Thursday, November 24, 2016

சாமக் கோடங்கி!!!1976 நவம்பர் முதல் - 1977 மார்ச் வரை ஆண்டு..


நான் நாலாவது படிச்சிகிட்டிருந்த காலம். அப்போ ஒரு நாலஞ்சு மாசம் சேலத்துக்கு பக்கத்தில் இளம்பிள்ளைக்கு அருகில் காடையாம்பட்டின்னு ஒரு குக்கிராமத்திற்கு குடிபோனாம்.

வீடுன்னா அது வீடு இல்லை. அது ஒரு பன்னிக் குடிசைன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். 3 அடி உயர் மண் சுவர். அதுக்கு மேல் மூங்கிலால டைமண்ட் டிசைன் மாதிரி மூங்கில் தடுப்பு. நாலு மூலைக்கு நாலு தாங்கல் வச்சு தென்னையோலை வேஞ்ச குடிசை. அது முழுசும் கூட எங்களுக்கு வாடகைக்கு இல்லை. குடிசைக்கி தென்மேற்கு மூலையில எப்பவுமே மூடிக்கிடக்கற ஒரு அறை. அது போக எல் ஷேப்பில மிச்சமிருக்கறது தான் வீடு.

வாசல் கதவு மிக மிக வலுவானது. ஆமாம் சாக்குப்பை தான்.

இதையெல்லாம் விட முக்கியமானது. வீட்டுக்கு நேரெதிரே சுடுகாடு.காடையாம்பட்டி ரொம்ப சின்ன ஊர். முப்பது வீடு கூட கிடையாது, 100 மீட்டர் நீளம் கூட இல்லாத ஊர். ஊர்க்கோடியில் முச்சந்திப் புளியமரத்தில தொங்கிக் கிடக்கற பேய்க்கதைகள் ஏராளம். அந்த இடத்தைப் பாடை மாத்தி என்பார்கள். பிணம் வீட்டிலிருந்து புறப்பட்டு இந்த பாடைமாத்தி இடம் வரை வீட்டைப்பார்த்த மாதிரி, வீடு இருக்கும் பக்கம் காலை நீட்டிக் கொண்டு வருமாம். இந்த இடத்தில் வந்த உடன் காடு பாக்கிற மாதிரி மாத்துவார்கள்.. அதனால் இந்த இடத்துக்கு பாடை மாத்தி என்று பெயர்.

எங்க வீட்டுக்கும் இந்த இடத்துக்கும் அண்ணா சமாதிக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இருக்கும் தூரம்..

ஆரம்ப காலத்தில் எந்தக் கதையையும் எங்களுக்குச் சொல்ல வில்லை.

அப்போதெல்லாம் நடுராத்திரில் எங்க அக்காமர்கள் என்னையும் என் அண்ணனையும்

எழுப்பி சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்வார்கள்.. ஒரு நாள் எழுப்பிக் கூட்டிகிட்டு போகும் போது கொஞ்சம் லேட்டாகி 1:00 மணி ஆயிருச்சி .. எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது...


கலீர் கலீர்னு சலங்கை ஒலி.. கூடவே டமடமன்னு உடுக்கை ஒலி..அந்த நள்ளிரவில் நாய்கள் விழித்துக் குலைக்க ஆரம்பித்தன.. நிலா வெளிச்சத்தில் ஆறடி உயரமும் ஆஜானுபாகுவா உருவம். பாக்கறதுக்கே பயமா தலையில் பெரிய கொண்டை.. ஒத்தை நைட்டி மாதிரி ஒரு அங்கி. கயில மயிலிறகுக் கொத்து உடுக்கை அடிச்சபடியோ அவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்னு உடுக்கை அடிக்க ஆரம்பிச்சான். வீட்ல எல்லாரும் முழிச்சாச்சு. அம்மா ஒரு சின்ன படியில் அரிசி கொண்டுபோய் போட,

பஞ்சம் வருகுதம்மா பேய்ப்பஞ்சம் வருகுதம்மா
பசியில் வாடுதம்மா பிள்ளைகள் பசியில் வாடுதம்மா
தஞ்சம் நீயம்மா

அப்படி ஏதேதோ சொல்லிப் பாட்டு படிச்சிட்டு மயிலிறகால எங்க எல்லோருக்கும் பாடம் போட்டுவிட்டு போயிட்டார்..


அடுத்த நாள் தான் ஊர்ஜனங்க சொன்னாங்க, அது சாமக் கோடங்கியாம். அமவாசையில சுடுகாட்டில பூசை செய்வாராம். எப்பயாவது சாமி உத்தரவு வந்தா இப்படி ஊருக்குள்ள வந்து உடுக்கை அடிச்சு குறிசொல்லுவாராம்.

என்ன சொன்னாரு என்ன சொன்னாருன்னு ஒரே விசாரிப்பு.. நங்க ஹீரோ ரேஞ்சுக்கு ஆயிட்டோம். பஞ்சம் வரப்போகுதாமில்ல..

(இப்பன்னா ஆமாம் இந்த வருஷம் மழையே இல்லை இதைச் சொல்ல கோடங்கி வரணுமான்னு கேட்டிருப்போம்)

பஞ்சமும் நிஜமாய் வந்தது.. அரிசிச் சோறு கனவானது, மக்காச் சோள ரவையும், மரவல்லிக் கிழங்குமே உணவானது.கிணறுகள் வத்தி தண்ணீருக்கு கிலோ மீட்டர் கணக்காய் நடக்க வேண்டி வந்தது..

அது இல்ல மேட்டர். இது கோடங்கியை நாங்க பார்த்த முதல் முறை.. அப்போ உருவம் காட்டுமிராண்டித்தனமா இருந்தாலும் அவ்வளவு பயமில்லை.. ஏன்னா மயிலிறகு.. அது ஒரு மந்திரவாதி கிட்ட இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை. கோடங்கி ஊருக்குள்ள அனாவசியமா நுழையமாட்டர்ங்கற தைரியம். சுடுகாட்டுக் காளி சொல்லாமே எதுவுமே செய்யமாட்டார் என்ற நம்பிக்கை.. அந்த நம்பிக்கை எல்லாம் அடுத்த அமாவசை வரைதான்..

அமாவாசை நாள் 11:00 மணிக்கு சுடுகாட்டுக் காளி பூஜை ஆரம்பித்தார் கோடங்கி...


முதல் முறையா ஒரு கோடங்கி பூஜை.. சுடுகாட்டுக் காளிக்கு. அத எப்படி போடுவாங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது.. பின்னாடி கேட்டுத் தெரிஞ்சுகிட்டது..

இதுக்காக கோடங்கி சுத்து வட்டார சுடுகாடெல்லாம் அலைவாரம். அந்தவாரம் புதைக்கப்பட்ட பிணத்தின் சவக்குழி மண், பிணமெரித்த சாம்பல், எதாவது எலும்புத்துண்டு, எலுமிச்சம்பழம், பூசனி, அரளிப்பூ இப்படி பலப்பல விஷயங்களைச் சேர்ப்பார் கோடங்கி.. அமாவாசை இரவு சுடுகாட்டில ஒரு உருவம் போட்டு (உருவத்தில சவக்குழி மண் கலந்திருக்கும்) அதுக்கு இதையெல்லாம் படைச்சு ஓங்கி உடுக்கை அடிச்சிப்பாடி பூஜை பண்ணுவார்.. (எங்க குல தெய்வம் அங்காளியம்மனும் சுடுகாட்டுக் காளிதான்.. காட்டில் உருவம் போட்டு உயிர்பலி குடுத்து வணங்கற பழக்கம் எங்களுக்கும் உண்டு.. அங்காளி என்பவள் இறந்த சதிதேவியின் உடலில்லா உயிர். அவளே பேய்ச்சியாக இருந்து பிரம்ம கபாலத்தின் கொட்டம் அடக்கி சிவபெருமானை காப்பாற்றியவளும் ஆவாள்)

நாங்கள்ளாம் வீட்டிலயே ஒடுங்கிட்டோம்.. உடுக்கைச் சத்தம் மட்டும் ஒரு மணிநேரத்துக்கு மேல கேட்டுகிட்டு இருந்தது.. எதேதோ சத்தங்கள், உடுக்கைச் சத்தத்திற்கு தொண்டையைச் செருமி ஊளையிடும் நாய்களின் சத்தம் வேற திகிலா இருந்துச்சி, என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசைதான் ஆனால் கடைசியா கோடங்கி தன் இரத்ததைக் காணிக்கையா குடுக்கறப்ப பேய்களெல்லாம் அதைக் குடிக்க எழுந்திருக்குமாம்.அந்த இரத்த பலிக்குப் பின்னால பேய்கள் அடங்கி தாகம் தீர்ந்து அமைதியாயிடுமாம். அந்த நேரத்தில யாரும் பார்த்திடக் கூடாதாம்..

பூஜை முடிந்திருக்கும் போல கலீர் கலீர்னு சலங்கைச் சத்தம். கோடங்கி ஓங்கிக் குரல் கொடுத்து வீல் எனக் கத்தினார்.. ஏதோ உரத்த குரலில் உறுமினார்.. சத்தம் சன்னமா இருந்தாலும் மனசு படபடன்னு அடிச்சுக்குது.. என்னமோ சரியில்லை..

அரைமணி நேரம் கழிச்சு சீரான உடுக்கைச் சத்தமும் சலங்கைச் சத்தமும் வந்தது.. கோடங்கி திரும்ப வர்ரார் என்றதும் எங்க அம்மா எங்களையெல்லாம் கூப்பிட்டுகிட்டு வெளிய வந்தாங்க

வியர்த்து வடிந்து ஆவேசமாய் இருந்தது கோடங்கி முகம். அவர் கண்ணு நிலைச்சு கூர்ந்து எங்கயோ பார்த்துகிட்டு இருந்தது.. அரிசியை அங்கியை நீட்டி வாங்கியவர்..

அகோர பிணம் விழுது ஊரில
அடங்காத ஆட்டம் ஆடப்போகுது
ஆம்பளைங்க பத்திரம் ஆம்பிளைங்க பத்திரம்னு
ஏதோ பாட்டுப் பாடிட்டு போயிட்டாரு...

எங்களுக்கோ வயிரெல்லாம் கலங்கிருச்ச்சி.,..

அந்த மாசம்தான் காமன்பண்டிகையும் வந்தது.. இது கிராமங்களுக்கே உரிய திருவிழா. இதில மன்மதனை சிவன் எரிக்கறது தான் ஸ்பெஷல். அதுக்காக துணிப்பொம்மை செஞ்சு எரிப்பாங்க.. அப்புறம் காமன் ஜெயிச்சாரா, சிவன் ஜெயிச்சாராங்கர மாதிரி ஒரு கூத்து,.. இதை லாவணின்னு கூடச் சொல்வாங்க.. இப்ப அல்லிராணியும் நானும் சண்டைப் போட்டுக்குவமே, அட சொற்சிலம்பத்தில நானும் சாம்பவியும் போட்டுக்குவமே அது மாதிரி எதிர்பாட்டு பாடறது.. ஒண்ணும் புரியலைன்னாலும் பாட்டு கூத்து .. அப்புறம் ரெகார்டு டேன்ஸ் நடந்தது. அதையெல்லாம் பாக்க எங்களை விடலை

அப்படி ஊரே ஒரு எடத்தில குந்தி ஜாலியா இருக்கறப்பத்தான் ஊரின் அடுத்தப்பக்கதில் இருந்த் குடிசை குபுக்குன்னு பத்திகிட்டு எரிஞ்சது...


ஆமாம்.. அந்த வீட்டில இருந்த பொண்ணு மண்ணெண்ணை ஊத்தி தீ வச்சுகிச்சு..

கரிக்கட்டயா தோலெல்லாம் உரிஞ்சு வாழை எலையில மூட்டைகட்டி எடுத்து வந்து எரிந்தும் எரியாம இருந்த ஒடம்பை முழுசா எரிச்சாங்க.. நாங்க நாலு நாளைக்கு பக்கத்து ஊரு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டோம்.. (பயம்தான்)

வீட்டுக்கு திரும்ப வந்த பின்னாலயும் பயங்கரமான பயம்தான். அதுவேற நம்மகிட்டதான் கற்பனைக்குப் பஞ்சம் கிடையாதே! பையன் செத்தா பேய். பொண்ணு செத்தா பிசாசு, எரிஞ்சு செத்தா கொள்ளிவாய்ப் பிசாசு, பூதம், ராட்சஸி, அரக்கி, யட்சினி இப்படி எக்கச்சக்க வார்த்தைகள் தெரிஞ்சு வச்சிருக்கமே! பயங்கர கிலிதான்..

ஊர்ல அந்த மோகினி ஒரு ஆணை பலிவாங்கப் போறதா கோடங்கி சொல்லி இருக்காராம்.. அதனால் பசங்கள்ள இருந்து குடு குடு கிழவன் வரை எல்லாத்துக்கும் தாயத்து, வீட்டுக்கு வீடு அணையா விளக்கு, வேப்பிலை, கதவில நாமம், விபூதி பூச்சு இப்படி எத்தனை எத்தனியோ பரிகாரங்கள்.. நாய் குளிரில் ஊளையிட்டாலும் சரி, வேற எதுக்கோ ஊளையிட்டாலும் சரி, கொள்ளிவாய்ப் பிசாசு அப்படிப் போகுது, கொள்ளி வாய்ப் பிசாசு இப்படிப் போகுதுன்னு கிசுகிசுப்பு பேச்சுகள்.. இப்பல்லாம் நாங்க உச்சா போகக் கூட ராத்திரியில் வெளிய வரமாட்டோம்..

சுடுகாட்டுக்கு எதிர் வீடு வேற, ராத்திரியில் எப்பவாவது சலங்கைச் சத்தம் கேட்கும். கோடங்கியா, மோகினியா.. புரியாது.. எப்பவாவது உடுக்கை சத்தம் கேட்டா மனசு நிம்மதியா இருக்கும்..

ஊரே கிலி பிடித்து அடுத்த அமாவாசை பூசைக்கு காத்திருந்தது.. அப்பதான் கோடங்கி பூசை போட்டு பிசாசைக் கட்டுவாராம்..

அமாவாசை வந்தது பூசையும் நடந்தது ஆனால் இந்த முறை கோடங்கி
தோற்றுப் போனார்..


இந்த அமாவசை பூஜை உக்ர பூஜையாம்.. கோழி பலிகொடுத்து பலகாரங்கள், பழங்கள், கிழங்குகள் ஏதேதோ வச்சு செய்யற பூசை,, இதில தான் கோடங்கி அந்தப் பிசாசுக்கு என்ன வேணுமோ அதைக் கொடுத்து அடக்கிச் சாந்தப் படுத்துவார்.. அதுக்கு ஒரு சின்ன துணிப்பொம்மையில பேயை அடக்கி பாடை மாத்தி முச்சந்தியில இருக்கற புளிய மரத்தில அறைஞ்சிருவாரு.

இந்த முறை இரண்டு மணி நேரத்திற்குப் பூசை நடந்தது.. கோடாங்கி குதிச்சு ஆடினார்.. உடுக்கை அடித்தார்.. மந்திரம் போட்டார்.. எலுமிச்சை நறுக்கி வீசி, பூசனி வெட்டி, கோழி வெட்டி என்னென்னவோ செய்தார்..

ஆனால் ஆவி அடங்கலையாம்.. மனித உயிர் இல்லாமல் போகமாட்டேன் எனச் சொல்லிடுச்சாம். கோடங்கி என்னென்னவோ செய்தும் பொம்மைக்குள் அடக்க முடியலை...

இம்முறை கோடங்கி சொல்லிட்டுப் போயிட்டாரு.. அடுத்து ஒரு ஆண் உசிரு போகும். அதன் பின்னால்தான் ஆவி அடங்கும்... ஆம்பிள்ளைகள் ஜாக்கிரதையா இருங்க..

 ஊர் ஜாக்கிரதையாய் தான் இருந்தது.. ஒரு 10 நாட்கள் கழிந்தது.. அந்த ஞாயிற்றுக்கிழமை காலை பாடை மாத்திப் புளிய மரத்தில் ஊஞ்சலாடிய உடலைப் பார்க்கும் வரை...தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது முதல்ல செத்துப் போனாளே அந்தப் பெண்ணின் எதிர் வீட்டுக்காரப் பையன்.. ரெண்டு வீட்டுக்கும் கடும் சண்டை இருந்து வந்தது..

அந்தப் பையனும் அந்தப் பொண்ணும் காதலிச்சதாகவும் அதனால்தான் அவள் வந்து அவனைக் கூப்பிட்டுக்கொண்டு போய் விட்டாள் என்றும் சொன்னார்கள்.

இரண்டு பேருக்கும் மத்தியில் காதல் இருந்ததா தெரியாது.. ஆனால் கோடங்கி அடுத்த அமாவாசைப் பூஜையில் இருவரையும் பொம்மைகளில் பிடித்து புளியமரத்தில் அறைந்தார்.. ஜோடியாக..

இன்னும் அந்தப் புளிய மரம் இருக்கிறது.. என் மூத்த அண்ணன் வீட்டருகே! அதைப் பார்க்கும்பொழுது அந்த பிசாசுகள் நினைவுக்கு வருதோ இல்லியோ கோடங்கியும், உடுக்கைச் சத்தமும், சலங்கைச் சத்தமும் மனசில் எழும்.

யாரிடமும் எதையும் அந்தக் கோடங்கி கேட்டதில்லை.. அரிசி வாங்கிச் சென்றாலும் எங்கே சமைத்து எப்படிச் சாப்பிட்டு, ஒருவேளை மளிகைக் கடையில் கொடுத்து காசு வாங்கிக் கொள்வாரோ?

மயில் பீலிகள் கொண்டு நள்ளிரவில் பாடம் போடுவது வேறு ஏதாவது ஊரில் இருக்கிறதா?

அதெல்லாம் விட


கோடங்கிகள் இன்னும் இருக்கிறார்களா? எதென்றாலும் ஊருக்காகச் செய்யும் கோடங்கிகளை உங்கள் கிராமங்களில் பார்த்து இருக்கிறீர்களா?

Monday, August 8, 2016

கர்மமும் விதியும்


 விதி என்பது இன்புட். 
 கர்மா என்பது அவுட்புட். 
 பிறவி என்பது 
 இவை இரண்டும் இணைக்கப்பட்ட 
 ஃபீட்பேக் பிராஸஸ்.  
 இடுக்கண் வருங்கால்  நகுக. 


காரணம் இருக்கிறது. சென்ற பிறவியின் அவுட் புட்டான கர்மங்கள் இந்தப் பிறவியின் விதியாக அமைகின்றன. 

 ஒரு துன்பம் வருகின்றது என்றால், அது ஒரு தீய கர்மத்தினால் விளைந்த விதி என உணர்க. ஆக ஒரு துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் ஒரு தீய கர்மத்தைத் தொலைக்கிறோம். அதற்கு நாம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? 

 பல பக்தர்கள் இப்பிறவியில் பலப்பல துன்பங்கள் அனுபவிக்கக் காரணம்  அவர்களின் தீயகர்மங்கள் விரைவில் தொலையவே என்பதைச் சிந்தித்தோமானால், பக்தியினால் ஒருவன் விரைவில் இறைவனை அடைவதை காணலாம். 

அதே சமயம் தீயவர்களின் நற்கருமங்கள் விரைவில் தீர்ந்தாலே அவர்கள் தீய கருமங்களுக்கான பலனை முழுதாகப் பெற முடியும். ஆக தீயவர்கள் சுகிப்பது தம் நற்கருமங்களை விரையமாக்கவே.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் எண்ணப் படும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் - நற்கருமங்களைத் தொலைக்கும். தூக்கி எறியப்போகின்ற சட்டையில் விலையுயர்ந்த பொத்தான்கள் பதிக்கப்பட்டிருந்தால் எடுத்து வைப்பதைப் போல. 

செவ்வியான் கேடு - சற்றே அடிபட்ட பழத்தில் பாதிக்கப்பட்ட சிறு பகுதியை நீக்கி உண்பது போல. 

அங்கே சட்டை எறி்யப்பட்டது. இங்கே பழம் உண்ணப்பட்டது. முழுமையாகப் பார்க்கும் பொழுது மாத்திரமே நமக்கு விவரங்கள் புரிகின்றது. இல்லையென்றால் பழத்தை வெட்டி வீசுகிறான் என்றும் சட்டையைப் பத்திரப்படுத்துவதாகவும் தோன்றும்.  

விதியை மதியால் மாற்ற முடியும் என்பது இதனால்தான். இன்றைய கருமங்கள் நாளைய விதியை உருவாக்கவல்லவை. இன்று மரம் வளர்த்தால் மழை ஒழுங்காகும். மரம் வெட்டினால் மழை தாறுமாறாகும். நீர் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும். இப்படி இன்றைய செயல்களின் விளைவு நாளைய விதி ஆகும். இன்று என்ன நடக்கிறது என்பது விதி. நாளை என்ன நடக்கும் என்னும் விதி கருமங்களால் விளைகிறது. அதனால் நம் மதியால்  நாளை என்பதை கருமங்களைக் கொண்டு நாம் உருவாக்கிக் கொள்ளலாம். 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும். 

ஒரு முயற்சி என்பது பலன் தராமல் போகவே போகாது. 

சஞ்சித என்பது நமது கர்மாக்களின் மொத்த தொகுப்பு. அதில் இந்த ஜன்மாவுக்கு பலன் கொடுப்பது பிராரப்தம் எனப்படும். இந்த ஜன்மாவில் சேர்க்கும் கர்மா க்ரியமான கர்மாவாகும். அவை அடுத்து வரும் ஜன்மாக்களில் பலன் தரும். 

விதியை யாரோ எழுதுவதில்லை.  நம் விதியை நம் கர்மங்களால் நாமே எழுதிக் கொள்கிறோம்.  பிறவி ஒரு உணவகம் என்றால் கர்மாதான் உங்கள் மெனு.

மேலும் ஆராய்ந்தால் கர்மா மூன்று விதங்களாலானது. சஞ்சித, பிராரப்த, க்ரியமான கர்மாக்கள் என்று சொல்லப்படும். 

விதி என்று நாம் சொல்வது பிராரப்த கர்மாவாகும். சஞ்சித, க்ரியமான கர்மாக்களைப் மகான்களின் ஆசிகொண்டோ, தீர்த்தயாத்திரைக் கொண்டோ போக்கிக் கொள்ளலாம். பிராரப்தம் போக்க முடியாதது என்று சிலர் சொல்லக்கூடும். 

சஞ்சித கர்மா என்பது அம்பறாதூணியில் இருக்கும் அம்புகள் போல. பிராரப்தம் என்பது விடுப்பட்ட அம்பு போல. 

சஞ்சித கர்மாவை சென்ற பிறவியின் கர்மா என்று கொள்ளக் கூடாது. அது பல பிறவி கர்மாக்களின் தொகுப்பு. அது அத்தனையும் ஒரே ஜன்மாவில் அனுபவிக்க முடியாது. அதை கடவுள் அவர் கருணையால் பிரித்துக் கொடுக்கிறார். இப்பிறவிக்கென ஒதுக்கப்பட்ட சில கர்மாக்கள் ப்ராரப்தா கர்மாவாகும். இதை மாற்ற முடியாது என்று வாதிடுவோர் உளர். ஆனால் அதையும் மாற்ற முடியும் என புராணங்களும் வரலாறுகள் சொல்லும்.

1. செயல்களினால் மட்டுமே கர்மங்கள் உருவாகின்றன. வேறு எவ்வகையினாலும் கர்மங்கள் உருவாவதில்லை.

2. மார்க்கண்டேயனின் ப்ராரப்த கர்மா படி அவன் 16 வயதில் மரிக்க வேண்டும். ஆனால் மரித்தானா?

3. ஆதிசங்கரரின் பிராரப்த கர்மாவின்படி அவர் 12 வயதில் மரிக்க வேண்டும். மரித்தாரா?

ஆக விதி என முடங்கிப் போகாமல் நல்ல காரியங்களைச் செய்து கொண்டே இருங்கள் என்பதுதான் வேதம் சொல்லும் பாடம்.  நல்லவைகள் என அறிந்தவற்றை சரியான இடம், பொருள், காலம் அறிந்து செய்து கொண்டே இருங்கள். உங்கள் விதியை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். 

பிராரப்த கர்மாவையும் மாற்ற இயலும். இது எஞ்சின், இது முதல் வகுப்பு பெட்டி, இது இரண்டாம் வகுப்புப் பெட்டி, இது குளிரூட்டப்பட்ட பெட்டி என்று இப்பொழுது சம்பாதிக்கும் கர்மா, இந்தப் பிறவிக்கு வாய்த்த விதி (பிராரப்த கர்மா) மொத்த கர்மா (சஞ்சித கர்மா) என எத்தனை விதமாக மாற்றிக் கூறினாலும் 

விதியை எந்த  நிலையிலும் கர்மாக்கள் மாற்ற வல்லவை.

வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!


இந்தியாவின் இலக்கிய வளம் மிக மிக அதிசயிக்கத்தக்கது. 


தர்மம் என்பதை நிர்ணயித்து அதை விளக்கி, அதை விளங்கிக் கொள்ள பல வகை படைப்புகளும் கொண்டது இந்த நாடு. உலகில் எந்த மதமும் இப்படி விரிவான தர்ம அமைப்பைக் கொண்டது அல்ல. 

வைதீக மதமான இந்திய மதம், வேதங்களை அடிப்படையாய் கொண்டது. அவ்வேதங்களை விளக்கும் உபனிடதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என மிகப் பெரிய அமைப்பைக் கொண்டது இம்மதம். 

இதில் இதிகாசங்களுக்கு தனி இடம் உண்டு. 

உலகின் மிக எளிமையான விளையாட்டு சாதனம் எது? 
பந்து. 

உலகின் மிகச் சிறந்த விளையாட்டுச் சாதனம் எது என்றாலும் அதுவும் பந்துதான். 

சிறுகுழந்தையாய் இருக்கையில் பந்துடன் விளையாட ஆரம்பிக்கும் நாம் முது கிழவர் ஆன பின்னும் பந்துடன் விளையாடிக் கொண்டிருப்போம் சலிப்பதில்லை.
 
அது போலவே இதிகாசங்கள். சிறுகுழந்தைகளாய் இருக்கும்போதே அனுமனின் சாகசங்களையும் பீமன் அர்ச்சுனன் சாகசங்களையும் வாய் பிளந்து கேட்கும் நாம் இறுதிக் காலத்திலும் இதிகாசங்களை அலசிக் கொண்டே இருப்போம். 

இதிகாசங்கள் - தர்மங்களை செயல்முறையாக விளக்கப் பிறந்தவை. இது தர்மம் என்பதுடன் அவை நின்று விடுவதில்லை. இது ஏன் தர்மம். இது ஏன் அதர்மம். எனப் பிரித்தரிய வைக்கும். 

திருவள்ளுவர் பாடிய திருக்குறளில் கூட அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என வரிசைப்படுத்திய காரணம் உண்டு. . முதலில் எது தர்மம், எது அறம், எது நல்லது என அறிய வேண்டும். பின்னர் அந்த அறவழியில் பொருளீட்ட வேண்டும். பின்னர் அந்த அறவழியில் வந்த பொருளால் இன்பத்தை அனுபவிக்க வேண்டும். 

அப்படித்தான் ஒவ்வொரு மனிதனின் முதல்கடமையும் எது நல்லது, எது அறம், எது தர்மம் என்பதைக் கற்றலே ஆகும். அப்படி கற்பதினாலேயே வாழ்க்கையில் பொருட்கடலையும் காமக்கடலையும் நீந்திக் கடந்து வீடுபேற்றை எட்ட முடியும். 

அதனடிப்படையிலேயே இதிகாசங்கள் குழந்தைகளில் இருந்து ஞான குருமார்கள் வரை அனைவருக்கும் உகந்ததாக எழுதப்பட்டன.   அதிலும் இரு இதிகாசங்களாக படைத்ததன் காரணமும் உண்டு. ஒரு கதை மூலம் தர்மத்தை முழுமையாக விளக்கிட முடியாது. அதில் உண்டாகும் சந்தேகங்களை இன்னொரு கோணத்தில் கண்டு விளங்கிக் கொள்ள இன்னொரு நிகழ்வு தேவைப்படுகிறது. இராமயணமும் - மஹாபாரதமும் அப்படியான இரட்டைக் காப்பியங்களே. 


அப்படி ஒரு ஒப்பீட்டு நிகழ்வே வாலி வதமும் - கர்ணன் மரணமும்.  

 
இராவணன் அட்டகாசம் அதிகரித்த காலம். இராவணன் கதை முடிக்க தேவர்கள் விஷ்ணுவுடன் வேண்டியபோது தன்னுடைய அவதாரம் பற்றிச் சொல்லி, தேவர்களை வானரராய் பிறக்கும்படியும் விஷ்ணு சொல்கிறார்.  
இதனால் வாலி - சுக்ரீவன் ஜனனம் நிகழ்கிறது. வாலி - இந்திரனின் அம்சம். இந்திரன் அவனுக்கு ஒரு வரமும் தருகிறான். வாலியுடம் யார் மோதினாலும் அவரின் பலத்தில் பாதி வாலியைச் சேரும். 

சுக்ரீவன் சூரியனின் அம்சம். வாலி மூத்தவன் என்பதால் அரசனாகிறான். அவனுடைய கடமை இராமனுக்காக காத்திருத்தல். ஆனால்... 

உலகியல்பின்படி வாலி தன் சுக வாழ்வில் மூழ்குகிறான். அவனை எதிர்த்தோரை எல்லாம் பரலோகம் அனுப்புகிறான். துந்துபி, மாயாவி என அவன் பலி பட்டியல் பெரிது. இராவணனையும் வெல்கிறான். அவனை தன் மகன் அங்கதனனின் தொட்டிலில் விளையாட்டு பொம்மையாக தொங்க விடுகிறான். 

வாலி ஒவ்வொரு போரில் வெல்லும்பொழுதும் ஒவ்வொரு பிரச்சனை உண்டாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் காரணத்தால் துந்துபிக்கும் வாலிக்கும் விரோதம் இருந்தது.  அதில் ஏற்பட்ட கைகலப்பில் வாலி, துந்துபியைக் கொன்றுவிட்டான்.  அவனுடைய சகோதரனான மாயாவி, இந்தக் காரணத்தால் வாலியோடு சண்டை போட வந்தான்... என்று வால்மீகியின் சம்பவக் கோர்வை விரிகிறது.   

துந்துபியைக் கொன்றபோது மதங்க முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறான். 

மாயாவியைக் கொன்றபோது சுக்ரீவன் வாலி இறந்து விட்டதாக கருதி, அமைச்சர்களின் வற்புறுத்தலின் பேரில் அரசனாக... 

சுக்ரீவனை சதிகாரனாகக் கருதி அடித்து விரட்டியதோடு அல்லாமல் அவன் மனைவி ருமாவையும் கவர்ந்து கொள்கிறான். 

இராவணனை வென்றாலும் இராவணனுடன் நட்பு கொள்கிறான். என்னதான் இராவணன் அவன் வீரத்திற்கு பெயர் பெற்றவன் என்றாலும் அவன் சிறந்த இராஜதந்திரிதான். அவனை வென்ற வாலியையே நண்பனாக பெற்று விடுகிறான். 

ஆக வாலி பலம் மிக்கவன் என்றாலும் அறிவும் தர்ம சிந்தனையும் குறைந்தவன். வாலியே சொல்வான் . இராமன் வாலியிடம் வேண்டியிருந்தால் சிறிது நேரத்திலேயே சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேன் என. 

அனுமனும் ஜாம்பவானும் சுக்ரீவனும் வாலியின் பலம் பற்றி இராமனுக்குச் சொல்லித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மறைந்திருந்து கொல்லும் திட்டத்தையே இராமன் உருவாக்குகிறான். 

இது எங்கே மஹாபாரதத்தில் வந்து சேர்கிறது? 

துவாரகையில் இருந்து பிரபாஷ சேத்திரம் வரும் கிருஷ்ணன் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும் கிருஷ்ணனின் பாதத்தை மான் என்று எண்ணும் வேடன்  தூரத்தில் இருந்து ஒரு வேடன்  அம்பால் அடித்தான் அந்த அம்பு கிருஷ்ணனின் மேல் பட்டு கிருஷ்ணனின் முடிவுக்கு காரணமானது.

அருகே வந்த வேடன்  கிருஷ்ணன் அடிபட்டதைப் பார்த்து மனம் பதறி  மன்னிப்புக் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் உன் மேல் தவறில்லை ராமாவதாரத்தில் நீ வாலி , உன்னை நான் மறைந்திருந்து அடித்தேன் அதைத்தானே இப்போது  நீ செய்திருக்கிறாய் என்று சமாதானப்படுத்தி அனுப்பினான் கிருஷ்ணன். 

கர்ம பலன் என்பதை இப்படி இரண்டையும் இணைத்துக் காட்டுகிறது இதிகாசங்கள். 

வாலியைக் கொன்றபின் வாலிக்கும் இராமனுக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடக்கிறது. 

செருக் களத்து உருத்து எய்யாதே,

வெவ்விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால் எவ்வியது என்னை…………. ………….. …….?’

வாலியிடமிருந்து கிளம்புகிறது. சரியான இந்தக் கேள்விக்கு முறையாகப் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காக்கிறான் இராமன். இதுவரை பேசாமல் நின்றிருந்த இலக்குவன் அப்போது குறிக்கிடுகிறான்; வாலி பெற்ற வரத்தை நினைவுறுத்தி, அவன் எதிரே இராமன் வந்திருந்தால் பாதி வலிமை வாலிக்குப் போய் விடும் எனக் கருதியே இராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று கூறவில்லை இலக்குவன். மாறாக, முழுமுதல் சரணாகதியான சுக்கிரிவனுக்கு இராமன் அடைக்கலம் தந்துவிட்டான் ; அப்படி இருக்க, வாலியும் அடைக்கலம் என்று கேட்டுவிட்டால் மறுக்கவும் முடியாமல் கொடுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாவானே இராமன் என்றுதான் மறைந்திருந்து தாக்கினான் என்பது இலக்குவன் விளக்கம். 

இன்னும் சில விவாதங்கள் 


1. எப்போது வாலி அடுத்தவன் மனைவியை கவர்ந்தானோ அப்போதே வாலி தர்மத்திலிருந்து வழுவி விட்டான் 

2. மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி. வாலி குரங்கு எனும் மிருக வகையை சேர்ந்தவன் 

அதை விட இன்னுமொரு முக்கிய சூட்சமும் உண்டு. 
சுக்ரீவன் சூரியனின் மகன். இராமனும் சூரிய வம்சத்தவன். எனில் சுக்ரீவனின் மனைவியும் சூரிய வம்சத்து மருமகளே. ஆக சுக்ரீவனின் மனைவியை மீட்காமல் சீதையை மட்டுமே இராமன் மீட்க முடியாது.  

வாலியை இராமன் மறைந்திருந்து அம்பெய்து வீழ்த்தினான் என்ற பழி அவனுக்கு மாறுவதாக இல்லை.  

இதை தத்துவார்த்துவமாக இப்படி காணலாம். 

நம் மனதிலேயே வாலியும் சுக்ரீவனும் இருக்கிறார்கள்.  
வாலி இந்திரனின் மகன். போகன். அதாவது எதையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். அவனுக்கு எதாவது கிட்டவில்லை என்றால் அதன் மீதான விருப்பம் இரட்டிப்பாகும். வெறிகொண்டு அடைய ஆசைப்படுவான். ஆக ஆசைதான் வாலி. 

சுக்ரீவன் சூரிய புத்திரன். அடக்கமானவன்.  புத்தி என்பதே சுக்ரீவனாகும். ஆசை புத்தியை ஒரு கட்டத்தில் புறந்தள்ளி அழிக்க நினைக்கும்.  

ஆங்கிலத்தின் will என்ற பதம் வாலியையேக் குறிப்பதாக கொள்ளலாம். ஆசைக்கு நிகரான பலம் பெற்றது எதுவுமே இல்லை.

புத்தி தனக்கான சரியான துணை கிட்டும் வரை ஆசையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இறை சிந்தனை என்னும் இராம நட்பு கிடைத்த பின்னரே புத்திக்கு ஆசையுடன் போரிடும் திடம் கிடைக்கிறது.  

புத்தியால் ஆசை வெல்லப்பட இறை சிந்தனை அதன் பின்னின்று கணை தொடுக்கும். ஆசை அறுக்கப்படும். இறை சிந்தனை ஆசையுடன் நேரிடையாகப் போரிட முடியாது. அது ஞானத்தின் பின் நின்றே போரிட்டு மாய்க்கிறது.  
இப்படி ஒரு தர்மம் வாலிவதத்தில் உண்டு. ஆசையை புத்தியால் வெல்ல முடியாது, ஆசையுடன் புத்தியுடன் போரிடும்பொழுது புத்தியின் பின் மறைந்திருந்து ஆசையை இறைசிந்தனை கொல்லும்.  

ஆக வாலிவதம் என்பதை ஆசையைக் கொன்று புத்தியை அரசுகட்டிலேற்றி அதன் துணையால் எதிரிகளை வெல்லுதலாம்.  

இராமன் ஏன் வாலியுடன் போர்புரியவில்லை? 

இராமன் ஒரு தபஸ்வியாகத்தான் இருக்கிறான். அவன் யாருக்கும் அறைகூவல் விடுக்கக் கூடாது. இராவணனைக் கூட அவன் அறைகூவல் விட்டு அழைக்கவில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே தபஸ்விக்கு உண்டு. இராமன் அரசனாக பதினான்கு ஆண்டும் நடக்கவில்லை. 


வாலியை நேருக்கு நேர் சந்தித்து இருந்தால் இராமன் தோற்றிருப்பானா? 

சாத்தியம் இல்லை. காரணம் வாலி கதை கொண்டு அடிப்பானென்றாலும் ஒரு பாணத்தில் உயிரிழப்பான் என்பதே உண்மை. வாலியை நேரடியாக இராமன் ஒரு பாணத்தில் அடித்திருந்தால் வாலியைப் பற்றி இனியும் நாம் பேசிக்கொண்டிருக்கப்போவதில்லை. 

இன்னும் பேசலாமே... 

இன்னும் ஒரு கேள்வி.. 

இராவணனின் மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித் இந்திரனை வென்றான். 

இந்திரனின் மகனான வாலி இராவணனை வென்றான். 

ஏன் இந்திரஜித் இந்திரனுடன் போரிட்ட போது இந்திரன் வாலியின் உதவியை கேட்கவில்லை? எது முந்தைய போர் எது பிந்தைய போர்?  

 வாலி வதம் ஒரு குற்றம் - ஒரு அம்பு! 

வாலி வதம் மட்டுமே தனியாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் அது குழப்பமாய் இருக்கும். 

இராமாயணத்தில் நான்கு பலவான்கள் உண்டு.

1. வாலி 

2. இராவணன் 

3. கும்பகர்ணன் 

4. அனுமான் 

இதில் முதல் மூவரும் பலத்தை எப்படி உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணம். அனுமான் பலத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதன் உதாரணம். 

வாலி தன் பலத்தை எண்ணி கொண்ட கர்வம் அவனை அனைவரிடமும் வலுச்சண்டைக்கு போகவைத்தது. 
இராவணன் தன் பலத்தை எளியவர்களைக் கொடுமைப்படுத்தி அக்கிரமங்களை அரங்கேற்றவே பயன்படுத்தினான்.

கும்பகர்ணன் அண்ணனின் அத்தனை ஆட்டங்களுக்கும் துணை நின்றான். 

வாலியின் மரணத்தின் போது இராமன் இன்னொன்றையும் சொல்கிறான். 

உலகம் முழுதும் இஷ்வாகு குலத்தினரின் ஆட்சி. அந்த குலத்தைச் சேர்ந்த பரதனின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை தண்டிக்கும் உரிமை பெற்றவனாக இராமன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான். 

குற்றவாளியை எந்த அதிகாரியும் துவந்த யுத்தத்திற்கு அழைப்பதில்லை. விலங்குகளை மறைந்திருந்தே வேட்டையாடல் உத்தமம் போன்ற பல வாதங்கள் இங்கே இருக்கின்றன  


 கர்ண வதம் வாலி வதத்தில் ஒரே ஒரு காரணம். ஒரே ஒரு பாணம். 
அதுவே கர்ணனின் மரணம் எடுத்தால் பல காரணங்கள். பல பாணங்கள். கர்ணன் சூரியனின் மகன் என்றாலும் சூதனாக வளர்கிறான். சூழ்னிலையால் வாலி இராவணனை தோழமை கொண்டது போல துரியோதனனை தோழமை கொள்கிறான் கர்ணன். 

கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. 

கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான். 

ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும். 

கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் - நாராயணாஸ்திரம் - பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது. 

கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான். 

கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம். 

பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான். 

கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை.  ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார். 

கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா? 

பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது. 

கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை. 
வாலி - இராவணனின் நட்பை யாரும் சிலாகிப்பதே இல்லை. ஆனால் கர்ணன் - துரியோதனின் நட்பு புகழப்படுகிறது. 
வாலி போல அறியாமல் மரிக்கவில்லை கர்ணன். அவனின் மரணம் அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது. 

குந்தியிடமும் கண்ணனிடமும் தன் இறப்பை முன்னறிவிக்கிறான் கர்ணன். தான் சேற்றில் சிக்கிக் கொண்டதையே சொல்கிறான். அவனுக்கு வாய்ப்பு இருக்கிறது, துரியோதனனுக்காய் போரிட்டாலும் தர்மன் ஆள்வதே இறுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குமே இருக்கிறது. 

அவனுள்ளத்தில் எத்தனை போராட்டங்கள் இருந்திருக்கும் என்று எண்ணும் போதே தலை சுற்றி கிறுகிறுக்கும்.  
வாலி பலவான். கர்ணன் திறமை மிக்கவன். வாலிக்கு இராமன் தூதனுப்பவில்லை. கர்ணனிடம் தானும் பேசுகிறார். குந்தியையும் பேச வைக்கிறார்.  

வாலியோ கர்ணனோ இராமனும், கிருஷ்ணனும் விதிமீறல் செய்வார்கள் என்பதை நம்பவே இல்லை. 


கர்ணனின் மரணத்தில் பல தர்ம விவாதங்கள் செய்யப்பட்டு அவனின் மரணத்தின் காரணம் அலசப்பட்டது போல வாலியின் மரணமும் பட்டி மன்றக் கருப்பொருளாகவே இருக்கிறது. 


வாலியின் தரப்பில் பேசப்படும் பொழுது அவன் கொல்லப்பட்ட விதம் மட்டுமல்ல, அவன் ஏன் கொல்லப்பட்டான் என்ற காரணமும் விவாதத்திற்கு ஆளாகிறது. 


காரணம் வாலியின் மரணத்திற்குப் பின் தாரையை சுக்ரீவன் சேர்த்துக் கொண்டான் என்பதுதான். 


அது விதவை மறுமணமா என்பதையும் ஆராய்தல் வேண்டும்.  


மகாபாரதத்தின் கர்ணன் வதம் ஒப்பிடத்தகுந்த ஒரு தர்மமே ஆகும். 

வாலியைப் பற்றி நாம் அறிந்ததை விட கர்ணனைப் பற்றி நாம் அறிந்தது மிக அதிகம். 

வாலி அங்கீகாரம் பெற்ற வீரன். கர்ணன் அங்கீகாரத்திற்கு ஏங்கும் வீரன்.

வாலிக்கும் கூடா நட்பு இருந்தது. கர்ணனுக்கும் கூடா நட்பு இருந்தது. 

வாலி சினத்தின் வசப்பட்டு தம்பியின் மனைவியை கவர்ந்தான்.

கர்ணனும் உணர்ச்சியின் வசப்பட்டே தம்பியரின் மனைவியின் மானபங்கத்திற்கு துணையாய் நின்றான்.  

வாலியோ கர்ணனோ வேறுவிதமாய் இருந்திருந்தால் மிகப் பெரிய யுத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். 

கர்ணனின் கவசகுண்டலமோ வாலியின் வரமோ அவர்களைக் காக்கவில்லை. 

இப்படி வாலி-கர்ணன் மத்தியில் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம். 


இந்த உலகில் எது மிக அதிகம் நினைக்கப்படும்? 


வள்ளுவர் மிக அழகாக இதை மிக அழகாக சொல்லுவார். 


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும். 

இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் வருவது. பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் எப்பொழுதும் விவாதிக்கப்படும். எண்ணப்படும். அது அவ்வளவு எளிதில் மனிதர்களால் மறக்கப்படாது. 

உலகத்தில் பலகதைகள் இந்த ஒரு காரணத்தினாலே மிகவும் புகழ்பெற்றதாக இருக்கின்றன. 

ஆரம்பத்தில் இருந்தே தர்மம் ஜெயித்தது. .தர்மம் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது என்று இருந்திருந்தால் இந்தக்கதைகள் இரு தலைமுறைகளைத் தாண்டி இருக்குமா என்பது சந்தேகம்தான். 

இறுதியில் தர்மம் ஜெயித்தது என்று சொல்லி இருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தர்மம் எது என்று ஒரு கேள்வியை வாசகனை நோக்கி வீசி அவனுடைய மனதை ஆராயத் தூண்டும் கர்ணன் மரணம் மற்றும் வாலி மரணம் ஆகிய இரண்டும் மஹாபாரதத்தில் நம்மைக் கட்டி நிறுத்துகின்றன. 

தன்னை விட மிகப்பலவானான ஒருவனை வீழ்த்த வாலிவதம் எப்பொழுதும் உதாரணமாகிப் போகிறது. எதிரியைப் பலமுனை யுத்தத்தில் சிக்க விட்டு பலவீனமாக்கி வெல்வதற்கு கர்ண வதம் உதாரணமாகிப் போகிறது. 
வெற்றியில் பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்பதை இரண்டுமே உணர்த்தும். 

பலம் மிக்கவர்களின் கேடு என்ற கோணத்தில் இந்த இரு நிகழ்ச்சிகளும் எப்பொழுதும் ஆராயப் பட்டுக் கொண்டே இருக்கும். 


இன்னொரு சுவாரஸ்யமான தொடர்பு... இராமாயணத்தில் இந்திரன் மகனைக் கொல்ல சூரியன் மகனுக்கு உதவுகிறான் இராமன். இந்தக் கணக்கை நேர் செய்ய  மகாபாரதத்தில் சூரியன் மகனைக் கொல்ல இந்திரன் மகனுக்கு உதவுகிறான் கிருஷ்ணன். 

கர்ணன் என்ற ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் துரியோதனன் இந்த அளவு ஆடியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். சகுனியையோ தம்பியரையோ நம்பி இவ்வளவு பெரிய இக்கட்டில் அவன் காய் நகர்த்தி இருக்கவே முடியாது. 
கர்ணனின் வீரம், அஸ்திர ஞானம் மற்றும் திறமை பற்றிய பல விளக்கவுரைகள் உண்டு. அவனுடைய வில் விஜயம் என்னும் வில். பரசுராமரின் வில். 

பரசுராமனின் இன்னொரு வில் மிகப் புகழ் பெற்றது, அதன் பெயர் கோதண்டம். விஷ்ணுவின் வில் எனப்படும் அது பரசுராமனால் இராமனுக்கு அளிக்கப்பட்டது. 
பரசுராமர் தன்னுடைய அனைத்து ஆயுதங்களையும் அஸ்திரங்களையும் துரோணருக்குக் கொடுத்தார். 

பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் அவரே குரு. ஆக பரசுராமர் இதன் மூலம் மீண்டும் ஷத்ரிய குல அழிவிற்கு வழி வகுக்கிறார். அவரின் சீடர்கள் இன்றி மகாபாரதமே இல்லை.அவரின் பரசு ஓய்வெடுத்தாலும் ரவுசு தீரலையே!!! 


கண்ணன் கீதையில் கர்மங்கள் தன்னை தீண்டாது என்று அர்ஜூனனுக்கு உரைக்கிறான். அப்படி இருக்கையில் கர்ம வசத்தினால் வேடன் கையால் அடிபட வேண்டிய அவசியம் என்ன? கடந்த பிறவியின் கர்மங்களை இந்த பிறவியில் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் பரமாத்மாவான கண்ணன் ஏன் வாலி வதத்திற்கு இந்த பிறவியில் பலனை அனுபவிக்க வேண்டும்?  கண்ணன் நினைத்திருந்தால் வேறு வகையில் கூட புறப்பட்டு போயிருக்கலாம் அல்லவா? 


பரசுராமனும் அதே விஷ்ணுவின் அவதாரம்தானே!.. இராவணன் மூவரிடம் தோற்கிறான். 


1. கார்த்தவீர்யார்ச்சுனன் ( இவரும் விஷ்ணுவின் அவதாரம்) 
2. வாலி 
3. இராமன். 

கார்த்தவீர்யார்ச்சுனனை சாய்த்த பரசுராமரே இராவணனைச் சாய்த்திருக்கலாமே?  இன்னொரு அவதாரம் ஏன் அவசியமானது? 

1. பிரம்மன் தூக்கத்தில் தொலைத்த வேதங்களை மீட்க எடுத்தது இமைகளே இல்லா மீன் அவதாரம். 
2. அவசரத்தில் தவறுகள் செய்து பலமிழந்த தேவர்களுக்கு அமிர்தம் கடைய அமைதியே உருவான நிதானமான கூர்மாவதாரம்.
3. பூமியைக் காக்க சேற்றில் புரளும் வராக அவதாரம். 
4. மனித மிருகத்தை அழிக்க மிருக மனிதனாய் நரசிம்மம். 
5. கொடையாய் உயர்ந்தோனை குடையுடன் கூடிய குட்டையனாய் அடக்கியது . 
6. வெறிகொண்ட ஷத்ரியரை அழிக்க ஞானம் கொண்ட முனிகுமாரனாக பரசுராமன். 
7. பெண் பித்தனை அழிக்க ஏகபத்தினி விரதனாய் இராமன். 
8. முள்ளை முள்ளால் எடுப்பது போல சூதை சூதால் அழிக்கும் கண்ணன். 

இப்படி அவனது அனைத்து அவதாரக் காரணங்களிலும் ஆற்றும் காரியத்திற்கேற்ப தன்னை தகுதிபடுத்திக் கொள்கிறான் இறைவன். 

தன்னுடைய எந்த காரியத்திற்கும் ஒரு காரணத்தை இணைத்தே காட்டுகிறான் அவன். இறைவனும் அவனுரைக்கும் தர்மத்திற்கு உட்பட்டவனே என்பதையே இது காட்டும். உலகில் எந்த மதத்திற்கும் இல்லா பெருமை, இறைவன் தானே தர்மப்படி வாழ்ந்து காட்டுவது என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு. உங்களில் நான் இருக்கின்றேன்.. உலகெங்கும் இறைவனே இருக்கிறான் என்ற தத்துவங்கள் இதனால் மட்டுமே நிலைபெறுகின்றன. 
இராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் இரண்டுமே முழு அவதாரங்கள் ஆகும். ஆகவே அவ்வவதாரங்களில் உண்டாகும் கர்ம வினைகளை தீர்க்க வேண்டியது அவருக்கும் கடமை ஆகிவிடுகிறது. 

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பது மாபெரும் தத்துவம். 

துன்பம் வரும் வேளையில் ஒரு நிமிடம் பொறுமையாய் சிந்திப்போம். இத்துன்பம் வரக் காரணம் எதோ கர்ம பலன். ஆக இத்துன்பத்தை அனுபவிப்பதால் ஒரு கெட்ட கர்மம் தொலைகிறது என எண்ணிக் கொள்ள வேண்டும். அப்பொழுது துன்பமே கூட கடவுளாய் தெரியும். சிரிக்க முடியும். 

மற்ற அவதாரங்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடையாது. பரசுராமருக்கு மரணமில்லை. எனவே இராமாவதாரத்தில் செய்த கர்மங்களை நீக்கிக் கொள்வது கிருஷ்ணனுக்கு சரியானதே. 

இறைவனும் தர்மத்திற்கு கட்டுப்பட்டவனே என்ற எண்ணமே தர்மத்தின் மீதான மதிப்பை வளர்க்கும். 
நமது புராணங்களைப் படித்தால் ஒன்று புரியும். 

"வரம் வாங்காத அசுரனும் இல்லை" 

"சாபம் வாங்காத தேவனும் இல்லை" 


இருந்தும் அசுரர் அழிய  - அகங்காரமும்  

தேவர்கள் வாழ - தவறுணர்ந்து திருந்தலும்  

காரணம் என்பதே புராணங்கள் சொல்லும் கருத்து. 

Tuesday, July 12, 2016

காற்று வெளியிடை!!!

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்


                                                                       (காற்று)நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் - நினைப்

பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்

தீயினிலே வளர் சோதியே - என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

                                                                         (காற்று)


காற்றின் குணங்கள் பல.


அதை ஸ்பரிசத்தால் மட்டுமே உணர முடியும். கையில் பிடித்தால் நழுவி விலகும்.


காற்றில் தென்றலும் உண்டு புயலும் உண்டு.பல்வேறு சுழிவுகள் தோன்றி மறையும் அற்புத விந்தை உலகம் காற்றுவெளி.

கையில் பிடித்தால் நழுவும் இடை கொண்ட கண்ணம்மா.


இழுத்து அணைக்கிறார், இலாவகமாய் அவள் இடை பிடியிலிருந்து நழுவுகிறது.


நீரிடை என்று சொல்லி இருக்கலாமே ஏன் காற்று இடை என்று சொன்னார்?


நீருக்கு கொள்ளும் கலன் தேவை. காற்றுக்குத் தேவையில்லை.

நீர் நீ குடித்தால்தான் உன்னுள் புகும். காற்று தன்னிஷ்டப்படி நுழைந்து விடும்.


நீரிலிருந்து ஒதுங்கி விடலாம்.. காற்றிலிருந்து இயலாது

அவர் நினைவு முழுதும் ஆக்ரமிருத்திருக்கும் காற்று அவள் இடை.


அவள் இடையில் முகம் புதைந்த அவர் சொல்லுகிறார்.


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.


இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.


தன் காதலியுடன் கொண்ட உறவினை எண்ணிப்பாடுவது.


காற்று மட்டுமே நமக்கு இடையிலிருக்க உன்னுடன் கொண்ட காதல் உறவினை எண்ணிப்பார்க்கிறேன்.

அமுது ஊறுகின்ற இதழ் அவளுடையது.


இதழமிழ்தத்தமிழ்ந்தமிழ்ந்து வழியும் தமிழமுதம்.

அவள் விழிகள் ஊறிய நிலவு.


நிலவை எடுத்து அமிழ்தில் அமிழ்த்தி ஊறவைத்ததைப் போன்ற விழிகள்.அவள் கண்மூடினால்

அது அமாவாசை.

மெல்ல விழி திறந்தால்

மூன்றாம் பிறை.

அரைக்கண் என்றால்

அஷ்டமி.

விழி விரியப்

பார்த்தால் பௌர்ணமி.அரைக்கண்ணை விட சற்றே

அதிகம் திறந்து

நாணினால் அவள்

நவமிஉன்
ஓர் விழி
மூடித் திறப்பதில் ஒரு மாதம்
ஓடிவிடுகிறது
தூய பொன் பத்தரை மாற்று.அவள் மேனி தூயபொன் இல்லையாம். பத்து மாற்றுதான் அவள் மேனி. ஏன்?பத்தரை மாற்றுப் பொன் உறுதியற்றது. அதில் வடிவு அமைவது சிரமம்.பத்து மாற்றென்றால் அது 22 கேரட் தங்கம் போல. அதனால் உறுதியான கட்டான மேனி அமையும்.வையம் என்றால் உலகம் என்று பொருளென்றாலும், வையம், அதாவது வைக்கப்படும் இடம் என்று பொருள்.

அவள் அவரின் உலகம். அவள் மீது அவர் படர்ந்திருக்கும் வேளையில்.அந்த நிலவுக்கண்கள், அமுத இதழ்கள் காற்றிடை ஆகியவை வேறு நினைவே வராமல் அமுதுண்ணும் அமரனாகவே அவரை மாற்றி விடுகிறதாம்.கண்ணம்மாவே நீயே எனது இனிய உயிர்எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.உன்னையே பெரும் பொற்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.எந்தன் வாயினிலே அமுதூறுதே...முதல் பத்தியில் அவள் இதழ் அமிழ்த ஊற்று என்றவர் இப்பத்தியில் தன் வாயில் அமிழ்து ஊறுகிறது என்கிறார். மறைமுகமாக தான் அவளின் இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்ததைச் சொல்கிறார்.கண்ணம்மா, கண்ணம்மா... கண்ணம்மா எனப் பலமுறைச் சொல்கிறார்.... பேர் சொல்ல அமுதூறுகிறது என தான் முத்தம் கொடுத்த சேதியை மறைக்க.


உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே


இந்த வரி மிக முக்கியம்.. உயிரைத் தீயாக உருவகப்படுத்துகிறார்.


சோதி என்றால் அதுவும் தீதான், அப்படியென்றால்?


உயிர் தீயென்றால் தீ உயிர்தானே.


உயிரின் உயிரே உயிரின் உயிரே .... என்று எளிமையாகச் சொல்லலாம்.தீ எரிக்கும் தன்மை உடையது.. எப்படிப்பட்ட எரித்தல் என்றால் அதற்கு எல்லாம் சமம். எதையுமே எரிக்கும். காதலும் அப்படியே. அதற்கு யாரைப் பீடிக்கிறோம் என்ற வித்தியாசமில்லை.காதல் பிடித்தவனின் உயிரை அது எரிக்கும்.சிந்தனை என்பது யோசனை.


சித்தம் என்பது இறுதியான உறுதியான முடிவு.


உன்னைத் தவிர எதையுமே சிந்திக்க முடியவில்லை. உன்னை மட்டுமே அடைய விரும்புகிறேன் என்கிறார் கண்ணம்மாவை நோக்கி.


இப்போ கண்ணம்மாவை கண்ணனாக்கி விளக்கம்.


உலகமே கண்ணனின் வயிற்றில் உள்ளது என்கிறது விசுவரூப தரிசனக்கோலம்.


அப்படியானால் வயிற்றைச் சுற்றி அமைந்த காற்றுவெளிதானே கண்ணனின் இடையாக இருக்க முடியும்.


காதல் என்பது பரமாத்மா ஜீவாத்மா மீது கொண்டிருக்கும் பற்று.


காற்றையே இடையாகக் கொண்டக் கண்ணனே, பரமாத்மாவான நீ ஜீவாத்மாக்களின் மீதும் காட்டும் காதலை எண்ணி மகிழ்கிறேன்.


உன் வாயிலிருந்து வரும் சொற்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரத்துவம் தரும் அமிழ்தம். உன் கண்கள் அருள்பொழியும் ஈர நிலவு.


கண்ணனின் அவதாரம் பத்து. எனவே அவர் பத்து மாற்றுப் பொன். மாறுடும் பத்து அவதார உடல் கொண்டவன் அவன்.


அந்தக் கண்ணனிடம் பாரதியார் என்ன வேண்டுகிறார்.


இந்த பூமியில் நான் வாழும் காலம் வரை, என் நினைவு உன்னை விட்டு விலகாமல் இருக்க அருள் செய். உன் நினைவிலேயே திளைத்து, ஊறி, விண்ணுலகம் அடையும் போது உன்னுலகம் அடைய வை என்று வேண்டுகிறார்.

கண்ணனே நீயே எனது இனிய உயிர்.

எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.

உன்னையே பெரும்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.

கண்ணா, கண்ணா என்று அழைப்பது மிக இனிமையாக இருக்கிறது, அந்த நாமத்தின் இனிமையால் வாயினில் அமுதூறுகிறது.


இறைவன் ஆன்மாவுக்குள் ஆன்மாவாக இருக்கிறான் என்பதை உயிர்த்தீயினிலே வளர் ஜோதியே சொல்கிறது.


கண்ணனே சிந்தனை முழுதும் வியாபித்து இருக்கிறான். கண்ணனே அவரின் அடைய விரும்பும் சித்தமாக உறுதிப் பொருளாகவும் இருக்கிறான்.


ஆக கண்ணன் - கண்ணம்மா எதைக் கருப்பொருளாக எடுத்தாலும் பொருந்துவதாக இந்தப் பாட்டு இருக்கிறது.