Friday, August 27, 2010

நீலவேணி, ஒரு தீவு, மற்றும் சில சிந்தனாவாதிகள்!!! - பாகம் 2




நீலவேணிக் கரையோரம் இருந்த புதர்கள் அகற்றப்பட்டன. நீலவேணி பதறிப் போனாள். பூச்சிகளுக்கும், புழுக்களுக்கும் அவளுக்கும் பாலமிட்ட புதர்கள் காணாமல் போனது வலிக்கத்தான் ஆரம்பித்தது. அவள் தொட்டு அணைத்து தடவிக் கொடுத்துக் கொண்டே சென்ற அந்தச் சொந்தங்களின் இழப்பு அவளுக்கு சோகத்தை உண்டாக்கியது...

அவள் இரு விலாக்களின் ஓரமும் சிந்தனாவாதிகள் காலாற நடந்தனர். அவளருகில் அமர்ந்து பல கதைகள் பேசினர். கதைகளை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே மெதுவாக ஒலியெழுப்பிச் செல்வாள் நீலவேணி.

குடிசைகள் சற்று இடம் மாறி இருந்தன. நீலவேணி இன்னும் அங்கிருந்த எல்லோர் வாழ்விலும் பங்கு பெற்றிருந்தாள். பறவைகள், விலங்குகள் தாவரங்கள் மற்றும் சிந்தனாவாதிகள் எல்லோருக்கும் அவள் தேவையாக இருந்தாள்.

சிந்தனாவாதிகள் கைவேகம் குறைய ஆரம்பித்தது, அவர்களின் இதயம் அங்கீகாரத்திற்கு ஏங்க ஆரம்பித்தது. யாராவது வந்து ஆஹா இது அற்புதம் என்று சொல்ல மாட்டார்களா? நாம் இல்லாத போது யாராவது சிலாகித்து அதை நாம் அறியப் போகிறோமா என்ன? இதைப் பார்ப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என நமக்குத் தெரியவா போகிறது?

மிகப் பெரிய கவலை சிந்தனா வாதிகளைச் சூழ்ந்து கொண்டது. எல்லாம் எதற்காக என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது.

மீண்டும் நீலவேணியின் கரையில் அமர்ந்தார்கள்.

எதற்காக இங்கே வாழ்கிறோம் என்ற கேள்வி அவர்களின் மூளையைக் குடைய ஆரம்பித்தது. யோசிக்க ஆரம்பித்தனர்.

நாம் மட்டுமே என்பதில் ஒரு அர்த்தமும் இருப்பதாக படவில்லை எனக்கு.. முதல் சிந்தனையாளன் ஆரம்பித்தான். நீலவேணிக்கு சிறிது குழப்பம். இந்த நாம் என்பதில் தானும் சேர்த்தியா இல்லையா என்பது அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

காலம் என்பது நீண்டு கொண்டே போனாலும் அதில் நம்முடையது என்பது மிகச்சிறிய துண்டாகவே தெரிகிறது என்றார் இரண்டாமவர்.

அந்தத் துண்டை நாம் நீட்சி செய்ய வேண்டும் என்றார் மூன்றாமவர்.,,

நீட்சி செய்யலாம்.. யாருக்காக? எதற்காக? கேள்விகள் பிறந்தன சிந்தனாவாதிகளிடமிருந்து.

நீலவேணிக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாட்கள் யாரும் இப்படி கேள்வி எழுப்பிப் பார்த்ததில்லை. கேள்வி என்பது அவள் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது.

எல்லோரையும் இங்கே வந்து பார்க்கச் செய்யவேண்டும்..

முதல் சிந்தனாவாதி உதிர்த்த அந்த வார்த்தைகள்..

வரமா? சாபமா..? தெரிய நியாயமில்லை. ஆனால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவே பட்டது சிந்தனாவாதிகளுக்கு.

சிந்தனாவாதிகள் தீவிர சிந்தனை வசப்பட்டனர். அவர்களுக்கு என்ன செய்வது என்பது தெளிவில்லாமல் இருந்தது.

பொந்துக்குள் ஒரு வால் தெரிந்தது. அது எலி வாலா பாம்பு வாலா தெரியவில்லை.

சிந்தனாவாதிகள் எழுதுவதை நிறுத்திவிட்டு வட்டமாகவும் வாட்டமாகவும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

போக்குவரத்து உண்டாக்கப்படவேண்டும். பலர் வந்து போக வேண்டும். அவர்கள் நம் தீவை(?) பார்த்துச் சிலாகிக்க வேண்டும்..

அதற்கு என்ன செய்யலாம்?

யாரேனும் வந்தால் தங்க வேணாமா.. இன்னும் சில குடிசைகள் வேண்டும். முதல் சிந்தனாவாதி சொன்னார்.

தங்கினால் போதுமா? உணவு, போக வர வசதி? இரண்டாம் சிந்தனாவாதி சொன்னார்..

இது ஒருபுறம் செய்வோம். ஆனால் இப்படி ஒரு தீவு இருப்பதே பலருக்குத் தெரியாதே.. மூன்றாம் சிந்தனாவாதி யோசிக்கத்தூண்டினார்..

இதுநாள் வரை பேசியே இராத நான்காவது சிந்தனாவாதி பேச ஆரம்பித்தார்.

கற்பனை செய்யுங்கள்.. அந்தக் கடல் வழியே பெரும் படகொன்று வருகிறது. படகில் ஜனங்களும் பொருட்களும் வருகின்றன. நீலவேணியில் நீர் மேலேறும் ஓத ஏற்றத்தில் படகுகள் மேலே வருகின்றன. ஆற்றங்கரையோரம் உள்ள துறையில் இறங்கி வந்த ஜனங்கள் தத்தம் குடிசைகளுக்குச் சென்று இளைப்பாறுகிறார்கள்.


பொருட்கள் எதற்கு? முதலாம் சிந்தனாவாதி கேட்டார்.

பொருட்கள் தேவை.. தேவை அதிகரித்துக் கொண்டேதான் போகும்.. இங்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க.. அவர்களுக்கு உணவு சமைக்க, பரிமாற.. இரண்டாம் சிந்தனாவாதி ஆரம்பிக்க

அப்புறம் காடுகளுக்கும் மலைகளுக்கும் நீலவேணியின் நளினப் பகுதிகளுக்கும் பாதை அமைக்க வேண்டும். இளைப்பாற அங்கங்கே சின்னப் பூங்காக்கள்.. இரண்டாமவர் தொடர்ந்தார்

ஆமாம் விருந்தினர்கள் வரும்பொழுது எல்லாம் தேவை.. கூடவே உணவுப் பொருட்கள்.. எல்லோரும் நம் போல கனிகள் காய்கள் கிழங்குகளோடு திருப்தி அடையமாட்டார்கள். தானியங்கள் வேண்டும். சமைக்கப் படவேண்டும். இறைச்சிகள் வேண்டும்.. மசாலாக்கள் வேண்டும்.. மூன்றாமவர் தொடர்ந்தார்..

எல்லாவற்றையும் வெளியில் இருந்துதானா கொண்டு வரவேண்டும்? இந்தக் கேள்வியோடு, இதற்கெல்லாம் செலவாகுமே எப்படிச் சமாளிக்க? நான்காமவர் மீண்டும் கேள்விகளை வீசினார்.

கேள்விகள் மட்டுமே எழுந்து கொண்டிருந்தன. கேள்விகள் சிந்தனையைத் தீண்டின. தூண்டின. பதில்கள் கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக தலை நீட்டின. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருப்பதில்லை சிந்தனாவாதி ஒன்று ஒரு பெருமூச்சு விட்டார்.

எல்லா பதில்களும் கிடைத்த பின்னால்தான் பயணம் தொடங்கினோமா இரண்டாமவர் கேட்டார்.

மீண்டும் கேள்விகள் மூன்றாமவர் மெல்லச் சிரித்தார்.

நீலவேணிக்குச் சற்று கலக்கமாக இருந்தது, இவர்களின் பேச்சின் நீளம் அவளின் மொத்த நீளத்தை விட அதிகமாக இருந்தது. ஒன்றும் புரிந்த பாடும் இல்லை. பலவித மாற்றங்கள் வரும் என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிந்தது.

மாற்றங்களுக்கு எல்லாம் நானே காரணம் என்ற அவளின் அகந்தைக்கு சற்று பெரிய அடியாகவே விழுந்தது, மௌனமாக அவள் சென்றாலும் அவளின் பாதையில் சற்றே உப்பு படிவது அவள் அழுவதை உணர்த்தியது.

தொடரும் .

No comments:

Post a Comment