Wednesday, February 21, 2018

மகாபாரதம் - கால அட்டவணை

தற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்குத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.


மகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.

பிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.

மஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு

நட்சத்திரங்கள்


தமிழ்Englishதமிழ்Englishதமிழ்English
01அஸ்வினிAshwini10மகம்Magha19மூலம்Moola
02பரணிBharani11பூரம்Poorva20பூராடம்Poorvashadha
03கார்த்திகைKrutika12உத்திரம்Uttara21உத்திராடம்Uttarashadha
04ரோகிணிRohini13அஸ்தம்Hastha22திருவோணம்Shravana
05மிருகசீரிஷம்Mruga14சித்திரைChitra23அவிட்டம்Dhanishta
06திருவாதிரைArdra15சுவாதிSwati24சதயம்Satabhisha
07புனர்பூசம்Punarvasu16விசாகம்Vishakha25பூரட்டாதிPoorvabhadra
08பூசம்Pushya17அனுஷம்Anuradha26உத்திரட்டாதிUttarabhadra
09ஆயில்யம்Aslesha18கேட்டைJyeshta27ரேவதிRevati

மாதங்கள்


மாதம் (தமிழ்)சமசுகிருதம்செந்தமிழ்In English
01சித்திரைசைத்ரமேழம்Chaitra
02வைகாசிவைஸாயுகயுவிடைVaishakha
03ஆனிஆநுஷி / ஜ்யேஷ்டஆடவைJyeshta
04ஆடிஆஷாடகடகம்Aashadha
05ஆவணிஸ்யுராவணமடங்கல்Shravana
06புரட்டாசிப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூகன்னிBhadrapada
07ஐப்பசிஆஸ்யுவிநதுலைAshwin
08கார்த்திகைகார்திக:நளிKartika
09மார்கழிமார்கயூஸீயுர்ஷசிலைMargasheersha
10தைதைஷ்யம்/ பவுஷ:சுறவம்Pausha
11மாசிமாககும்பம்Maagha
12பங்குனிபாயுல்குயூந:மீனம்Phalguna

வருடங்கள்


தமிழ்Englishதமிழ்Englishதமிழ்English
01பிரபவPrabhava21சர்வஜித்தSarvajittu41பிலவங்கPlavanga
02விபவVibhava22சர்வதாரிSarvadhari42கீலகKeelaka
03சுக்கிலSukla23விரோதிVirodhi43சவுமியSowmya
04பிரமோதூதPramoodotha24விகிர்திVikriti44சாதாரணSadharana
05பிரசோத்பத்திPajothpatthi25கரKhara45விரோதிகிருதுVoridhikrutu
06ஆங்கீரசAgnirasa26நந்தனNandana46பரிதாபிParidhavi
07ஸ்ரீமுகSrimukha27விஜயVijaya47பிரமாதீசPramadicha
08பவBhava28ஜயJaya48ஆனந்தAnanda
09யுவYuva29மன்மதManmatha49இராக்ஷஸRakshasa
10தாதுDhata30துன்முகிDurmukhi50நளNala
11ஈசுவரEswara31ஏவிளம்பிHavilambi51பீங்களPingala
12வெகுதானியBahudhanya32விளம்பிVilhambi52காளயுக்திKalayukti
13பிரமாதிPramadi33விகாரிVikari53சித்தார்த்திSiddharthi
14விக்ரமVikrama34சார்வரிSarvari54ரவுத்ரிRoudri
15விஷுVishu35பிலவPlava55துன்மதிDurmati
16சித்திரபானுChitrabhanu36சுபகிருதுShubhakritu56துந்துபிDundubhi
17சுபானுSwabhanu37சோபகிருதுSobhakruthu57உருத்ரோத்காரிRudhirodgari
18தாரணTharana38குரோதிKrodhi58இரத்தாக்ஷிRathakshi
19பார்த்திபParthiva39விஸ்வாவசுVishwavasu59குரோதன்Krodhana
20வியVyaya40பரிதாவிParidhavi60அக்ஷயAkshaya

கலியுகம்

பிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளில், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.

இனி மகாபாரத நிகழ்வுகள்

ஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.

1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.

2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.

3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)

4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.

5. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.


6. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகினி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.


7. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.

{பீமனை விட 1 வருடம் இளையவன்}
{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }
{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}

8. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.

{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}
{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}
{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }
{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}


9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.

10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.

11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.


12. வில்வித்தைக் கண்காட்சி: பிலவ வருடம் வைகாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்றது. 

{இப்போது யுதிஷ்டிரனுக்கு 30-31 வயது}



13. மன்னன் துருபதனைக் கைப்பற்றியது: பிலவ வருடம் வைகாசி மாத தேய்பிறை 5வது நாளில் ஆரம்பித்து 1 வருடம் 4 மாதம் 5 நாட்களுக்கு நடந்தது. அதாவது சபகிருது (Subhakrit) வருடம் திருவாதிரை (Bhadrapada) {Ardra} மாதம் வளர்பிறை 10 வது நாள் வரை நடந்தது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 31 வருடம் 5 நாள்.
{துருபதனை கைதாக்கிய போது பீமனுக்கு 30 வயது, அர்ஜுனனுக்கு 29 வயது, நகுல சகாதேவர்களுக்கு 28 வயது என அறியவும்}

15. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தல் 5 வருடம் 4 மாதம் 20 நாட்களுக்கு, அதாவது பிலவங்க (Plavanga) வருடம் மாசி (Maagha) மாதம் அமாவசை வரை இருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 36 வருடம் 4 மாதம் 25 நாள்.

16. பிலவங்க வருடம், மாசி மாதம் வளர்பிறை 8ம் நாளில் பாண்டவர்கள் வாரணாவதத்திற்குள் நுழைந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 36 வருடம் 4 மாதம் 3 நாட்கள்.

17. கீலக (Keelaka) வருடம், பங்குனி மாதம் 13 / 14ம் நாள் இரவு மூன்றாம் ஜாமத்தில் அரக்கு மாளிகைக்குத் தீ வைக்கப்பட்டது. (ஒரு நாள் என்பது 8 ஜாமம் கொண்டது. 4 பகலிலும், 4 இரவிலும்) {இரவை நான்காகப் பிரித்தால் வரும் 3வது ஜாமத்தில் தீ வைக்கப்பட்டது}. பாண்டவர்கள் கீலக வருடம் பங்குனி மாத அமாவாசை அன்று பகலில் கங்கை நதியைக் கடந்தனர்.

18. ஹிடிம்ப வதம்: சவுமிய (Sowmya) வருடம், சித்திரை மாதம், வளர்பிறை முதல் நாளில் ஹிடிம்பன் கொல்லப்பட்டான்.
{பீமனால் ராட்சசன் ஹிடிம்பன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}

19. கடோத்கசன் பிறப்பு: சவுமிய வருடம், ஐப்பசி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் கடோத்கசன் பிறந்து அன்றே பெரிய மனிதனாக வளர்ந்தான்.
{பீமனுக்கும் ராட்சசி ஹிடிம்பிக்கும் கடோத்கசன் பிறந்த போது பீமனுக்குச் சுமார் வயது 37}

20. பாண்டவர்கள் சாலிஹோதாஷ்ரமம் என்ற இடத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சவுமிய வருடம் ஐப்பசி (Ashwayuja) {Ashwin} மாத வளர்பிறை 2ம் நாளில் இருந்து சாதாரண (Sadharana) வருடம் சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 38 வருடம் 5 மாதம் 7 நாட்கள் ஆகும்.

21. பாண்டவர்கள் ஏகச்சக்கரபுரத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தனர். அது சாதாரண வருடம், சித்திரை மாதம் வளர்பிறை 2ம் நாளில் இருந்து, ஐப்பசி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை ஆகும்.

22. பகன் வதம்: சாதாரண வருடம் வளர்பிறை 10ம் நாளில். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 39 வருடம் 5 நாள் ஆகும்.
{பீமனால் பகாசுரன் கொல்லப்பட்ட போது பீமனுக்குச் சுமார் வயது 37}

23. பாண்டவர்க்ள ஏகச்சக்கரபுரத்தில் மேலும் 1 மாதமும் 10 நாட்களுக்கும் தங்கினர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் மார்கழி (Margashirsha) மாதம், தேய்பிறை 5ம் நாள் வரை தங்கியிருந்தனர். பிறகு அவர்கள் பாஞ்சால நாடு நோக்கி நடந்து 3 நாட்களில் தௌமியரின் ஆசிரமத்தை அடைந்தனர். அங்கே அவர்கள் 15 நாட்கள் தங்கினர். 18வது நாளில் அவர்கள் {பாண்டவர்கள்} பாஞ்சால நாட்டுத் தலைநகரத்தை அடைந்தனர். அதாவது சாதாரண (Sadharana) வருடம் தை (Pausha) மாதம் 7ம் நாள் அடைந்தனர்.


24. திரௌபதி சுயம்வரம் சாதாரண வருடம் தை மாதம் வளர்பிறை 10ம் நாளில் நடைபெற்றது.


25. பாஞ்சால நாட்டில் பாண்டவர்கள் ஒரு வருடம் 15 நாட்கள் தங்கியிருந்தனர். அதாவது விரோதிகிருது (Virodhikrithu) வருடம், தை மாதம் அமாவாசை நாள் வரை தங்கியிருந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 40 வருடம் 3 மாதம் 25 நாள் ஆகும்.

26. விரோதிகிருது வருடம், மாசி மாதம் வளர்பிறை 2ம் நாள் அன்று பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் அழைக்கப்பட்டுப் பாதி நாட்டை அடைந்தனர். அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 5 வருடம் 6 மாதங்களுக்குத் தங்கினர். அதாவது பிங்கள (Pingala) வருடம் ஆவணி மாதம் வளர்பிறை 2ம் நாள் வரை தங்கினர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 45 வருடம் 9 மாதம் 27 நாள். இந்திரப்பிரஸ்த நகரம் அந்தக் காலத்தில் தான் கட்டப்பட்டது.

27. பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.
{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}

28. அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி (Kalayukthi) வருடத்தில் சென்று பிரமோதூத (Pramodhoota) வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.
{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57. அபிமன்யு பிறக்கும் போது அர்ஜுனனுக்குச் சுமார் வயது 57}

29. அதே வேளையில் திரௌபதி தனது ஐந்து கணவர்கள் மூலம் ஐந்து மகன்களைப் பெற்றெடுத்தாள்.

30. பிரமோதூது வருடம் ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.

31. பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி (Prajopatthi) வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.

32. பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித்த (Sarvajit) வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.

33. பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் இடையில் நடைபெற்ற மல்யுத்தம் சர்வஜித்த வருடம் கார்த்திகை (Kartika) மாதம் வளர்பிறை 2ம் நாள் துவங்கி 14 நாட்கள் தொடர்ந்து, 14வது நாள் மாலையில் ஜராசந்தன் கொல்லப்பட்டான்.

34. சர்வதாரி (Sarvadhari) வருடம் சித்திரை மாத பௌர்ணமியில் ராஜசூய வேள்வி தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 76 வருடம் 6 மாதம் 15 நாள்.

35. பகடை ஆட்டம்: இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். ஆகப் பாண்டவர்கள் விரோதிகிருது வருடம் மாசி மாத வளர்பிறை 2ம் நாள் தொடங்கிச் சர்வதாரி வருடம் ஆவணி மாதம் தேய்பிறை 7ம் நாள் வரை 36 வருடம் 6 மாதம் 20 நாட்களுக்கு இந்திரப்பிரஸ்தத்தை ஆண்டார்கள்.
பகடை ஆட்டம் நடைபெற்றபோதுயுதிஷ்டிரனுக்கு வயது :76பீமனுக்கு வயது :75அர்ஜுனனுக்கு வயது :74நகுல சகாதேவர்களுகு :73துரியோதனனுக்கு வயது :75கர்ணனுக்கு வயது :92கிருஷ்ணனுக்கு வயது :74
36. கானக வாழ்வு: சர்வதாரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் 8-ம் நாளில் பாண்டவர்களின் கானக வாழ்வு தொடங்கியது. அப்போது யுதிஷ்டிரனின் வயது 76 வருடம் 10 மாதம் 18 நாட்களாகும். ராட்சசன் கிர்மீரன் அன்றிலிருந்து 3-ம் நாளில், அதாவது தேய்பிறை 10-ம் நாளில் கொல்லப்பட்டான். 12 வருட காட்டு வாழ்க்கை சார்வரி வருடம், ஆவணி மாதம் தேய்பிறையின் ஏழாம் நாளில் முடிவுற்றது.

37. 13-ம் ஆண்டுக் கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய காலம் பிலவ ஆண்டு ஆவணி மாதம் தேய்பிறையின் 7ம் நாளில் முடிவுற்றது.

38. கீசகன், பிலவ ஆண்டு ஆடி மாத தேய்பிறையின் 8ம் நாள் இரவில் கொல்லப்பட்டன். அவனது தம்பிகள் அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் கொல்லப்பட்டனர்.

39. இவையனைத்தும் சந்திரமான வருடங்களென்பதால், ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 2 அதிக மாதங்கள் இருக்கும். 13 வருடங்களில் 5 அதிக மாதங்களும், 12 நாட்களும் இருந்திருக்கும். ஆனால் இவை அதிக மாதங்கள் எனச் சந்திரமான வருடங்களில் கலக்கப்பட்டிருந்தன. திதிவயங்கள் போன்றவற்றில் பீஷ்மரும், யுதிஷ்டிரனும் இந்தக் கணக்கீடே சரி என்று அதையே பின்பற்றினர், ஆனால் துரியோதனனோ அந்தக் காலங்களில் ஏற்றுக்கொள்ளப்படாத சூரியமான வருடங்களின்படி பாண்டவர்கள் கண்டறியப்பட்டதாக வலியுறுத்தினான்.

40. மறைந்திருக்க வேண்டிய காலம் முந்தைய நாளே முடிந்ததால், அர்ஜுனன் தன்னை வெளிக்காட்டிக் கொண்டான். பிரமோதூத ஆண்டு முதல் சார்வரி ஆண்டுவரை 30 ஆண்டுகளாக அர்ஜுனன் தன் வில்லான காண்டீவத்தைத் தாங்கி வந்தான். அர்ஜுனன் உத்தரனிடம் மேலும் 35 ஆண்டுகள் அவன் அதைத் தாங்கப்போவதாகச் சொன்னான். அடுத்த நாளான தேய்பிறையின் 9ம் நாளில் பாண்டவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 89 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களாகும்.

41. பாண்டவர்கள் {விராட தேசத்தில்} உபப்லாவ்யத்தில் 1வருடம் 2 மாதம் 17 நாட்களுக்குத் தங்கியிருந்தனர். இந்நாட்களில்தான் ஆலோசனைகளும், சுபகிருத ஆண்டு ஆனி மாதத்தில் உத்தரை அபிமன்யு திருமணமும், படைகளைத் திரட்டுவதும், துருபதன் புரோகிதர் மற்றும் சஞ்சயன் ஆகியோர் செய்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐப்பசி {Aswyuja} மாதத்தில் தீமையையும், அழிவையும் முன்னறிவிக்கும் வகையில் சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் நேர்ந்தன.

42. ஸ்ரீகிருஷ்ணனின் அமைதிக்கான பேச்சுவார்த்தை: சுபகிருது ஆண்டுக் கார்த்திகை மாதம் வளர்பிறை 2ம் நாளில், ரேவதி நட்சத்திரத்தில் புறப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன், 13ம் நாளில் ஹஸ்தினாபுரத்தை அடைந்து, அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தேய்பிறையின் 8ம் நாள் வரை நடத்தினான். கடைசி நாளில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தினான். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அதே நாளில் பூசம் நட்சத்திரத்தில் தன் பயணத்தைத் தொடங்கி, கர்ணனிடம் 7 நாட்களில் அமாவாசை நாளில் கேட்டை நட்சத்திரத்தில் அனைவரும் பெரும்போருக்காகக் குருக்ஷேத்திரத்தில் கூட வேண்டும் என்று சொல்லி உபப்லாவ்யம் திரும்பினான்.

43. எனவே, பாண்டவர்கள் உபப்லாவ்யத்தில் 1 வருடம் 2 மாதங்கள் 17 நாட்கள் + 15 நாட்கள் = 1 வருடம் 3 மாதங்கள் 2 நாட்கள் தங்கியிருந்தனர்.

44. பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரு படையினரும் குருக்ஷேத்திரத்திற்குப் புது நிலவில் அமாவாசையில் சென்றனர். மார்கழி மாதம் வளர்பிறை இரண்டாம் நாளில் இருந்து 12ம் நாள் வரை படைகளின் பாசறை அமைப்பதும், போர் ஒத்திகைகளும் நடந்தன.

45. மகாபாரதப் பெரும்போர் சுபகிருத வருடம் மார்கழி மாதம் வளர்பிறை 13/14ம் நாள், செவ்வாய்க்கிழமை பரணி நட்சத்திரத்தில் தொடங்கியது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 91 வருடம், 2 மாதம் 9 நாட்களாகும். அதற்கு முந்தைய நாளில் அதாவது வளர்பிறை 11/12ம் நாளில் படைகள் வியூக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அர்ஜுனன் மயங்கினான். அதன் காரணமாகக் கிருஷ்ணன் புகழ்பெற்ற பகவத்கீதை உரையாடலை அர்ஜுனனிடம் நிகழ்த்தினான். குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது :89பீமனுக்கு வயது :88அர்ஜுனனுக்கு வயது :87நகுல சகாதேவர்களுகு :86துரியோதனனுக்கு வயது :88கர்ணனுக்கு வயது :105கிருஷ்ணனுக்கு வயது :87

46. பீஷ்மரின் வீழ்ச்சி: மார்கழி தேய்பிறை 7ம் நாளில்

47. அபிமன்யுவின் மரணம்: அபிமன்யு மார்கழி மாதம் தேய்பிறை 10ம் நாளில் {போரில் சக்கரவியூகத்தில்} கொல்லப்பட்டான். அப்போது அவனுக்கு {அபிமன்யுக்கு} வயது 32 வருடங்களாகும் (பிரமோதூதம் முதல் சுபகிருது வரை). அவனது திருமணம் ஆனி மாதத்தில் நடந்ததால் 6 மாத காலமே அவன் திருமண வாழ்வை வாழ்ந்திருந்தான். அவன் இறக்கும்போது உத்தரை 6 மாத கர்ப்பிணியாக இருந்தாள்.


48. சைந்தவனின் {ஜெயத்ரதன்} மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை பதினோறாம் நாளில் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான். அன்று இரவும் போர் தொடர்ந்தது. துரோணர் மார்கழி மாதம் தேய்பிறை பனிரெண்டாம் நாளில் நடுப்பகலில் கொல்லப்பட்டார்.


49. கர்ணனின் மரணம்: மார்கழி மாதம் தேய்பிறை 14ம் நாளில் கர்ணன் கொல்லப்பட்டான். சல்லியன் மார்கழி மாதம் அமாவாசை அன்று கொல்லப்பட்டான்.

50. துரியோதனனின் வீழ்ச்சி: மார்கழி மாதம் அமாவாசை / தைமாதம் வளர்பிறை முதல் நாள் மாலையில் அவன் வீழ்ந்தான். அடுத்த நாள் காலையில் தை மாதம் வளர்பிறை முதல் நாளில் அவன் இறந்தான்.

51. பலராமன் கார்த்திகை மாதம் தேய்பிறை 5ம் நாளில், பூச நட்சத்திரத்தில் தன் யாத்திரயைத் தொடங்கினார். அதேபோல நாள் வாரியாகவும், நட்சத்திர வாரியாகவும் அந்த யாத்திரை 42 நாட்கள் நடந்தது.

52. அஸ்வத்தாமன் மார்கழி மாதம் அமாவாசை / தை மாதம் வளர்பிறை 1ம் நாள் இரவில் பாண்டவர்களின் மகன்களைக் கொன்று அந்தப் பயங்கரச் செய்தியை துரியோதனனிடம் வளர்பிறை 1ம் நாள் காலையில் சொன்னான். தைமாதம் வளர்பிறை 1ம் நாளில் அஸ்வத்தாமன் வீழ்த்தப்பட்டான்.

53. பாண்டவப் படைகள் 7 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 551,33,83,260. 
   கௌரவப் படைகள் 11 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 866,38,87,960, 
   மொத்தம் 18 அக்ஷௌஹிணிகள் ஆகும் = 1417,72,71,240.

பாண்டவர்களின் தரப்பில், பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்யகி, யுயுத்சு ஆகியோரையும், கௌரவர் தரப்பில், கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமன் ஆகியோரையும் தவிர எஞ்சிய அனைவரும் கொல்லப்பட்டனர். யுதிஷ்டிரன், போரில் 94 கோடி பேருக்கு மேல் கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்தான்.

பாண்டவ வீரர்கள் கௌரவப்படையினரை எப்படி அப்புறப்படுத்தினர் என்ற தகவல்கள் இக்காவியத்தில் தெளிவாக இல்லை. 13வது நாளில் அபிமன்யு மட்டும் 0.5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான். 14வது நாளில் அர்ஜுனன் மட்டும் 5 அக்ஷௌஹிணி படையினரைக் கொன்றான்.

54. பாண்டவத்தரப்பைத் தாக்கி

பீஷ்மர் மட்டும் கிட்டத்தட்ட 1.27 அக்ஷௌஹிணிகள் = 100,00,00,000துரோணர் மட்டும் கிட்டத்தட்ட 1.00 அக்ஷௌஹிணி = 78,75,26,180கர்ணன் மட்டும் கிட்டத்தட்ட 2.37 அக்ஷௌஹிணிகள் = 186,28,78,540சல்லியன் மட்டும் கிட்டத்தட்ட 0.29 அக்ஷௌஹிணி = 22,60,46,000அஸ்வத்தாமன் மட்டும் கிட்டத்தட்ட 0.09 அக்ஷௌஹிணி = 7,20,24,400 

போர்வீரர்களைக் கொன்றனர்.

எஞ்சிய போர்வீரர்கள் 1.98 அக்ஷௌஹிணிகள் = 156,48,08,140மொத்தம் 7.00 அக்ஷௌஹிணிகள் = 55,33,83,260

55. அப்போது யுதிஷ்டிரனின் வயது 91 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 27 நாட்களாகும். பாண்டவர்கள் தை மாதம் வளர்பிறை 1ம் நாளில் இருந்து 13ம் நாள் வரை துக்கம் அனுசரித்தனர். 14ம் நாளில் மொத்த தகனம் நடந்தது. அதே நாள் மாலையில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றனர்.

56. யுதிஷ்டிரன் சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் மூடிசூடப்பட்டான். யுதிஷ்டிரனுக்கு அப்போது 91 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 10 நாட்களாகும்.

57. பாண்டவர்கள் (அம்புப்படுக்கையில் கிடந்த) பீஷ்மரிடம் தை மாதம் தேய்பிறை 2ம் நாளில் சென்று 8ம் நாள் வரை அவரது ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு ஹஸ்தினாபுரத்திற்குத் திரும்பி ,15 நாட்கள் ஹஸ்தினாபுரத்திலேயே தங்கி, மாசி மாதம் வளர்பிறை எட்டாம் நாளில் பீஷ்மரிடம் மீண்டும் சென்றனர். 8வது, 9வது, 10வது, 11வது நாட்களில் பீஷ்மர் தியானத்தில் இருந்தார். 12வது நாளில் தமது உடலைத் துறந்தார். அதன்காரணமாகவே தை மாதம் தேய்பிறையின் 8ம் நாள் முதல் 12ம் நாள் வரை பீஷ்ம பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை 7ம் நாளில் விழுந்த பீஷ்மர், 8ம் நாளில் இருந்து மாசி மாதம் வளர்பிறை 11ம் நாள் வரை, 48 நாள் கடந்திருந்தது. "அஷ்ட பஞ்சசதம் ராத்ரியாசயணச் சியாசியாம கதை AshtaPanchasatam ratryassayana syasyama gatha" என்பது பீஷ்மர் தான் போர்க்களத்தில் கழித்ததாகச் சொன்ன 58 (10 + 48) நாட்களாகும். "ஸரஷு நிஸிதகிரேசு யதா வர்ஷ சதம் தஹா Sarashu nisitagresu yatha varsha satam tatha" என்பது 100 வருடங்களாகத் தோன்றினாலும், கூரிய கணைகளில் படுத்திருந்த அந்தக் காலம் ஆகும். "திரிபாகச் சேஷ பக்ஷியம் சுக்லோ Tribhaga seshah pakshyam suklo" என்பது 3 பகுதிகள் மீந்திருந்த வளர்பிறைக் காலமாகும். (வளர்பிறை காலத்தை 10 பகுதிகளாக வகுத்தால், 7 பகுதிகள் என்பது 10.5 நாள் அல்லது 11வது நாள் நடைபெறும் காலமாகும். மீதம் மூன்று பகுதிகள் என்பது பௌர்ணமிக்கு முன்பு எஞ்சியிருந்த 4.5 நாட்களாகும்).

58. அஸ்வமேத யாகம் சோபகிருது வருடம் மாசி மாதம் 12ம் நாளில் தொடங்கியது. அதற்குச் சற்று முன்பே உத்தரைக்கு மகனாகக் குறைப்பிரசவத்தில் பரிக்ஷித் இறந்து பிறந்து பிறந்து, கிருஷ்ணனால் மீண்டும் உயிர்பெற்றான். 15 வருடங்களுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் திருதராஷ்டிரன் காடேகினான். அதற்கடுத்து 3 வருடங்களுக்குப் பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனைக் காண காட்டுக்குச் சென்றனர். விதுரன் இறந்தான். அதற்கு அடுத்து 1 மாதத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் காட்டுத்தீயில் கொல்லப்பட்டனர்.

59. பெரும்போர் முடிந்து 36 வருடங்கள் கழித்து வந்த வெகுதானிய வருடத்தில் துவாரகையில் தீய சகுனங்கள் தென்பட்டன. சாம்பன் கருத்தரித்து, {அதன் மூலம்} இரும்பு உலக்கை ஒன்று (முசலத்தைப்) பிறந்தது.

60. யுதிஷ்டிரன் 36 வருடங்கள், 2 மாதங்கள் மற்றும் 15 நாட்களுக்கு ஆட்சி செய்தான். சுபகிருது வருடம் தை மாதம் பௌர்ணமியில் இருந்து வெகுதானிய வருடம் தை மாதம் பௌர்ணமி வரை 36 வருடங்களும் 2 மாதங்களும் 15 நாட்களும் கழிந்திருந்தன. ஸ்ரீகிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கலியுகம் பிறந்த நாளானது பிரமாதி வருடம் வளர்பிறை 1ம் நாளாக இருந்தது.

61. 7 நாட்கள் கழித்து வளர்பிறையின் 7ம் நாளில் துவாரகை நகரம் பெருங்கடலில் மூழ்கியது. கலியுகத்திற்கு 75 வருடங்கள் முன்பு இருந்து கலியுகம் தொடங்கிய பின்னர் 25 வருடங்கள் வரை சப்தரிஷிகள் மக நட்சத்திரத்தில் இருந்தனர். யுதிஷ்டிரனின் காலகட்டமானது {Yudhishthir Shaka யுதிஷ்டிரனின் சகாப்தமானது} அவனது பட்டமேற்பு நாளில் இருந்து தொடங்கியது. அதன்படி, யுதிஷ்டிரன் காலகட்டத்தில் 36 வருடங்கள், 2 மாதங்கள், 15 நாட்களில் கிருஷ்ணன் தன் அவதாரத்தை முடித்தான்.

62. பாண்டவர்கள் அதற்கடுத்து 6 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு பிரமாதி வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 12 நாளில் தங்கள் முடிவை அடைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 128 வருடங்களும், 6 நாட்களுமாகும். 36 வயதுடைய பரீக்ஷித் அதே நாளில் ஹஸ்தினாபுரத்தில் மகுடம் சூட்டப்பட்டான்.

63. சுவர்க்கரோஹணம் என்பது இந்தக் காவியத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அது 26 வருடங்களுக்குப் பிறகாக இருக்கலாம். பாண்டவர்களின் சுவர்க்கரோஹணத்திற்குப் பிறகே, அதாவது கலியுகம் தொடங்கி 26 வருடங்கள் கழித்தே முனிவரான வேத வியாசர் இந்தப் பெருங்காப்பியத்தைக் கணபதியிடம் உரைத்தார்.

64. பரீக்ஷித் 60 வருடங்கள் ஆண்டு, 25 வயதான தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு இறந்து போனான்.

65. எனவே, முனிவரான வேதவியாசரால் மகாபாரதம் எழுதப்பட்ட பிறகே பாகவதம் எழுதப்பட்டது. அது கலியுகத்தின் 60வது வருடத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.

66. துவாபர யுகத்தில், மனிதர்கள் 400 வருடங்கள் வரை வாழ்ந்தனர். வாழ்வில், பால்யம், யௌவனம், கௌமாரம், வார்த்தக்யம் {விருத்தப்பியம் Vriddhapyam} என்ற நான்கு நிலைகள் இருந்தன. துவாபர யுகத்தில் பால்ய பருவம் என்பது 40 வருடங்கள் வரையும் , யௌவனம் 120 வருடங்கள் வரையும், அதன்பிறகு கௌமாரம் மற்றும் வார்த்தக்ய பருவங்களும் இருந்தன. ஆனால் இப்போதோ இந்தக் கலியுகத்தில் பால்ய பருவம், 15 வருடங்கள் வரையும், யௌவன பருவம் 45 வருடங்கள் வரையும், கௌமார பருவம் 60 வருடங்கள் வரையும், வார்த்தக்யம பருவம் 60 வருடங்களுக்கு மேலும் என இருக்கிறது.

இந்தத் தகவல்கள் யாவும்  சம்ஸ்க்ருதப் பெருங்காப்பியமான மகாபாரதத்தில் இருந்தும், பல்வேறு உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் திரட்டப்பட்டவையாகும்.

- Dr.K.N.S.பட்நாயக்

தமிழில் செ. அருட்செல்வப்பேரரசன்.

No comments:

Post a Comment