Thursday, August 7, 2014

மீகாமன்

போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருட்
              போராட்டம் காட்டு அருணாசலா

மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
                 ஆகாமல் காத்தருள் அருணாசலா

 ரமண மகரிஷி

போக்கும் வரவுமில் பொதுவெளி.

பிறப்பு இறப்பு என்னும் போக்குவரத்து இல்லாத, அனைவர்க்கும் பொதுவான இறையடி.

அருட்போராட்டம்

மருளுடன் அருள் நடத்தும் போராட்டம்.. மாயையை உடைக்கும் ஞானத்தின் போர்.

அந்தப் போர் நடக்கும் களம் தான் இறைவன் திருவடி. அது அருளின் போர்க்களம். அங்கே ஞானம் மாயையை அறுக்கிறது. அவன் அடியே மாயையை அறுக்கும் போர்க்களமாகும்..

மாயையை  அறுத்து ஞானம் பெறுவதை இறைவனின் அடிகளில் சார்ந்தே அடைய முடியும். எனவே ஞானம் பெற்று அவன் அடியை அடைவது என்பது சரியான போர்க்களம் அல்ல.

எனவேதான் இரமணர் சொல்கிறார்..
போக்கும் வரவுமில் பொதுவெளியில் - அருட்
போராட்டம் காட்டும் அருணாசலா

மீகாமன் - கப்பலோட்டும் மாலுமி

மாலுமியில்லாத கப்பல் காற்று இழுக்கும் திசைக்கெல்லாம் சென்று அலைகழிக்கப்பட்டு உடைந்து மூழ்கும். அதுபோல செலுத்துவோர் இல்லாத மனமும் ஆசை இழுத்த இழுப்பிற்கும் சென்று அழியும்.

இந்த உலகில் அனைத்துக் கடல் வழியும், காற்றின் திக்கும் வலிமையும் அறிந்த ஒரே மாலுமி இறைவன் தான்.
அவனால் மட்டுமே கப்பலை சரியான துறைமுகத்திற்குச் செலுத்த முடியும். அதனாலே அவனையே வேண்டுகிறார் இரமணர்.

அருணாச்சலனே ஆசை என்னும் காற்று மனமாகிய கலத்தை அனைத்துப் பக்கங்களிலும் அலைகழிக்கிறது. இந்த மனமாகிய கலத்தைச் செலுத்தும் மாலுமியாக இருந்து என் மனதை சரியான துறைக்குக் கொண்டு சேர் என்கிறார்.

நித்தியம் அநித்தியம்

அநித்தியத்தை நித்யமென்று ஆதரவா யெண்ணுதே
தனித்திருக்கேன் என்குதே தனைமறக்கேன் என்குதே
                                                                                                        பட்டினத்தார்.

எது நிலையானது? எது நிலையற்றது?

அத்தனை புலன்களும் தான் உணர்வதை எல்லாம் நிலையானது என்றே எண்ணுகின்றன.

இந்த உடலில் இருக்கும் ஆன்மாவிற்குத் தெரியும். உடல் நிலையற்றதென்று. ஆனால் உடலே நான் என நினைத்துக் கொள்கிறது.

உடல் பெறும் இன்ப துன்பங்களை தனக்கே உண்டானதாக ஆன்மா எண்ணுகிறது. நான் என்பது இவ்வுடல் என மயக்கம் கொள்கிறது..

இந்த உடலிற்கு உண்டாகும் புகழ், இகழ் ஆகியவற்றைத் தனக்கே உண்டானதாகக் கருதுகிறது.

நான் தனித்தன்மையானவன் என்று உடலை தானாகக் கருதிக் கொள்ளும் ஆன்மா கருதிக் கொள்கிறது. அந்த உடலில் இன்னும் எத்தனை ஆன்மாக்கள் இருக்கின்றன என உணர்வதும் இல்லை. அதன் பகுதியாக இறைவனும் இருக்கிறான் என்பதையும் உணர்வதில்லை.

நான் என்ற உணர்வு இருக்கிறதே அது தன்னை மறக்கவும் விரும்புவதில்லை. இறப்பு என்ற ஒன்று தன்னை மறந்து விடச் செய்யுமே என்றும் அஞ்சுகிறது..

நான் என்ற அந்த உணர்வு ஆத்மாவை எதனுடனும் சேராமல் ஒட்ட விடமால் ஒன்ற விடாமல் செய்து விடுகிறது..

உடலை அழியாமல் பாதுகாக்க நினைக்கும் அம்மாய வலையில் சிக்கிக் கொண்ட ஆன்மா தான் அழியாதவன் என்பதை உணர்வதில்லை.

தான் தனியாகவும் இல்லை.. பேரான்மாவாகிய இறைவனின் ஒரு பகுதியே தான் என்றும் அறிவதில்லை. இன்னும் பலப் பல ஆன்மாக்கள் அதே உடலிலே இருப்பதையும் அறிவதில்லை. தான் தனித்து இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறது..

நான் என்ற அந்த உணர்வை ஆன்மா விடுத்து மறந்து தன்னுடன் உள்ள அனைத்தையும் கவனிக்குமானால் எது நித்தியம் எது அநித்தியம் என்று புரியும்.

இறைவன் இருக்குமிடம்

உள்ளும் புறமும் ஒருபடித்தாய் நின்றுசுகங்
கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ ?

தாயுமானவர்

இறைவன் இருக்குமிடங்கள் எவை?
இறைவன் அவற்றில் எப்படி இருக்கிறான்?

இறைவன் உள்ளும் இருக்கிறான். இறைவன் புறமும் இருக்கிறான். நமக்குள்ளும் இருக்கிறான் நமக்கு வெளியேயும் இருக்கிறான்.

உள்ளும் புறமும் அவன் ஒரே நிலையில் இருக்கிறான்.அவன் அப்படி இருப்பதிலே சுகம் கொள்கிறான்.

இறைவனை உணர்வதிலே பல நிலைகள் உள்ளன. பொருட்களின்,  உயிரிகளின் பரிமாண படிகளின் படி அவனை உணரும் நிலைகளும் மாறுகின்றன. புலன்களாலும் அறிவினாலும் உணரும் பல நிலைகள் உள்ளன. அப்படிப்பட்ட அனைத்து நிலைகளிலும் இறைவன் அவனே புலப்படுகிறான்.

இறைவனை உணரும் அப்படி நிலை உயர உயர ஜீவன்களுக்கும் இன்பம் கூடுகிறது.

கண்ணால் கண்டு, காதால் புகழ் கேட்டு, ருசித்து, பேசி, நுகர்ந்து, மனதால் உணரும் 6 படிகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இன்னும் பல நிலைகளும் உண்டு.

உள்ளும் புறமும் பல நிலைகளில் உணரப்படும் ஆனந்தமான இறைவனை இன்னும் பல படிகளில் காண என்ன வேண்டும்?
அவன் அருள்தான் அல்லவா?

அத்தகைய அருளை ஈந்து இன்னும் பல நிலைகளைக் காட்ட இறைஞ்சுகிறார் தாயுமானவர்

சிவ எண்ணம்

எண்ணமுந்தான் நின்னைவிட இல்லை யென்றால் யான்முனமே
பண்ணவினை யேது பகராய் பராபரமே

                                                                                                         தாயுமானவர்

எண்ணங்களில் உயர்ந்த எண்ணம் சிவ எண்ணம்.  அந்த எண்ணங்கள் மட்டுமே நெஞ்சில் வாழட்டும்.

வரும் அத்தனை சஞ்சலங்களும் அந்த சிவசிந்தையை விட பெரியது ஒன்றுமில்லை. அந்தச் சிந்தையை அகற்ற மட்டுமல்ல, வேறு எதுவும் சிவசிந்தையை விட்டுச் சிந்திக்க அருகதை அற்றவை.

சிவனை சிந்திக்கின்ற மனதிலா சிறு சிறு விஷயங்களைச் சிந்திப்பது?

இதுவரை செய்த வினைகள் - கவலையில்லை..
இனிமேலும் வினைபயனோ வரப் போவதில்லை..
முன்னமும் ஒன்றில்லை.. பின்னையும் ஒன்றில்லை..

பரவெளியிங்கும் பரவியுள்ள பரமனே
நின்னைச் சிந்திந்தால்
முக்கால வினையின் சிந்தை இல்லை.!!!

கண்ணோடு காண்பதெல்லாம்

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணுனைக் காணுவது எவர்பார் அருணாசலா

கையினிற் கனிஉன் மெய்ரசம் கொண்டு உவகை வெறி கொளவருள் அருணாசலா

ரமண மகரிஷி

அவனோ முக்கண்ணன்.
ஆனால் கண்ணின்றி காண்பவனும் அவனே.

முக்கண் இருந்தும் ஏனவன் கண்ணின்றிக் காண்கிறான்? அதை யார் அறிவார்?

கண்ணின்றிக் காணவேண்டுமாயின் மனதினாலேயேக் காணவேண்டும். அப்படி மனதினால் காண்பதற்குப் பெயர்தான் தியானம்.

சிவனோ ஓயாத தியானத்தில் மூழ்கியிருப்பவன். ஒன்றிற்கு மூன்று கண்ணிருந்தாலும் கண்ணின்றிக் காண்பவன் அவன்.

முக்கண்ணுடைய சிவனே கண்ணை மூடி சிவனே என்று தியானம் செய்து கொண்டிருக்க, கண்ணெனும் புண்கொண்ட மக்களோ தம் புறக்கண்களை மூடி அந்தர் தியானத்தில் கண்ணின்றிக் காண அறிவதில்லை.

இப்படிப் பட்ட இந்த சிவஞானம் நம்கையினில் இருக்கிறது. அதன் அருமையை உணராதோராய் நாமிருக்கிறோம். அதன் சிறப்பறியக் கூட அவனருள் நமக்குத் தேவைப்படுகிறது.

சிவமே எல்லாமே எங்கள் கண்ணெதிரே இருக்கிறது. எங்கள் கையில்தான் இருக்கிறது... கண்ணின்றிக் காணும் கலையறியாமல் கண்ணில் தோன்றும் மாயைகளினால் கட்டப்பட்டு கையில் உள்ளக் கனியைக் கூட அறியாமல், அதன் ஞான இரசம் பருகவியலாமல் இருக்கிறோம். அதற்காக அருள்வாயாக.

புறக்கண்கள் மாயையால் கட்டப்பட்டிருப்பதால் கையில் இருக்கும் கனி கூட தெரிவதில்லை, அம்மாயக் கட்டை அவிழ்க்க கண்ணின்றிக் காணும் அருணாசலனைக் கண்டு கொள்ள.

அகக்கண்ணால் காண முயற்சிப்பதே தியானம். தியானம் மூலம் உன்னை உணர, ரசிக்க, ருசிக்க அருள்வாய் அருணாசலா!!! 