Friday, January 8, 2010

தாமரை பதில்கள் - 58 to 62

கேள்வி எண் : 58
கேட்டவர் : ஓவியாவேற்றுலகம் என்று ஒன்று இருப்பது நிஜம் என்று பலர் நம்புகின்றனர், அமேரிக்காவில் நடந்த ரோஸ்வெல் நிகழ்வே ரோஸ்வெல் நிகழ்வு உண்மையா?

இருப்பினும் இன்னமும் நம் விஞ்ஞானிகள் நம்மிடம் அப்படியொன்றுமில்லை என்று சொல்கின்றனர்!! மக்களை பய மிரட்சியிலிருந்து பாதுகாக்கவே இப்படி சொல்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அரசு இப்படி அப்பட்டமாக பொய் சொல்வதை எப்படி ஏற்பது?இரு கேள்விகள்.

1. ரோஸ்வெல் நிகழ்ச்சி உண்மையா?

ரோஸ்வெல்லில் எதோ ஒன்று விபத்துக்குள்ளான நிகழ்ச்சி உண்மைதான். இதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் அது அயல்கிரகவாசிகளின் விண்கலமா? என்பதே கேள்வி. இருந்திருக்கலாம்.

1982 என்று நினைக்கிறேன். வீட்டின் மொட்டை மாடியில் என் அண்ணனுடன் மாலைநேரம் விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு ஆரஞ்சு வண்ண ஒளிப்பிழம்பு வானில் தென்பட்டது. அடுத்தடுத்த சில வினாடிகளில் ஐந்து ஒளிப்பிழம்புகள் வட்ட வட்டமாகத் தோன்றி மறைந்தன. இந்தியாவில் மேலும் சிலபேர் இதைக் கண்டிருக்கக் கூடும். என்ன என்று தெரியாது. இப்படி பல தோற்றங்கள் இந்த அயல்கிரக வாசிகள் என்ற கதைகளை உருவாக்கி உலவ விட்டுக் கொண்டு இருக்கின்றன.

நீங்கள் இணைத்துள்ள அசைபடம் போலியாக இருக்கலாம். 1947 இல் இது போன்ற தொலைபேசியும் இதுபோன்ற சுவர்கடிகாரமும் இருந்ததா?

2. அரசு அப்பட்டமாகப் பொய்சொல்வதை எப்படி ஏற்பது?

இது உண்மையாக இருந்து அரசு அதை மறைத்ததாகக் கொள்வோம். காரணம் பீதி பயம் ஆக இருக்க முடியாது. அது பறக்கும் தட்டு, அண்டவெளியில் உலவக் கூடியது என்றால் அதை ஆராய்வதின் மூலம் அறிவியலில் அந்த நாடு சற்று முன்னால் செல்லலாம் அல்லவா? அப்படியானால் பலநாடுகளும் அதில் ஆர்வம் காட்டுமே! அன்றிருந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட பொக்கிஷத்தை வெளிக்காட்ட இயலாது. வெளிக்காட்டவும் கூடாது. அரசின் அறிக்கை அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமா செல்கிறது? இல்லையல்லவா? அப்படியென்றால் அதை மறைப்பது அரசைப் பொறுத்தவரையிலும் மிகச்சரியே. அலட்சியம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே தவறு. தகவல்களின் படி அந்த விபத்தை அரசு அலட்சியம் செய்யவில்லை. ஆகவே எதை எண்ணி நீங்கள் புலம்புகிறீர்கள் எனப் புரியவில்லை. (நீங்க எப்ப அமெரிக்க குடிமகள் ஆனீர்கள் என்றுதான் புரியவில்லை. )


முடிவாக, அயல்கிரக வாசிகள் என்பது இன்றுவரை இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உதவி வருகின்றன.

1. பொழுதுபோக்கு (கதைகள், சினிமா.. )
2. அண்டப் புதிரை அவிழ்க்க விழையும் ஆராய்ட்சி முனைப்பு..

இதில் எதுவும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை, எனவே கவலைப்படத் தேவையில்லை.


=======================================================


கேள்வி எண் : 59
கேட்டவர் : பாரதி


"கூண்டோடு ராஜினாமா" அல்லது "கூண்டோடு கைது" என நாளேடுகள் தலைப்புகள் தருகின்றனவே, கூண்டோடு என அழைக்க என்ன காரணம்?கூடு என்பது பறவை தானாக கட்டிக் கொள்வது. கூண்டு என்பது பறவையைக் கட்டுப்படுத்தி, எல்லைகள் வரையறை செய்து நிர்மாணிக்கப்பட்டது.

கூண்டோடு என்றால் ஒரு வரையறைக்குள் அடங்கிய அனைத்தும் என்று பொருள்..

எதிர்கட்சியினர் என்ற வரையறைக்குள் அடங்கிய அனைவரும் ராஜினாமா செய்தனர் என்பதை கூண்டோடு ராஜினாமா என்கிறோம். அந்த இயக்கத்தினர் கூண்டோடு கைது என்றால், அந்த இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற வரையறையில் அடங்கிய அனைவரும் என்று பொருளாகும்.

அடுத்த கேள்வி மனதில் ஊசலாடுகிறதா? பூண்டோடு அழிப்பேன் என்று ஏன் சொல்கிறார்கள் என்று..

பூண்டு என்பது சற்றே சதைப்பிடிப்பான வேர். இந்த வேரிலிருந்து புதிய தாவரம் தோன்றலாம். அப்படி மண்ணில் மறைந்திருக்கும் வேரோடு அழிப்பேன் என்பதைத் தான் பூண்டோடு அழிப்பேன் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால்.. மறுபடி அழிக்கப்பட்டது தலையெடுக்காவண்ணம் என்று பொருள்.


=======================================================


கேள்வி எண் 60:
கேட்டவர் : ரவுத்திரன்


பிறந்த குழந்தை அழுவதேன்?பிறக்கறதுக்கு முன்னால அழமுடியாது அதனால தான்.

குழந்தை கருவினில் இருக்கும் பொழுது தாயின் கருப்பையிலிருந்து தொப்புள்கொடி வழியாக இரத்ததிற்கு பிராணவாயு கிடைக்கிறது. கருப்பையில் உள்ள பனிக்குட நீர் வாய் மூக்கு என பலபகுதிகளும் அடைத்திருக்கும்.

குழந்தை பிறந்த உடன் அது சுவாசிக்கத் துடிக்க, இருக்கும் திரவப்படலத்தை விலக்க நுரையீரல் செயல்படுவதால் அது வீறிட்டு அழுவதாக நமக்குக் கேட்கிறது. குழந்தை அழாவிட்டால் தலைகீழாக தொங்கவிட்டு பின்னால் தட்டுவதும் சுவாசப் பாதையை சுத்தமாக்கத்தான்.

ஆரம்பகாலங்களில் குழந்தைக்குத் தெரிந்த ஒரே மொழி அழுகைதான். எதாவது தொந்தரவாக இருந்தால் காற்றை வேகமாக நுரையீரலில் இருந்து வெளியேற்ற அது நமக்கு அழுகையாய் கேட்கும். (இடையே மூச்சு இழுப்பதால் விக்கி விக்கி அழுவது போலத் தோன்றும். பொக்கை வாய் திறந்து சிரிக்க மூன்றுமாதங்களாவது ஆக வேண்டும்.

இரண்டு மாதங்களுக்கு 10 அங்குல தூரத்திற்கு மேல் குழந்தைக்கு அதிகம் ஒன்றும் தெரியாது, எனவே பிறந்த உடனே அப்பாவைப் பார்த்துச் சிரிக்கிறது. அப்படிங்கறதெல்லாம் சும்மா, 

பிறந்த உடன் குழந்தை அழுதுகொண்டே கையை உயர்த்தினால் அது ஆளப் பிறந்தது.

குழந்தை பிறந்த பின் முதலில் அதை மேல்மாடிக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். பின்னர்தான் கீழ்தளத்திற்கு கொண்டுவரலாம்.

இப்படி சில மூட நம்பிக்கைகள் உண்டு.

குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள்

1. வைட்டமின் கே (பொட்டாசியம்) ஊசி போடுவது. இது இரத்ததிற்கு உறையும் பண்பைக் கொடுக்க வல்லது.

2. APGAR - (appearance- தோற்றம்(வண்ணம்), pulse-நாடித்துடிப்பு, Grimace - riflex for irritability - மூக்கில் இருந்து ரப்பர் குமிழ் வழியாய் சளியை இழுக்கும் பொழுது முகம் கோணும், குழந்தை தும்மும் இது போல , Activity - (கைகால் அசைவு), Respiration(மூச்சு விடுதல்).. இந்தப் பரீட்சை செய்வார்கள். பாவம் குழந்தைங்க.. இந்தப் பரீட்சை இருக்கும்னு தெரியாம நல்லா அம்மா வயித்தில தூங்கிட்டு வெளிய வந்ததும் பரீட்சைன்னதும் அழ ஆரம்பிச்சிடுது.


=======================================================


கேள்வி எண் 61:
கேட்டவர் : அன்புரசிகன்


ஓரு நாடு வல்லரசாவதற்கு எந்தெந்த துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். ? உலகப்போரினால் தான் வல்லரசு என்ற நிலை நிரூபிக்கப்படுகிறதா?


ஒரு சிலத் துறைகளில் கவனம் செலுத்துவதால் வல்லரசாவது என்பது அப்போதைய பிம்பம்.

வல்லரசு என்பதே நாட்டுக்கு நாடு மனிதனுக்கு மனிதன் மாறும் வரையறைதான்.

நான் சொல்வதை மற்றவர் கேட்டால் நான் வல்லரசு - ஆதிக்க மனப்பான்மை

யார் சொல்லையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை - புரட்சி மனப்பான்மை

என்னால் நான் சரி என்று நினைப்பதை எல்லாம் செய்ய முடியும் - இரும்பு மனப்பானமை

நான் உலகிற்கு உதாரணம், வழிகாட்டி - தலைமை மனப்பான்மை

எங்களால் எங்கள் தேவையை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் - இன்றைய இந்திய மனப்பான்மை

இப்படி ஒவ்வொரு நாடும் தனக்குத் தானே வல்லரசு என்பதற்கான வரையறையை வைத்துக் கொண்டுள்ளன. ஒரு நிலையை அடைந்த உடனே வரையறை மாறி விடுகிறது.

போர்கள் பலங்களை நிரூபித்தக் காலம் போய்விட்டது. போர் என்பது அறுவைச் சிகிச்சை போன்ற ஒரு அந்தக் கால நிர்பந்தம் என்பது உணரப்பட ஆரம்பித்து விட்டது. போரில் வென்றவன், தோற்றவன், பங்கெடுத்தவன், வேடிக்கைப் பார்த்தவன் என அனைவரும் பலகீனமே அடைகிறார்கள். 

நாடு என்பதற்கு அடையாளமே மனிதர்கள்தான். அவர்களின் திறமை, வாழ்க்கைத் தரம், உழைப்பு, ஆரோக்கியம் போன்ற வளங்களைப் பெருக்கும் ஒரே ஒரு துறையில் உய்ர்ந்தால் நீண்ட காலம் வல்லரசாக வாழலாம்.. அதாவது மன நிறைவுடன்...


=======================================================


கேள்வி எண் 62:
கேட்டவர் : சிவாஜி


காதுகளை அடைத்துக்கொண்டு நடந்தால், நடை தடுமாறுவது ஏன்?இடிப்பாரில்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இன்றித் தானேக் கெடும் என்று வள்ளுவன் சொன்னதைப் போல, யாருடைய பேச்சையும் கேட்காமல் காதை மூடிக் கொண்டு போனால் தடுமாறத்தானேச் செய்வோம்.

இங்குதான் இயற்கை நமக்குச் சொன்ன வாழ்க்கைப் பாடம். காது செவிப்பறைக்குப் பின்னால் ஒரு சின்ன பகுதியில் திரவம் உண்டு. இதுதான் நமக்கு தராசைப் போல பேலன்ஸ் அதாவது நம்மை நேராக நிறுத்திக் கொள்ள உதவுகிறது. இது அழுத்த மாறுபாட்டை நுட்பமாக அறிந்து மூளைக்குத் தெரிவிக்க மூளை உடலை நிலையாக்குகிறது.

காது அடைத்துக் கொண்டால் புறக்காற்றின் அழுத்தம் காதுகளுக்குள் போவது இல்லை, எனவே நம்மை சரி செய்து கொள்ளத் தடுமாறுகிறோம்.

அக வாழ்விலும் காதுகளை அடைத்துக் கொண்டால் தடுமாறத்தான் செய்கிறோம்.
.

No comments:

Post a Comment