Thursday, August 7, 2014

மீகாமன்


போக்கும் வரவுமில் பொதுவெளியினில் அருட்
              போராட்டம் காட்டு அருணாசலா

மீகாமன் இல்லாமல் மாகாற்று அலைகலம்
                 ஆகாமல் காத்தருள் அருணாசலா


 ரமண மகரிஷி


போக்கும் வரவுமில் பொதுவெளி.



பிறப்பு இறப்பு என்னும் போக்குவரத்து இல்லாத, அனைவர்க்கும் பொதுவான இறையடி.


அருட்போராட்டம்

மருளுடன் அருள் நடத்தும் போராட்டம்.. மாயையை உடைக்கும் ஞானத்தின் போர்.


அந்தப் போர் நடக்கும் களம் தான் இறைவன் திருவடி. அது அருளின் போர்க்களம். அங்கே ஞானம் மாயையை அறுக்கிறது. அவன் அடியே மாயையை அறுக்கும் போர்க்களமாகும்..


மாயையை  அறுத்து ஞானம் பெறுவதை இறைவனின் அடிகளில் சார்ந்தே அடைய முடியும். எனவே ஞானம் பெற்று அவன் அடியை அடைவது என்பது சரியான போர்க்களம் அல்ல.


எனவேதான் இரமணர் சொல்கிறார்..
போக்கும் வரவுமில் பொதுவெளியில் - அருட்
போராட்டம் காட்டும் அருணாசலா


மீகாமன் - கப்பலோட்டும் மாலுமி


மாலுமியில்லாத கப்பல் காற்று இழுக்கும் திசைக்கெல்லாம் சென்று அலைகழிக்கப்பட்டு உடைந்து மூழ்கும். அதுபோல செலுத்துவோர் இல்லாத மனமும் ஆசை இழுத்த இழுப்பிற்கும் சென்று அழியும்.


இந்த உலகில் அனைத்துக் கடல் வழியும், காற்றின் திக்கும் வலிமையும் அறிந்த ஒரே மாலுமி இறைவன் தான்.
அவனால் மட்டுமே கப்பலை சரியான துறைமுகத்திற்குச் செலுத்த முடியும். அதனாலே அவனையே வேண்டுகிறார் இரமணர்.

அருணாச்சலனே ஆசை என்னும் காற்று மனமாகிய கலத்தை அனைத்துப் பக்கங்களிலும் அலைகழிக்கிறது. இந்த மனமாகிய கலத்தைச் செலுத்தும் மாலுமியாக இருந்து என் மனதை சரியான துறைக்குக் கொண்டு சேர் என்கிறார்.

No comments:

Post a Comment