Tuesday, August 8, 2017

தினம் ஒரு திருமந்திரம்பதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்பதிவிறக்கம் செய்ய அட்டைப்படம் மேல் சொடுக்கவும்
பிக்பாஸ் ஒரு உருவக உலகம்
பிக்பாஸை வீடு ஒரு உருவக உலகம்.

இதில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகில் சிலர் இருந்தாலும் உலகின் வெளியே பல தேவர்களாகிய மக்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் இந்த சிறு உலகில் உள்ளோருக்கான விதியை நிர்ணயிப்பவர். அவரின் விதிப்படியே நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த விதியினால் பல செயல்களை செய்ய வேண்டியதாகிறது.

தேவர்கள், ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தச் சிறு உலகில் உள்ளவர்கள், தங்களுடன் உள்ள சில பேரை சந்தோஷப்படுத்தி தங்கள் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திருப்தி செய்ய வேண்டியது தங்களை கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மட்டுமே. அவர்கள்தான் எத்தனை எதிர்ப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அங்கே உறுதுணையாக நிற்பதைப் போல.

ஒருவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது தேனொழுகப் பேசுவதும் பின்னணியில் கழுவிக் கழுவி ஊத்துவதுமான இரட்டை வேடங்களை தேவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீ உனக்கும் உண்மையாக இல்லை. தேவர்களுக்கும் உண்மையாக இல்லை.

"ஒரு தலைவனாகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க கூச்சமாக இருக்கிறது", இந்த வரிக்கு பதிலாக "நீங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்" என்ற வரி பதிலாக வந்த போது ஆளாளுக்கு ஒரு விதமாய் புரிந்து கொண்டார்கள்.

கமல் இங்கே கிண்டல் அடித்தது சக்தியை அல்ல. அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்க கூச்சப்படுவதில்லை என அரசியல்வாதிகளை மட்டுமே Nacl நக்கலடித்தார். தவறு செய்ய கூச்சப்படும் நல்ல தலைவர் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்கள்தான் அரசியலுக்கு வரணும் என நல்ல விதமாகத்தான் சொன்னார். நம் புரிதல் அரசியல் = கெட்ட வார்த்தை. அதனால் சக்தியைத் திட்டியதாக எடுத்துக் கொள்கிறோம்.

ஆமாம், கமல் யார் இந்தச் சின்னஞ் சிறு உலகத்தில்?

கமல் ஒவ்வொருவரின் மனசாட்சி. மனசாட்சி இடித்துரைத்தல் என்பது வலிக்கத்தான் செய்யும். கமல் என்னும் மனசாட்சி தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனைத்து செயல்களையும் எடைபோட்டு விமர்சிக்கத்தான் செய்யும். மன்சாட்சியை எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அடக்க முடியாது. மனசாட்சி உறுத்துகிறது என்றால் தவறு செய்கிறோம் என்று பொருள்.

ஓவியா, தேவர்களை திருப்தியுடன் வைத்துக் கொண்டார். அவரின் நிறை குறைகளுடன் தேவர்கள் திருப்தியுடன் இருந்து அவரை ஆதரித்தார்கள். சிறு உலக மாந்தரைத் தவிர வெளி உலகம் இல்லை, நாம் நாமினேட் ஆகாமல் இருந்தால் போதும் என சிறு உலகத்தில் தங்களை நிலைபடுத்திக் கொள்ள சிந்திக்கும் அந்த மனிதர்கள் தங்கள் செயல்களால் சம்பாதிக்கும் பாவங்கள் "இன்னொரு உலகில்" அவர்களின் விதியை நிர்ணயிக்கப் போகிறது. 

வையாபுரி என்ன அழுதாலும் அவர் விதி முடியப் போவதில்லை. பரணி தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் மனசாட்சி, பரணியின் தற்கொலைக்கு நீயும் காரணம்தானே என உறுத்திக் கொண்டிருக்கிறது.

மனம் - சொல் - செயல் மூன்றிலும் உண்மையாக தங்களை தேவர்வசம் ஒப்படைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மனசாட்சிக்கு மரியாதை கொடுத்தால், அது காட்டும் சரியான வழி புலப்படும்.

Thursday, August 3, 2017

தாமரையின் புத்தக வெளியீடு!!!
சில மாதங்களாகவே என் எழுத்துக்களைக் கோர்த்து, புத்தகமாக்கி வெளியிட வேண்டுமென மிக ஆர்வத்துடன் இருந்தேன். அதன் பயனாக, 07-08-2017 ஆவணி அவிட்டத் திருநாளில் என்னுடைய படைப்புகளில் இரண்டை அமேசான் கிண்டில் வழியாக மின்பதிப்பாக பின்வரும் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை வாங்க விரும்புவோர், புத்தக அட்டைப் படத்தின் மீது சொடுக்கி, அமேசான் கிண்டில் பதிப்பை பதிவிறக்கிக் கொள்ளலாம். 


புத்தகங்களின் அறிமுகங்கள் இதோ 👇இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்திருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவம், அதன் பொருள், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டது ஆகும். 

மதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். அவை வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.

அந்தச் சடங்குகள் அனைத்தையும் விளக்குவதே இந்தப் புத்தகம்.

தினம் ஒரு திருமந்திரம் 
பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள்திருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.


எனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்.

திருமூலர், என்ன சொல்லி இருக்கிறார்? ஏன் சொல்லி இருக்கிறார்? எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.

இந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.

Sunday, March 5, 2017

ஜோதிடமும் சோதனையும்
மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் போன்றவற்றை சிறுவயதில் நான் தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி (சேலம்) அவர்களின் பிரசங்கம் மூலமே முழுமையாக அறிந்து கொண்டேன். அவரின் விரிவான விளக்கமான அலசல்களே புராணங்களின் பால் என்னை கவர்ந்திழுத்தவை. அவரை எனது முதற்குரு என்று சொன்னாலும் மிகையாகாது.

பிப்ரவரி 8 ஆம் தேதி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் கும்பாபிஷேகம் என்றால் என்ன? அதை ஏன், எப்படி, எதற்கு செய்கிறோம் என விளக்கவுரையுடன் ஒவ்வொரு சடங்குகளையும் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்,

ஒரு இடைவேளை கிடைத்தபோது என்னை அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். அவரின் மருமகன் புலவர் கி.பிள்ளார் செட்டி அவர்கள் என் ஆசிரியர் என்பதால் இன்னாரின் மாணவன் என எளிதில் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. பின்னர் அவர் எழுதிய தேவாங்க சிந்தாமணி பற்றிய எனது நன்றியினைச் சொல்லிக் கொண்டேன். வாழ்வில் பல கட்டங்களில் அந்நூல் எனக்கு வழிகாட்டியாக இருக்கிறதென்பதால் அதற்குரிய நன்றியை தெரிவித்துக் கொண்டு தற்பொழுது அவர் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் என விசாரித்தேன்.

“தேவாங்க பாரதம்” என்ற நூலை எழுதுவதில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார். மகாபாரதத்தின் மூல ஓலைச் சுவடிகள் சேலத்தில் ஒரு மடத்தில் இருப்பதாகவும், அதைக் கொண்டே இராஜாஜி தலைமையில் பலர் ஒன்றிணைந்து ஆராய்ந்து கும்பகோணம் மஹாபாரதப் பதிப்பு தொகுத்து வெளியிடப்பட்டதாக சொன்னார். அந்த மூல ஓலைச் சுவடிகளின் ஆய்வில் அவர் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும், அதில் இருக்கும் எங்கள் குல முன்னவரான தேவலர் மற்றும் தேவாங்கர் குலச் சிறப்புகளை வெளிக் கொணர ஆய்வுகள் செய்து கொண்டிருப்பதாக விவரித்துக் கூறினார்.
அப்பொழுதுதான் நான் செய்த சிறிய ஆய்வான பாரதப் போர் நடந்தது ஆடி மாதமா? மார்கழி மாதமா? ஓர் ஆய்வு. என்ற கட்டுரையை அவரிடம் கொடுத்து அவர் கருத்தை அறிய வேண்டும். நான் எடுத்தாண்ட தகவல்கள் மூல ஓலைகளில் எப்படி உள்ளன? என்று அறிய வேண்டிய ஆவல் உண்டானது. அவரிடம் விஷயத்தை விவரித்தேன்.

அவர் சொன்னது மார்கழி மாதத்தில் தான் போர் நடந்தது என்று பண்டிதர்கள் சொல்லி இருப்பதைச் சொன்னா. நான் என் கட்டுரையின் கோணமான கிரக நிலைகளைப் பற்றி விளக்கினேன். சூரிய / சந்திரன் ரோகிணியில் இருக்கும் பொழுது வரும் அமாவாசை வைகாசியில் தானே வரும் என்பதையும், செவ்வாய் வக்கிர கதி விளக்கம், மற்றும் சுக்கிரன் நிலை பற்றியும் விளக்கினேன். பிறகு நான் எடுத்துள்ள ஆதாரம் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் "மஹாபாரதம்" ஆங்கில மொழி பெயர்ப்பு, அதன் தமிழாக்கத்தில் ஈடுபட்டுள்ள அருட் செல்வப் பேரரசு பற்றியும் விளக்கினேன். அதன் பின்பு கிருஷ்ணர் தூது சென்ற ஸ்லோகத்தின் பொருள்படி கிருஷ்ணர் கார்த்திகை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்டார் என்று வருகிறது. ரேவதி நட்சத்திரம் கார்த்திகை மாதம் வளர்பிறை 12 ஆம் நாள்தான் வரும். அந்தக் கணக்குப்படி பார்க்க, கிருஷ்ணன் தூது நடக்க 13 + 8 நாட்களை கூட்டினாலேயே மார்கழி பிறந்து விடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதன் பின்னர் கிருஷ்ணர் திரும்பி போர் ஆரம்பித்திருந்தால் போர் தை மாதம் அல்லவா ஆரம்பித்திருக்கும் என கொக்கியைப் போட்டேன்.

அதன் பின்னர் பீஷ்மர் சொன்ன ஸ்லோகத்தைக் குறிப்பிட்டேன்
AshtaPanchasatam ratrya sayana syasyama gatha Sarashu nisitagresu yatha varsha satam tatha Tribhaga seshah pakshyam suklo

அஷ்ட - எட்டு பஞ்ச - ஐந்து சதம் - நூறு

158 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்ததாக பீஷ்மர் சொல்லுகிறார் என்று எனக்குப் படுகிறது, ஆனால் மொழி பெயர்ப்பாளர்கள் ஏன் 58 நாட்கள் என்று சொல்லுகிறார்கள் எனப் புரியவில்லை என்றும் கேட்டேன்.
அப்பொழுது அவருக்கு ஓய்வு நேரம் முடிந்து விட தன் பிரசங்கத்தைத் தொடரச் சென்றார்.

பிரசங்கம் செய்ய ஆரம்பித்தவர், எடுத்தவுடனேயே, தன்னுடைய மருமகன் புலவர் கி,பிள்ளார் செட்டி அவர்களின் மாணவன் நான் என்பதைப் பொதுவில் அறிமுகப்படுத்தி, பின்னர் இன்று இந்த சிறுபிராயத்தவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது, நிறைய ஆணித்தரமான வாதங்களுடன் ஜோதிடம், கிரக நிலைகள் எல்லாம் சொன்னார். நான் வயதானவன். என்னால் இவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா என பீடிகைப் போட்டுவிட்டு...


இப்பொழுது நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தார்,
ஒரு காலத்தில் ஒரு நாட்டு அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த நாட்டில் இருந்த மிக உயர்ந்த ஜோதிட ஆசானை அழைத்த மன்னன், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்லச் சொன்னான்.


ஜோதிடர் சொல்லிவிட்டுப் போன பிறகு மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதே நேரத்தில் பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் இந்த யோகம் இருக்குமல்லவா? அவை தன் மகனின் பாதையில் குறுக்கிடக் கூடாதே என்று கவலை வந்தது. உடனே அந்த நேரத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்.

ஆசான் ஜாதகம் கணித்துவிட்டு மன்னனிடம், மன்னா இந்த உங்களுடைய மகனுக்கு ஒரு யோகம் இருக்கிறது. இவன் உங்களைப் போல பலமடங்கு உயர்ந்தவனாக ஒரு பேரரசசானகத் திகழ்வான் எனச் சொன்னார்.
மொத்தம் ஐந்து வேறு குழந்தைகள் பிறந்திருந்தன. நான்கு குழந்தைகளை வீரர்கள் கொல்ல, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அதன் தந்தை தலைமறைவாக அண்டை நாட்டுக்கு தப்பியோடி விட்டான்.


இத்தோடு கதையை நிறுத்திய அவர் இப்பொழுது தாமரைச் செல்வனுக்கு இந்தக் கேள்வி...


இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஓடின. ஜோதிடர் சொன்ன மாதிரியே மன்னன் மகன் பேரரசன் ஆகிவிட்டான். ஜோதிடரின் சீடனுக்கு தப்பிப் போன அந்தக் குழந்தை என்ன ஆகியிருக்கும் என யோசனை வந்தது. ஜோதிடரிடம் அவன் வினவ ஜோதிடரும் அவனும் தீவிரத் தேடலின் மூலம் அந்தக் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவனைப் பார்க்கப் போனார்கள்.
அங்கே அவன் நாடக மேடையில் ஒரு அரசனாக நடித்துக் கொண்டிருந்தான், சகல பரிவாரங்களோடு.


இரவு வீட்டுக்குத் திரும்பும்போது இல்லாள் உங்களுக்கு இது அவசியமா? என்று கேட்க, நான் விளக்கினேன்.ஒரே நேரத்தில், ஒரே கோள் அமைப்புகளுடன் பிறந்த அவர்களில் ஒருவன் நிஜ ராஜாவாகவும் இன்னொருவன் நாடக ராஜாவாகவும் இருக்கிறான். அப்படியானால் அவன் விஷயத்தில் யோகம் ஏன் பலிதம் ஆகவில்லை. அல்லது அந்த ஜோதிடமே தவறா? இந்தக் கேள்விக்கான பதிலை நாளை எனக்கு அவர் தரவேண்டும் என விண்ணப்பித்தார்.
சட்டென்று நானும், உங்களின் உத்தரவு நாளை பதில் தரவேண்டும் என்பதால் நாளை பதிலுடன் வருகிறேன் என்று பணிந்தேன்.
இவரிடம் தாங்கள் முனைவர் பட்டம் பெறுவதற்காக பலர் வந்து உதவி பெற்று பட்டம் பெற்று உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் செய்நன்றி யறியா பலரை இவர் பார்க்க நேர்ந்ததைப் பற்றி தன்னுடைய புத்தகங்களில் எழுதி இருக்கிறார். ஒரு பெரிய விசயத்தைப் பற்றிப் பேசும் பொழுது அவர் என்னைப் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புகிறார் என நினைக்கிறேன். எனக்கு அப்பொழுதே பதில் தெரியும் என்றேன்.

என்ன பதில் என்பதையும் என் மனைவிக்கு விளக்கினேன். மனைவி அப்படியானால் உடனே பதில் சொல்லி இருக்கலாமே என்றாள்.
நாளை இக்கதையை அவர் மீண்டும் சொன்னால், அவர் விருப்பப்படியே பதிலளிப்பேன் என்றேன்.

அவர் எனக்கு ஒரு நாள் அவகாசம் அளித்திருக்கிறார். அப்பொழுதே நான் பதில் அளித்தால் அது முரட்டுத்தனமாகி விடும். அவர் நாளை பதில் அளிக்கச் சொல்ல சரியான காரணம் இருக்கிறது, நாளை கும்பாபிஷேகம் நடக்கும். நாளை ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். அந்நேரத்தில் அந்தப் பதில் வரவேண்டும் என்பது அவரின் எண்ணமாகவும் இருக்கலாம் அல்லது ஆண்டவன் சித்தமாகவும் இருக்கலாம்.


மறுநாள் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு அவரது பிரசங்கம் மீண்டும் ஆரம்பமானது. நான் ஒரு ஓரத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரியின் அற்புதங்கள் என்ற அந்தப் பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு இடத்தில் நிறுத்திய அவர் மீண்டும் அந்தக் கதையைக் கூறினார்.
ஜாதக யோகம் மெய்யா? பொய்யா? கதையைக் கூறி விட்டு இதை நமது அம்மனின் அருளுக்குப் பாத்திரமான நண்பர் தாமரையிடம் விடுவிக்கக் கேட்டிருந்தேன் என்றார்.

நான் எழுந்து முன்னே வந்தேன். ஐயாவின் உத்தரவிருந்தால் விடுவிக்கக் காத்திருக்கிறேன் என்றேன்.

அவர் மீண்டும் கூட்டத்திற்கு என்னை அறிமுகம் செய்தார். தன்னுடைய மருமகனின் மாணவன் என்று சொல்லி ஒலிவாங்கியை என்னிடம் ஒப்படைத்தார்.

நான் பேச ஆரம்பித்தேன்.


“ஐயா நான் உங்கள் மருமகனின் மாணவன் என்பதை விட, இன்னொரு சிறந்த அறிமுகம் உண்டு எனக்கு, நான் சிறுவயதில் இருந்தே உங்கள் பிரசங்கங்கள் கேட்டு வளர்ந்தவன்.


1977 ஆம் டிசம்பர் மாதம்.. மார்கழி காலை பிரசங்கத்தின் போதுதான் முதன் முதலாக உங்கள் குரலைக் கேட்டேன்.


ஆழியில் புக்கு முகர்ந்து கொடு.. அதாவது கடலில் இறங்கி அதில் ஒரு குவளையேனும் அள்ளி உலகிற்குக் கொடு என்பதையே சிரமேற் கொண்டு, “வைணவக் கடலாகிய” உஙகளிடம் பெற்ற சிறு அறிவு எனக்கு தெளிவிப்பதைச் சொல்கிறேன்.


ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்... ஆழியில் புக்கு முகர்ந்து கொடு என்ற உங்கள் குரல் இன்னும் காதில் அப்படியே இருக்கிறது.


இந்தக் கதையை கேள்விகளின் மூலமே அலசலாம்.

ஒரு நேரத்தில் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஆறும் வெவ்வேறு இடத்தில், குலத்தில், செல்வாக்கில் பிறந்தன.

ஜாதகம் மட்டுமே எல்லாம் என்றிருந்தால் ஸ்தான பலங்களின் படி எல்லா குழந்தைகளும் அரச குடும்பத்தில் மட்டுமே அல்லவா பிறந்திருக்க வேண்டும்? ஏன் அப்படி இல்லை?


உலகில் ஒரே சமயத்தில் பல்வேறு ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பிறக்கின்றன. இதற்குக் காரணம் என்ன?


ஆக முக்கியக் காரணம் என்ன வென்றால் அது கர்மபலன் ஆகும். கர்மபலனின் படியே ஒருவன் அரச குடும்பத்திலும் பிறர் பிறகுடும்பங்களிலும் பிறந்தனர்.


ஆக ஜாதகமே, கிரக நிலைகளே எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் என்ற வாதம் அதனோடே முடிந்து போகிறது.
அப்படியானால் கிரகங்கள், கிரக நிலைகள், ஜாதகம் இவற்றின் பலன் என்ன என்பது என்பது அடுத்த கேள்வி.


ஜாதகன் தன் பிதாவை விட 10 மடங்கு சிறப்புறுவான் என்பான். இது பித்ருஸ்தானத்தை விட ஜென்மஸ்தானம் வலிமையாக விளங்குவதைக் கொண்டு அறியப்படுகிறது.


கிரகங்கள் உபகாரணமாக அமைகின்றன, கர்மபலனை அடைய அவை உதவுகின்றன அவ்வளவே. உங்கள் கர்மபலன்கள் மூல காரணம். கிரகங்கள் அவற்றின் உபகாரணம்.
இதை விளக்கவே இந்தக் கதை உதவுகிறது, இந்தக் கதையின்படி யோகம் எப்படிப் பட்டது என்றால்,
பிதாவின் நிலை 10 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 10 = 100
இதைக் கணிதத்தைக் கொண்டு எளிதாக விளக்கலாம்.


மிச்சம் நான்கு குழந்தைகளின் அப்பாக்கள் அரசனுக்காக உயிர்விடும் / உயிர்விட்ட சிப்பாய்கள். ஆக அவர்களின் குழந்தைகளும் பேரரசு ஆசை கொண்ட அரசனுக்காக பிறந்த உடனேயே உயிர் கொடுத்தார்கள்.

பிதாவின் நிலை 1 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 1 = 10
பிதாவின் நிலை 0 என்றால், ஜாதகனின் உயர்வு = 10 x 0 = 0
அரசனின் மகன் 10 மடங்கு உயர்ந்து பேரரசன் ஆனான்.
ஆக கர்மபலனின்படி 6 குழந்தைகள் பிறக்கின்றன.
நாடக ராஜாவின் அப்பா, சிறு வேஷங்களில் நடிக்கும் நடிகன். அவன் மகனும் 10 மடங்கு உயர்ந்து ராஜபார்ட் ஆனான்.


ஒரு சின்ன இழை இத்தனைச் சம்பவங்களையும் கோர்த்து இருக்கிறது. அரசனுக்கு சந்தேகம் வந்தபோது அவன் அதை உடனடியாக ஜோதிடரிடம் அந்தச் சந்தேகத்தைக் கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.


ஆக கிரக பலன் என்பது நாம் எப்படி நமது கர்ம பலன்களை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது. அது நமது கர்ம பலன்களை காட்ட முடியாது. அதை ஜோதிடர்கள் குறிப்பாலும் தன் ஞானத்தாலும் மட்டுமே அறிய முடியும்.
இப்பொழுது இன்னும் சற்று ஆழ நோக்குவோம்.
தன்னைப் போலவே இன்னொரு அரசனின் மகன் மட்டுமே இப்படி ஒரு அமைப்புடன் பிறந்திருக்க முடியும் என அவன் எண்ணி இருக்கலாம் எண்ணவில்லை. அப்படி எண்ணி இருந்தால் மற்ற நாட்டு மன்னர்களுடன் ஆரம்பத்திலேயே பகை வ ஏற்பட்டு அரசனின் மகன் இறக்க நேரிட்டிருக்கலாம்.


கீதையில் ஞான யோகத்தை விட எளிதானது கர்ம யோகம் என்கிறான் கண்ணன். காரணம் இந்த மாயைதான்.


அதையும் விட்டு தன் மகனின் எதிரிகளைக் களைந்து விட வேண்டும் என முடிவெடுத்தான் அல்லவா? அதுதான் மாயையின் விளைவு. அந்த ஒரு சின்ன மாயையால் ஆறு ஜாதகர்களும் அவர்களுக்கு உரிய பலன்களைப் பெற்றார்கள்.
ஆக அந்த யோகம் ஆறு பேர் விஷயங்களிலும் பலித்தது. கிரகபலன்கள் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒரே மாதிரியாகவே இருந்தன. இந்தத் தோற்ற மயக்கம் நமக்குப் பல நேரங்களில் நடக்கிறது.
நாம் செய்யும் ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பது இம்மாயையால் நமக்குத் தெரிவதில்லை.

அதனாலேயே கர்மத்தை மட்டுமே செய் என்கிறான் பகவான். நம் மனமெனும் தேரின் சாரதியாக மனசாட்சியாக கண்ணனே வீற்றிருக்கிறான். அந்த மனசாட்சி சொல்வதை மட்டுமே கேட்டு அந்தச் செயல்களைச் செய். அவற்றால் உண்டாகும் பலன்களைப் பாராதே. அவை மாயையின் காரணமாக நல்லவையாகவோ அல்லது கெட்டவையாகவோ தோன்றலாம். அதன் விளைவு உனக்கு இழப்பாகவோ அல்லது இலாபமாகவோ தோன்றலாம். ஆனால் அவை அத்தனையும் மாயை. பலரின் கர்மபலன்களை பிணைக்கும் மாயவலை. அதில் மனசாட்சியில் அமர்ந்த ஆண்டவனின் சமர்ப்பணத்திற்கு உன்னை ஆட்படுத்திக் கொள். உனது கர்ம வினைகள் அத்தனையும் தானே அற்றுப் போய் அவன் விருப்பப்படி அவனடி சேர்வாய்,

ஆக இக்கதை எனக்குத் தெளிவாக்கிய நீதி

கிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.

ஆகவே நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம். அதுதான் உய்ய ஒரே வழி...அத்தனைக் கர்மங்களையும் அது தொலைத்து முக்தி அளிக்கும் எளிய வழி அதுவே”


விடையைச் சொன்ன பிறகு ஐயா தன் உரையைத் மீண்டும் தொடங்கினார்..

வாதம் என்று ஒன்று உண்டு.. விதண்டாவாதம் என்று ஒன்று உண்டு..
வாதம் என்றால் சத்தியம் வெளிப்படும். நான் எழுப்பிய கேள்விக்கு கி்ட்டத்தட்ட சரியான விடை அளித்து தான் விதண்டாவாதி அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் தாமரைச் செல்வன்,

விதண்டாவாதம் என்றால் சண்டை வெளிப்படும்
ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று ஐந்தாம் இடத்தைச் சொல்லுவார்கள். லக்கினத்தில் இருந்து ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியம் எனப்படும் . இந்த ஸ்தான பலம் நோக்கப்படும். ஜன்ம ஸ்தானத்தின் பலமும் நோக்கப்படும்.

இதே போல் ஒன்பதாமிடம் என்பது ஒன்பதாம் பாவத்தை பிதா(தகப்பனார்) ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும்.
இந்த யோகம் பலனளிக்க ஜென்ம லக்ன பலமும், பூர்வ புண்ணிய பலமும் தேவைப்படுகிறது. அப்பலன் இல்லாவிடில் யோகம் பலனளிக்காது என யோகங்கள் பற்றிய தன் விளக்கத்தையும் அளித்தார்.

பத்தாம் பாவத்தை ஜீவன ஸ்தானம், கர்ம ஸ்தானம், என்று சிறப்புடன் அழைக்கப்படும். இந்த பத்தாம் பாவம் அமைந்த ராசியதிபதி கர்மாதிபதி என்று அழைக்கப்படுவார்.
இந்த ஒன்பதாம் இடம் மற்றும் பத்தாம் இட அமைப்பினால்தான் இந்த யோகம் உண்டாகிறது.
அவர் நினைத்திருந்தால் என்னை தவிர்த்திருக்கலாம். எதையாவது சொல்லித் தட்டிக் கழித்திருக்கலாம். அல்லது என்னை பின்னர் வரச் சொல்லி இருக்கலாம்.

அதன் பிறகு பிரசங்கம் முடிந்த பின்னர், என்னை அழைத்து தன் முகவரியை அளித்து மூன்று மாதங்களுக்குப் பின் என் குறிப்புகளை கொண்டு வந்து அளிக்கச் சொன்னார்.
என்னைச் சோதித்ததும் அல்லாமல் எனக்கும் ஒரு அறிமுகத்தை உண்டாக்கித் தந்தார். தான் செலவிடும் நேரம் உரிய மதிப்பைப் பெறுமா என்பதையும் சோதித்துக் கொண்டார் என்றே கருதுகிறேன்.

கிரகங்கள் நமது வழியைத் தீர்மானித்தாலும் நமது இலக்கை நம் கர்மாவே தீர்மானிக்கிறது.

நம் மனத்தில் சாட்சி பூதமாக அமர்ந்திருக்கும் இறைவனின் வழிகாட்டுதல்படி வெற்றியோ, தோல்வியோ, நன்மையோ, தீமையோ கர்மங்களை தயங்காமல் விருப்புடன் செய்வோம்.

Sunday, January 15, 2017

கேபிடலிஸம், சோஸியலிஸம், கம்யூனிஸம்

ஒரு மலை இருந்தது. அந்த மலைக்கு மேல் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் ஒரு ஏரி இருந்தது. மக்கள் தினமும் அந்த ஏரிக்கு தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். ஒரு முறை சென்று வர 30 நிமிடம் ஆகும்.

ஊரில் இருந்த ஒருவன் யோசித்தான், சில வருடங்கள் கஷ்டப்பட்டு மலையைக் குடைந்து நீரை கிராமத்தின் பக்கம் திருப்ப ஒரு சுரங்கம் தோண்டினான். இப்பொழுது நீர் கிராமத்துக்கு அருகில் ஒரு வெட்டவெளியில் குளமாகியது. பிறகு பெருகி ஒடி புது நீரோடை உண்டானது.

சுரங்கம் வெட்டியவன் நீரை விற்க அனுமதி வாங்கினான்.

நீரின் விலையை எப்படி நிர்ணயிப்பது?அதற்காக அவன் ஒரு கணக்கு போட்டான்.

ஒரு முறை தண்ணீர் எடுத்துவர 30 நிமிடம் ஆகும். ஒருமுறைக்கு இரு குடங்கள் தண்ணீர் எடுத்துவர முடியும். ஆக 15 நிமிடம் ஒரு குடத்திற்கு.

ஒரு மனிதனின் சராசரி வருமானம் 8 மணி நேர உழைப்பிற்கு 160 ரூபாய். அதாவது மணிக்கு 20 ரூபாய். 15 நிமிட நேரத்திற்கு 5 ரூபாய்.

ஆக நீரின் தற்போதைய விலை ஒரு குடம் 5 ரூபாய்.

எனவே தன்னுடைய குளத்திலிருந்து எடுக்கும் நீர் குடம் 3 மூன்று ரூபாய் என நிர்ணயித்தான்.

மக்களும் அவனின் விளம்பரத்தில் மயங்கி குடம் 3 ரூபாய்க்கு வாங்கத் தொடங்கினர்.இதைக் கண்ட இன்னொருவனுக்கு தானும் ஒரு சுரங்கம் வெட்டவேண்டும் எனத் தோன்றியது.

அவன் இன்னும் கொஞ்சம் தாழ்வாக வரும்படிக்கு தன் சுரங்கத்தை வெட்டி நீரை கிராமத்தின் இன்னொரு பக்கம் சேமித்தான். அவன் குடம் நீர் இரண்டு ரூபாய்க்கு விற்கத் தொடங்கினான். அதனால் முதலாமவனும் விலையைக் குறைக்க வேண்டியதாயிற்று.இதில் நல்ல இலாபம் இருப்பதைக் கொண்ட இன்னும் சிலர் தாங்களும் சுரங்கம் வெட்ட முனையவே... முதலில் தொழில் ஆரம்பித்த முதலாளிகள் அதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

ஏரியின் நீரை கிராமத்திற்கு கொண்டுவர தாங்களே முதலில் முயன்றதால் ஏரி நீர் முழுக்க தங்களுக்கே சொந்தம் என்று அவர்கள் வாதாடினர். தங்களின் முயற்சியால் கிராமம் செழித்தது. கிராமம் முன்னேறியது. மக்களுக்கு எவ்வளவு இலாபம் கிட்டியது என கணக்கு காட்டினார். ஒரு குடம் தண்ணீருக்கு கிராமத்திற்கு மூன்று ரூபாய் மிச்சமானது. ஆகவே இத்தனை ஆண்டுகளில் கிராமத்திற்கு எவ்வளவு சேமிப்பை வழங்கி இருக்கிறோம் எனப் பட்டியலிட்டுக் காட்டினர்.

மனம் திருப்தியடைந்த நீதிபதியும் ஏரியின் நீர் முழுதும் அவர்களுக்கே உரியது என்றும், வேறு யாரும் சுரங்கம் தோண்டக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினார்.

அது மட்டுமில்லாமல், இவர்கள் செய்யும் தொழில் பொது நலம் சார்ந்தது என்பதால் அதற்கு வரி விலக்கும் கிடைத்தது.

இதுதாங்க முதலாளித்துவம்.
உண்மையை இப்பொழுது ஆராய்வோம்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உழைப்பு மற்றும் அறிவு.

மத்தபடி அனைத்து இயற்கை வளங்களும் அனைவருக்கும் பொது.

சாதாரண மனிதன் தன் உழைப்பினால் தினம் தினம் சம்பாதிக்கிறான்.

அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். தன்னைச் சுற்றி இருப்போரின் பிரச்சனைகளைப் பார்க்கிறான்.

அந்த பிரச்சனைகளை குறைக்க என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறான். அங்கே தன் உழைப்பையும், தான் சேகரித்த செல்வத்தையும் முதலீடாக்குகிறான்.

தன்னுடைய அறிவினால் பிரச்சனைகளைக் குறைப்பதால் அவன் தான் கைவைத்த இயற்கை வளங்களை தனதாக்கிக் கொள்கிறான்.

அதாவது தனது அறிவு மற்றும் பண பலத்தினால் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளத்தைத் தனதாக்கிக் கொண்டு விற்க ஆரம்பிக்கிறான்.

அவன் உழைப்பை விற்கவில்லை. விற்றிருந்தால் அவன் அன்றாடங்காய்ச்சி ஆகியிருப்பான். அது பொதுவுடைமை தத்துவம்.

அவன் அறிவை விற்கவில்லை. விற்றிருந்தால் அது ஊர் பொதுகாரியமாக மாறி இருக்கும். ஊரே சேர்ந்து சுரங்கம் வெட்டி, மிகக் குறைந்த செலவில் தண்ணீர் அருந்தியிருப்பார்கள். பராமரிப்புசெலவிற்காகும் தொகை மட்டுமே மக்கள் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அது சோஷியலிஸம்.

இரண்டையும் விட்டு ஊருக்கே பொதுவான இயற்கை வளம், ஊருக்கே பொதுவான நிலம் ஆகியவற்றை தனதாக்கிக் கொண்டு, பொதுச் சொத்தான இயற்கை வளத்தை விற்றதால் அவன் மிகப் பெரிய பணக்காரனாக ஆகிறான்.

இந்தப் பணம் அவன் இன்னுமொரு இடத்தில் இன்னுமொரு விஷயத்தில் முதலீடாகி இன்னும் பலமடங்கு இலாபம் தரும். இது முதலாளித்துவம்.
அதாவது முதலாளித்துவத்தில் பொதுச்சொத்துக்களை தனியார் கைப்பற்றுவதே மிக முக்கிய அடிப்படையாகிப் போகிறது. அதனால் முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடுகளில் பெரும் பணக்காரர்கள், அவர்களை அண்டிப்பிழைப்போர்கள் மற்றும் ஏழைகள் என மூன்று பிரிவினைகள் உண்டாகின்றனர்.

இவர்களுக்கிடையேயான வேறுபாடுகள் மிக அதிகமாக இருக்கும்.

முதலாளித்துவத்தில் செல்வம் ஓரிடத்தில் குவிவதால் பல பெரிய காரியங்களை முதலீடு செய்து முடிக்க முடியும். ஆனால் இவர்களுக்கு ஆதாரம் தங்கள் உழைப்பை விற்கும் ஏழைகளும், அறிவை விற்கும் அண்டிப் பிழைப்பவர்களும்.

அறிவை விற்பவர்களை மயக்கத்தில் வைத்திருப்பதும், உழைப்பை விற்பவர்களை அறியாமையில் வைத்திருப்பதும் முதலாளிகளின் தந்திரங்கள்.

உழைப்பை விற்பவர்களும் அறிவை விற்பவர்களும் விழித்துக் கொண்டால் முதலாளித்துவம் ஒழிந்து போகும். அதை தடுக்கவே கன்ஸ்யூமரிஸம் எனப்படும் நுகர்வு மனப்பான்மை வளர்க்கப்படுகிறது. இது உலகத்தின் அனைத்து வளங்களும் அனைவருக்கும் பொது என்ற உண்மையை ஆழக்குழிதோண்டி புதைத்து விடுகிறது.
ஆக முதலாளித்துவத்தில் மட்டுமே பெரும் பணக்காரர்கள் உருவாகிறார்கள். அவர்கள் நாட்டின் இயற்கை வளங்களை ஆக்ரமித்துக் கொள்கிறார்கள், அவற்றை விற்றே மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிவிடுகிறார்கள்.

அவர்களை அண்டிப்பிழைக்கும் அறிவாளிகள் தங்கள் பங்கிற்கு முதலாளிகளுக்கு மேலும் மேலும் பணம் சேர்க்க வாய்ப்புகளை உண்டாக்கி அதில் பெறும் சன்மானங்களால் சிறிது சிறிதாக தாங்களும் முதலாளிகளாக முயற்சிக்கிறார்கள். ஆனாலும் இவர்களால் பண முதலைகளுடன் மோதி இயற்கை வளங்களை கைப்பற்ற முடியாததால் பலர் வெறும் ஜால்ராக்களாகவே முடிந்து போகிறார்கள். இங்கேதான் பெருமுதலாளிகள் ஆகுபவர்கள் செல்வத்தை மட்டுமல்லாது அரசியல் அதிகாரங்களையும் பயன்படுத்தி மேல் நோக்கி பயணிக்கிறார்கள்.

ஆனால் தங்கள் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் முன்னேறவே முடிவதில்லை. அவர்கள் தங்கள் வம்சங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்கிறார்கள்.

செல்வமும் அதிகாரமும் கைகோர்த்துக் கொண்டால் உழைப்பும் கல்வியும் அங்கே அடிமைகளாகி விடுகின்றன.

இன்று நமது நாட்டின் நிலையும் இதை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறது. சோஷியலிஸத்தை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம்.