Thursday, January 7, 2010

தாமரை பதில்கள் -- 27 to 29

கேள்வி எண் : 27
கேட்டவர் : ஓவியன்


பிறருக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளி, இரத்தத் துளி இரண்டிலும் வலிமையானது எது..?, காரணம்..??



கண்ணீர்த்துளி - அன்பினால், கருணையினால் இப்படி உணர்வுகளினால் உதிர்வது. கண்ணீர் அன்பின் அடையாளம் ஆனாலும் வெறும் கண்ணீர் இயலாமையைக் காட்டுவதாகும்.

இரத்தத்துளி - உணர்வுகளினால் தூண்டப்பட்ட உடல்களில் இருந்து வழிவது. பிறருக்காக இரத்தம் சிந்தும் முன் ஒரு துளிக் கண்ணீராவது சிந்தப் பட்டிருக்கும். அதே சமயம் இரத்தம் சிந்துவது இன்னொருவன் கண்ணில் இன்னொரு துளி கண்ணீரை உண்டாக்கும்..

ஒரு வகையில் இரண்டுமே பலவீனமானவைதான். உண்மையிலேயே வலிமையானது பிறருக்காக உதிர்க்கப்படும் வியர்வைத்துளி தான். இதுதான் கண்ணீர்த்துளி, இரத்தத்துளி இரண்டையும் நிறுத்தும் சக்தி கொண்டது.


=======================================================


 கேள்வி எண் : 28
கேட்டவர் : ஓவியன்


ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தினை, உச்சபட்ச பயன்தரக் கூடியதாக மாற்றுவது எப்படி..??


திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்தை உச்சபட்ச பயன்தரக் கூடியதாக மாற்றலாம். ஆனால் அதற்காக குறிப்பிடப்படாத பல நேரங்களைச் செலவழிக்க வேண்டியதாக இருக்கும். பரவாயில்லையா?

வாழ்க்கையில் நாம் சில மைல்கற்களை நிர்ணயித்து அவற்றை நோக்கிப் பயணிக்கிறோம். ஆரம்பத்தில் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என அசட்டையாக இருந்து விடுவதனாலேயே உச்சபட்ச பயன்தரக் கூடிய முயற்சிகள் தேவைப்படுகின்றன.

அடுத்தடுத்த மைல்கற்களுக்கான நேரம் குறைந்து கொண்டே போகிறது. இருந்தாலும் அவற்றையும் அடைகிறோம். காரணம் அனுபவம்.

அனுபவம் என்பது நம்முடைய தனிப்பட்ட அனுபவம் அல்ல. ஐம்புலன்களையும் விழிப்புடன் வைத்திருந்தால் அடுத்தவரின் அனுபவமும் நமதாகிறது. இதன் மூலம் நம்முடைய நேரங்கள் மிகப் பயனுள்ளவையாக மாறுகின்றன. அதேபோல் நம்முடைய அனுபவங்களைப் பகிர்வதின் மூலம் மற்றவரின் நேரத்தையும் மிச்சமாக்குகிறோம்.

ஆக, தளர்வில்லாத ஊக்கம், விழிப்புணர்வு, அனுபவப்பகிர்வு மற்றும் ஆறாவது அறிவான பகுத்தறிவு... இவற்றை கைக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்ல.. இயன்ற வரை உச்சபட்ச பயன் தரக்கூடிய காலத்தைக் கைக்கொள்ளலாம்.


=======================================================


கேள்வி எண் : 29
கேட்டவர் : தென்றல்


இன்னும் முக்கிய நகரங்களில் கூட அடிப்படை வசதிகள் இல்லாத இந்தியா, நிலவுக்கான ஆராய்ச்சி மேற்கொள்ளுவது ஆள் அனுப்புவது சரியா? சகல வசதிகள் கொண்ட அமெரிக்காவின் நாசாவை முந்தி நம்மால் என்ன கண்டறிய இயலும்?



இரண்டும் இரண்டு கண்கள் தென்றல்

இன்றைய வாழ்விற்காக செலவழிக்கிறோம். நாளைக்காக முதலீடு செய்கிறோம். ஆனால் விகிதாச்சாரம் மிக முக்கியம். 

1. இன்றையச் செலவு - அடிப்படை வசதிகள்
2. நாளையச் செலவு - உற்பத்திப் பெருக்கம், வாழ்க்கைத் தரமுயர்த்தல், ஆரோக்ய வாழ்வு, கட்டமைப்பு எனப் பல 
3. 100 கணக்கான ஆண்டுகளுக்குப் பிந்தையத் தேவை விண்வெளி ஆராய்ட்சி முடிவுகள்

எனவே எதற்கு அவ்வளவு செலவு செய்கிறோம் என்பது மிக முக்கியம். இன்றைய அவசியச் செலவுகளை செய்து விட்டு நாளைக்குத் தேவையானதைச் சேமிக்கலாம் என்பது நல்ல கருத்துதான். ஆனால் கொஞ்சம் நாளைக்கு என இன்றையச் செலவுகளைக் கொஞ்சம் குறைக்கலாம்.

நிலவில் கால்வைப்பதைப் பல நாடுகளால் ஒரு கௌரவப் பிரச்சனையாகக் கருதுகின்றன. நிலவின் இந்தியன் காலை வைத்தான் என்பது மட்டுமே நமது கொள்கை என்றால் வெட்டிச் செலவு. வறட்டு கௌரவம்.


விண்வெளி ஆராய்ட்சிகளில் உடனடிப் பலன் என்பது கிடையாது. அதனால் இதை விடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். நிலவை விண்வெளி ஆராய்ட்சிக்கு இன்னொரு இடை நிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கை.. தொலை நோக்கு உள்ளது.

நிலவின் ஆராய்ட்சியில் சில நோக்கங்கள் உண்டு

1. பூமி மற்றும் கோள்களின் உருவாக்கம்
2. விண்வெளி கதிரியக்க ஆராய்ட்சிகள்
3. பூமிக்கு ஆபத்தாய் வரும் விண்கற்கள் எரிநட்சத்திரங்களைக் கண்காணித்தல் மற்றும் அவற்றை திசை திருப்ப ஏவுகணத்தளங்கள் அமைத்தல்
4. விண்வெளியைக் கூர்ந்து நோக்கும் தொலைநோக்கிகள் அமைத்தல்.. 
5. விண்வெளிப்பயணத்தை நிலவில் எர்பொருள் நிரப்பி இன்னும் அதிக தூரம் செல்ல ஏதுவாக்கல்..

இப்படி பல விஷயங்கள் உண்டு...


ஒவ்வொரு நாடும் தனித்தனியே செலவழிப்பது வீண். விண்வெளி ஆராய்ட்சியைப் பொறுத்தவரை அது அனைத்து நாடுகளும் ஒன்று கூடிச் செய்ய வேண்டியச் செயல். ஊர்கூடித்தான் தேரிழுக்க வேண்டும். எனவே கௌரவம் பார்த்து பலமுறைச் செலவு செய்வதை விட நாடுகள் ஒருங்கிணைந்து ஆய்வுகள் செய்யவேண்டும். அவற்றைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

.

No comments:

Post a Comment