Thursday, October 29, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 1



நன்றென் றுரைப்பதும் தீதென் றுரைப்பதும்
நின்றங் கவர்பட் டறிவு


நல்லது கெட்டது என்பது பொருட்களில் இல்லை. நம் அறிவில் இருக்கிறது.

ஒரு பொருளின் நல்ல உபயோகம் நம் அறிவுக்குத் தெரிந்தால் அதை நல்லது என்போம்.

ஒரு பொருளின் கெடுதல் நம் அறிவுக்குத் தெரிந்தால் அது கெட்டது என்கிறோம்.

ஆக நம் அறிவுதான் இது நல்லது இது கெட்டது எனப் பிரிக்குமே தவிர பொருட்களில் நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை.

உதாரணம் கத்தி. அது ஒரு உபகரணம். அது நல்லவன் கையில் இருந்தால் காயை வெட்டும். கெட்டவன் கையில் இருந்தால் கழுத்தை வெட்டும். அறியாதவன் கையில் இருந்தால் அவன் கையையே வெட்டும். நம் அறிவுதான் நல்லது கெட்டதுக்குக் காரணம். பொருட்களல்ல.


பதரும் உதவும் பசும்பொன் சுடவே
எதுவும் பயனாம் இடத்து



பதர் என கீழ்மையாய் சொல்லப்படும் உமிக்கு பயன் இல்லாமல் இல்லை, பொன்னை உருக்க உமியைத்தான் உபயோகப்படுத்துவார்கள்.

குப்பை என்பது வேறொன்றுமில்லை. தான் உபயோகம் ஆகும் இடத்தில் இல்லாத மூலப் பொருட்களே குப்பைகள் ஆகும்.


ஒவ்வொரு பொருளுக்கும் உபயோகம் உண்டு, அவற்றை அவ்விடம் சேர்ப்பதே சிறப்பு. இயற்கையின் சுழற்சிகளை கவனித்தால் இது புரியும்.

மனிதர்களும் அப்படித்தான். அவர்களுக்குரிய இடத்தில் இருந்தால் அவர்கள் சாதிப்பார்கள். அதைக் கண்டறிய வேண்டியதே அறிவியல் எனப்படும்.



அறிந்து தெளிந்து அகம்நிறை செல்வம்
சிறிதே எனினும் சிறப்பு


செல்வம் கொட்டிக் கிடந்தாலும் மனம் நிம்மதி அடைவதில்லை. அது புறச்செல்வமான பணமாக இருந்தாலும் சரி, அகச் செல்வமான கல்வி என்றாலும் சரி...

ஒருவன் தன் உழைப்பால் ஈட்டிய செல்வம் சிறிதென்றாலும் அது அவனுக்கு மிகப் பெரிய நிறைவைத் தரும். அது போல் ஆராய்ந்து தெளிந்து ஐயமறக் கற்ற கல்வியே நிறைந்த அறிவினைத் தரும். அதுதான் சிறந்தது.


தாழ்ந்து உயர்வராம் சான்றோரே தாழாதோர்
வாழ்ந்து உதிரும் மயிர்.



சான்றோர்கள் என்றும் பணிவுடையவராய் இருப்பர். அவர் பணிவினாலே நம் மனதில் உயர்வார்கள்.

அப்படிப்பட்ட பணிவு இல்லாதவர்கள் தலைக்கு மேல் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் உதிர்ந்து மதிப்பிழந்து போகும் மயிருக்குச் சமமாவர். அவர்களால் ஒரு பயனும் இல்லை.


பொழுதுண்ணும் பூதத்தின் பொல்லாவாய் போனால்
அழுதிடினும் மீண்டிடுமோ ஆண்டு



டைம்பாஸ் என்று பொழுது போக்குகளில் ஈடுபடுகிறோம். இந்தப் பொழுதுபோக்குகள் காலத்தை விழுங்கும் பூதங்கள். இந்த பொழுது போக்குகளுக்கு நம் காலம் இரையாகப் போனால், பின்னர் எவ்வளவு அழுது புலம்பினாலும் நம்மால் அதே இடத்திற்கு, காலத்திற்கு மீளச் செல்ல முடியாது, பொழுது போக்குகள் நம் காலத்தை விழுங்கி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment