Thursday, August 5, 2010

தாமரை பதில்கள் - 153

கேள்வி எண் : 153



கேட்டவர்: Mano.G


நான் அண்மையில் ஜெயா டிவியில் பார்த்து மண்டையை
குழப்பிக்கொண்ட ஒரு சீரியல்

"எங்கே பிராமணன் ? " 

இது நடிகரும் , பிரபல அரசியல் விமர்சகருமான சோ எழுதியது, அந்த சீரியலில் கூறப்படுவது போல் உண்மையான பிராமணன் யார்.?


மிகவும் தெளிவாக இறுதி பகுதியில் சொல்லி இருக்கிறாரே சோ..


சோ சொன்ன கருத்து!!


பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள். 

சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்

அதாவது பிராமணன் என்பவன் பிரம்மம் அறிய, ஆன்மீக வழியில் செல்பவன். அதையே முக்கியமாய் கொள்ளுதலால் பொருள் தேடல், இரை தேடல், எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தல் போன்ற புவி ஆசைகளைத் துறந்து ஞானம் தேடுதலும் பரப்புதலுமே முக்கியமாய் கொண்டவன் என்கிறார் சோ.

இவ்விடம் என் கருத்தைக் கேட்டால், பிராமணன் என்ற பாகுபாடே இப்போது தேவையில்லை. சமூகத்தில் அளவான மக்கள் தொகை இருந்த காலத்தில் அனைவரும் உழைக்க வேண்டி இருந்ததால் பணிகளை பகுத்துக் கொண்டு செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று மக்கள் தொகை பெருகி விட்டது. நமக்கு காலம் மிக அதிகமாக மிச்சம் இருக்கிறது. அதனால் ஒரே சமயத்தில் ஞானம் தேடல், பொருள் தேடல், பாதுகாப்பு, சேவைகள் என அனைத்து வேலைகளையும் நம்மால் செய்ய முடியும். எதை எடுத்துக் கொண்டாலும் இன்றைய காலகட்டத்தில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருவரே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆளாளுக்கு கொஞ்சம் செய்தால் போதும். 

உதாரணமாக ஆடை நெய்தல்..

பருத்தி விளைவிப்பது ஒருவர். அதற்கான நுட்பங்களைச் சொல்வது இன்னொருவர்.. பஞ்செடுத்து விற்பது, பஞ்சை நூலாக்குவது.. நூலுக்குச் சாயமேற்றுவது, துணி எப்படி இருக்க வேண்டும் என வடிவமைப்பது, பாவு ஆக்குவது, ஊடைக்கு நாடாவிற்கு தார் சுற்றுவது.. பாவை தறியில் ஏற்றிக் கொடுப்பது, நெய்வது, நெய்த துணியை மேற்பார்வை செய்து குறைகளை நிவர்த்திப்பது, துணியயை துவைத்து உலர்த்தி மெருகேற்றுவது, அதைப் பெற்று தையலகங்களுக்கு அணுப்புவது, ஆடை வடிவமைப்பு, வெட்டுதல், தையல் வேலை, ஆடையை இஸ்திரி போடுவது, பேக்கிங் செய்வது, கடைகளுக்கு அனுபுவது விற்பனை செய்வது இப்படி பலப்பலர் கூடித்தான் இன்று ஒரு செயல் நடக்கிறது.

நாம் இது போல பல காரியங்களில் சிறு சிறு அளவு பங்கு கொள்கிறோம். எனவே நம்முள் அன்று வகுத்த எல்லா வர்ணத்தவரும் இருக்கிறார்கள்.

ஞானம் தேடவும் நேரம் இருக்கிறது. அரசியல் செய்யவும் நேரம் இருக்கிறது. சேவைகள் செய்யவும் நேரம் இருக்கிறது. வியாபாரம் செய்யவும் நேரமிருக்கிறது. எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் பங்களிக்கிறோம்.

பிராமணன் எங்கும் இல்லை என்பது சோவின் பார்வை.. பிராமணன் எல்லோருள்ளும் இருக்கிறான் என்பது என் பார்வை.

இன்னும் பல பார்வைகள் இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுக வேண்டியது முக்கியம்

.

No comments:

Post a Comment