கேள்வி எண் 94:
கேட்டவர் : அன்புரசிகன்
அரச பயங்கரவாதத்தினை தற்கால அரசியலில் எவ்வாறு தட்டிக்கேட்கலாம்.? அல்லது அது சாத்தியமா அசாத்தியமா?
ஒரு சின்ன நுணுக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரிடம் நீதியை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
குற்றம் சாட்டப்படும் எவருமே அதை மறுத்தல்தானே இயல்பு.?
அதை அவர் ஒத்துக் கொள்ளவேண்டுமெனில் அவர் உணரவேண்டும். உணரவைக்க வழி?
அவரை அதே போன்ற துன்பத்துக்கு ஆளாக்க வேண்டும்? அதற்கு வழி?
நாம் அந்தக் குற்றத்தைச் செய்ய வேண்டும். அப்புறம் நாமும் அவருடன் கூண்டில்..
ஆக ஆரம்ப காலகட்டங்களில் இது தவறு என்பதை மட்டும் சொல்லாமல், இது சரி, இன்னும் சில நல்ல வழிகள் இருக்கின்றன என்ற முழுமையான மனம் விட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு முயற்சித்தல் நல்லது. இதைச் செய்ய தன்னலமற்ற, உணர்ச்சி வசப்படாத ஒரு தலைவன் வேண்டும். அவன் பின் கட்டுப்பாடான மக்கள் வேண்டும்.
அரசாங்கம் என்ன பொய்கள் சொல்லலாம். அவற்றை உடைக்க என்ன என்ன ஆதாரங்கள் தேவை என்று ஆராய்ந்து அதற்கேற்ப முன்னேற்பாட்டுடன் தலைவன் செயல்பட வேண்டும்.
நிலைமை கைமீறிப் போகும் பொழுது போராட்டம் என்பது குற்றம் சாட்டப்பட்டவனுக்கு எதிராக அல்ல. குற்றத்திற்கு எதிராக, ஒரு தனிமனிதனை ஒழிப்பதால் பயங்கரவாதங்கள் ஒழியாது. போராட்டங்களும் ஒழியாது.
எனவே உலக அரங்கில் பிரச்சனையையும், தங்களின் எண்ணங்களையும். அணுகுமுறையையும் பரவும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு அரசாங்கமும் சொல்லும் சாக்கு "இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சனை" என்பதுதான். மக்கள் இன்றி நாடு ஏது? நாடு என்பது அந்த அரசு அதிகாரிகள் அல்ல என்பதை உணர்த்துவதில்தான் வெற்றி ஒளிந்து கிடக்கிறது.
ஆனால் உலக நாடுகள் மக்களை விட அரசாங்கத்திற்குத் தானே அதிக மதிப்பளிக்கின்றன. அப்படிப்பட்டவர்களை எப்படி தன்பக்கம் ஈர்ப்பது என்பது தான் சூட்சமக்கயிறு.
இங்குதான் தலைவனின் தலைமைப் பண்பு எதிர்பார்க்கப்படுகிறது. தங்களால் உலகம் அடையும் நன்மைய உலகிற்கு எடுத்துக்காட்டுதல் தேவையாகிறது. மக்களின்றி அரசால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை காட்டத்தான் ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் இவற்றை நடத்திக் காட்டினார் காந்தி. ஆக அரசால் நன்மைகள் இல்லை, அரசினால் கட்டுப்படுத்த முடியாது என்பதை மக்கள் புரிய வைத்தால் உலக நாடுகள் அரசை தட்டி வைக்க, தூக்கி எறியத் தயங்காது.
பிரிவினை ஒன்றுதான் மக்கள்மேல் செலுத்தப்படும் மிகக் கொடிய ஆயுதம். அதற்கு பலியாகாமல் தப்பினால் எந்த அரசியல்வாதியும் நீண்ட காலத்திற்கு மக்களைக் கொடுமைப்படுத்த முடியாது,
அரசே கட்டவிழ்த்து விடும் பயங்கரவாதத்தை நேரிடையாக எதிர்ப்பது என்பது மிகவும் கடினமான செயல்.
புத்திசாலி யார் என்பதைப் பொறுத்து சாத்தியக்கூறுகள் மாறுபடும்.
No comments:
Post a Comment