சில மாதங்களாகவே என் எழுத்துக்களைக் கோர்த்து, புத்தகமாக்கி வெளியிட வேண்டுமென மிக ஆர்வத்துடன் இருந்தேன். அதன் பயனாக, 07-08-2017 ஆவணி அவிட்டத் திருநாளில் என்னுடைய படைப்புகளில் இரண்டை அமேசான் கிண்டில் வழியாக மின்பதிப்பாக பின்வரும் இரு புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். புத்தகங்களை வாங்க விரும்புவோர், புத்தக அட்டைப் படத்தின் மீது சொடுக்கி, அமேசான் கிண்டில் பதிப்பை பதிவிறக்கிக் கொள்ளலாம்.
புத்தகங்களின் அறிமுகங்கள் இதோ 👇
இந்து திருமணம்: சடங்குகளும் தத்துவங்களும்
திருமணம் என்பது இல்லற வாழ்வின் மகத்துவம், அதன் பொருள், அதன் நோக்கம், அதன் பயன் போன்ற அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட பல சடங்குகளைக் கொண்டது ஆகும்.
மதம், சடங்குகள் என்பவை மூட நம்பிக்கைகள் அல்ல. அவை வாழும் நெறிகளாகும். அவை வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் கைகாட்டி மரங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியம்.
அந்தச் சடங்குகள் அனைத்தையும் விளக்குவதே இந்தப் புத்தகம்.
தினம் ஒரு திருமந்திரம்
பகுதி 1: பாயிரம் - 112 மந்திரங்கள்
திருமந்திரம் ஒரு மாபெரும் பொக்கிஷம். இது மனிதர்களுக்காக இறைவனால் அருளப்பட்டது. அது சாதாரண மனிதனைச் சென்று அடையா விட்டால் திருமூலரின் தவமே பயனற்றது போலே ஆகி விடும்.
எனவே சாதாரணத் தமிழில் அதற்கு விளக்கம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனதில் எழுந்தது. அதைத் தமிழ் மன்றம் என்ற இணைய மன்றம் நீர் விட்டு வளர்த்தது. எனவே எளிய நடையில் செய்யுள்களின் உண்மையான பொருள்களை எழுதியிருக்கிறேன்.
திருமூலர், என்ன சொல்லி இருக்கிறார்? ஏன் சொல்லி இருக்கிறார்? எப்படிச் சொல்லி இருக்கிறார் என்று அறிய விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த கையேடாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இந்த நூலை நான் அமைத்த விதம் ஒரு நோக்கம் உடையது. ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பக்கத்திலேயே விவரித்து முடிக்க வேண்டும். தினம் ஒரு செய்யுளைச் சொன்னேன் எனத் திருமூலர் சொன்னார். அதே போல் தினம் ஒரு மந்திரம், ஒரே ஒரு பக்கம் கற்றுத் தெளியட்டும் என்பதற்காக ஒரு செய்யுளுக்கு ஒரு பக்கம் என ஒதுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment