Monday, August 8, 2016

கர்மமும் விதியும்






 விதி என்பது இன்புட். 
 கர்மா என்பது அவுட்புட். 
 பிறவி என்பது 
 இவை இரண்டும் இணைக்கப்பட்ட 
 ஃபீட்பேக் பிராஸஸ்.  
 இடுக்கண் வருங்கால்  நகுக. 


காரணம் இருக்கிறது. சென்ற பிறவியின் அவுட் புட்டான கர்மங்கள் இந்தப் பிறவியின் விதியாக அமைகின்றன. 

 ஒரு துன்பம் வருகின்றது என்றால், அது ஒரு தீய கர்மத்தினால் விளைந்த விதி என உணர்க. ஆக ஒரு துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் ஒரு தீய கர்மத்தைத் தொலைக்கிறோம். அதற்கு நாம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? 

 பல பக்தர்கள் இப்பிறவியில் பலப்பல துன்பங்கள் அனுபவிக்கக் காரணம்  அவர்களின் தீயகர்மங்கள் விரைவில் தொலையவே என்பதைச் சிந்தித்தோமானால், பக்தியினால் ஒருவன் விரைவில் இறைவனை அடைவதை காணலாம். 

அதே சமயம் தீயவர்களின் நற்கருமங்கள் விரைவில் தீர்ந்தாலே அவர்கள் தீய கருமங்களுக்கான பலனை முழுதாகப் பெற முடியும். ஆக தீயவர்கள் சுகிப்பது தம் நற்கருமங்களை விரையமாக்கவே.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் எண்ணப் படும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் - நற்கருமங்களைத் தொலைக்கும். தூக்கி எறியப்போகின்ற சட்டையில் விலையுயர்ந்த பொத்தான்கள் பதிக்கப்பட்டிருந்தால் எடுத்து வைப்பதைப் போல. 

செவ்வியான் கேடு - சற்றே அடிபட்ட பழத்தில் பாதிக்கப்பட்ட சிறு பகுதியை நீக்கி உண்பது போல. 

அங்கே சட்டை எறி்யப்பட்டது. இங்கே பழம் உண்ணப்பட்டது. முழுமையாகப் பார்க்கும் பொழுது மாத்திரமே நமக்கு விவரங்கள் புரிகின்றது. இல்லையென்றால் பழத்தை வெட்டி வீசுகிறான் என்றும் சட்டையைப் பத்திரப்படுத்துவதாகவும் தோன்றும்.  

விதியை மதியால் மாற்ற முடியும் என்பது இதனால்தான். இன்றைய கருமங்கள் நாளைய விதியை உருவாக்கவல்லவை. இன்று மரம் வளர்த்தால் மழை ஒழுங்காகும். மரம் வெட்டினால் மழை தாறுமாறாகும். நீர் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும். இப்படி இன்றைய செயல்களின் விளைவு நாளைய விதி ஆகும். இன்று என்ன நடக்கிறது என்பது விதி. நாளை என்ன நடக்கும் என்னும் விதி கருமங்களால் விளைகிறது. அதனால் நம் மதியால்  நாளை என்பதை கருமங்களைக் கொண்டு நாம் உருவாக்கிக் கொள்ளலாம். 

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும். 

ஒரு முயற்சி என்பது பலன் தராமல் போகவே போகாது. 

சஞ்சித என்பது நமது கர்மாக்களின் மொத்த தொகுப்பு. அதில் இந்த ஜன்மாவுக்கு பலன் கொடுப்பது பிராரப்தம் எனப்படும். இந்த ஜன்மாவில் சேர்க்கும் கர்மா க்ரியமான கர்மாவாகும். அவை அடுத்து வரும் ஜன்மாக்களில் பலன் தரும். 

விதியை யாரோ எழுதுவதில்லை.  நம் விதியை நம் கர்மங்களால் நாமே எழுதிக் கொள்கிறோம்.  பிறவி ஒரு உணவகம் என்றால் கர்மாதான் உங்கள் மெனு.

மேலும் ஆராய்ந்தால் கர்மா மூன்று விதங்களாலானது. சஞ்சித, பிராரப்த, க்ரியமான கர்மாக்கள் என்று சொல்லப்படும். 

விதி என்று நாம் சொல்வது பிராரப்த கர்மாவாகும். சஞ்சித, க்ரியமான கர்மாக்களைப் மகான்களின் ஆசிகொண்டோ, தீர்த்தயாத்திரைக் கொண்டோ போக்கிக் கொள்ளலாம். பிராரப்தம் போக்க முடியாதது என்று சிலர் சொல்லக்கூடும். 

சஞ்சித கர்மா என்பது அம்பறாதூணியில் இருக்கும் அம்புகள் போல. பிராரப்தம் என்பது விடுப்பட்ட அம்பு போல. 

சஞ்சித கர்மாவை சென்ற பிறவியின் கர்மா என்று கொள்ளக் கூடாது. அது பல பிறவி கர்மாக்களின் தொகுப்பு. அது அத்தனையும் ஒரே ஜன்மாவில் அனுபவிக்க முடியாது. அதை கடவுள் அவர் கருணையால் பிரித்துக் கொடுக்கிறார். இப்பிறவிக்கென ஒதுக்கப்பட்ட சில கர்மாக்கள் ப்ராரப்தா கர்மாவாகும். இதை மாற்ற முடியாது என்று வாதிடுவோர் உளர். ஆனால் அதையும் மாற்ற முடியும் என புராணங்களும் வரலாறுகள் சொல்லும்.

1. செயல்களினால் மட்டுமே கர்மங்கள் உருவாகின்றன. வேறு எவ்வகையினாலும் கர்மங்கள் உருவாவதில்லை.

2. மார்க்கண்டேயனின் ப்ராரப்த கர்மா படி அவன் 16 வயதில் மரிக்க வேண்டும். ஆனால் மரித்தானா?

3. ஆதிசங்கரரின் பிராரப்த கர்மாவின்படி அவர் 12 வயதில் மரிக்க வேண்டும். மரித்தாரா?

ஆக விதி என முடங்கிப் போகாமல் நல்ல காரியங்களைச் செய்து கொண்டே இருங்கள் என்பதுதான் வேதம் சொல்லும் பாடம்.  நல்லவைகள் என அறிந்தவற்றை சரியான இடம், பொருள், காலம் அறிந்து செய்து கொண்டே இருங்கள். உங்கள் விதியை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். 

பிராரப்த கர்மாவையும் மாற்ற இயலும். இது எஞ்சின், இது முதல் வகுப்பு பெட்டி, இது இரண்டாம் வகுப்புப் பெட்டி, இது குளிரூட்டப்பட்ட பெட்டி என்று இப்பொழுது சம்பாதிக்கும் கர்மா, இந்தப் பிறவிக்கு வாய்த்த விதி (பிராரப்த கர்மா) மொத்த கர்மா (சஞ்சித கர்மா) என எத்தனை விதமாக மாற்றிக் கூறினாலும் 

விதியை எந்த  நிலையிலும் கர்மாக்கள் மாற்ற வல்லவை.

No comments:

Post a Comment