கேள்வி எண் : 36
=======================================================
கேட்டவர் : சூரியன்
துரோகம் என்பது உங்கள் பார்வையில்.
துர் + ரோகம் = மிகக் கெட்ட நோய். அதுவும் இது ஒரு தொற்று நோய்.
எதிரிகள் துரோகம் செய்ய முடியாது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் இந்த வியாதி தாக்குதல் குறையும்.
=======================================================
கேள்வி எண் : 37
கேட்டவர் : அமரன்
மறதி ஆயுதத்தை அழிக்க என்ன வழி?
மறதிக்கு மிகப்பெரிய காரணம் பயம். பயம் இல்லாததற்கு மிகப் பெரிய காரணம் மறதி. மறதியை ஒழிக்க முடியாது. ஒழிக்கவும் கூடாது. அதை மறந்துவிடுங்கள். அவ்வளவுதான்.
=======================================================
கேள்வி எண் : 38
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்
நாட்டில் அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள்..!! நாட்டின் குடிமகன் என்ற முறையில் உளவு மற்றும் பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை அறிந்துக்கொள்ள முடியாதவகையில் அத்துறைகளுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது..!! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே இச்சட்டத்திற்க்கு உட்படும்போது அவர்களால் நியமிக்கப்பட்ட இத்துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஜனநாயக முரண்பாடு இல்லையா..??
இல்லை.
குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதும் குடிமக்கள்தான். அதனால் பாதிக்கப்படுவதும் குடிமக்கள்தான்.
எப்படி பாதிக்கப்பட்டவர்கள் தகவலை அறிய முடியுமோ அதே வகையில் பாதிப்பை ஏற்படுத்துபவர்களும் தகவல் அறிய முடியுமல்லவா? அதனால் மிகப் பெரிய பாதிப்பல்லவா?
இதயம் உடலுக்குள் இருந்தாலும் கைவிரல் மற்றும் நகம் போல நாம் அதைப் பார்ப்பதோ, இல்லை சுத்தம் செய்வதோ கிடையாது அல்லவா? அது போல பாதுகாப்புத் துறை இருத்தல் நியாயமே!
எதையும் விட்டுக் கொடுக்காமல் இரு தனி மனிதர்களே ஒன்றாய் இருக்க முடியாது என்ற பட்சத்தில் 100 கோடி மக்கள் ஒன்றாய் இருக்க வேண்டுமெனில் சில உரிமைகளை விட்டுத் தர வேண்டியது அவசியமாகிறது. தகவல் பெறுவதை விட தகவல் தருவது என்பது மிக முக்கியமான ஜனநாயகக் கடமை ஆகும்.
=======================================================
கேள்வி எண் : 39
கேட்டவர் : இளசு
மறைமுக வரியால் பல்லாயிரம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு வரவு எனச் செய்தி பார்த்தேன்..
மறைமுக வரி என்றால் என்ன?
சொல்லப் போனால் எல்லா வரிகளும் மறைமுக வரிகள்தான். அதைக் கடைசியாப் பார்ப்போம்.
வரியை அரசுக்குச் செலுத்துபவர்கள் அடுத்தவர் சட்டைப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தால் அதற்குப் பெயர் மறைமுக வரி.
இப்போ ஒர் சோப்பை எடுத்துக்குவோம்..
மூலப்பொருள் எண்ணெய்ப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் சில வேதிப் பொருட்கள். இவை வாங்கும் போது வரி செலுத்தப் படுகிறது. அதன்பிறகு இவற்றைச் சோப்பா தயாரித்து ஆலையை விட்டு வெளியே அனுப்பும் பொழுது எக்சசைஸ் வரி (உற்பத்தி வரி என நினைக்கிறேன்) செலுத்தப் படுகிறது. இந்த ஆலையில் பணிபுரிவோர்களுக்கான சம்பளத்திற்காகவும் வரி செலுத்தப் படுகிறது. அதன் பின் பல் இடங்களுக்கு இவை அனுப்பப்படும் பொழுது போக்குவரத்திற்கான சேவை வரி செல்லுத்தப் படுகிறது. அதன் பின் விற்பனைப் பிரதிநிதிகளின் கமிஷனுக்கும் வரி.. அதன் பின் அந்தச் சோப்பிற்கு விற்பனை வரி.. விற்கும் கடைக்காரனின் லாபத்திற்கும் வரி.
இத்தனை வரிகளும் அந்த சோப்பின் விலையில் அடக்கம். ஆக அனைத்துப் பொருட்களுக்கும் நுகர்வோர்களாலேயே வரி செலுத்தப் படுகிறது. மற்ற யாரும் வரி கட்டுவதில்லை.
இப்பக்கூட நான் நேரடி வரி கட்டினாலும் இந்த வரி எங்க பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களால் தான் கட்டப் படுகிறது. அதே மாதிரி பற்பசை, உணவு விடுதி, தொலைபேசி அழைப்புகள் இப்படி பலப்பல விஷயங்களில் நான் நுகர்வோனாய் இருப்பதால் நான் வரிசெலுத்துகிறேன்.
ஆக எந்த அளவிற்கு நுகர்ச்சியைக் குறைக்கிறோமோ அந்த அளவிற்கு வரி குறையும்.
பல தொழிலதிபர்கள் தங்கள் நுகர்ச்சிக்கான மறைமுக வரியை மறைமுகமாக மற்றவர் தலையில் கட்டி விடுவதுண்டு. (குழந்தைக்குப் பள்ளி நோட்டுப் புத்தகங்கள் வாங்கி விட்டு அதை ஆலைக் கணக்கில் எழுதுவது.. சொந்த வீட்டில் அண்ணன் தம்பிக்கு வாடகை கொடுப்பதாகக் காட்டி வரியைக் குறைப்பது, உல்லாசப் பயணத்தைத் தொழில்முறைப் பயணமாக கணக்குக் காட்டுவது இப்படி...)
ஆக நேரடி வரி என்பதை நுண்ணோக்கி வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சமாதானத்திற்கு அரசுப் பணியாளர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்வதை நேரடி வரி என்றுச் சொல்லலாம். மற்றவை எல்லாம் மறைமுக வரிதான். மற்றபடி வருமான வரி, அன்பளிப்பு வரி, பரிசு வென்றதற்கான வரி, வட்டி வருமான வரி, சொத்துவரி, சாலை வரி போன்றவை நேரடி வரிகள்.
விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி, கலால் வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, வருமான வரி,மதிப்புக் கூட்டு வரி, நுழைவு வரி, பொழுதுபோக்கு வரி எனப் பலப்பல வகைப்பட்ட வரிகள் மறைமுக வரிகள் தான்.
வரியின் அடிப்படைத் தத்துவம். பணம் ஒருவரின் கையிலிருந்து இன்னொருவரின் கைக்கு மாறினால் அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும். அவ்வளவுதான். எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாம் பூனைகளுக்கு அப்பம் பிரித்துத் தந்த குரங்கின் கதைதான்.
அமெரிக்க அரசாங்கம் நுகர்வோரைத் தூண்டுவதற்குக் காரணமும் இதுதான். வங்கிகள் அரசாங்கம் போன்றவை இதை நம்பியே வாழ்கின்றன.
=======================================================
கேள்வி எண் : 40
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்
உலகமயமாக்கல்-தாராளமயமாக்கல்-இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
உலகமயமாக்கல் என்பது ஒரு இடத்தில் ஆரம்பித்த ஒன்றை உலகம் முழுக்கப் பரவச் செய்தல்.
உதாரணம்: புத்தசமயம் உலகமயாமனது.. கிறித்துவ சமயம் உலகமயமானது. காதலர் தினம் உலகமயமானது. திருக்குறள் உலகமயமானது.
தாராளமயமாக்கல் என்பது பரஸ்பர பரிமாற்றத்தை எளிதாக்குதல்..
உதாரணம்: வரிகளை எளிதாக்குதல். வழிமுறைகளை எளிதாக்குதல். கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்துதல் இவை மூலம் பரிமாற்றங்களை எளிதாக்குதல் தாராளமயமாக்கல் எனப்படும்.
தாரளமயமாக்கல் உலகமயமாக்கலை ஊக்குவிக்கிறது.
சினிமாவில் செண்டிமெண்ட் என்பது உலகமயமாகிறது. கவர்ச்சி என்பது தாராளமயமாக்கப்படுகிறது.
.
No comments:
Post a Comment