Tuesday, January 12, 2010

தாமரை பதில்கள் - 82 to 88

கேள்வி எண் 82:
கேட்டவர் : அன்புரசிகன்சர்தார்ஜி நகைச்சுவைகள் வெளியிடுகிறார்களே... அது ஒரு இனம் அல்லது வம்சத்தினரை கேவலப்படுத்துவதாக இல்லையா? நாம் சிரிப்பதற்காக இன்னொருவரை பதம்பார்க்கலாமா???


சிரிப்பது என்பது வேறு. மகிழ்வது என்பது வேறு. குற்ற உணர்ச்சியுடன் சிரிக்கலாம்.. வெறியுடன் சிரிக்கலாம்.. பைத்தியம் பிடித்தும் சிரிக்கலாம்.

சொல்லப்போனால் சர்தார்கள் மீது மிக நல்ல மதிப்பு வரக் காரணமே அந்த ஜோக்குகளை அவர்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதாலும் தான், சர்தார் பரவாயில்லை. சர்தார்"ஜி" என மரியாதையாகத்தான் சொல்கிறார்கள் என்று மகிழலாம்.

உயிர் காக்கும் பணி செய்யும் மருத்துவர்கள், அண்டை நாட்டுக்காரர்கள், அண்டை மாநிலத்தவர், வக்கீல்கள் என பாகுபடுத்துவதைக் கவனிக்கவில்லையா?

டாம் அண்ட் ஜெர்ரி காமெடிக்கும் கவுண்டமணி செந்தில் காமெடிக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன?

யாரையும் கிண்டல் செய்யாமல் நகைச்சுவை சொல்லுங்கள் பார்ப்போம் என்றால் 90 சதவிகித நகைச்சுவையாளர்கள் இருக்க மாட்டார்கள்.

காபி அடிக்காமல் சொந்தச் சரக்கைச் சொல்லுங்கள் என்றுச் சொன்னால் மீதி 9.9 சதவிகிதம் காணாமல் போய் விடுவார்கள்.

அப்புறம் சிரிப்புக்குப் பஞ்சம் வந்து விடும்..

நம்முடைய முட்டாள்தனத்தைப் பார்த்து நாமேச் சிரித்துக் கொள்வதுதான் புத்திசாலியாக இருக்க வழி. 
=======================================================


கேள்வி எண் 83:
கேட்டவர் : மன்மதன்


ஒபாமாவின் வெற்றியால் எதாவது மாற்றம் வருமா??
அவங்க பொண்ணுகளுக்கு புது நாய்க்குட்டி கிடைக்கப் போகுதாமில்ல.

எதிர்பார்ப்புகள்தான் தான் ஏமாற்றத்திற்கு முக்கிய காரணம். எதிர்பார்க்காமல் இருந்தால் நல்லவை கண்ணுக்குத் தெரியும். இல்லாவிட்டால் சேணம் கட்டிய குதிரை மாதிரி ஒரு விஷயத்தை மட்டுமே பார்க்கத் தோணும். அதனால் எதிர் பார்ப்பு வேணாம்.

ஒரே ஒரு விஷயம் ஆளும் தகுதி அறிவைச் சார்ந்தது.. இனத்தைச் சார்ந்ததில்லை என நிரூபிக்க நல்ல வாய்ப்பு.. நாடு நல்ல நிலையில் இருந்தால் மேலும் மேலும் யோசித்துதான் சாதிக்க வேண்டும். இப்போதைக்கு பொருளாதாரத்தை நிமிர்த்தினாலே அவருக்குப் போதும். என்ன சாதிக்க வேண்டும் என ரெடிமேடாக கண்ணெதிரில இருப்பது ஒரு வகையில் அவருக்கு அதிர்ஷ்டம் தான்.

மாற்றங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அவை பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கும்.


=======================================================


கேள்வி எண் 84:
கேட்டவர் : அன்புரசிகன்


கணவனை முறைசொல்லி அழைப்பதில் பெரும் மாற்றத்தினை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கண்டிருக்கிறேன். இலங்கையில் பெரும்பாலானோர் பேச்சுவாக்கில் இஞ்சருங்கோ இல்லவிடில் அப்பா இல்லாவிடில் என்னங்க என்று தான் கூப்பிடுவார்கள். சரி முறையாக பார்த்தாலும் திருமணத்திற்கு முன்பு மச்சான் என்றும் பின்னர் அத்தான் என்றும் அழைப்பார்கள். ஆனால் (தென்)இந்தியாவில் மாமா என்றல்லவா அழைக்கிறார்கள். ஏன் இவ்வாறான மாற்றம் என்று கேட்க்கலாமா தெரியாது. இப்படியென்றால் கணவரின் தந்தையை எவ்வாறு அழைப்பார்கள்? காரணம் இலங்கையில் கணவனின் - மனைவியின் தந்தையை தானே மாமா என்கிறார்கள்.? கணவனை மாமா என்றால் கணவன் திரும்பி மருமகள் என அழைக்கலாமா???(அழைப்பதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டுமே)


தமிழ்நாட்டைச் சினிமாவில் மட்டும் பார்த்தால் இப்படித்தான் தோன்றும்.

என்னங்க என்பதை இந்தாங்க என்று அழைப்பார்கள் தமிழ் நாட்டின் மையப் பகுதிகளில். அதுதான் இந்த இஞ்சாருங்கோ.. இங்கேப் பாருங்க அப்படிங்கற பொது மொழி இந்தா பாருங்க, இந்தாருங்க என ஆகி அது கொஞ்சு மொழியாய் இஞ்சாருங்கோ என்று மருவி இருக்கிறது.

குழந்தைப் பிறந்தபின் மனைவி கணவனை அப்பா என அழைக்க ஆரம்பிக்கிறாள். என் தாய் என் தந்தையை அப்பான்னுதான் கூப்பிடுவாங்க.. அண்ணி என்னை அப்பா என்றுதான் அழைக்கிறார்கள். காரணம் குழந்தைகளுடன் பேசிப் பேசி அப்பா என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டு விடுகிறது.


கூட்டுக் குடும்பமாய் இருக்கும் பெரிய குடும்பத்தில் வயது வித்தியாசங்கள் மிக அதிகமாக இருக்கும். அப்படி ஆகும் போது அப்ராக்ஸிமேசன் என்னும் முறை பயன்படுத்தப் பட்டு உறவுகள் அழைப்பது மாறுகின்றன. எப்படி ஒவ்வொரு உறவுக்கும் தனித் தனிப் பெயருண்டோ அதே போல பொதுப்படையாக உறவு முறைகளை இரண்டு வரிசைகளாகச் சுருக்கும் சூத்திரமும் தந்திருக்கின்றனர் நம் முன்னோர்.

முதல் வரிசை : பங்காளிகள்
இரண்டாம் வரிசை : சம்மந்திகள்

பங்காளிகள் வரிசையில் அப்பா, அம்மா, பாட்டனார், பாட்டி, சித்தப்பா/பெரியப்பா, சித்தி/பெரியம்மா அண்ணா அண்ணி தம்பி தம்பி மனைவி மகன் மகள் பேரன் பேத்தி என உறவு முறை..மருமகள் (கல்யாணத்திற்கு பிறகு) மகள் (கல்யாணத்திற்கு முன்)

சம்மந்தி வரிசையில் தாய் வழித் தாத்தா பாட்டி, அத்தை / மாமா / மாமி
அக்காள், மச்சான், அத்தான், முறை மாமன், முறைப் பெண், முறை மாப்பிள்ளை, மருமகன பேரன் பேத்தி மருமகள் (கல்யாணத்திற்கு முன்) மகள் (கல்யாணத்திற்கு பின்) என எல்லாம் அடக்கம்..


எனது அப்பாவின் - அப்பாவின் - சித்தப்பா சென்ற ஆண்டுதான் காலமானார். அவரின் வயது 92. என் தாயின் வயதோ 78. தாத்தா என்றா அழைப்பார்? இல்லையே மாமா என்றுதான் அழைப்பார். 

பல தாத்தாக்களை பெரியப்பாக்கள் என்றும், பல அத்தைகளை அக்காமார் என்றும் அடையாளம் கண்டு வருகிறோம். சிலர் எனக்கு சின்ன தாத்தாக்கள்., அவர்களை அண்ணா என்று அழைக்கிறேன். . சில சித்தப்பாமார்கள் தம்பிகளாக இருக்கிறார்கள்.

ஆக சம்மந்தி முறையில் சம வயதினரை மச்சான், கொழுந்தியாள், மச்சினி என்றும், மூத்தவரை மாமா என்றும், இளையவரை மாப்பிள்ளை என்றும் பொதுவாக அழைக்கும் பழக்கமும் இருக்கிறது.

அதனால் வயதில் சற்று மூத்தக் கணவரை மாமா என்று அழைக்கும் பழக்கம் தோன்றியது.

எவ்வளவு தூரத்து உறவினர் என்றாலும் தமிழன் இந்த உறவு முறையில் அடக்கி எளிய உறவு கொண்டாடலாம்.

நேரடி உறவினர்கள் மட்டுமே அத்தான், அத்திம்பேர் போன்ற ஸ்பெஷல் முறை சொல்லி அழைக்கப்படுகின்றனர்.

மனைவியை கணவன் அழைக்கும் உறவு முறை அன்றும் இல்லை இன்றும் இல்லை.. அடி, ஏய், பொண்டாட்டி எனச் செல்லமாய் அழைப்பது மட்டுமே உண்டு. சிலர் அம்மா என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு விஷயம்..

கணவனும் மனைவியும் கூப்ப்பிடும் தூரத்தில அருகருகே இருக்கிறார்களே என்றுச் சந்தோஷப் படவேண்டிய காலம் இது. அலைபேசியிலும், சாட்டிலும் நடக்கும் குடும்பங்கள் பெருகி வருகின்றன.


=======================================================


கேள்வி எண் 85:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்கிறார்களே.. அப்படியானால் குடியரசு என்பதற்க்கும் ஜனநாயகம் என்பதற்க்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா..?? இந்தியா இவ்விரண்டில் எந்தவகையை சார்ந்தது..??


டெமாக்ரெடிக் - ஜனநாயகம் : அனைவருக்கும் சம உரிமை. யாருக்கும் அதிக உரிமை இல்லை. ஒருவருக்கு ஒரு ஓட்டுதானே? 

ரிபப்ளிக் - குடியரசு : மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு. இதில் சம உரிமை இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனச் சொல்லப் படுகிறது. ஆனால் குடியரசு நாடு என்பதே உண்மை. அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் சகலருக்கும் சம உரிமை என்பது இன்னும் முழுமையாகவில்லையே.   =======================================================


கேள்வி எண் 86:
கேட்டவர் : murthyd99


மதத்திலோ அல்லது சமுகத்திலோ சடங்கு, வழக்கம் என்று சில முறைகளை வைத்து இருக்குகிறார்கள். அவைகள் பழங்காலத்தில், அந்த சூழலுக்கு ஏற்றார்ப் போல அமைத்து இருந்தனர், அப்படி இருக்க எதற்க்காக நாம் இன்னும் அதை பின்பற்ற வேண்டும். இந்த காலத்துக்கு ஏற்றார்ப் போல மாற்றி அமைக்க வேண்டாமா? (இந்த கேள்வி அனைத்து மதங்களுக்கும், சமுகத்தினருக்கும் சேர்த்து)


மாற்றி அமைக்கத்தான் செய்கின்றனர். அடிக்கடி மாற்றுவதில்லை. பழைய சடங்குகளைப் பின்பற்றவே முடியாது என்று கருதும் பொழுது மாற்றுகின்றனர். காசி யாத்திரை கல்யாண மண்டப வாசலோடு போகலையா? விரதங்கள் குறைந்தன. பல சடங்குகள் மறைந்தே போயின.

இதுவரை மாறவே மாறத, மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு பின்பற்றி வரும் ஒரு சடங்கை உதாரணம் காட்ட முடியுமா?

சடங்கு என்பதே அர்த்தம் மாறிவிட்டது அல்லவா? சடங்குக்காகச் செய்கிறான் என்றால் உண்மை அக்கறையில்லாமல் ஏதோ செய்தாக வேண்டுமே என்பதற்காகச் செய்கிறான் என்று அர்த்தம் ஆகிறதல்லவா?

ஆக சடங்குகளே இப்படி ஆகிக் கொண்டிருக்கும் நேரத்தில் புதிதாய் ஏன் சடங்குகளைப் படைக்க வேண்டும்? 


=======================================================


கேள்வி எண் 87:
கேட்டவர் : ஓவியன்


DHA மற்றும் Omega-3 என்றால் என்ன..??, இவை நம் உடலுக்கு எத்துணை அத்தியாவசியமானது...?, இவற்றை அதிகரிக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்..??இவற்றை விக்கிபீடியா மிகத்தெளிவாய் விளக்குகிறது ஓவியன்
DHA என்பது ஒமேகா-3 அமிலத்தில் ஒன்றுதான், மற்றவை பட்டியலிடப்பட்டுள்ளன.இவ்வகை கொழுப்புகள் மீன்களில் அதிகமாக உள்ளது.மற்ற உணவு வகைகளும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன,


இதன் நன்மை தீமைகளும் பட்டியலில் உள்ளன. இது எந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என ஒரு தகுதி பெற்ற மருத்துவரன்றி மற்றவர் பரிந்துரைப்பது தவறு.

ஆய்வுகள் நமது உணவில் 1 சதவிகிதம் அளவிற்கு இந்தச் சத்து இருந்தால் போதுமென்கின்றன.

புல்வகைகளை உண்ணும் விலங்குகளில் இது காணப்படுகிறது, தாவரங்களிலும் கிடைக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவும் நல்லதல்ல. 

இது போன்ற ஊட்டச் சத்துக்கள், வைட்டமின்களைப் பொறுத்தவரை நாம் மாத்திரைகள், மருந்துகளை நம்பாது இயற்கையில் கிடைக்கும் உணவுவகைகள் மூலம் உட்கொண்டோமானால், நமது உடலின் ஜீரணம் வழியாக பல பக்க விளைவுகளைத் தடுக்கலாம், மருந்துகள் நோயை, குறைபாடுகளைப் போக்க மாத்திரமே. ஏனெனில் அவற்றின் முழு விளைவுகளும் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன.=======================================================


கேள்வி எண் 88:
கேட்டவர் : சுகந்தப்பிரீதன்


பணவீக்கம் அதிகமாயிட்டுது.. பணப்புழக்கம் குறைஞ்சி போயிட்டுதுன்னு சொல்லுறாங்களே.. அந்தமாதிரி சமயங்களில் அரசாங்கமே பணத்தை அச்சிட்டு அதையெல்லாம் சரி செய்யலாமே.. ஆனா ஏன் அப்படி செய்யறதில்லை..!! ஒவ்வொரு நாடும் பணத்தை அச்சிடுவதற்க்கான நிபந்தனைகளை விதிப்பது யார்..?? அது எதன் அடிப்படையில் விதிக்கப்படுகிறது..??பணம் அச்சிடுவதற்கான நிபந்தனைகள் அந்தந்த நாடும் அதன் நிதி நிர்வாகத்தை நிர்ணயிக்கும் முக்கிய வங்கியும் (இந்தியாவிற்கு ரிசர்வ் வங்கி, (முன் பதிவு / கமுக்க (ரிசர்வ்டு டைப்னா கமுக்கமா இருக்கறவங்க தானே) வங்கின்னு யாரும் இன்னும் மொழிமாற்றம் செய்யலியா?))

ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான பணமதிப்பு விகிதத்தை அந்த வங்கியின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து அமைகின்றன. ஆகவே அதிகப் பணத்தை அச்சடிப்பதால் ரூபாயின் மதிப்பு மற்ற நாட்டுப் பணத்தின் மதிப்பிற்குக் குறைந்து விடும்.

அட உள்நாட்டில் என்ன விளைவு ஏற்படும் என்று பார்ப்போம். பணம் அச்சடிச்சா போதுமா? அதை எப்படி மக்கள் கையில் சேர்ப்பது? ஆளுக்கு அஞ்சு இலட்சம் இலவசம் அப்படின்னு இலவசத் திட்டமா அறிவிக்க முடியும்?.

அரசு அதிக திட்டங்களை (கட்டுமானங்கள், பொதுத்துறை தொழில்கள்) தொடங்கி பணத்தை மக்கள் வசம் சேர்க்கலாம் தான், ஆனால்...

பணம் மக்கள் கைக்குப் போய்ச் சேரணும்னா மக்கள் தங்கள் உழைப்பை அதிகமாக்கணும். அப்படி உழைப்பை அதிகமாக்கினா பணம் அடிச்சா என்ன அடிக்காட்டி என்ன, பணபிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்கு வந்திடாதா?

நிறைய வாங்கிகிட்டே இருந்தீங்கன்னா பண வீக்கம் வரும். வாங்கறதைக் குறைச்சிட்டீங்கன்னா பணப்புழக்கம் குறையும். தேவையானதை மட்டும் சரியான விலைகொடுத்து வாங்கினா பணத்தால் பிரச்சனைகள் வருவது குறையும்.

பணப்புழக்கக் குறைவு என்பது பணக்காரர்களுக்கான பிரச்சனையே தவிர பொருளாதாரப் பிரச்சனை அல்ல.

உண்மையைச் சொல்லப் போனா பணம் பண்டமாற்று வணிகத்தை அழித்த மாதிரி தெரிந்தாலும், ஒரு நாட்டிலோ ஒரு மனிதனிடமோ என்ன வளம் இருக்கிறது? அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் அங்கிருக்கும் / அவரிடமிருக்கும் பணத்திற்கு மதிப்பு. 

மற்றவை எல்லாம் வெறும் பணப் பலூன்.. பெரிசா ஊதி வெடிக்கும்.

 

No comments:

Post a Comment

The Mahabharat Chronology: Dr. K.N.S. Patnaik

The present European calendar came into vogue around 7 A.D. India, since ancient times, has been following the lunar calendar. The Western...