Thursday, January 7, 2010

தாமரை பதில்கள் - 49 to 57


கேள்வி எண் : 49
கேட்டவர் : அன்புரசிகன்சரியா தவறா என்ற திரியில் ஏற்பட்ட சந்தேகம். இது எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்துவந்தது... தமிழ் எழுத்துக்கள் மாற்றப்பட்டனவே ஏன்... உதாரணமாக (ணா னா லை ளை றா ) இப்படி மாற்றியவர்கள் சூகூசூகூமூடூரூழூ இவற்றை மாற்றவில்லை... இவற்றையும் மாற்றியிருக்கலாமே... (சுா இப்படி) என்ன காரணம்?இந்த எழுத்து மாற்றத்திற்கு பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்று பெயர். இது அமரர் எம்.ஜி.ஆரால் அமுல் செய்யப்பட்ட ஒன்று. (பழைய வழியிலேயே எழுதும் சிலரில் நானும் ஒருவன். )

இந்த மாற்றம் அச்சுத் தொழிலிற்காக பெரியாரால் சிந்தித்து ஏற்படுத்தப்பட்டது. ஆ - வரிசை ஐ - வரிசை இரண்டு வரிசையில் மட்டும் குறிகள் மாற்றப்பட்டன. 

பெரியார் ஐ வரிசையே வேண்டாம்.. அய் என்று எழுதிக் கொள்ளலாம் அதே போல ஔ வரிசையும் வேண்டாம் அவ் என்று எழுதிக்கொள்ளலாம் என்றும் சொல்லி இருந்தார். கடைபிடிக்கவும் செய்தார் என நினைக்கிறேன். ஆனால் அவை அதிகாரப்பூர்வமாக மாற்றப்படவில்லை.

1. அச்சுகளில் லை, ளை, ணா, னா போன்ற எழுத்துக்களுக்குத் தனியே அச்சுக்கள் தேவைப்பட்டன. எழுத்துரு மாற்றம் ல ள ண ன போன்றவற்றை உபயோகிக்க ஏதுவாக அமைந்தன. இன்று எல்லாம் கணிணி மயமாகி வருவதால் இந்தப் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டது. தமிழ் தட்டச்சும் கொஞ்சம் எளிமையானது. (கணினி வந்துவிட்டதால் இனி மெனக்கெட அவசியம் இல்லை..)

2. மாணாக்கர்களுக்கு தனிக்குறியீடுகள் என்னும் இந்த விதிவிலக்குகள் இன்றி இருப்பது எழுத்துக்களை விரைவில் கற்றுக் கொள்ள உதவுகிறது.

ளை என்பதை பழைய முறையில் எழுதும் பொழுது யானை நினைவு வரும். பசியுடன் யானை, சாப்பிட்ட யானை என ளை, னை ஆகியவற்றை சொல்லி விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது.

மாற்றப்பட்டவை சில எழுத்துக்கள் மட்டுமே. வரிசைகள் அல்ல. இல்லையெனில் அது மிகப்பெரிய எதிர்ப்பைச் சம்பாதித்து இருக்கும். பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்காது. 

ஒரு உபரித் தகவல்..

இப்படி மாற்று விகுதிகளுடன் இருந்த எழுத்துக்கள்

ண, ன (ந மட்டும் பொது விதிமுறை)
ல, ள (ழ மட்டும் பொது விதிமுறை)
ற (ர மட்டும் பொது விதிமுறை)

ஆக ஒன்றிற்கு மேற்பட்ட ஒத்த உச்சரிப்பு உள்ள எழுத்துக்களில் இம்மாறுதல்களை தமிழன் மேற்கொண்டிருந்திருக்கிறான். ஆராயப்பட வேண்டிய விஷயம் இல்லையா?=======================================================கேள்வி எண் : 50
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்உறவுகளால் உருவாகும் உற்சாகத்தைவிட பிரிவுகளால் ஏற்படும் வேதனை பெரிதாய் இருக்க காரணம் என்ன..??


எதிர்பார்ப்புகள்!!!


======================================================


கேள்வி எண் : 51
கேட்டவர் : சிவாஜிஇறந்தவர்களுக்கு வருடாந்திர திதி கொடுக்கும்போது காகத்துக்கு சாப்பாடு வைத்துவிட்டுதான் மற்றவர்கள் சாப்பிடவேன்டும் என்ற வழக்கம் இருக்கிறதல்லவா? இதில் காகத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்?ஜோதிட ரீதியாகப் பார்க்கப் போனால்...

மரணத்திற்கு அதிபதி எமன்.

அந்த எமனை அதி தேவதையாகக் கொண்டவன் சனீஸ்வரன். 

சனீஸ்வரனை அதனால் ஆயுள்காரகன் ஆகிறார். முன்னோர் ஆயுள் காரகத்துவம் பெற்றச் சனி-அதாவட்து எமன் ஆளுகையில் இருப்பதால் சனிக்கு பிரீதமான எள், மற்றும் அவரின் வாகனமான காக்கை ஆகியவை திதியில் இடம் பெறுகின்றன.

முன்னோர் ஏன் காகமாகத்தான் வரவேண்டுமா?

காகம் மனித வாழ்விலே பின்னிப் பிணைந்த ஒரு பறவை. கூட்டு வாழ்வு.. பகிர்ந்துண்ணல், சாயங்காலம் என்றால் திண்ணைகளில் அமர்ந்து கதை பேசும் பெரியவர்கள் போல மரங்களில் இருந்து கொண்டு இரைச்சலாய் பேசுவது.. விடையற்காலை எழுவது, கரைந்து மற்றவரை எழுப்பி விடுவது போன்ற பல காரியங்கள் நம் முன்னோரை நினைவு படுத்துகின்றன.

சனிக்கு ஏன் காக்கை வாகனம்?

சனிக் கிரகம் கருநீல வர்ணம் கொண்டது. அதன் காரணம் புறஊதாக்கதிர்களை அது சிதறடிப்பதால். அந்த புறஊதாக்கதிர்களை உறிஞ்சும் வண்ணம் கருமை. ஆக கருமை வண்ணம் கொண்ட காகம் அதன் வாகனம் ஆகியது.

குயில் ஏன் போட்டிக்கு வரவில்லை. காரணம் காகத்தின் பண்புகள்தான், 

காகம் கரையும் பொழுது நிலா ஒளியில் உருண்டைச் சோறு சாப்பிடும் ஞாபகம் வரும். முன்னோர் ஞாபகம் வரும்.. அதனால்தான். அதை முன்னோருக்கான இடுகுறியாகவே மாற்றிவிட்டனர் மக்கள்.


=======================================================


 கேள்வி எண் : 52
கேட்டவர் : வசீகரன்
அன்பு அண்ணா... சில நேரங்களில் ஏதாவது ஒரு நிகழ்வு இதற்க்கு முன் ஏற்கனவே ஏற்பட்டது
போலவே தோன்றுகிறது...! இப்படித்தான் அவர் பேசப் போகிறார் என என் மனதில் முன்கூட்டியே எழும் சில நேரங்களில் வியப்பு கலந்த ஆச்சரியத்துடன் இதை நான் அனுபவித் திருக்கிறேன் இது எல்லோருக்கும் ஏற்படுவதுதானா... இது எதனால்...?
இது பலருக்கும் ஏற்படும் உணர்வாகும். ஒரு சிலர் மட்டுமே அரைமனதுடன் இதை மறுக்க முடியும். இதற்கு காரணங்களாக கருதப்படுபவை சில..

மதம் : பிறப்பு இறப்பு, யுகச் சுழற்சிகளில் காலத்தில் பல்வேறு வசீகரன்களும் பல்வேறு தாமரைகளும் தோன்றி இருக்கின்றனர். இதனால் இதே கேள்வி பதில் பல்வேறு முறை அரங்கேறி இருக்கிறது. இதில் ஊழின் காரணமாய் எச்சமாய் சில நினைவுகள் தங்கி விடுகின்றன. அவையே இவை,

அறிவியல் : : மனிதனுக்கு ஆறு உணர்வு அறிவுகள் உண்டு., 1. தொடுதல், 2. சுவைத்தல் 3. கேட்டல் 4, முகர்தல் 5. பார்த்தல் 6. கற்பிதம்..

ஆறாவது உணர்வு நமக்குள் இருப்பது. பலர் அறிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் நமக்குள் ஒரு கருத்து இருக்கிறது. அதைப் போல எதை உணர்ந்தாலும் மனம் காலத்தில் சற்றே முன்னே சென்று நடக்க இருப்பதை ஊகிக்க முயல்கிறது. அது மிகச் சரியாக அமைந்திடும் பொழுது நமக்கு இந்த உணர்வு ஏற்படுகிறது. அடுத்து என்ன என்ற இந்த எண்ண உணர்வே இதற்குக் காரணம்.

பிறவற்றில் ஒன்று : அண்டம் என்பது ஒளிச்சிதறலால் பல்வாறாக சிதறலடைவதால் பல காட்சிகள் பல நட்சத்திரக் கூட்டங்கள் பல இடங்களில் பிரதிபலிப்பு அடைய ஒரு காட்சி வெகு அரிதாக இருமுறைக் காணக்கிடைக்கிறது, அதனால் எப்பொழுதோ ஒரு முறை ஒரு மாயக்காட்சியும் ஒரு உண்மைக்காட்சியும் ஒருசேரக் காண்கிறோம். எது உண்மை என அறிவதில் குழப்பம் உண்டு.

அறிவியல் விளக்கம் எனக்குச் சரியாய் படுகிறது. பல அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் பலரால் அறியப்பட்டிருப்பது இதை உறுதியாக்குகிறது. (வானொலி, தொலைபேசி இப்படி பலகண்டுபிடிப்புகள் பலரால் ஒரே சமயத்தில் சற்று முன்பின் கண்டுபிடிக்கப்பட்டவை)


=======================================================

கேள்வி எண் : 53
கேட்டவர் : தென்றல்பக்கத்து கிரகத்தில் கிரகப்பிரவேசம் செய்யத் துடிக்கும் விஞ்ஞானிகள், ஏன் பக்கத்து கண்டமான அண்டார்டிகாவில் குடியேற சகல விஞ்ஞானத்துடன் முயல்வதில்லை?
வசிக்க இடமில்லாமல் அடுத்த கிரகத்தை ஆராயவில்லை தென்றல். அதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. பூமிக்கு ஒரு மிகப் பெரிய ஆபத்து வந்தால் மனித இனத்தைக் காப்பாற்றி வாழ வைப்பது. பூமி அழிந்தால் அண்டார்டிகா அழிந்து விடுமே தென்றல். அதுவுமில்லாமல் துருவப் பகுதிகளில் மனிதர் வசிக்க ஆரம்பித்தால் அங்கிருக்கும் பனி விரைவில் உருகி விடும் அபாயம் இருக்கிறது.

2. இன்னொரு கிரகத்தில் உயிர்கள் இருக்குமானால் அது பூமியை விட வேறு பரிமாண வளர்ச்சியில் இருக்கக் கூடும். இது உயிர் வளர்ச்சியை அறிய உதவும்.

இதனால்தான் அயல்கிரக ஆராய்ட்சி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


=======================================================


கேள்வி எண் : 54
கேட்டவர் : பாரதிமண் எண்ணெய் தட்டுப்பாடு, இயற்கை எரிவாயு தட்டுப்பாடு, மணல் தட்டுப்பாடு, சிமெண்ட் தட்டுப்பாடு, இரும்புத்தட்டுப்பாடு, மின்சாரத்தட்டுப்பாடு, ..., ... என முறை வைத்து மக்கள் அனுபவித்து வரும் மகிழ்ச்சியில்(?!) அடுத்ததாக என்ன எதிர்பார்க்கலாம்?இன்னும் எக்கச்சக்கமா இருக்கின்றன்வே, குடிநீர் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு, இடத்தட்டுப்பாடு, அறிவுத் தட்டுப்பாடு, மக்கள் தொகைத் தட்டுப்பாடு சொல் தட்டுப்பாடு - இப்படி எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் தட்டுப்பாடு வந்து கொண்டேதான் இருக்கிறது.

இதை வைத்து நீங்கள் ஒரு வியாபாரத் தந்திரம் செய்வதாய் இருந்தால் ... தங்கத் தட்டுப்பாடு வரும்.. (ஆளாளுக்க்கு வாங்கிப் பதுக்குறாங்க.)

உண்மையிலேயே அது வராமல் தடுக்கணும்னு நினைக்கறதா இருந்தா.. அடுத்து தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகப் போகுது, இந்த வடகிழக்கு பருவ மழை இன்னும் ஆரம்பிக்கலை. சேமித்தால் தப்பிக்கலாம்.=======================================================

கேள்வி எண் : 55
கேட்டவர் : மதுரை வீரன்


உலக பொருளாதார சரிவு இயற்கையில் ஏற்பட்டதா? அல்லது செயற்கையாக மக்களை ஏமாற்றும் முயற்சியா?சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். ஆனால் பொருளாதாரத்தில் அந்தச் சிறுதுளிகள் கண்டு கொள்ளப்படாமல் போனதுதான் பெரு வெள்ளத்திற்குக் காரணம். உலகப்பொருளாதாரம் சீட்டுக் கட்டு மாளிகை போல சின்னச் சின்ன விஷயங்களால் தாங்கப் பட்டுக் கொண்டிருப்பதுதான் காரணம்.

ஒரு சின்னச் சீட்டு உருவப்பட சட சட எனச் சரிவதும் சின்ன வெளிச்சத்தை விடியல் என்று கொண்டாடுவதும் பேராசை மனதினால் உண்டாகுபவை.

பொருளாதாரச் சரிவு மக்களை ஏமாற்றும் முயற்சி அல்ல, பொருளாதாரம் தான் மக்களை ஏமாற்றும் முயற்சி. பொருளும் கிடையாது.. ஆதாரமும் கிடையாது.


=======================================================

கேள்வி எண் : 56
கேட்டவர் : பாரதி


மட்டைப்பந்துப் போட்டி இந்தியாவில் மிகவும் பிரபலமானதற்கு என்ன காரணம்?


பல காரணங்கள் உண்டு பாரதி.. முக்கிய ஐந்து காரணங்கள் சொல்கிறேன்.

1. ஆங்கிலேயர் விளையாடிய விளையாட்டு என்பதால் பிரபுக்களால் ஆங்கிலேயர் சகவாசத்திற்காகவும் தங்களை அவர்களுக்கு இணையாகவும் காட்ட முதலில் அவர்களால் விளையாடப்பட்டது.

2. விளையாட செலவு ஒன்றும் அதிகமில்லை. குச்சிகளும் ஒரு மட்டையும் பந்தும் போதும். நீண்ட விளையாட்டு என்பதால் மெல்ல மெல்லக் குறையாத அவல்.

3. இந்தியா வெற்றியை 1983 ல் ருசித்த போது பெற்ற பரிசுகளும் விளம்பரங்களும். அதைத் தொடர்ந்து சொரிந்த பண அடைமழையும்

4. வீட்டுக்குள் வீரர்களைக் கொண்டுவந்து ஹீரோயிஸம் காட்டிய தொலைக் காட்சிப் பெட்டிகள்

5. அரசாங்கத்தின் பிடியில் இல்லாமல் தனி நிர்வாகத்தின் கீழ் உள்ளதால், மேலும் மேலும் பணம், புகழ் என்ற தீராத முயற்சி.

இன்னும் பல காரணங்கள் இருந்தாலும் இவை ஐந்தும் முக்கியக் காரணங்கள்.


=======================================================

கேள்வி எண் : 57
கேட்டவர் : Keelai Naadaan


மழைக் காலங்களில் இடி தாக்கி சிலர் உயிரிழப்பதாக, மரங்கள் எரிந்ததாக, கட்டிடங்கள் பாதிக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். இது எவ்வாறு நிகழ்கிறது...? அதை தவிர்க்கும் முறை யாது..?


அடிப்படையாக மின்சாரம் எப்படி உருவாகிறது என்பதை அறிந்திருத்தல் மிக எளிதாக இந்தப் புதிரை விடுவிக்க இயலும். காந்தப் புலத்தை மின்கடத்திகள் வெட்டும் பொழுது மின்னோட்டம் ஏற்படுகிறது.

பூமி ஒரு மின்காந்தம். ஈரப்பசை மிகுந்த மேகம் ஒரு கடத்தி. இது பூமியின் காந்தப்புலத்தின் மேல் காற்றின் விசையினால் நகர்வதால் மின்னோட்டம் உண்டாகிறது. இந்த மின்னோட்டம் நிலை மின்சாரமாக மேகத்தில் சேர்கிறது. (இது ஒரு வகை கோட்பாடு)

அதே போல் இரு வேறு மின்குணமுள்ள பொருட்கள் உரசுவதால் நிலை மின்சாரம் உண்டாகிறது.

ஈரப்பசையில் வேறுபட்ட மேகங்கள் உரசிச் செல்லும் பொழுது நிலை மின்சாரம் ஏற்படுகிறது. (இது இன்னொரு கோட்பாடு). 

மொத்தத்தில் மேகத்தில் நிலை மின்சாரம் உண்டாகிறது.

மேகத்தில் இருக்கும் மின்சாரமானது மின்சுற்று பூர்த்தி ஆகாத காரணத்தினால் நிலைமின்சாரமாக நின்று விடுகிறது..

உயரமான, ஈரமான மரங்கள், மின்கடத்திகள் இந்த மின்னோட்டம் நிறைந்த மேகத்தின் அருகில் வரும்பொழுது அதைப் பாதையாகக் கொண்டு இந்த நிலை மின்சாரம் பூமியின் மீது பயணிக்கிறது.

மின்கடத்திகள் என்றாலும் மின் தடை உண்டல்லவா இதனால் வெப்பம் வெளிப்படுகிறது. இவை மரங்களை மனிதர்களை கட்டிடங்களை எரித்து விடுகின்றன.

இடி என்பது மின்னலின் போது ஏற்படும் ஒலிதான். ஒலியின் வேகம் குறைவு என்பதால், மின்னல் தனியாகவும் இடி தனியாகவும் நமக்குத் தெரிகிறது. இடி காற்றில் அதிர்வலைகளை உண்டாக்குவதால் அந்த அதிர்வில் நம் உடல் முழுதுமான அதிர்வுகளைக் கொடுப்பதால் இடியென்றால் நடுங்குகிறோம். இடி உங்கள் செவிப்பறையை மட்டுமே கிழிக்க முடியும். வேறெதையும்... 

மின்னல்தான் அனைத்து சேதங்களையும் ஏற்படுத்துகிறது, மின்னலால் ஏற்படும் நெருப்பில் பல காடுகள் அழிந்துள்ளன. 

உயரமான கோபுரங்கள் கட்டிடங்களில் இரும்பு போன்ற உலோகக் கடத்திகளை நிறுவி அதை பூமியுடன் இணைப்பதின் மூலம் இந்த மின்சாரம் பாய குறைந்த மின்தடையுள்ள பாதையை மின்னலுக்கு அளிப்பதின் மூலம் (இதை இடிதாங்கி என்கிறோம்) இந்த பாதிப்பைக் குறைக்கலாம்.

அலைபேசிக் கோபுரங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் என பல இடங்களில் இந்த இடிதாங்கியைக் காணலாம். மின்சாரக் கம்பங்கள் கூட பல சமயம் இடிதாங்கியாகச் செயல்படுகின்றன.

தமிழ் நாட்டு கிராமப்புறங்களில் நீர் இடி, நெருப்பு இடி என இருவகையாகப் பிரிக்கிறார்கள். நெருப்பு இடி எரிக்குமாம். நீர் இடி என்பது மரங்கள் போன்ற கடத்திகளின் வழியே பாயாமல் நீர்நிலைகளில் பாயும் இடியாகும். இது அடைந்து கிடைக்கும் ஊற்றுகளைத் திறந்து விடுகிறது என மக்கள் நம்புகிறார்கள்.


புராணங்களில் மின்னல் இந்திரனின் வஜ்ராயுதமாய் உருவகிக்கப் படுகிறது,

இது போதுமென நினைக்கிறேன்.
 
 

No comments:

Post a Comment