Wednesday, July 18, 2018

தமிழுக்கு ஒரு தாலாட்டு!!!




உள்ளத்தில் உருவாகி உயிர்மூச்சில் கருவாகி
            உலகத்தில் பிறந்தாயடி - நீ
பள்ளத்தில் பாய்ந்துவரும் பைம்புனல் போலிந்த
            பக்தனைக் கவர்ந்தாயடி

அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
            அடிமைக்குத் தந்தாயடி - என்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
            உட்கார்ந்து கொன்டாயடி



எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
            எம்புலவர் வளர்த்தாரடி - பல
வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
            வஞ்சியுனக் களித்தாரடி

மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
            மணம்செய்து தந்தாரடி - என்
கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
            காவலர் பணிந்தாரடி



காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
            கன்னடத்தை யீன்றாயடி - உயர்
மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
            மலையாளம் யீன்றாயடி

தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
            தெலுங்கை நீதந்தாயடி - இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
            திராவிடம் படைத்தாயடி



விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
            வேறொருவர் கிடையாதடி - பாரில்
உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
            உனையன்றி வேறாரடி

அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
            ஆளவந்தாய் நீதானடி - வீசி
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
            வையத்தில் வாழ்வாயடி.

Sunday, July 15, 2018

நூல் வெளியீடு: மகாபாரதப் போர் ஆடியா? மார்கழியா?




தமிழ்நாட்டில் ஆடி 1 முதல் 18 வரை மஹாபாரதப் போர்க்களக் காலம் என்ற ஒரு செவிவழிச் செய்தியும், நம்பிக்கையும் உண்டு. ஆடி 18ஆம் பெருக்கு அன்று பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கழுவினார்கள், அதனால்தான் ஆறுகளில் ஆடிப்பெருக்கில் செந்நீர் ஓடும் என்று என் பாட்டி எனக்குக் கதை சொல்வதுண்டு. ஆடி மாதம் 18 ஆம் தேதி வரை நல்ல காரியங்களை ஒதுக்கி வைக்கின்றனர். காரணம் கேட்டால் போர்க்களக் காலம் என்கின்றனர். இந்த வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாகவே உண்டு.

பண்டிதர்கள் மார்கழி மாதம் போர்க்களக் காலம் என்பதால் அதை மலமாதம் என ஒதுக்கி வைக்கிறார்கள். பல மஹாபாரதக் காலக்கணிப்புகளும், ஜோதிட நூல்களும் மார்கழியில் போர் நடந்ததாகவே சொல்கின்றன.

பண்டிதர்களின் கணிப்பை, வானியல்-ஜோதிடம்-தர்க்கம் உதவியால் வியாச பாரதத்தின் மூல ஸ்லோகங்களில் இருந்தே தூள் தூளாக்கி அப்பாவி பாட்டிகளின் கர்ண பரம்பரை உண்மையை வெளிக்கொணரும் ஆய்வுக் கட்டுரை.

ஆடி மாதப் போர் ஏன் மார்கழி மாதப் போராக வலிய மாற்றப்பட்டது என்பதற்கான உண்மைக் காரணமும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

கிரக நிலை அலசல்கள் மூலமும், ஸ்டெல்லேரியம் மென்பொருள் மூலமும், பஞ்சாங்கக் கணிப்பு அடிப்படை மூலமும் மகாபாரத யுத்தம் நடந்த ஆண்டு, மாதம், தேதி ஆகியவற்றைத் துல்லியமாக கணித்து அளிக்கப்பட்டிருக்கிறது. கிரக நிலைகளும் தேதிகளும் மிகச் சரியாகப் பொருந்துவதால் இந்த ஆய்வின் உண்மைத் தன்மை, இந்திய வானவியலில் தொன்மை ஆகியவை உறுதிப்படுத்தப்படுகின்றன.

கி,மு 3172, ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி மகாபாரதப் போர் ஆரம்பம் என்னும் துல்லியமான கணிப்பின் அனைத்து ஆதாரங்களையும் முழு விளக்கங்களுடன் புரிந்து படிக்க ஒரு உண்மையான ஆய்வு நூல்.

மொத்தம் 23 ஆதாரங்களில் 3 ஆதாரங்கள் மார்கழிப் போரைக் குறிக்கின்றன. மார்கழி என்று காட்டும் அந்த மூன்றும் நேரடியாக மாதப் பெயர், பருவம், நட்சத்திரம் ஆகியவற்றைக் குறிப்பவை. மீதமிருக்கும் 20 குறிப்புகள் ஆடி மாதத்தைக் காட்டுகின்றன.

இந்த ஆய்வின்போது வெளிப்பட்ட மகாபாரதத்தில் பொதிந்துள்ள வானவியல் செய்திகளின் உண்மைத் தன்மையைக் காணும்பொழுது மகாபாரதம் என்பது வெறும் கற்பனை என்பது அடிபட்டுப் போகிறது. மகாபாரதம் ஒரு உண்மை நிகழ்வென நிரூபிக்க இவை மிகவும் அசைக்க முடியாத ஆதாரங்கள் ஆகும்.

செய்யுட்களில் வரலாற்றுச் செய்திகளைப் புகுத்திப்பாடும் இயல்புடைய மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர் சேரமான் உதியன் சேரலாதன் குருக்ஷேத்திரப் போரில் படைகளுக்கு பெருஞ்சோறு கொடுத்த திறத்தை அகநானூற்றுச் செய்யுள் 233ல் பாராட்டியுள்ளார். சேரமானைப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராயர்  முதற் சங்கப் புலவர் என்று களவியலுரை கூறுகின்றது. எனவே முதற் சங்க காலமே மகாபாரதக் காலம் என அறியலாம்.

மகாபாரதம் இடைச் சங்க காலத்து சங்கத் தமிழ் நூலாக இருந்திருக்கலாம். இடையேழு வள்ளல்கள் என அறியப்படும் அக்குரன், அந்திமான், கர்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் எழுவருமே மகாபாரத மாந்தர்கள் ஆவர். எனவே வியாச பாரதம் எழுத்து வடிவம் பெரும் முன்னரே தமிழில் மகாபாரதம் இருந்தது என உறுதியாகச் சொல்லலாம். தமிழகத்தின் மகாபாரத கதைகளுக்கு அந்தச் சங்க நூலே மூலமாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரை குருக்ஷேத்திரப் போருடன் முதற் சங்க காலத்தையும் சேர்த்தே குறிப்பதால் தமிழின் தொன்மையும் இந்த ஆய்வில் வெளிப்படுகிறது.

பரம பூஜ்ய ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி ஸ்வாமிகள்
ஹேம கூடம், ஹம்பி அவர்களின் வாழ்த்துரை!


மகாபாரதம் என்ற இந்த மாபெரும் நூலை நீங்கள் ஆய்வு செய்து எழுதியிருக்கின்றது குறித்து மிகவும் சந்தோஷம்! காரணம் என்னவெனில், தங்களுடைய இந்தக் கிரந்தத்தில் மனிதனின் வாழ்க்கை இருக்கிறது. மனிதர்களுக்கு கோபம், தாபம், சந்தோஷம் என பலவகையான உணர்வுகள் உண்டு. அதுபோலவே, இந்தக் கிரந்தத்தில் ஆன்மீகம், விஞ்ஞானம், மெய்ஞானம், தர்க்கம், கணக்கு மற்றும் ஜோதிடம் என்று பல கோணங்களில் விமர்சித்து எழுதப்பட்டு இருக்கின்றது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் நிறைய கிரந்த நூல்களை படித்து இருக்கிறேன். ஆனால் உங்களது இந்தக் கிரந்தத்தில் அந்த விஷயங்களுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் இருக்கின்றது. இது கண்டு நான் மிகவும் ஆச்சர்யப்படுகிறேன்.

இது போன்ற ஆழ்ந்த ஆய்வு கொண்ட ஆன்மீக கிரந்தம் எழுத ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன், ஸ்ரீ காயத்ரி தேவி ஆகியோருடைய பரிபூரண அருள்தரும் சக்தியும் சாமர்த்தியமும் இருக்க வேண்டும்.

தங்களுக்கும், தங்களது குடும்பத்திற்கும் வேதமாத ஸ்ரீ காயத்ரி தேவி அம்மனுடைய கிருபா சௌக்கியங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.


“சொல்வேந்தர்” சுகி சிவம் அவர்களின் வாழ்த்துரை



நண்பர் தாமரைச் செல்வன் மகாபாரதப் போர் நடந்தது ஆடி மாதத்திலா அல்லது மார்கழி மாதத்திலா என்ற ஒரு விவாதத்தை மையமாக்கி புத்தகமாக்கி இருக்கிறார்.
வடமொழி அறிவு, பஞ்சாங்கத் தெளிவு, காலக் கணிப்பிற்கான விஞ்ஞானத் திறன் உள்ளவர்கள் இதை ஆராய்ந்து முடிவு சொல்ல வேண்டும். அவரது முயற்சியை வாழ்த்துகிறேன். 


உயர்திரு R.கிருஷ்ணசாமி ( எ ) கிரிகண்ணன் - தலைவர், 
அனைத்திந்திய தேவாங்க ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் அவர்களின் வாழ்த்துரை  


இந்த நூலில் இவர் மகாபாரத யுத்தம் நடந்தது ஆடிமாதம் என்ற மக்களின் நம்பிக்கைக்கும், மார்கழி மாதம் என்ற பண்டிதர்களின் விளக்கத்திற்கும் இடையில், இருதரப்புகளுக்கும் இடையே ஒரு விவாதகளத்தை உருவாக்கிக் காட்டுகிறார். 

மகாபாரதத்தில் தரப்பட்ட கிரகநிலைகள் மற்றும் வியாசபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றைக் கொண்டு போர்நடந்த காலத்தை இந்நூலில் அடையாளம் காட்டுகிறார். நூலின் போக்கில் பல வானவியல் பாடங்களை எளிமையாக விளக்குகிறார். 

இவரது சேவை நமது சமூகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். நம் சமூக ஆய்வாளர்கள், அறிஞர்கள் வழியில் இவரது சேவையும் சிறப்புடன் தொடர எல்லாம் வல்ல அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் அருள்புரிய வேண்டுகிறேன்.


“வைணவக் கடல்” புலவர் மா. கிருஷ்ணமூர்த்தி 
அவர்களின் வாழ்த்துரை



யாமறிந்த ஆய்வு நூல்களிலே இந்நூல் போல் சிறந்ததொன்றை எங்கும் காணேன். உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.

பாரதம் உண்மை நிகழ்வுகள் என்பதை கோள்நிலை கொண்டு ஆராய்ந்து வெளிப்படுத்தி இருப்பது ஒரு அற்புதம்.

ஆசிரியரின் நுண்மாண் நுழை புலம் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது.


மகாபாரத மொழிபெயர்ப்பாளர் செ. அருட்செல்வப் பேரரசன் அவர்களின் வாழ்த்துரை



"மஹாபாரதப் போர் - ஆடியா? மார்கழியா?" என்ற இந்த ஆய்வை, தர்க்கப்பூர்வமாக மூல ஸ்லோகங்களில் இருந்து நிறுவியிருக்கிறார்.
பீஷ்மர் கணைப்படுக்கையில் 58 நாள் கிடந்தாரா? 85 நாள் கிடந்தாரா? 158 நாளா? 185 நாளா? என்பதை நிறுவ மகாபாரதத்தில் இருக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டி, அங்கே பேசப்படும் நட்சத்திரம் மற்றும் கோள் அமைப்புகளைக் கொண்டு போர் ஆடி மாதத்தில் நடந்ததா? மார்கழி மாதத்தில் நடந்ததா என்பதைச் சுவாரஸ்யமாக விளக்குகிறார்.
இந்த ஆய்வை செம்மையான முறையில் செய்திருக்கும் நண்பர் தாமரை அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.


இணையத்தில் புத்தகம் பெற:


மின்புத்தகம்:

           https://tinyurl.com/mahabharat-kindle

 அச்சுப் பிரதி: 


https://tinyurl.com/mahabharat-pothi




https://tinyurl.com/mahabharat-amazon