Sunday, November 15, 2015

உயர்ந்த நட்புக்கு உதாரணம்!




உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

அடிக்கடி இது என் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. தமிழ் சமுதாயமே இன்று உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதன்மையாக உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிறது,

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? நட்பே உயர்ந்தது என்றார் ஒருவர்..

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா என்றேன்.. பதில் வரவில்லை.

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டு சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்.

இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர்.. அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்திய போது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான்.. அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்க்களைக் கொடுத்தான்..

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான்.
அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன..

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.

உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக் கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?

உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை வளர்த்த அப்பாக்கள் உண்டு...

நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா?  கர்ணன் என்பீர்கள். அது மட்டுமே உங்களின் பதிலாக இருக்க முடியும். தவறு. அவன் துரியோதனனை சந்திக்கும் வரை வளர்த்த அதிரதனுக்கும் இராதைக்கும் என்ன செய்தான்?

நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள் தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..

கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.


நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.

பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்நிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.

உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின் ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும். உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே.

Saturday, November 14, 2015

நல்லவனும் கஷ்டமும்




தாமரை, தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?



கேட்டவர் வாழ்க, பதில் கீழே....

இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி?.. நம்ம ரமேஷ் சுகமா இல்லியா? இல்லை நல்லவர் இல்லியா?

நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்களா?  தம்மை வருத்திக் கொள்கிறார்களா?? கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் தெரியும்..

நல்லவர்கள் எல்லோருமே தனிப்பட்டு அடையாளம் காணப்படுவதில்லை. அந்த நல்லவர்களில் சாதனைகளைப் படைப்போரே அடையாளம் காணப்படுகிறார். சோதனை இல்லாமல் சாதனை இல்லை. எனவே நல்லவர்கள் அனைவரும் கஷ்டப்படுவது போல ஒரு மாயை இருக்கிறது.

எத்தனையோ நல்லவர்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி சந்தோஷ வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளோர் இல்லை. இவருக்கு என்ன சோதனை வந்தது? வாய்ப்பு கிடைத்தால் இவரும் கெட்டவர்தான் என்ற கண்ணோட்டத்தில் பலரை சந்தேகக் கண்ணோடு வைத்திருக்கிறோம்.

ஒருவரை நல்லவர் என்று நம்ப அவர் சோதனைகளைச் சந்தித்து தடுமாறாமல் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து கொண்டு விட்டு,  நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்ற மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி விட்டதாக ஒரு நொடியேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?

நல்லவராய் இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. சிலர் நல்லவர்களாய் இருக்கக் கஷ்டப்படுகின்றனர்.. அவ்வளவுதான்.

நல்லவர்களாக இருக்கும் பலருக்கு மற்றவர்களால் நடக்கும் தீமையை பொறுத்துக் கொள்ள இயல்வதில்லை. எனவே அதை மாற்ற முயல்கிறார்கள். ஒரு நல்லவரைக் கெட்டவராக்கவோ அல்லது கெட்டவரை நல்லவராக்கவோ கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்.

ஏனெனில் ஒரு மனிதனை அவனது இயல்பான நம்பிக்கையிலிருந்து மாற்ற முயல்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறை சிறு தடங்கல் ஏற்படும்பொழுதெல்லாம் அந்தப் பழைய இயல்புநிலை திரும்பி விடுகிறது.

ஒவ்வொரு மனிதன் வளரும் பொழுது  அவனது சூழ்நிலை வளர்ப்பு, அவனுக்கு கிடைக்கும் செய்திகள் தகவல்கள் அவனது உணர்வுகள் இதைப் பொறுத்து  அவனுக்கென்று ஒரு இயல்பான குணாதிசயம் ஏற்படுகிறது. அவரவர் இயல்பு அவரவருக்கு சௌகரியமாய் இருக்கிறது.

இதில் சிலரின் இயல்புகள் மற்றவர்களைப் பாதிப்பது இல்லை. இவர்கள் சாதாரண மனிதர்களாக மக்கள் அடையாளம் காண்கின்றனர்.

சிலரின் இயல்பு மற்றவர்களைப் துன்புறுத்துகிறது.. இவர்களை கெட்டவர்கள் என்கிறார்கள்..

சிலரின் இயல்பு மற்றவர்களை மகிழ வைக்கிறது.. இவர்களை நல்லவர்கள் என்கிறார்கள்..

இதில் நல்லவர்களாக அறியப்படுபவர்களும் கெட்டவர்களாக அறியப் படுபவர்களும் மற்றவர்களின் இயல்பை மாற்ற முனைகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் உழைப்பை நாம் கஷ்டம் என்கிறோம்.

ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினால் மக்களின் இயற்கையான சுபாவம் மாறும். குழுமங்களின் மூலம் நான் செய்ய எண்ணுவதும் அதுதான். சூழ்நிலைக்கேற்ப இயல்பாய் மனம் மாறுபவர்கள் போதும்,

யாரையும் கட்டாயமாய் இதைச் செய் இதைச் செய்யாதே என்றுச் சொல்லுதல் பலமுறை எதிர்மறை வினைகளையே உருவாக்கும். அதைக் கட்டுப்படுத்த கஷ்டப்படத்தான் வேண்டும்.

அதை நாம் நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லி விடுகிறோம். அவ்வளவுதான்.

Friday, November 6, 2015

செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்?



1) உப்பிட்டவனுக்காக உடனின்று போர் புரியும் கர்ணன், துரோணர், பீஷ்மர், சல்லியன்

2) உப்பிட்டவனாதலால் எதிர்த்தும் உடனின்றும் போரிடாது நடுநிலை வகிக்கும் விதுரர்.

3) உப்பிட்டவனாயிருந்தும் எதிர்த்து போர் புரிந்த யுயுத்சு.

இம்மூவகையினரில் யார் செய்தது தர்மம்?



செஞ்சோற்றுக் கடன் என்பதே மாயை ஆகும்.
உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாம் இறைவனின் சொத்துகள். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொது. அதை ஒருவன் தன்னுடையது என எண்ணுவது மமகாரம் என்ற மலம் ஆகும்.

கொடுப்பது, எடுப்பது எல்லாம் யாருடைய உடமை?

யாருடையதுமல்ல. அது முன்பும் இருந்தது. பின்பும் இருக்கப்போகிறது.

மரத்தின் பழம் யாருக்குச் சொந்தம்?


விதை தந்த மரத்திற்கா? 
மரம் நிற்கும் பூமிக்கா? 
நீர்தந்த ஆற்றிற்கா? 
நீரைத் திருப்பி விட்ட மனிதனுக்கா? 
மரம் ஏறிப் பறித்தவனுக்கா? 
அதை இன்னொன்றைக் கொடுத்து வாங்கியவனுக்கா? 

இதில் யார் யாருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்?

எதுவும் யாருக்கும் சொந்தமில்லாத பொழுது, யார் கொடுப்பது? யார் பெறுவது?

நாம் சரி என்று நினைப்பது மட்டுமே தர்மம் அல்ல. தர்மம் அதி சூட்சமமானது.

தன்னுயிர் காத்தோன், தன் மானம் காத்தோன், தனக்கு உணவிட்டோன் இவர்களுக்கெல்லாம் அடிமைகளாகிக் கொண்டிருந்தால் இறைவன் இருப்பது மறந்து போகத்தான் செய்யும். இது,  "தான்" என்னும் அகங்காரத்தின் வெளிப்பாடாகும்.

அப்படிப் பார்த்தால் நாம் இறைவனுக்குத்தான் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறோம். உயிரையும், உடலையும் உலகையும் தந்தவன் அவனே. 

அதை விட மிகப்பெரிய கடன் எது? அதை அடைக்காமல் சின்னச்சின்ன சில்லறை ஏமாற்றுக் கடனைப் பற்றிக் கவலைப்படுவானேன்?

ஆக செஞ்சோற்றுக் கடன் செய்கிறேன் என தர்மத்தின் எதிர்பக்கம் நிற்பது அகங்காரம் ஆகும்.

செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தை விரித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. அதுதான் நிலைமை. 

நாடு முன்னோர்கள் உருவாக்கியது. உருவாக்கியர்கள் மக்கள். 

திருதிராஷ்டிரனுக்கோ, துரியோதனனுக்கோ உரிமை வந்தது என நாம் சொல்வது தர்மக் கற்பனையே ஆகும். 

அதையே வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். பிறப்பினால் இப்பூமியில் சகலருக்கும் சகல உரிமைகளிலும் சம உரிமை உண்டு. 

செஞ்சோற்றுக் கடனின் உச்சபட்சம் ஒன்றையும் பாருங்கள். பிள்ளையாரே உனக்கு எத்தனை தேங்காய் உடைச்சேன், கொஞ்சமாவது நன்றி இருக்கா உனக்கு? எனத் திட்டுகிறான் பக்தன்.

உண்மையில் உடமை என்ற ஒன்று இல்லவே இல்லை எனப் பகவத் கீதையும் சொல்கிறது. அலெக்ஸாண்டரும் தன் இறுதிக் காலத்தில் சொன்னார். . 

ஆக கர்ணன், பீஷ்மர், துரோணர் போன்ற செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறேன் என்ற அகங்காரிகள் சிறந்தவர்கள் அல்ல.

நல்லதைச் செய்தல் பிறவியின் கடமை. புரத்தலும் அதில் ஒன்றுதான். என் உயிர் காப்பாற்றிய ஒரு மருத்துவர் ஒரு உயிர்க்கொல்லி தொற்றுவியாதியை என்னைப் பரப்பச் சொல்கிறார். நான் செய்யலாமா? கூடாதா? 

செய்வதுதான் செஞ்சோற்றுக் கடன் என்பீர்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பிறந்தது முதல் அன்றுவரை என்னைக் காப்பாற்றி வந்தது மருத்துவர் அல்ல. உலகம். 

உலகில் உள்ள மக்களின் வேறுபட்ட உழைப்புகள், இயற்கை. நான் என்பங்கு உழைப்பைச் சமூகத்திற்குத் தந்தேன் வாழ்ந்தேன். அச்சமூகத்திற்கு இதை விட மிகமிக அதிகம் செஞ்சோற்றுக் கடன் பட்டிருக்கிறேன். 

உன் உயிரை மட்டுமே கொடுக்க உனக்கு உரிமை உண்டு. அடுத்தவன் உயிரை ஏன் எடுக்கிறாய் என்பதுதான் இங்கே தொக்கி நிற்பதாகும். 

உடல் தந்த அன்னை தந்தையே குழந்தையைக் கொல்லுதல் தவறு என்கிறோம். தர்மமல்ல என்கிறோம். காரணம் உயிர் தந்தது இறைவன். 

தர்மம் மிகச் சூட்சுமமானது. 

பீஷ்மரோ, கர்ணனோ, துரோணரோ, சல்லியனோ தர்மத்தை தம் அளவில் மட்டுமே யோசித்தார்கள். எனக்கு உணவிட்டான், என் மானம் காத்தான், நான் சபதம் செய்தேன். நான் உணவுண்டு வாக்களித்தேன். அதனால் போர்புரிவேன் என.

ஆனால் தர்மம் அவ்வளவு சிறியது அல்ல. செஞ்சோற்றுக் கடன் என்றால் இவர்கள் தம் உயிரை மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர, அடுத்தவர் உயிரைப் பறிக்கக் கூடாது.  அதுவும்  நல்லது செய்பவர்களென தான் அதிதீவிரமாக நம்புபவரின் உயிரை? 

அது எப்படித் தர்மமாகும்?

செஞ்சோற்றுக் கடன் என்றுச் சொல்லி வெறும் சாப்பாட்டிற்காக / மரியாதைக்காக / வாக்குத்தவறாமைக்காக கூலிப்படையாளியாக மாறு என்றா சொல்லித் தருகிறது தர்மம்? இல்லையே!


யுயுத்சு, தர்மனின் பக்கம் நிற்கிறான். தான் சரி என்று நினைக்கும் ஒன்றிற்காகப் போராடுகிறான். இவன் இவர்களை விடச் சிறந்தவன் ஆவான். 

சுயதர்மத்தை பெரிதாக மதித்தவர்கள் கர்ண, சல்லிய, பீஷ்ம, துரோணர்கள். பொதுதர்மத்தை பெரிதாக மதித்தான் யுயுத்சு. ஆனால் இதுதான் தர்மம் என்ற மாயையால் கட்டுண்டவர்கள் இவர்கள். சுயதர்மத்தை விட பொதுதர்மம் உயர்ந்தது. ஆனால் சுயதர்மத்திற்கும் பொதுதர்மத்திற்கும் முரண் வரக்காரணம் என்னவென்றால் அதைத்தான் மாயை என்கிறோம். 

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார்.

மகாபாரதமே குழப்பத்தையும் தருகிறது. பொறுமையுடன் இருந்தால் தெளிவையும் தருகிறது. 

வாய்மை என்பது என்ன என்று வள்ளுவர் சொல்லும்பொழுது பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்கிறார். ஆக பொதுதர்மத்திற்காக சுயதர்மத்தை விடுதலே தர்மம் என்ற விதிப்படி யுயுத்சு உயர்கிறான்.

ஆனால் மிக உயர்ந்தவன் அல்ல. ஏனென்றால குருஷேத்திரத்தில் மடிந்தது சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அல்லவே.. எத்தனை கோடி மனிதர்கள் மாண்டனர்? எதற்காக இத்தனை உயிர்கள் சாய்க்கப்பட்டது? மன்னர் குலம், பிராமணர் குலம் தவிர மற்ற உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? விழும் ஒவ்வொரு உயிருக்கான தர்மக்கணக்கு என்ன? அடுத்தவர் உயிர் மீது யாருக்கும் உரிமை இல்லை. 

விதுரர், இவர் செய்த செயல்தான் தர்மம். ஏனெனில் அவர் தன் கடமையை மட்டுமே செய்கிறார். செய்கின்ற பணிக்கு உரிய பலனை மட்டுமே அனுபவிக்கிறார். அத்தினாபுரத்தில் குடிசையில் வாழ்ந்த ஒரே மந்திரி இவர்தான். எதிலும் இவன் பெருமையை எடுத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் நல்லதை மட்டுமே உரைத்தார். எந்த உயிரென்றாலும் சமமாகப் பார்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக எப்பக்கமும் சாராமல் இறைவனை மட்டுமே சார்ந்தார்.

விதுரர் மஹாபாரதப் போரில் மட்டுமல்ல எந்தப் போரிலும் பங்கு கொள்ளவில்லை. தன் அண்ணன் மன்னன், பெரியப்பா பெரிய வீரர், அண்ணன் மகன்கள் பெருவீரர்கள் என்ற மாயையில் சிக்காதவர்.

உடல்-உயிர்-உலகம் என அனைத்தையும் கொடுத்த இறைவனுக்கு உண்மையாகவும், அகங்காரம், மமகாரம் மற்றும் மாயைகளில் சிக்காத விதுரனுடையதே உண்மையானச் செஞ்சோற்றுக் கடன்.

இவரிடம் அகங்ககாரம் இல்லை. மமகாரம் இல்லை. இவர் யார் பக்கம் சார்ந்தும் இல்லை. தர்மம் தன்னைக் காத்துக் கொள்ளும் என்பதில் உறுதியானவர். இவர் யாரையுமே அழிக்கவில்லை, எல்லாம் ஒரு காரணத்தினால்தான் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கண்ணன் மற்றும் விதுரனின் உறவு மிக அற்புதமானது. தான் மறையும் முன்பு கூட உத்பவர் மூலம் விதுரனுக்கு பல தர்மங்களை, தத்துவங்களை விதுரனுக்குத் தருகிறார் கண்ணன்.


எல்லாம் இறைவனால் என்று என்பவன் செஞ்சோற்றுக் கடன் என்ற மாயையில் சிக்கிக் கொள்வதில்லை. ஏனென்றால் நீ எனக்கு உயிர் உதவி செய்திருந்தாலும் சரி செய்திருக்கா விட்டாலும் சரி, சரியானதை, கருணையுள்ளதை, தருமத்தைச் செய்வேன் என்கிறான். அவன் கொடுத்தவனுக்கும் உயிர் கொடுப்பான். கொடுக்காதானுகும் உயிர் கொடுப்பான்.

அப்படி இல்லாமல் இது நான், இது என்னுடையது, இது அவனுடையது என் மாயையால் மயக்கப்பட்டவருக்கு மட்டுமே செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தையே உண்டு. 

செஞ்சோற்றுக் கடன் என்பது இறைவனுக்கு உண்மையாய் இருப்பது ஆகும்.. அதனால் விதுரனே செஞ்சோற்றுக் கடன் தர்மத்தை சரியாக கடைபிடித்தார்.

Sunday, November 1, 2015

சக்தி வாய்ந்த துளி!



பிறருக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளி, இரத்தத் துளி இரண்டிலும் வலிமையானது எது..?, காரணம்..??

 

  

கண்ணீர்த்துளி - அன்பினால், கருணையினால் இப்படி உணர்வுகளினால் உதிர்வது. கண்ணீர் அன்பின் அடையாளம் ஆனாலும் வெறும் கண்ணீர் இயலாமையைக் காட்டுவதாகும். 

 

இரத்தத்துளி - உணர்வுகளினால் தூண்டப்பட்ட உடல்களில் இருந்து வழிவது. பிறருக்காக இரத்தம் சிந்தும் முன் ஒரு துளிக் கண்ணீராவது சிந்தப் பட்டிருக்கும். அதே சமயம் இரத்தம் சிந்துவது இன்னொருவன் கண்ணில் இன்னொரு துளி கண்ணீரை உண்டாக்கும்.. 

 

ஒரு வகையில் இரண்டுமே பலவீனமானவைதான். 

 

உண்மையிலேயே வலிமையானது பிறருக்காக உதிர்க்கப்படும் வியர்வைத்துளிதான். இதுதான் கண்ணீர்த்துளி, இரத்தத்துளி இரண்டையும் நிறுத்தும் சக்தி கொண்டது.