Tuesday, July 12, 2016

காற்று வெளியிடை!!!





காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது

ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு

ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த

வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை

வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்

விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்


                                                                       (காற்று)



நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த

நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்

போயின, போயின துன்பங்கள் - நினைப்

பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்

வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா

என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்

தீயினிலே வளர் சோதியே - என்றன்

சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

                                                                         (காற்று)


காற்றின் குணங்கள் பல.


அதை ஸ்பரிசத்தால் மட்டுமே உணர முடியும். கையில் பிடித்தால் நழுவி விலகும்.


காற்றில் தென்றலும் உண்டு புயலும் உண்டு.



பல்வேறு சுழிவுகள் தோன்றி மறையும் அற்புத விந்தை உலகம் காற்றுவெளி.

கையில் பிடித்தால் நழுவும் இடை கொண்ட கண்ணம்மா.


இழுத்து அணைக்கிறார், இலாவகமாய் அவள் இடை பிடியிலிருந்து நழுவுகிறது.


நீரிடை என்று சொல்லி இருக்கலாமே ஏன் காற்று இடை என்று சொன்னார்?


நீருக்கு கொள்ளும் கலன் தேவை. காற்றுக்குத் தேவையில்லை.

நீர் நீ குடித்தால்தான் உன்னுள் புகும். காற்று தன்னிஷ்டப்படி நுழைந்து விடும்.


நீரிலிருந்து ஒதுங்கி விடலாம்.. காற்றிலிருந்து இயலாது

அவர் நினைவு முழுதும் ஆக்ரமிருத்திருக்கும் காற்று அவள் இடை.


அவள் இடையில் முகம் புதைந்த அவர் சொல்லுகிறார்.


காற்று வெளியிடைக் கண்ணம்மா உந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்.


இன்னொரு அர்த்தமும் இருக்கிறது.


தன் காதலியுடன் கொண்ட உறவினை எண்ணிப்பாடுவது.


காற்று மட்டுமே நமக்கு இடையிலிருக்க உன்னுடன் கொண்ட காதல் உறவினை எண்ணிப்பார்க்கிறேன்.

அமுது ஊறுகின்ற இதழ் அவளுடையது.


இதழமிழ்தத்தமிழ்ந்தமிழ்ந்து வழியும் தமிழமுதம்.

அவள் விழிகள் ஊறிய நிலவு.


நிலவை எடுத்து அமிழ்தில் அமிழ்த்தி ஊறவைத்ததைப் போன்ற விழிகள்.



அவள் கண்மூடினால்

அது அமாவாசை.

மெல்ல விழி திறந்தால்

மூன்றாம் பிறை.

அரைக்கண் என்றால்

அஷ்டமி.

விழி விரியப்

பார்த்தால் பௌர்ணமி.



அரைக்கண்ணை விட சற்றே

அதிகம் திறந்து

நாணினால் அவள்

நவமி



உன்
ஓர் விழி
மூடித் திறப்பதில் ஒரு மாதம்
ஓடிவிடுகிறது




தூய பொன் பத்தரை மாற்று.



அவள் மேனி தூயபொன் இல்லையாம். பத்து மாற்றுதான் அவள் மேனி. ஏன்?



பத்தரை மாற்றுப் பொன் உறுதியற்றது. அதில் வடிவு அமைவது சிரமம்.



பத்து மாற்றென்றால் அது 22 கேரட் தங்கம் போல. அதனால் உறுதியான கட்டான மேனி அமையும்.



வையம் என்றால் உலகம் என்று பொருளென்றாலும், வையம், அதாவது வைக்கப்படும் இடம் என்று பொருள்.

அவள் அவரின் உலகம். அவள் மீது அவர் படர்ந்திருக்கும் வேளையில்.



அந்த நிலவுக்கண்கள், அமுத இதழ்கள் காற்றிடை ஆகியவை வேறு நினைவே வராமல் அமுதுண்ணும் அமரனாகவே அவரை மாற்றி விடுகிறதாம்.



கண்ணம்மாவே நீயே எனது இனிய உயிர்



எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.



உன்னையே பெரும் பொற்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.



எந்தன் வாயினிலே அமுதூறுதே...



முதல் பத்தியில் அவள் இதழ் அமிழ்த ஊற்று என்றவர் இப்பத்தியில் தன் வாயில் அமிழ்து ஊறுகிறது என்கிறார். மறைமுகமாக தான் அவளின் இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுத்ததைச் சொல்கிறார்.



கண்ணம்மா, கண்ணம்மா... கண்ணம்மா எனப் பலமுறைச் சொல்கிறார்.... பேர் சொல்ல அமுதூறுகிறது என தான் முத்தம் கொடுத்த சேதியை மறைக்க.


உயிர்த் தீயினிலே வளர் ஜோதியே


இந்த வரி மிக முக்கியம்.. உயிரைத் தீயாக உருவகப்படுத்துகிறார்.


சோதி என்றால் அதுவும் தீதான், அப்படியென்றால்?


உயிர் தீயென்றால் தீ உயிர்தானே.


உயிரின் உயிரே உயிரின் உயிரே .... என்று எளிமையாகச் சொல்லலாம்.



தீ எரிக்கும் தன்மை உடையது.. எப்படிப்பட்ட எரித்தல் என்றால் அதற்கு எல்லாம் சமம். எதையுமே எரிக்கும். காதலும் அப்படியே. அதற்கு யாரைப் பீடிக்கிறோம் என்ற வித்தியாசமில்லை.



காதல் பிடித்தவனின் உயிரை அது எரிக்கும்.



சிந்தனை என்பது யோசனை.


சித்தம் என்பது இறுதியான உறுதியான முடிவு.


உன்னைத் தவிர எதையுமே சிந்திக்க முடியவில்லை. உன்னை மட்டுமே அடைய விரும்புகிறேன் என்கிறார் கண்ணம்மாவை நோக்கி.


இப்போ கண்ணம்மாவை கண்ணனாக்கி விளக்கம்.


உலகமே கண்ணனின் வயிற்றில் உள்ளது என்கிறது விசுவரூப தரிசனக்கோலம்.


அப்படியானால் வயிற்றைச் சுற்றி அமைந்த காற்றுவெளிதானே கண்ணனின் இடையாக இருக்க முடியும்.


காதல் என்பது பரமாத்மா ஜீவாத்மா மீது கொண்டிருக்கும் பற்று.


காற்றையே இடையாகக் கொண்டக் கண்ணனே, பரமாத்மாவான நீ ஜீவாத்மாக்களின் மீதும் காட்டும் காதலை எண்ணி மகிழ்கிறேன்.


உன் வாயிலிருந்து வரும் சொற்கள் அமரத்துவம் வாய்ந்தவை. அமரத்துவம் தரும் அமிழ்தம். உன் கண்கள் அருள்பொழியும் ஈர நிலவு.


கண்ணனின் அவதாரம் பத்து. எனவே அவர் பத்து மாற்றுப் பொன். மாறுடும் பத்து அவதார உடல் கொண்டவன் அவன்.


அந்தக் கண்ணனிடம் பாரதியார் என்ன வேண்டுகிறார்.


இந்த பூமியில் நான் வாழும் காலம் வரை, என் நினைவு உன்னை விட்டு விலகாமல் இருக்க அருள் செய். உன் நினைவிலேயே திளைத்து, ஊறி, விண்ணுலகம் அடையும் போது உன்னுலகம் அடைய வை என்று வேண்டுகிறார்.

கண்ணனே நீயே எனது இனிய உயிர்.

எந்த நேரமும் உன்னையே நான் போற்றிக் கொண்டிருப்பேன்.

உன்னையே பெரும்செல்வமாக நான் கொண்ட பொழுதினில் என் துன்பங்கள் எல்லாம் பறந்தோடின.

கண்ணா, கண்ணா என்று அழைப்பது மிக இனிமையாக இருக்கிறது, அந்த நாமத்தின் இனிமையால் வாயினில் அமுதூறுகிறது.


இறைவன் ஆன்மாவுக்குள் ஆன்மாவாக இருக்கிறான் என்பதை உயிர்த்தீயினிலே வளர் ஜோதியே சொல்கிறது.


கண்ணனே சிந்தனை முழுதும் வியாபித்து இருக்கிறான். கண்ணனே அவரின் அடைய விரும்பும் சித்தமாக உறுதிப் பொருளாகவும் இருக்கிறான்.


ஆக கண்ணன் - கண்ணம்மா எதைக் கருப்பொருளாக எடுத்தாலும் பொருந்துவதாக இந்தப் பாட்டு இருக்கிறது.