Thursday, August 26, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 1





ஒரு தன்னந்தனித் தீவு.. அந்தத் தீவில் எத்தனையோ மரங்கள். பாறை இடுக்கிலும்,சமவெளியிலும், பள்ளங்களிலும், மலை முகடுகளிலும் அங்குமிங்கும் எங்குமாக பலப் பல மரங்கள். மரங்களில் சிலவற்றில் கனிகள் உண்டு. சில வெறுமனே நெடு உயரம் வளர்ந்து வெகுதூரத் தொடுவானத்தில் என்ன தெரிகின்றதென எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. மெல்லிய கொடிகள் மரங்களின் உயர வித்தியாசங்களை கவனிக்காமல் அருகே இருந்த மரங்களின் மேல் படர்ந்து வளர்ந்திருந்திருந்தன. சின்னஞ்சிறு புதர்கள்.. புற்கள்.. 

அத்தனை பசுமைக்கும் ஆதாரமாய் அந்த மலை உச்சியில் இருந்து ஒய்யாரமாய் வளைந்து இடையசைத்து நடப்பாள் அந்த நீலவேணி. மனதுக்குள் சின்ன கர்வம் அவளுக்கு.. உச்சியில் இருந்து குதிக்கும் பொழுது ஆராவாரமாய் சிரிக்கும் அவளது கலகலச் சிரிப்பொலி அந்தத் தீவெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அத்தனை வேர்களுக்கும் தான் மட்டுமே ஆகாரம் தரவேண்டும் என்ற ஆசை அவளுக்கு,

இங்கிருக்கும் ஒவ்வொரு பூவும் எனக்காகப் பூத்தது.. அவ்வப்பொழுது அவளுக்கு தலை கிறுகிறுத்துப் போகும். அவ்வப்பொழுது மழை பெய்தால் கோபப்படுவாள்.. குமுறுவாள்.. கொந்தளிப்பாள்.. தன் அருகில் உள்ள புதர்கள், மரங்கள் மீது சீறுவாள். 

எல்லாம் இப்படியாக நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாவாய் அந்தத் தீவோரம் ஒதுங்கியது...

சில சிந்தனைவாதிகள் அந்த நாவாயில் இருந்தனர். உலகத்தைப் புரிந்து கொள்ளக் கிளம்பிய சில சிந்தனைவாதிகள்.. அவர்களின் காலடி பட்டதும் மரங்களுக்கும் அந்தச் சிந்தனை வாதிகளுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை, அவர்களுக்கும் நீர் கொடுத்தாள். பூக்கள் பூப்பார்களென்ற எதிர்பார்ப்பில்..



சிந்தனைவாதிகளுக்கு அந்தத் தீவு மிகவும் பிடித்தே இருந்தது. அழகிய இயற்கையின் மடி. இதுதான் நாம் இருக்க வேண்டிய இடம்.

தீர்மானித்தவர்கள் நீலவேணியின் கரையையே தேர்ந்தெடுத்தார்கள். இங்கு அழகான சில குடில்கள்.. நமக்கு சகல வசதிகளும் இங்கே உண்டு..

சில மரங்கள் வெட்டப்பட்டன, சில ஓலைகள்.. நீலவேணியின் ஓரமிருந்த ஈரம் பொதிந்த களிமண்.. சில நாட்களில் குடிசைகள் தயாராகி விட்டன.

சிந்தனை வாதிகளுக்கு இப்பொழுது நீல வேணியிடம் நெருங்கிய நட்புண்டாகி விட்டது. நீலவேணிக்குச் சந்தோஷம். வெளிப்படையாய் இதுவரை எந்த மரமும் நன்றி சொன்னதில்லை. அவளைச் சிலாகித்ததில்லை. சில மரங்கள் போனது அவளுக்கு வருத்தமாய் இருந்தாலும், ஆனால் அதனால் உண்டான விளைவு அவளுக்கு பெருமை தரக்கூடியதாய் இருந்தது..

அவர்கள் அவள் மீது படகு கட்டி உலாவினார்கள். அவளுக்குள் மீன் பிடித்தார்கள். அவளுக்குள் நனைந்து சுத்தமானார்கள். அவர்களின் பொழுதுகளில் அவள் மிகப் பெரிய பங்குகளை வகித்தாள்.


மாற்றங்கள் பல சமயம் எதனால் தூண்டப்படுகின்றன என யாருக்கும் புரிவதில்லை. சில சமயங்களில் மாற்றங்களுக்கு இதுதான் காரணம் என்று தெளிவாகத் தெரிவது போல தெரிகிறது.

ஏன் என்ற கேள்வியை சிலர் ஒரு முறை கேட்டுவிட்டு விஷயத்தை அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். கிடைக்கும் பதில்களில் உடனடி திருப்தி கொள்ளாதவர்கள் தங்கள் மனதில் திருப்தி வரும் வரை ஏன் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சிலர் தான் விரும்பிய பதில் வரும் வரையில் ஏன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வாழ்க்கை நீரோட்டமாய் முன்னோக்கிச் செல்லும் வரையில் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதன் ஓட்டத்திற்குத் தடை உண்டாகிற போதுதான் ஏன் என்ற கேள்வி முதன்முறையாக எழுப்பப் படுகிறது.

இரண்டு மூன்று குடிசைகளுடன், சில சிந்தனாவாதிகளுடன் நீலவேணியும் அந்தத் தீவும் அடுத்த மாற்றங்களுக்குத் தயாராகின்றன..

அமைதியான தீவில் ஆளரவமற்ற இடங்களில் தனிமையாய் இனிமையாய் வாழ்ந்து முடிந்து போவது மட்டுமே வாழ்க்கையா? ஒரு சிந்தனாவாதிதான் முதலில் அந்தக் கேள்வியைக் கேட்டார்.

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இனிமையாய் இருக்கும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் நாம் வாழ்ந்து மடிவதில் என்ன பலன் இருக்கப் போகிறது? இரண்டாம் சிந்தனாவாதி தன் மனதில் ஊறிய எச்சிலைத் துப்பினார்.

நாம் பலகாலம் வாழப்போவதில்லை.. காற்றை இழுத்து வேகமாக வெளியேற்றினார் மூன்றாமவர்.. கொஞ்ச காலம். பின்னர் மூப்பு மரணம்.. நாம் இங்கிருக்கும் மண்ணோடு கலந்து விடப் போகிறோம். சிந்தனாவாதிகள் இருந்ததிற்கு அடையாளமே இருக்கப் போவதில்லை. 

என்றோ வரும் இன்னொரு சிந்தனாவாதிகளின் காலில் நம் மண்டையோடுகள் இடறக் கூடும். நமது சிலபல எச்சங்களும் காணக்கூடும். இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கலாம் என்றும் எண்ணக் கூடும்..

சொன்னார் முதலாம் சிந்தனாவாதி.

எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். நாம் அறிவு மிகுந்தவர்கள். புத்திசாலிகள்.. இதற்கு அடையாளமாக எதையாவது விட்டுச் செல்லவேண்டும்.. ஆலோசித்தார் இரண்டாம் சிந்தனாவாதி..

கல்லில் எழுதுவோம்.. அவை நீண்ட நாட்களுக்கு அழியாது.. மூன்றாம் சிந்தனாவாதிக்கு பளிச்சென எண்ணம் மின்னியது..

எழுத ஆரம்பித்தார்கள்.. 

வாழ இருந்த காலம் போதுமானதாக இல்லாமல் போய் விட்டது இப்போது.

உணவு ஓரிடம், வாழ்க்கை ஓரிடம், கதை எழுத மலை உச்சி.. இப்படி தீவு முழுதும் தினமும் அலையத் தலைப்பட்டனர். நீல வேணியிடம் அவர்கள் செலவிடும் காலம் குறுக ஆரம்பித்தது..

தொடரும்

.

No comments:

Post a Comment