வாழ்க்கை விளையாட்டல்ல..
மற்றவர் வாழ்க்கையில் விளையாடாதீங்க..
இப்படி பலபேர் சொன்னாலும், வாழ்க்கையை விளையாட்டாக வாழ்ந்து பார்த்தால்தான் என்ன?
விளையாட்டான வாழ்க்கைதான் வெற்றியைக் கொடுக்கும். எப்படித் தெரியுமா?
இதைப் புரிந்துகொள்ள விளையாட்டை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
விளையாட்டு என்றால் என்ன? அதற்கான சரியான வரையறை என்ன?
விளையாட்டு ஒரு பொழுது போக்கான விஷயம். அதில் உண்டாகும் விளைவுகள் வாழ்க்கையை நேரடியாக பாதிப்பதில்லை, விளையாட்டில் எப்பொழுதுமே இன்னொரு வாய்ப்பு உண்டு. அதனால் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் விளையாடலாம்.
இந்த ஒரு விஷயத்தை வலியுறுத்த மட்டுமே வாழ்க்கை விளையாட்டு இல்லை என்று சொன்னார்கள். அதாவது வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகள் நிரந்தர மாற்றத்தைத் தரவல்லவை. அதனால் கவனத்துடன் கையாளவேண்டும். விளைவுகளைப் பற்றி கவனமின்மை பெரிய இன்னலில் சென்று சேர்த்துவிடக் கூடும் என்பதால்.
ஆனால் நாம் அப்படிச் செய்வதில்லை. விளையாட்டில் வெற்றி ஆர்வத்துடனும் முனைப்புடனும் ஈடுபடுகிறோம்.
வாழ்க்கையில் பல இடங்களில் அலட்சியமாக இருக்கிறோம்.
அடிப்படைக் காரணம் என்ன?
ஆர்வம்,, விருப்பம்.. மன ஈடுபாடு இப்படி பலவார்த்தைகளில் சொல்லப்படும் அந்த மன்மாரச் செய்வதுதான், இல்லையா? விளையாட்டுகளில் இரண்டு வகை இருக்கிறது.
1. தனி விளையாட்டு
2. குழு விளையாட்டு
மனித வாழ்க்கையிலும் இவ்விரண்டும் உண்டு. தனிமனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை என்ற இரண்டுமே உண்டு.
ஒரு விளையாட்டை நாம் தேர்ந்தெடுக்கும்பொழுது என்னவெல்லாம் செய்கிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
1. விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
2. விதிமுறைகள், நுணுக்கங்களை அறிந்து ஆராய்தல்
3. அந்த விளையாட்டில் புகழ்பெற்றவர்களைப் பற்றி அறிதல்
4. அந்த விளையாட்டைப் பற்றிப் பலரிடம் பேசி அனுபவங்களைத் தெரிந்துகொள்ளுதல்
5. தீவிர பயிற்சி
6. உடலை தகுதியானதாக வைத்துக் கொள்ளுதல்
7. வல்லுனர்களின் பயிற்றுவிப்பு
8. பலவகைப் போட்டிகளில் கலந்துகொள்ளுதல்
9. வெற்றிகளைக் குவித்து மேலும் மேலும் முன்னேறுதல்
10. குழுவாகப் பணியாற்றல், அனைவரையும் அரவணைத்தல், எல்லோரிடமும் கற்றுக்கொள்ளுதல், மற்றவர்களுக்கு உதவுதல்
11. ஆட்டத்திறன் குறையும் பொழுது தான் கற்றவைகளை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தல்
இப்படிப் பலப்பல படிகளை கவனமாகவும், உண்மையோடும் கடந்தால் மட்டுமே ஒரு மாவீரன் உருவாகிறான். போற்றப்படுகிறான்.
இப்படி இல்லாமல் ஒரு நோக்கே இல்லாமல் கல்லெறிவது, கிண்டலடிப்பது, ஏமாற்றுவது என்பதை விளையாட்டுகள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் சமூகம் அதை ஒப்புக் கொள்வது இல்லை,
அதைப் போல வாழ்க்கையிலும் நாம் இந்தப் படிகளை அமைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்.
நாம் ஒரு சிறந்த மனிதனாக மதிக்கப்படுவோமா இல்லையா?
விரிவாகப் பார்க்கலாமா?
விளையாட்டில் உள்ள சில அடிப்படைகள்
1. வெற்றி தோல்வியை விட சிறந்த பங்களிப்பே மிகுந்த திருப்தியைத் தருவது
2. நம்மை வெல்பவர்களையும் மதிப்பது. பாராட்டுவது
3. விதிமுறைகளை மீறாமல் ஆடுவது
4. சாதிக்க முயற்சிப்பது. முடியாவிட்டாலும் மனம் உடையாமலிருப்பது.
5. நமக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்குச் சொல்லித் தருவது. மற்றவரிடம் இருந்து தேவையானதை கற்றுக் கொள்வது
6. விமர்சனங்களை நேர்நோக்கில் ஏற்றுக் கொள்வது
7. களமிறங்கினால் உண்டாகும் மன ஒருமுகமாதல்
8. தோற்றுவிடுவோம் என்று தெரிந்தாலும் மனம் சோர்ந்துவிடாமல் முடிந்த வரை போட்டியிடுவது.
இப்படிப் பலப்பல நற்குணங்கள் விளையாட்டில் உண்டு.
வாழ்க்கையில் உண்டா?
விளையாட்டில் எப்படி நமக்கு ஈடுபாடு வருகிறது?
நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் உறவினர்கள் அந்த விளையாட்டை ஆடுவதையோ அல்லது அதைப் பற்றி உயர்வாக ஆர்வத்துடன் பேசுவதைக் கண்டு அதில் நமது மனம் ஈடுபடுகிறது.
இதில் இருவகை விருப்பங்கள் உண்டு. அதைப் பற்றித் தெரிந்து கொள்வதால் நட்பு மற்றும் உறவு வட்டாரங்களுடன் பொழுதை சந்தோஷமாய் கழிக்க..
இதில் வீரர்கள் பெரும் புகழையும், வருமானத்தையும் கண்டு அதே போல் நாமும் மாறவென..
முதல் வகையில் பார்த்தால் சிலர் தம் பேரறிவினைப் பறைசாற்றவென்றும் தம்து மனதில் இருக்கும் கழிவுகளை பழித்துரைத்தல், தூற்றுதல், மட்டம் தட்டவும் இன்ன பிற வகைகளிலும் வ்பொழுதை விரயமாக்குகின்றனர்.
ஆனால் விளையாடத்துடிப்பவர் மேற்கண்ட விஷயங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறார். அவர் நுணுக்கங்களையும், இன்னபிற விஷயங்களையும் கூர்ந்து கவனித்துக் கற்றுக் கொள்கிறார்.
ஆனால் நாம் நம் வாழ்க்கைப் பாதை இதுவெனத் தீர்மானிக்க என்ன அடிப்படை?
எதில் பணம் கிடைக்கும் என என்று நம்புவதா?
எதில் புகழ் கிடைக்கும் என்று நம்புவதா?
நம்மில் பலருக்கு நம் வாழ்க்கைப் பாதை நம் விருப்பத்திற்கு ஏற்ப நாம் ஏற்படுத்திக் கொள்வது அல்ல. திணிக்கப்பட்டவைகள்.
விளையாட்டைப் போல வாழ்க்கையிலும் நமது விருப்பம் பிரதானமாக இருக்கும் பட்சத்தில்
விருப்பத்துடன் வாழ்வோம் அல்லவா?
டிப்படைத் தகுதிகள் கூட இல்லாமல் ஒருத்தர் விளையாட்டுத் துறையில் உள்ளே நுழையவே முடியாது இல்லையா?
விளையாட்டில் சிலர் சதி செய்யலாம்.. சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்..
இவை பணமும் புகழும் நிறைந்த விளையாட்டுகளில் அதிகம் நடக்கின்றன அல்லவா?
அதாவது விளையாட்டே வாழ்க்கையாகும் பொழுது.. வாழ்க்கையில் நாம் செய்யும் அத்தனைக் கள்ளத்தனங்களையும் விளையாட்டில் செய்கிறோம்.
வாழ்க்கையே விளையாட்டானால் அதே போல விளையாட்டில் உள்ள நல்லத்தனங்கள் வாழ்க்கையில் வராதா என்ற நப்பாசைதான்