Tuesday, January 5, 2010

டிப்ஸ் தருவது சரியல்ல - விவாதம் பாகம் 1

நம்மில் பலர் உணகங்கள், விடுதிகள் மற்றும் சில இடங்களில் பணியாளர்களுக்கு டிப்ஸ் என்னும் அன்பளிப்பு தொகையை வழங்குவது வழக்கம். இது சரியான ஒன்றா?
பல வசதியானவர்களும், நடுத்தர வர்கத்தினரும் தரும் அன்பளிப்பால் அந்த பணியாளர்கள் சில ஏழைகளிடமும் டிப்ஸ் எதிர்பார்கிறார்கள்.

இங்கு டிப்ஸ் தருவது கௌரவமாக மாறிவிட்டது. சம்பளம் வாங்கும் பணியாளுக்கு நாம் தருவது ஒரு விதத்தில் லஞ்சம்தானே? இது தேவையா

 இந்த கருத்து ஒரு வகையில் சரி என்றாலும் அவர்களுக்கு கொடுக்கபடும் ஊதியம் மிக குறைவு மேலும் அவர்கள் காலையில் இருந்து இரவுவரை வேலை செய்ய வேண்டும் அதனால் டிப்ஸ் என்பது ஒரு டானிக் மாதிரிதான்..

டிப்ஸ் கொடுப்பது சட்டப்படி தவறு!
மனிதாபிமானப்படி சரி!  


இப்படி பல கருத்துகள் உலவுகின்றன.

மனிதாபிமானப் படிச் சரியா? அடிப்படையேத் தவறு.

ஒரு உணவகம். நான்கு பேர் வருகின்றனர். முதலாமவர் கைநிறையச் சம்பாதிப்பவர். கைநிறைய டிப்ஸ் கொடுப்பவர்.

இன்னொருவர் கைநிறையச் சம்பாதிப்பவர், டிப்ஸ் தருவதில்லை என்ற எண்ணம் கொண்டவர்.

மூன்றாமவர் அளவாகச் சம்பாதிப்பவர். அளவாகச் சாப்பிட்டாலும் அளவாகச் டிப்ஸ் தருபவர்.

நான்காமவர் அளவாகச் சம்பாதிப்பவர். டிப்ஸ் தரும் அளவிற்கு வசதி இல்லாதவர்.

அனைவருக்கும் ஒரே விதமானச் சேவை கிடைக்குமா? கிடைக்கும் என்றால் மனிதாபிமானம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். கிடைக்காது என்றால் அது வெறும் வியாபாரம்தான். வியாபாரம் என்றாலும் நேர்மையான வியாபாரமா? இல்லை. ஏமாற்று வியாபாராம்.

எப்படி லஞ்சம் மனிதனைப் பாதித்ததோ அதேபோல் டிப்ஸூம் மனிதனைப் பாதிக்கிறது.

கடமையை மீற லஞ்சம் பெற்றவர்கள்.. கடமையைச் செய்ய லஞ்சம் பெற்றதைப் போல, இன்று அதிகப்படியான கவனிப்புக்கு டிப்ஸ் பெறுபவர்கள், டிப்ஸ் கிடைக்காதென்றால் சர்வீஸே கிடையாது என்று சொல்லும் காலம் வரும்.


அவனுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கக் காரணமே நீங்கள் டிப்ஸ் தருவதினால்தான் ஐயா! உழைத்தும், அதற்குரிய வருமானம் பெறாமல், பிச்சை எடுக்கின்ற கீழான நிலைக்குத் தள்ளுவது டிப்ஸின் உபயம். இது அவனது தன்மானத்தைக் குறைக்கும் செயல்.


ஏன், உரிமையாளரே இந்து 6 மேசைகள் உன் பொறுப்பு. இதில் எவ்வளவு பில் ஆகிறதோ அதி இத்தனைச் சதவிகிதம் உனக்கு எனப் பிரித்து சதவிகிதக் கணக்கில் கொடுக்கலாமே! அப்படிக் கொடுத்தால் அதை வருமானத்தில் காட்ட வேண்டும். உணவகமும் வரி கட்ட வேண்டியது இருக்கும். சொல்லப் போனால் டிப்ஸ் முறையால் அரசுக்குச் செல்ல வேண்டிய வரியும் ஏய்க்கப் படுகிறது.

5 ரூபாய் டிப்ஸ்னால வருமான வரியா அப்படின்னு கேக்கறீங்களா? 5 ரூபாய்க்கு 1.60 காசு வரி செலுத்தத் தானே வேண்டும்..

விதிவிலக்குகள் விதிகளாவதில்லை. அவை சூழ்நிலைகள் மற்றும் அந்த நேரத்து நிலவரங்களினால் கொடுக்கப்படுபவை. ஒரு விதிவிலக்கு கொடுக்கப்பட்டால் அதை உதாரணம் காட்டியே ஆயிரக்கணக்கில் விதிவிலக்குகள் கொடுத்து விதிவிலக்குகள் மட்டுமே விதிகளாகும் நிலைகளை உருவாக்கும் சமுதாயம் இது.

ஆகவே சில சமயங்களில் கல்மனங்களாக இருக்க வேண்டியதும் தேவையாகிறது. டிப்ஸ் கொடுத்து உரிமைக்குப் போராடும் குணங்களை மழுங்கடிக்காமல் இருப்பதே நல்லதென நினைக்கிறேன். 

டிப்ஸ் கொடுப்பது வரிஏய்ப்பு எப்படித் தெரியுமா?

நீங்கள் பணமாய் கொடுக்கும் டிப்ஸ் எந்தக் கணக்கிலும் சேருவதில்லை. அன்னியன் பாஷையில் சொன்னால்

10 ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் 3.50 ரூபாய் அரசிற்கு வருமான வரி
1 கோடிபேர் 10 ரூபாய் டிப்ஸ் என்றால் மூணரை கோடி
1 கோடிபேர் 50 முறை டிப்ஸ் என்றால்? 175 கோடி அல்லவா?

தமிழ் நாட்டின் சத்துணவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடே இவ்வளவுதானே!

1 ரூபாய் 2 ரூபாய் இருந்த டிப்ஸ்கள் பில் தொகையில் 10 சதவிகிதம் 15 சதவிகிதம் என ஏறுவதற்குக் காரணம் கொடுப்பவர்களா வாங்குபவர்களா?

டிப்ஸ் ஒன்றும் கேட்டு வாங்கி உருவானதல்ல. அது கொடுத்துப் பழக்கப்படுத்தப்பட்டதுதான்.

நம்ம வீட்டு விஷேஷங்களில் கூட வண்ணான், நாவிதர், புரோகிதர் போன்று தொடர்ச்சியாக பணி செய்வோருக்கு தட்சணை, மரியாதை என புத்தாடைகள் பணம் கொடுப்போம் ஞாபகம் இருக்கிறதா! ஒரு விழாக்காலத்தில் தபால்காரர் போன்றோருக்கு இனாம் கொடுப்போம் ஞாபகம் இருக்கிறதா? இவையெல்லாம் சேவைக்குத் தரப்படும் டிப்ஸ்களே! இவை தொடர்ச்சியாக பணிபுரியும் மக்களுக்கு ஒரு ஊக்கத்தொகையாக, போனஸாக அமைந்தது.

அதையே டிரான்ஸேக்ஷன் பேஸிஸ் அதாவது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் என மாற்றி டிப்ஸாக மாற்றி இருக்கிறோம். இதனால் பணம் கொடுத்தால் சேவை என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

பசியாய் இருந்த பொழுது அவித்த கடலை கொடுத்தவளுக்கு ஒரு ஊரையே பரிசளித்தாராம். மன்னர்..(பெந்த காளூர்- அதாவது அவித்தக் கடலையூர்- அவித்தக் கடலையைப் கொடுத்தவ்ளுக்குப் பரிசாக அளிக்கப் பட்ட ஊர்) அதன் அடிப்படைக் காரணம் என்ன? ஆளுமை.. கர்வம்.. அந்த உணர்வுதான் இந்த டிப்ஸ்களுக்கு அடிப்படைக் காரணம். அதே அரசர் அரண்மனைச் சமையல்காரருக்கு என்னச் சம்பளம் தந்திருப்பார் என்பது ஊரறிந்த உண்மை.

அந்த உணர்வுகளால் பிறக்கும் டிப்ஸ், அதே உணர்வுகளைப் பரப்புகிறது. டிப்ஸ் பெறுபவரும் கர்வம் பெறுகிறார்.. உழைத்துத் தன் காசில் நாலு இட்லி சாப்பிடுபவர் டிப்ஸ் கொடுக்க 1 ரூபாய் இல்லாத காரணத்தினால் ஏளனமாக, கேவலமாகப் பார்க்கப்படுவது இந்த டிப்ஸ் கலாச்சாரத்தினால் உருவாவதைத் தடுக்க முடியாது.

டிப்ஸ் உணவகத்தில் மட்டும் இல்லை,, தபால்காரரிடம் இன்னும் சேவைப்பணி சார்ந்த தொழிலாளிகளிடம் பரவுகிறது, சம்பளம் குறைச்சல் என்ற ஒரே பல்லவியைப் பாடிப் பிச்சை எடுப்பது பழக்கப்படுத்தப் படுகிறது. இருக்கிறது என்பதற்காக நம் சொந்தக் குழந்தைகளுக்கே அளவுக்கு அதிகமாக கொடுத்தல் அவர்களைக் கெடுக்கும், அப்படி இருக்கச் சமுதாயத்திற்குச் சொல்லவும் வேண்டுமா?

கடையில் வாங்கும் பொருள்களுக்கு எத்தனைபேர் ரசீது கேட்டு வாங்குகிறார்கள்? அதில் வீணாகாத வரியா, மனிதாபிமானத்தோடு தரப்படும் டிப்ஸில் வீணாகிறது? உழைக்காமல் உட்கார்ந்து பிச்சைக்கேட்பருக்கு கொடுக்கக்கூடாது என்பது மிகச் சரி. ஆனால், உழைத்தவருக்கு மனதாரக் கொடுப்பதில் தவறில்லை. கால்குலேஷன்கள் எடுபடாத இடம் மனிதாபிமானம்.
எதற்காக ஒப்பிடுகிறீர்கள்? இதுதான் அடிப்படைத் தவறு நம்மக்களிடத்திலேயே!

கடையில் ரசீது வாங்காதது மிகப் பெரிய தவறு.
டிப்ஸ் கொடுப்பது ஒரு தவறு..

பெரிய தவறு இருக்கிறது என்பதற்காக சின்னத் தவறை சரி என்று சொல்லலாமா? முன்னரே சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? இரண்டையும் எதிர்ப்பதுதான் சரியே தவிர, முதலில் பெரியதைப் பார்ப்போம் அப்புற சின்ன விஷயங்களைப் பார்ப்போம் என்றுச் சொல்லுதல் சரியல்ல.

விதிவிலக்குகள் விதிகளாக்கப்படுவது என்பதுதான் இது.

உழைத்தவருக்கு மனதாரக் கொடுப்பது..
இங்கு மனது ஆறுகிறதா சிவா.ஜி?

ஒரு கடையில் இட்லி 2 ரூபாய்.. இன்னொரு கடையில் 4 ரூபாயில் இன்னொரு கடையில் 16 ரூபாய்.. இன்னொரு கடையிலோ 50 ரூபாய்..

எங்கு டிப்ஸ் அதிகம் கொடுக்கப்படுகிறது? கர்வமா இல்லை இளகிய மனமா எது டிப்ஸிற்கு அடிப்படைக் காரணி?

ஒரு வேறுபாட்டைப் பாருங்கள்..

ஒரு ஷூ பாலிஸ் செய்பவன் சுயதொழில் செய்கிறான்.. அவன் கேட்பது 5 ரூபாய் என்று கொள்வோம். நீங்கள் 6 ரூபாய் கொடுக்கிறீர்களா? அது தொழிலுக்கு கொடுக்கப்படும் மரியாதை...

ஆனால் அதன் பின் விளைவு என்ன? அவன் அனைவருக்கும் 6 ரூபாய் ஆக்குகிறான். சிலர் பேரம் பேசி 5 ரூபாய்க்கு பாலிஸ் செய்து கொள்கின்றனர். அதாவது 6 ரூபாய் கொடுக்க மனமுள்ளவர்கள் 6 ரூபாய் தடுகின்றனர். 5 ரூபாய் தர மனமுள்ளவர்கள் பேரம் பேசுகின்றனர். ஆனாலும் இந்த மாறுதலுக்குச் சின்ன வித்து நீங்கள் கொடுத்த ஒரு ரூபாய்.


பூக்காரர்கள் எங்கள் அடுக்குமாடி வீட்டுப்பக்கம் வருவதில்லை. காராணம் அருகில் உள்ள இன்னொரு குடியிருப்பில் அதிக விலைக்குப் பூக்களை வாங்கிக் கொள்கின்றனர். எங்கள் குடியிருப்ப்பில் பேரம் பேசுகின்றனர்.

காய்கறிக்கடைக்காரர்கள் இதே போல் பேரம் பேசும் மக்களை புழுக்களைப் போல் பார்க்கின்றனர். காரணம், சொன்ன விலைக்கு வாங்கிச் செல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருக்கின்றனர். ஆக நாம் அறிந்தோ அறியாமலோ கொடுக்கும் ஒரு ரூபாய் எத்தனை ஏழைகளை பாதிக்கிறது என்பதை அறியவேண்டும். பின்விளைவுகள் நம்மை அல்ல, வருமானம் குறைந்த மக்களையே பாதிக்கிறது.

ஒரே ஒரு காட்சியினை மட்டுமே பார்ப்பதால் உங்களுக்குச் சரியாகத் தோன்றுவது அதற்குப் பின்னால் ஏற்படும் பத்துப் பதினைந்து தொடர் நிகழ்ச்சியைக் காணும் பொழுது அதன் விளைவை அறியவைக்கும்.

தனிமனிதனுக்கு உதவுவதாய் எண்ணிக் கொண்டு சமுதாயத்திற்குக் கெடுதல் செய்யாதீர்கள்.

உணவகங்களில் பரிமாறுவோர், தங்கள் பணிக்கானச் சம்பளத்தை முதலாளியிடம் பெற்றுக் கொள்கின்றனர். நீங்கள் டிப்ஸ் கொடுப்பதை முதலாளியும் அறிகிறார். அவர் என்ன செய்கிறார்? அவனுக்குரிய சம்பளத்தைக் குறைக்கிறார் அல்லது சம்பள உயர்வைச் வழங்குவதில்லை, இதனால் உண்மையில் பணம் யாருக்குப் போய்ச் சேருகிறது? கடை முதலாளிக்குத்தான். பரிமாறுபவனுக்கு அல்ல.


நீங்கள் இறுதியாக அந்தப் பணம் எங்குச் சென்று சேர்ந்தது என யோசித்துப் பார்க்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

மனிதாபிமானம் என்பதைப் பற்றி ஏற்கனவேச் சொன்னேன்

அனைவருக்கும் ஒரே விதமானச் சேவை கிடைக்குமா? கிடைக்கும் என்றால் மனிதாபிமானம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தன்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த சொற்பக் காசில் உணவருந்தும் இன்னொரு உழைப்பாளி டிப்ஸ் தராததால் ஏளனமாக நடத்தப்படும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பது டிப்ஸ் கலாச்சாரம்.

ஒரு தொழிலாளிக்குப் கொடுக்கும் பணம் இன்னொரு தொழிலாளிக்கு மானப்பிரச்சனையை ஏற்படுத்துமானால் அதை எப்படி மனித அபிமானம் என்றுச் சொல்கிறீர்கள் புரியவில்லையே!

ஐந்தே வார்த்தைகளில் சொல்வதானால்

அபிமானம் - வெகுமானம் - வருமானம் - தன்மானம் - அடமானம்

4 comments:

 1. ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ?

  ReplyDelete
 2. dubaiyil sevai vari (service tax)thadai seiyappattullathu.

  ReplyDelete
 3. நான் இந்த அளவுக்கு யோசிச்சதில்ல... ஆனா உங்க கருத்துக்கள் நியாயமானதாத்தன் படுது. வாக்கு வாதம் ஸ்டைல் அருமை.

  ReplyDelete
 4. 3 பாகம் இருக்கு... இரண்டாவது பாகம் படிச்சீங்களா?

  ReplyDelete