Tuesday, January 5, 2010

தாமரை பதில்கள் -- 21 to 26

கேள்வி எண் : 21
கேட்டவர் : இளசு



அன்பு தாமரை,

அண்மையில் நிறைவேறத் தவறிய அணுசக்தி ஒப்பந்தம் - நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தும் 
கூடுதல் நிபந்தனைகளுடன் செப்டம்பருக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறதே!

இரு நிலை ஊடக விவாதங்களால் குழம்பிப்போயிருக்கிறேன்.

இந்த ஒப்பந்தம் நிகரக் கணக்கில் இந்தியாவுக்கு லாபமா, நஷ்டமா?



இந்தியாவின் எந்த உரிமையும் பறிபோகாமல் ஒப்பந்தம் கையெழுத்தானால் நஷ்டமில்லை. அதாவது என்.எஸ்.ஜி அமைப்பு விதிவிலக்குக்கு ஒப்புக் கொண்டால் நஷ்டமில்லை. இல்லையென்றால் நஷ்டம்தான். கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல ஆராய்ட்சி உரிமையில் கட்டுப்பாடு என்பது பொம்மலாட்ட நூல். 

அணுசக்தி எரிபொருள், தொழில் நுட்பம், சர்வதேச பாதுகாப்புக் குழுவின் கண்காணிப்பு - இவை லாபங்கள்.

விதிவிலக்கு கிடைக்கா விட்டால், சைனா - பாகிஸ்தான் என நம்பகத்தன்மை குறைந்த இரு அண்டை வீட்டாளர்களை கட்டுப்பாட்டில் வைக்க, அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப் படுவோம்.

இந்தியா ஒரு பொறுப்புள்ள சுதந்திர நாடாய் இருத்தல்தான் மிக முக்கியம். இல்லாவிடில் ஈராக் போரில் ஜான்மேஜர் அமெரிக்கா ஆதாரம் உள்ளதென்று சொன்னது என்று மென்று விழுங்கியதை போல சில கட்டாயத் திணிப்புகளுக்கு ஆளாக நேரிடும்..

சொல்லப் போனால் பிரச்சனைகள் தான் கண்டுபிடிப்புகளின் தாய், சுதந்திரத்தை விட்டுக் கொடுத்து நம்செயல்கள் அடுத்தவர் விமர்சனத்திற்கு உள்ளாவதை விட, சிலகாலம் கஷ்டப்பட்டாலும் நமக்குப் பொருந்தி வருகின்ற தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கிக் கொள்வோம் என்பதுதான் சரியாக இருக்கும்.

கஷ்டத்திற்கும் உழைப்புக்கும் அஞ்சாத மக்கள் வாழும் நாடு உயர்ந்து விடும்.

தன் கையே தனக்குதவி என்பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பலவேளைகளில் பொருந்தும்.


=======================================================


கேள்வி எண் : 22
கேட்டவர் : ஓவியன்



எனக்கு ஒரு சீரியசான சந்தேகம், சிரிக்கக் கூடாது...!!


ஆமா, பணம் நிறைய இருப்பவங்களை பணமுதலை, பணமுதலை எங்கிறோமே...??

ஏன்...???

பணத் திமிங்கிலம், பண டால்பின் என்றெல்லாம் ஏன் சொல்லலை....??



நிறைய பணம் இருப்பவர்களை அல்ல. அந்தப் பணத்தைக் கொண்டு தான் இருக்கும் ஏரியாவையே கட்டுப்படுத்துபவர்களை பணமுதலை என்கிறோம்..

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்று பழமொழி அதைச் சொல்லத்தானே இருக்கு...

திங்கிலங்கள் எனது அமைதியான மிகப்பெரிய தொழிலதிபர்களைக் குறிக்குது.. இவர்கள் மற்ற சிறிய தொழில்களை விழுங்கி விழுங்கி வளர்பவர்கள். டால்ஃபின்கள் என யாரையும் இதுவரை யாரையும் அறிந்ததில்லை. கூடிய சீக்கிரம் அந்த பேரையும் வச்சிருவோம்.


=======================================================


கேள்வி எண் : 23
கேட்டவர் : ஓவியன்



அண்ணா, இலங்கைக் கிரிக்கெட் அணியின் ‘அஜந்த மெண்டிஸ்' பற்றி என்ன நினைக்கிறீர்கள்...??

அவர் இன்னொரு முரளிதரனாக உருவெடுப்பாரா...???




ஜோசியம் கேட்கிறீர்களா? 

என்னுடைய ஜாதகத்தில் வாக்குஸ்தானத்தில் சனியும் ராகுவும் இணைந்து சுபர் பார்வையின்றி இருப்பதால் ஜோஸியம் சொல்லக் கூடாது.

ஜோஸியம் வேண்டாம்.. இதுவரைப் பார்த்ததை மட்டும் வைத்துப் பார்த்தால்..

அஜந்தா மெண்டிஸ் தனி இடம் பிடிப்பார். பல போட்டிகளை வென்றுத் தருவார். ஆனால் முரளிதரனின் சாதனைகள்? கடினம்தான்.


=======================================================



கேள்வி எண் : 23
கேட்டவர் : இளசு



அன்பு தாமரை,

ஓவியனின் பணமுதலை கேள்வியைக் கண்டவுடன் எனக்கு உதித்த துணைக்கேள்வி..

அது என்ன முதலைக்கண்ணீர்?

(நீலிக்கண்ணீர் பற்றி திஸ்கி மன்ற அலசல் ஒன்று உண்டு. லாவண்யா அவர்கள் விளக்கம் அளித்ததாய் நினைவு..)




முதலைக்குக் கண்ணீர் சுரப்பிகள் கிடையாது, ஆனால் முதலை வெகுநேரம் தண்ணிருக்கு வெளியே இருக்கும் பொழுது அதன் கண்ணில் இருந்து நீர் வழிவது போல ஒரு தோற்றம் இருக்கும். அதுவேறுவகைச் சுரப்பி ஆகும்... ( lachrymal glands ).

கரையில் கண்ணீருடன் காட்சி அளிக்கும் முதலை, நீரில் இருக்கும் போது உணவைக்கபளீகரம் செய்யும் வேகம் அறிவோம்.

அதனால் கரையோரம் முதலை கண்ணீர் வடிப்பது போலத் தோற்றம் தந்தாலும் அதை நம்பி நீரில் கால்வைப்பது தவறு என்பதைப் பழமொழி குறிக்கிறது. 

ஒரு வேளை அது உமிழ்நீர் சுரப்பியோ???


=======================================================


கேள்வி எண் : 24
கேட்டவர் : பூமகள்



"வான் போல உயர்ந்தது.." "வானமே எல்லை" அப்படின்னு எல்லாம் சொல்றோம்.. 

நிஜமா வானம்னு ஒரு அமைப்பு இருக்கா?? அப்படி இருந்தா அது உண்மையில் பூமியிலிருந்து எத்தனை உயரத்தில் இருக்கு?? அதற்கு எல்லை உண்டா?அல்லது அது வெறும் மனிதக் கண்களில் வண்ணங்களின் கண்ணாமூச்சி விளையாட்டா??




ஒரு ரகசியம் சொல்லவா? வானம் என்பது வெற்றிடம் என்பது இந்தியர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். சிதம்பர ரகசியம் என வானத்திற்கு வெற்றிடத்தைப் படைத்தவர்களே நாம்தானே..

வானம் என நாம் குறிப்பிடுவது நம் தலைக்கும் மேல் கைக்கெட்டா தூரத்திலிருந்து தொடங்கும் வெளியைத்தான்..

பறவை வானில் பறந்தது.. பட்டம் பறந்தது.. மேகம் வானில் மிதந்தது .. விமானம் வானில் பறந்தது.. என ஆரம்பித்து நட்சத்திரங்கள் வானில் கண்சிமிட்டின என வெகு தொலைவு வரை வானம் தான்.

வானின் எல்லை நம்மில் இருந்து தொடங்குகிறது.. மறு எல்லையை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம். 

வானின் வண்ணம்.. பல ஒளிக்கதிர்களால்.. மனிதனின் எண்ணங்களைப் போல..

நாகரா போன்றவர்களுக்கு ஒன்றுமில்லாததில் எல்லாம் இருக்கிறது என்னும் சித்ததத்துவம் வானம்

கவிஞர்களுக்குப் பெண்.. குழந்தைகளுக்குப் போர்வை.. ஏழைகளுக்குக் கூரை.. பக்தர்களுக்கு தேவன்களும், தேவதைகளும் உலவுமிடம்..

அறிஞர்களுக்கு அதிலே ஒன்றுமில்லை.


=======================================================


கேள்வி எண் : 25
கேட்டவர் : நேசம்


ஒரு தவறு எப்பொழுது சரியாகி விடும்.



அறிவுப் பூர்வமான பதில் : சரி செய்யப்படும் பொழுது 

உணர்வுப் பூர்வமான பதில் : தவறென்று செய்பவனால் உணரப்படும்பொழுது

உண்மையான பதில் : சரி தவறு என்று நாம் நினைக்கும் அனைத்துமே அப்படியல்ல. சரி என்று நாம் எண்ணுவது தவறாக இருக்கலாம். தவறு என்று நாம் எண்ணுவது சரியாகவும் இருக்கலாம். 


=======================================================




கேள்வி எண் : 26
கேட்டவர் : தீபன்


இந்த திரியின் 25ஆவது கேள்விக்கு இத் திரிக்காக உங்களால் வகுக்கப்பட்ட விதிகளில் முதலாவது விதியை நீங்களே மீறி விட்டீர்களே! இது பற்றி உங்கள் கருத்து?


இதற்கான பதிலும் அதே பதிலிலேயே இருக்கிறதே!!

No comments:

Post a Comment