Tuesday, December 29, 2015

ஊடகங்களின் உண்மை!!!



கீழ்கண்ட தெளிவுடன் ஊடகங்களைக் கவனியுங்கள். அவை ஜனநாயகத்தின் நான்காம் தூண்கள் அல்ல என்பது தெளிவாக விளங்கும். 

ஊடகங்கள் என்பவை யாவை?

ஊடகங்கள் என்பவை மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் ஆகும்.


ஊடகங்களின் வாடிக்கையாளர்கள் யார், யார்?

ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலமே பெருத்த வருமானம் வருகிறது. அந்த விளம்பரங்களைத் தருபவர்கள் வியாபாரிகளும், அரசியல் கட்சிகளும் ஆகும். 

வியாபாரிகள் பட்டியலில் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பொழுது போக்கு துறை எனச் சேவைகளை விற்போரும் பலவகைத் தரகர்களும் கூட அடங்குவர்.


அப்படியானால் ஊடகங்கள் தன் வாடிக்கையாளர்களுக்கு என்ன விற்கின்றன? என்ன சேவை செய்கின்றன?

ஊடகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்ட, நுகர்வு கலாச்சாரத்திற்கு பதப்படுத்தப்பட்ட  பொதுமக்களை உருவாக்கித் தருகின்றன. 

அதேபோல் அரசியல் வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் தரும் லாபத்திற்கேற்ப மக்களை கட்சிகளுக்கெதிரான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பியும் சிறு நல்லவைகளையும், எதிர்கட்சிகளின் சிறு தவற்றை பூதாகரமாக்கிக் காட்டியும் சேவை செய்கின்றன.

இதனால் நீங்கள் சொல்ல வருவது என்ன?

ஊடகங்கள் உங்களைத்தான் விற்று கொண்டிருக்கின்றன எனப் புரிந்துகொள்ளுங்கள்.

Sunday, November 15, 2015

உயர்ந்த நட்புக்கு உதாரணம்!




உயர்ந்த நட்பு என்றால் என்ன? அதற்கு எது உதாரணம்.?

அடிக்கடி இது என் மனதில் எழும் கேள்விகளில் ஒன்று. தமிழ் சமுதாயமே இன்று உறவுகளை இரண்டாம் பட்சமாக்கி நட்பை முதன்மையாக உயர்த்திப் பேசிக் கொண்டிருக்கிறது,

கர்ணன் நட்பிற்கு ஈடாகுமா? நட்பே உயர்ந்தது என்றார் ஒருவர்..

மகாபாரதத்தில் ஒரு நண்பன் இறந்தான். எத்தனை உறவினர்கள் உயிர் கொடுத்தார்கள் தெரியுமா என்றேன்.. பதில் வரவில்லை.

துரியோதனன் நட்புக்கு ஈடாகுமா என்றான் ஒருவன்... அப்படி என்ன செய்தான் எனக்கேட்டேன்..

அவன் தன் எச்சிலையே திரும்ப உண்ண மாட்டான். அதாவது ஒரு தட்டு சோற்றில் ஒரு கவளம் தான் சாப்பிடுவானாம். பழம் கூட ஒரு கடி மட்டுமே. ஆனால் கர்ணனின் தட்டில் உண்பானாம்.

இதுதான் நட்பா? கர்ணனை துரியோதனன் நட்பு கொள்ள காரணம் அவனின் திறமை அவனுக்குத் தேவைப்பட்டதால். அவன் ஏகலைவனிடம் நட்பு கொள்ளவில்லை. ஏனென்றால் அவனால் பயனில்லை.

கர்ணன் உயிரையே கொடுத்தான் என்கிறார் இன்னொருத்தர்.. அப்படியானால் ஏன் பீஷ்மர் அவனை அவமானப்படுத்திய போது போரிலிருந்து விலகி நின்றான்? இந்தக் கேள்விக்கு பதில் வரவே இல்லை. கர்ணன் நட்பை விட தன் புகழையே பெரிதாக எண்ணினான்.. அதனால்தான் தாய்க்கு வாக்களித்தான், கவச குண்டலங்க்களைக் கொடுத்தான்..

கர்ணன் துரியோதனன் நட்பை விட உயர்ந்த நட்பு மகாபாரதத்திலேயே இருக்கிறது.. உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்களாய் நாம்தான் கர்ண-துரியோதன நட்பைப் பேசுகிறோம்.

அவன் தெய்வம் என எல்லோராலும் போற்றப்பட்டவன். தன் நண்பனுக்கு சாரதியானான். நண்பன் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் அவன் செய்து தரவில்லை. அவனுக்கு எது நல்லதோ அதைச் செய்தான். எது தர்மமோ அதை போதித்தான்.
அகந்தை கொண்டபோது அடக்கினான், சோர்வுற்ற போது தூக்கிச் சுமந்தான்.

அர்ஜூனனும் தன்னை முழுமையாகச் சமர்பித்தான். ஒரு அக்ரோணிச் சேனையை விட கண்ணனே பெரிதென்றான். தன் மனதை முழுமையாக அவனுக்கு கொடுத்தான். தெரியாததை எல்லாம் எவ்வித கூச்சமுமின்றி அவனிடம் கேட்டான்...

கண்ணன் - அர்ஜூனன் உறவு நட்பாக யார் கண்ணுக்கும் தெரியாத காரணம் பல இருக்கலாம், ஆனால் அதில் இருக்கும் நட்பு உண்மையானது.

கர்ண - துரியோதன் நட்பில் நண்பனின் மகிழ்ச்சி இப்படிப்பட்ட உணர்வுகள் மட்டுமே இருந்தன..

இடித்துரைத்தல் என்ற பண்பு இல்லவே இல்லை. ஒரு நல்ல நண்பனின் கடமை அது.. ஒருவனுக்கு நல்ல நண்பன் இருப்பானாயின் அவன் நல்லவனாகவே இருக்க முடியும். நண்பனை நல்வழியில் நடத்துவது நண்பனின் முக்கியக் கடமை.

உணர்ச்சி வசப்பட்டு நட்பு நட்பு என பேசுபவர்களில் பலர் ஒன்றை கவனிப்பதே இல்லை.

உன் நண்பன் நல்ல நண்பன் என்றால், நீ நல்ல மகனாக, நல்ல தகப்பனாக, நல்ல கணவனாக, நல்ல மனிதனாக இருப்பாய். அதுதான் நல்ல நட்பிற்கு அடையாளம்..

என் நண்பன் எனக்காக எதையும் எதிர்பார்க்காமல் எல்லாம் செய்வான் என்பது ஆதிக்க மனப்பான்மை
என் நண்பனுக்காக எதையும் செய்வேன் என்பது தாழ்வு மனப்பான்மை.

இதைத்தான் துரியோதனன் கர்ணன் நட்பில் காண்கிறோம்.

இந்த மயக்கத்தில் இன்றைய இளைஞர்களில் 95 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். இது உயர்ந்த நட்பு அல்ல.. கீழான நட்பு. சுயநல நட்பு..

நட்பு பற்றிப் பேசுபவர்களில் பலர் இந்த நுண்ணிய உண்மையை உணர்வதே இல்லை.

நட்பால் சீரழிவோர் பலரின் கதை இதுவாகவே இருக்கிறது. இவனின் ஆசைக்கு அவன் நெய்வார்த்து அவனின் ஆசைக்கு இவன் நெய்வார்த்து அழிகின்றனர்.

நண்பர்கள் மாத்திரமே உதவுகிறார்கள் என்ற மாயையை உண்டாக்கி வைத்திருக்கிறோமே அதுதான் தவறு.

உன் நண்பன் நல்லவன் என்றால் நீ நல்லவனாகவே இருக்க முடியும். அப்பாவைக் கவனிக்காதவனை, தங்கைக்கு கல்யாணம் செய்யாத அண்ணனை, அம்மாவைத் திட்டும் மகனை தட்டிக் கேட்காத நண்பன் நண்பனா?

உலகத்தில் கணவனை இறுதிவரை காப்பாற்றிய மனைவிகள் நிறைய உண்டு, காலம் முழுக்க பேரனை வளர்த்த பாட்டிகள் உண்டு, அன்னைகள் உண்டு, மணம் செய்யாமல் குழந்தை வளர்த்த அப்பாக்கள் உண்டு...

நண்பர்கள் மாத்திரமே முழுதும் தாங்கிய மனிதன் உண்டா?  கர்ணன் என்பீர்கள். அது மட்டுமே உங்களின் பதிலாக இருக்க முடியும். தவறு. அவன் துரியோதனனை சந்திக்கும் வரை வளர்த்த அதிரதனுக்கும் இராதைக்கும் என்ன செய்தான்?

நல்ல நண்பன் தன்னை என்றுமே முன்னிறுத்துவதில்லை. நட்பை பற்றி மட்டுமே உயர்வாக பேசுவதில்லை. அவனுக்கு நண்பனின் வாழ்க்கை முக்கியம். நண்பர்கள் தங்கள் நண்பனின் மனைவியைத் தங்கையாகக் கருதுவார்கள்..

கர்ணன் துரியோதனனின் மகிழ்ச்சியை நினைத்தான். துரியோதனன் கர்ணனின் உயர்வையே நினைத்தான். மற்ற எல்லோரையும் மறந்தனர். அவன் அழிவிற்கு இவன் அழிவிற்கு அவனும் காரணமாகினர். நட்பை உறவினர்கள் வெறுக்க முக்கியக் காரணம் இது.


நண்பனை மகிழ்விப்பது என்பது வேறு, நண்பனுக்கு நன்மை செய்வது என்பது வேறு.

பல சமயங்களில் இன்று இக்கட்டான சூழ்நிலைகள் நண்பர்களாலேயே வருகின்றன என்பதே உண்மை.

உன் நல்ல நண்பன் உன்னை நல்லவனாக இருக்க வைப்பான், உனக்கு அம்மாவின் பெருமை தெரியும், அப்பாவின் அருமை புரியும். மனைவியின் தியாகம் புரியும். அண்ணனின் ஆதரவு தெரியும். தங்க்கையின் பாசம் புரியும். உறவின் மேன்மை புரியும். உனது கடமை புரியும்.. உன் நண்பன் நல்லவனாக இருந்தால்....

கர்ண துரியோதன நட்பு வேண்டாம்... கண்ணன் - அர்ஜூனன் நட்பில் இருப்போமே.

Saturday, November 14, 2015

நல்லவனும் கஷ்டமும்




தாமரை, தன்நலம் கருதாமல் பிறருக்காக நிறைய செய்தவர்கள் எல்லோருமே பெரும்பாலும் வாழ்வில் கஷ்ட்டப்பட்டுதான் இருந்திருக்கின்றார்கள். ஏன் அப்படி? ஒருவேளை அவர்களை பொறுத்தவரையில் சந்தோஷமாகத்தான் இருந்திருப்பார்களோ? நல்லது செய்வது அவர்களுக்கு கேடா?



கேட்டவர் வாழ்க, பதில் கீழே....

இப்படி மொட்டையாச் சொன்னா எப்படி?.. நம்ம ரமேஷ் சுகமா இல்லியா? இல்லை நல்லவர் இல்லியா?

நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்களா?  தம்மை வருத்திக் கொள்கிறார்களா?? கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் தெரியும்..

நல்லவர்கள் எல்லோருமே தனிப்பட்டு அடையாளம் காணப்படுவதில்லை. அந்த நல்லவர்களில் சாதனைகளைப் படைப்போரே அடையாளம் காணப்படுகிறார். சோதனை இல்லாமல் சாதனை இல்லை. எனவே நல்லவர்கள் அனைவரும் கஷ்டப்படுவது போல ஒரு மாயை இருக்கிறது.

எத்தனையோ நல்லவர்கள் எந்தவித விளம்பரங்களும் இன்றி சந்தோஷ வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளோர் இல்லை. இவருக்கு என்ன சோதனை வந்தது? வாய்ப்பு கிடைத்தால் இவரும் கெட்டவர்தான் என்ற கண்ணோட்டத்தில் பலரை சந்தேகக் கண்ணோடு வைத்திருக்கிறோம்.

ஒருவரை நல்லவர் என்று நம்ப அவர் சோதனைகளைச் சந்தித்து தடுமாறாமல் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து கொண்டு விட்டு,  நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்ற மாயத் தோற்றத்தை நாமே உருவாக்கி விட்டதாக ஒரு நொடியேனும் நாம் சிந்தித்திருக்கிறோமா?

நல்லவராய் இருப்பதற்கும் கஷ்டப்படுவதற்கும் சம்பந்தமே இல்லை. சிலர் நல்லவர்களாய் இருக்கக் கஷ்டப்படுகின்றனர்.. அவ்வளவுதான்.

நல்லவர்களாக இருக்கும் பலருக்கு மற்றவர்களால் நடக்கும் தீமையை பொறுத்துக் கொள்ள இயல்வதில்லை. எனவே அதை மாற்ற முயல்கிறார்கள். ஒரு நல்லவரைக் கெட்டவராக்கவோ அல்லது கெட்டவரை நல்லவராக்கவோ கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும்.

ஏனெனில் ஒரு மனிதனை அவனது இயல்பான நம்பிக்கையிலிருந்து மாற்ற முயல்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறை சிறு தடங்கல் ஏற்படும்பொழுதெல்லாம் அந்தப் பழைய இயல்புநிலை திரும்பி விடுகிறது.

ஒவ்வொரு மனிதன் வளரும் பொழுது  அவனது சூழ்நிலை வளர்ப்பு, அவனுக்கு கிடைக்கும் செய்திகள் தகவல்கள் அவனது உணர்வுகள் இதைப் பொறுத்து  அவனுக்கென்று ஒரு இயல்பான குணாதிசயம் ஏற்படுகிறது. அவரவர் இயல்பு அவரவருக்கு சௌகரியமாய் இருக்கிறது.

இதில் சிலரின் இயல்புகள் மற்றவர்களைப் பாதிப்பது இல்லை. இவர்கள் சாதாரண மனிதர்களாக மக்கள் அடையாளம் காண்கின்றனர்.

சிலரின் இயல்பு மற்றவர்களைப் துன்புறுத்துகிறது.. இவர்களை கெட்டவர்கள் என்கிறார்கள்..

சிலரின் இயல்பு மற்றவர்களை மகிழ வைக்கிறது.. இவர்களை நல்லவர்கள் என்கிறார்கள்..

இதில் நல்லவர்களாக அறியப்படுபவர்களும் கெட்டவர்களாக அறியப் படுபவர்களும் மற்றவர்களின் இயல்பை மாற்ற முனைகிறார்கள். அதற்காக அவர்கள் செலவிடும் உழைப்பை நாம் கஷ்டம் என்கிறோம்.

ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கினால் மக்களின் இயற்கையான சுபாவம் மாறும். குழுமங்களின் மூலம் நான் செய்ய எண்ணுவதும் அதுதான். சூழ்நிலைக்கேற்ப இயல்பாய் மனம் மாறுபவர்கள் போதும்,

யாரையும் கட்டாயமாய் இதைச் செய் இதைச் செய்யாதே என்றுச் சொல்லுதல் பலமுறை எதிர்மறை வினைகளையே உருவாக்கும். அதைக் கட்டுப்படுத்த கஷ்டப்படத்தான் வேண்டும்.

அதை நாம் நல்லவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சொல்லி விடுகிறோம். அவ்வளவுதான்.

Friday, November 6, 2015

செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்?



1) உப்பிட்டவனுக்காக உடனின்று போர் புரியும் கர்ணன், துரோணர், பீஷ்மர், சல்லியன்

2) உப்பிட்டவனாதலால் எதிர்த்தும் உடனின்றும் போரிடாது நடுநிலை வகிக்கும் விதுரர்.

3) உப்பிட்டவனாயிருந்தும் எதிர்த்து போர் புரிந்த யுயுத்சு.

இம்மூவகையினரில் யார் செய்தது தர்மம்?



செஞ்சோற்றுக் கடன் என்பதே மாயை ஆகும்.
உலகில் எதுவும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லாம் இறைவனின் சொத்துகள். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொது. அதை ஒருவன் தன்னுடையது என எண்ணுவது மமகாரம் என்ற மலம் ஆகும்.

கொடுப்பது, எடுப்பது எல்லாம் யாருடைய உடமை?

யாருடையதுமல்ல. அது முன்பும் இருந்தது. பின்பும் இருக்கப்போகிறது.

மரத்தின் பழம் யாருக்குச் சொந்தம்?


விதை தந்த மரத்திற்கா? 
மரம் நிற்கும் பூமிக்கா? 
நீர்தந்த ஆற்றிற்கா? 
நீரைத் திருப்பி விட்ட மனிதனுக்கா? 
மரம் ஏறிப் பறித்தவனுக்கா? 
அதை இன்னொன்றைக் கொடுத்து வாங்கியவனுக்கா? 

இதில் யார் யாருக்குச் செஞ்சோற்றுக் கடன்பட்டவர்?

எதுவும் யாருக்கும் சொந்தமில்லாத பொழுது, யார் கொடுப்பது? யார் பெறுவது?

நாம் சரி என்று நினைப்பது மட்டுமே தர்மம் அல்ல. தர்மம் அதி சூட்சமமானது.

தன்னுயிர் காத்தோன், தன் மானம் காத்தோன், தனக்கு உணவிட்டோன் இவர்களுக்கெல்லாம் அடிமைகளாகிக் கொண்டிருந்தால் இறைவன் இருப்பது மறந்து போகத்தான் செய்யும். இது,  "தான்" என்னும் அகங்காரத்தின் வெளிப்பாடாகும்.

அப்படிப் பார்த்தால் நாம் இறைவனுக்குத்தான் செஞ்சோற்றுக் கடன்பட்டிருக்கிறோம். உயிரையும், உடலையும் உலகையும் தந்தவன் அவனே. 

அதை விட மிகப்பெரிய கடன் எது? அதை அடைக்காமல் சின்னச்சின்ன சில்லறை ஏமாற்றுக் கடனைப் பற்றிக் கவலைப்படுவானேன்?

ஆக செஞ்சோற்றுக் கடன் செய்கிறேன் என தர்மத்தின் எதிர்பக்கம் நிற்பது அகங்காரம் ஆகும்.

செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தை விரித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. அதுதான் நிலைமை. 

நாடு முன்னோர்கள் உருவாக்கியது. உருவாக்கியர்கள் மக்கள். 

திருதிராஷ்டிரனுக்கோ, துரியோதனனுக்கோ உரிமை வந்தது என நாம் சொல்வது தர்மக் கற்பனையே ஆகும். 

அதையே வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். பிறப்பினால் இப்பூமியில் சகலருக்கும் சகல உரிமைகளிலும் சம உரிமை உண்டு. 

செஞ்சோற்றுக் கடனின் உச்சபட்சம் ஒன்றையும் பாருங்கள். பிள்ளையாரே உனக்கு எத்தனை தேங்காய் உடைச்சேன், கொஞ்சமாவது நன்றி இருக்கா உனக்கு? எனத் திட்டுகிறான் பக்தன்.

உண்மையில் உடமை என்ற ஒன்று இல்லவே இல்லை எனப் பகவத் கீதையும் சொல்கிறது. அலெக்ஸாண்டரும் தன் இறுதிக் காலத்தில் சொன்னார். . 

ஆக கர்ணன், பீஷ்மர், துரோணர் போன்ற செஞ்சோற்றுக் கடன் தீர்க்கிறேன் என்ற அகங்காரிகள் சிறந்தவர்கள் அல்ல.

நல்லதைச் செய்தல் பிறவியின் கடமை. புரத்தலும் அதில் ஒன்றுதான். என் உயிர் காப்பாற்றிய ஒரு மருத்துவர் ஒரு உயிர்க்கொல்லி தொற்றுவியாதியை என்னைப் பரப்பச் சொல்கிறார். நான் செய்யலாமா? கூடாதா? 

செய்வதுதான் செஞ்சோற்றுக் கடன் என்பீர்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் பிறந்தது முதல் அன்றுவரை என்னைக் காப்பாற்றி வந்தது மருத்துவர் அல்ல. உலகம். 

உலகில் உள்ள மக்களின் வேறுபட்ட உழைப்புகள், இயற்கை. நான் என்பங்கு உழைப்பைச் சமூகத்திற்குத் தந்தேன் வாழ்ந்தேன். அச்சமூகத்திற்கு இதை விட மிகமிக அதிகம் செஞ்சோற்றுக் கடன் பட்டிருக்கிறேன். 

உன் உயிரை மட்டுமே கொடுக்க உனக்கு உரிமை உண்டு. அடுத்தவன் உயிரை ஏன் எடுக்கிறாய் என்பதுதான் இங்கே தொக்கி நிற்பதாகும். 

உடல் தந்த அன்னை தந்தையே குழந்தையைக் கொல்லுதல் தவறு என்கிறோம். தர்மமல்ல என்கிறோம். காரணம் உயிர் தந்தது இறைவன். 

தர்மம் மிகச் சூட்சுமமானது. 

பீஷ்மரோ, கர்ணனோ, துரோணரோ, சல்லியனோ தர்மத்தை தம் அளவில் மட்டுமே யோசித்தார்கள். எனக்கு உணவிட்டான், என் மானம் காத்தான், நான் சபதம் செய்தேன். நான் உணவுண்டு வாக்களித்தேன். அதனால் போர்புரிவேன் என.

ஆனால் தர்மம் அவ்வளவு சிறியது அல்ல. செஞ்சோற்றுக் கடன் என்றால் இவர்கள் தம் உயிரை மட்டுமே கொடுக்க வேண்டுமே தவிர, அடுத்தவர் உயிரைப் பறிக்கக் கூடாது.  அதுவும்  நல்லது செய்பவர்களென தான் அதிதீவிரமாக நம்புபவரின் உயிரை? 

அது எப்படித் தர்மமாகும்?

செஞ்சோற்றுக் கடன் என்றுச் சொல்லி வெறும் சாப்பாட்டிற்காக / மரியாதைக்காக / வாக்குத்தவறாமைக்காக கூலிப்படையாளியாக மாறு என்றா சொல்லித் தருகிறது தர்மம்? இல்லையே!


யுயுத்சு, தர்மனின் பக்கம் நிற்கிறான். தான் சரி என்று நினைக்கும் ஒன்றிற்காகப் போராடுகிறான். இவன் இவர்களை விடச் சிறந்தவன் ஆவான். 

சுயதர்மத்தை பெரிதாக மதித்தவர்கள் கர்ண, சல்லிய, பீஷ்ம, துரோணர்கள். பொதுதர்மத்தை பெரிதாக மதித்தான் யுயுத்சு. ஆனால் இதுதான் தர்மம் என்ற மாயையால் கட்டுண்டவர்கள் இவர்கள். சுயதர்மத்தை விட பொதுதர்மம் உயர்ந்தது. ஆனால் சுயதர்மத்திற்கும் பொதுதர்மத்திற்கும் முரண் வரக்காரணம் என்னவென்றால் அதைத்தான் மாயை என்கிறோம். 

தர்ம சங்கடம் என்றால் என்ன என்பதை உணர்ந்து கொண்டால் இதை அழகாக உணர்ந்து கொள்ளலாம்.

இதற்கென ஒரு கிளைக்கதையுண்டு.. மகாபாரதப் போரின் முன்பு திரௌபதியை பீஷ்மர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார் கிருஷ்ணர். மழைபெய்திருக்கிறது. கிருஷ்ணன் திரௌபதியின் காலணிகளைக் கழட்டச் சொல்லி தன் மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு, உறங்க்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கச் சொல்கிறார். திரௌபதியும் அதேபோல் செய்ய, திடுக்கிட்டு எழுந்த பீஷ்மர் தீர்க்கசுமங்கலி பவ என ஆசிர்வாதம் செய்கிறார். பின்னர்தான் அது திரௌபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் சேறும் சகதியும் அப்பிய கிருஷ்ணன்.

கிருஷ்ணா, என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வைக்க வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும் இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டவிட்டு விட்டாயே... நீயும் இதே போல் உன் தர்மத்தை உடைக்க வேண்டியதாக ஆகட்டும் என்கிறார்.

9 ஆம் நாள் யுத்தத்தின் போது, அர்ச்சுனன் ஒரு தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதைப் பார்த்த பார்த்தசாரதி பார்த்தனிடம் உனக்குப் பதினெட்டு அத்தியாயமாக நான் உபதேசித்த கீதை வீணானது. இனியும் பீஷ்மனை நான் விடப்போவதில்லை, நானே அவரைக் கொல்கிறேன் என இறங்க்கி கையில் சுதர்சனமேந்திப் பாய்கிறார். ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற அவரது வாக்கை அவர் உடைக்கிறார். பீஷ்மரும் கைகளைக் கூப்பி யாரோ ஒரு பெண் / நபும்சகன் கையால் சாவதை விட உன் கையால் என்னக் கொன்று விடு கிருஷ்ணா எனக் கைகூப்புகிறார். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறக்கிறது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுய வாக்கை உடைக்கிறான். நான் என்பதைப் பெரியதாக நான் நினைப்பதால்தான் என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான் இத்தனை மோசங்கள் என்பதைப் புரிந்து கொள்கிறார். என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் வருகிறது. இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் பொதுதர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஞானம் உண்டாகிறது..

இதற்குப் பின் தான் யுதிஷ்டிரனை பீஷ்மரிடம் அனுப்புகிறான் கண்ணன். பீஷ்மரின் மனது தெளிந்து நீரோடையாய் இருக்கிறது. உங்களை எப்படிச் சாய்ப்பது என்ற கேள்விக்குப் பதில் அளிக்கிறார்.

அவரது மனதில் அது துரோகமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார்.

துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் தர்மத்தின் தெளிவு பெற்றதனால்தான் பீஷ்மர் தருமனுக்கு சிகண்டியுடன் போரிட மாட்டேன் என்பதைச் சொன்னார்.

மகாபாரதமே குழப்பத்தையும் தருகிறது. பொறுமையுடன் இருந்தால் தெளிவையும் தருகிறது. 

வாய்மை என்பது என்ன என்று வள்ளுவர் சொல்லும்பொழுது பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்கிறார். ஆக பொதுதர்மத்திற்காக சுயதர்மத்தை விடுதலே தர்மம் என்ற விதிப்படி யுயுத்சு உயர்கிறான்.

ஆனால் மிக உயர்ந்தவன் அல்ல. ஏனென்றால குருஷேத்திரத்தில் மடிந்தது சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அல்லவே.. எத்தனை கோடி மனிதர்கள் மாண்டனர்? எதற்காக இத்தனை உயிர்கள் சாய்க்கப்பட்டது? மன்னர் குலம், பிராமணர் குலம் தவிர மற்ற உயிர்களுக்கு மதிப்பே இல்லையா? விழும் ஒவ்வொரு உயிருக்கான தர்மக்கணக்கு என்ன? அடுத்தவர் உயிர் மீது யாருக்கும் உரிமை இல்லை. 

விதுரர், இவர் செய்த செயல்தான் தர்மம். ஏனெனில் அவர் தன் கடமையை மட்டுமே செய்கிறார். செய்கின்ற பணிக்கு உரிய பலனை மட்டுமே அனுபவிக்கிறார். அத்தினாபுரத்தில் குடிசையில் வாழ்ந்த ஒரே மந்திரி இவர்தான். எதிலும் இவன் பெருமையை எடுத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் நல்லதை மட்டுமே உரைத்தார். எந்த உயிரென்றாலும் சமமாகப் பார்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக எப்பக்கமும் சாராமல் இறைவனை மட்டுமே சார்ந்தார்.

விதுரர் மஹாபாரதப் போரில் மட்டுமல்ல எந்தப் போரிலும் பங்கு கொள்ளவில்லை. தன் அண்ணன் மன்னன், பெரியப்பா பெரிய வீரர், அண்ணன் மகன்கள் பெருவீரர்கள் என்ற மாயையில் சிக்காதவர்.

உடல்-உயிர்-உலகம் என அனைத்தையும் கொடுத்த இறைவனுக்கு உண்மையாகவும், அகங்காரம், மமகாரம் மற்றும் மாயைகளில் சிக்காத விதுரனுடையதே உண்மையானச் செஞ்சோற்றுக் கடன்.

இவரிடம் அகங்ககாரம் இல்லை. மமகாரம் இல்லை. இவர் யார் பக்கம் சார்ந்தும் இல்லை. தர்மம் தன்னைக் காத்துக் கொள்ளும் என்பதில் உறுதியானவர். இவர் யாரையுமே அழிக்கவில்லை, எல்லாம் ஒரு காரணத்தினால்தான் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கண்ணன் மற்றும் விதுரனின் உறவு மிக அற்புதமானது. தான் மறையும் முன்பு கூட உத்பவர் மூலம் விதுரனுக்கு பல தர்மங்களை, தத்துவங்களை விதுரனுக்குத் தருகிறார் கண்ணன்.


எல்லாம் இறைவனால் என்று என்பவன் செஞ்சோற்றுக் கடன் என்ற மாயையில் சிக்கிக் கொள்வதில்லை. ஏனென்றால் நீ எனக்கு உயிர் உதவி செய்திருந்தாலும் சரி செய்திருக்கா விட்டாலும் சரி, சரியானதை, கருணையுள்ளதை, தருமத்தைச் செய்வேன் என்கிறான். அவன் கொடுத்தவனுக்கும் உயிர் கொடுப்பான். கொடுக்காதானுகும் உயிர் கொடுப்பான்.

அப்படி இல்லாமல் இது நான், இது என்னுடையது, இது அவனுடையது என் மாயையால் மயக்கப்பட்டவருக்கு மட்டுமே செஞ்சோற்றுக் கடன் என்ற வார்த்தையே உண்டு. 

செஞ்சோற்றுக் கடன் என்பது இறைவனுக்கு உண்மையாய் இருப்பது ஆகும்.. அதனால் விதுரனே செஞ்சோற்றுக் கடன் தர்மத்தை சரியாக கடைபிடித்தார்.

Sunday, November 1, 2015

சக்தி வாய்ந்த துளி!



பிறருக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளி, இரத்தத் துளி இரண்டிலும் வலிமையானது எது..?, காரணம்..??

 

  

கண்ணீர்த்துளி - அன்பினால், கருணையினால் இப்படி உணர்வுகளினால் உதிர்வது. கண்ணீர் அன்பின் அடையாளம் ஆனாலும் வெறும் கண்ணீர் இயலாமையைக் காட்டுவதாகும். 

 

இரத்தத்துளி - உணர்வுகளினால் தூண்டப்பட்ட உடல்களில் இருந்து வழிவது. பிறருக்காக இரத்தம் சிந்தும் முன் ஒரு துளிக் கண்ணீராவது சிந்தப் பட்டிருக்கும். அதே சமயம் இரத்தம் சிந்துவது இன்னொருவன் கண்ணில் இன்னொரு துளி கண்ணீரை உண்டாக்கும்.. 

 

ஒரு வகையில் இரண்டுமே பலவீனமானவைதான். 

 

உண்மையிலேயே வலிமையானது பிறருக்காக உதிர்க்கப்படும் வியர்வைத்துளிதான். இதுதான் கண்ணீர்த்துளி, இரத்தத்துளி இரண்டையும் நிறுத்தும் சக்தி கொண்டது.

Friday, October 30, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 2




அறிவும் உணர்வும் அளவாய்க் கலந்து
செறியும் சிறப்பே மனம்


மனம் என்பது என்ன? மனம் என்பது உணர்வுகளால் ஆனது. அதே சமயம் மனதிற்கு இன்னொரு பகுதியும் உண்டு. அதற்கு அறிவு என்று பெயர்.

உணர்வகளற்று வெறும் அறிவினால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜடங்களாக இருப்போம்.

அறிவற்று வெறும் உணர்வுகளால் மனம் ஆக்கப்பட்டிருந்தால் நாம் ஜந்துகள் ஆகி இருப்போம். அறிவும் உணர்வும் சரியான விகிதத்தில் கலந்து இருப்பதே நல்ல மனமாகும்.



கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.


ஒரு சொல்லை சொல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கூறப்போகும் சொல்லை கூறு கூறாக பிரித்து ( உதாரணம் உண்மை = உள் + மெய்)

அதன் கூறாய்ந்து - அது எப்படி சரியாகப் பொருந்துகிறது என ஆராயந்து

(உதாரணம்

கசியும் கண்ணீர்  - இரக்கத்தாலும் கருணையினாலும்

வழியும் கண்ணீர்  - வேதனையினால்

பெருகும் கண்ணீர் - ஆற்றாமையினால்

சொட்டும் கண்ணீர்,

கண்ணிலேயே அடைந்து நிறைந்து கண்ணீரணை உடைத்து வெள்ளமாய் ஓடும் கண்ணீர்

என ஒவ்வொரு வகையான கண்ணீருக்கும் ஒவ்வொரு குணமிருக்கு. இல்லையா??

பாருங்க, இதைப் படிச்சிட்டு உங்க கண்ணில ஆனந்தக் கண்ணீர்..ஊறுது )


கூறுடனே - அழகுறப் பொருத்தி, எதுகை மோனை சந்த நயம் இத்யாதி அலங்காரங்களுடன் பொருத்தி

கூராக்கி - கூர்மையானதாக்கி

கூறு - சொல்.



போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே எனினும் அவர்.


தருமன் பக்கம் தர்மம் இருந்தது.

அவன் பக்கம் கடவுளே இருந்தார்.

ஆயினும் போர் என வந்தபின் அபிமன்யூ, கடோத்கஜன், இளம் பஞ்ச பாண்டவர், விராடன், துருபதன், த்ருஷ்டதுய்மன், சிகண்டி இப்படிப் பலப்பல வீராதி வீரர்களை இழந்தான். போரின் இயல்பு அப்படி.

சண்டை என்று வந்து விட்டால் சண்டையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இழப்புகள் வரும். அவர் யாராய் இருந்தாலும் சரி அவருக்கு யார் துணை இருந்தாலும் சரி காயம் உறுதி.

எனவே இயன்றவரை போரைத் தவிர்ப்பது நல்லது.

படிப்பது எப்படி?



படிக்கறதெல்லாம் அப்ப ஞாபகம் இருந்திச்சு இப்ப மறந்திருச்சி.

கேள்வியைக் கொஞ்சம் டிவிஸ்ட் பண்ணிட்டாம்பா. குழம்பிட்டேன்.

இது எங்கியோ கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் சரியா ஞாபகமில்ல.

இப்படி புலம்புபவர்கள் ஆயிரம் பேர் உண்டு, ஆனால் சிலர் நீங்க எதைச் சொன்னாலும் அதைப் பற்றி 4 மணி நேரம் சொற்பொழிவு செய்வார்கள்.

இதை அனைவருமே எளிதில் சாத்தியமாக்கலாம். ஆனால் அதற்குத் தேவை பயிற்சி செய்யும் மனம்.

கஜினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும். மூளையில் இரண்டு விதமான நினைவகங்கள் உண்டு.

1. ஷார்ட் டெர்ம் மெமரி
2. லாங்க் டெர்ம் மெமரி

நாம் இப்பொழுது படிப்பவை நினைப்பவை எல்லாமே ஷார்ட் டெர்ம் மெமரியில்தான் பதிவாகும்.

உதாரணமாக  உங்களிடம் செப்டெம்பர் 30, 2015 மதியம் என்ன லஞ்ச் சாப்பிட்டீங்க என்றால் திருதிருவென முழிப்பீர்கள். காரணம் அது தற்காலிக நினைவகத்தில் இருந்தது. அதேசமயம் உங்கள் பிறந்த நாள் டின்னர் என்ன என்று கேட்டால்,  ஞாபகம் இருக்க சாத்தியம் இருக்கிறது, அதை நீங்கள் கொண்டாடி இருந்தால்...

அதையே இன்னும் 5 வருடம் கழித்து கேட்டால் மறந்திருக்க வாய்ப்புண்டு.

மூளையில் நீண்ட கால நினைவகத்தில் ஒரு தகவல் இடம் பெற வேண்டுமென்றால் அதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம்.

1. அதற்கென்று ஒரு தொடுப்பு இருக்க வேண்டும். உதாரணமாக ஆம்பூர் என்றவுடன் பிரியாணி ஞாபகம் வரும். விஞ்ஞானி என்றால் ஐன்ஸ்டீன் ஞாபகம் வருவார், அதற்கென TAG அதாவது குறிப்பிணைப்பு இருக்க வேண்டும். பிறந்த நாளைக்கு ஹோட்டல் உமர்கோட்டில் பார்ட்டி. இப்படி எதோ ஒன்று. உதாரணமாக என் அண்ணன் இறந்தது நவம்பர் 4, 2006. இதற்கான தொடுப்புகள் : அண்ணனின் பிறந்த நாள் நவம்பர் 11. அதற்கு ஒரு வாரம் முன்பு இறந்தார். 2007 ல் நாங்கள் புதுவீடு கிரஹப்பிரவேசம் செய்தோம் அதற்கு முதலாமாண்டு இறந்தார். இப்படி இணைப்புகள் உண்டு. இப்படி ஒவ்வொன்றையும் முதலே தெரிந்த ஒன்றோடு இணைத்து டேக் செய்து வைக்கவேண்டும்.

2. அதைப் பற்றி பலமுறை எண்ணியோ, பேசியோ இருக்க வேண்டும்.. பாபநாசம் படத்தில் கமல் 2 ஆம் தேதியை அனைவர் மனதிலும் பதிய வைப்பது போல் பலமுறை அதை பரிச்சயப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது அதைப் பற்றி பலரிடம் பலமுறை பேசவேண்டும். நாம் விரும்பும் நடிகர்களின் படவரிசை பாடல் வரிகள் மனதில் பதிவது இப்படித்தான். கிரிக்கெட்டின் புள்ளி விவரங்கள் மனதில் பதிவது இப்படித்தான். மாணவர்கள் முதன் முறை TAG செய்து படித்த பின் பாடங்களை தங்களுக்குள் குழு விவாதம் செய்வதால் மனதில் ஆழமாக பதியும். வெகு சிலரால் மட்டும் தனக்குள்ளேயே விவாதம் செய்து கொள்ள இயலும். அதற்கான வழிமுறை கீழே

3. கீழே உள்ள படத்தை கவனியுங்கள்




இதுதான் நமது சர்க்யூட் டயாக்ராம். நமக்கு ஐந்து வகை உணர்வுகள் உண்டு. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடு உணர்வு என ஐந்து உணர்வுகள். இதில் பார்த்தல், கேட்டல் மூலமே நாம் அதிகம் கற்கிறோம்.

ஒரு தகவலைப் படித்த உடனே, கண்ணை மூடி அதை காட்சியாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். புரிந்திருந்தால் காட்சியாக்குவது எளிது. உதாரணமாக சூரியகிரஹணத்தில் சூரியனை நிலா மறைக்கிறது. இதை நம்மால் கற்பனை செய்ய முடியும். நிலா வட்டம், சூரியன் வட்டம், மஞ்சள் வட்டத்தை கருப்பு வட்டம் மறைக்கிறது.

இதை இரண்டு மூன்று முறை பதிவு செய்துவிட்டால் மேலே படிக்கும் பொழுது எளிதாக இருக்கும். அடுத்து பகுதி சூரிய கிரகணம்..

பகுதி சூரிய கிரகணம் என்றால் சூரியனில் ஒரு பகுதி மட்டுமே மறையும். ஒரு கையை இன்னொரு கையால் மறைத்தால் முழுதாக மறையும். ஆனால் இரண்டு கைகளும் ஒரே மையம் இல்லாமல் சற்று விலகி இருந்தால்? உடனே நமக்கு மாஸ்டர் கார்ட் சிம்பள் ஞாபகம் வரும். ஒரு மஞ்சள் வட்டம், ஒரு கருப்பு வட்டம். கொஞ்சம் மஞ்சள்  வட்டம் கருப்பு வட்டத்தால் மறைக்கப்பட்டது புரியும்.

அடுத்து கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால்? கங்கணம் என்றால் வளையல். அதாவது மஞ்சள் வட்டம் பெரிது.  கருப்புவட்டம் சிறியது. அப்படி இருக்கும் பொழுது கருப்பு வட்டத்தால் மஞ்சள் வட்டத்தை மறைத்தால் மஞ்சள் வளையம் தெரியும். அதேதான். அதான் கங்கண சூரிய கிரஹணம். கங்கணம் என்றால் வளையல். இப்போது கங்கண சூரிய கிரகணம் எப்போ வரும்னு பார்ப்போம். சூரியனின் மையமும் சந்திரனின் மையமும் நேர் கோட்டில் இருக்கணும். சூரியம் பெரிதாக இருக்கணும். எப்போ சூரியன் பெரியதா இருக்கும்? பூமி நீள்வட்டப் பாதையில் சுத்தி வருது. அதில் ஒரு பக்கப் பாதி சூரியனுக்கு அருகே இருக்கும். ஜனவரி 7 என்கிறது என் நினைவடுக்கு. அதே போல் சந்திரன் சின்னதாக இருக்கணும். அதாவது சந்திரன் பூமியில் இருந்து நீள்வட்டப்பாதையில் தொலைவில் இருக்கணும். சந்திரன் 27 நாட்களுக்கு ஒரு முறை அருகில் வரும். அமாவாசையோ 29.5 நாட்களுக்கு ஒரு முறை வரும். அதனால் எதோ ஒரு அமாவாசை அன்றுதான் இந்த நிகழ்வு  நடக்க வாய்ப்பிருக்கு.

இந்த விரிவான அலசலில் தெரியும் இன்னொரு சேதி, குளிர்காலத்தில் அதாவது கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் மட்டுமே கங்கண சூரிய கிரகணம் சாத்தியம்.

இப்படி முழுமையாக படித்ததை மனதிற்குள் உங்களால் அப்படியே ஒரு மஞ்சள் வட்டம், கருப்பு வட்டம் கொண்டு காட்சிப் படுத்திக் கொள்ள முடிய வேண்டும்.

படத்தில் பாருங்கள், சிவப்பு வண்ணமிட்ட பாதைகள் தெரியும், சூரிய கிரகணம் பற்றி நான் விவரித்ததை வரிக்கு வரி மனதில் நினைத்தீர்கள் என்றால் அது அந்த சிவப்பு பாதையில் பயணிப்பதை குறிக்கும்.

சூரியன் மஞ்சள் உருண்டை. சந்திரன் கருப்பு உருண்டை, முழு கிரகணம். மஞ்சளை விட கருப்பு பெரிசு அல்லது சமம். ஒரே மையம். பகுதி கிரகணம் மையங்கள் தள்ளி உள்ளன. கங்கண கிரகணம். கறுப்பு வட்டம் சிறிது. வளையல். இப்படி மனதில் பிட்டு பிட்டாக முழு விவரங்களும் தொடுப்புகளுடன் நீண்ட கால நினைவகத்திற்கு செல்ல ஆரம்பிக்கும்.

அடுத்த நாள் இதை இன்னொருவனுக்கு சொல்லித் தரலாம். அல்லது விவாதிக்கலாம். இரண்டு வட்டங்களைக் கொண்டு கிரகணத்தின் பல நிலைகளை மனதில் காணலாம்.

இதை மட்டும் சரியாக செய்துவிட்டால் சூரிய கிரகணம் பற்றி   நினைத்தாலே அருவியாக மனதில் இருந்து தகவல்கள் கொட்டும். இந்த சூரிய கிரகண வகைகளை மட்டும் உங்களால் சரியா புரிந்து கொள்ள முடிந்தால் அவ்வளவுதாங்க படிப்பு. படிக்கும் போது மனதில் அது பற்றிய உருவங்களைப் பார்க்கணும்.

இதில் கடைசியா மன உணர்வு என்று ஒரு டப்பா இருக்கு பாத்தீங்களா, அது படிப்பதில் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தால் தூண்டப்படுவது. நீங்கள் மேற்கண்ட முறையில் படிக்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அது ஆக்டிவேட் ஆகும். ஒரு விஷயத்தைப் படிக்கும் பொழுது அது சம்பந்தமான பல தகவல்களை அது உங்களுக்குத் தயாராக எடுத்துத் தரும்.

கபில் என்றால் 434 என்ற எண்ணையும், அவுட் ஸ்விங்கரையும் விவியன் ரிச்சர்ட்ஸை அவுட்டாக்கியதும் நினைவுக்கு வரும். அதை இந்த உணர்வு கொண்டு வரும். இந்த உணர்வு டப்பா வேலை செய்ய ஆரம்பித்தால் அதன் பின்னால் படிப்பது மிக எளிதாகி விடும். எதை படித்தாலும் புரிய ஆரம்பிக்கும். மற்றவர்கள் சாதாரணமாக வாசிக்கும் வேகத்தில் நாம் ஆழமாக வாசிக்க ஆரம்பித்து விடுவோம்.

பூஜையும் வழிபாடும் யாருக்காக?



பூஜை, வழிபாடு என்பது நம் மனம் செம்மைப்பட மட்டுமே. இறைவனை மகிழ்விக்க அல்ல.


தன்னைத் துதிப்பவனை மட்டுமே காக்கக்கூடியவர் கடவுள் அல்லவே!

நல்லவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
கெட்டவர்களையும் கடவுள்தான் படைக்கிறார்.
தான் படைத்த படைப்பை
தான் படைத்த படைப்பால்
துன்புறுத்தி
தான் படைத்த படைப்பை
தானே அழித்து
தான் படைத்தவர்களிடம்
நான் நல்லவன் என்று நிரூபிக்க
அவருக்கு அவசியம் என்ன?

இவையெல்லாம் கடவுளுக்கு நாம் கற்பனை செய்திருக்கும் வடிவமே தவிர கடவுளின் பண்பு நமக்கு விளங்காத விஷயமென்று எண்ணுகிறேன்.

கடவுள் மேல் அவநம்பிக்கை இருந்தால்தானே காப்பாற்று என்ற சொல் எழவேண்டும்?

கடவுள் எதை எதுக்காக செய்யறார் என்று நமக்கு தெரியாதப்ப, நீ இதை இப்படிச் செய்ன்னு கடவுள்கிட்ட சொல்லலாமா?

அப்படி நடக்காவிட்டால் நிராசைப் படலாமா?


பிரார்த்தனை என்பது நம் மனதுக்கு நாம் செய்யும் ஒரு ம்னோதத்துவ சிகிச்சை.

இறைவனை திருப்தி படுத்துவது நம் நோக்கம் என்று கொண்டாலும் பலன் நம் மனதை உறுதியாக்கிக் கொள்வதே ஆகும்.

1008 பெயர் சொல்லி அர்ச்சனை செய்கிறோம் என்றால் ஆயிரெத்தெட்டு கதைகள், அவற்றின் நீதிகள் நம் நினைவுக்கு வரவேண்டும். அவற்றிலொன்று நம் ஒரு பிரச்சனைக்கு தீர்வின் வழியைச் சொல்லக் கூடும்.

ஒரு காரியம் நடத்த வேண்டும் என்ற உறுதி மனதில் உண்டாகக் கூடும். அந்த உறுதி சோர்வை விரட்டி நம் பலத்தை கூட்டக் கூடும். இப்படி உண்மையான வழிபாடு நம் மனதின் செயல்திறனை அதிகரிக்கும்.

ஆனால் பாலை ஊத்து, தயிரை ஊத்து, தண்ணிய ஊத்து பூவைப் போடு உண்டியல்ல காசைப்போடு என்பது போதை மருந்து மாதிரி.

கடவுளுக்காக பூஜையோ வழிபாடோ இல்லை. நமக்காகத்தான் பூஜையும் வழிபாடும்.

விதை, இலை, பூ, காய், பழம் என ஐந்தும் கொண்ட பூஜைத் தட்டுகள், வாழ்க்கையின் அனைத்து பருவங்களையும் குறிக்கும். முழு வாழ்க்கையும் இறைசிந்தனையில் என்பதன் பொருள் அது.

அந்த ஒவ்வொரு பூஜைத்தட்டிலும் ஆசை என்பது கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது வேண்டுதல் என்ற பெயரில்.

இதில் விதை இலை பூ ஆகியவற்றை கோவிலிலேயே விட்டு விடுகிறோம். அதனால் குழந்தைப் பருவமும் சிறுவர் பருவமும் கவலையற்றதாக இருக்கிறது. பூவை கொடுத்து வேறு பூ பெறுகிறோம். இளமை பருவம் இன்பம் கொடுத்து பெறுவதாக இருக்கிறது. காயையும் கனியையும் வீட்டுக்கு பெற்று வருகிறோம். நடுத்தர வயதும், முதுமைப் பருவமும் சுயநலம் மிக்கதாக இருக்கிறது..

மனம் போல் வாழ்வு!!

Thursday, October 29, 2015

தாமரைக் குறள்கள் - பகுதி 1



நன்றென் றுரைப்பதும் தீதென் றுரைப்பதும்
நின்றங் கவர்பட் டறிவு


நல்லது கெட்டது என்பது பொருட்களில் இல்லை. நம் அறிவில் இருக்கிறது.

ஒரு பொருளின் நல்ல உபயோகம் நம் அறிவுக்குத் தெரிந்தால் அதை நல்லது என்போம்.

ஒரு பொருளின் கெடுதல் நம் அறிவுக்குத் தெரிந்தால் அது கெட்டது என்கிறோம்.

ஆக நம் அறிவுதான் இது நல்லது இது கெட்டது எனப் பிரிக்குமே தவிர பொருட்களில் நல்லதும் இல்லை. கெட்டதும் இல்லை.

உதாரணம் கத்தி. அது ஒரு உபகரணம். அது நல்லவன் கையில் இருந்தால் காயை வெட்டும். கெட்டவன் கையில் இருந்தால் கழுத்தை வெட்டும். அறியாதவன் கையில் இருந்தால் அவன் கையையே வெட்டும். நம் அறிவுதான் நல்லது கெட்டதுக்குக் காரணம். பொருட்களல்ல.


பதரும் உதவும் பசும்பொன் சுடவே
எதுவும் பயனாம் இடத்து



பதர் என கீழ்மையாய் சொல்லப்படும் உமிக்கு பயன் இல்லாமல் இல்லை, பொன்னை உருக்க உமியைத்தான் உபயோகப்படுத்துவார்கள்.

குப்பை என்பது வேறொன்றுமில்லை. தான் உபயோகம் ஆகும் இடத்தில் இல்லாத மூலப் பொருட்களே குப்பைகள் ஆகும்.


ஒவ்வொரு பொருளுக்கும் உபயோகம் உண்டு, அவற்றை அவ்விடம் சேர்ப்பதே சிறப்பு. இயற்கையின் சுழற்சிகளை கவனித்தால் இது புரியும்.

மனிதர்களும் அப்படித்தான். அவர்களுக்குரிய இடத்தில் இருந்தால் அவர்கள் சாதிப்பார்கள். அதைக் கண்டறிய வேண்டியதே அறிவியல் எனப்படும்.



அறிந்து தெளிந்து அகம்நிறை செல்வம்
சிறிதே எனினும் சிறப்பு


செல்வம் கொட்டிக் கிடந்தாலும் மனம் நிம்மதி அடைவதில்லை. அது புறச்செல்வமான பணமாக இருந்தாலும் சரி, அகச் செல்வமான கல்வி என்றாலும் சரி...

ஒருவன் தன் உழைப்பால் ஈட்டிய செல்வம் சிறிதென்றாலும் அது அவனுக்கு மிகப் பெரிய நிறைவைத் தரும். அது போல் ஆராய்ந்து தெளிந்து ஐயமறக் கற்ற கல்வியே நிறைந்த அறிவினைத் தரும். அதுதான் சிறந்தது.


தாழ்ந்து உயர்வராம் சான்றோரே தாழாதோர்
வாழ்ந்து உதிரும் மயிர்.



சான்றோர்கள் என்றும் பணிவுடையவராய் இருப்பர். அவர் பணிவினாலே நம் மனதில் உயர்வார்கள்.

அப்படிப்பட்ட பணிவு இல்லாதவர்கள் தலைக்கு மேல் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் உதிர்ந்து மதிப்பிழந்து போகும் மயிருக்குச் சமமாவர். அவர்களால் ஒரு பயனும் இல்லை.


பொழுதுண்ணும் பூதத்தின் பொல்லாவாய் போனால்
அழுதிடினும் மீண்டிடுமோ ஆண்டு



டைம்பாஸ் என்று பொழுது போக்குகளில் ஈடுபடுகிறோம். இந்தப் பொழுதுபோக்குகள் காலத்தை விழுங்கும் பூதங்கள். இந்த பொழுது போக்குகளுக்கு நம் காலம் இரையாகப் போனால், பின்னர் எவ்வளவு அழுது புலம்பினாலும் நம்மால் அதே இடத்திற்கு, காலத்திற்கு மீளச் செல்ல முடியாது, பொழுது போக்குகள் நம் காலத்தை விழுங்கி விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.


உத்தமர் உறவு!




சித்த நினைவும் செய்யும் செயலும் நீயென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே

                                                      தாயுமானவர்



சித்த நினைவும்
செய்யும் செயலும்
நீ என வாழும்


இதன் பொருள் இறைவனுக்காக இறை நினைவில் எல்லாம் செய்வது என்று பலரும் பொருள் சொன்னாலும்....


சித்தம் என்பது ஆழ்மனம்.. மனசாட்சி என்று சொல்கிறோமே அது. அதை இறைவனாகவே கொள்ளவேண்டும். அதன் வழி நடக்க வேண்டும்.


செய்யும் செயலையும் தெய்வமாக என்ன வேண்டும். ஒரு தொழிலை பணம், புகழ் இத்யாதி புறக்காரணங்களுக்காக செய்யாமல் அதை தெய்வ சேவையாக நினைத்து செய்தல்..


இப்படி சிந்தனையிலும் செயலும் இருக்கப் பெற்றவர் உத்தமர்.


அந்த உத்தமருடன் எனக்குத் தொடர்பு ஏற்பட வேண்டும்.


மருத்துவத் துறையில் இந்த கொள்கை இருந்தது, கல்வித் துறையில் இந்தக் கொள்கை இருந்தது.


இன்னும் ஒரு சில மனிதர்களிடம் இருக்கிறது.


சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு...


பராபரக் கண்ணியின் விளக்கத்தை  கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்




அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.



அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செயல்களாகும் வெளிப்படுகிறான்.


உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்... இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.


செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்.


இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.



அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!



அந்த உறவை நாடுகிறார் தாயுமானவர். நாமும் அவர் உறவை நாடுவோம்.

Friday, October 2, 2015

குற்றம் கடிதல் - கதை விமர்சனம்


இயக்குனர் பிரம்மா.ஜி
தயாரிப்பாளர் ஜெ.சதீஷ் குமார், கிறிஸ்டி சிலுவப்பன்
நடிப்பு சிறுவன் அஜய், இராதிகா பிரசித்தா
இசையமைப்பு சங்கர் ரெங்கராஜன்
ஒளிப்பதிவு மணிகண்டன் D.F.Tech
படத்தொகுப்பு சி. எஸ். பிரேம்





தலைப்பை நன்கு கவனிக்கவும். இது திரைப்பட விமர்சனத்தின் ஒரு பகுதி மட்டுமே. நடிப்பு,
இசை, பாடல்கள் என எதையும் நான் விமர்சிக்க போவதில்லை.

குற்றம் கடிதல் என்பதன் பொருள் - தண்டனை அளித்தல், திருத்துதல் என எதுவும் இல்லை.
குற்றம் ஒன்று நடக்குமானால் எப்படி அதை எதிர்கொண்டு குற்றத்தை நீக்க வேண்டும் என்பதே
தவிர குற்றவாளியை தண்டித்தல் அல்ல.


ஒரு சம்பவம் நடக்கிறது. ஒரு கார் ஒருவரை இடித்து விட்டது. உடனே செய்ய வேண்டியது என்ன?


இடித்தவரை அடிப்பது அல்ல. அடிபட்டவரைக் காப்பாற்றுவது, சம்பவத்தால்
பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளிப்பது.


அதை சம்பவத்திற்குக் காரணமானவரே செய்து விட்டால் தண்டனைகளே
தேவையில்லை.
மன்னிப்பே அங்கே தண்டனையாகிறது. குற்றம் கடிதலின்
முழுக் கதைக்கும் இதுவே
மையக்கருவாக அமைகிறது.


அந்தப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது, ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒரு மாணவிக்கு முத்தம்

கொடுத்து ஹேப்பி பர்த்டே சொல்கிறான்.


அது தப்பில்லையா என்று ஆசிரியை கேட்க உங்களுக்கும் கூட முத்தம் தருவேன் என்கிறான்.


அந்த ஆசிரியை அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதை சுருக்கமாக அந்தச் சிறுவனின் 
தாயாக அதை அணுகி இருக்க வேண்டும் என்று சொல்கிறார் இயக்குனர்.


இங்கு மட்டும் சிறு திருத்தம் உண்டு. அதைக் கடைசியில் சொல்கிறேன்.


அந்த ஆசிரியை அவனை உணர்ச்சி மேலீட்டால் ஒரு அடி அடித்து விட அவன் சுருண்டு
விழுகிறான். மூக்கில் ரத்தம்.மயக்கமாகிறான்.


இந்த ஒரு சம்பவத்தை யார் யார் எப்படி எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் கதை.


ஆசிரியர்களும், பெற்றோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்று பலரும்
விமர்சிக்கிறார்கள்.


தவறு.


அரசாங்கமும், நீதிமன்றங்களும் ஊடகங்களும் முக்கியமாக  கவனிக்க வேண்டிய படம்.


ஒரு சம்பவம் நடந்தால்



பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.

சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள்  பொறுப்பேற்க வேண்டும்.

யார் தவறு என்பதை விட என்ன தவறு என்பது பற்றிய தெளிவைப் பெற வேண்டும்.
எது தவறு என்று அறிந்த பின் எது சரி என்ற ஆராய்ட்சி இருக்க வேண்டும். அந்தப் படிப்பினை
அனைவருக்கும் சென்று சேர வேண்டும்.



முக்கியமாக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியவர்கள் தூக்கு தண்டனை இரத்து செய்யப்பட
வேண்டும் என்று போராடும் போராளிகள். நீதிபதிகள், போலீஸ், வக்கீல்கள், மற்றும்
ஊடகவியலார்.


தோழர் பாத்திரத்தின் மூலம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை எப்படி அணுக வேண்டும்
என்று அழகாகக் காட்டி இருக்கிறார் இயக்குனர்.


அப்படி எல்லா சம்பவங்களையும் அணுகினோம் ஆனால் சிறு தவறுகள் பெரிய குற்றவாளிகளை
உருவாக்காது என்பதை உறுதிபடக் கூறலாம்.


அந்தத் தாயின் மன்னிப்பும், அந்தத் தோழரின் மன்னிப்புமே மிகச் சிறந்த தண்டனைகளாக
அமைந்து விடுகின்றன.


இப்படித்தான் குற்றங்கள் அணுகப் பட வேண்டும் என்பது குற்ற தண்டனைச் சட்டத்தின்
அடிப்படை வரையறையாக இப்படம் அமைந்திருக்கிறது.



நான் சொல்லும் திருத்தம்


அந்த ஆசிரியைக்கு தோழர் சொல்கிறார், அந்தச் சிறுவனை  நீங்கள் அவனின் தாயாக அணுகி
இருக்க வேண்டும் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணுக்கும் தாயாக அந்த டீச்சர் இருந்திருக்க
வேண்டும். முதலில் அவளை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். அவன் உன் சகோதரன்தான்
தவறில்லை. என அமைதியாக்கி இருக்க வேண்டும். சிறுவனை தனியே அழைத்து அறிவுரை
சொல்ல வேண்டும்


ஊடக ஆர்ப்பாட்டங்கள், போலீஸ் நடவடிக்கைகள், என எதையும் பெரிதாக காட்டாமல்
கதையில் எது முக்கியமோ அதைக் காட்டியிருக்கார் பிரம்மன். மிகச் சரியான அணுகுமுறை,


குற்றம் கடிதல்


ஊடகம், நீதித்துறை, மக்கள் என அனைவரையுமே சரியாகவே கடிந்திருக்கிறது.


நண்பர் தியாகுவின் பாராட்டு


அன்புள்ள நண்பர்களுக்கு,

குற்றம் கடிதல்......பற்றிய கற்றுகொள்ள வேண்டிய கடிதம்.

இது யதார்த்தமான திரைபடங்கள் வரிசையில் ஒன்று........

கற்றது தமிழ்......சூது கவ்வும்.....ரௌத்திரம்.......மூடர் கூடம்......சதுரங்க வேட்டை......கோலி சோடா......காக்கா முட்டை.......இப்படி silent killer வகை படங்களில் ஒன்று.......

ஆனால்......சற்று புதுமை......ஒரே ஒரு நடிகர்.....அதுவும் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்தவர் மட்டுமே...நமக்கு தெரியும்.....கிட்டதிட்ட அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களும்...ஆஹா...ஏதோ அவர்களிடம் போய் அவர்கள் வாழும் வாழ்க்கையை படம் பிடித்தது மாதிரியான உணர்வு..........

ஒரு....செயல்...தவறு அல்லது...குற்றம் என்பதைவிட....அதை உணர்சசிவசப்பட்டு செய்துவிட்டு...அதற்கு பிறகு ஏற்படும் குற்ற உணர்ச்சி இருக்கிறதே..... இதில் விவரிக்கபட்டிருக்கிறது.......

உயிர்களை படைப்பது ப்ரம்மா எண்பார்கள்.....ஆம்....இந்த அரிய படத்தை படைத்த இயக்குனரின் பெயரும் ப்ரம்மா தான்

காதல்,..திருமணம், மதம், கடவுள் நம்பிக்கை, பாலியல் கல்வி, ஏழ்மை, உழைப்பு, மனிதநேயம், நட்பு, ஒற்றுமை, கோபம், வெறுப்பு, சிறுவர் குறும்பு மற்றும் புத்திசாலிதனம்,    சமுக சிந்தனை, புரட்சி, மருத்துவம், மென்பொருள்,  ஊடகம், முக்கியமாக கூத்து நாடக கலை......இப்படி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும்......அழகாக கோடிட்டு காட்டிய காவியம்......

இந்த படத்தை பார்க்க மேலும் தூண்டிய தாமரைக்கு நன்றி

இந்த படத்தை.....MCE89....குழுமத்தில் உள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
தியாகு.