Friday, August 27, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 2
நீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...

அவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.

குடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.

சிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா? நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன? இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது?

மிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.

மீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.

எதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.

நாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

காலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.

அந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,

நீட்சி செய்யலாம்.. யாருக்காக? எதற்காக? கேள்விகள் பிறந்தன சிந்தனாவாதிகளிடமிருந்து.

நீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.

எல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..

முதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..

வரமா? சாபமா..? தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.

சிந்தனாவாதிகள் தீவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.

பொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.

சிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை(?) பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..

அதற்கு என்ன செய்யலாம்?

யாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிசைகள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.

தங்கினால் போதுமா? உணவு, போக வர வசதி? இரண்டாம் சிந்தனாவாதி சொன்னார்..

இது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..

இதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.

கற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.


பொருட்கள் எதற்கு? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

பொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க

அப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்

ஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..

எல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும்? இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க? நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.

கேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.

எல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.

மீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.

நீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

மாற்றங்களுக்கு எல்லாம் நானே காரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.

தொடரும் .

Thursday, August 26, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 1

ஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்.. 

அத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,

இங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள். 

எல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...

சில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..சிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.

தீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..

சில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.

சிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..

அவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.


மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.

ஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.

இரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..

அமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா? ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.

நாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை. 

என்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..

சொன்னார் முதலாம் சிந்தனாவாதி.

எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..

கல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..

எழுத ஆரம்பித்தார்கள்.. 

வாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.

உணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..

தொடரும்

.

Sunday, August 22, 2010

படிச்சதும் கடிச்சதும்
 படிச்சது

நேத்து உன்னையும், உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!...
பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால்
அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"


கடிச்சது
அதிர்ஷ்டம் அடிக்கலாம்.. ஆனா கழுதை உதைக்குமே!!!


படிச்சது

துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.
வலித்தால் சொல்லிவிடு நிறுத்தி விடுகிறேன்.
துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.
கடிச்சது
உனக்கெதுக்கு சிரமம்! துடிக்கறதை நானே நிறுத்திடறேன்.

படிச்சது

ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!


கடிச்சது
ஆனா உன் கோலத்தைப் பார்த்துதானே உங்க வீட்ல தண்ணி தெளிச்சாங்க

படிச்சது

காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது.

கடிச்சது

ஏன், நம்ம தலை காலிஃபிளவர் சாப்பிட மாட்டாரா?


படிச்சது

கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது.
கடிச்சது

அதைக் கோல்டில கவரிங் பண்ணி வைக்கறாங்க. http://www.dinamalar.com/Incident_de...?news_id=17275

படிச்சது

கோல மாவில் தோசை சுட முடியாது.

கடிச்சது

எந்த மாவிலும் தோசை சுட முடியாது,, தோசைக்கல்லில் தான் சுடணும்படிச்சது

நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா?
கண்களை தானம் செய்....
(பாருங்கப்பா ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு)

கடிச்சது

அதை பொண்ணுக்கு பொருத்திட்டாங்கன்னா?

(பாருங்கப்பா எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாங்கன்னு)

படிச்சது

உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன் ..
என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?


கடிச்சது

அனுப்பறனே... சார்ஜ் தீர்ந்து போன அந்த பேட்டரி செல்லை குப்பையில போடலாம்னு தான்னு நினைச்சேன். வித்தியாசம் ஒண்ணுமில்ல


 
.

Friday, August 20, 2010

படிச்சதும் கடிச்சதும்

படிச்சது :


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று

பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில்
வரும்?

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

9) நீராவி எஞ்சினை செலுத்தும் சக்தி எது? 


கடிச்சது


1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

ரா, வெங்கடராஜூலு.. ஏன்னா மகாத்மா காந்தி குஜராத்தியில் தான் எழுதினார். தமிழில் சுயசரிதை என எழுதியவர் ரா.வெங்கடராஜூலு தான்


2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

கழுத்தெழும்புக்கும் இடுப்பெலும்புக்கும் இடையில்

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது உயிரிழந்தார்?


கொலம்பஸ் உலகைச் சுற்றவே இல்லை. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கக் கண்டங்கள் வரைதான் போனார்


4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

தஞ்சாவூரில் தாணியம் விளைவதில்லை. தானியம்தான் விளையும்.

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு எவ்வளவு?

அது எந்த பரீட்சை என்பதை பொறுத்தது. வகுப்புத் தேர்வுன்னா சில நூறுகளிலும், பொதுத்தேர்வுன்னா சிலபல ஆயிரங்களும் செலவாகும்

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?


அது நல்ல வெள்ளி இல்லையா! அதனால சரியா வெள்ளிக்கிழமையே வந்திடும்.


7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

மூன்றாம் பிறை உண்மையில் ஒரே ஒரு நாள் கழித்து வந்திடும்.அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை.


ப்ரதமையில் சந்த்ரன் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளும்படித் தெரியாது. த்விதீயையில்தான் தெரியும். அதைத்தான் "பிறை பார்க்கிறது" என்று சொல்லிப் பார்ப்பது. அந்த நாளை 'சந்த்ர தர்சனம்' என்றே பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும். அதைத்தான் மூன்றாம் பிறை என்கிறோம் நாம்..

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?


லேட்டஸ்ட் நியூஸ். வீக் ஆகி வார இதழ் வாரா இதழா ஆகிடுமோன்னு சந்தேகமா இருக்கு!!!


9) நீராவி எஞ்சினை செலுத்தும் சக்தி எது?

வேற எது? அது பொருத்தப்பட்டு இருக்கும் வாகனம்தான்.இப்ப என்ன பண்ணுவீங்க?

இப்ப என்ன பண்ணுவீங்க?Wednesday, August 18, 2010

டைட்டானிக் மூழ்கியது - தமிழ் டி.வி. நியூஸ்!!
சன் டிவி:

டைட்டானிக் கப்பல், நடுக்கடலில் மூழ்கியது. பல நூறு பேர் உயிரிழந்தனர், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் கலைஞர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். துணை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைவு.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உயிர் தப்பிய தமிழர்களுக்கு தம் தாய்நாடு திரும்ப உடனடியாக தனி விமானம் அனுப்பி வைத்தார்.

ஜெயா டி.வி:

இலண்டனில் இருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இதற்கு காரணமான மைனாரிட்டி தி.மு.க அரசு நடுக்கடலில் தவிப்போரை மீட்காமல் அஞ்சலி என கண்ணீர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது.

விஜய் டி.வி

குற்றம்! நடந்தது என்ன?

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற டைட்டானிக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியது.

இது மூழ்கியதற்கு காரணம் டெக்னிகல் கோளாறா? கேப்டன் மற்றும் ஊழியர்களின் அலட்சியமா அல்லது அமானுஷ்யமா என்பது பற்றி அலசல்.

டைட்டானிக் கப்பல் ஸ்காண்டிநேவியா பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட போதே சிறிய விபத்தைச் சந்தித்தது. இதைக் கெட்ட சகுனம் என பல ஆண்டுகள் அன்பவம் வாய்ந்த காப்ட்ன்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் எச்சரிக்கையயும் மீறி கப்பலைச் செலுத்தியிருக்கிறார் கேப்டன்...

இடைவேளைக்குப் பிறகு...

நடுக்கடலில் செல்லும் பொழுது தூரத்தில் வெள்ளையாய் ஒரு உருவத்தைக் கண்டிருக்கிறார் கப்பல் கோபுரக் கண்காளிப்பாளர் ஆண்ட்ரூஸ். அது என்னவென்று சொல்ல அவர் உயிருடன் இல்லை. அவருடன் பணியாற்றிய அவர் நண்பர் கில்பர்ட்டைப் பேட்டி கண்ட போது...

ஆமாங்க.. அது வெள்ளையா மசமசன்னு இருந்தது.. மெதுவா கப்பலை நோக்கி வந்தது, அப்படியே தண்ணி மேல நடந்து வந்த மாதிரிதான் இருந்தது. ஆனா அதுக்கு காலே இல்லை..

பக்கம் வர பக்கம் வர அது பெரிசா ஆக ஆரம்பிச்சது. மிகப் பெரிய பூதம் அது,, அது அப்படியே தன் கையை தூக்கி கப்பலை ஓங்கி அறைஞ்சது...

எனக்கு கிறு கிறுன்னு வந்துச்சி.. லைஃப் ஜாக்கெட்டை போட்டுக்கிட்டு கடலில் குதிச்சிட்டேன்..

முடிஞ்ச வரை நீந்தினேன்..

கப்பலில் இருந்து வந்த லைஃப் போட்ல ஒண்ணில ஏறிகிட்டேன்.. அதனால தான் தப்பிக்க முடிந்தது.

டைட்டானிக் கப்பல் கவிழக் காரணம் பூதமா?

இடைவேளைக்குப் பிறகு...

இதைப் பற்றி இன்னொரு பயணியிடம் கேட்டபொழுது..

அது பூதமில்லை.. நானும் பார்த்தேன். அது மிகப் பெரிய திமிங்கிலம். வெள்ளை நிறத்தில் கடலின் அடியில் இருந்து மேல வந்தது.. அது தன் வாயால் கப்பலை இடிக்க கப்பல் ஓட்டையாயிடுச்சி..

பிறகு கப்பலை கடிச்சி இழுத்தது இதனால் கப்பல் உடைந்து தண்ணீர் உள்ளே வர ஆரம்பிச்சது... நான் பெண் என்பதால் உடனடியாக லைஃப் போட்டில் ஏற்றி அனுப்பிட்டாங்க.. அதனால் தப்பித்தோம்..

அந்த திமிங்கிலம் கப்பலை கடித்து கடித்து மூழ்கடிச்சிருச்சி...

டைட்டானிக் கப்பல் முழ்கியது பூதத்தினாலா, திமிங்கிலத்தினாலா? இல்லை தீவிரவாதிகள் செயலா..

நாளை தொடரும் 


Friday, August 13, 2010

ஆண் மனம்!!!
மேலோட்டமாய் பார்த்தால்
வறண்டு காய்ந்திறுகி
கிடப்பதாய் தோன்றும்


     தேங்கிக் கிடக்கும்

     ஆசை நீர்கள்
     குடிக்க ஒண்ணாத
     உப்பு நீர் என
     ஏளனம் செய்யப்படும்


அந்தப் பககமும்

இந்தப் பக்கமும்
பருவத்திற்கேற்ப
அலைபாயும்
சந்தர்ப்பவாதக் காற்றென்று தூற்றப்படும்


     அவ்வப்போது பெய்யும்

     காதல் மழையில்தான்
     பூக்களும் பயிர்களும்
     உண்டாகின்றனவென்று
     குறைத்துச் சொல்லப்படும்


ஏதோ சூரியன்

கொடுக்கும் ஒளி
ஏதோ சந்திரன்

கொடுக்கும் குளுமை
இந்தப்பாழும் பூமி

வாழ்ந்து கொண்டிருக்கிறது..


     இப்படித்தான்

     பல கதைகள்


இரும்புக் கருவும்
கொந்தளிக்கும்
நெருப்புக்குழம்பும்


     புரிந்து கொள்ளப்படாமலேயே

     அமுங்கிக் கிடக்கின்றன..


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே

அத்தனை மாற்றங்களுக்கும் அடிப்படையாக
அத்தனைக்கும் ஆதாரமாய்
ஓயாமல் சுழன்று கொண்டு இருக்கிறது


     அந்தச் சுழற்சியின்

     பயனாய் உண்டாகும் ஈர்ப்புதான்
     அத்தனைக்கும் அடிப்படை என்பது
     எங்கோ மறைந்து கிடக்கிறதுபொத்தலிடப்படும் போதெல்லாம்

நீர் கொடுத்தும்
கனிமம் கொடுத்தும்
இருதய ஓட்டைகளுடன்
வாழ்ந்து கொண்டு


     வேதனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம்

     கொடியவன் என
     முத்திரை குத்தப்பட்டு
     பழிக்கப்படுகிறது


இன்னொரு பூமி

இல்லையெனத் தெரியும்வரை
இந்தப் பூமி
ஏளனம் செய்யப்பட்டே
வாழ்ந்து கொண்டிருக்கும்!!!

Monday, August 9, 2010

ஒரு நடிகையின் கொலைவழக்கு

பாதிக்கதை - சிவா.ஜி!!!புதிய இயக்குநராக போன வருடம்தான் அறிமுகமாகி, சிறந்த அறிமுக இயக்குநராக விருது வாங்கிய சேகரன் அந்தக்காட்சியை இயக்கிக் கொண்டிருந்தார்.


ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிமுகமாகி இன்றைக்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியிருந்த ரதிப்பிரியா தன் ஒனிடா வயிற்றை(தட்டையான) குளோஸப்பில் காட்டிக்கொண்டு நடித்துக்கொண்டு(?) இருந்தாள்.

அந்தக்காட்சிக்குத் தேவையான முகபாவனையை அவள் காட்டாமல், தன் தொப்புளே போதுமென அலட்சியமாய் நின்றிருந்ததை சேகரன் விரும்பவில்லை. கோபத்தோடு அவளை அணுகி,

“மேடம், ப்ளீஸ்...ஸீன் என்னன்னு கொஞ்சம் மனசுல வாங்கிக்கிட்டு அதுக்குத் தேவையான எக்ஸ்பிரஷன் குடுங்க..” என்றதும்,

சுரு சுருவென கோபம் ஏற,

“ஹலோ...டைரக்டர்...என் ஸீன் என்னன்னு எனக்குத் தெரியும். டோண்ட் ட்ரை ட்டூ டீச் மீ...”

என்று ரோஸ்பவுடர் போட்ட முகம் குங்குமமாக சிவக்க ஃப்ளோரே அதிரும்படியாக அவள் கத்தியதும், அவமானமாக உணர்ந்த இயக்குநரும்,

‘மேடம் நீங்க பெரிய ஆர்டிஸ்ட்டா இருக்கலாம். ஆனா இங்க நான் தான் டைரக்டர். நான் சொல்றதைக் கேக்கனும்”

“புல்ஷிட்...ஒரு படம் ஹிட் குடுத்தா...பெரிய டைரக்டர்ன்னு நெனைப்பா....நான் 25 படம் ஹிட் குடுத்திருக்கேன், இன்னைக்கு இண்டஸ்ட்ரியே என்னோட கால்ஷீட்டுக்கு காத்துக்கிட்டிருக்கு. எனக்கு நீ எதுவும் சொல்லித் தரவேண்டிய அவசியமில்ல...தெரியுதா...ஷூட் வாட் ஐ டூ...”

அன்றைய மார்க்கெட்டுக்கு அதிக விலைபோகக்கூடிய நடிகையாய் அவள் இருந்ததால் அடங்கிப் போனார் சேகரன்.....மனதில் அடக்க முடியாத கோபத்துடன். 

அடுத்த காட்சியில் சோகத்தைக் காட்ட வேண்டிய காட்சியில் அவள் மோகத்தைக் காட்டியதால்...ஏற்கனவே அடக்கி வைத்திருந்த கோபம் அவரையும் மீறி வெளிப்பட்டு பளாரென்று அறைந்துவிட்டார்.

அடி வாங்கிய அதிர்ச்சியில் இரண்டுவினாடிகள் அமைதி காத்த ரதிப்பிரியா, அடுத்த நொடி ஆவேசத்துடன்,

“என்னையே அடிச்சிட்டியா.....பாஸ்டர்ட்....உன்னை இந்த ஃபீல்ட்லயே இல்லாம பண்ணிடறேன்...”

என்று இரைந்துகொண்டே தன் உதவியாளினியையும், தன் மேனேஜரையும் அழைத்துக்கொண்டு அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டாள்.

அடுத்த நாட்களில் ஃபிலிம் சேம்பரில் பொதுமன்னிப்பு கேட்டதும், பத்திரிக்கைகளில் வெளியான அந்த செய்தியால் தன் அடுத்தப் படத்துக்கு முன்பணம்கொடுத்தவர்கள் பின்வாங்கியதையும் நினைத்து, அடையாறுகேட் ஹோட்டலில் அரையடித்தபின் சேகரன் மொழிந்தது...

“அந்த பொம்பள உயிரோடவே இருக்கக்கூடாது.....எனக்கு கேரியரே இல்லாமப் போனாலும் பரவால்ல...அவளைப் போட்டுத் தள்ளிடனும்...”


னக்கு ஒப்பனை செய்துகொண்டிருந்த பழம்பெரும் ஒப்பனையாளர் தர்மலிங்கத்தின் கைகளை தட்டி விட்டு விட்டு,

“என்னய்யா மேக்கப் போடற...நான் என்ன கிழவியா....ஒன்னோட அந்தக்காலத்து மேக்கப்பெல்லாம் எனக்குத் தேவையில்ல....முடிஞ்சா மாடர்னா போடு...இல்லன்னா....ஊரப்பாக்க போய்த்தொல....ஏன் எங்களை மாதிரி கவர்ச்சி கதாநாயகிகளோட அழகோட விளையாடறே”

என்று அவரைத் தாறுமாறாக பேசிவிட்டுப் போன ரதிப்பிரியாவை, கோபம் கொப்பளிக்கும் கண்களோடு பார்த்துக்கொண்டிருந்த தர்மலிங்கம்....

“இருடி....ரொம்ப அலட்டிக்கிறயா....உன் மொகத்துல ஆஸிட் ஊத்தி..கோரமாக்கலன்னா எங்கப்பன் சம்முகத்துக்கு நான் பொறக்கல...”

என்று பல நாட்களாய் மனதில் ஊறியிருந்த வன்மத்தை வார்த்தைகளில் காட்டிக்கொண்டே ஒப்பனை சாதனங்களை இடக்கையால் தட்டிவிட்டார்.


திப்பிரியாவின் வீடு. மேனேஜர் பாண்டியன் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார். ரதிப்பிரியா ஆத்திரமாய்க் கத்திக்கொண்டிருந்தாள்.

“கேரளாவுல இருந்து, பஞ்சாப்புல இருந்து, மும்பையிலருந்து வர்ற நடிகைங்கன்னா...சின்ஸியரா இருக்கீங்க....நான் திருவாரூர்லர்ந்து வந்த தமிழ் நடிகைங்கறதால.....குழி பறிக்கறீங்களா? ஏன்யா இந்த புத்தி? நம்ம ஆளுங்கதான் நமக்கு எதிரிங்கங்கறத மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டியேய்யா...”

“மேடம்....நீங்க நினைக்கற மாதிரி ஒன்னுமில்ல....யாரோ சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டு....”

“தப்பா இல்ல....ரொம்ப சரியாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். அந்த பஞ்சாப் பொண்ணு ஜால்வாவோட ஆள்தானே நீ. அவ பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தானே நீ வேணுமின்னே என் கால்ஷீட்ல குளறுபடி பண்ணி எனக்கு மார்கெட் இல்லாம போகனுன்னு முயற்சி பண்ணே”

‘அய்யோ...அப்படியெல்லாம் அபாண்டமா சொல்லாதீங்க மேடம். உங்க உப்பத்திண்ணவன் நான்....உங்களுக்குத் துரோகம் பண்ணுவனா?”

“பண்ணிட்டியே.....சாய்மீரா ப்ரொடெக்*ஷனுக்கு நான் குடுத்த என்னோட கால்ஷீட்டை பிரமிட்டுக்கு குடுத்து, அதையும் மாத்தி ரெட்சன்னுக்கு குடுத்து....இப்ப எதுவுமே இல்லாம பண்ணிட்டியே....ஓக்கே....நவ் கெட் அவுட். என் கண்ணு முன்னால நிக்காத....போய்த்தொலை.”

“மேடம் ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம்...”

“கேக்க வேண்டிய அவசியமில்ல....என் கிட்ட ஆதாரம் இருக்கு. நீ ஜால்வாகூட எப்பவெல்லாம் போன்ல பேசின, எங்கெங்க சந்திச்சீங்க எல்லா டீடெய்லும் என்கிட்ட இருக்கு.....ஸோ....இதுக்கு மேல இங்க நின்னா வாட்ச்மேனைக் கூப்பிட்டு கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ள வேண்டியிருக்கும்....எப்படி வசதி...?” 

அவள் நக்கலுடன் கேட்டதைப் பார்த்ததும் ஆத்திரமாய்......

“போறேண்டி.....நீதான் பெரிய ஸ்டார்ன்னு நெனைச்சிக்கிட்டு என்னை எப்படியெல்லாம் அவமானப் படுத்தின.....இப்ப எனக்கு ஜாவ்லா இருக்காங்க. அவங்க கிட்ட போறேன். ஆனா........உன்னை இந்த இண்டஸ்ட்ரியில மட்டுமில்ல............இந்த உலகத்துலயே இல்லாமப் பண்றேன்.....”

அந்த இரவு நிம்மதியில்லாமல் படுக்கையில் புரண்டாள் ரதிப்பிரியா. 

“ச்சே எனக்கு மட்டும் ஏன் இத்தனை எதிரிகள்.....என்னுடைய நடவடிக்கையில்தான் தவறோ.....? வளர்ந்து வரும் இந்த நேரத்தில் நல்ல இயக்குநரையும், மூத்த மேக்கப் மேனையும், என் எல்லா ரகசியங்களும் தெரிந்த மேனேஜரையும் பகைத்துக்கொண்டது தவறோ...நாளை காலை விழித்தவுடன் அவர்களை சமாதானத்துக்கு அழைக்கவேண்டும்”

இப்படி நினைத்தவுடன் மனசு லேசாக...மெள்ளக் கண்ணயர்ந்தாள்.

டுத்தநாள் காலை அவளுக்கு காஃபி கொடுக்க வந்த வேலைக்காரி...அவள் கிடந்த ரத்தக்கோலத்தைப் பார்த்துவிட்டு காஃபிக் கோப்பையைக் கீழே போட்டுவிட்டு அலறலுடன் ஓடினாள். ரதிப்பிரியா கழுத்து அறுக்கப்பட்டு கட்டிலில் கிடந்தாள்.

சற்று நேரத்தில் போலீஸ் வந்தது.

வழக்கமான சம்பிரதாயங்கள்.....கைரேகை, புகைப்படமெடுப்பு, எதையும் தொடாதீர்கள் என்ற எச்சரிப்பு....கடைசியில் ஸ்ட்ரெக்ச்சரில் ரதிப்பிரியாவின் உடல் கொண்டுபோகப்பட்டப் பிறகு,

முதலில் பார்த்த வேலைக்காரியை விசாரித்தார்கள். கடைசியாய் அவளிடம் சண்டை போட்டுவிட்டு அவன் அவளை இல்லாமலாக்குவதாக சத்தமாகச் சொன்னதைக் கேட்டதாக வேலைக்காரி கூறியதைக் கேட்டதும், மேனேஜரைத் தேடிப்போனார் அந்த இன்ஸ்பெக்டர்.

போகும் முன் அந்த அறையைப் பூட்டி, யாரும் அதனுள் போகக்கூடாது என்று சொல்லி, சீல் வைத்துவிட்டுப்போனார்.

ரதிப்பிரியாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அவள் வீட்டை விட்டு வெளியேறியதும் நேராக அந்த இரவுவிடுதிக்குத்தான் போனான் பாண்டியன். அன்று இரவு, புலம்பிக்கொண்டு ஃபுல்லை ஃபுல்லாக இறக்கிக்கொண்டு மட்டையாகிடந்தான், நாங்கள்தான் அவனை ஓரமாகப் படுக்க வைத்தோம் என்று அந்த கிளப்பிலிருந்தவர்கள் கூறியதும், கொலையாளி இவனாக இருக்க முடியாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள்.

வேறு யாராக இருக்கும்.......? இன்ஸ்பெக்டர் தமிழரசன் மூளையைக் கசக்கிக்கொண்டார். இன்றைய தேதியில் தமிழ்த்திரையுலகத்தின் வெற்றிகரமான நடிகை. பல அரசியல்வாதிகளின் தொடர்புள்ளவள்.

சீக்கிரமே கண்டுபிடிக்க வேண்டும்........

மீதிக் கதை தாமரை செல்வன்குட்மார்னிங் இன்ஸ்பெக்டர் - இரட்டை நாயனமாக குரல்கள் ஒலிக்க, தனியார் துப்பறிவாளர் - உளவியலாளர் பெஞ்சமின் மற்றும் அவரின் சக துப்பறிவளர் கண்மணி இருவரும் வந்தனர்.

இருவரும் தமிழரசனின் பள்ளித் தோழர்கள். ஏறத்தாழ ஒரே தொழில் என்பதால் ஒருவருக்கொருவர் பெரும் உதவியாக் இருப்பார்கள். பென்ஸூடமும் கண்மணியிடமும் பேசிக் கொண்டிருந்தால் போதும் பல சிக்கல்கள் காணாமலேயே போய்விடும்.. வார்த்தைகளும் மிக்ஸரும் தேநீரும் கொண்ட உபசரிப்புக்கு பிறகு தமிழரசன் கதையைச் சொன்னார்.

உடனே சந்தேக லிஸ்ட் தயார் பண்ணி ஒவ்வொருத்தரா விசாரிக்க ஆரம்பிச்சி இருப்பீங்களே.. கண்மணி புன்னகையோடு சொல்ல 

தமிழரசன், ஆமாம் என்பது போல தலையசைத்தார்.

சரி ரதிப்பிரியாவை பற்றி என்னத் தெரியும்? சொல்லுங்க.. பென்ஸ் கேட்க 

தமிழரசன் 5 வருஷமா டாப் நடிகை அடிக்கடி பிரச்சனைகளில் மாட்டி வெளிவருகிற ஒரு சார்ட் டெம்பர்டு காண்ட்ரவர்ஷியல்.. ஆனால் கோபம் ரொம்ப நேரம் இருக்காது.. அடுத்த நாளே மன்னிப்பு பார்ட்டின்னு குழைய ஆரம்பிச்சிடுவாங்க.. பல விரோதிகள் இருக்கலாம்.

அப்போ ஏன் மூணு பேரு மட்டும் உங்க சந்தேக லிஸ்ட்ல? கண்மணி கேட்க.. 

வாஸ்தவம்தான் லிஸ்ட் போட்டு மாளாது. அப்புறம் என் ஆயுசுக்கு கண்டு பிடிக்க முடியாது.

சொல்லப் போனா குற்றவாளிகளை கண்டுபிடிக்க இரண்டு வழி இருக்கு பென்ஸ் சொல்ல ஆரம்பித்தார்.. 

ஒண்ணு சந்தேகலிஸ்ட்ல இருக்கிற எல்லாத்தையும் தனித்தனியே விசாரிச்சு அவங்க குற்றம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என உறுதி செய்வது,.

இன்னொன்னு குற்றம் நடந்த சூழ்நிலை, குற்றம் நடந்திருக்கிற விதம் இதை வைத்து குற்றவாளியைப் பற்றிக் கணித்து சந்தேக வட்டத்தைக் குறைச்சுகிட்டே போறது... அதாவது திருப்பதியில சில்லரைக் காசுகளை வச்சி சலிச்சி தனித்தனியா பிரிக்கிற மாதிரி கொலை நடந்த இடமும் விதமும் கூர்மையா ஆராயப்பட்டதுன்னா உங்களுக்கு பல தலைவலிகள் மிச்சம்.. கண்மணி தொடர்ந்து சொன்னார்.

உங்ககிட்ட இருக்கற ஃபோட்டோஸ் எடுங்களேன் பென்ஸ் சொல்ல,

தமிழரசன் ஃபோட்டோக்களை எடுத்துப் போட.. ஓஹோ இப்படித்தான் பிணமாகக் கிடந்தாரா பென்ஸ் நெற்றிப்பொட்டில் தட்டிக் கொண்டு யோசிச்சார்..

கழுத்தை நெறிச்சோ, இல்லை கையில் கிடைச்சதை வச்சோ கொலை இல்லை போராட்டம் அதிகம் இல்லை.. அதனால இது திடீர்னு நடந்த கொலை இல்லை.. - பென்ஸ்

ஆமாம், கத்தி என்பது ஒரு ஆயுதம். அதுவும் கழுத்து அறுபட்டு இறந்திருக்கிறாள். அப்படின்னா என்ன புரியுதா கழுத்தறுப்பு - அதாவது நம்பிக்கைத் துரோகம் - கண்மணி

அட ஆமாம் இப்படி ஒரு கோணம் இருக்கே தமிழரசன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கொலை செய்தது தனியாளா இல்லை ஆளை ஏவி செஞ்சிருக்காங்களான்னு முதல்ல கண்டு பிடிக்கணும்.. பெட்ரூம், கழுத்தறுப்பு புதுசா யாரோ வந்து போனதைப் பற்றிச் சந்தேகமோ ஸ்பெஷல் தகவலோ, தடையமோ இல்லை.. அப்போ கொலையாளி கூலிப்படை இல்லை. - பென்ஸ்

அவங்கன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது..- தமிழரசன்

கொலை பொதுவிடத்தில் நடக்கலாம். வீட்டில் என்றால் விஷம், தூக்கு, துப்பாக்கி, நெஞ்சில் கத்திக் குத்து, கழுத்தில் பின்புறம் வெட்டு.. இப்படி அவங்களுக்கே உள்ளே சிக்னேச்சர் உங்களுக்குத் தெரியாதா என்ன? பழைய கொலை விபரங்களைக் கொஞ்சம் உங்க கம்ப்யூட்டர்ல அலசி கடந்த 3 வருடங்களில் எத்தனைக் கழுத்தறுப்பு நடந்திருக்குன்னு பார்த்தீங்கன்னா தெரியுமே! - கண்மணி

அட ஆமாம் இதுவரை ஒண்ணுகூட இல்லை. - தமிழரசன்.

போஸ்ட் மார்ட்டம் ரிபோர்ட்ல அவளுக்கு தூக்க மாத்திரையோ அல்லது மயக்க மருந்தோ கொடுக்கப் பட்டிருந்ததா என உறுதிப் படுத்தணும்.. ஏன்னா கழுத்தை அறுக்கும் பொழுது போராட்டம் நடந்திருக்கணும் ஆனால் அதிகம் நடக்கலை.. - பென்ஸ்

அட ஆமாம். உடனே அரசு மருத்துவமனைக்கு தகவல் சொன்னார் தமிழரசன்.

இரண்டு சாத்தியக் கூறு இருக்கு 1. கொலையாளிக்கு வீட்டில் ஒரு உள்கை இருக்கு.. உள்குத்து இருக்கு. இன்னொன்னு கொலையாளி அந்த வீட்டுக்கு சகஜமா வந்து போகிறவர். - கண்மணி..

இப்படி பூஜ்யத்திலிருந்து ஆராய்ந்து கொஞ்சம் கொஞ்சமா உருவம் கொடுத்து ... - பென்ஸ்

இதைத்தான் படம் காட்டறதும்பாங்க - கண்மணி..

ரொம்பத் தெளிவாயிட்டேன். குற்றவாளியைப் பிடிச்ச உடனே உங்களுக்கு ட்ரீட்தான்.. உற்சாகமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார் தமிழரசன்..

தமிழ்நாடு போலீஸ்தான் நெம்பர் ஒன் அப்படீன்னு நிரூபியுங்க.. அட்வான்ஸ் கங்கிராட்ஸ்.. வாழ்த்தியபடியே எழுந்தனர் 
பென்ஸூம் கண்மணியும்...

எழுந்து விரைப்பாக ஒரு சல்யூட் அடித்தார் தமிழரசன். புத்துணர்வுடன்.. ஐ வில் கேட்ச் ஹிம் இன் டூ வீக்ஸ் ஸார்...

கலகலவென சிரித்தனர் அனைவரும்

முற்றும்

குடும்பஸ்தன்!Saturday, August 7, 2010

தாமரை பதில்கள் - 161கேள்வி எண் : 161


கேட்டவர் : கலைவேந்தன்


சூடான ஒரு பொருளை ( தோசை சட்டி. சூடான கரண்டி போன்றவை) தண்ணீரில் போடும்போது சுர்ர்ரென்று ஒலி எழும்புவது ஏன்...? 


சூடு போட்டா யாருதான் கத்த மாட்டாங்க. அதனால கத்துறது தண்ணிதான்..

அப்படின்னுதான் எல்லோரும் நினைப்பாங்க, அதுதாங்க தப்பு!

ஆனால் மனைவிதானே கணவனை அடிக்கிறாங்க? அந்த மாதிரி இங்க கத்தறது தோசைக்கல் தானுங்க. 

தோசைக்கல் சூடாக இருக்கும் பொழுது நீர் தெளிப்பதால் தண்ணீர் பட்ட உடனே கல் சுருங்குகிறது. அதிவேகமான இந்தச் சுருங்கல் காரணமாக வலி தாங்காம ரோஷம் கொண்டு (சூடு -சொரணை இருப்பதால்) தோசைக்கல் கத்துது.
.
தண்ணீர் தோசைக்கல் மீது பட்ட உடனே ஆவியாகிவிடுது. (கணவனை அடிக்கிற மனைவி பேய் மாதிரி தெரிகிற மாதிரி) இந்த ஆவி மெல்லிய படலமாக உடனே தோசைக்கல் மீது தோன்றுகிறது. இந்த ஆவி அடுத்து வரும் தண்ணீர் படலத்தை சிறிது லேட்டா தோசைக்கல் மீது பட வைக்கிறது...

இதனால் அடுத்த லேயர் தண்ணி ஆவியாகுது.. தோசைக்கல் இன்னும் கொஞ்சம் குளிர்ந்து இன்னும் கொஞ்சம் சத்தம் போடுது. (இன்னும் கொஞ்சம் சூடு- அதாங்க ரோஷம் பாக்கி இருப்பதால்) இன்னொரு படலம் நீராவி உண்டாகி வெளியேறுது...அதாவது முதல் அடி விழுந்த உடனே கணவன் சத்தம் போட்டு விலக, அடுத்த அடி கொஞ்சம் லேட்டா விழறது மாதிரி

அடி வாங்கி வாங்கி குறுகிப் போன கணவன் ஈனஸ்வரத்தில் முனகி அடங்கிப் போவது போல கொஞ்சம் கொஞ்சமா குளிர்ந்த தோசைக்கல், ஒரு கட்டத்துக்கு அப்புறம் திராணியற்றுப் போய் ஒடுங்கி விடுகிறது. அதுக்கப்புறம் சத்தம் போடாம "கம்முன்னு" நம்ம ஆரென் அண்ணா மாதிரி ஆகிடுது.
.

தாமரை பதில்கள் - 160கேள்வி எண் : 160


கேட்டவர்: ஓவியன்


அண்மையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பற்றி சில வார்த்தைகள் ...??

கட்டியது தலைமுடியை கொண்டையாக..

இன்னும் கட்ட வேண்டியது கையையும் வாயையும்.

மனதை கட்டுப்படுத்தும் யோகா மட்டுமல்ல. நல்ல தெளிவுரை (கவனிக்க அறிவுரை வேறு. தெளிவுரை வேறு) நல்ல மனவியலார்களிடம் பெற்றால் இன்னும் அதிகம் சாதிப்பார்.


தாமரை பதில்கள் - 159


கேள்வி எண் : 159
கேட்டவர்: பரஞ்சோதிஇந்திய அணி, இன்று(14/7/2009) நடக்கும் இறுதி போட்டியில் வெல்லுமா? வெல்ல என்ன என்ன செய்ய வேண்டும்?


இன்று இந்தியா இலங்கை அணியிடம் தோற்கும். காரணம் என்னவென்றால்

1. தொடக்க ஆட்டக்காரர்களில் கார்த்திக் சரியாக ஆடமாட்டார்.
2. திராவிடுக்கு விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு ஆடவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
3. தோனியும், யுவராஜூம் பொறுப்புணர்ந்து ஆட வேண்டும்
4. டாஸில் ஜெயிக்க வேண்டும்.
5. சுழல் பந்து வீச்சை சமாளிப்பது அல்ல... சரியாக அடித்து ஆடுவது முக்கியம்.தாமரை பதில்கள் - 158

கேள்வி எண் : 158கேட்டவர்: பரஞ்சோதிபோலாரிஸ் நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு என்ன?


பூமியின் காந்தப்புலம் போலாரிஸ் நட்சத்திரத்திற்கு நேராக இருக்கிறது! சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை கூட போலாரிஸ் இருக்கும் பக்கம் அதிக நீள்வட்டமாக இருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் சாய்வுக்கோணம், நீள் வட்டப்பாதை இரண்டும் இது போன்ற அமைப்பைக் காட்டுகிறது. போலாரிஸ் என்பது கூட்டு நட்சத்திரம். நம் சூரியனைப் போல இல்லாமல் இதில் எரிந்து முடிந்து போன நட்சத்திரங்கள் உள்ளதால் காந்தப்புலம் அதிகம் இதனால் உண்டாக்கப்படுகிறது என எண்ணுகிறேன். முழுதாக இதை அறிய முடிந்தால், சூரியனின் சாய்வான அச்சினால் 26000 வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் காந்தப் புல மாற்றத்தின் விளைவுகள் என்ன வாக இருக்கும் என யூகிக்க முடியும். அதே போல் நிலப்பகுதிகள் வடக்கு நோக்கி நகர்வதற்கு எதாவது காரணமும் கிடைக்கலாம் என நினைக்கிறேன்,


மற்ற அனைத்து கிரகங்களையும் ஆராய்ந்த பின்னால் இதை வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க என்ற திரியில் தருகிறேன்...


தாமரை பதில்கள் - 157

கேள்வி எண் : 157


கேட்டவர்: நேசம்


தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் சார்ந்து இருக்கும் நிலை நல்லதா....

இதனால் மட்டுமே நல்லது கெட்டது என்பது முடிவாவது இல்லையே...

அதிகம் சார்ந்திருப்பதால் உச்சங்களும் பாதாளங்களும் குறைகின்றன.. அதாவது மிகப் பெரிய நன்மையோ அல்லது மிகப்பெரிய தீமையோ நடைபெறாது..

அதாவது நாடு வேகமாக முன்னேற கூட்டணி ஒரு தடை.
அதேசமயம் நாட்டின் பொருளாதாரம் சடாரென படி பாதாளத்திலும் விழாது...

தேவைக்கு ஏற்ற மாதிரி நாமதான் தயார் செய்துக்கணும்.

முடிவுகள் எடுக்க வேகத் தடைகள் இருப்பது பரவாயில்லை.

ஆனால் முடிவெடுக்க முடியா நிலைக்கு கூட்டணி தள்ளுமானால் அதைவிட கொடியது இல்லை


.

Friday, August 6, 2010

தாமரை பதில்கள் - 156

கேள்வி எண் : 156
கேட்டவர்: ஆரென்நாம் வியாபார நிறுவனங்களில் பிராண்ட் பில்டிங், பிராண்ட் வேல்யூ இவைகள் மிகவும் முக்கியம். அதுவும் கோக்கோ கோலாவின் பிராண்ட் வேல்யூ ஒரு பில்லியன் டாலர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் இருக்கும்பொழுது உலகத்தில் இருக்கும் அனைவரும் அறிந்திருக்கும்/தெரிந்திருக்கும் நகரத்தின் பெயர்களான பம்பாய், மதராஸ், பெங்களூர் மற்றும் கல்கத்தா ஆகியவற்றின் பெயர்களை ஏன் மும்பய், சென்னை, பெங்களூரூ, கொல்கத்தா என்று மாற்றி அதனுடைய பிராண்ட் வேல்யூவை குறைக்கிறார்கள்.

இதனால் மக்களுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ என்ன லாபம்?

இது பழைய பெயர் ஆங்கிலேயர்கள் வந்து மாற்றிவிட்டார்கள் என்று குறை சொல்பவர்கள் இந்த ஆங்கிலேயர்கள்தான் இந்த நகரங்களின் பெயர்களை உலகம் முழுவதும் எடுத்துச்சென்று அனைவரும் தெரிந்துகொள்ள உதவினார்கள் என்று ஏன் நினைப்பதில்லை.


ஆரென், நீங்கள் மிகச் சிறந்த வியாபார நுணுக்கங்கள் புரிந்த அறிவாளி. ஆனால் அப்பாவி.

நம்ம அரசியல்வாதிகள் மெட்ராஸையோ, பெங்களூரையோ விற்கவில்லை. வாங்க முயற்சிக்கிறார்கள்.

வாங்கும் போது பிராண்ட் வேல்யூவை அமுக்கித் தானே வாசிக்கணும்.


இன்னும் ஒரு விஷயம்...

ஹைடெக் சிட்டி, எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி, டெக் பார்க், டைடல் பார்க் இதெல்லாம் இவர்கள் உருவாக்கிய நகரங்கள்... 

ஏன்னா ஏற்கனவே இதையெல்லாம் இவர்கள் வளைத்து போட்டாகி விட்டது.

உங்களுக்குத்தான் இது புரியலை... அவங்க தெளிவாய்த்தான் இருக்காங்க. 


தாமரை பதில்கள் - 155

கேள்வி எண் : 155


கேட்டவர்: Mano.Gமனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது
(கோபமோ, பயமோ அல்லது சந்தோஸமோ)
ஏன் எதனால் மூச்சுவிடுவது அதிகமாகிறது,
உடம்பில் ஏற்படும் இரசாயன மாற்றம் எனக் கூறுகிறார்கள்
எப்படி இந்த இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன????


எல்லாமே நமது மூளைப்பகுதியின் செயல்தான் மனோ.ஜி.

இப்போது பயம் என்பதை எடுத்துக் கொள்வோம்.

பயம் என்ற உணர்வு தோன்றிய உடனே, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள எந்த எந்த உறுப்புகள் அந்தச் சூழ்ந்லையில் தேவையோ அங்கு இரத்தம் அதிகம் செலுத்தப்படுகிறது. (எதிர்க்கறதா இருந்தா கைக்கு, ஓடறதா இருந்தா காலுக்கு.. ஹி..ஹி...)

உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. பயத்துக்கு அட்ரினலின் மாதிரி.. சாதாரணமா நம்மால் மிகப்பெரிய புன்னகையை 10 நிமிஷம் வச்சிருந்தா களைச்சுப் போயிடுவோம்.(42 தசைகளை விரிக்கணும்) ஆனா மணிக்கணக்கா சந்தோஷத்தில் குதிக்கும் பொழுது அந்தக் களைப்பு தெரியாம இருக்க ஹார்மோன்கள் உதவுது.

பயம் உண்டானவுடன் அட்ரினலின் சுரப்பு அதிகம் ஆகி தேவையான பகுதிகளுக்கு இரத்தத்தின் மூலம் விரைவாக அனுப்பப் படுது, அட்ரினல் வலியை உணர்வதை குறைத்து விடுகிறது. கையே வெட்டுப்பட்டுத் தொங்கினால் கூட வலி தெரியாமல் போராடுவது இதனால்தான்.

ஆனா பாருங்க இந்த மாதிரி ஹார்மோன்கள் வேலை செய்யும் பொழுது உடல் மிக அதிக வேலையைச் செய்யுது, அதனால் இரத்ததில் கழிவுகள் அதிகமாகின்றன. அதைச் சுத்தமாக்கவும் அதிக ஆக்சிஜனை அனுப்பனும். கழிவுகள் வெளியேற்றப் படணும். இதயத்தின் துடிப்பு வேகம் அதிகப் படுது.. நுரையீரலின் வேகம் அதிகரிக்கிறது..

இதை எல்லாம் கட்டுப்படுத்துவது எது? சிறுமூளை. நாளமில்லாச் சுரப்பியை இயங்க வைத்து இதயத்துடிப்பையும் நுரையீரலையும் வேகமாக இயக்கி அந்த நேர உணர்ச்சிகளுக்கு தீர்வு தருகிறது..

ஆனால் இதனால் பக்க விளைவுகள் உண்டு. இந்த ஹார்மோன்கள் நிலைகள் ஏற்ற தாழ்வு ஏற்படுவது உடலில் கழிவுகளை அதிகப் படுத்தி நாட்பட நாட்பட தளர்ச்சியை உண்டாக்கி விடும்

அதனால்தான் யோகா, முறையான உடற்பயிற்சி நன்மையைத் தந்து ஆயுளை நீட்டிக்கும் அதே நேரத்தில் உணர்ச்சி வேகம் நிறைந்த செயல்கள் ஆயுளைக் குறைத்து விடுகின்றன.

எனவே இதை உயிரியல் தூண்டிய வேதியியல் வினைகள் எனச் சொல்லலாம். 

உணர்ச்சிவசப் படும் பொழுது மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைந்து விடுகிறது. காரணம் மற்ற பகுதிகளுக்கு அதிக இரத்தம் தேவை.. மயக்கம் வருதல், சிந்தனை மழுங்கிப் போதல் போன்றவை இதன் காரணமாகவே உண்டாகின்றன.

ஹிஸ்டீரியா கூட இப்படியான ஒரு பாதிப்புத்தான.


தாமரை பதில்கள் - 154


கேள்வி எண் : 154
கேட்டவர்: நேசம்


அஜினமோட்டோ எதில் இருந்து தயாரிக்கப்படிகிறது. இதனால் உடல் நலத்திற்கு கெடுதலா....?


முதலில் ஒரு விளக்கம். அஜினமோட்டோ என்பது ஒரு பொருளல்ல. ஒரு கம்பெனி. ஜப்பானியக் கம்பெனி.

அஜினமோட்டோ என்றால் சுவையின் சாரம் என்று பொருள். இவர்கள் எண்ணெய் பொருட்கள், இது போன்ற மசால பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிப்பவர்கள்.

அஜினமோட்டோ என்று இன்று நாம் அழைக்கும் உப்பிற்கு மொனோ சோடியம் குளுக்கோமேட் என்று வேதியியல் பெயர். இதில் சோடியம் மற்றும் குளுட்டோமேட் என்ற அமினோ அமிலம் இரண்டும் உள்ளன. குளூட்டோமேட் அமினோ அமிலம் கரையாத் தன்மை உடையது.
அமினோ அமிலங்கள் புரோட்டீனீன் அடிப்படை என்பது அறிந்ததே,.

இந்த குளுக்கோமேட் முன்காலத்தில் கடற்பாசிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. பின்னர் செய்த ஆய்வுகளின் படி சர்க்கரைப் பொருள்களை பாக்டீரியாக்கள், ஈஸ்டுகள் மூலம் நொதிக்க வைக்கப்பட்டு புதிய முறையில் இந்த குளுட்டோமேட் தயாரிக்கப்படுகிறது. இப்பொழுது இம்முறையிலேயே அஜினோமோட்டாவிலும் தயாரிக்கப்படுகிறது.

மணம்கூட்ட விலங்கு கொழுப்பெண்ணெய்கள் சேர்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்து அடங்கி இருக்கின்றன,

பொதுவாக குறைந்த அளவு இந்த உப்பு உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் வெகு சிலருக்கு நுரையீரல் சளி பிரச்சனையை ஏற்படுத்தும். இருமலை வரவழைக்கும். இதற்கு சைனீஸ் ரெஸ்டாரண்ட் சிண்ட்ரோம் என்று பெயர்.

அனைவரும் உபயோகிக்கலாம் என பல உணவுக் கட்டுப்பாட்டுக் கழகங்கள் சொல்லி இருந்தாலும்...

அளவாய் இருப்பது நல்லது.

.

Thursday, August 5, 2010

தாமரை பதில்கள் - 153

கேள்வி எண் : 153கேட்டவர்: Mano.G


நான் அண்மையில் ஜெயா டிவியில் பார்த்து மண்டையை
குழப்பிக்கொண்ட ஒரு சீரியல்

"எங்கே பிராமணன் ? " 

இது நடிகரும் , பிரபல அரசியல் விமர்சகருமான சோ எழுதியது, அந்த சீரியலில் கூறப்படுவது போல் உண்மையான பிராமணன் யார்.?


மிகவும் தெளிவாக இறுதி பகுதியில் சொல்லி இருக்கிறாரே சோ..


சோ சொன்ன கருத்து!!


பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள். 

சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்

அதாவது பிராமணன் என்பவன் பிரம்மம் அறிய, ஆன்மீக வழியில் செல்பவன். அதையே முக்கியமாய் கொள்ளுதலால் பொருள் தேடல், இரை தேடல், எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தல் போன்ற புவி ஆசைகளைத் துறந்து ஞானம் தேடுதலும் பரப்புதலுமே முக்கியமாய் கொண்டவன் என்கிறார் சோ.

இவ்விடம் என் கருத்தைக் கேட்டால், பிராமணன் என்ற பாகுபாடே இப்போது தேவையில்லை. சமூகத்தில் அளவான மக்கள் தொகை இருந்த காலத்தில் அனைவரும் உழைக்க வேண்டி இருந்ததால் பணிகளை பகுத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று மக்கள் தொகை பெருகி விட்டது. நமக்கு காலம் மிக அதிகமாக மிச்சம் இருக்கிறது. அதனால் ஒரே சமயத்தில் ஞானம் தேடல், பொருள் தேடல், பாதுகாப்பு, சேவைகள் என அனைத்து வேலைகளையும் நம்மால் செய்ய முடியும். எதை எடுத்துக் கொண்டாலும் இன்றைய காலகட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருவரே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆளாளுக்கு கொஞ்சம் செய்தால் போதும். 

உதாரணமாக ஆடை நெய்தல்..

பருத்தி விளைவிப்பது ஒருவர். அதற்கான நுட்பங்களைச் சொல்வது இன்னொருவர்.. பஞ்செடுத்து விற்பது, பஞ்சை நூலாக்குவது.. நூலுக்குச் சாயமேற்றுவது, துணி எப்படி இருக்க வேண்டும் என வடிவமைப்பது, பாவு ஆக்குவது, ஊடைக்கு நாடாவிற்கு தார் சுற்றுவது.. பாவை தறியில் ஏற்றிக் கொடுப்பது, நெய்வது, நெய்த துணியை மேற்பார்வை செய்து குறைகளை நிவர்த்திப்பது, துணியயை துவைத்து உலர்த்தி மெருகேற்றுவது, அதைப் பெற்று தையலகங்களுக்கு அணுப்புவது, ஆடை வடிவமைப்பு, வெட்டுதல், தையல் வேலை, ஆடையை இஸ்திரி போடுவது, பேக்கிங் செய்வது, கடைகளுக்கு அனுபுவது விற்பனை செய்வது இப்படி பலப்பலர் கூடித்தான் இன்று ஒரு செயல் நடக்கிறது.

நாம் இது போல பல காரியங்களில் சிறு சிறு அளவு பங்கு கொள்கிறோம். எனவே நம்முள் அன்று வகுத்த எல்லா வர்ணத்தவரும் இருக்கிறார்கள்.

ஞானம் தேடவும் நேரம் இருக்கிறது. அரசியல் செய்யவும் நேரம் இருக்கிறது. சேவைகள் செய்யவும் நேரம் இருக்கிறது. வியாபாரம் செய்யவும் நேரமிருக்கிறது. எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் பங்களிக்கிறோம்.

பிராமணன் எங்கும் இல்லை என்பது சோவின் பார்வை.. பிராமணன் எல்லோருள்ளும் இருக்கிறான் என்பது என் பார்வை.

இன்னும் பல பார்வைகள் இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுக வேண்டியது முக்கியம்

.

தாமரை பதில்கள் - 152


கேள்வி எண் : 152


கேட்டவர்: ஓவியன்


செல்வண்ணாவ், ஏமாளிக்கும் இளிச்சவாயனுக்கும் என்ன வித்தியாசம் ..??


இரண்டு வித்தியாசங்கள் சொல்றேன் கேட்டுக்குங்க.

1. ஏமாளியை நாமதான் தேடிப்போய் ஏமாத்தனும். இளிச்சவாயன் தானா வந்து ஏமாறுவார்.

2. ஏமாளிக்கு நாம ஏமாந்துட்டோம்னு கடைசியாத் தெரிஞ்சிடும். இளிச்சவாயனுக்கு அது தெரியவே தெரியாது.


Wednesday, August 4, 2010

தாமரை பதில்கள் - 151


கேள்வி எண் : 151கேட்டவர்: சுகந்தப்ரீதன்கடந்தகால நிகழ்வுகள், நிகழ்கால நிகழ்வுகள் மற்றும் எதிர்கால நிகழ்வுகள் - இவற்றில் எதை அடிப்படையாக கொண்டு இரவில் உறங்கும்போது நமக்கு கனவுகள் வருகின்றன..? 

கனவுகளே வராமல் உறங்குவதற்க்கு ஒரு எளிய வழி சொல்லுங்கோ..?! (சீரியஸா கேட்குறேன் செத்துப்போன்னு சொல்லக்கூடாது ஆமாம்..)


கனவுகளைப் பற்றி உறுதியாகத் தெரிந்த ஒரே விஷயம் அது தொடர்பான சில விஷயங்களை கடந்த மற்றும் நிகழ்காலத்தில் நாம் கண்டோ கேட்டோ படித்தோ உணர்ந்தோ இருப்போம்..

கனவுகள் ஏன் வருகின்றன என பல அனுமானங்கள் உண்டு..

குப்பையாய் உபயோகப்படாமல் கிடக்கும் எண்ணங்கள்..

நீண்ட நாள் நினைவுப் பெட்டகத்தின் வெளிப்பாடு

தொடர்பறுந்த நினவுகளின் ஒருங்கிணைப்பு.. (நம்ம கணிணியில் சிதைந்த கோப்பினை ஒழுங்காக்குதல் போல)

மூளையின் தற்காலிக நினைவிலிருந்து தகவல்கள் நிரந்தர நினைவிற்கு போகும் போது ஏற்படும் பக்க விளைவுகள்..

உணர்வுப் பூர்வமான களைப்பு ஏற்படுதல்... அதை தீர்க்கத் தயாராகும் மூளை..

நாம் மனதில் விலக்கத் துடிக்கும் அடிமன நினைவுகள் 

தூங்கும் போது புலன்களுக்கு உண்டாகும் உண்ர்வுகள் தவறாக தூங்கிக் கொண்டிருக்கும் மூளையினால் புரிந்து கொள்ளப்படுவது

இப்படி கனவு வருவதற்கு எத்தனையோ தேற்றங்களை அனுமானித்துக் கொண்டு இருக்கிறது விஞ்ஞானிகள் உலகம்.

கனவு வரும் பொழுது கண்மணிகள் அசைகின்றன எனபது மட்டுமே உறுதியாக்கப்பட்டுள்ளது..

எனக்கு எப்பவாவது கனவு வரும். அதுக்கெல்லாம் என் நினைவு பகுதியை அலசிப் பிழிந்து பார்த்தால் ஒரு ஒப்புமை முன்னே நிற்கும்..

அதாவது நான் அப்ப எல்லாம் எதையாவது பற்றி சிந்தித்துக் கொண்டு தெளிவில்லாம இருந்திருக்கேன்... என் சிந்தனை முற்றுப் பெறாமல் ஒரு திருப்தி அடையாமல் களைப்பினால் மட்டுமே உறங்கி இருக்கிறேன். அதாவது ஓய்வு தேடி உறக்கம்.

மற்ற நாட்களில் நிம்மதியாக எல்லா வேலையும் முடிச்சாச்சி என்று ஒண்ணும் செய்ய பாக்கி இல்லாம... கண்களை மூடி சிந்தனைகளே இல்லாம கொஞ்ச நேரம்.. அப்புறம் "கொர்" கொர்"

தூங்கும் பொழுது பிராஸஸ் முடிக்கப் படாமல் (சரியாக மூடப்படாத ஃபைல் கரப்ட் ஆகிற மாதிரி) மூளையின் கட்டுப்பாடில்லாமல் இந்த எண்ண அலைகள் உணர்வுகளாக மனதில் எழுகின்றன என நினைக்கிறேன். அது கட்டுப்பாடில்லாமல் இருப்பதால் எதெதோ தோன்றுகிறது...

எண்ணங்கள் வலிமை அடைந்து புலன்கள் விழிக்கும் வரை இந்த மாய உணர்வுகள் ஆழ்மனதில் பிராஸஸ் செய்வதே கனவு என்று படுகிறது.

அதனால்தான் எதிர்காலமும், தீர்வுகளும் கனவில் கிடைக்கிறது..

கனவு வராமல் இருக்க, எல்லா எண்ணங்களையும் முடிந்த வரை முடித்துக் கொண்டு தூங்கறது நல்லது. (இந்தக் கேள்விக்கு நான் பதில் எழுதின மாதிரி). 

கனவில் அடிக்கடி பயம் வருகிறது என்றால் 

ஒரு முறை பெங்களூர் வந்து செல்லவும்.

தாமரை பதில்கள் - 150


கேள்வி எண் : 150


கேட்டவர்: ஆரென்மழை பெய்து ஒரு இடத்தில் குட்டைபோல் தண்ணீர் தேங்கிவிடுகிறது, அது சிறிது நாட்களில் பூமிக்குள் கொஞ்சமும், நீராவியாகி ஆகாயத்தில் கொஞ்சமும் சென்றுவிடுகிறது.இந்த நீர் எப்படி பூமிக்குள் போகிறது. அங்கே தண்ணீர் செல்ல இடம் இருக்குமா?

அதுபோல் நாம் தண்ணீரை போர் போட்டு எடுக்கிறோம். அப்பொழுது அங்கே வெற்றிடம் உருவாகாதா? அதனால் பூமியின் அடியில் அந்த வெற்றிடத்தினால் நிலச்சரிவு உண்டாகாதா? 

கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.
விளக்கமா வேணுமா.. அப்படியென்றால் இதை இரண்டு மூணு நாட்களில் முழுசா எழுதிடறேன்..

பூமியின் அமைப்பைப் பாருங்கள்


பூமி வாயுவாக இருந்து குளிர்ந்து குழம்பாகியது. அதிக எடை உள்ள இரும்பு அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மையப்பகுதிக்குச் சென்று இறுகத் தொடங்கின.

அதே சமயம் பூமியின் மேலோடும் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளால் குளிரத்தொடங்கியது..

அதிக அழுத்தத்தின் காரணமாக இரும்பு உட்கரு திடமாக அதன் மீது திரவ உட்கரு இருந்தது...

திடக்கரு சுழலும் வேகத்திற்கும் திரவக்கரு சுழலும் வேகத்திற்கும் வித்தியாசம் இருக்கவே இதனால் வெப்பமும் காந்தப் புலமும் உண்டாகின...

இதனால் பாறைக்குழம்பு உட்புறம் சூடாக்கப்பட்டது.. வெளிப்புறம் பூமியின் மேலோடு குளிரத் தொர்டங்கியது..

இந்த மோலோட்டுத் திடப்பொருட்கள் பூமி மீது துகள் துகளாக ஒட்டிக் கொண்டிருந்தன.. இந்த துகள்களுக்கு இடையில் இடைவெளி இருந்தது...ஒரு பாட்டிலில் நிறைய கற்களைப் போட்டால் கற்களுக்கு இடையில் இடைவெளி உண்டாவது போல..


ஈர்ப்பு சக்தியின் காரணமாக வாயுக்கள் அந்த துளைகளை நிறைத்திருந்தன..

இப்படி ஒரு ஸ்பாஞ்ச் மாதிரி நிறைய துளைகள் உள்ள மேலோட்டுடன் பூமி ஒரு காலத்தில் இருந்தது.. மெல்ல மெல்ல இருகிய மேலோட்டின் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகமானது.. கீழே இருந்த துகள்களுக்கு இடையில் நெருக்கம் அதிகரித்து அதிகரித்து பாறைகளாக இறுகத்தொடங்கின..

வளி மண்டலம் தோன்றி நீரும் தோன்றியது.. அதே சமயம் விண்கற்கள் மோதலினால் நிலவு உண்டானது... கடல்கள் தோன்றின.

நாம் காணும் பூமியின் மேற்பரப்பில் இருந்து அடியாழம் வரை நுண்ணிய துளைகள் கொண்டதாகவே பூமி இருக்கிறது. பூமியின் சுழற்சியாலும் பருவ நிலை மாறுபாடுகளாலும் மேலோடு அரிக்கப்பட்டு மணலாகிறது... 

மழை நீர் இங்கே தேங்கும் போது புவி ஈர்ப்பு விசையினால் இந்தத் துளைகளில் நீர் இறங்குகிறது... நீர் இறங்குவதற்கு ஏற்ப, இந்த துளைகளில் இருந்த காற்று அழுத்தப்பட்டு மேலே வருகிறது... (மண் வாசம் வரக் காரணம் இதுதான்..)

இப்படி மெதுவாக உள்ளே இறங்கும் நீர் அழுத்தம் காரணமாக பாறையாகிவிட்ட இடத்திற்குக் கீழ் செல்ல முடிவதில்லை.. அதனால் பக்கவாட்டில் பரவ ஆரம்பிக்கிறது...உள்ளே இறங்கிய நீரின் திரவப்பண்பினால் நீர் பக்கவாட்டிலும் பரவத் தொடங்குகிறது.. இதனால் நிலத்தடி நீர் உருவாகிறது...

இதற்கு அர்த்தம் நிலத்திற்குக் கீழ் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் என்பதல்ல.. எல்லாம் நுண்ணிய துளைகள்தான். 

வெகு சில இடங்களில் மட்டுமே இப்படி வெற்றிடம் இருப்பதுண்டு.. காரணம் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்திருக்கும். காலப்போக்கில் இந்த வெற்றிடம் அழுத்தத்தின் காரணமாக குறுகி விடும்..

காற்றாலும், வெள்ளத்தாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பதால் பூமியின் மேலோடு இப்படி நுண்துளைகள் கொண்டதாகவே இருக்கின்றது..

மலைப்பகுதிகளில் இப்படிச் சேர்ந்த நீர் சில இடங்களில் கசிந்து வெளிப்படுவே ஊற்றுகள் ஆகும். மலை பாறையால் ஆனது என்னும் பொழுது இப்படி மழை நீர் கசிந்து ஊற்றுகள் உண்டாகின்றன..

தாழ்வான ஏரிகளிலும் இப்படி ஊற்றுகள் உண்டாகின்றன..

அதனால் ஒரு ஸ்பாஞ்ச் உள்ள தண்ணீர் எப்படி இருக்கோ அப்படித்தான் பூமியின் உள்ளேயும் தண்ணீர் இருக்கும். பெரிய தண்ணீர் தொட்டியெல்லாம் கிடையாது...

பாறைகளின் இண்டு இடுக்குகள் எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி இருக்கும்..


ஆழ்துளை கிணறு தோண்டுவதால் ஒரு வெற்றிடக் குழாய் போன்ற அமைப்பை உண்டாக்குகிறோம். ஆனால் இந்த வெற்றிடத்தில் திரவத்தின் மட்டம் சமநிலை அடைவதற்காக அக்கம் பக்கம் உள்ள நீர் கசியத் தொடங்கி அது குழாயில் நிரம்ப, நமக்கு ஆழ்துளைக் கிணற்றில் நீர் நிரம்புகிறது..

ஆழ்துளைக் கிணறு தோண்டும் பொழுது பாறை வரும்வரை பிளாஸ்டிக் குழாய்கள் அல்லது இரும்புக் குழாய்களை இறக்குவதைக் காணலாம். இல்லையெனில் மண்சரிவு ஏற்படும்...

ஆனால் பாறைகள் போன்ற இறுகிய படிமங்களில் பிரச்சனைகள் உண்டாவது இல்லை..

காரணம் பூமியின் மேலோட்டின் தடிமன் 5 லிருந்து 75 கிலோமீட்டர்கள் வரை. அதனால் நாம் தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஒன்றும் மிகப் பெரிய விஷயமில்லை..

எல்லா திடப்பொருளுக்கும் புவி ஈர்ப்பு சமநிலை என்று ஒன்று உண்டு.. மணலாய் துகள்களாய் இருக்கும் வரைதான் நிலச்சரிவு... பாறைகளாய் ஆனபின் அவற்றின் புவி ஈர்ப்பு மையச் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படாத வரை பிரச்சனை இல்லை..

ஆற்றுப் படுகையில் மணல் எப்படி நிலத்தடி நீருக்கு உதவுகிறது என புரிந்திருக்கும் இப்பொழுது... மணல் உதிரியாய் இருப்பதால் நீர் அதில் தேங்குகிறது. ஆவியாதல் குறைகிறது..

மணல் இல்லாவிட்டால் மண்ணில் நீர் இறங்கும் வேகம் குறைகிறது.. அதனால் நீர் பூமியில் இறங்காமல் ஓடி விடுகிறது. குழிகளில் தங்கும் நீரில் பெரும்பகுதி ஆவியாகி விடுகிறது...

.