Tuesday, January 5, 2010

தாமரை பதில்கள் -- 13 to 20

கேள்வி எண் : 13
கேட்டவர் : சிவாஜி


திரைப்படங்களில் கதா நாயகனோ, நாயகியோ அடிபடும்போது அவர்கள் வளர்க்கும் குதிரையோ அல்லது மாடோ அழுவதாக காட்டுகிறார்களே...நிஜமாகவே (திரைப்படத்திலல்ல) மிருகங்கள் அழுமா?



ஒரு யானை இறந்தால் பல யானைகள் கூடி நின்று துக்கம் கொண்டாடுமாம். காக்கைகளும் அப்படித்தான். நாய்களுக்குப் பாசம் உண்டு.. உரிமையாளர் துடிப்பதைக் கண்டால் அவரை துன்புறுத்துபவராக தான் கருதுபவரைப் பார்த்து குலைக்கும், கடிக்கும்..

கதாநாயகனின் அம்மா போல பிழியப் பிழிய அழாது. 

உரிமையாளர் காணோம் என்றால் இனம் புரியாத சோகத்தில் இருக்கும். அழத்தெரியாததால் மன அழுத்தத்திலேயே இறந்து விடும். நாம் அழுதுவிடுவதால் கண்ணீரில் சோகத்தைக் கரைத்து அனுப்பி விடுகிறோம்.

குதிரையோ மாடோ பயந்து பதறுமே தவிர கண்ணீர் விட்டதாகக் கேள்விப்பட்டதில்லை.



=======================================================

கேள்வி எண் : 14
கேட்டவர் : மறத்தமிழன்


ஈழத்தில் திருமலை வான் தாக்குதல் எதை உணர்த்துகிறது?

சண்டை இன்னும் வெகுநாள் நடக்கப் போகிறதென்பதை!!!


=======================================================

கேள்வி எண் : 15
கேட்டவர் : leomohan


அண்ணா, பல பேர் நம்மிடம் அறிவுரை நாடி வரும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு அழகாக தீர்வு கூறி அனுப்புகிறோம். ஆனால் அதே சுழலில் அதே பிரச்சனை நமக்கு வந்தால் நாம் சொன்ன தீர்வையே நம்மால் பின்பற்ற முடியாமல் போகிறதே. ஏன்?


மனசுதான் காரணம் லியோ! மற்றவர்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது வெளியிலிருந்து பார்க்கிறோம். உள்ளிருந்து பார்க்கும் பார்வையின பிரச்சனையை சொல்பவர்களிடம் கேட்கிறோம்.. மனம் நிதானமாக இருப்பதால் சிந்திக்க முடிகிறது.

நமக்கு என்று வரும்பொழுது ஒரு சில எண்ணங்கள், வலிகள் மனசை இறுகப்பிடித்துக் கட்டிப்போட்டுவிடுகின்றன. 

நாம் தீர்வு சொன்னவர் நம் மேல் இருக்கும் நம்பிக்கையின் அளவிற்குத் தீர்வின் மேல் நம்பிக்கை வைத்தார். நம்மேல் நாம் நம்பிக்கை இழக்கும்பொழுதுதானே நமக்குப் பிரச்சனையே வருகிறது. ஆகவே தீர்வின் மேல் நம்பிக்கைப் போய்விடுகிறது.

அதே சூழல், அதே பிரச்சனை என்பதை வெளியில் வந்து பார்க்க இயலாமல் தடுப்பது சிக்கலில் மாட்டிக் கொண்ட மனம். அதற்கு முதல் தேவை ஆறுதல் மற்றும் தைரியம். நாம் அவர்களுக்கு ஆறுதல் மற்றும் தைரியம் கொடுத்த பின்புதான் தீர்வு கொடுத்தோம். அதே ஆறுதலும் தைரியமும் கிடைக்கும் பட்சத்தில் தீர்வை நாம் நம்புவோம். 



=======================================================

கேள்வி எண் : 16
கேட்டவர் : ஷீ-நிசி


பத்தி பத்தியாக எழுதுவதற்கு இருக்கும் நேரம், ஒருவரியில் பாராட்டுவதற்கு இருப்பதில்லையே பலருக்கும்... இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?



இதில் தவறு இருப்பதாகத் தெரியலை. பத்திப் பத்தியா எழுதறவங்க புரிகிற மாதிரி எழுதக் கஷ்டப் படறாங்கன்னு அர்த்தம்.

அவங்க எழுதப் பழகறாங்க! படிக்கிற குழந்தைகள் பக்கத்தில என்ன நடக்கிறது என்று அறியாமல் படிக்கிறதில்லையா.. அது மாதிரிதான்...

மனசில் இருந்ததையெல்லாம் இறக்கி வச்சிட்டோம் என்று ஒரு திருப்தி வருமில்லையா, அப்ப படிக்க ஆரம்பிப்பாங்க.. பேச ஆரம்பிப்பாங்க.. பின்னூட்டம் போடுவாங்க..

பாராட்டு? அது பெரிய கலைங்க.. பழக பழகத்தான் வரும். அடிக்கடிப் பாராட்டிகிட்டே இருந்தா சலிச்சிரும். அளவா பாராட்டினா சம்பிரதாயமாப் போயிரும். இரண்டுமே சலிச்சிருது இல்லீங்களா?

எதிர்பாராமக் கிடைக்கிற ஒரு பாராட்டு 100 சம்பிரதாயப் பாராட்டுக்குச் சமம் இல்லையா? எல்லாம் கலந்திருந்தாதானே ருசிக்கும்.

முசாரஃபே பாலாஜியைப் பாராட்டினார் என்கிறோம். எல்லோருக்கும் அந்தப் பாராட்டு கிடைச்சிருந்தா?


  
=======================================================

கேள்வி எண் : 17
கேட்டவர் : நேசம்


அரசு மானியத்தில் படிக்கும் மருத்துவ மானவர்கள் ஒரு ஆண்டு கிராமத்தில் பணி புரிய வேண்டும் என்று கட்டாய படுத்துவது சரியா...?



படிப்பதற்கு மானியம் கொடுங்கள், இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று வற்புறுத்துகிறோம், காரணம் பிற்பட்ட பகுதியினரை உயர்த்துவதற்காக. அதே போல் கிராமப் புறங்களில் பணி புரிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தல் சரிதான். 

அரசு சொன்னது சரிதான். ஆனால் செய்யவேண்டியது இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது. அதுதான், இதை அமுலாக்க எல்லா கிராமங்களிலும் மருத்துவமனை கட்டுவது.



=======================================================
 
கேள்வி எண் : 18
கேட்டவர் : ஓவியன்



நல்ல பல கலைஞர்கள் சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போயுள்ளனர்கள் என்பது உண்மைதானா...??

உண்மையென்றால் என்ன காரணம், அந்தக் காரணத்தை முறியடிப்பது எப்படி...??



கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கணும்.

சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போனதால் சில நல்ல கலைஞர்கள் உருவாகி அங்கே வெற்றி பெற்றிருக்கின்றார்கள்

சில நல்ல கலைஞர்கள் ஆவதற்காக சொந்த வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்..

சிலர் நல்ல கலைஞர்களாய் இருக்கறதிலேயே கவனம் செலுத்தவதால் நல்ல சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்

சில நல்ல கலைஞர்களின் சொந்த வாழ்க்கை, மற்றவர்களால் பாழாக்கப் படுகிறது..

சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போகாமல் இருக்க வழி இல்லை. ஆனால் வெற்றி பெற அன்பு, அக்கறை, நட்பு போன்ற சில வழிகள் உதவும்.



=======================================================


கேள்வி எண் : 19
கேட்டவர் : ஓவியன்


வளர்ந்து வரும் தொழினுட்ப வசதிகளாலும் நேரமின்மையாலும், இன்று வாசிக்கும் பழக்கம் சிறுவர்களிடையே கணிசமாக குறைந்து விட்டது போலுள்ளதே (முன்னைய காலங்களுடன் ஒப்பீடு செய்கையில்), இது அவர்களது சிந்திக்கும் திறனைப் பாதிக்காதா...??


வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்பது சரியான வாதமாகப் படவில்லை.

எதை வாசிக்கிறோம் எப்படி வாசிக்கிறோம் என்பது ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறிக்கோண்டே வருகிறது. சொல்லப் போனால் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதுமிக அதிகம்.

இதனால் அவர்களின் சிந்தனைத் திறனும் அதிகமாக இருக்கிறது.

அதை அறியுமளவிற்கு நாம் அவர்களை வாசிப்பதில்லை என்பதே உண்மை.



=======================================================

கேள்வி எண் : 20
கேட்டவர் : அமரன்


உலகம் தோன்றிய காலம் முதல் பதிவு செய்யப்பட்ட உண்மைகள் மாறிக்கொண்டே வருகின்றன. இப்படி இருக்க உண்மை என்றுமே மாறாதது என்கின்றோம். இதில் எது சரி.?


நாம் உண்மை சொல்வதில்லை. உண்மை என நம்புவதைச் சொல்கிறோம். உண்மையைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். இதுதானே உண்மை! இது மாறுவதே இல்லையே! 
.

No comments:

Post a Comment