Monday, January 4, 2010

தாமரை பதில்கள் -- 9 to 12

கேள்வி எண் : 9
கேட்டவர் : ஓவியன்


கோபத்தை உடனடியாகக் குறைக்க என்ன செய்யலாம் அண்ணா..??



கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்

நம்மைப் போன்ற மக்களுக்கு உடனடியாகக் கோபத்தைக் குறைக்க ஒரு வழி.. எதாவது ஒரு தாளை எடுத்துக் கொண்டு மனம் போனபடி கிறுக்கி விட்டு.. சிறிது நேரம் கழித்து சிறிது தண்ணீர் அருந்துவது. 

முயற்சித்துப் பாருங்கள்.. கோபம் சடாரெனக் குறைவதைக் காண்பீர்கள்..கொஞ்சம் கோபம் தணிந்த உடன் நகைச்சுவைகளைப்  படித்தால் கோபம் சுத்தமாப் போயே போச்சு.



=======================================================


கேள்வி எண் : 10
கேட்டவர் : mukilan


சக ஊழியர்கள் நல்ல நண்பர்களாக இருக்கும் ஒரு அலுவலகத்தில், ஆனால் பார்த்து வரும் வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்ற நிலையில், ராஜினாமா செய்வது நல்லதா? என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர்களை எப்படி எதிர்கொள்வது?.


இங்குதான் எதிர்காலக் கனவு என்பது மிகமுக்கியமாக அமைகிறது. உங்களின் சீரான வளர்ச்சி என்பது முதலிலிருந்தே கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சனை எழாது. ஒரே நிறுவனத்தில் எல்லோரும் ஒரே அளவு வளர்வது என்பது சாத்தியமில்லைதான். 

Practice your boss's role - இது இவ்வளவு வளர்ந்த நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியது. இதன் மூலமே நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என அடையாளப்படுத்த முடியும். இதைச் செய்த பின்னும் உங்களுக்கு உயர்வு கிட்டவில்லையெனில் உங்கள் பிரிவுப்பாதை வந்துவிட்டதென்று பொருள்.

1. அடுத்த மூன்று/ஐந்து ஆண்டுகளுக்கான உங்கள் வளர்ச்சிக்கானத் திட்டம் என்ன?

2. அது எங்கே கிடைக்கும். அதைப்பெற நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியத் தகுதிகள் என்ன?

இவை இரண்டையும் முடிவு செய்து, தயார் செய்துகொண்ட பின்னால் உங்களுக்கு உரிய வேலையயும் தேடிக் கொள்ளுங்கள். அதே சமயம் உங்கள் வேலையைச் செய்ய இன்னொருத்தரை தயார் செய்துவிடுங்கள். 

இதற்கு மேல் இங்கு வளர இயலாது என்ற நிலை இருக்குமானால், யாரும் தவறாக நினைக்க மாட்டார்கள். அதை உங்கள் நடத்தையால், மற்றும் உங்கள் பங்களிப்பினால் ஏற்கெனவே அறிந்திருப்பார்கள். 

இதில் நிறுவனத்திற்கோ தோழர்களுக்கோ துரோகம் செய்வதாக எண்ண எதுவும் இல்லை. உங்களது வளர்ச்சி அவர்களுக்கு மகிழ்ச்சியே அளிக்கும். இதே வேலையை இன்னொரு அலுவலகத்தில் செய்யப் போகிறீர்கள் என்றால்தான் மனவருத்தம் வரும்.



=======================================================

கேள்வி எண் : 11
கேட்டவர் : இளசு



'' என்னிடம் உள்ள குறை, குற்றங்களைத் தவறாமல் சுட்டுங்கள். திருத்தி உயர உதவுங்கள்'' - என நம்மில் பலரும் அடிக்கடி சொன்னாலும், அப்படி குறைகளைச் சுட்டும்போது, பெரும்பாலும் சுருண்டு விடுகிறார்கள் அல்லது வெகுண்டு விடுகிறார்களே?!

சொல்லும் செயலும் பிறழும் இவர்களைக் கையாளுவது எப்படி?

சரியோ தவறோ ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. உங்கள் கோணத்தில் தவறாய் தெரிவது அவர் கோணத்தில் சரியாய்த் தோன்றுகிறது. அவரின் கோணம், உங்களுக்கு புரியவில்லை, உங்கள் கோணம் அவருக்குப் புரியவில்லை.

ஓரிரு முறை அமைதி காக்கும் அவர் சில முறைகளுக்கு அப்பால் இதுவே இவருக்கு பொழைப்பா போச்சு என வெகுளக் கூடும்

இந்த அடிப்படையைக் கையாளுங்கள்

உதாரணம்: என்ன செயல் நடந்தது. அது எப்படி நடந்தது. அதன் விளைவுகள் என்னென்ன

காரணம்: ஏன் அந்த செயல் சரியெனப் படவில்லை உங்களுக்கு

எண்ணம்: இதனால் என்ன நன்மை விளைந்தது என்று செய்பவர் கருதுகிறார்

மாற்றுவழிகள்: இது ஒரு சின்ன கலந்துரையாடல். இப்படிச் செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும். அப்படிச் செய்திருந்தால் என்ன ஆகியிருக்குமென..

ஒப்புதல்: இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மாற்றுவழிகளையும் ஆராய சம்மதித்தல்

நீ செய்தது தவறு என்பது ஒரு வழி. இன்னும் பல நல்ல வழிகள் இருக்கின்றன் என்பது ஒரு வழி. எந்த வழியில் பயணம் செய்யப் போகிறீர்கள்?




=======================================================
  
கேள்வி எண் : 12
கேட்டவர் : சிவாஜி


அரசு ஊழியர்கள் மக்களுக்காக பணி செய்ய மக்களால், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அமர்த்தப்பட்டவர்கள். ஒரு உயரதிகாரி என்பவர் அவரது துறைக்குத்தான் அதிகாரி. மக்களுக்கு அவரும் ஒரு ஊழியர்தானே? ஆனால் விண்ணப்பம் எழுதும்போதும், நேரில் உரையாடும்போது மிகுந்த மரியாதையை தருமாறு கட்டாயப்படுத்துவது சரியா? கலெக்டரே ஆனாலும் ஊழியர்தானே...அவரை எதற்கு சார் என்றும் அய்யா என்றும் அழைக்கவேண்டும்?



கேள்வி தவறு சிவாஜி. ஒவ்வொரு மனிதனும் அடுத்தவருக்கு மரியாதை தரவேண்டும். அவர்கள் ஏன் நமக்கு மரியாதை தருவதில்லை என்பதுதான் சரியான கேள்வி.

மாவட்ட ஆட்சித் தலைவர் என்பதை மாவட்ட முதன்மை ஊழியர் என்று பெயர் மாற்றம் செய்தால் ஒரு நூறுவருடம் கழித்து மாறுமோ என்னவோ!

அடிப்படைக் காரணம் இருக்கிறது. புரோட்டாகால் என்ற வகையில் இதை இப்படிச் செய்ய வேண்டும். பிரதமர் வந்தால் முதல்வர் சென்றுவரவேற்க வேண்டும் என்று மரியாதையை எழுதியே வைத்திருக்கிறோம். அழிப்பது எப்படி? ஐந்து வருஷத்துக்கொருதரம் தெய்வ அந்தஸ்தே உங்களுக்கும் கிடைக்கிறதல்லவா!

அகலாது அணுகாது தீக்காய்வர் போல்... அதிகாரிகளைக் கையாளுங்கள்.. வித்தியாசம் மட்டுப்படும்.


No comments:

Post a Comment