Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Friday, August 27, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 2




நீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...

அவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.

குடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.

சிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா? நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன? இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது?

மிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.

மீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.

எதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.

நாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

காலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.

அந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,

நீட்சி செய்யலாம்.. யாருக்காக? எதற்காக? கேள்விகள் பிறந்தன சிந்தனாவாதிகளிடமிருந்து.

நீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.

எல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..

முதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..

வரமா? சாபமா..? தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.

சிந்தனாவாதிகள் தீவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.

பொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.

சிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை(?) பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..

அதற்கு என்ன செய்யலாம்?

யாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிசைகள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.

தங்கினால் போதுமா? உணவு, போக வர வசதி? இரண்டாம் சிந்தனாவாதி சொன்னார்..

இது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..

இதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.

கற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.


பொருட்கள் எதற்கு? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

பொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க

அப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்

ஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..

எல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும்? இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க? நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.

கேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.

எல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.

மீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.

நீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

மாற்றங்களுக்கு எல்லாம் நானே காரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.

தொடரும் .

Thursday, August 26, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 1





ஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்.. 

அத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,

இங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள். 

எல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...

சில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..



சிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.

தீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..

சில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.

சிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..

அவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.


மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.

ஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.

இரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..

அமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா? ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.

நாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை. 

என்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..

சொன்னார் முதலாம் சிந்தனாவாதி.

எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..

கல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..

எழுத ஆரம்பித்தார்கள்.. 

வாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.

உணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..

தொடரும்

.

Monday, August 9, 2010

ஒரு நடிகையின் கொலைவழக்கு

பாதிக்கதை - சிவா.ஜி!!!



புதிய இயக்குநராக போன வருடம்தான் அறிமுகமாகி, சிறந்த அறிமுக இயக்குநராக விருது வாங்கிய சேகரன் அந்தக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தார்.


ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிமுகமாகி இன்றைக்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருந்த ரதிப்பிரியா தன் ஒனிடா வயிற்றை(தட்டையான) குளோஸப்பில் காட்டிக்கொண்டு நடித்துக்கொண்டு(?) இருந்தாள்.

அந்தக்காட்சிக்குத் தேவையான முகபாவனையை அவள் காட்டாமல், தன் தொப்புளே போதுமென அலட்சியமாய் நின்றிருந்ததை சேகரன் விரும்பவில்லை. கோபத்தோடு அவளை அணுகி,

“மேடம், ப்ளீஸ்...ஸீன் என்னன்னு கொஞ்சம் மனசுல வாங்கிக்கிட்டு அதுக்குத் தேவையான எக்ஸ்பிரஷன் குடுங்க..” என்றதும்,

சுரு சுருவென கோபம் ஏற,

“ஹலோ...டைரக்டர்...என் ஸீன் என்னன்னு எனக்குத் தெரியும். டோண்ட் ட்ரை ட்டூ டீச் மீ...”

என்று ரோஸ்பவுடர் போட்ட முகம் குங்குமமாக சிவக்க ஃப்ளோரே அதிரும்படியாக அவள் கத்தியதும், அவமானமாக உணர்ந்த இயக்குநரும்,

‘மேடம் நீங்க பெரிய ஆர்டிஸ்ட்டா இருக்கலாம். ஆனா இங்க நான் தான் டைரக்டர். நான் சொல்றதைக் கேக்கனும்”

“புல்ஷிட்...ஒரு படம் ஹிட் குடுத்தா...பெரிய டைரக்டர்ன்னு நெனைப்பா....நான் 25 படம் ஹிட் குடுத்திருக்கேன், இன்னைக்கு இண்டஸ்ட்ரியே என்னோட கால்ஷீட்டுக்கு காத்துக்கிட்டிருக்கு. எனக்கு நீ எதுவும் சொல்லித் தரவேண்டிய அவசியமில்ல...தெரியுதா...ஷூட் வாட் ஐ டூ...”

அன்றைய மார்க்கெட்டுக்கு அதிக விலைபோகக்கூடிய நடிகையாய் அவள் இருந்ததால் அடங்கிப் போனார் சேகரன்.....மனதில் அடக்க முடியாத கோபத்துடன். 

அடுத்த காட்சியில் சோகத்தைக் காட்ட வேண்டிய காட்சியில் அவள் மோகத்தைக் காட்டியதால்...ஏற்கனவே அடக்கி வைத்திருந்த கோபம் அவரையும் மீறி வெளிப்பட்டு பளாரென்று அறைந்துவிட்டார்.

அடி வாங்கிய அதிர்ச்சியில் இரண்டுவினாடிகள் அமைதி காத்த ரதிப்பிரியா, அடுத்த நொடி ஆவேசத்துடன்,

“என்னையே அடிச்சிட்டியா.....பாஸ்டர்ட்....உன்னை இந்த ஃபீல்ட்லயே இல்லாம பண்ணிடறேன்...”

என்று இரைந்துகொண்டே தன் உதவியாளினியையும், தன் மேனேஜரையும் அழைத்துக்கொண்டு அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாள்.

அடுத்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் பொதுமன்னிப்பு கேட்டதும், பத்திரிக்கைகளில் வெளியான அந்த செய்தியால் தன் அடுத்தப் படத்துக்கு முன்பணம்கொடுத்தவர்கள் பின்வாங்கியதையும் நினைத்து, அடையாறுகேட் ஹோட்டலில் அரையடித்தபின் சேகரன் மொழிந்தது...

“அந்த பொம்பள உயிரோடவே இருக்கக்கூடாது.....எனக்கு கேரியரே இல்லாமப் போனாலும் பரவால்ல...அவளைப் போட்டுத் தள்ளிடனும்...”


னக்கு ஒப்பனை செய்துகொண்டிருந்த பழம்பெரும் ஒப்பனையாளர் தர்மலிங்கத்தின் கைகளை தட்டி விட்டு விட்டு,

“என்னய்யா மேக்கப் போடற...நான் என்ன கிழவியா....ஒன்னோட அந்தக்காலத்து மேக்கப்பெல்லாம் எனக்குத் தேவையில்ல....முடிஞ்சா மாடர்னா போடு...இல்லன்னா....ஊரப்பாக்க போய்த்தொல....ஏன் எங்களை மாதிரி கவர்ச்சி கதாநாயகிகளோட அழகோட விளையாடறே”

என்று அவரைத் தாறுமாறாக பேசிவிட்டுப் போன ரதிப்பிரியாவை, கோபம் கொப்பளிக்கும் கண்களோடு பார்த்துக்கொண்டிருந்த தர்மலிங்கம்....

“இருடி....ரொம்ப அலட்டிக்கிறயா....உன் மொகத்துல ஆஸிட் ஊத்தி..கோரமாக்கலன்னா எங்கப்பன் சம்முகத்துக்கு நான் பொறக்கல...”

என்று பல நாட்களாய் மனதில் ஊறியிருந்த வன்மத்தை வார்த்தைகளில் காட்டிக்கொண்டே ஒப்பனை சாதனங்களை இடக்கையால் தட்டிவிட்டார்.


திப்பிரியாவின் வீடு. மேனேஜர் பாண்டியன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார். ரதிப்பிரியா ஆத்திரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள்.

“கேரளாவுல இருந்து, பஞ்சாப்புல இருந்து, மும்பையிலருந்து வர்ற நடிகைங்கன்னா...சின்ஸியரா இருக்கீங்க....நான் திருவாரூர்லர்ந்து வந்த தமிழ் நடிகைங்கறதால.....குழி பறிக்கறீங்களா? ஏன்யா இந்த புத்தி? நம்ம ஆளுங்கதான் நமக்கு எதிரிங்கங்கறத மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டியேய்யா...”

“மேடம்....நீங்க நினைக்கற மாதிரி ஒன்னுமில்ல....யாரோ சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு....”

“தப்பா இல்ல....ரொம்ப சரியாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். அந்த பஞ்சாப் பொண்ணு ஜால்வாவோட ஆள்தானே நீ. அவ பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தானே நீ வேணுமின்னே என் கால்ஷீட்ல குளறுபடி பண்ணி எனக்கு மார்கெட் இல்லாம போகனுன்னு முயற்சி பண்ணே”

‘அய்யோ...அப்படியெல்லாம் அபாண்டமா சொல்லாதீங்க மேடம். உங்க உப்பத்திண்ணவன் நான்....உங்களுக்குத் துரோகம் பண்ணுவனா?”

“பண்ணிட்டியே.....சாய்மீரா ப்ரொடெக்*ஷனுக்கு நான் குடுத்த என்னோட கால்ஷீட்டை பிரமிட்டுக்கு குடுத்து, அதையும் மாத்தி ரெட்சன்னுக்கு குடுத்து....இப்ப எதுவுமே இல்லாம பண்ணிட்டியே....ஓக்கே....நவ் கெட் அவுட். என் கண்ணு முன்னால நிக்காத....போய்த்தொலை.”

“மேடம் ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம்...”

“கேக்க வேண்டிய அவசியமில்ல....என் கிட்ட ஆதாரம் இருக்கு. நீ ஜால்வாகூட எப்பவெல்லாம் போன்ல பேசின, எங்கெங்க சந்திச்சீங்க எல்லா டீடெய்லும் என்கிட்ட இருக்கு.....ஸோ....இதுக்கு மேல இங்க நின்னா வாட்ச்மேனைக் கூப்பிட்டு கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வேண்டியிருக்கும்....எப்படி வசதி...?” 

அவள் நக்கலுடன் கேட்டதைப் பார்த்ததும் ஆத்திரமாய்......

“போறேண்டி.....நீதான் பெரிய ஸ்டார்ன்னு நெனைச்சிக்கிட்டு என்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்தின.....இப்ப எனக்கு ஜாவ்லா இருக்காங்க. அவங்க கிட்ட போறேன். ஆனா........உன்னை இந்த இண்டஸ்ட்ரியில மட்டுமில்ல............இந்த உலகத்துலயே இல்லாமப் பண்றேன்.....”

அந்த இரவு நிம்மதியில்லாமல் படுக்கையில் புரண்டாள் ரதிப்பிரியா. 

“ச்சே எனக்கு மட்டும் ஏன் இத்தனை எதிரிகள்.....என்னுடைய நடவடிக்கையில்தான் தவறோ.....? வளர்ந்து வரும் இந்த நேரத்தில் நல்ல இயக்குநரையும், மூத்த மேக்கப் மேனையும், என் எல்லா ரகசியங்களும் தெரிந்த மேனேஜரையும் பகைத்துக்கொண்டது தவறோ...நாளை காலை விழித்தவுடன் அவர்களை சமாதானத்துக்கு அழைக்கவேண்டும்”

இப்படி நினைத்தவுடன் மனசு லேசாக...மெள்ளக் கண்ணயர்ந்தாள்.

டுத்தநாள் காலை அவளுக்கு காஃபி கொடுக்க வந்த வேலைக்காரி...அவள் கிடந்த ரத்தக்கோலத்தைப் பார்த்துவிட்டு காஃபிக் கோப்பையைக் கீழே போட்டுவிட்டு அலறலுடன் ஓடினாள். ரதிப்பிரியா கழுத்து அறுக்கப்பட்டு கட்டிலில் கிடந்தாள்.

சற்று நேரத்தில் போலீஸ் வந்தது.

வழக்கமான சம்பிரதாயங்கள்.....கைரேகை, புகைப்படமெடுப்பு, எதையும் தொடாதீர்கள் என்ற எச்சரிப்பு....கடைசியில் ஸ்ட்ரெக்ச்சரில் ரதிப்பிரியாவின் உடல் கொண்டுபோகப்பட்டப் பிறகு,

முதலில் பார்த்த வேலைக்காரியை விசாரித்தார்கள். கடைசியாய் அவளிடம் சண்டை போட்டுவிட்டு அவன் அவளை இல்லாமலாக்குவதாக சத்தமாகச் சொன்னதைக் கேட்டதாக வேலைக்காரி கூறியதைக் கேட்டதும், மேனேஜரைத் தேடிப்போனார் அந்த இன்ஸ்பெக்டர்.

போகும் முன் அந்த அறையைப் பூட்டி, யாரும் அதனுள் போகக்கூடாது என்று சொல்லி, சீல் வைத்துவிட்டுப்போனார்.

ரதிப்பிரியாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவள் வீட்டை விட்டு வெளியேறியதும் நேராக அந்த இரவுவிடுதிக்குத்தான் போனான் பாண்டியன். அன்று இரவு, புலம்பிக்கொண்டு ஃபுல்லை ஃபுல்லாக இறக்கிக்கொண்டு மட்டையாகிடந்தான், நாங்கள்தான் அவனை ஓரமாகப் படுக்க வைத்தோம் என்று அந்த கிளப்பிலிருந்தவர்கள் கூறியதும், கொலையாளி இவனாக இருக்க முடியாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

வேறு யாராக இருக்கும்.......? இன்ஸ்பெக்டர் தமிழரசன் மூளையைக் கசக்கிக்கொண்டார். இன்றைய தேதியில் தமிழ்த்திரையுலகத்தின் வெற்றிகரமான நடிகை. பல அரசியல்வாதிகளின் தொடர்புள்ளவள்.

சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும்........





மீதிக் கதை தாமரை செல்வன்



குட்மார்னிங் இன்ஸ்பெக்டர் - இரட்டை நாயனமாக குரல்கள் ஒலிக்க, தனியார் துப்பறிவாளர் - உளவியலாளர் பெஞ்சமின் மற்றும் அவரின் சக துப்பறிவளர் கண்மணி இருவரும் வந்தனர்.

இருவரும் தமிழரசனின் பள்ளித் தோழர்கள். ஏறத்தாழ ஒரே தொழில் என்பதால் ஒருவருக்கொருவர் பெரும் உதவியாக் இருப்பார்கள். பென்ஸூடமும் கண்மணியிடமும் பேசிக் கொண்டிருந்தால் போதும் பல சிக்கல்கள் காணாமலேயே போய்விடும்.. வார்த்தைகளும் மிக்ஸரும் தேநீரும் கொண்ட உபசரிப்புக்கு பிறகு தமிழரசன் கதையைச் சொன்னார்.

உடனே சந்தேக லிஸ்ட் தயார் பண்ணி ஒவ்வொருத்தரா விசாரிக்க ஆரம்பிச்சி இருப்பீங்களே.. கண்மணி புன்னகையோடு சொல்ல 

தமிழரசன், ஆமாம் என்பது போல தலையசைத்தார்.

சரி ரதிப்பிரியாவை பற்றி என்னத் தெரியும்? சொல்லுங்க.. பென்ஸ் கேட்க 

தமிழரசன் 5 வருஷமா டாப் நடிகை அடிக்கடி பிரச்சனைகளில் மாட்டி வெளிவருகிற ஒரு சார்ட் டெம்பர்டு காண்ட்ரவர்ஷியல்.. ஆனால் கோபம் ரொம்ப நேரம் இருக்காது.. அடுத்த நாளே மன்னிப்பு பார்ட்டின்னு குழைய ஆரம்பிச்சிடுவாங்க.. பல விரோதிகள் இருக்கலாம்.

அப்போ ஏன் மூணு பேரு மட்டும் உங்க சந்தேக லிஸ்ட்ல? கண்மணி கேட்க.. 

வாஸ்தவம்தான் லிஸ்ட் போட்டு மாளாது. அப்புறம் என் ஆயுசுக்கு கண்டு பிடிக்க முடியாது.

சொல்லப் போனா குற்றவாளிகளை கண்டுபிடிக்க இரண்டு வழி இருக்கு பென்ஸ் சொல்ல ஆரம்பித்தார்.. 

ஒண்ணு சந்தேகலிஸ்ட்ல இருக்கிற எல்லாத்தையும் தனித்தனியே விசாரிச்சு அவங்க குற்றம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என உறுதி செய்வது,.

இன்னொன்னு குற்றம் நடந்த சூழ்நிலை, குற்றம் நடந்திருக்கிற விதம் இதை வைத்து குற்றவாளியைப் பற்றிக் கணித்து சந்தேக வட்டத்தைக் குறைச்சுகிட்டே போறது... அதாவது திருப்பதியில சில்லரைக் காசுகளை வச்சி சலிச்சி தனித்தனியா பிரிக்கிற மாதிரி கொலை நடந்த இடமும் விதமும் கூர்மையா ஆராயப்பட்டதுன்னா உங்களுக்கு பல தலைவலிகள் மிச்சம்.. கண்மணி தொடர்ந்து சொன்னார்.

உங்ககிட்ட இருக்கற ஃபோட்டோஸ் எடுங்களேன் பென்ஸ் சொல்ல,

தமிழரசன் ஃபோட்டோக்களை எடுத்துப் போட.. ஓஹோ இப்படித்தான் பிணமாகக் கிடந்தாரா பென்ஸ் நெற்றிப்பொட்டில் தட்டிக் கொண்டு யோசிச்சார்..

கழுத்தை நெறிச்சோ, இல்லை கையில் கிடைச்சதை வச்சோ கொலை இல்லை போராட்டம் அதிகம் இல்லை.. அதனால இது திடீர்னு நடந்த கொலை இல்லை.. - பென்ஸ்

ஆமாம், கத்தி என்பது ஒரு ஆயுதம். அதுவும் கழுத்து அறுபட்டு இறந்திருக்கிறாள். அப்படின்னா என்ன புரியுதா கழுத்தறுப்பு - அதாவது நம்பிக்கைத் துரோகம் - கண்மணி

அட ஆமாம் இப்படி ஒரு கோணம் இருக்கே தமிழரசன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கொலை செய்தது தனியாளா இல்லை ஆளை ஏவி செஞ்சிருக்காங்களான்னு முதல்ல கண்டு பிடிக்கணும்.. பெட்ரூம், கழுத்தறுப்பு புதுசா யாரோ வந்து போனதைப் பற்றிச் சந்தேகமோ ஸ்பெஷல் தகவலோ, தடையமோ இல்லை.. அப்போ கொலையாளி கூலிப்படை இல்லை. - பென்ஸ்

அவங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது..- தமிழரசன்

கொலை பொதுவிடத்தில் நடக்கலாம். வீட்டில் என்றால் விஷம், தூக்கு, துப்பாக்கி, நெஞ்சில் கத்திக் குத்து, கழுத்தில் பின்புறம் வெட்டு.. இப்படி அவங்களுக்கே உள்ளே சிக்னேச்சர் உங்களுக்குத் தெரியாதா என்ன? பழைய கொலை விபரங்களைக் கொஞ்சம் உங்க கம்ப்யூட்டர்ல அலசி கடந்த 3 வருடங்களில் எத்தனைக் கழுத்தறுப்பு நடந்திருக்குன்னு பார்த்தீங்கன்னா தெரியுமே! - கண்மணி

அட ஆமாம் இதுவரை ஒண்ணுகூட இல்லை. - தமிழரசன்.

போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ல அவளுக்கு தூக்க மாத்திரையோ அல்லது மயக்க மருந்தோ கொடுக்கப் பட்டிருந்ததா என உறுதிப் படுத்தணும்.. ஏன்னா கழுத்தை அறுக்கும் பொழுது போராட்டம் நடந்திருக்கணும் ஆனால் அதிகம் நடக்கலை.. - பென்ஸ்

அட ஆமாம். உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் சொன்னார் தமிழரசன்.

இரண்டு சாத்தியக் கூறு இருக்கு 1. கொலையாளிக்கு வீட்டில் ஒரு உள்கை இருக்கு.. உள்குத்து இருக்கு. இன்னொன்னு கொலையாளி அந்த வீட்டுக்கு சகஜமா வந்து போகிறவர். - கண்மணி..

இப்படி பூஜ்யத்திலிருந்து ஆராய்ந்து கொஞ்சம் கொஞ்சமா உருவம் கொடுத்து ... - பென்ஸ்

இதைத்தான் படம் காட்டறதும்பாங்க - கண்மணி..

ரொம்பத் தெளிவாயிட்டேன். குற்றவாளியைப் பிடிச்ச உடனே உங்களுக்கு ட்ரீட்தான்.. உற்சாகமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார் தமிழரசன்..

தமிழ்நாடு போலீஸ்தான் நெம்பர் ஒன் அப்படீன்னு நிரூபியுங்க.. அட்வான்ஸ் கங்கிராட்ஸ்.. வாழ்த்தியபடியே எழுந்தனர் 
பென்ஸூம் கண்மணியும்...

எழுந்து விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார் தமிழரசன். புத்துணர்வுடன்.. ஐ வில் கேட்ச் ஹிம் இன் டூ வீக்ஸ் ஸார்...

கலகலவென சிரித்தனர் அனைவரும்

முற்றும்

Monday, June 14, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி.-இறுதிப் பாகம்




அங்க நாட்டு ராஜா படையெடுத்து வந்திருக்கார் என்ற செய்தி மரகதவல்லிக்கு தெரிஞ்சது, 

மரகதவல்லி உடனே உஜ்ஜயினி ராஜாவைப் பார்க்க ஓடினா...

ராஜாவைச் சந்திச்ச மரகதவல்லி தானும் போர்களத்துக்கு வருவேன் என்றாள். 

நாட்டில் ஆயிரக்கணக்கில் வீரர்கள் இருக்க ஒரு பெண்மகள் போருக்குப் போக அனுமதிக்க முடியாது அப்படின்னு சொன்னாரு..

அரசே நான் சென்றால் பல உயிர்ச்சேதங்களைத் தடுக்க முடியும் அதனால தயவு செய்து என்னை அனுமதிக்கனும்னு மரகதவல்லி சொன்னாள்..

மரகதவல்லிக்கு ஒரு தேரும் ஆயுதங்களும் கொடுத்து ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார் ராஜா.. ஏழுகிளிகளும் தேரின் மீது உட்கார்ந்து கொண்டன..

இரண்டு படைகளும் அணிவகுத்து நின்றன.. எதிரெதிரில் தேர்கல் நிற்க மரகதவல்லி கிளிகளிடம்.. அங்க நாட்டு அரசரோட தேரைச் சுத்தி வந்து தன் பேரைச் சொல்லி கத்தச் சொன்னா..

கிளிகளும் அங்க நாட்டு அரசரோட தேரைச் சுத்தி வந்து மரகதவல்லி.. மரகதவல்லி அப்படின்னு கத்திச்சுங்க...

எதிரிப் படைத் தேரில் ஏற்கனவே ஒரு பெண்ணைப் பாத்துக் குழம்பிப் போன அங்க நாட்டு அரசருக்கு மரகதவல்லி என்ற பெயர் ஒரு பொறியைக் கிளப்ப தேரை விட்டிறங்கி மரகதவல்லியோட தேரை நோக்கி ஓடிவந்தார்... 





மரகதவல்லியும் "அப்பா" "அப்பா" ன்னு அழைச்சுகிட்டே ஓடினா....

பல ஆண்டுகள் கழிச்சு அங்க நாட்டு மன்னருக்கு இறந்து போய்விட்டாள் அப்படின்னு நினைச்சுகிட்டிருந்த மகள் கிடைச்சுட்டா...

மரகதவல்லி எல்லாக் கதைகளையும் அப்பாவுக்குச் சொன்னா.. 

அங்க நாட்டு ராஜாவான மரகதவல்லியோட அப்பா, கொடூரமான சித்தியை நாடுகடத்த உத்தரவிட்டார்.. அவர் விருப்பப்படியே அவருடைய மகளுக்கும் உஜ்ஜயினி ராஜகுமாரன் உதயகுமாரனுக்கும் திருமணம் கோலாகலமா நடந்தது...

ராஜகுமாரிகள் இரண்டுபேரும் அம்மாவுக்காக வருத்தப்பட்டாலும் அக்கா கிடைச்சதால சந்தோஷம் ஆனாங்க..

உஜ்ஜயினி, அங்கநாடு இரண்டையும் உதயகுமாரன் அரசனாகி நல்லாட்சி நடத்தினான். 

எல்லோரும் சந்தோஷமா நீண்டகாலம் வாழ்ந்தாங்க..


முற்றும.


Sunday, June 13, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 3



பெட்டி மிதந்த வந்த ஆத்தில உஜ்ஜயினி இளவரசன் உதயகுமாரன் குளிச்சுகிட்டு இருந்தான். என்னடா இது பெரிய பெட்டியா இருக்கே என்று பெட்டியை இழுத்துப் பார்த்தான்.. பெட்டியில் ஒரு அழகான பொண்ணு...

பெட்டியை கரைக்கு இழுத்து கொண்டு வந்த இளவரசன், அதை வைத்தியர் வீட்டுக்கு கொண்டுபோனான். வைத்தியர் மரகத வல்லியின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். பிறகு இது ஏதோ விஷக் கடியா இருக்கலாம் என்று தன் மனைவியை மரகதவல்லியின் உடல் முழுக்க சோதிக்கச் சொன்னார்..

பாதத்தில் பதிந்திருந்த பல்லைக் வைத்தியர் மனைவி சொல்ல வைத்தியர் அந்தப் பல்லைப் பிடுங்கி எறிந்து விட்டு பச்சிலைகளை அரைத்து கட்ட, மரகத வல்லியின் உடம்பிலிருந்து விஷம் மெல்ல மெல்ல இறங்கியது.

மரகதவல்லி விழித்து எழுந்தாள். இளவரசனுக்கு மரகதவல்லியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. மரகதவல்லியைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும் என முடிவு பண்ணிட்டான்..

மரகதவல்லியை ஒரு மாளிகையில் தங்க வச்சிட்டு ராஜாவைப் பார்க்கப் போனான் உதயகுமாரன்..

வா மகனே வா.. உனக்கு நூறாயுசு. இப்பதான் உன்னைப் பற்றி நினைச்சேன், வா வா அப்படின்னு வரவேற்றார் ராஜா..

என்ன விஷயம் அப்பா அப்படின்னு உதயகுமாரன் கேட்க.. உனக்கு திருமணம் செய்து வைக்கலாம் என முடிவு பண்ணி இருக்கேன், அதுக்காக அங்க நாட்டு இளவரசிகளை வரவழைச்சு இருக்கேன்.. அங்க நாட்டு மன்னர் நமக்கு மிகவும் நெருங்கிய உறவு, பலம் வாய்ந்தவர் ராஜா சொல்லச் சொல்ல ..

இளவரசன் மன்னிக்கனும் அரசே இன்னிக்கு நான் ஒரு பெண்ணை பார்த்தேன், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துக்கணும் என விரும்புகிறேன் அப்படின்னான்..

உதயகுமாரா, நீ நாளைக்கு மன்னனாகப் போகிறவன்.. அப்படின்னா நாளைக்கு இராணியாகப் போகிறவ்க்களுக்கு சகல தகுதிகளும் வேணும் இல்லியா? அந்தப் பொண்ணு அரசகுமாரியா? எந்த நாட்டு அரசகுமாரி? இல்லை யாருடைய மகள் அப்படின்னு கேட்க இளவரசன் சகலத்தையும் சொன்னான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் இளவரசி மாதிரிதான் இருக்கு. ஆனால் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லலை. என்றான்.

அப்படின்னா ஒண்ணு செய்வோம்.. இங்கே வந்திருக்கிற இளவரசிகளுக்கும் நீ பார்த்திருக்கும் பெண்ணுக்கும் போட்டிகள் வைப்போம். அந்தப் பொண்ணு அந்தப் போட்டிகளில் ஜெயிச்சா அந்தப் பொண்ணைக் கட்டிக்கோ.. இல்லைன்னா போட்டியில ஜெயிக்கிற பெண்ணைத்தான் கட்டிக்கணும் அப்படின்னு ராஜா சொல்லிட்டாரு..

மரகதவல்லி பிழைச்சதைப் பார்த்ததும் கிளிகளுக்கு ஒரே சந்தோஷம். எல்லோரும் போனது மாளிகைக்குள் போய் மரகதவல்லியைச் சந்திச்சன. அவைகளுக்கு ஒரே குஷி..

மரகதவல்லிக்கும் கிளிகளைப் பார்த்ததும் தான் மனசே நிம்மதியாச்சு. கிளிகளெல்லாம் சேர்ந்து இளவரசனுக்கே மரகதவல்லியைத் திருமணம் செஞ்சு வச்சிடணும்னு முடிவு பண்ணின,

அடுத்த நாள் காலையில இளவரசன் வந்தான்.. கூடவே மந்திரி ஒருத்தரும் வந்தார்..

மந்திரி மரகதவல்லிக்கு இந்த மாதிரி இளவரசன் மரகதவல்லியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறார்னு சொல்லி, ஆனா அதுக்கு மரகதவல்லி போட்டியில் கலந்துகிட்டு ஜெயிச்சாகணும். அது அரச கட்டளைன்னு சொன்னார், மரகதவல்லியும் போட்டிக்கு ஒத்துகிட்டா...

அங்க தேசத்து இளவரசிகளும் போட்டிக்கு ஒத்துகிட்டாங்க...

முதல் போட்டி

அவரவர் தங்கி இருக்கிற மாளிகைக்கு ஒரே இரவில் வர்ணம் பூசணும் இதுதான் முதல் போட்டி..

அங்க தேசத்து இளவரசிகள் ரொம்பச் செல்லமா வளர்ந்தவங்க.. அவங்களுக்கு போட்டி என்பது அவமானமா இருந்திச்சி.. ஆனாலும் உஜ்ஜயினி மிகப் பெரிய ராஜ்ஜியம். அதனோட மஹாராணி ஆகறது என்பது மிகப் பெரிய மரியாதை என்பதால பல்லைக் கடிச்சுகிட்டு வர்ணம் பூசுவதை ஆரம்பிச்சாங்க.. அவங்க வேலையாட்களெல்லாம் அவங்களோட உர்ட்டல் மிரட்டலுக்கு பயந்து அவசர அவசரமா வர்ணம் பூசினாங்க.

மரகதவல்லிக்கோ வீட்டைச் சுத்தமா வச்சுக்கறது பிரியமான வேலையாச்சே.. கூடவே கிளிகளும் சின்ன சின்ன குச்சுக்களால் வர்ணம் தொட்டு பறந்து பறந்து வர்ணம் பூசின.

அடுத்த நாள் காலையில் ராஜா மூணு பேர் மாளிகையயும் பார்க்க வந்தார்.. மற்றவர்கள் மாளிகையில் பாதி வேலை கூட நடக்கலை. ஆனா மரகதவல்லியோட மாளிகையோ வண்னக்கோலங்கள், அழகான பூச்சுகளோடு ரொம்ப அழகா இருந்திச்சு..

அடுத்த போட்டி இளவரசனுக்கு ஒரு பட்டுசட்டைத் தைக்கணும். அதுவும் கண்ணால் பார்த்த அளவைக் கொண்டு...

இளவரசிகளுக்கு இதுவும் புதுசு.. இதுவரை வாழ்க்கையில சட்டையே தைக்காதவங்க.. குண்டக்க மண்டக்க கோணிப்பை மாதிரி தெச்சாங்க.

ஒரு கிளி மட்டும் இளவரசோனோட மாளிகைக்குப் பறந்து போச்சு. இளவரசன் தூங்கிகிட்டு இருந்தான். சாளரம் வழியே உள்ளே போன கிளி இளவரசனை நல்லா அளந்துகொண்டு வந்தது.

அதன் பிறகு மரகதவல்லி சட்டையைத் தைக்க, கிளிகள் வண்ண மணிகளை எல்லாம் கோர்த்து சட்டையை அலங்காரம் செய்தன..

மறுநாள் காலையில் சட்டைகளைப் பார்த்த இராஜா அசந்து போனார் இதுவரை அதுமாதிரியான அலங்காரமானச் சட்டையை அவர் பார்த்ததே இல்லை, மிகவும் பாராட்டினார்..

மூன்றாவது போட்டி பத்து மூட்டை நெல்லை குத்தி அரிசி தனியா உமி தனியா பிரிக்கணும். அதுவும் ஒரு ராத்திரியில...

இந்தப் போட்டிதான் மரகதவல்லிக்கு ரொம்ப ஈஸியானது.. ஏன்னா கிளிகள் பட்படன்னு எல்லா நெல்லையும் கொத்திக் கொத்தி அரிசி தனியா உமி தனியா ஆக்கி விட்டன..

இளவரசிகளும் அவங்களோட வேலைக்காரர்களும் மாங்கு மாங்குன்னு நெல்லைக் குத்த எல்லாம் நொய் அரிசியாய்ப் போச்சு..


மூன்று போட்டிகளிலும் தோத்துப் போனது இளவரசிகளுக்கு அவமானமாப் போச்சு.. அவங்க உடனே தங்களுடைய அப்பாவுக்கு தகவலனுப்ப

அங்க தேசத்து ராஜா படையத் திரட்டிகிட்டு வந்தாரு... போருக்கு...

தொடரும்
.

Saturday, June 12, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 2



தள்ளாத பாட்டியாக வடிவம் எடுத்த பூதம் மெல்ல குச்சு வீட்டுக்குப் போனது. வேப்பிலை கட்டி இருந்ததால குச்சு வீட்டை நெருங்க முடியலை..

வெளிய இருந்துகிட்டே, எனக்கு தாகமா இருக்கே குடிக்கத் தண்ணி வேணுமே. என் உயிர் போயிடும் போல இருக்கே அப்படின்னு பூதப் பாட்டி புலம்ப ஆரம்பிச்சா,

மரகதவல்லி, ஜன்னலைத் திறந்து பார்த்தா. பாட்டியைப் பார்க்க பாவமா இருந்திச்சு. ஒரு சொம்புல தண்ணியை மொண்டு ஜன்னலோரம் வச்சு வந்து எடுத்துக்கப் பாட்டி என்று சொன்னா.

ஆனா பூதப்பாட்டியால தான் வீட்டை நெருங்க முடியலையே.. மரகதவல்லிக்கு புரிஞ்சு போச்சு.. இது பூதம்தான் என்று..

மரகதவல்லி கதவு ஜன்னல் எல்லாத்தையும் இறுக மூடி வச்சுட்டா.

பூதம் பொறுத்து பொறுத்துப் பார்த்தது,. மரகதவல்லி ஏமாறுகிற மாதிரி தெரியலை. பூதம் என்ன பண்ணிச்சு, தன்னோட கோரைப் பல் ஒண்ணை குச்சு வீட்டு வாசல்ல நட்டு வச்சுட்டு போயிடுச்சி.

சாயங்காலம் கிளிகள் வந்து கதவைத் திறக்கச் சொன்னப்ப தான் மரகதவல்லி கதவைத் திறந்தா.. கிளிகள் உள்ளே வந்ததும் நடந்ததை எல்லாம் சொன்னா. ஆஹா அது பூதம் தான். நல்ல காரியம் செஞ்ச.. இது மாதிரியே எப்பவும் பத்திரமா இரு அப்படின்னு சொல்லி கிளிகள் ஆறுதல் சொல்லிச்சாம்.

அடுத்த நாள் விடியற்காலையில மரகதவல்லி வீட்டு வாசல் பெருக்கி தெளிச்சு கோலம் போட வந்தா..

அப்போ அந்த விஷப் பல்லு நறுக்குன்னு காலில் குத்திருச்சி..

பூதத்தோட பல்லு குத்தினதும் மரகதவல்லி உடம்பெல்லாம் விஷம் ஏறிப் போச்சு. மரகதவல்லி உடம்பு நீலமாப் போக அப்படியே கீழ விழுந்து இறந்துட்டா.

கிளிகளுக்கு ஒண்ணுமே புரியலை. இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு அழுதிச்சுங்க. என்ன பண்ணியும் மரகதவல்லி அசையவே இல்லையே.

சாயங்காலம் வரை அழுத கிளிகள் ஒரு பெட்டியைத் தயார் பண்ணி, அதில் பட்டுமெத்தை தலையணை அப்புறம் தங்கள் கையில் இருந்த நகை நட்டு எல்லாம் மரகத வல்லிக்குப் போட்டு பெட்டியைத் தூக்கிகிட்டு கொண்டு போய் ஆற்றில் விட்டன.

ஆற்றில் பெட்டி போய்கிட்டே இருந்தது. பிரிய முடியாம கிளிகளும் கூடவே பறந்து போச்சு..


தொடரும்


.

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 1




தமிழ் வழிக் கல்வியே பிரதானமாக இருந்த அந்தக் காலத்தில் (70 களின் ஆரம்பத்தில்) சிண்ட்ரெல்லா, ஸ்னோ வைட் எல்லாம் கேள்விப்படாத கதைகள். ஆனால் அதே போல சில கதைகள் புழக்கத்தில் இருந்தன, அவற்றில் ஒன்றுதான் இந்தக் கதை.

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. அவருக்கு ஒரே ஒரு குட்டிப் பொண்ணு. அவள் பேரு மரகதவல்லி.

மரகதவல்லி பிறந்த உடனே, ராணி இறந்துட்டாங்க,

அம்மா இல்லாம குழந்தையை எப்படி வளர்க்கறது என்று ராஜா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாராம்.

சித்தி-ராணி சித்ராங்கி மொதல்ல அமைதியாத்தான் இருந்தா, ஆனால் அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

மரகதவல்லி இருந்தா தன் மகள்களுக்கு அரசாங்கம் கிடைக்காது என்று சித்ராங்கிங்குப் பொறாமை. அதுவும் இல்லாம மரகதவல்லி அழகு, அழகு அப்படி ஒரு அழகு.

அதனால சித்தி - ராங்கி சித்ராங்கி தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு வீரனை அழைத்து மரகதவல்லியை கடத்திகிட்டுப் போய் தலையை வெட்டிப் போட்டிடச் சொன்னா.

அந்த வீரன் மரகதவல்லியை ஒரு சாக்கு மூட்டையில் வச்சுக் கட்டிகிட்டு காட்டுக்குப் போனான. அவலை அவிழ்த்து வெட்டப் போனான்.

மரகதவல்லியின் அழகான குழந்தை முகத்தைக் கண்டதும் வீரனால வெட்ட முடியலை. நாட்டுப் பக்கம் வந்திடாதே வந்தா சித்தி வெட்டிருவா என்றுச் சொல்லி காட்டுக்குள் விரட்டி விட்டுட்டான்.

காட்டுக்குள் அழுதுகிட்டே போன மரகதவல்லி களைத்துப் போய். ஒரு மரத்தடியில் தூங்கிட்டா..

அந்த மரத்தில் ஏழு பச்சைக்கிளிகள் வாழ்ந்துகிட்டு இருந்திச்சு, ஏழும் மிக மிக புத்திசாலிக் கிளிகள்,

மரத்தடியில் படுத்துக் கிடந்த மரகதவல்லியைப் பார்த்த கிளிகளுக்கு பாவமா இருந்தது.. ஒரு கிளி பக்கத்தில ஓடிய ஓடையில் முழுகி பறந்து வந்து மரகதவல்லி முகத்தின் மேல உதற, தண்ணீர் பட்டு மரகதவல்லி எழுந்தா.

இன்னொரு கிளி கூட்டில இருந்து பழங்களை எடுத்து வந்து கொடுத்தது.

பழம் சாப்பிட்டு பசியாறிய மரகதவல்லியோட கதையைக் கேட்டக் கிளிகள், இனி நீ எங்கயும் போகவேணாம். எங்களோடயே இருந்து விடு என்று சொல்ல இந்தச் சின்னக் கூட்டில நான் எப்படி இருக்கறது என்று கேட்டாள் மரகதவல்லி.

ஏழு கிளிகளும் சேர்ந்து மளமளன்னு ஒரு சின்ன குச்சு வீட்டைக் கட்டின.

குச்சு வீட்டைப் பார்த்ததும் மரகதவல்லிக்கு ஒரே சந்தோஷம். வீட்டைச் சுத்தி சுத்தம் பண்ணி அழகா ஆக்கிட்டா..

கிளிகள் பறந்து போய் கொத்து கொத்தா வேப்பிலைகள் கொண்டுவந்து வீட்டைச் சுத்திக் கட்டின.

வேப்பிலை எதுக்குன்னு மரகதவல்லி கேட்டா. இந்தக் காட்டில நிறைய பூதங்கள் இருக்கு. அதெல்லாம் மாயமந்திரம் தெரிஞ்சதுங்க. யார் உருவத்தில வேணும்னாலும் வரும். வேப்பிலை இருக்கிற எடத்தில அதுங்களால வரமுடியாது. அதனாலதான் கட்டறோம்.

பூதங்கள் எந்த உருவத்தில வேணும்னாலும் வரும் . அதனால் எந்தக்காரணம் கொண்டும் இந்த வேப்பிலை தோரணம் தாண்டி வந்திடாதே என்று கிளிகள் எச்சரிக்கை பண்ணின.

கொஞ்ச காலம் வாழ்க்கை சுகமா போயிட்டு இருந்தது. மரகதவல்லிக்கு 18 வயசாச்சு. மிக அழகிய பெண்ணாக வளர்ந்துட்டா..

சந்தோஷமா சிரிச்சுகிட்டு விளையாடிகிட்டு இருந்த மரகதவல்லியை ஒரு நாள் ஒரு பூதம் பார்த்திட்டது...


இவளை எப்படியாவது தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கணும்னு பூதம் நினைச்சது...


அன்னிக்கு எல்லாக் கிளிகளும் உணவு தேட போன பின்னாடி ஒரு பாட்டி உருவம் எடுத்துகிட்டு அந்தக் குச்சு வீட்டுப் பக்கம் போனது.

தொடரும்

Wednesday, December 16, 2009

வல்லவனுக்கு வல்லவன்!!!



அந்த பால்காரன் ரொம்பத்தான் ஹை டெக்.. பால் தான்னாலும் வீட்டிக்கு வீடு இண்டர்நெட் மூலம் ஆர்டர் செய்து குழாயைத் திறந்தா ஆர்டர் பண்ணிய பால் உங்கள் வீட்டிலேயே.. உங்கள் கிரெடிட் கார்டில் பணம் கழித்துக் கொள்ளப்படும்..

என்னதான் டெக்னாலஜி முன்னேறினாலும் மனிதனின் கலப்பட புத்தி மாற்ரதில்லையே.. தண்ணீர் பாலை விட காஸ்ட்லின்னாலும் மனுஷன் புதுசா ஒரு திரவம் கண்டுபிடித்து வச்சிருக்கான்.. பாலோடு சேர்த்து கலந்து விடுவான்..

ஆனால் இன்புட் - அவுட்புட் சரியா காமிச்சாகணுமே.. அதற்காக ஒரு செயற்கைப் பசு வச்சிருந்தான்.. அது பாலும் கறக்காது ஒண்ணும் கறக்காது.. சும்மா மிச்சமான பாலில் இன்னும் ஒரு திரவம் கலந்து பசும்பால் என்று வித்துகிட்டு இருந்தான்..

மிச்சமான காசை எல்லாம் வச்சு ஒரு பி.எம்.டபிள்யூ கார் வாங்கணும் னு ரூபாய் தாள்களை மூட்டையாக் கட்டிகிட்டு ஒரு டாக்ஸி பிடிச்சு ஷோரூம் போனான்..

திடீர்னு டாக்ஸி வேற ரூட்டில திரும்ப, முன் சீட்டுக்கு அடியில பதுங்கி இருந்த குரங்குகள் பல்லை காட்டி இளிச்சிகிட்டே ஒரு மயக்க மருந்தை தூவ.. மனுஷன் சூ-வைக் கழட்டி மோந்து பார்த்தாப்பல பட்டுன்னு மயங்கிட்டான்..

குரங்குகள் அவன் ஏமாத்தி சேர்த்த பணத்தையெல்லாம் மூட்டையா தூக்கிகிட்டு போயிடுச்சு..

அடுத்த நாள் பேப்பர்ல கொட்டையாய் அதுதான் தலைப்புச் செய்தி...

குரங்குகள் கைது - கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற போது கையும் களவுமாய் பிடிபட்டன..

ஆமாம் கலப்பட பாலுக்கு வாங்கற மக்கள் கள்ள நோட்ட கொடுப்பாங்கன்னு பால்காரனுக்குத்தான் தெரியுமா இல்லை குரங்குகளுக்குத்தான் தெரியுமா??

.

Sunday, December 6, 2009

சித்தகிரி!!!

கொடைக்கானல், இந்த பெயரை கேட்டாலே உடம்பு குளிரும், சுவாசக் குழாயில் யூக்கலிப்டர்ஸ் மர வாசனை நிரம்பும், கண்கள் ஜீல்லிடும், மனது அமைதியாக ஒரு நிலைப்படும். இந்த எல்லா உணர்ச்சியும் கொடைக்கானலை ஏற்கனவே பார்த்தவர்களுக்கு மட்டும் தான். இதுவரை அதை பார்த்திராதவர்களுக்கு அது வேறு மலைப் பிரதேசம் அவ்வளவே. வாசு முதல் முறையாக அங்கு செல்கிறான் அதுவும் தனியாக டிசம்பர் மாசத்தில், நண்பர்களின் யோசனைப் படி தான் இங்கு வந்தான். அவன் கொடைக்கானலை சுற்றி பார்க்க ஒரு பிரைவேட் வேனில் பல பயணிகளுடன் இவனும் சென்றான், அவன் கூட வேனில் பெரும்பாலும் வயதானவர்கள்,வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், வேன் புறப்பட்டது. லேசாக மழைத் தூரல் போட்டுக் கொண்டே இருந்தது. வாசுவுக்கு ஜன்னல் ஓர இடம் கிடைத்தது. வாசு அங்குள்ள காட்சிகளை வெகுவாக ரசித்த படி வந்தான். கையிடு ஒவ்வொரு தளமாக விளக்கிக் கொண்டே வந்தான். இருநூறு வருடமாக இருக்கும் சர்ச்சு, ஐநூறு வருடம் வயதான மரம் என்று பல. வேன் ரோட்டின் ஓரமாக நின்றது, முன்னாடி உக்கார்ந்து இருந்த கையிடு எழுந்து பயணிகளிடம் திரும்பினான்,

"சார் அதோ தெரியுது பாருங்க அந்த மலைப் பேரு மதிக்கெட்டாஞ்சோலை, அந்த மலை ஒரு ரிசர்வ்டு ஏரியா, அங்க நிறைய விதமான அதிசயங்கள் இருக்கு. மூலிகைகள், அதிசய விலங்குகள், பறவைகள்ன்னு நிறைய இருக்கு. அங்கே இதுவரைப் போன மனிதர்கள் திரும்ப வந்ததே கிடையாது, காரணம் என்னனு ஒழுங்கா தெரியல, சிலப்பேர் விலங்குகள் கொன்று விடும் சொல்றாங்க. மீதிப் பேர் அங்கே போன மனம் கெட்டு அங்கேயே இருக்க தோணும்னு சொல்றாங்க, அதனால தான் இந்த இடத்துக்கு மதி+கெட்டான்+சோலையினு பேர் வச்சி இருக்காங்க, இப்போ இது ரிசர்வ்டு ஏரியா" என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் அந்த கையிடு.

பயணிங்கள் அனைவரும் அந்த வேனைவிட்டு கீழே இறங்கிச் சென்று கொஞ்ச தூரத்தில் இருந்த மலையை பார்த்தனர். வாசுவும் இறங்கி பார்த்தான், அந்த மலை ஒய்யாரமாக நின்று இருந்தது, அதில் இருந்து வினோதமான சத்தங்களும், மூலிகையின் வாசனையும் வந்தது. அனைவருக்கும் அந்த மலையை பார்க்க கொஞ்சம் திகிலாக தான் இருந்தது. வாசுவுக்கு மட்டும் அந்த திகில் ஆர்வமாக மாறியது. அந்த மலைக்கு போக வேண்டும் என்று தான் இவன் வெளிநாட்டில் இருந்து வந்தான். கையிடிடம் காசைக் கொடுத்து விட்டு பாதியிலே இறங்கிக் கொண்டான். வேன் புறப்பட்டது. யாருமே அங்கு இல்லை. இவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அங்கு இருந்த வேலியை தாண்டி உள்ளே சென்றான். வாசு ஒரு ஓர்னித்தாலஜீஸ்ட் (பறவைகளை ஆராய்பவன்) வயது 30, இவன் ஒரு வித்தியாசமானவன், விதிவிலக்கானவன் எல்லாரையும் ஒப்பிடும் பொழுது இவன் சில விஷயங்களின் தனியாக தெரிவான். அப்படி எடுக்கப்பட்டது தான் இந்த படிப்பும், இப்போ டீஸ்கவரி சானலில் வேலையில் இருக்கான், இந்த மதிக்கெட்டாஞ்சோலையைப் பற்றி ஒரு ஆங்கில புத்தகத்தில் படித்து, அங்குள்ள பறவைகளை பற்றி ஒரு டாக்குமேண்டரி எடுக்க விரும்பி, தமிழன் என்பதனால் இவனை அனுப்பி இருக்கிறார் இவனுடைய பாஸ். காலை 10.00, வாசு அந்த மலைகாட்டுக்குள் சென்றான். அங்கு பல விதமான சத்தங்கள் பூச்சியில் இருந்து புலி வரை அனைத்து சத்தமும் கேட்டது. வாசுவுக்கு இது சத்தம் எல்லாம் பழக்கம் தான் ஏனென்றால் இவன் பத்து வருடமாக காட்டிலே தான் அலைந்துக் கொண்டு இருக்கிறான். தன்னுடைய பையில் இருந்த சவுண்டு ரெக்கார்டர் எடுத்து காட்டில் கேக்கும் சத்தங்களை பதிவு செய்துக் கொண்டே நடந்தான். பல நூறு வருஷம் வயதுள்ள மரங்கள், பல விதமான பறவைகள், தேங்காய் அளவு பெரிய பூச்சிகள் என்று பல விதமான உயிரினங்களை பார்த்தான். மலையின் நடுவே வந்து விட்டான். அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தில் இருந்து வயதான மனிதன் கீழே வாசுவை நோக்கி குதித்தான். வாசு தடுமாறிய படி கீழே விழுந்தான். பயத்துடன் அந்த முதியவரை பார்த்தான், முகத்தில் கண்கள் மட்டும் தான் தெரிந்தது மீதி அனைத்தும் முடிகளால் மறைந்து இருந்தது, அதுவும் வெள்ளை நிறத்தில். முழு நிர்வாணமாக இருந்தார், எதாவது காட்டுவாசியாக இருக்குமோ என்று வாசு நினைத்த சமயத்தில், அந்த முதியவர் சுத்த தமிழில்

"யாரைக் கேட்டு என் சித்தகிரிக்குள் வந்தாய்" என்றார் கண்களை உருட்டியபடியே......


-----------------x---------------------------x-------------------------x

சித்தகிரியா? சித்தம் கொஞ்சம் கிறுகிறுத்துதான் போனது வாசுவுக்கு..!

தமிழ். அதுவும் சுத்தத் தமிழ். வெள்ளை பரட்டை முடி, நிர்வாண உடல், வாசுவுக்கு உதறலிலும் தன் முன்னே அரிய வாய்ப்பு நிற்பது புரிந்தது. தன்னிடம் இருந்த கையடக்க வீடியோ காமிராவை ஆன் செய்து அவர் பக்கம் திருப்பியபடியே

"ஐயா, இது உங்களுடைய காடு என எனக்குத் தெரியாது, நான் ஒரு இயற்கை ஆர்வலன். உலக இயற்கையை ஆராய்ந்து இயற்கையை மக்களுக்கு புரியுபடியும் சொல்வதுதான் என் வேலை.." வாசு சொல்ல எத்தனிக்க

கட கடவென அந்த இடமே அதிரும்படியானச் சிரிப்பு..வெடித்தது முதியவரிடத்தில் "உண்மையா? உண்மையா?" வெடிச்சிரிப்பில் விதிர்விதிர்த்துப் போனான் வாசு.

என்ன என்ன... நடுக்கமாகக் கேட்டான் வாசு..

இயற்கையை நேசிப்பவனே, நீ ஏன் இயற்கையாக இல்லை பெரியவரின் கேள்வி புரிந்தது மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும் இருந்தது வாசுவுக்கு.

அது வந்து மனிதர்கள் புரியாமல் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இயற்கையின் எழில்களைக் காட்டி அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது என் வேலை...

அவர்களுக்குச் சொல்வது அப்புறம்.. நீ இயற்கையோடு கலக்க விரும்புகிறாயா?

சிலீரென்று குளிர்ந்தது வாசுவின் முதுகுத் தண்டு, இயற்கையோடு கலப்பது என்றால்... என்னைக் கொல்லப் போகிறாரா இல்லை இவரை மாதிரியே நிர்வாணமாய் திரியும் சித்தனாக்கப் போகிறாரா? என்னதான் சொல்கிறார் குழம்பத் தொடங்கியிருந்தான்..

இயற்கையோடு கலப்பது என்றால்..

வாசுவின் தயக்கமான கேள்விக்கு திடமான பதில் வந்தது,,

இயற்கையோடு கலப்பது என்றால், அதோ அந்தக் காற்றாய் இருப்பது..இதோ இந்த இலையாய் இருப்பது.. அந்த மரமாய் இந்த வண்டாய் அந்த மேகமாய் இந்தப் பாறையாய் எதையெல்லாம் நாம் பார்ர்க்கிறோமோ அதாக ஆகிப் பார்ப்பது,,

கூடு வி...ட்டுக் கூ....டு பா...ய்வதா -- தயக்கத்துடன் வார்த்தைகளை சிரமத்துடன் உதிர்த்தான் வாசு.

இல்லை மானிடா அணுவாய் பிரிந்து அணுவாய்ச் சேர்வது. உன்னுடலைத் தனித்தனி அணுக்களாக்கி அனைத்திலும் உன்னைப் பரவச் செய்வது,,

நான் இன்னும் அதற்குத் தயாராகவில்லை என நினைக்கிறேன்.. எனக்கு பக்குவம் போதாது... வாசு படமெடுத்து நிற்கும் நாகத்தின் முன் நிராயுதபாணியாக நிற்பது போல உணர்ந்தான். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.

உன்னை ஏற்கும் பக்குவம் இங்குள்ள அனைத்திற்கும் இருக்கிறது - முதியவரின் மறுமொழி அவனை நடுங்கச் செய்தது..

அது வந்து நான் என்னைத் தயார்படுத்திக் கொள்ள...

மானிடா, உன்னை இழந்த பின் தான் உன்னில் இருப்பது அண்டவெளியில் இருக்கும் இருள்தான் என்பதை அறிவாய்,, உன் அணுக்கள் கொள்ளையிட்ட அத்தனைச் சக்திகளும் அதனதன் இடம் சேர்ந்தால் அந்த அணுச்சேர்க்கையின் ஒளியில் உன் அறியாமை அகலும். தெளிவாவாய்.. உன்னுள் என்ன இருந்த்து என்பதை உணர்வாய் இயற்கையாவாய்...

வாசுவின்நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது பேச்செழவில்லை, தொப்பென முதியவரின் கால்களில் விழுந்தான்,,

என்னை விட்டு விடுங்கள்.. என்னை விட்டு விடுங்கள்.. பிதற்றிக் கொண்டே மயங்கினான்.. பொழுதும் மயங்கியது..

-----------x-----------------------x-------------------------x--------

மறுநாள் பொழுது புலர்ந்தது. சூரியன் தன் கிரணக் கைகளால் இலைகளை விலக்கி எட்டிப் பார்த்தான்..

அங்கே தரையில்.. புதிதாய் ஒரு மரம் முளைவிட்டிருந்ததது.. சின்னச் சின்னச் சுவடுகள் மாத்திரம் நேற்று அங்கே எதோ நடந்ததிற்கு அடையாளமாய் மிச்சமிருந்தன,

சலசலத்த ஓடையில் ஒலிப்பதிவுக் கருவி மூச்சுத் திணறி இறந்து கிடந்தது.. எதோ ஒரு கருங்குரங்கு வாசுவின் சட்டையை கிழித்து எதையோ தீவிரமாய்த் தேடிக் கொண்டிருந்தது. ஒளிப்பதிவுக் கருவி ஏதோ ஒரு கரடிக் குகையில் நசுங்கிக் கிடந்தது..

மெல்ல மெல்ல சூரியன் உச்சிக்கு வந்து எட்டிப் பார்த்தான். யாரோ இருவர் நடந்து சென்ற பாதை அந்த ஓடையோர மணற் பரப்பில் தெரிய, சூரியன் தலைதூக்கி மலை உச்சியைப் பார்த்தான்..

அங்கே கைடு உல்லாசப் பயணிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்..

"சார் அதோ தெரியுது பாருங்க அந்த மலைப் பேரு மதிக்கெட்டாஞ்சோலை, அந்த மலை ஒரு ரிசர்வ்டு ஏரியா, அங்க நிறைய விதமான அதிசயங்கள் இருக்கு. மூலிகைகள், அதிசய விலங்குகள், பறவைகள்ன்னு நிறைய இருக்கு. அங்கே இதுவரைப் போன மனிதர்கள் திரும்ப வந்ததே கிடையாது, காரணம் என்னனு ஒழுங்கா தெரியல, சிலப்பேர் விலங்குகள் கொன்று விடும் சொல்றாங்க. மீதிப் பேர் அங்கே போன மனம் கெட்டு அங்கேயே இருக்க தோணும்னு சொல்றாங்க, அதனால தான் இந்த இடத்துக்கு மதி+கெட்டான்+சோலையினு பேர் வச்சி இருக்காங்க, இப்போ இது ரிசர்வ்டு ஏரியா"

வாசுவுக்கு எல்லாம் தெரிந்து கொண்டிருந்தது.

உங்களுக்குத் தெரிகிறதா?

முற்றும்.

Friday, December 4, 2009

சரிகம குடும்பம்!!!

என்னங்க வீடே "வெறிச்"சுன்னு இருக்குங்க. அப்பா அம்மாவை வீட்டுக்கு அழைச்சிகிட்டு வந்திடலாங்க. கெஞ்சலாகச் சொன்னாள் வித்யா.

என்ன சொல்ற வித்யா, நீ தானே இருக்குற கொஞ்ச காலம் அவங்க அவங்க வயசு நண்பர்களோட அமைதியா சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும். இங்கே அவங்களுக்கு கூடப் பேச்சுத் துணை கூட இல்லாம ரொம்பக் கஷ்டப் படறாங்க அப்படின்னெல்லாம் என்னைச் சமாதானப் படுத்தி அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட.. ஆச்சர்யமாய்ப் பார்த்தான் விஜய்..

அப்பா குரல் எவ்வளவு கணீர்னு இருக்கும் இல்லையா? வாராய் நீ வாராய்னு பாட ஆரம்பிச்சா இன்னிக்கெல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம். அம்மா மட்டும் என்னவாம்.. குறையேதுமில்லைன்னு பாட ஆரம்பிச்சா மனசில இருக்கிற அத்தனைக் கனமும் போய் அப்படியே இலேசாயிடுமே... நம்ம வினய்க்கும் அவங்களோட இருந்தா நல்ல சங்கீதமும் வரும். கதை சொல்வதற்கும்.,. குழந்தையும் குடும்பம் பந்தம் பாசம்னு நல்லா வருவான் இல்லியா.. வித்யா கெஞ்சினாள்..

சரி சரி இந்த சனிக்கிழமையே போய் அழைச்சிகிட்டு வந்திடலாம். சரியா.. இப்போ செல்வம் வீடு வரைக்கும் போகணும் கொஞ்சம் வழி விடறயா? விஜய் சந்தோஷமாகக் கொஞ்சினான்..

விஜய் கிளம்பியதும்.. வித்யா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தாள்..

வேணு கோபால் - தாத்தா - வயது 60.............. ..... ........... ....
கலாதேவி - பாட்டி - வயது 55 ....... ...... ..... ....
விஜய் - அப்பா - வயது 35 .............. ..... ........... ....
வித்யா - அம்மா - வயது - 32 .............. ..... ........... ....
வினய் - வயது - 9 .............. ..... ........... ....


விண்ணப்பத்தை பூர்த்து செய்து கவரில் முகவரியை எழுத ஆரம்பித்தாள்.


சக்ரா சரிகம ஃபேமிலி
விஜய் டி.வி..
தபால் பெட்டி எண் ...
சென்னை ...

(குறிப்பு : விஜய் டி.வி.யில் சக்ரா சரிகம ஃபேமிலி என்ற ரியாலிடி ஷோ விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..

நிபந்தனை

10 வயதுக்குட்பட்டக் குழந்தை
தாய் தந்தை
தாத்தா பாட்டி

என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கலந்து கொள்ள வேண்டுமாம்.)

Wednesday, December 2, 2009

நாய் -- பூனை -- எலி

ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால எல்லா வளர்ப்பு பிராணிகளும் ஒண்ணுமண்ணா, ஃபிரண்ட்ஸா இருந்திச்சாம்.

அப்பல்லாம் பூனையும் நாயும் ஒண்ணா விளையாடுமாம். எலிகள் பயமே இல்லாம பூனைகளோட கதை பேசுமாம்..

ஒரு முறை நாய்க்கும் பூனைக்கும் ஒரு யோசனை வந்துச்சாம். நாம எல்லோரும் எல்லா வேலையும் செய்யவேணாம். வீட்டுக்கு வெளிய இருக்கற வேலையை நாயும், வீட்டுக்கு உள்ள இருக்கற வேலையை பூனையும் செய்யலாம்னு முடிவு பண்ணிச்சாம்.

எதுக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்னு சொல்லி ஒரு பத்திரத்தில எல்லாம் எழுதி இரண்டு பேரும் கையெழுத்து போட்டதாம்.

பத்திரத்தை எங்க பத்திரமா வக்கறதுன்னு ரொம்ப நேரம் யோசனை பண்ணிச்சதுகளாம். அப்பதான் பேங்க் லாக்கர் எல்லாம் கிடையாதே.. சரி எலி கிட்ட கொடுத்து வீட்டுப் பரண்மேல இருக்கிற பொட்டியில வைக்கச் சொல்லுவோம்னு சொல்லிக் குடுத்து வச்சதாம்.

நாய் பூனை எலி மூணும் பத்திரத்தைப் பத்தி மறந்தே போச்சாம். ஒரு நாள் அந்த வீட்டுக்காரம்மா, பரணைச் சுத்தம் பண்ணினப்ப என்னடா இது குப்பை கிடக்குது அப்படின்னு அந்த ஒப்பந்தப் பத்திரத்தை அடுப்பில போட்டு எரிச்சுட்டதாம்.

கொஞ்ச நாள் ஆனதும் நாய்க்கு கோவம் கோவமா வந்ததாம். பின்ன வெய்யிலிலும் மழையிலும் காட்டிலும் மேட்டிலும் து அலைய வேண்டியதா இருந்தது. சாப்பாடு சரியில்லை. ஆனா பூனை வீட்டுக்குள்ளயே சந்தோஷமா இருந்துகிட்டு சந்தோசமா இருக்கேன்னு கோபம்.

நாய் பூனை கிட்ட வந்து இனிமே நான் வெளி வேலைக்கு போமாட்டேன் நீதான் போகணும்னு அடம் பிடிச்சதாம். பூனை அதெல்லாம் கிடையாது. நாம அக்ரிமெண்ட் போட்டு பத்திரம் எழுதி இருக்கோம். அதுப்படி நீ நடந்துக்கத் தான் வேணும் என்று சொன்னதாம்.

நீ என்ன ஏமாத்துற.. அக்ரிமெண்ட்ல அப்படி ஒண்ணும் எழுதலை என நாய் சத்தம் போட்டுச்சாம்.. இரு இரு அக்ரிமெண்டைக் கொண்டு வந்து காட்டறேன் அப்படின்னு சொல்லிட்டு பூனை பரண் மேல போய் சுண்டெலியைப் பாத்து ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு அக்ரிமெண்ட் உங்கிட்ட குடுத்தனே அதைக் குடுன்னு கேட்டதாம். சுண்டெலி தலையைச் சொறிஞ்சிகிட்டே அங்கயும் இங்கயும் தேடிச்சாம்.

கடைசி வரை அக்ரிமெண்ட் கிடைக்கலன்னு தெரிஞ்சவுடன் பூனை எலியைத் தொரத்தி தொரத்தி கடிச்சதாம்..

பூனையை நாய் பாக்கறப்ப எல்லாம் எங்க அந்த அக்ரிமெண்ட் அப்படின்னு கோபமா விரட்டிக் குலைக்குமாம்.

பூனை எலியைப் பாக்கறப்ப எல்லாம் அக்ரிமெண்டை எங்க அப்படின்னு கேட்டுக் கேட்டுக் கடிக்குமாம்.

எலியோ ஊர்ல இருக்கற எல்லாப் பேப்பரையும் அது அக்ரிமெண்டா அப்படின்னு படிச்சுப் பார்த்து ஏமாந்து கோபத்தில கொறிச்சு போட்டுடுமாம்.

இன்னும் அக்ரிமெண்ட் கிடைக்கலயாம். அதனால சுட்டீஸ், உங்க புத்தகம் நோட்டு எல்லாத்தையும் பத்திரமா எலி வராத மாதிரி வைங்க என்ன...


samuthraselvam


"நாய் பூனையை விரட்டுவதற்கும் , பூனை எலியை விரட்டுவதற்கும் இந்தக்காரணம் சரி. ஏன் அம்மா உங்களை விரட்டுறாங்க?"

எல்லாம் அக்ரிமெண்ட்தான் காரணம்...

கல்யாணம் ஆன புதுசில அப்பா வெளியில் வேலை பார்த்து சம்பாதிச்சி வருவதாகவும் அம்மா வீட்டைக் கவனிச்சுகிட்டு எல்லா வேலையும் செய்வதாகவும் அக்ரிமெண்ட் போட்டோம்..

விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சா அதனால அப்பாவால எல்லாம் சம்பாதிக்க முடியலை. அதே சமயம் வீட்டு வேலைக்கு மிஷினல்லாம் வந்துச்சா அப்பா கொண்டுவந்த பணத்தை வச்சு எல்லாம் வாங்கிப் போட்டுட்டு அம்மா டி.வி சீரியல் பார்த்து ஜாலியா இருக்க ஆரம்பிச்சாங்க..

அப்பா தான் ஏமாந்து போனதை தெரிஞ்சுகிட்டு அந்த அக்ரிமெண்டைக் கிழிச்சுப் போட்டுடலாம் அப்படின்னு தேடினா அம்ம அதை பத்திரமா எடுத்து ஒளிச்சு வச்சுட்டா..

இன்னும் அப்பா அம்மாவுக்குத் தெரியாம வீடு பூரா அக்ரிமெண்டை தேடறதும், அக்ரிமெண்ட் இருக்கற பக்கம் போனா அம்மா அடிச்சு விரட்டறதும் தொடர்ந்து நடந்து கிட்டே இருக்கு ..

உயிருக்கு மரியாதை!!!

தலைவரே இன்னிக்கு உங்க பேச்சு ஆளும் கட்சியை ஒரு கலக்கு கலக்கி இருக்கும்..

முன் சீட்டில் அமார்ந்திருந்த செம்மல் சுந்தரம் வாய்நிறையச் சிரிப்புடன் இருந்தார்..

பின்ன இருக்காதா, அதுமட்டுமா ஆளுங்கட்சியை முந்திகிட்டு இரயில் விபத்தில இறந்தவர்களுக்கு கட்சி சார்பா ஒரு இலட்சம் கொடுத்ததும் இல்லாம, இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இரயிவே டிபார்ட்மெண்ட்லயே வேலை தரணும்.. அப்படி அவர்கள் தராவிட்டாலும் அடுத்தது எங்கள் ஆட்சிதான்.. அதில் இப்படிப் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை தரப்படும். இந்த அரசு உயிர்களை துச்சமாக மதிக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மரியாதை அளிக்கும் மனிதாபிமானம்தான் எங்கள் கொள்கையின் உயிர் என்று ஒரு அடி அடிச்சீங்களே.. சூப்பர்.. அடுத்த முதல்வர் தலைவர்தான்

அமைச்சர் பதவிக்கு அச்சாரமாய் ஐஸ் வைத்தார் உடுமலை உத்தமன்,

தலைமை அலுவலகத்தை அடைந்ததும் அனைவரும் அவரவர் காரில் ஏறி, தங்கள் வீட்டிற்கும் லாட்ஜிற்கும் போக...

தலைவரின் பென்ஸ் கார் மகாபலிபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரைந்தது. தலைவர் உற்சாகமாய்ச் சாய்ந்திருந்தார், அந்த தேக்கு மரக் காடுகளுக்கு மத்தியில் இருந்த அவரது இரகசிய பக்களாவில் இன்று அவருக்காக புதிய விருந்து காத்துக் கொண்டிருந்தது(தாள்).. அதைப் பற்றியக் கற்பனையில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருந்தார். அப்போது..

தட் என்ற தடித்த சத்தம் வர வண்டி கிரீச்சிட்டு நின்றது..

டிரைவர் என்னாச்சு? அவசர அவசரமாய் டிரைவர் இறங்க முயற்சிக்க.. போ .. வேகமாகப் போ.. அதெல்லாம் கவ்னிக்க நேரமில்லை. கெஸ்ட் ஹவுஸூக்குப் போ.. விரட்டினார்.

..

...

மறுநாள் காலை.. கெஸ்ட் ஹவுஸ் வேலைக்காரிக கொண்டு வந்து கொடுத்த காஃபியைப் பருகியபடி செய்தித் தாளை எடுத்து தலைப்புச் செய்தியாய் வந்திருந்த அவரது நேற்றைய உரையைப் பார்த்து புன்னகைத்தார்.

உயிருக்கு மரியாதை. எதிர்கட்சித் தலைவர் சிங்காரம் உருக்கமானப் பேச்சு

சென்னை ஜூன் 4. சென்னையில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் ...................................................
................................................................................
................................................................................

கடைசிப் பக்கத்தின் மூலையில் சிறியதாக அந்தச் செய்தி இருந்தது..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி சாவு..

சென்னை ஜூன் 4. கோவலம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இப்பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு 11 மணி அளவிற்கு இவர் வேலை முடிந்து கிழக்குக் கடற்கரைக் கரைச் சாலையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றும்.

.

அலைகள் !!!

அலைகள் சற்று இரைச்சலாக பேசிக்கொண்டிருந்தன. நாலு வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரிகளே வாய் மூடாமல் ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஊரே அவர்கள் முன் ஆயிரம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யும் அவைகளுக்குப் பேசவா விஷயங்கள் இல்லாமல் போய் விடப் போகின்றன..

வத்சலா தலையைக் குனிந்தவாறு உட்காந்திருந்தாள். அவளுக்கு அருகே சற்றுத் தள்ளி வின்சென்ட் அமர்ந்திருந்தான்.

இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் திரையாய் இருந்தது.

வத்சலாதான் மௌனத்தைக் கலைத்தாள்.

வின்சென்ட், நீங்கள் மிகவும் நல்லவர். பொறுமையும் அன்பும் நிறைந்தவர். எந்த ஒரு பெண்ணுமே உங்களைப் போன்ற ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அப்புறம் என்ன வத்சலா, என் காதலை ஏற்றுக் கொள்ள உனக்கு என்ன தயக்கம்?

புரிஞ்சுக்கோங்க வின்சென்ட், எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். என்னுடைய இந்த சுயநலத்திற்கு அவளோட வாழ்க்கை பலியாயிடக் கூடாது. உங்கள் நல்ல மனதிற்கு உங்களை புரிந்து கொண்டு வாழும் ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள்...

உனக்காக நான் எத்தனை வருடம் வேண்டுமானால் காத்திருக்கத் தயார்.. உன் தங்கையின் கல்யாணம் முடிந்த பின்னால் வேண்டுமானால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், வின்சென்ட் சொல்லிக் கொண்டே போக..

வேணாம் வின்சென்ட், இதை மறந்திடுங்க
சொல்லிவிட்டு வத்சலா எழுந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்..

-------------------------x-----------------------------x---------------------x---------------

கொஞ்ச தூரத்திற்கு அப்பால் ஒரு படகு மறைவு..

வாத்சல்யா, கொஞ்சம் யோசி.. என் குடும்பச் சூழ்நிலை அப்படி...
என்ன விஜய் புரிஞ்சுதான் பேசறீங்களா? இப்படி அவசரப்பட்டா எப்படி?

என்ன செய்வது வாத்ஸ், அம்மாவின் உடம்பு ரொம்ப சீரியஸா இருக்கு. அவங்களுக்கு எனக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை..
அம்மாவிடம் உண்மையைச் சொல்லி விட வேண்டியது தானே.

சொல்லலாம் ஆனாலும் அம்மா கல்யாணத்திற்கு உடனே ஏற்பாடு செய்யச் சொல்வாங்க..
உடனே எப்படிச் செய்ய முடியும் விஜய், வீட்ல அக்கா இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கிறா, இந்த நிலையில எனக்குக் கல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்றால் அவ வாழ்க்கை வீணாயிடாதா?

அதுக்கு இப்ப என்ன செய்யறது வாத்ஸ், உனக்கு அக்கா வாழ்க்கை, எனக்கு அம்மாவின் ஆசை..
ஆமாம் விஜய், ரொம்ப யோசிச்சுதான் இந்த முடிவிற்கு வந்திருக்கேன்.. உங்க அம்மாவின் விருப்பப்படி ஒரு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செஞ்சுக்குங்க. அதுதான் நமக்கு முன்னால இருக்கும் ஒரே வழி..

வாத்ஸ் இதெப்படி முடியும்..
இல்லை விஜய், நம்ம காதலால நாம யாரையும் சந்தோஷமா வச்சுக்க முடியலை... அப்படிப்பட்ட காதல் அழிஞ்சே போயிடட்டும்..

வாத்ஸல்யா திட்டமாக சொல்லி விட்டு எழுந்து பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள்.


--------------------x---------------------x----------------------x----------------x--------------
பேருந்து நிறுத்தத்தில்

என்ன அக்கா, இங்க நின்னுகிட்டு இருக்கே...

வாத்ஸல்யா, வத்சலாவின் கைகளைப் பிடிக்க,

சும்மா ஃபிரண்ட்ஸோட வந்தேன்.. வத்சலா சற்றுத் திரும்பி கண்ணில் தூசு விழுந்தாற் போலக் கண்களைத் துடைத்துக் கொள்ள...

வாத்ஸல்யாவும் துடைத்துக் கொண்டாள்.

தூரத்தில் அலைகள் புதியக் கதையை தங்களுக்குள் இரைச்சலிட்டு விவாதித்துக் கொண்டிருந்தன

அந்த ஏழு நாட்கள் - நெடுங்கதை!!!

அந்த ஏழு நாட்கள்! - பாகம் 1

எத்தனை நாட்கள்தான் இப்படியே போகப் போகிறது! ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வருமே..   "Every dog has it's own day!"

ஒரு நாளாவது ஹீரோவா வாழ்ந்திடனும். அதுக்காகத்தான் எத்தனைச் சிரமப் பட்டாச்சு.. சனியன் சந்து முனையில எப்பவுமே காத்துகிட்டே இருப்பார் போல இருக்கு கவுக்கிறதுக்கு..

அப்படித்தாங்க அன்னிக்குன்னு மனைவிகிட்ட சவால் விட்டாச்சு.. ஒரு வாரம்தானே! நான் எட்டு வருஷமா சமைச்சு சாப்பிட்டவனாக்கும். 30 பேர் வந்தாலும் முக்கா மணி நேரத்தில விருந்து பண்ணி அசத்திட மாட்டேன்.. நாலு அடுப்பில நாலு பாகங்கள் ஒரே சமயத்தில பண்ற கில்லாடியாக்கும்.. என்ன நினைச்ச நீ. ஒரு வாரம் தனியா இருக்க மாட்டனா என்ன? எனக்கு வேலை இருக்கு நீ போய்ட்டு வா! (அதுக்குள்ள எனக்குள்ள நான் தங்கமணி ஊருக்கு போயிட்டான்னு பத்து முறையாவது குதிச்சாச்சு).

அந்த ஒரு மங்களகரமான புதன்கிழமை.. காலை 10:00 மணிக்கு அவளை ட்ரெய்ன்ல ஏத்தி விட்டாச்சு. ஆமாம் குழந்தைங்க சகிதமாத்தான். அப்பதான் பாசம் பெருக்கெடுக்க மினரல் வாட்டரென்ன, குர்குரே என்ன, வார மாத புத்தகம் என்ன? ஜாக்கிரதையா போகணும்.. அம்மா கூடவே இருக்கணும்.. எல்லாம் சொல்ல..

பாத்துங்க.. வேளா வேளைக்குச் சாப்பிடுங்க.. கச்ச்ட்ஜ்வ்ட் வ்க்ஜ்ப் வ்ட்வ் ட்வ்ப்ஜ்பொ வ்fவ்ப்ன்fப்

யாரு கேட்டா என்ன சொன்னாள்னு .. அப்படித்தான் எதோ கசமுசன்னு உளறிக்கிட்டிருந்தா! நான் தான் வேற உலகத்தில இருந்தனே!.. எவன் கேட்டான் இவள் உளறலையெல்லாம்.. இந்த ட்ரெய்ன் வேற ஒரு கழுத்தறுப்பு நேரத்துக்கு எடுக்க மாட்டானே.. பஸ் மாதிரி விசிலடிச்சனா எடுத்தனான்னு இல்லாம, ஹாரனாம், சிக்னலாம், பச்சைக் கொடியாம்.. விட்டா ஒவ்வொரு பொட்டியிலிருந்தும் சிக்னல் குடுப்பாங்க போல இருக்கு எடுத்துத் தொலைங்கடா! என் பொறுமையைச் சோதிக்கவே பொறப்பெடுத்திருக்கானுங்க..

பின்ன என்னங்க.. வந்தமா ஏறனமா போனமான்னு இருக்கா ட்ரெய்னு.. ஒண்ணரை மணி நேரத்துக்கு முன்னால வீட்ல இருந்து புறப்பட்டு டிராஃபிக்ல புலம்பிகிட்டே ஹாரன் அடிச்சி, சிக்னலில் புலம்பி, கட் பண்ற பைக்காரன்களை திட்டி ஸ்டெஷனுக்கு வந்தா பார்க்கிங் லாட்ல சுத்தி கிடைச்ச ஒரு சந்தில காரைச் சொருகி நிறுத்திட்டு, லக்கேஜைத் தூக்கிகிட்டு லொங்கு லொங்குன்னு நடந்து பிரிட்ஜேறி இறங்கி, கம்பார்ட்மெண்ட் தேடி எல்லாத்தையும் ஏற்றி விட்டு, அப்புறம் என்ன வேணும்னு கேட்டு எல்லாத்தையும் வாங்கித் தந்து அந்தப் புலம்பலையெல்லாம் கேட்காமல் கேட்கற மாதிரி நடிச்சு.. இவ்வளவு கஷ்டமெல்லாம் எதுக்கு?

அந்த ஒரு வாரச் சுதந்திரத்துக்குத் தானே!

அதுலயும் இப்படி டிலே பண்ணினா எப்படி?

ஒருவழியா ட்ரெய்ன் கிளம்பியாச்சு.. ட்ரெய்ன் வேகமெடுக்க வேகமெடுக்க மெதுவா போய்கிட்டு இருந்த காலமும் வேகமெடுத்திச்சு.. சந்தோஷம் வந்துட்டாத்தான் இந்த வாட்சுக்கு கூட புது எனர்ஜி வந்துரும் போல.. முள்ளுங்க ரெண்டும் குடுகுடுன்னு ஓடுதே!..

ஆஃபிஸில் ரெண்டு மணிநேரம் பர்மிஷன் போட்டிருக்கு. போனா கொஞ்ச நேரத்தில லஞ்ச் அவுட் போகணும்.. பின்ன கொண்டாட்டத்தோட தொடங்க வேணாமா?

சரக்கென்று கார்பார்க்கிங்கில் இருந்து காரை உருவினேன்,, டங்கென்ற சத்தம்..

தொடரும்.



அந்த ஏழு நாட்கள்! - பாகம் 2


காரோட பின் பக்கம் பம்பர் அந்தப் பில்லரில் மோதி மூளியாகி இருந்தது.. என்னடா இது ஆரம்பமே அடிவிழுதே!
ம்ம்ம்.. எல்லாம் அவளோட பொருமல்தான்னு நினைக்கிறேன்.. இதுக்கெல்லாம் அசருவமா? ஆனா திரும்பி வந்தா பின்னிப் பெடலெடுத்துடுவாளே! இன்னிக்கே ரிப்பேருக்கு விட்டா போச்சு, ரெகுலர் சர்வீஸ்னு மழுப்பிரலாம்

மெல்ல வெளிய வந்தேன்.. மணி 11:00. ஆஃபீஸூக்கு போனா 12:00. அப்படி இப்படிச் சுத்தி எல்லாத்துக்கும் ஹாய் சொல்லிட்டு திரும்ப வந்தா கேங் ரெடி..

எங்க போலாம்? சைனீஷ்? இடாலியன்? ஜெர்மன்? மெக்ஸிகன்? செட்டிநாடு? முகல்? பார்பேக்யூ? 30 நிமிஷ டிஸ்கஷனுக்கு பின்னால பார்பேக்யூ முடிவாச்சு.

மூணு காரு.. எல்லாரும் துக்கம் விசாரிக்க, ஒரு டூ வீலர் சிக்னல்ல நிக்கும் போது இடிச்சுட்டான், பாவமா இருந்துச்சு மன்னிச்சு உட்டுட்டேன்னு சின்னதா சுத்திட்டு போனேன்.

ஏதோ பார்பேக்யூன்னா கொஞ்சம் ஐட்டங்கள்தான் இருக்கும்னு போனா அதிர்ச்சி.. பஃபே 450 ரூபா.. 12 பேரு.. சர்வீஸ் டேக்ஸ் 12% பில் 6048.. டிப்ஸ் என்ன வைக்கலாம்னு யோசிச்சு (100க்கு கம்மியா வச்சா நம்ம மரியாதை என்னாறது) 6200 ரவுண்டா (தலையும்தான் ரவுண்டா மொட்டை).

3 மணிக்கு ஆஃபீஸ் வந்தாச்சு. கொடுத்த காசுக்கு வஞ்சனியில்லாம தின்னதுக்கு தூக்கம் கண்னைக் கட்டுது.. இதில வேலை எங்க பாக்க.. எழுத்தெல்லாம் ஏரித்தண்ணி காத்திலாடற மாதிரி அலையலையா தெரியுது, அப்படியே அக்கம் பக்கத்தில அரட்டை அடிச்சு டயத்தை ஓட்டியாச்சு.. சரி சரி.. பொறு பொறு எழுமணிக்குத்தானே ஆரம்பம்.. அதையும் இதையும் மேஞ்சுட்டு 6:30 மணிக்கே கடையைச் சாத்தியச்சு!

அவசராவசரமாக் காரைக் கிளப்பி அந்த பப்புக்கு போனேன். 8;00 மணி வரைக்கும்தானே ஹேப்பி ஹவர்.. ஒண்ணு வாங்கினா இன்னொன்னு ஃபிரீ. இதுக்குன்னு கம்பெனி குடுக்கறதுக்குத்தானே நம்ம கேங்கே இருக்கு. எல்லாரும் ஆஜர்.
2000, 5000 என ஆரம்பித்தது. செக்கச் செவேல் என ஆடையுடுத்தி சிக்கன்கள் அணிவகுக்க, கேலியும் கூத்துமாய் கழிந்தது..

ஸார், கிச்சன் இஸ் க்ளோசிங்.. ஃபுட் ஆர்டர்.. சர்வரின் கடைசிக் கெஞ்சலுக்கு நானும், சில ஐட்டங்களும் ஆர்டர் ஆக.. மணி 11:30 எட்டியபோது சிக்கன் எலும்புகள் வெளுத்துக் கிடக்க, காலிக் கோப்பைகளும், அவசரமாய் கொறிக்கப்பட்ட சில பல நான் துண்டுகளும் சிதறிக் கிடக்க.. எவ்வளவோ பில் கொடுத்து புறப்பட்டோம்

வீட்டுக்கு வந்து, கதவைத் திறந்து உடை மாற்றிப் படுக்கையில் விழுந்தேன்.. எவ்வளவு நேரம்னு தெரியாது.. கண்கள் கூச, தலையில் சம்மட்டிக் கொண்டு யாரோ அடிக்க வலியுடன் கண் திறந்தேன்.. டி.வி. ஒரு பக்கம் கத்திக் கொண்டிருந்தது.. எழுந்து பார்த்தால் வாசல் கதவு அடையா நெடுங்கதவு மாதிரி திறந்து கிடந்தது.. காஃபி.. வாய்க்குள்ளே அந்த வார்த்தையை விழுங்கிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தேன்

தொடரும்.

அந்த 7 நாட்கள் - பாகம் 3


பால் இல்லை.. அதானே டோக்கன் வச்சாதானே பால் போடுவான்.. எத்தனை முறை தட்டிப் பாத்தானோ, இல்ல உள்ள வந்து எதையாவது தூக்கிட்டுப் போனானோ தெரியலையே!

தலைவலிக்க வறட்டீ (பிளாக் டீ) யாவது போடலாம்னு அடுப்பில பாத்திரம் வச்சு தண்ணீர் டீத்தூள் சர்க்கரைப் போட்டு வச்சிட்டு பல்லு விளக்க வந்தேன்.

இந்த பல்லு விளக்கறது இருக்கே, சின்ன பிராஸஸ்தான். பிரஸ்ல கொஞ்சமாக்க பேஸ்ட் வச்சு மேலும் கீழும் அசைத்து சர்க்கிள் மோஷன் அப் அண்ட் டௌன் மோஷன், சைட்வைஸ் மோஷன்..

இந்த கண்ணாடி பாத்துகிட்டே வாயைப் பலவிதங்களில் திறந்து பலகோணங்களில் முகத்தை அலசி, நேத்தைக்கும் இன்னிக்கும் மத்தியில முகத்தில் கொஞ்சம் மாறிய சுருக்கங்கள், மூக்குக்கு சைட்ல சூட்டில் எழுந்த சின்ன வெள்ளைக் கொப்புளம், திருத்திய மீசையில் ஒழுங்கில்லாம வளர்ந்த சின்ன முடி (ஷேவ் பண்ணும் போது இதை ஒதுக்கிரணும்) கண்ணில் ஓடிய செவ்வரி ரேகை, புன்னகைக்கிற போது கன்னத்தில் விழற சின்னக்குழி எல்லாம் சரிபார்த்து வாயில் தண்ணீர் விட்டுக் கொப்புளிக்கும் போது சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்ற சத்தம் வந்தது..

ஓடிப் போய் பார்த்தா வறட்டீ பாத்திரம் வறண்டு கருகி...

போச்சுடா, சூட்டோட சூடா சுத்தம் பண்ணாட்டி மானத்தை வாங்கிடுமே..

ஒரு துண்டு புளி போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க விட்டேன்..

வறட்டீக்கும் வக்கில்லை.. சரின்னு தண்ணி சூடானதும்.. பாத்திரத்தை தேய்த்து விம் போட்டுக் கழுவ பளிச்...

நேரம் ஆயிட்டே இருக்கே.. அவசர அவசரமா குளிச்சு ரெடியாக பசிச்சது..

ரெண்டு முட்டையை அவிக்கப் போட்டேன்.. முட்டை அவிப்பதில் ஒரு சின்ன டிப்ஸ் இருக்குங்க.. முட்டை உடையாம இருக்கணும்னா தண்ணி ரேபிட் சூடு ஆகக் கூடாது.. முட்டை ஃப்ரிஜ்ல இருந்ததுன்னா எடுத்து தண்ணில போட்டு வச்சிரணும்.. கொஞ்ச நேரம் கழிச்சு, அடுப்பைப் பத்த வச்சு, முட்டைக்கு மேல ஒரு ஒண்ணரை இஞ்ச் தண்ணி இருக்கற மாதிரி தண்ணி ஊத்தணும்.. அதிகமா போச்சுன்னா முட்டை கொதிக்கற தண்ணில குதிச்சு உடைய சான்ஸ் இருக்கு,, கம்மியா போச்சுன்னா முட்டை அடிப்பாகத்தில் ஓவரா கட்டியாகி,, மேல கொழ கொழன்னு கொல்லும்..

அதே மாதிரிதான்.. முட்டையை அவசரமா உரிக்கணும்னா அவிச்ச முட்டையை ஓடும் பச்சைத்தண்ணியில லைட்டா காட்டுணமின்னா, ஓடு குளிரும்.. அப்ப டக்குன்னு ஒரு ஓரமா தட்டி உரிக்க ஆரம்பிச்சா நல்லா உரிக்கலாம். சூடு ஆறும்னு காத்துகிட்டு இருந்தா காத்து கிட்டேதான் இருக்கணும்..

சில பேர் முட்டைய வெட்டி, உப்பு , மிளகுத்தூள் போட்டு நிதானமா ரசிச்சுச் சாப்பிடுவாங்க சிலபேர் வெள்ளைதனியா பிச்சி எடுத்து சாப்டுட்டு அப்புறம் மஞ்சள் கருவை மட்டுமே தனியா மாவு மாதிரி ரசிச்சு சாப்பிடுவாங்க.. சிலபேர் அப்படியே சகட்டு மேனிக்கு கடிச்சு சாப்பிடுவாங்க..

ஆனா, வெட்டி, உப்பு மிளகு போட்டு அழகுபடுத்தி, ரசிச்சு சாப்பிடனுங்க முட்டைய.. அப்பதானுங்க திருப்தி இருக்கும்..

அப்படித்தான் சாப்பிட்டு விட்டு, ஆஃபீஸூக்கு கிளம்பினேன்..

கதவுக்குப் பின்னால இருந்த ஷீ செல்ஃப்ல இருந்து ஷூ பாலிஷ் எடுக்க (அட ஷூதான் கதவு பக்கத்தில இருக்கே.. ) கதவை மூட

கதவின் பின்னால அது இருந்தது...


தொடரும்.

அந்த 7 நட்கள் - பாகம் 4



கதவுக்குப் பின்னால் தர்மபத்தினி கடமையாய் எழுதி வைத்த போஸ்ட் இட் நோட்டுகள்.

1. கேஸை ஆஃப் செய்யவும்
2. ஹீட்டரை ஆஃப் செய்யவும்
3. பின் கதவு சரியாக சாத்தியிருக்கா கவனிக்கவும்
4. அனைத்து ஃபேன்களையும் ஆஃப் செய்யவும்
5. டெலிஃபோன் பில் கட்டவும்
7. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவும்
8. ஃபிரிட்ஜ் கதவை மூடி வைக்கவும்
9. கதவு பூட்டி இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்ளவும்
10. கரண்ட் பில் கட்டவும்
11. செருப்பை வீட்டுக்கு வெளியே மட்டும் உபயோகிக்கவும்


யோசிச்சி யோசிச்சு எழுதின மாதிரி நான் எதெதை மறப்பனோ அத்தனையும் எழுதி ஒரு இருபது அம்சத் திட்டமே போட்டு வச்சிருந்தாக..

கடமையே கண்ணான நான் அதையெல்லாம்...

கண்டுக்காம ஷூவை மாட்டிக் கொண்டு கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன்..


டீ இல்லாததால் தலை விண் விண் எனத் தெரித்தது.. போகிற வழியில் ஒரு டீக்கடையில் டீ சாப்டு விட்டு ஆஃபீஸூக்குப் போயாச்சு..


வியாழக் கிழமை எப்பவுமே பிஸி நாள்.. காலையில உள்ள போன உடனே மீட்டிங்...


சின்ன சப்தமெல்லாம் தலை வலிக்கறப்ப பெரிய கூச்சலாத் தோணும்.. ஒண்ணுக்கு நாலு மடங்கா.. அதேதான் ஆச்சு,

எப்பதான் மீட்டிங் முடியுமோ திரும்பத் திரும்ப அதே முட்டாள்தனமான சந்தேகங்கள் எங்கிருந்து தான் வருமே.. டேய் முடிங்கடா சீக்கிட்ரம் பசி வயித்தைக் கிள்ளுதுறா....

எப்படியோ தப்பித்து 12:30 க்கு கேண்டீன்ல ஆஜர்.. ஃபுல் மீல் கட்டை முடிச்சு, தண்ணி குடிச்சு. காலாற ஒரு வாக்கிங் போய்ட்டு வந்தா..

வியாழக் கிழமையாச்சே டீம் மீட்டிங். ..அப்புறம் மேனேஜ்மெண்ட் மீட்டிங்
வரிசை கட்டி கான்ஃபெரன்ஸ் ரூம்ல இருந்து கன்ஃபெரன்ஸ் ரூமிற்கு ஓடிகிட்டே இருக்கேன்.

எல்லாம் முடிஞ்சு மெயில்பாக்ஸை ஓபன் பண்ணினா அங்க ஒரு முன்னூறு மெயில் என்னப் பாரு என் அழகைப் பாருன்னு..

எனக்கு ஒரு நல்லப் பழக்கம்.. மெயில் ஓபன் பண்ணினா ஒண்ணு பதில் எழுதிருவேன்.. இல்ல டெலீட் பண்ணிருவேன்.. இல்லைன்னா ஆக்சன் ஐடம் போட்டுடுவேன்.. பின்ன இத்தனை மெயிலை 2:00 மணி நேரத்தில சமாளிக்கிறது சும்மாவா?

இன்னிக்குக் கொஞ்சம் அதிக மெயில்தான்.. படிச்சு முடிக்கவே மணி 8:00 ஆயிடுச்சி.. பசி வயித்தக் கிள்ள..

கார் இன்றும் அதே பார் வாசலில் போய் நின்றது.


தொடரும்.


அந்த ஏழு நாட்கள் - பாகம் 5


பார் முன் கார் நின்றபோது லகலகலகலகலகலக லகலகலகலகலகலக என்று சத்தம் வர.. (அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க) எடுத்தேன்..

பத்தினிதான்

ஏங்க வீட்டுக்கு வந்தாச்சா? எப்படி இருக்கீங்க என்று ஆரம்பிக்க

இல்லம்மா ஆஃபீஸ்ல இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு கான் கால் இருக்கு,, அது முடிய எப்படியும் இண்ணும் ஒண்ணரை மணி நேரம் ஆகும் அப்புறம் எங்கயாவது சாப்டுட்டு தான் வீட்டுக்குப் போகணும்...

இது பொய்யா மெய்யான்னு கேட்கற உங்களுக்கே புரியலை இல்லை. அந்தப் பக்கம் இருக்கிற அம்மணியும் இது பொய்யா மெய்யாங்கற கன்ஃபியூசன்லியே போனைக் கட்பண்ண..

தினம் தினம் இப்படி பாருக்கெல்லாம் போககூடாது.. .எனக்குள்ள இருந்த அவன் எனக்கு அறிவுரை சொல்ல பணிவுடன் கேட்டுக் கொண்டே உள்ளே போனேன்,

வழக்கம் போலத்தான்....

ஆனால் நான் மனசாட்சிக்கு பயந்தவனாச்சே.. இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்கு? 5 நாள்.. 5x120 = 620... ஆக

பாத்தீங்களா பசங்க பக்குன்னு பத்திகிட்டானுக நீங்கதான் முழிக்கிறீக.. அதாங்க ஒரு நாளைக்கு ரெண்டு லார்ஜ்னா, 5 நாளைக்கு ஒரு ஃபுல்..

இந்த கணக்கு கூடத் தெரியாதா?

ஆமாம், ஹீரோ இருந்தா மட்டும் போதுமா, ஹீரோயின், வில்லன், காமெடியன், எல்லாம் வேணுமே! கடைசி நிமிடத்தில அந்த கடைக்குப் போய் சாஃப்ட் டிரிங்க்ஸ், கொறிக்க..

அப்புறம், ஃப்ரோசன் சிக்கன் லாலிபாப்ஸ், ஹைதராபாத் பிரியாணி, அது இதுன்னு அஞ்சு நாளைக்குக் கால்குலேட் பண்ணி எல்லாம் வாங்கியாச்சி..

இனிக் கவலையில்லை.. சாயங்காலம் ஆனா வீட்லயே எல்லாம் பண்ணிக்க்லாம்.. நல்ல பையனா காலா காலத்தில வீடு போய் நிம்மதியா சாப்டுகிட்டே சாப்பிடலாம்...

இன்னிக்குக் கொஞ்சம் தெளிவாவே இருந்தேன்..

தலைவலி இன்னும் லேசா இருந்து பால் கூப்பனை எடுத்து வைக்க நினவு செய்தது..

வீட்டை பூட்டிக் கொண்டு, ஹாலில் உட்கார்ந்து டிவி யை ஆன் செய்தேன்..

எல்லாச் சேனல்களையும் சுத்தி வந்து நல்ல தெலுங்கு பாடல் சேனலா செலக்ட் பண்ணி போட்டேன்,,


--------------------------------------------

எதோ கண்ணுக்கு முன்னால மின்மினிகள் சுத்தி வர்ரா மாதிரி வெளிச்சங்கள் அணைந்து அணைந்து எறிய எதையோ வாங்கச் சொல்லி யாரோ ஒரு பொண்ணு ரெகமெண்ட் பண்ணிகிட்டு இருந்தா...


தொடரும்


அந்த ஏழு நாட்கள் - பாகம் 6


விடியற்காலை 4:00 வாயெல்லாம் வறண்டு ஒரே தாகம்.. தலைவலி.. என்னடா இதுன்னு தண்ணீர் குடிச்சா வயித்தைச் சுருட்டிகிட்டு வருது வாமிட்..

கன்கள் எரிய, தலை குடைய.. எனக்குத் தெரிந்த ஒரே வழி லெமன் டீதான்..

அதாங்க.. நம்ம வறட்டி வச்சிரணும்.. அப்புறம் அது கொதிச்சதும் கொஞ்சம் லெமன் பிழிஞ்சு சாப்பிட்டா இது மாதிரி உபாதைகள் குறையும்.. 4 மணி எப்படி இருக்கும்னு இப்பதான் தெரியுது..


லெமன் டீ குடிச்சப்பறம் கொஞ்சம் ஆசுவாசமானேன்.. டீவி ஓடியது தலைவழியாய் இருக்க அதை அணைத்து விட்டு கும்மிருட்டில் குப்புறப் படுத்துகிட்டு, கண்ணைச் சுற்றி ஒரு துண்டால இறுக்கிக் கட்டிகிட்டேன்..

தூக்கமா அது போய் மாமாங்கமாச்சே..

ஆறரை மணிக்கு மறுபடி எழுந்து முதன் முறையா பால் விட்டு டீ காய்ச்சினேன். டீ காய்ச்சூம் போது ஒரு சின்ன விஷயம் என்னன்னா, சர்க்கரையை முதல்ல போடறதா கடைசில போடறதா? விஷயம் சீரியஸ்..

சர்க்கரையை முதல்ல போடணும்னா பாலை ஊத்தி சர்க்கரையை கரைச்சிட்டு அடுப்பில வைக்கணும் இல்லைன்னா, சர்க்கரை சரியா கரையலைன்னா, கொஞ்சம் அதிகமா போட்டுக் குடிக்கும் பழக்கம் உள்ளவர்னா, புகை வாசம் பிடிச்ச டீ சாப்பிட உங்களைத் தயார் படுத்திக்கணும்.

அதே மாதிரி, பால் பொங்கினவுடன் அணைப்பவர்கள் சிலர் இருப்பாங்க.. ஸ்ட்ராங் டீன்னா பயப்படும் கும்பல் அது.. பால் பொங்கிய பின் அப்படியே மெதுவா சூடு பண்ண பண்ண டீயோட கலர் மாறும் பாருங்க.. உங்களுக்குப் பிடிச்ச கலர் வந்ததும் இறக்கிக்கலாம்..

சர்க்கரை பிடிக்காதவங்க வேணும்னா கடைசியில் சர்க்கரை சேர்க்கலாம். இதில் என்ன சூட்சமமா,, பால்ல சர்க்கரை சேர்த்து காய்ச்சினம்னா, பால் திரியற நிலைமையில் இருந்தா திரிஞ்சிரும்.. அதனால இப்பவோ அப்பவோ இருக்கிற பால், அதுவும் கெஸ்டுக்கு டீ போடறதுன்னா, முதல்ல, சிம் ல ஸ்டவ்வை வச்சு மெதுவா சூடுபண்ணி, பால் நுரை தள்ளரப்ப, டீத்தூள் போட்டு கடைசியா சர்க்கரை போட்டு கலக்கணும்..

ஆச்சு டீயும் ஆச்சு, குளிச்சாச்சு.. இன்னிக்கு காலையில டிஃபன் பொங்கல்..

அப்போ டெலிஃபோன் மணியடிச்சது..

தொடரும்.


அந்த ஏழு நாட்கள் - பாகம் 7



ஃபோன் அம்மணி கிட்ட இருந்துதான்னு தெரியும்.. அதான் செல்ஃபோன்ல காலர் ஐடி குடுத்து வசதி பண்ணி வச்சிருக்கானே!.. இப்படி திடீர்னு எழுந்த உடனே ஃபோன் பண்ணினா மட்டும் தூக்கக் கலக்கத்தில உண்மை பேசுவமா என்ன?

வென்னீரில் இட்டு சூடாக்கிய ரெடி மேட் பொங்கல் சாப்டுட்டு.. கிளம்பிட்டு அம்மிணிக்கு போன் செய்தேன்..

என்னங்க ஃபோன் செஞ்சனே ஏன் எடுக்கலைன்னு கேட்க..


குளிச்சிகிட்டு இருந்தேன்மா.. அவசரமா ஆஃபீஸ் போகணும்,.. என்ன விஷயம் சொல்லு..

இல்லீங்க.. சும்மாதான்.. வேளா வேளைக்கு சாப்பிடறீங்களா? முடிஞ்ச வரைக்கும் வெளியிலயே சாப்பிடுங்க.. கிச்சனை முடிஞ்ச வரை சுத்தமா வச்சுக்குங்க..

டெலிஃபோன் பில் வந்ததா? கட்டிட்டீங்களா, எலக்ட்ரிசிடி பில்.. அப்புறம் பின் கதவை ஞாபகமே மூடியே வைங்க.. நான் வந்து கிளீன் பண்ணிக்கறேன்..

ம்ம்ம் வீட்டை அப்பப்போ சும்மா கூட்டி வச்சிருங்க போதும்.. தொடைக்க எல்லாம் வேண்டாம்.. நான் வந்து கழுவிக்கிறேன்..


ப்ளா ப்ளா ப்ளா ப்ளா ப்ளா சொல்லிக் கொண்டே போக என் கார் சர்வீஸ் செண்டர் முன் நின்றது..

சரிம்மா ஆஃபீஸ் வந்துடுச்சி அப்புறமா பேசறேன் அவசர வேலை இருக்கு..


காரை சர்வீஸுக்கு விட்டேன்.. பெண்டு எடுத்திரலாம் சார்.. கொஞ்சம் ஹீட் டிரீட்மெண்ட் குடுத்தா வந்திரும்.. ஆன பெயிண்ட் ஸ்க்ரேட்சஸ் இருக்கும்..

சரி பரவாயில்லை.. இன்னும் நாலைஞ்சு இடத்திலே ஸ்க்ரேட்ச் பண்ணினா இது புது டிசைன்னு ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க வந்திருவாங்க.. அந்த அளவுக்கு சுத்தியும் ஸ்கிரேட்ச்..

ஆட்டோ பிடித்து ஆஃபீஸ் போனேன்.. அதிக வேலை ஒண்ணும் இல்லை.. இருந்தாலும் டைம் வேகமா போச்சி.. மதியச் சாப்பாட்டுக்கு வெளியப் போகலாமா.. ஒரு பலிகடா கேட்க.. ஸ்யூர்.. போலாமே...

12:00 க்கு கிளம்ப ஆரம்பிச்ச போது மறுபடியும் ஃபோன்.. சாப்பாடு நேரம் வந்தாலே இந்த மனைவிகளுக்கு கணவன் ஞாபகம் வந்திரும் போல..

என்னம்மா? எதாவது முக்கிய விஷயமா? அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்.. சொல்லு..

மறுபடியும் வேளா வேளைக்கு சாப்பிடுங்க புலம்பலும்.. உடம்பைப் பாத்துக்கங்க புலம்பலும் தான்..

மத்தியானம் சாப்டுகிட்டு இருந்தப்பவே சாயங்காலம் பார்ட்டியும் புக் ஆயிடுச்சி..

ஹி ஹி.. ஆஃபிஸ்ல இரு சின்ன கேங்.. TGIF - இல்லை தேங் காட் இட்ஸ் ஃபிரைடே இல்லை.. தண்ணி கேங் இன் Fxxxxxxxxxxx...

5 பேர்.. நாலு பேச்சுலர்.. நான் மட்டும் தான் கல்யாணம் ஆனது.. அவங்களுக்கு எல்லாம் என் மேல் பொறாமை. .கல்யாணம் ஆன பின்னாலும் இவர் மாதிரி வாழணும் னு ஒரு கொள்கைன்னா பாத்துக்கங்களேன்.. உட்கார்ந்து பேசினா நாலஞ்சு மணி நேரம் கதை ஓடும்.

இன்னிக்கு மறுபடியும் நம்ம ரெகுலர் மீட்டிங் பிளேஸ்தான்.. 5 மணிக்கே அம்மணியைக் கூப்பிட்டு அன்பொழுக பேசினேன்.. (ஆமாம் அங்க உட்கர்ந்திருக்கும் போது ஃபோன் பண்ணுவாங்களே.. எதுக்கு வம்பு..) ராத்திரி செகண்ட் ஷோ போறதா சொல்லி ஃபோன் வராம இருக்க கன்ஃபார்ம் பண்ணிகிட்டேன்..

ராத்திர் பார்ட்டியும் ஜாலியாதான் முடிஞ்சது.. அது ரவுண்ட் ராபின் அதனால பணம் குடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதெதோ பேசிட்டு.. அனைவரும் கிளம்ப ..

என்னை ஒருவன் வீட்டில் டிராப் செய்தான்... மணி 12:00.. தூங்கலாம் என பெட்டில் விழுந்த போது ஃபோன்..

இல்லிங்க அம்மிணி இல்லை.. TGIF மெம்பர்தான்.


சார், நம்ம நெம்பர் திரீயை போலீஸ் பிடிச்சுட்டாங்க.. ஃபைன் கட்ட காசு இல்லை என்ன பண்ண..?

தொடரும்


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 8


பாவம் நெம்பர் திரீ கையில காசு இல்லை. நாங்க எல்லோருமே குடிச்சிருக்கோம். யாரு போனலும் மாட்டுவோம்..

இதுக்குத்தானே அப்பிராணியா நாலு ஃபிரண்ட்ஸ் பிடிச்சு வச்சிக்கோம்.. செல்ஃபோன் பிஸியாச்சு.. ஒருத்தனை தூக்கத்திலிருந்து எழுப்பி வரச்சொல்லி பணம் கொடுத்து அனுப்பினேன்.

நெம்பர் 3 ஐ எப்படி பிடிச்சாங்க தெரியுமா? அவன் டூ வீலர்ல தான் போய்கிட்டு இருந்தான். அந்தப் பக்கம் மோப்ப நாய் வச்சுகிட்டு போலீஸ் செக் பண்ணிகிட்டு இருந்திருக்காங்க..

சரக்கு வாசனையை மோப்பம் பிடிச்ச நாய் துரத்த போலீஸ் நிறுத்திப் பிடிச்சிட்டாங்க.

1600 ரூபாய் அபராதம் கட்டி நெம்பர் 3 வீட்டுக்குப் போய்ச் சேர விடிகாலை 3 மணி..

நமக்குதான் விடிஞ்சுட்டா தூக்கம் வராதே!.. எழுந்து போய் ஒரு டீ போட்டுக் கொண்டு வந்து டி.வி. முன்னால உட்கார்ந்துகிட்டு யார் யார் என்ன என்ன ப்ரோக்ராம் போட்றாங்கன்னு பார்த்தா,

முக்கால் வாசிச் சேனல்ல பாட்டு டிவிடி போட்டு விட்டுட்டு நிலையத்துக்காரங்க தூங்கப் போயிட்டாங்க.. என் சின்ன வயசில நான் கேட்ட பாட்டெல்லாம் கூட வந்திச்சு..

எப்படியும் 9 மணிக்கு மேலதான் காரை டெலிவரி எடுக்க முடியும், இப்போதைக்கு அதுவரை என்ன செய்யறது..

ஆஹா, இன்னிக்காவது சூடா எதாவது டிஃபன் செய்யலாமா?

பாட்டைச் சத்தமா வச்சுட்டு கிச்சனுக்குப் போனேன்..

அழகழகா டப்பாக்கள்.. எது எதில் என்ன இருக்குன்னு எழுதி இருக்கு..

ம்ம் உப்புமா செய்ய என்ன வேணும்...

கடுகு-உளுத்தம்-பருப்பு (கடுகு+உளுத்தம்பருப்பு+கடலைப் பருப்பு)
எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய்...

அட வரமிளகாய் போடலாமா இல்லை பச்சை மிளகாய் போடலாமா?

சூடா சாப்பிடப் போறோம் இல்லியா? அதனால பச்சை மிளகாயே போடுவோம்.

ரவை முக்கால் கப் போதும், தண்ணி ஒண்ணரையிலிருந்து இரண்டு மடங்கு வரை.. உப்பு அது எப்பவும் கை பக்குவம் தானே!! கண்ணு பார்க்கும், கை அளக்கும்..

ரொம்பக் கொஞ்சமா ரவை சேய்யும் போது 2 மடங்கு தண்ணி விடணும், ஏன்னா கொதிக்கறப்ப தண்ணி ஆவியாகிடும்..

கறிவேப்பிலை இருக்கே அதை இரண்டு விதமாய் உபயோகிக்கலாம். ஒண்ணு தாளிக்கும் போதே எண்ணெயில் போட்டுரலாம், இல்லைன்னா கடைசியில் இறக்கறதுக்கு கொஞ்சம் முன்னால கொத்தமல்லியோடு போடலாம். வாசம் வேணும்னா இரண்டாவதுதான் பெஸ்ட். கறிவேப்பிலையை சுவைத்து சாப்பிடறவங்கன்னா தாளிக்கும் போதே போட்டுருங்க..

அப்புறம் முதலில் ரவையை கொஞ்சமா வறுத்து தனியா எடுத்து வச்சுடணும். இப்படி செஞ்சம்னா கடையில உப்புமா உதிரியா வரும்,. இல்லைன்ணா ரவாகஞ்சி பதமா இருக்கும். எது பிடிக்குமோ அப்படிச் செஞ்சுக்கலாம்.

தாளிக்கும் போது எண்ணெய் காய்ந்து தெளியறப்ப கடுகு-உளுத்தம்பருப்பு போடணும். கடுகும் வெடிக்கணும், பருப்பும் தீயக் கூடாது.. அதனால நல்லா எண்ணைக் காய்ந்த பின்னால அடுப்பை சன்னமா எரிய வச்சிட்டுப் போடணும்.

அப்புறம் கறிவேப்பிலை அது முருகலாகும் போது பச்சை மிளகாய் அப்புறம் வெங்காயம்...
வெங்காயம் ஒரளவு வெந்தால் போதும். பொன்னிறமா வதக்க வேண்டியதில்லை..

அப்புறம் தண்ணி ஊத்தி கொதிக்க வைக்கணும்..

கொதிச்ச பின்னால கொஞ்சம் கொஞ்சமா ரவையை ஒரு பேப்பரில் இருந்து மெதுவா தண்ணீரில் ஒரு சின்ன அருவி மாதிரி விழவச்சு கலக்கணும்.

கிண்டுவதை மட்டும் நிறுத்தவே கூடாது.. ஏன்னா ரவை கட்டிகள் திடீர்னு உருவாயிடும்..

கெட்டியாக கெட்டியாக கிண்டுவது கஷ்டமாகும். அப்போ கொஞ்சம் எண்ணெய் சேர்த்துகிட்டா அடியில் ரவை ஒட்டிக் கருப்பாகாது..

உப்பு தண்ணி ஊத்தின உடனே போட்டுக் கலக்கிட்டா சமமா இருக்கும். மறந்து போய் கடைசில போட்டா சரியா மிக்ஸ் ஆகாது..

ஆகா மணக்கும் உப்புமா சூடா ரெடி..

சாப்பிட்ட பின்னாலதான் ஞாபகம் வந்தது..

தொடரும்.


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 9




பாரதி சொன்னது சரிதான், நாம குளிக்கறதுக்கு முன்னாலதானே பல்லு விளக்குவோம். என்ன! அம்மிணி இருந்தா குளிக்காம டிஃபன் கிடைக்காது.

இராத்திரி முழுக்க தூங்காம இருக்கறது இது என்ன முதல் தடவையா? இதெல்லாம் சகஜமப்பா..

சன்மியூஸிக் இன்னும் அலறிக் கிட்டே இருக்க, குளிச்சு முடிச்சி தயாராகி கிளம்பிப் போய் காரை எடுத்த்தாச்சு.

இந்த வீக் எண்ட் வந்துட்டால் ஒரு சின்னக் கடி என்னன்னா, காலையில நேரத்தில எல்லாருமே தூங்கிக்கிட்டு இருப்பாங்க. எழுப்பி வெளிய கொண்டு வர்ரது கஷ்டமான கஷ்டம். ஆனா சாயந்திரம் நாலு மணியிலிருந்து பாருங்க, மால்ல, தியேட்டர்ல பப்புல எங்கப் போனாலும் கூட்டம் தான். என்ன செய்யலாம்?வீட்டுக்குப் போய் டிவி போட்டா மதியச் சாப்பாட்டுக்கு வெளிய வரணும், மறுபடி வீட்டுக்குப் போகணும்.. அப்புறம் 4 மணிக்கு மறுபடி வரணும்..

மூளையைச் சுரண்டிப் பார்த்துட்டு, உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுக்கு வந்தேன்..

அடடா, கண்டுபிடிச்சிட்டீங்க பாத்தீங்களா, துணியை வாஷ் பண்ணனும்னு.. அதுதான் தப்பு. மெஷின் பாட்டுக்கு ஓடிகிட்டு இருக்கப் போகுது.. அப்புறம் வந்து எடுத்து காயப்போட்டா தீர்ந்தது.. இதுக்குப் போயா மனுஷன் டைம் ஸ்பெண்ட் பண்றது?

மன்றத்திற்கு போயி நாலு திரி எழுதலாமே!(இது உருப்படியான வேலைதானே??)

வந்து உட்கார்ந்து கிடைச்ச திரியிலெல்லாம் பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன். ஒரு 30 பதிவுகள் ஓடி இருக்கும். பசிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.

சரி இப்ப பிளான் என்னன்னா, நந்தினில சாப்டுட்டு, அப்படியே ஃபாரம் மால் போய் கிடைச்ச ஒரு படம் பார்த்துட்டு, அப்படியே விண்டோஷாப்பிங் பண்ணிட்டு, எரியற கண்ணை குளிர வச்சுட்டு வீட்டுக்கு திரூம்பிவரணும்..

நம்ம புத்திசாலி மூளை யோசிச்சது.. துணியெல்லாம் தூக்கி வாஷிங் மெஷின்ல போட்டு, சோப்புத்தூள் போட்டு, காட்டன் செட்டிங், வார்ம் வாட்டர், பிரீ வாஷ், வாஷ், ரின்ஸ், ட்ரை ஸ்பீட் எல்லாம் செட் பண்ணி, டிலே ஸ்டார்ட்போட்டேன். 6 மணிக்கு துவைக்க ஆரம்பிச்சா, 8
மணிக்கு நான் வர்ரப்ப காயப்போட ரெடியா இருக்கும்.. துணி ரொம்ப நேரம் ஈரமா இருந்தா கப்பு அடிக்குமில்லையா, அதான்.

வீட்டைப் பூட்டிகிட்டு கிளம்பினேன்.

நம்ம லக்கு பாருங்க அன்னிக்கு தான் சந்திரமுகி ரிலீஸ்.. டிக்கெட்டும் கிடைச்சிருச்சி..

உள்ளே போய் உட்கார்ந்த்து பாடம் போட்ட கொஞ்ச நேரத்தில் ஃபோன் அலறியது..

அவங்களேதான்.. ம்ம் இப்ப என்ன செய்தேன் தெரியுமா?

தொடரும்.


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 10




ரஜினி படம் அதுவும் சொல்லாம போனா, முதல் நாளே!

மைக்கை கையால் நல்லா மூடிகிட்டு ஆன்ஸர் பட்டனை அமுக்கினேன், இங்க தியேட்டர் சத்தம் கேட்க சான்ஸே இல்லை. என்ன சொன்ணாங்களோ யாருக்குத் தெரியும்? மியூட் பட்டனை தட்டி மியூட் ஆக்கிட்டு காதில வச்சா ஹலோ ஹலோன்னு கூப்பிட்டுப் பார்த்தாங்க.. கட்பண்ணின சமயம் பார்த்து செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு, ஜாலியா சாஞ்சு உக்காந்தேன்

லகலகல்கன்னு படம் முடிஞ்சதும், ஃபாரம் மால்ல இருக்கிற எல்லா கடைகளுகும் ஒவ்வொன்னா பாத்தேன்.. எத்தனை ரகமான மனிதர்கள்? யாராச்சும் ஒருத்தர் இங்க தனியா வந்திருக்காங்களான்னு பார்த்தேன். யாரோ ஒரு பெண் மாத்திரம் யாருக்காகவோ காத்துகிட்டிருந்தா,

மத்தபடி மதியின் வீதி உலாவில சொல்லி இருக்கிற மாதிரி, பெண்கள் கும்பல், ஆண்கள் கும்பல், இல்லைன்னா ஜோடியா, குடும்பமா இப்படி காய்ரே மூய்ரேன்னு ஒரே பேச்சு தான்.

ஃபாரம் மால் மதிரி இடங்களில் மனசை விட்டு ரசிச்சம்னா பொழுது போவதே தெரியாது (இல்லையா பென்ஸூ)..

வித விதமான மனிதர்கள், வித விதமான மேனரிஷங்கள். புதுசா கேர்ள் ஃப்ரண்ட்ஸை கூட்டிட்டு வந்து வழிகிற இளைஞர்கள்.. குடும்பத்தோட வந்தாலும் அலைபாயுற கண்கள்...

பாப்கார்னும் ஐஸ்கிரீமும் கேட்டு னச்சரிக்கிற ஒற்றைக் குழந்தைகள், துரத்தி துரத்தி விளையாடற தோழமைக் குழந்தைகள்..

பரப்ரப்புன்னா இந்த மாதிரி இடங்கள்தான்.. சுத்தி என்ன நடக்குதுன்னே கவனிக்காமல் தங்கள் நிலையைக் கூட கத்திச் சிரித்து பர்சனல் மேட்டர் பேசுபவர்கள்..

கோபித்துக் கொண்ட பாய்ஃபிரண்டுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் கேர்ள்ஃபிரண்ட்.. எஸ்கலேட்டரில் கால் வைக்கப் பயந்து, அங்கயே தயங்கி நிற்கும் வயதானவர்கள்

சொல்லப் போனா இங்க வர்ரவங்க எல்லாத்துகிட்டயும் கவனிக்க ரசிக்க எதாவது இருக்கு..

மணி ஏழரை ஆனதும், பிட்சா ஹட் போய் ஒரு மீடியம் ஆல் மீட் பிட்ஸா சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன்..

இன்றைய கோட்டா முடிஞ்ச பின்னாலதான் ஞாபகம் வந்தது..

ஆஹா செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்தமே! இப்ப என்ன சமாதானம் சொல்றது??

தொடரும்
.

அந்த ஏழு நாட்கள்! - பாகம் 11




கதவைத் திறந்து பெட்ரூம் உள்ளேப் போனா பயங்கர அதிர்ச்சி.. பெட்ரூமில தண்ணீர் வெள்ளம்..

வெள்ளமா எப்படின்னு யோசிக்கறீங்களா? அதான் வாஷிங் மெஷின் செட் பண்ணினனே!! எங்க வீட்ல வாசிங் மெசின் அப்ப பெட்ரூமில தான் அட்டாச்ட் பாத்ரூம் பக்கத்தில இருக்கும். வாஷிங் மெஷினைப் போடும் போது மட்டும் எக்ஸாஸ்ட் குழாயை பாத்ரூமிற்குள் விட்டு விடுவோம். இதனால ஈரப்பசையில் வாஷிங் மெஷின் கெட்டுப் போகாதுன்னு

அந்த எக்ஸாஸ்ட் பைப்பைத் தான் அப்படியே விட்டு இருந்து இருக்கேன்.
அதான் அந்த அழுக்குத் தண்ணியெல்லாம் பெட்ரூம் நிறைய

ஆமாம் தரை துடைக்கும் மாப் எங்க.. தேட்றேன் தேட்றேன் வீடு பூரா தேட்றேன்.. காணோம்..

ஆஹா.. க்ளூ கிடைச்சிருச்சு.. எங்க போகக் கூடாதுன்னு சொன்னாங்களோ அங்கதான் வச்சிருப்பாங்க..

பின் கதவை தொறந்து பார்த்தா
அங்க சன்சேடுக்கு மேல மாப்..

எடுத்து பெரூம் தண்ணியை எல்லாம் வழிச்சு வழிச்சு பாத்ரூம்ல கொட்டிட்டு துணியெல்லாம் கொண்டு போய்.. காயப் போட்டுட்டு.. வந்தேன்..

சரக்கு உள்ள எறங்கின பின்னாடி தான் அவங்களுக்கு ஃபோன் பண்ணினேன், லேண்ட் லைன்ல இருந்து
ஹலோ,

என்னாச்சுங்க மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு என்ன செய்யறீங்க?

அது வந்து மொபைல் ரிப்பேர், மைக் ரிப்பேர் ஆயிடுச்ச்சாம்.. மத்தியானம் இருந்தே நான் பேசினா யாருக்கும் கேட்கலை.. அதான் ரிப்பேர் பண்ண சர்வீஸ் செண்டர்ல குடுத்திருக்கேன்.. ( ஆஹா ஆகற வெட்டிச் செலவுக்கு இப்படி எல்லாம் கணக்கு காட்டுவாங்களான்னு யோசிக்காதீங்க..)

சாப்டீங்களா? என்ன சாப்டீங்க? உடம்பு சரியா இருக்கா? வீடு சுத்தமா தானே இருக்கு...? (நாக்கில சனிம்பாங்க.. இதுதாங்க.. பின்னாடி புரியும்)

எல்லாத்துக்கும் எதையெதையோ சொல்லிட்டு ஃபோனைக் கட் பண்ணிட்டு (ஆஹா நாளைக்கு ஃபோன் வராதே ஜாலியா பப்புக்குப் போலாமே!!!)

டிவி ஆன் பண்ணி எதோ கவிச்சுப் படம் ஓடவிட்டுட்டு அப்படியே டீவி பக்கத்தில படுத்தேன்..


எத்தனை மணின்னு தெரியாது..

கன்னா பின்னான்னு கனவ் வந்தது..

5:00 மணிக்கு முழிச்சேன். பெட்ல படுத்திருந்தேன்..தாகமா இருந்திச்சி
எழுந்து கிச்சனுக்கு போனேன்.. ஏதோ கெட்ட வாசனை... தாங்க முடியாத கெட்ட வாசனை


கிச்சனுக்கு போக கிச்சன்ல இருந்து ஒரு ....
நாய் வெளியே ஓட

நட்ட நடுக் கிச்சன்ல ...


தொடரும்


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 12




கிச்சனுக்குப் போக கிச்சன்ல இருந்து ஒரு ....நாய் வெளியே ஓட

நட்ட நடுக் கிச்சன்ல ...

ஆமாம் கிச்சனுக்கு எப்படி நாய் வந்தது ? அடச் சீ நேத்து பின்கதவை திறந்தவன் மூடவே இல்லியே.. அது வழியாத்தான் வந்து கிச்சனை இது எங்க ஏரியான்னு மார்க் பண்ணி இருந்தது..

நேற்றையச் சின்ன வேலை இன்றையப் பெரிய வேலையாயிடுச்சி.. டெட்டால், கிளீனிங் லிக்விட் எல்லாம் போட்டு, வீடு முழுசும் பளபளன்னு ஆகிற மாதிரி தேச்சுத் தேச்சு கிளீன் பண்ண முதுகு கைகால் எல்லாம் ஒரே வலி.. (கிச்சன் பளபளக்கும் ரகசியம் புரிஞ்சதா அம்மிணி,, சோழியன் குடுமி சும்மா ஆடாது.. நீங்களும் கொஞ்சம் தோண்டித் துருவிப் பார்த்தால் இப்படி எதாவதுச் சிக்கலாம்.. )


வேலை முடிஞ்சு, பின் பக்கமெல்லாம் பக்காவா சாத்திட்டு, குளிச்சு முடிச்சி பார்த்தா மணி பன்னிரண்டு. சரி, வேற வழியில்லை. பிரஞ்ச் (பிரேக்ஃபாஸ்ட் + லஞ்ச்) தான்னு முடிவாயிடுச்சி.. எவ்வளவு வேலை பண்ணியிருக்கோம்..

ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் போய், பிரியாணியும் கபாபும் ஒரு கட்டு கட்டியாச்சி..

மறுபடியும் ஃபாரம் மால்.. இம்முறை மும்பை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்த நாட்களில் இப்படி ரஜினி / கமல் படம் பார்க்க கொடுத்து வச்சிருக்கணும்..

சும்மா சொல்லக் கூடாது, லீவு நாட்கள்னா சும்மா கடகடன்னு ஓடிருதில்ல... ஒண்ணுமே உருப்படியா செய்யாம மணி 6 ஆயிடுச்சி.. இதுக்குதான் லீவுன்னு வந்தா சட்டுன்னு காரை எடுத்துகிட்டு ஒரு ரிசார்ட் அது இதுன்னு சட்டுன்னு கிளம்பிரணும்.. ரிலாக்ஸ் பண்ணலாம். சும்மா இப்படி டைம் வேஸ்ட் பண்ணறதுக்கு..

இருந்தாலும் எனக்குப் பிடிச்ச டைம்பாஸ் கிடைக்கிற இடம் இந்த மாதிரி மால்கள் தானே! இங்கதான் யார் யாரைப் பார்க்கறாங்கன்னு யாருமே கவலைப்படாமே இருக்கிறாங்க. பலவித உணர்வுக் கலவைகள் நிறைந்த இடம். வெளியூரிலிருந்து ஃபாரம் மால் வந்த கும்பல் ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு சுத்திகிட்டு இருந்தது.. அந்த பெண் எல்லாப் பொருளையும் எடுத்து விலையைப் பாத்துட்டுச் சட்டுன்னு வச்சிட்டு கொஞ்சம் தள்ளி நின்னு ஏக்கமா பார்க்க, கூட வந்த ஆணோ வேற இடங்களில் ஏக்கமா தன் பார்வையை சுற்ற விட்டுக்கொண்டிருக்க..

சும்மா லேண்ட்மார்க்கில நுழைந்து புத்தக பக்கங்களில் பொய் என்ன என்ன வகை புத்தகங்கள்னு நல்லா மேஞ்சு பார்த்துட்டு வந்தேன்..

இன்னும் இரண்டு நாள்தான் இருக்குன்னு சட்டுன்னு மனசுக்குள் ஒரு நினைப்பு வர..

சரி பார்த்ததுப் போதும்னு வெளிய வந்து வீட்டுக்குப் போனேன்..

ம்ம் இனியும் அதிகம் மிச்சம் மீதி வைக்க முடியுமா என்ன..

அன்று ராத்திரி கொஞ்சம் அளவு மிஞ்சிதான் விட்டது..

விடிகாலை 3 மணிக்கு சட்டுன்னு விழிப்பு வந்தது..




தொடரும்
.


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 13


3 மணிக்கு எழுந்து தலைவலிக்கவே, கொஞ்சம் வறட்டீ போட்டுக் குடிச்சிகிட்டே சேனல்களை மாற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்..

கூசும் வெளிச்சத்தில் தலை விண் விண்னுன்னு தெரிக்க டிவி யை ஆஃப் பண்ணிட்டு இருட்டில் ஒரு டவலை எடுத்துத் தலையில் இறுகக் கட்டிகிட்டுக் கண்ணை மூட, அது கொஞ்ச நேரம்தான் தாக்கு பிடிச்சது..

தலை வலி மாத்திரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துப் போட்டுகிட்டேன்.. இது ஒரு மாதிரித் தலைவலி..

ஒரு கண்ணில இருந்து மட்டும் தண்ணி வரும். அந்தப் பக்க மூக்கு மட்டும் எரியும்.. அந்தப் பக்கத்துத் தலை மட்டும் வலிக்கும்.

டீ ஹைட்ரேஷன், தண்ணி சரியா குடிக்காதது (தண்ணி அடிச்சா அது இதுக்கு எதிரி ) கண்களுக்கு ஓவர் ஸ்டிரெஸ் இதெல்லாம் இதற்குக் காரணங்கள்.. எளிய மருந்து காஃபின், நிறையத் தண்ணீர், அப்புறம் ஒரு தலைவலி மாத்திரை (அனுபவம்தான்னு சொல்றீங்களா?)

எரியும் அந்த மூக்கின் மேல் ஆள்காட்டி விரல் வச்சு பிரஸர் கொடுத்த மாதிரி கொஞ்ச நேரம் படுத்திருந்தேன். கண்வலி அதிகமாக, கண்ணோரம் மெல்ல கட்டைவிரலால் மஸாஜ் செஞ்சேன்.. வலி தலைக்கேற, பொட்டோரம் என் மஸாஜை மாற்றினேன்..

கொஞ்சம் ரிலீஃப் ஆன மாதிரி இருந்தாலும் அதிகம் தண்ணீர் குடித்ததால் குமட்டிகிட்டு வந்தது.. பாத்ரூம் போய் வாந்தியெடுத்தேன்..

கண்கள் தெரித்து விழுவது போல வழி..

லெமன் எடுத்து மறுபடி இன்னொரு வறட்டீ போட்டு பிழிந்து குடித்துவிட்டு,

பாத்ரூமை நன்கு கழுவி விட்டேன்,,

தலை இன்னும் சுத்தற மாதிரியே இருந்தது. குளித்து முடித்து பின் மேகி நூடுல்ஸ் செய்து சாப்பிட,

இரண்டு நிமிஷம் கூட இருக்காது.. மறுபடி வாந்தி..

முடி.......ல

ஆஃபீஸ் போகணுமே! ஆனால் தலையைச் சுத்துது..

மேனேஜருக்கு ஃபோன் போட்டு வரலைன்னு சொன்னேன்..

வரலைன்னு சொல்லியாச்சி.. இவ்வளவு குமட்டிகிட்டு வரும் பொழுது வெளியப் போயா சாப்பிட முடியும்? என்ன செய்யறது?

கைகண்ட மருந்து மிளகு ரசம் தானே!..

சரி சாதம் மிளகு ரசம் வச்சிருவோம்.. தேவைன்னா இரண்டு ஆம்லெட் போடுக்கலாம்..

சாதத்திற்கு அரிசி ஊற வச்சிட்டு, ரசத்திற்கு சாமான்கள் தயார் செஞ்சேன்.

ரசப்பொடியெல்லாம் தேவையில்லீங்க.. நான் சொல்ற மாதிரி செஞ்சிப் பாருங்க ரசம் வாசனை மூக்கைத் துளைக்கும்.

1 அளவு மிளகுக்கு 4 அளவு ஜீரகம், 8 அளவு கொத்தமல்லி.. இது எல்லாம் சேர்த்தா என்ன அளவு வருமோ அவ்வளவு வெள்ளைப் பூண்டு..

புளியைக் கரைச்சு வச்சுக்கணும்..

இரசத்தை தாளிச்சும் செய்யலாம், தாளிக்காமலும் செய்யலாம். எனக்குத் தாளிப்பது பிடிக்கும். தாளிக்கணும்னா கடுகு-உளுத்தம்-பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் அப்புறம் கொஞ்சமா பெருங்காயம் வேணும்..

அப்புறம் கொத்தமல்லித் தழை வேணும்..

மசாலவை மிக்சியில் போட்டு அரைத்து, புளிக்கரசலுடன் அடுப்பின் மேல் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடு செய்யணும்..

கொஞ்சமா நுரைகட்டு பொங்கும் போது அடுப்பைச் சிம்மில வச்சிட்டு, தாளிச்சி, கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து, கடைசியா பெருங்காயம் சேர்த்து, இந்தக் கரைசலில் கலக்கணும். கடைசியா கொத்தமல்லித் தழை போட்டு இறக்கலாம்.

இந்த ரசமிருக்கே எப்பேர்பட்ட காய்ச்சலாயிருந்தாலும், வாய்க்கசப்பிருந்தாலும், சாப்பிட வச்சிரும். அதைத்தான் செஞ்சேன்..

தண்ணீர் குடிச்சா கூட வாந்தி வர்ரதிலிருந்து இந்த ரசம் குணமாக்கிச்சோ இல்லை மாத்திரை குணமாக்கிச்சோ இல்லை லெமன் வறட்டீ குணமாக்கிச்சோ..

ஒரு வழியா சாயங்காலம் ஆகும் பொழுது, தலைவலி வாந்தி எல்லாம் போயாச்சு..

நல்ல பையனா இதையே இரண்டு ஆம்லெட்டோட சேர்த்து சாப்பிட்டு ராத்திரியை கழிச்சாச்சு..

அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை..

எல்லோரும் திரும்பி வரும் நாள்...


தொடரும்


அந்த ஏழு நாட்கள்! - பாகம் 14 



நாளை மதியம் எல்லோரும் வந்து விடுவார்களே! ம்ம் உடனே தேவை என்ன?

கிளீன் அப்.. குப்பை போல் கிடந்ததெல்லாம் சடாரென சரியாகின.. துணியெல்லாம் மூன்று இடங்களில்.. 1. பேஸ்கட், 2 கப்போர்ட் 3. அயர்ன் செய்ய லாண்டரிக்கு..

முதல் கடமை பாத்ரூமைக் கழுவுவது.. கால் பாட்டில் டெட்டால் காலி.. அடுத்தது கிச்சன்.. அடுப்பிலிருந்து இடுக்கு வரை சுத்தமோ சுத்தம்..

பெட்ரூமில் பெட்டைத் தவிர மத்ததெல்லாம் சரியாக்கி வச்சுட்டேன்..

பார்த்தா வீட்டை யாருமே உபயோகிக்காத மாதிரி அப்படி ஒரு சுத்தம்..

ஃபிரிட்ஜ் ல இருந்த எனக்கு மட்டுமே தேவைப்பட்ட ஐட்டங்களை மூட்டை கட்டி குப்பையில் போட்டேன்..

ஃபிரிட்ஜ் ஏறக்குறைய காலி ஆயிடுச்சி..

இரவோடு இரவாக வீடே பளிச் பளிச்..

அடுத்த நாள் காலை - எழுந்து குளித்து அருகில் இருந்த அம்ருத் பவனில் இட்லியும் பொங்கலும் சாப்பிட்டு காஃபி குடித்து நாளைத் தொடங்கினேன்..

2 மணிக்கு ட்ரெய்ன்..

மதியச் சாப்பாடு முடிந்ததும், ஸ்டேசன் போனேன்.. வழக்கம் போல ட்ரெய்ன் அரை மணி நேரம் லேட்..

மனைவியும் குழந்தைகளும் எக்கச்சக்கமாய் கேள்விகள் கேட்க, ம் .. ஆமாம்.. வந்து பாருங்க.. இப்படி அரைகுறையாய் பேசிகிட்டே வீட்டுக்கு வந்தோம்..

வீட்டுக்கு வருவீங்களா இல்லை ஃபிரண்ட்ஸோடவே தங்கிடுவீங்களா? வீட்டைத் திறந்த போது வந்த கேள்வி கிச்சனுக்குப் போனதும் வாவ் என முடிந்தது..

நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.. வெளியேயும் தான்.


முற்றும்.