் செம்மொழி மாநாட்டில் பலப் புதுமைகளைப் புகுத்தி மாநாட்டை மிகப் பெரிய வெற்றி மாநாடாக்கினார். 500 கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் கடல் ஆர்ப்பத்து கோவைக்கு வந்து விட்டதோ என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம்.
புத்தம் புதிய இலச்சனை, சொம்மொழியான தமிழ் மொழியே என்னும் வாழ்த்துப் பாடல், தமிழர் பெருமையை விளக்கும் "இனியவை நாற்பது" என்ற பெயரில் 40 அலங்கார ஊர்திகளில் பழந்தமிழரின் வாழ்க்கையைக் காட்டிய ஊர்வலம் எனப் பலப்பல புதுமைகளுடன் மாநாடு சிறப்பாய் ஆரம்பித்தது. தமிழ் நாடெங்கும் செம்மொழியான தமிழ் மொழியே புதிய தமிழ் வாழ்த்துப் பாடலாய் ஒலிக்கத் தொடங்கியது.
குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர்.
இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர்.
கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள்,
"தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.
இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்'
என்று வலியுத்தினர்.
ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்;
தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்;
மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.
போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் போடப்பட்டு அவற்றில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை உடனடியாக வழங்கப்பட்டது.
* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்பட்டது.
அதன் செயலாக்கங்கள் என்ன தெரியுமா?
.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.
* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.
* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.
* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.
* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.
* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது
* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.
* தமிழின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பது
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.
செந்தமிழ் முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ். அதைக்கண்டவர்களில் அதை அனுபவிப்பர்கள் அதன் அமிழ்தான சுவையை உண்பதால் அமரத்துவம் பெறுகின்றனர். அதன் சுவையை பருக இயலாதவர்கள், உட்காரவியலாமல், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.
அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திடும் பொழுது வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.
என்ற பாடலுக்கு ஏற்ப
இப்படித் தமிழின் பெருமையைப் போற்றி, சாதனைகளைப் பாராட்டி, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து தமிழ் மொழி மாநாடு மிகச் சிறந்த வெற்றியை அடைந்தது..
வாழ்க செந்தமிழ்! வளர்க நற்றமிழர்!!
Subscribe to:
Posts (Atom)




