Wednesday, August 4, 2010

தாமரை பதில்கள் - 150


கேள்வி எண் : 150


கேட்டவர்: ஆரென்



மழை பெய்து ஒரு இடத்தில் குட்டைபோல் தண்ணீர் தேங்கிவிடுகிறது, அது சிறிது நாட்களில் பூமிக்குள் கொஞ்சமும், நீராவியாகி ஆகாயத்தில் கொஞ்சமும் சென்றுவிடுகிறது.



இந்த நீர் எப்படி பூமிக்குள் போகிறது. அங்கே தண்ணீர் செல்ல இடம் இருக்குமா?

அதுபோல் நாம் தண்ணீரை போர் போட்டு எடுக்கிறோம். அப்பொழுது அங்கே வெற்றிடம் உருவாகாதா? அதனால் பூமியின் அடியில் அந்த வெற்றிடத்தினால் நிலச்சரிவு உண்டாகாதா? 

கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.




விளக்கமா வேணுமா.. அப்படியென்றால் இதை இரண்டு மூணு நாட்களில் முழுசா எழுதிடறேன்..

பூமியின் அமைப்பைப் பாருங்கள்










பூமி வாயுவாக இருந்து குளிர்ந்து குழம்பாகியது. அதிக எடை உள்ள இரும்பு அணுக்கள் ஈர்ப்பு விசை காரணமாக பூமியின் மையப்பகுதிக்குச் சென்று இறுகத் தொடங்கின.

அதே சமயம் பூமியின் மேலோடும் தட்ப வெப்ப நிலை மாறுபாடுகளால் குளிரத்தொடங்கியது..

அதிக அழுத்தத்தின் காரணமாக இரும்பு உட்கரு திடமாக அதன் மீது திரவ உட்கரு இருந்தது...

திடக்கரு சுழலும் வேகத்திற்கும் திரவக்கரு சுழலும் வேகத்திற்கும் வித்தியாசம் இருக்கவே இதனால் வெப்பமும் காந்தப் புலமும் உண்டாகின...

இதனால் பாறைக்குழம்பு உட்புறம் சூடாக்கப்பட்டது.. வெளிப்புறம் பூமியின் மேலோடு குளிரத் தொர்டங்கியது..

இந்த மோலோட்டுத் திடப்பொருட்கள் பூமி மீது துகள் துகளாக ஒட்டிக் கொண்டிருந்தன.. இந்த துகள்களுக்கு இடையில் இடைவெளி இருந்தது...ஒரு பாட்டிலில் நிறைய கற்களைப் போட்டால் கற்களுக்கு இடையில் இடைவெளி உண்டாவது போல..


ஈர்ப்பு சக்தியின் காரணமாக வாயுக்கள் அந்த துளைகளை நிறைத்திருந்தன..

இப்படி ஒரு ஸ்பாஞ்ச் மாதிரி நிறைய துளைகள் உள்ள மேலோட்டுடன் பூமி ஒரு காலத்தில் இருந்தது.. மெல்ல மெல்ல இருகிய மேலோட்டின் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தம் அதிகமானது.. கீழே இருந்த துகள்களுக்கு இடையில் நெருக்கம் அதிகரித்து அதிகரித்து பாறைகளாக இறுகத்தொடங்கின..

வளி மண்டலம் தோன்றி நீரும் தோன்றியது.. அதே சமயம் விண்கற்கள் மோதலினால் நிலவு உண்டானது... கடல்கள் தோன்றின.

நாம் காணும் பூமியின் மேற்பரப்பில் இருந்து அடியாழம் வரை நுண்ணிய துளைகள் கொண்டதாகவே பூமி இருக்கிறது. பூமியின் சுழற்சியாலும் பருவ நிலை மாறுபாடுகளாலும் மேலோடு அரிக்கப்பட்டு மணலாகிறது... 

மழை நீர் இங்கே தேங்கும் போது புவி ஈர்ப்பு விசையினால் இந்தத் துளைகளில் நீர் இறங்குகிறது... நீர் இறங்குவதற்கு ஏற்ப, இந்த துளைகளில் இருந்த காற்று அழுத்தப்பட்டு மேலே வருகிறது... (மண் வாசம் வரக் காரணம் இதுதான்..)

இப்படி மெதுவாக உள்ளே இறங்கும் நீர் அழுத்தம் காரணமாக பாறையாகிவிட்ட இடத்திற்குக் கீழ் செல்ல முடிவதில்லை.. அதனால் பக்கவாட்டில் பரவ ஆரம்பிக்கிறது...



உள்ளே இறங்கிய நீரின் திரவப்பண்பினால் நீர் பக்கவாட்டிலும் பரவத் தொடங்குகிறது.. இதனால் நிலத்தடி நீர் உருவாகிறது...

இதற்கு அர்த்தம் நிலத்திற்குக் கீழ் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் என்பதல்ல.. எல்லாம் நுண்ணிய துளைகள்தான். 

வெகு சில இடங்களில் மட்டுமே இப்படி வெற்றிடம் இருப்பதுண்டு.. காரணம் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்திருக்கும். காலப்போக்கில் இந்த வெற்றிடம் அழுத்தத்தின் காரணமாக குறுகி விடும்..

காற்றாலும், வெள்ளத்தாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருப்பதால் பூமியின் மேலோடு இப்படி நுண்துளைகள் கொண்டதாகவே இருக்கின்றது..

மலைப்பகுதிகளில் இப்படிச் சேர்ந்த நீர் சில இடங்களில் கசிந்து வெளிப்படுவே ஊற்றுகள் ஆகும். மலை பாறையால் ஆனது என்னும் பொழுது இப்படி மழை நீர் கசிந்து ஊற்றுகள் உண்டாகின்றன..

தாழ்வான ஏரிகளிலும் இப்படி ஊற்றுகள் உண்டாகின்றன..

அதனால் ஒரு ஸ்பாஞ்ச் உள்ள தண்ணீர் எப்படி இருக்கோ அப்படித்தான் பூமியின் உள்ளேயும் தண்ணீர் இருக்கும். பெரிய தண்ணீர் தொட்டியெல்லாம் கிடையாது...

பாறைகளின் இண்டு இடுக்குகள் எல்லாவற்றிலும் தண்ணீர் நிரம்பி இருக்கும்..


ஆழ்துளை கிணறு தோண்டுவதால் ஒரு வெற்றிடக் குழாய் போன்ற அமைப்பை உண்டாக்குகிறோம். ஆனால் இந்த வெற்றிடத்தில் திரவத்தின் மட்டம் சமநிலை அடைவதற்காக அக்கம் பக்கம் உள்ள நீர் கசியத் தொடங்கி அது குழாயில் நிரம்ப, நமக்கு ஆழ்துளைக் கிணற்றில் நீர் நிரம்புகிறது..

ஆழ்துளைக் கிணறு தோண்டும் பொழுது பாறை வரும்வரை பிளாஸ்டிக் குழாய்கள் அல்லது இரும்புக் குழாய்களை இறக்குவதைக் காணலாம். இல்லையெனில் மண்சரிவு ஏற்படும்...

ஆனால் பாறைகள் போன்ற இறுகிய படிமங்களில் பிரச்சனைகள் உண்டாவது இல்லை..

காரணம் பூமியின் மேலோட்டின் தடிமன் 5 லிருந்து 75 கிலோமீட்டர்கள் வரை. அதனால் நாம் தோண்டும் ஆழ்துளைக் கிணறுகள் ஒன்றும் மிகப் பெரிய விஷயமில்லை..

எல்லா திடப்பொருளுக்கும் புவி ஈர்ப்பு சமநிலை என்று ஒன்று உண்டு.. மணலாய் துகள்களாய் இருக்கும் வரைதான் நிலச்சரிவு... பாறைகளாய் ஆனபின் அவற்றின் புவி ஈர்ப்பு மையச் சமநிலைக்கு பாதிப்பு ஏற்படாத வரை பிரச்சனை இல்லை..

ஆற்றுப் படுகையில் மணல் எப்படி நிலத்தடி நீருக்கு உதவுகிறது என புரிந்திருக்கும் இப்பொழுது... மணல் உதிரியாய் இருப்பதால் நீர் அதில் தேங்குகிறது. ஆவியாதல் குறைகிறது..

மணல் இல்லாவிட்டால் மண்ணில் நீர் இறங்கும் வேகம் குறைகிறது.. அதனால் நீர் பூமியில் இறங்காமல் ஓடி விடுகிறது. குழிகளில் தங்கும் நீரில் பெரும்பகுதி ஆவியாகி விடுகிறது...

.

No comments:

Post a Comment