Tuesday, August 8, 2017

பிக்பாஸ் ஒரு உருவக உலகம்




பிக்பாஸை வீடு ஒரு உருவக உலகம்.

இதில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உலகில் சிலர் இருந்தாலும் உலகின் வெளியே பல தேவர்களாகிய மக்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் இந்த சிறு உலகில் உள்ளோருக்கான விதியை நிர்ணயிப்பவர். அவரின் விதிப்படியே நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த விதியினால் பல செயல்களை செய்ய வேண்டியதாகிறது.

தேவர்கள், ஒவ்வொருவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அந்தச் சிறு உலகில் உள்ளவர்கள், தங்களுடன் உள்ள சில பேரை சந்தோஷப்படுத்தி தங்கள் வாழ்க்கையை சுகமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் திருப்தி செய்ய வேண்டியது தங்களை கவனித்துக் கொண்டிருக்கும் மக்களை மட்டுமே. அவர்கள்தான் எத்தனை எதிர்ப்பு உள்ளுக்குள் இருந்தாலும் அங்கே உறுதுணையாக நிற்பதைப் போல.

ஒருவரிடம் அவரைப் பற்றிப் பேசும்போது தேனொழுகப் பேசுவதும் பின்னணியில் கழுவிக் கழுவி ஊத்துவதுமான இரட்டை வேடங்களை தேவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீ உனக்கும் உண்மையாக இல்லை. தேவர்களுக்கும் உண்மையாக இல்லை.

"ஒரு தலைவனாகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க கூச்சமாக இருக்கிறது", இந்த வரிக்கு பதிலாக "நீங்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும்" என்ற வரி பதிலாக வந்த போது ஆளாளுக்கு ஒரு விதமாய் புரிந்து கொண்டார்கள்.

கமல் இங்கே கிண்டல் அடித்தது சக்தியை அல்ல. அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்க கூச்சப்படுவதில்லை என அரசியல்வாதிகளை மட்டுமே Nacl நக்கலடித்தார். தவறு செய்ய கூச்சப்படும் நல்ல தலைவர் நீங்கள், உங்களைப் போன்ற தலைவர்கள்தான் அரசியலுக்கு வரணும் என நல்ல விதமாகத்தான் சொன்னார். நம் புரிதல் அரசியல் = கெட்ட வார்த்தை. அதனால் சக்தியைத் திட்டியதாக எடுத்துக் கொள்கிறோம்.

ஆமாம், கமல் யார் இந்தச் சின்னஞ் சிறு உலகத்தில்?

கமல் ஒவ்வொருவரின் மனசாட்சி. மனசாட்சி இடித்துரைத்தல் என்பது வலிக்கத்தான் செய்யும். கமல் என்னும் மனசாட்சி தர்மத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனைத்து செயல்களையும் எடைபோட்டு விமர்சிக்கத்தான் செய்யும். மன்சாட்சியை எதைச் சொல்லியும், எதைச் செய்தும் அடக்க முடியாது. மனசாட்சி உறுத்துகிறது என்றால் தவறு செய்கிறோம் என்று பொருள்.

ஓவியா, தேவர்களை திருப்தியுடன் வைத்துக் கொண்டார். அவரின் நிறை குறைகளுடன் தேவர்கள் திருப்தியுடன் இருந்து அவரை ஆதரித்தார்கள். சிறு உலக மாந்தரைத் தவிர வெளி உலகம் இல்லை, நாம் நாமினேட் ஆகாமல் இருந்தால் போதும் என சிறு உலகத்தில் தங்களை நிலைபடுத்திக் கொள்ள சிந்திக்கும் அந்த மனிதர்கள் தங்கள் செயல்களால் சம்பாதிக்கும் பாவங்கள் "இன்னொரு உலகில்" அவர்களின் விதியை நிர்ணயிக்கப் போகிறது. 

வையாபுரி என்ன அழுதாலும் அவர் விதி முடியப் போவதில்லை. பரணி தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு முறையும் மனசாட்சி, பரணியின் தற்கொலைக்கு நீயும் காரணம்தானே என உறுத்திக் கொண்டிருக்கிறது.

மனம் - சொல் - செயல் மூன்றிலும் உண்மையாக தங்களை தேவர்வசம் ஒப்படைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மனசாட்சிக்கு மரியாதை கொடுத்தால், அது காட்டும் சரியான வழி புலப்படும்.

No comments:

Post a Comment