Monday, January 18, 2016

ஜல்லிக்கட்டு - காளை வளர்ப்பின் விஞ்ஞான நோக்கு - பகுதி 1



தமிழரும் காளைகளும்



காளைகள் வளர்ப்புப் பிராணிகள் என்பர் பலர். ஆனால் காளைகள் தமிழனைப் பொருத்தவரை வளர்ப்புப் பிராணிகள் அல்ல. காளைகள் தமிழரின் குடும்ப உறுப்பினர்கள்.

காளைகளை அடிமையாக்கி விவசாயம் செய்யவில்லை தமிழன். காளைகள் விவசாயத்தில் பங்குதாரர்களாக உள்ளன. இருவரும் சேர்ந்து உழைத்து இருவர் வயிற்றையும் நிரப்பிக் கொள்கின்றனர்.

மனிதனுக்கு தானியங்கள், காளைகளுக்கு பசுந்தழைகள். மனிதனுக்கு எண்ணை. காளைகளுக்குப் புண்ணாக்கு. காளை உழைப்பை கொடுக்க மனிதன் அறிவை பங்களித்து விவசாயம் செய்கிறான்.
சிந்து சமவெளியில் கிடைத்த காங்கேயம் காளை உருவம்.
5000 ஆண்டுகளுக்கு முன்பான சிந்து சமவெளி நாகரீகத்தைச் சார்ந்த காங்கேயம் காளைகள் இன்னும் உயிர்ப்போடு இருப்பது தமிழனின் நாகரீகத்தால் மட்டுமே.




தமிழன் காளைகளுக்கு உணவை மட்டும் கொடுப்பதில்லை. காளை சமுதாயத்தை கட்டிக் காக்கிறான். அதற்கு முழுமையான பல தலைமுறைக்கான வாழ்வியலையும் அமைத்துக் கொடுத்திருக்கிறான்.

ஜல்லிக்கட்டு என்பது மாட்டினத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரோக்யமாக தமிழனுடன் இணைந்து உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் உன்னதம். இந்த அறிவியல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமலேயே தமிழன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தமிழ் சான்றோரின் நுண்ணறிவு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்ட தத்துவங்களை செயல்முறையில் கலாச்சாரமாக மாற்றி இருக்கிறது.

உலகில் எந்த நாகரீகத்தாலும் இப்படி வீட்டு விலங்குகளைக் காக்க முடியவில்லை. ஏன்?
அதற்குக் காரணம் இன்று “காருண்ய மூர்த்திகள்” என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் “PETA” போன்ற கொடூர சிந்தனை படைத்த அமைப்புகள்.

உயிர் என்பதற்கு அறிவியலார் விளக்கம்

உயிர் என்பது ஒரு செல் அல்லது பல செல்களை அடிப்படையாக கொண்டது.

உயிரின் பண்புகள்

அதற்கு வரையறுக்கப்பட்ட வடிவம் இருக்கும்.
அவை சக்தியை இயற்கையிலிருந்து பெறும்
உயிர் உள்ளவை வளரும்.
சூழ்னிலைகளுக்கு ஏற்ப மாறும்.
புறத்தூண்டலுக்கு வினையாற்றும்

இந்த ஆறு பண்புகளை சொல்லிவிட்டு கடைசியாக மிக முக்கியமாக அறிவியலார் சொல்வது,

உயிர் என்பது இனப்பெருக்கம் செய்யும்.

செயற்கையாக மாற்றப்பட்ட ஜீனை ஒரு கிருமியின் செல்லில் செலுத்தி அந்த ஜீன்செல் இனப்பெருக்கம் செய்ததை அறிவியலின் மிகப் பெரிய வெற்றியாக சமீபத்தில் கொண்டாடினோம் ஞாபகம் இருக்கிறதா?

உயிர் என்றாலே இனப்பெருக்கம் செய்யக் கூடியது, அது இயலாவிட்டால் அது செத்ததற்கு சமம்.

அறிவியல் பூர்வமாக “உயிருள்ளது” என்பதன் பொருள் அது இனவிருத்தி செய்யக்கூடிய ஒன்று என்று பொருள்.

இனவிருத்தி செய்வதை முழுமையாகத் தடை செய்வது என்பது கொலைக்குச் சமமான குற்றமாகும்.

PETA போன்றவை பெருஞ்செல்வரல்லாத மனிதர்களிடம் விலங்குகள் இயல்பாக எளிமையாக வளர்வதை விரும்புவதில்லை. காரணம் ஏழைகளும் விலங்குகளை வளர்த்தால் அது செல்வச் செழிப்பின் அடையாளமாக, கௌரவமாக ஆக்கப்பட இயலாது.

அப்படியானால் என்ன செய்ய வேண்டுமெனில், ஏழைகளுடன் வசிக்கும் பிராணிகள் அழிக்கப்படவேண்டும். அதை நேரடியாக கொல்லக் கூடாது. கருணை தேவதை முகமூடி அணிந்து கொண்டு செய்ய வேண்டும்.

முதலில் ஆதரவில்லா பிராணிகளை நாங்கள் காக்கிறோம் என்றார்கள். பின்னர், பாதுகாக்க இயலாது என அவற்றில் 95% சதவிகிதத்தை கருணைக் கொலை செய்தனர்.

அடுத்து ஆண்மை நீக்கம் செய்வதை அறிமுகப்படுத்தினார்கள், அதன் விளைவு அடுத்த சந்ததியே இல்லாமல் செய்வது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களை எல்லாம் மலடாக்கி விட்டால் நாட்டில் வறுமை ஒழிந்து விடும் என்பது போல கொடூரமானது PETA வின் இந்தப் பிரச்சாரம்.

அடுத்து ஏழைகளையும் பிராணிகளையும் பிணைக்கும் கலாச்சார அடிப்படைகளை வேறோடு பிடுங்கி நீக்குவதே PETA வின் நோக்கம்.

இதற்காக நாகரீகங்களில் ஏழைகளுக்கும் பிராணிகளுக்கும் உள்ள பிணைப்புகளை குறிவைத்து தாக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதெல்லாம் எதற்காக என்றால், பிராணி வளர்ப்பு செல்வந்தர்களின் கௌரவத்தைக் காட்டுவதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அதை வியாபாரமாக்கி இனப்பெருக்கம், உணவு, மருத்துவம், பாதுகாப்பு, சவ ஊர்வலம், இறுதிச்சடங்கு என பல மடங்கு லாபம் தரும் வியாபாரமாக நடத்தமுடியும்.

உண்மையில் இவர்கள் சொல்லுவது போல் ஜல்லிக் கட்டு கொடூரம் என்றால் உடற்பயிற்சி செய்வது கொடூரம். விளையாட்டுப் போட்டிகள் கொடூரமோ கொடூரம்.

ஜல்லிக்கட்டு என்பது மாட்டினத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக ஆரோக்யமாக தமிழனுடன் இணைந்து உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒரு அறிவியல் உன்னதம். இந்த அறிவியல் உன்னதத்தை புரிந்து கொள்ளாமலேயே தமிழன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தமிழ் சான்றோரின் நுண்ணறிவு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்று அறிவியலால் நிரூபிக்கப்பட்ட தத்துவங்களை செயல்முறையில் கலாச்சாரமாக மாற்றி இருக்கிறது.


Image result for harappa jallikattu
ஹரப்பாவில் கிடைத்த ஜல்லிக்கட்டு போன்ற அடையாளம்.



ஒரு ஆரோக்யமான, வலிமையான சந்ததியை உருவாக்கி அதனால் உலகிற்கு உதவும் உன்னதமான காரியங்கள் செய்தல். இதுவே பிறப்பின் நோக்கம் என்கிறது இந்துமதம். அதனாலேயே புத்திரன் இல்லாதோர் “புத்” என்னும் நரகத்தில் வீழ்வர் என்றனர்.

எப்படி நமக்கு வலிமையான சந்ததிகள் தேவையோ அப்படி காளைகளுக்கும் வலிமையான சந்ததிகள் கிடைத்தால்தான் காளை இனம் பூமியில் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகாலம் வாழ முடியும். அந்த வலிமையான சந்ததியை உருவாக்க ஒரு முறை தேவை, அவை கலாச்சாரத்தில் நீக்கமறக் கலந்து இருந்தால்தான் அது பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்க முடியும். அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சார முறையே “ஜல்லிக்கட்டு” ஆகும்.

வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்தவன் தமிழன். அவற்றிடமிருந்து அவன் கற்ற பாடங்களை காளைகளின் வாழ்வியலில் சேர்த்தான்.

ஜல்லிக்கட்டு என்பதை இனப்பெருக்கம் செய்யத்தகுதியான காளைகளையும், மனிதர்களையும் அடையாளம் காட்டும் ஒரு யுக்தி,

 இவனை மணந்தால் வலிமையான புத்திரன் கிடைப்பான் என பெண்ணுக்கு அடையாளம் காட்டுவது ஜல்லிக்கட்டு.

அதே போல் இக்காளை வலிமையானது. இதன் மரபணுக்கள் வலிமையானவை,இதன் மூலம் சிறந்த மாடுகளின் சந்ததிகளை உருவாக்கலாம் என காளைகளையும் அடையாளப்படுத்துகிறது ஜல்லிக்கட்டு.

மனித வாழ்வையும் காளை வாழ்வியலையும் உலகத்தில் யாராவது இப்படி சமமாக கருதியதுண்டா?

தொடரும்.