Monday, January 4, 2010

சூழல் - வாழ்க்கையில் வெற்றி தோல்விக்கு முக்கிய காரணம்



வாழ்க்கையில் வெற்றி தோல்வி சூழலில்தான் உள்ளது.


பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது 

கருடா சௌக்யமா?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்யமே

கருடன் சொன்னது 

அதில் அர்த்தம் உள்ளது.


“சேற்றில் முளைத்த செந்தாமரை”


பழமொழியைச் சொன்ன உடனே ஆர்வமாய் எழும்பும் சுய முயற்சி நண்பர்களே அமைதி அமைதி… பாறையில் செந்தாமரை என்ன முயற்சி செய்தாலும் வளராது.. அதனால அமைதியா இருங்க.


கண்ணதாசன் சொன்னதைப் பார்த்தோம். கண்ணன் என்ன சொல்றார்?


கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!


வெற்றி தோல்வி இல்லைன்னு கண்ணன் சொல்லலை. ஆதாரம் வேணுமா? கீதை சொல்றதை முழுசா கேளுங்க

கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்?


எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.


எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகிறது

இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

இதை மேலோட்டமாகப் பார்த்தால் வெற்றி தோல்வி இல்லை என்பது போலத் தோன்றும். சற்றே ஆழமாகப் பார்த்தால் அவர் இங்கே இங்கே என அழுத்திச் சொல்வது சூழலை அல்லவா?

சூழலை சூட்சுமமாக விளக்குகிறார் கண்ணன். நம் கையில் எதுவும் இல்லை. சூழல்தான் எல்லாம். அதுதான் படைப்பின் சாராம்சம்.

அதாவது வெற்றி தோல்விகள் சூழலால் நிர்ணயிக்கப் படுபவை. நாம் எடுத்துக் கொண்டது சூழலில் இருந்தது. கொடுத்ததும் சூழலுக்கு. நமது கடமை செயலாற்றல் மட்டுமே. சூழலுக்கு அது ஒப்புடையது என்றால் வெற்றி பெறுகிறது. இல்லை என்றால் தோல்வி அடைகிறது.

இந்த மாற்றத்தைக் சூழல் காலத்தால் செய்கிறது. அதனால் சரி எனப்படுவதைச் செய் என்கிறார் கண்ணன். வெற்றி தோல்வி

இல்லை என்றால் எதையும் செய்யாதே என்றல்லவா சொல்லி இருப்பார்?

அது மட்டுமல்லாமல், விசுவரூபம் எடுத்து, அனைத்தும் தன்னுள் அடக்கம் என்று காட்டுகிறார், அதாவது சூழல்தாங்க ஆண்டவன். பின்ன, நாம் உள்பட நம்மைச் சுற்றி உள்ளது எல்லாம் அவனில் அடக்கம் என்றால் அப்படித்தானே அர்த்தம்.


ஆன்மீகம் இப்படிச் சொல்லுதுன்னா அறிவியல் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.

பரிணாம வளர்ச்சி தத்துவம் என்ற ஒரு விஷயத்தில் உயிரினங்களின் வரலாற்றை அடக்குகிறார் சார்லஸ் டார்வின். அது என்ன சொல்கிறது?

சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட் – அதாவது தகுதி வாய்ந்ததே மண்ணில் வாழ்கிறது,

அதாவது சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தம்மை மாற்றிக் கொள்கின்றன. அதனாலேயே அவற்றின் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளாதவை அழிந்து விடுகின்றன.

ஆக ஆன்மீகம் என்று பார்த்தாலும் சரி அறிவியல் என்று பார்த்தாலும் சரி.. சூழல்தான் அனைத்தும்.
“ஆஹா, இப்பவே கண்ணைக் கட்டுதே!” என்கிறார் நடுவர் அமரன்
முதலில் வாழ்க்கையில் வெற்றி தோல்வி இல்லை என்று சொல்பவர்களுக்கு…

ஆமாம், இங்கே எதற்காக வாதாடுகிறோம்?

வெற்றி தோல்வி இல்லை என்ற கருத்து வெற்றி பெறணும் என்று நினைத்துதானே வாதங்களையே வைத்திருக்கிறீர்கள்.. அப்புறம் வாழ்க்கையில் வெற்றி தோல்வியே இல்லை என்று எப்படிங்க சொல்வது?

ஒரு செயல் ஏன் செய்யப்படுகிறது? அதுக்கு ஒரு இலக்கு இருக்கு, உதாரணமாகச் சாப்பிடுகிறோம் ஏன்? பசியாற..

வெற்றி என்பது பசி ஆறுவது, தோல்வி என்பது நம்ம உடம்புச் சூடே ஆறுவது (விஷத்தைத் தின்னா என்ன ஆகும்.) இலக்கு இல்லாத செயலே இல்லை,

இலக்கை அடைந்தோமா என்பதுதான் வெற்றி தோல்வியே தவிர, அந்த இலக்கு நல்லதா? கெட்டதா? அவசியமா? இல்லையா? என்பதல்ல.

நல்ல இலக்குகளை நிர்ணயிப்பது எப்படி என்று தெரியாத சூழலில் இருப்பதால் தான் இந்த பிரச்சனைன்னு நினைக்கிறேன்,

செயலின் முடிவு அதன் விளைவுகளால் அறியப்படுகிறது. அதாங்க வெற்றி, தோல்வி, செயல் நல்லதா, கெட்டதா என்பதைப் பொறுத்து வெற்றி தோல்விகள் முடிவாவதில்லை, செயல் அதன் இலக்கை எட்டியதா என்பதுதான் வெற்றி தோல்வி. நல்லது கெட்டதையும் வெற்றி தோல்வியையும் போட்டுக் குழப்பிக்காதீங்க.


வெற்றி தோல்வியின் அவசியம் என்ன?

வரலாறு என்பதே வெற்றி தோல்விகளின் பட்டியல்தான்

எப்படின்னு கேட்பீங்கன்னு தெரியும். மேல படிங்க.


வெற்றி தோல்வி எனப்படும் முடிவுகளை எப்படி எடுக்கிறோம் என்பதை மூன்றாகப் பிரிக்கலாம்.

1. சுய மதிப்பீடு
2. அப்போதைய சமூக மதிப்பீடு
3. காலம் செய்யும் சரியான மதிப்பீடு – சூழலில் ஏற்படும் தாக்கம்.


சுய மதிப்பீடு என்பது தன் செயலைப் பற்றி தானே கொள்ளும் அபிப்பராயம் ஆகும். இதைத்தான் அர்த்தமற்றது என்று செல்வா மற்றும் மதுரை மைந்தன் ஆகியோர் வாதாடிக் கொண்டிருக்கின்றனர். மற்ற வகை முடிவுகள் இல்லை என்ற சூழலில் இது சரி. ரஜினி படத்துக்கு முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்தல் போன்ற பல அர்த்தமற்ற வெற்றி தோல்விகள் இந்த வகைப்படும்.

சினிமா பார்த்தலை ஒரு சாதனையாக கருதும் சமூகம் இதைப் போற்றலாம். ஆக என்ன சமூகத்தில் இது நடந்ததோ அந்த சமூகத்திற்கு ஏற்புடையது என்றால் அவர்கள் இதை வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் சில நூறு ஆண்டுகளுக்கு பின்னால் காலம் செய்யும் மதிப்பீடு இருக்கிறதே அது மிகச் சரியாக இருக்கும்.


சுய மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது, மகிழ்ச்சியான வாழ்வை வாழ உதவுகிறது. 

சமூக மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது அந்தஸ்து கௌரவத்துடன் வாழ உதவுகிறது. 

காலம் செய்யும் மதிப்பீட்டில் வெற்றிகரமாக இருப்பது சரித்திரத்தில் இடம் பெற்று காலம் காலமாக வாழ உதவுகிறது.



அனைத்துமே இதில் அடங்கி விடுகிறது இல்லையா? அலெக்ஸாண்டர், மைக்ரோசாஃப்ட், புத்தகங்கள், பலப்பல நிறுவனங்கள், எல்லாமே இதில் அடங்கி விடுகிறது.

இறைவன் அமைதியாக என்னவோ செய்திருக்கலாம். இப்படிப் பலப்பல உலகங்களை உண்டாக்கி அதில் உயிர்கள் வாழும் சூழலை உண்டாக்கி அவற்றிக்கு பல நியதிகளை வகுத்து ஒரு உயிர்ப்பான சூழலை உண்டாக்கி இருக்கிறார். அதனால்தான் இன்று பலர் எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்கிறோம். ஏன்னா இந்தச் சூழ்நிலையை உண்டாக்கியவர் அவர்தானே. அதாவது கடவுளுக்கே புகழ் சூழலினால்தான். (இது ரொம்பத்தான் ஓவர்னு நடுவர் முனகுவது கேட்கிறது.).

ஒண்ணுமே செய்யாம சும்மா இரு என்பதற்காக இறைவன் நம்மைப் படைத்ததாக நான் கருதவில்லை. ஒரு பெரிய புதிர்போட்டு அதை அவிழ்க்கச் சொல்லி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நாமும் ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்துக் கொண்டே வருகிறோம். அதற்காக பல செயல்களைச் செய்கிறோம். அந்தச் செயல்களை விருப்பத்துடனும் ஊக்கத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்ய ஊக்கிகளாக இருப்பவை வெற்றிகள்.


உதாரணமாக, உதாரணத்திற்காக எல்லோரும் சொல்வது சில வெற்றிகளையும் தோல்விகளையுமே. வெற்றி தோல்வி இல்லாத ஒரு வாழ்க்கை கூட உதாரணத்திற்குச் சொல்லப்படவில்லை. அதாங்க வெற்றி தோல்விகளின் முக்கியத்துவம்.


வெற்றி எனத் தவறாகக் கொள்ளப்படுகிறது என்றுதான் செல்வா சொல்லி இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது இது உண்மை வெற்றியல்ல என்றுதான் சொல்கிறார். வெற்றி தோல்வி பற்றி மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம் என்கிறார். அதை நான் மறுக்கப் போவதில்லை நான்.

அதாவது வெற்றி என நாம் கருதுவது எல்லாமே உண்மையில் வெற்றிகளா என்பது கேள்விக்குறிதான்.

தோல்விகள் என நாம் கருதுவது எல்லாமே உண்மையில் தோல்விகளா என்பதும் கேள்விக்குறிதான்.

ஆனால் வெற்றி தோல்விகள் உண்டு என்பதும், அது சூழலால், சூழல் மாற்றத்தால், காலத்தால் அளக்கப்படுகின்றன என்பதும் மறுக்க முடியாத ஒன்று. ஏனென்றால் ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் மட்டுமல்ல, பக்கவிளைவுகள், பின்விளைவுகள் எல்லாம் உண்டு.


புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.


வெற்றி பெற புத்தி மட்டுமே தேவை என்பதுதான் தவறு. வெற்றியில் இன்னும் பலவற்றின் பங்குகள் இருக்கின்றன. புத்தி இல்லாமல் கூட உழைப்பு, நல்லெண்ணம், அன்பு போன்றவற்றினால் வெற்றி பெறலாம் என்றுதான் அதற்கு சரியான பொருள். இதற்கு புத்தியில்லாதவன் மட்டுமே ஜெயிக்கிறான் என்று அர்த்தம் எடுப்பது தவறு. புத்தியில்லாதவனும் வெற்றி பெறுகிறான். புத்தி உள்ளவனும் வெற்றி பெறுகிறான் என்றுதான் பொருள்.

வெற்றி படைத்தான் அப்படின்னு சொல்லலை.. வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்கிறார்கள். அதாவது வெற்றி என்பது சூழலால் கொடுக்கப்படுவது. அவன் பெறுவது இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இப்போ முதலில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்வதில் சூழலின் பங்கு என்ன என்று சில சின்ன உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.


காந்தியடிகள் 22 நாள் சாப்பிடவில்லை. இது தனி மனித முயற்சி. இது வெற்றியா தோல்வியா?

எதுவுமே இல்லை. ஆனால்

ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை நுழைந்தது - காந்தியடிகள் 22 நாள் சாப்பிடவில்லை - வன்முறை நின்றது.

இப்படிச் சூழலுடன் சேர்த்தால் காந்தியடிகள் வெற்றிகரமான உண்ணாவிரதம் மேற்கொண்டார் என்று வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகிறது.

100 மீட்டர் தூரத்தை 10 நொடியில் கடந்தார். இது வெற்றியா தோல்வியா?

எதுவுமே இல்லை. ஆனால் அவருடன் ஓடியவர்கள் யாரும் 10 வினாடிக்குள் ஓட வில்லை என்றால் அவர் வெற்றி அடைந்தவராகிறார்.

சிலர் 9 வினாடிகளில் ஓடி இருந்தால் அவர் தோற்றவர் ஆகிறார்.

ஒருவன் பந்தய மைதானத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.56 வினாடிகளில் கடந்தது உலக சாதனை.

அதை விட வேகமாக யாருக்கும் தெரியாத சூழலில் ஒருவன் ஓடி இருக்கலாம். ஆனால் அவன் வேகமான மனிதனாக அறியப்படுவதில்லை.

ஆமையுடன் ஓடும் பொழுது வெற்றி பெறுபவன் குதிரையோடு போட்டிப் போடும் பொழுது தோற்றுப் போகலாம். இரண்டிலும் ஓடியது அவன்தான். ஓடிய வேகமும் அதேதான். ஆனால் அது வெற்றியா தோல்வியா என நிர்ணயித்தது சூழல்தானே.

ஆகவே ஒரு செயல் செய்யப்படுகிறது. தனியே அந்தச் செயலுக்கு வெற்றி தோல்வி இல்லை. ஆனால் சூழல் அங்கே இணைக்கப் படும் பொழுது மட்டுமே வெற்றியா தோல்வியா என்பது நிர்ணயம் ஆகிறது. அதனால் சூழலில்லாமல் வெற்றி தோல்வி இல்லை. (பரம்ஸ் அண்ணா மனம் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விடறார் பாருங்க)

மூன்றாம் வகை வெற்றியைப் பார்ப்போம்.

உலகத்தில் பலகோடி மக்கள் பிறந்து வாழ்ந்து மறைந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களில் பலரின் பெயர் இன்னும் நிலைத்திருக்கிறது. ஆனால் பலகோடி மக்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.

காரணம் அந்தப் பலபேர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்கள்.

பல கோடிப்பேர் வெற்றி தோல்வி பெரிதாக இல்லா வாழ்வை வாழ்ந்திருக்கின்றார்கள். காலத்திடம் தோற்றிருக்கிறார்கள்.

வெற்றி தோல்வி இல்லாவிட்டால் சரித்திரத்தில் அந்த மனிதனின் வாழ்க்கை மறக்கப்பட்டு விடுகிறது.
இதனால்தான் வெற்றி தோல்வி அவசியமாகிறது.


ஒரு கதை சொல்வார்கள். பரீட்சித்து மஹாராஜா சொர்க்கத்தில் ஆயிரம் ஆண்டுகளாய் இருந்தாராம். அவர் புண்ணியம் எல்லாம் தீர்ந்து விட்டது பூமியில் மீண்டும் ஜென்மம் எடுக்கவேண்டும் என்று இந்திரன் சொன்னாராம்..

அப்போ நாரதர் குறுக்கிட்டு, இவன் புண்ணியம் தீர்ந்து விட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்க, பூலோக மக்கள் இவர் பெயரையே மறந்திருப்பார்கள். இவர் செய்த நல்ல காரியங்கள் இப்பொழுது யாருக்கும் நினைவிருக்காது என்றாராம் இந்திரன்.

சரி அதைச் சோதித்துப் பார்ப்போம் என நாரதர், இந்திரன், பரீட்சித்து ஆகியோர் பூலோகம் வந்தனராம். அங்கு ஒரு சத்திரத்தில் இளைபபாற, நாரதர் இந்திரனுக்கு பரீட்சித்து மஹாராஜா கதையைச் சொல்ல…

சத்திரத்தில் இருந்த பெரியவர், பரீட்சித்து மஹாராஜாவா? மிகப் பெரிய கொடையாளியாயிற்றே என்றாராம்..

மூவரும் சொர்க்கம் திரும்பி விட்டார்களாம். அதன் பின்பு ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. மீண்டும் பூலோகம் வந்தார்கள்..

இம்முறை 1000 பேரைக் கேட்டதில் ஒரே ஒருவனுக்கு பரீட்சித்து மஹாராஜாவைத் தெரிந்திருந்தது. மீண்டும் சொர்க்கம் திரும்பினர்.

இப்படி பலமுறை முயன்ற பிறகு ஒரே ஒருமுறை எல்லோருமே பரீட்சித்து மன்னரை மறந்திருந்தார்களாம். 

இதோடு ப்ரீட்சித்து மஹாராஜாவின் சொர்க்க வாசம் முடிந்தது என்று முடிவெடுத்து வரும் வழியில் ஒரு குளக்கரையில் இருந்த மண்டபத்தில் ஓய்வெடுக்க அமர்ந்தார்களாம்.

அப்பொழுது அங்கே ஒருவன் அங்கிருந்த ஒரு கல்வெட்டைப் படித்துக் கொண்டிருந்தானாம். இக்குளம் பஞ்சம் தீர்க்க பரீட்சித்து மன்னனால் வெட்டப்பட்டது என்று.. ஏமாற்றத்துடன் திரும்புகிறான் இந்திரன்.. குறுநகை செய்யும் நாரதர் மற்றும் கண்ணில் நீர் வடிய உணர்ச்சி வசப்படும் ப்ரீட்சித்துடன்.



இப்படி மறைந்தாலும் பல்லாண்டு காலம் வாழும் வாழ்க்கையைத்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்கிறோம்.

நம் வெற்றி / தோல்வி எவ்வளவு பெரியது என்பது, அது எவ்வளவு காலம் நினைவில் கொள்ளப்படுகிறது என்பதைப் பொருத்து அமைகிறது.

மைக்கேல் ஜாக்சன் இறந்தாலும் அவர் புகழ் பல்லாண்டு காலம் வாழும். காரணம் அவரின் வெற்றி.

இதன் காரணமாகவே அவர் வாழ்க்கையில் பட்டத் துன்பங்களும் தோல்விகளும் கூட நினைவு கொள்ளப்படும். ஆனால் பாட்டு, நடனம் என்பதே தெரியாத சமூகத்தைப் பொறுத்த வரை அவர் யாரோதான்.

ஒரு குறுங்கதை!

ப்ளஸ் டூ தேர்வில் 98 விழக்காடுகளை பெற்ற மாணவி அழுது கொண்டிருந்தாள். ஆனால் அதே தேர்வில் 10 விழுக்காடுகளைப் பெற்று தேற தவறிய மாணவர் சிரித்துக் கொண்டிருந்தார். மாணவி அழுதது ஒரு மதிப்பெண்ணில் முதன்மை இடம் தவறிவிட்டதற்காக. மாணவர் சிரித்தது தான் அப்படி என்ன எழுதினோம் அதற்கு 10 விழுக்காடுகள் கிடைத்ததே என்று.

அதாவது மாணவி தோற்று விட்டதாக அழுவதற்கும், மாணவன் சிரிப்பதற்கும் காரணம் என்ன?

சூழல்.

அவர்களைப் பொறுத்தவரை

இலக்கை விட 10 விழுக்காடு குறைவாக பெற்றவள் அழுகிறாள்.

இலக்கை விட 10 விழுக்காடு அதிகம் பெற்றவன் சிரிக்கிறான்.

ஆனால் சமூகத்தைப் பொருத்தவரை அதன் இலக்கு பாஸ் மார்க். 
(இப்போ நடுவரின் இலக்கு டாஸ்மாக் ஆகாம இருந்தாச் சரி) ஆக இரண்டாவது வகையைப் பொறுத்தவரை மாணவி வென்றாள். மாணவன் தோற்றாள்..

காலத்தைப் பொறுத்தவரை இவை ஒன்றும் முக்கியமில்லை. ஏனென்றால் சமூகச் சூழலில் இதனால் மட்டுமே எந்த மாற்றமும் நடக்கவில்லை.

இலக்குகள் வெவ்வேறா இருப்பதால் வெற்றிதோல்விகள் மாறுகின்றன. அதைத்தானே ஐயா சூழல் என்கிறோம்!



ஒருவன் தினம் ஆண்டவனைப் பிரார்த்தித்தானாம். ஆண்டவா எனக்கு லாட்டரியில் பத்து கோடி ரூபாய் பரிசு விழவேண்டும் என..

பரிசு விழவில்லை. தினம் தினம் ஆண்டவனைப் பிரார்த்தித்தானாம்.

ஒருநாள் ஆண்டவன் பொறுமை இழந்து அசரீரியாக சொன்னாராம்.. 
முதலில் ஒரு லாட்டரி டிக்கட் வாங்கித் தொலை என்று…


இது முயற்சியே வெற்றிக்குக் காரணம் என்று சொல்பவர்கள் சொல்லும் கதை…

ஆனால், அந்த சோம்பேறி கொஞ்சம் கண்மணியா இருந்திருந்தா..


சரியாச் சொன்னீங்க.. யாராவது வாங்கியதை தொலைக்க வைத்து, என் கையில் அந்த டிக்கெட் கிடைக்கும்படி செய்யுங்களேன் 

என ஆண்டவனை கேட்பான்.


கதையின் முதல் பாதியில் தோற்றது யார்?.
இரண்டாம் பகுதியில் தோற்றது யார்?
இதுதாங்க சூழ்நிலை.

மரணத்திற்குப் பின் நமக்குத் தெரியவா போகிறது என்றால்…

அது எப்படி என்று தெரியாதுதான். ஆனால் மரணிக்கும்பொழுது திருப்தியாய் மரணத்தை அரவணைக்கலாம். மாண்ட பின்னும் மக்கள் மனதில் வாழலாம்.

புத்தர், மஹாவீரர், கரிகாலன், இராஜராஜ சோழன், அசோகன், அலெக்ஸாண்டர், அரிஸ்டாட்டில், கம்பர், இளங்கோ, காளிதாசன், சாணக்யன், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஹிட்லர், முசொலினி, நியூட்டன், ஐன்ஸ்டீன், பிராட்மேன், பீலே, மரடோனா, லிங்கன், பிரபாகரன், தலாய்லாமா, லெனின், டென்சிங், ஆர்ம்ஸ்ட்ராங், காமராஜர், சங்கீத மும்மூர்த்திகள், பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர், இந்திராகாந்தி, இடி அமீன், ஒபாமா, ஒசாமா, ஹர்ஷத் மேத்தா, அன்னை தெரசா, இப்படி பல தரப்பட்டவர்கள் இன்றும் புகழ் – இகழுடன் நினைக்கப்படுவதற்கு வெற்றி இலக்கை அடைய அவர்கள் செய்த முயற்சிகளே காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆக முயற்சி என்பதும் வெற்றி தோல்விகளுக்கு ஒரு காரணிதான்.

பரம்ஸ் அண்ணா சொன்னக் கதையைக் கூட பாருங்க.. தக்காளி விளை நிலங்களில் குறைந்த விலைக்கு கிடைத்து, அதிக விலைக்கு வாங்க ஆட்கள் இருந்தார்கள். அவர்களுக்கு எங்கே வாங்குவது எனப் புரியவில்லை. அன்றைய சூழலில் அது சூழ்நிலைத் தேவை.

ஆனால் இன்று ரிலையென்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்றவர்கள் விவசாயிகளிடம் போய் ஒட்டு மொத்தமாக வாங்கி விடுகிறார்கள். மக்களும் இதுபோன்ற கடைகளில் வாங்குகிறார்கள். இன்று அதையே செய்தால் தக்காளியும் அழுகி விடும். அவரும்தான். காரணம் சூழ்நிலை. இதே போல் சர்ச்சில் மணியடிப்பவர் பெரிய சுருட்டுக் கம்பெனி முதலாளி ஆன கதையும் உண்டு.

ஆக வெற்றி தோல்வி உண்டு, எது அர்த்தமுள்ளது எது அர்த்தமில்லாதது எனப் பார்த்த நாம் வெற்றி தோல்விக்குக் காரணம் யார் என்பதையும் பார்ப்போம்.

வெற்றி – தோல்வி ஒருவனுக்குள்தான் இருக்கிறது என்றுச் சொல்ல முடியாது..

புத்தன் ஞானியாக காரணம் தியானம் என்று நினைக்கிறோம். அந்த தியானத்தைத் தூண்டியது என்ன? நோய், மூப்பு, மரணம் என்ற சூழல்தானே. அவன் அரண்மனையில் இருந்த பொழுது ஞானம் பிறக்கவில்லை. இம்மூன்றும் இல்லா இடத்தில் புத்தர் யோசித்தும் இருக்க மாட்டார் அப்படியே அவர் ஞானம் பெற்றுச் சொன்னாலும் யாரும் சட்டை செய்யவும் மாட்டார்கள்.

காந்தி அவமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவரின் சூழலில் இருந்த அடிமைத்தனம் அவருக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அவரும் சாதாரணமாக இருந்து இறந்திருக்கலாம். அடிமைப்பாடு இல்லையென்றால் சுதந்திரப் போராட்டம் எதுக்கு?.

ஆப்பிள் கீழே விழுந்திருக்காவிட்டால் நியூட்டன் ஈர்ப்பு விசையைப் பற்றிச் சிந்தித்து இருக்கவே மாட்டார்.


சமூகச் சூழல் என்று ஒன்று உருவாகாமல் இருந்திருந்தால், மனிதனும் விலங்குதான். 
வெற்றிகளும் தோல்விகளும் அர்த்தமற்றுதான் போயிருக்கும்.



இலக்கு என்பது சூழலாலே நிர்ணயிக்கப் படுகிறது. பணம், பலம், புகழ், அதிகாரம், நிம்மதி, நீண்ட வாழ்வு, இன்பம் எப்படி சூழலில் எது முக்கியமாய் கொண்டாடப்படுகிறதோ அதுவே இலக்காகிறது. சூழ்நிலையில் இல்லாத ஒன்று இலக்கு ஆவது இல்லை.

வெற்றி தோல்வி என்பதும் சூழலாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் எப்படி? ஒப்பீடு மூலம்.

ஒருவர் பெறும் வெற்றியின் அளவு மட்டும்தான் தனிமனிதனின் உள்ளுக்குள் இருக்கிறது.

சூழலுக்குச் சம்பந்தமில்லா காரியத்தில் வெற்றி பெற்றால் அதை கணக்கிலேயே எடுத்துக்கறதில்லை.. கின்னஸ் சாதனைகள் செய்தவங்க பலரை நாம் கண்டுக்காம இருப்பதற்கு இதுதானுங்களே காரணம்.

அதனால்தான் ஒருவனுடைய வெற்றி தோல்வியின் மிக அதிகமான பங்கு சூழலில் இருக்கிறது என்கிறோம்.

சூழல்தான் ஒருவனுக்கு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கிறது.

ஆதி மனிதன் குழுவாக மாறி சமூக அமைப்பாக மாறிய பின்னர்தானே வெற்றி தோல்வியின் மகத்துவமே புரிய ஆரம்பித்தது.

ஊர் தோன்றி சமூகம் அமைந்த பின்னால்தானே பல சாதனையாளர்கள் தோன்ற ஆரம்பித்தனர்.

உயிருக்காக தினம்தினம் போராடிய ஆதி மனிதனால் சூழலின் தேவைக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட அறிவியல் வளர்ச்சி,. அரிஸ்டாட்டிலால், ஐன்ஸ்டீனால், ஆல்வா எடிஸனால் இப்படி பலரால் சூழலுக்குத் தகுந்த மாதிரிதான் வளர்ந்தது இல்லையா?

மின்சாரம் கண்டுபிடிக்கும் முன்பாக டி.வி கண்டு பிடிக்க முடிஞ்சதா? அட இப்ப கூட மின்சாரம் இல்லாம கண்டு பிடிக்கத்தான் முடியுமா? தொலைஞ்சா வேணும்னா மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தேடிக் கண்டுபிடிக்கலாம். ஆனால் அதை உருவாக்குது அப்புறம் பயன்படுத்துவது என்பது தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும்தான் முடியுமா?

பிரபஞ்ச முடிச்சுகள் ஒன்னொன்னாதான் அவிழ்க்கப்படுது… அதற்கு ஒரு வரிசை முறை உள்ளது. அந்த வரிசையில்தான் பிரபஞ்ச உண்மைகளும் வெளிப்படுது. அதாவது சூழலின் கையில்தான் எல்லாம்.

இனி சூழல் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். ஏனென்றால் அது தெரியாததால் தான் இந்தப் பட்டிமன்றமே உருவானது.

அட நம்ம பட்டர்ஃபிளை எஃபெக்ட் தியரி சொல்லப்படுதே ஞாபகம் இருக்கா? இல்லையின்னா தசாவதாரம் ஒருமுறை பாருங்க.

எந்த ஒரு செயலும் அந்தச் சூழலில் அளக்கவியலா தொடர் நிகழ்வுகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒழுங்கற்ற முறையில் அமைந்தவை. அதனால் இந்த ஒரு செயலால் இந்த ஒரு நிகழ்வை உண்டாக்கலாம் என ஒரு எல்லை வரைதான் நம்மால் அனுமானிக்க முடியுது.

ஆனால் இதைச் சொன்னவரே பின் வருவதை யோசிக்க மறந்திட்டாரு.

பலரும் / பலதும் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்கிறார்கள். இதனால் பல விளைவுகள்., அவற்றின் தொடர் விளைவுகள், அதனால் தூண்டப்பட்ட பின்விளவுகள, பின்விளைவுகளின் பின்விளைவுகள் இப்படிப்பட்ட விளைவுகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு அதனால் விளையும் விளைவுகள் நாம் எண்ணியும் பார்க்காத பல ஒழுங்கற்ற விளைவுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதுதான் அந்த ஒழுங்கற்ற கற்பனையிலும் அடங்காத அளவில்லாத பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ட்டர் ஃபிளை எஃபெக்டை சொன்னவருக்கே இவ்வளவு தெளிவா 
. நான் தான் விளக்கு விளக்குன்னு விளக்கிகிட்டு இருக்கேன்.)நாம் செய்யும் செயலைத் தவிர மிச்சமிருப்பதெல்லாம் சூழல். அதாவது 600 கோடி மனிதர்களும், பல்லாயிரங்கோடிக் கணக்கான இன்ன பிறவும் அவை செய்யும் செயல்களும், அவற்றின் பலப்பல மடங்கான பின் விளைவுகளும் நமது சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படின்னா ஒரு செயலின் பலனில் சூழலின் பங்கு எவ்வளவு என்பதை அளக்கத்தான் முடியுமா?

சூழல் என்பது சின்ன விஷயம் என்று நினைத்தவர்களுக்கு சூழல் எவ்வளவு பிரம்மாண்டமானது என்று இப்ப புரிந்திருக்கும் என நினைக்கிறேன். சூழல் பிரம்மாண்டம். சூழலில் நாம் ஒர் அணு…


ஒவ்வொரு செயலும் சூழலின் தேவையைப் பொறுத்தே அமைந்தன. 

சூழலின் தன்மையாலேயே வெற்றி தோல்வி முடிவையும் அடைந்தன. 

சூழலில் ஏற்படுத்திய மாற்றத்தாலேயே நிலைத்தன. மாறின.. அல்லது அழிந்தொழிந்தன..


இந்த உண்மையை உணர்ந்தால் – அதற்கடுத்து மதுரை மைந்தன்-செல்வா போன்றவர்கள் சொல்லிய வெற்றி தோல்வி தனிமனிதனைப் பொறுத்தவரை அர்த்தமில்லாதது எனத் தானே புரியும். அதாவது செயலைச் செய்வது மட்டுமே நமது கடமை என்பது புரியும்.


வெற்றி என்பது வெற்றி மட்டுமே அல்ல என்பதும் தோல்வி என்பது தோல்வி மட்டுமே அல்ல என்பதும் புரியும். அதனால்தான் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படக் கூடாதே தவிர..

வெற்றி தோல்வி என்பது இல்லவே இல்லை என்பது தவறு.

சூழல் இல்லாமல் வெற்றி தோல்வியே இல்லை எனும் பொழுது, ஒருவனின் வெற்றி தோல்வியை சூழல்தான் நிர்ணயிக்கிறது என்று சொல்வதே சாலப் பொருத்தமாகும்.

எல்லோருக்கும் அதே சூழல்தானே இருக்கிறது. அப்புறம் சிலர் மட்டுமே சாதிக்கும் காரணம் என்ன? இதுதான் வெற்றி தோல்வி உள்ளே இருக்கிறது எனச் சொல்பவர்களின் வாதம்.

முக்கால் கிண்று தாண்டினா பிழைக்க முடியாது.. முழுக்கிணறையும் தாண்ட வேண்டும்.. அப்பதான் ஜெயிக்க முடியும். முயற்சியே இல்லாத வெற்றி தோல்விகள் உண்டு. ஆனால் சூழல் இல்லாத வெற்றி தோல்விகளே இல்லை.

வள்ளுவர் இதை அழகாச் சொல்லி இருக்காரு


செயதக்க அல்ல செயக்கெடும் செயதக்க
செய்யாமை யானும் கெடும்


அதாவது சூழலுக்கு தகுதியானவற்றை செய்யா விட்டால் அதாவது ஒண்ணுமே செய்யாம இருந்தா கூட தோல்வி உறுதி. சூழலுக்குத் தகுதியற்றதை செய்தாலும் என்ன முயற்சி செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனிதான். நான் சொல்லலீங்க. வள்ளுவரே சொல்லி இருக்கார்.

செயதக்க என்றால் நல்லதுதானே என்கிறீர்களா? இல்லை. சூழல் தான் எது செயதக்கது என அடையாளம் காட்டுகிறது… எது செயத்தகாதது என அடையாளம் காட்டுது. இடம் பொருள் காலம் அறிந்து செய்தல் வேண்டும் என்பது அப்படித்தான்.


அந்நியன் படத்தோட 5 பைசா ஏமாத்தினா தப்பா? 5 பேரு அஞ்சஞ்சு பைசா ஏமாத்தினா தப்பா? அஞ்சு கோடி பேர் அஞ்சு கோடி முறை அஞ்சஞ்சு பைசா தப்பா? என்ற கேள்வி பதில் சூழலின் தன்மையை அருமையா விளக்கும் ஒன்று.

சூழலுக்குத் தகுந்த காரியம் என்றால் அதில் சிறு வெற்றியில் இருந்து முழுவெற்றி வரை பல நிலைகள் உண்டு. தோல்வி கிடையாது.

எதையோ செய்து வெற்றி கிடைப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். அதாவது என்னன்னே தெரியாமல் சரியான காரியத்தைச் செய்வது.

ஒண்ணுமே செய்யாம வெற்றி கிடைப்பதை குருட்டு அதிர்ஷ்டம் என்கிறோம். அதாங்க சூழ்நிலை.

மிகப் பெரிய முயற்சி செய்தும் தோற்றுப் போவதை துரதிர்ஷ்டம் என்கிறோம்.

ஆனால் இந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் அடிப்படையே, சூழல்தான் வெற்றி தோல்விக்குக் காரணம் என்பதே ஆகும்.


அடுத்தவர் வெற்றிக்கு நாம் சொல்லும் காரணமாகவும், 
நம் தோல்விக்கு நாம் சொல்லும் சமாதானமாகவும் 
இருக்கும் அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் என்ற இரு வார்த்தைகளும் 
உண்மையில் வெற்றி தோல்வி என்பது சூழலில் தான் உள்ளது என நிரூபிக்கின்ற அடிப்படை ஆதாரங்கள் ஆகும்.



இந்த அடிப்படை உண்மையை நாம புரிஞ்சுகிட்டு, சூழலை அறிந்து, அதில் உள்ள வாய்ப்புகளை அறிந்து சுழலுக்கு ஏற்ப சரியான செயல்களை மட்டும் செய்ய முயற்சிப்பது, வெற்றிகளை அதிகமாகவும், போற்றப்படக்கூடிய தோல்விகளையும் தரும்.

நல்லது கெட்டதை தீர்மானிப்பது சூழல். வெற்றி தோல்வியை தீர்மானிப்பது சூழல். சில செயல்களில் தோல்வியே இல்லை,, சின்ன வெற்றி, சுமாரான வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி அப்படித்தான். காரணம் சூழல்….

அப்ப அறிவு, திறமை, பலம் இத்யாதி இத்யாதிகள் அர்த்தமற்றவையா என விகரம் புலம்புவார்.


ஒருவன் வெற்றி பெற அவனை வெல்லும் ஒன்று சூழலில் இல்லாதது கூட ஒரு காரணம். 

ஒருவன் தோற்க அவனை வெல்லும் ஒன்று சூழலில் இருந்தது கூட ஒரு காரணம். (ஹையோ ஹையோ)



நம் உள்ளுக்குள் இருப்பதும் வெளியில் இருந்து நாம் சம்பாதித்ததுதானே. கல்வி, அறிவு, மன உறுதி இப்படி அனைத்தும் சமூகம் நமக்கு கொடுத்தவை. சூழல் கொடுத்ததே அறிவும் திறமையும்.


மனிதனாய் பிறப்பதே அன்னை தந்தை தந்த குரோம்சோம்களில்தானே! (அதுவும் ஒரு சூழல்தான்.. உன்னை ஏன் தான் பெத்தோமோ என்று பல பேர் பின்னால் வருத்தப்படுவதும் சூழல்தான்) அந்தக் குரோமோசோம்கள் பண்பினைக் கொண்டு வந்துச் சேர்த்தன, உடல் பலம், நலம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? சூழலில் இருந்து.

வளர்ந்த சூழல் அறிவையும், தெளிவையும் மனத்திடத்தையும் கொடுத்தது.

மனிதனின் வாழ்வில் அன்னை, தந்தை, சொந்தங்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், அவர்களின் சமூகம், அவர்கள் படித்த புத்தகங்கள், அவர்கள் தங்கள் புலன்களால் பெற்ற அறிவுகள் தானே எல்லாவற்றிற்கும் அடிப்படை..

ஒன்றுமே தெரியாத குழந்தை உலகம் அறிந்து கொள்வது உள்ளிருந்தா வெளியில் இருந்தா? மனதிற்குள் ஆழ்ந்த அலசல் தேவை.. என்பதைக் கூட மனிதன் வெளியில் இருந்துதான் கற்றுக் கொள்கிறான்.

நமக்குள் இருக்கும் நம் மனதைக் கூட சூழல் செதுக்குகிறது. சிந்திக்கும் திறனை வளர்ப்பதும் சூழல்தான்.

தன்னை ஒருவன் வளர்த்துக் கொள்வதே சூழல் மூலம்தான். ஆக பிரச்சனைகளும் ஒருவனுக்கு சூழலில் இருந்துதான் வருகின்றன. தீர்வுகளும் சுழலில் இருந்துதான் வருகின்றன. அதை செய்யும் வல்லமையும் சூழலில் இருந்தே வருகிறது.


இதைத்தான் கீதையின் சாராம்சமாக


எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.


என்று கண்ணன் சூழல்தான் எல்லாம் என்று சொல்லுகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பெரும் வெற்றி கண்ட காந்தி, இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயத்தில் கண்டது என்ன? அதற்குக் காரணம் என்ன? காந்தியில் வெற்றி தோல்வி இல்லை. அந்தச் சூழலில்தான் இருந்தது..

காந்தி மட்டும் விடுதலை விரும்பவில்லை. இந்திய நாடே விடுதலையை விரும்பியது, அந்தச் சூழலை சரியாக உபயோகித்ததால் காந்தி வென்றார். அதற்கும் அவருக்கு அவர் சூழல் தந்த அறிவே உதவியது. அடுத்த விஷயத்தில் சூழலில் அந்த மனநிலை இல்லை.

உண்மை, அஹிம்சை என்பவைகளை காந்தி பெற்றது தன்னுள் இருந்தல்ல.. சூழலில் இருந்து. சிரவணன் நாடகம் கண்டு உண்மையை பேச முடிவெடுத்ததாக அவர் சொல்லி இருக்கிறார்.

இங்கே வந்து தமிழறிவை வளர்த்துக் கொண்டவர்கள் யார் யார் என்று கணக்கெடுத்துப் பாருங்கள். சூழல் புரியும்.

இராகுல் காந்தி அடுத்த பிரதமரா ஆக வாய்ப்பு தருவதில் சூழலுக்குத் தானே முதலிடம்.

நாம் நம்முடைய சூழலை உயர்த்தினால் நமக்குள் பல வெற்றியாளர்கள் உருவாகி வளர்வார்கள், அதுதான் வழியே தவிர,

பள்ளி வேண்டாம் கல்லூரி வேண்டாம்.. உடற்பயிற்சி வேண்டாம், திட்டங்கள் வேண்டாம் தனிமனிதன் எல்லாவற்றையும் சாதிக்கட்டும் என்று விட்டால் சாதனையாளர்கள் உருவாவது எப்படி?

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்கள் குவிக்க முடியாமைக்கு காரணம் தனி மனிதனா? சமுதாயச் சூழலா?

இன்றும் நாம் நல்ல சமுதாயச் சூழலை அமைப்பதில் வெற்றி கண்டால்தான் சாதனையாளர்கள் உருவாகுவார்கள். தனிமனித முயற்சியில் இது பலிக்காது.


நெசஸிட்டி ஈஸ் மதர் ஆஃப் இன்வென்ஷன் என்பார்கள். தேவைதான் கண்டு பிடிப்புகளின் தாய். அந்தத் தேவை சூழலினால்தான் உருவாகிறது.

அதேபோல் சூழலில் ஒரு செயல் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவே வெற்றி/தோல்வியின் அளவையும் நிர்ணயிக்கிறது.

பால்ராஜ் சந்திராயன் பற்றி பேசினார். அது வெற்றி என்று சொல்கிறார்களே. 100 சதவிகித இலக்கை எட்டவில்லையே என்கிறார். ஆனாலும் முன்பு இருந்த சூழலை விட இப்பொது இருக்கும் சூழலில் நமது நம்பிக்கை அதிகரித்து இருக்கு இல்லையா? அதைத்தானே வெற்றியின் படிகள் என்கிறோம்.

முதலில் நம் சூழலில் சந்திரன் என்று ஒன்று இருந்ததால்தான் இந்த முயற்சியே இல்லையா?
சந்திரனை ஏன் ஆராயவேண்டும்?

1. பூமிக்கு ஆபத்து வந்தால் பிழைக்க,
2. இன்னும் பல கிரகங்களை ஆராய தளமமைக்க.

இந்தத் தேவைகள் எல்லாம் எதனால் வந்தது.. விண்வெளியில உள்ள ஆபத்துகள், நிலவில் உள்ள கனிமங்கள், உலகம் பிறந்தது எப்படி, இதே போல் உலகங்கள் உள்ளனவா என அறிய ஆவல் காட்டும் சமுதாயச் சூழல்,

முயற்சிக்கு உதவி செய்வது மட்டும் சூழல் இல்லை. முயற்சியை செய்ய வைப்பதே சூழல்தான்.

ஆனால் மாபெரும் வெற்றி என்பது பல சிறு சிறு வெற்றிகளின் தொகுப்பு என்ற அறியாமையே அதைத் தோல்வி எனக் கூறும்.

ராக்கெட் செலுத்தப்பட்ட கட்டம் வெற்றி, பூமியைச் சுற்றி சந்திரனை நோக்கிப் பாய்ந்ததில் வெற்றி.. சந்திரனைச் சுற்றி வருவதில் வெற்றி.. சந்திரனை படமெடுத்து அனுப்பியதில் வெற்றி.

சந்திராயன் ஆறு மாதங்களுக்கு முன்பே பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்து விட்டது. காரணம், நிலவில் நிலவும் வெப்ப நிலையை தவறாக கணித்ததுதான். சந்திராயனோட வெப்பநிலை கடந்த ஆறு மாதங்களாக வரையறுக்கப் பட்ட வெப்ப நிலையை விட 10 டிகிரி அதிகம் இருந்திருக்கு. இந்தச் சூழ்நிலையில் இவ்வளவு நாள் தாக்குப் பிடிச்சதே மிகப் பெரிய வெற்றிதான்.

இதன் நோக்கம் சந்திரனின் சுற்றுப் பாதையில் ஒரு செயற்கைக்கோளை இந்தியாவில் நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாடு. அதனால் இது வெற்றி. இதைத்தான் காலம் மனதில் வைக்கும்.

இதுவே சந்திரனுக்கு டவுன்பஸ் போயிட்டு வர்ர மாதிரி சூழ்நிலை இருந்திருந்தா சந்திராயன் தோல்விதான்.

அப்போலோ 13 தோல்வி என்பதற்கும், சந்திராயன் வெற்றி என்பதற்கும் இதுதாங்க வித்தியாசம்.

ஆக வெற்றி தோல்வி இங்கும் சூழ்நிலையால் தான்.

வெற்றி தோல்வி என்பது சூழ்நிலையால் நிர்ணயிக்கப் படுவது என்பதால்தான். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படக் கூடாது. உழைப்பதையும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் ஒன்றே ஒன்று கண்டிப்பாக செய்ய வேண்டும்.

எந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும். எந்த அளவு செய்ய வேண்டும் எனப் புரிந்து செயலாற்ற வேண்டும்.

அது வெற்றியில் முடிந்தாலும் சரி தோல்வியில் முடிந்தாலும் வரலாற்றில் இடமுண்டு,

இதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை!.

இனிச் சுருக்கமாக கன்பியூஷியஸ் மாதிரி சொல்கிறேன்…


சுற்றுச் சூழலின் காரணமாக பல வாய்ப்புகள் உருவாகின்றன. இலக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன்

அந்த வாய்ப்புகளை சூழலின் காரணமாக பெற்ற அறிவு, பலம், பணம் போன்றவைக் கொண்டு போராடுகிறான் மனிதன்.

இதில் வெற்றியோ தோல்வியோ அவனுக்கு புகழ் உண்டாகி அவன் வாழ்க்கை வெல்கிறது.

அதனால் வெற்றி தோல்வி என்பதைச் சூழல்தான் தீர்மானிக்கிறது. அது மட்டுமில்லாமல் எந்த ஒரு செயலிலும் சூழலை நீக்கி விட்டால் செயல் அர்த்தமிழந்து போகிறது. வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை.


இப்பொழுது வாதத்தைத் தொகுத்துத் தருகிறேன்.


ஒரு செயலைச் செய்ய அவசியத்தையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவது சூழல்.

அதில் எது வெற்றி எது தோல்வி என நிர்ணயம் செய்வது சூழல்.

அந்தச் செயலைச் செய்ய அறிவு, துணிவு, பலம், பணம் இன்னபிறவற்றை ஒருவனுக்கு அளிப்பதும் சூழல்.

தனிமனிதன் செய்வது இந்தச் சூழலை சரியாக உணர்ந்து செயல்படுதல் மட்டுமே.

வெற்றியும் தோல்வியும் சூழலில் அவன் ஏற்படுத்தும் மாற்றத்தால் அளக்கப்படுகிறது.


ஆக வெற்றி தோல்விகளுக்கு 80 சதவிகிதம் சூழலும் 20 சதவிகிதம் தனிமனிதனும் காரணம் எனச் சொல்லலாம். காரணம் தனிமனிதனின் உழைப்பிற்கு நாம் வேண்டிய மரியாதை அது.

என்ன செய்யவேண்டும் என அறிதல், எப்படி, எப்போது, எதைக் கொண்டு, என அறிவது முதல் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என சூழலை அறிவது வரை தனிமனிதனின் உழைப்பு இருக்கிறதே.. அதுக்கும் அவரது மன உறுதிக்கும்தான் அந்த 20 சதவிகிதம்.

--------------------------------------------------------------------------------------------------


இனி எஞ்சி இருப்பது ஒரே ஒரு வாதம்.

கண்மணியின் மிகச் சிறந்த வாதம்தான் இந்தத் தலைப்பில் நடுவர் சூழலே வெற்றி, தோல்விக்கு அடிப்படை என தீர்ப்பளிப்பதற்குக் காரணம் என்று யாராவது சொல்லக் கூடும்.

ஆனால் இதிலும் சூழல் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கிறது என உணர வேண்டும்.

முதலில் இவ்வாதத்தை நான் இங்கு எழுப்பக் காரணம்,


செல்வா பட்டிமன்றம் போடலாம் என்ற சூழலை உருவாக்க 

அமரன் இந்தத் தலைப்பு என்னும் சூழலை உருவாக்க, 

வெட்டியாய் இருத்தல் என்னும் சூழல் காரணமாகவும், 

கடைசியாய் வாதாடுதல் என்ற சூழல் காரணமாகவும் 
எனக்கு கிடைத்த நேரத்தால், 

தமிழ்மன்றம் என்ற சூழலால் நான் கற்ற தமிழ் வித்தைகள் என்னும் அறிவைப் பயன்படுத்தி இதை எழுதி

ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறேன்.


எழுதியது நான் என்றாலும், எப்படி எழுதி இருக்கிறேன் என்பதோடு, எங்கே எழுதி இருக்கிறேன் என்பதைப் பொறுத்தே இந்த வாதத்தின் வெற்றியே.

லொள்ளு வாத்தியார், பென்ஸ், பிரதீப், சிவா.ஜி, இதயம், ஆரென், இளசு, தாமரை, போன்ற விவாதப் புலிகள் இல்லா இடம்,

பரஞ்சோதி என்னுடன் ஒத்து வாதாடுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதை சாதாரணமாக ஒரு விவாதப் பகுதியில் பதிந்திருந்தால் வாதம் பிரதி வாதம் என போய்க்கொண்டு தானே இருக்கும். வெற்றி என ஒரு முடிவு வராது.

அதே இன்னும் யாரும் அதிகம் புரட்டாத பக்கங்களில் பதிந்தால்? அங்கும் வெற்றி என்ற வார்த்தை வந்திராது.

ஒரு போட்டிச் சூழலில் பதிப்பதால் மட்டுமே வெற்றி அல்லது தோல்வி என நிர்ணயம் ஆகிறது. ஆக சூழல் 80 சதவிகிதம். தனிமனித முயற்சி 20 சதவிகிதம். இங்கே எனக்காக திருவள்ளுவர், கண்ணன், கண்ணதாசன், கமலஹாசன் முதல், மற்ற வாதிகள் வரை பலர் காரணம். எனது ஒரே வேலை சூழலில் இருந்தவைகளை இடம் மாற்றி ஒரு வரிசையில் தொகுத்து அதைச் சூழலிலிட்டு புதுச் சூழலை உண்டாக்கியது, அவ்வளவுதான்.

செயலில்லாதன் செத்துப் போனவன். விலங்குகள், தாவரங்களை கூட தனது ஜீன்களை மண்ணில் வெகுகாலம் வாழவைக்க செயல்படுகின்றன. செயல் ஒரு நோக்கு கருதி செய்யப்படுகிறது. அந்த நோக்கை உருவாக்குவதும் சூழலே. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதும் சூழலே.

சூழல் என்றால் என்ன என்பது இப்போது புரிந்திருக்கும். சூழல் என்பது என்ன என்று புரியாத வரைக்கும்தான் நான் பெரியவன் நீ பெரியவன் நான் சாதித்தேன் நீ சாதித்தாய் என்னும் கர்வமெல்லாம்.

--------------------------------------------------------------------------------------------------

இங்கு நான் எழுப்பிய வாதங்கள் மக்களைக் குழப்போ குழப்பு என்று குழப்பி இருக்கும்.

இந்தக் குழம்பியச் சூழ்நிலையில் வாதங்களுக்கு விடை கிடைக்காத காரணத்தினால் ஏற்படும் சூழல் பட்டிமன்ற நடுவரை இதுதான் சரி என தீர்ப்பு அளிக்க வைக்கும்.

அப்படி குழப்ப நான் உபயோகித்தது நான் என்னுடைய சூழலில் பெற்ற அறிவு!

அப்படி இல்லாவிட்டாலும் என் வாதங்களுக்கு எல்லாம் பதில் கிடைத்து நடுவர் வேறு முடிவு கொடுக்கலாம். அப்படி என்றாலும் வேறு வாதம்தான் சரி என்ற சூழல் உண்டாவதால்தான் நடுவர் அந்தத் தீர்ப்பை அளிப்பார்.

அப்படி நான் உண்டாக்கிய சூழலை மாற்ற நீங்கள் உபயோகிப்பதும் உங்கள் சூழலில் நீங்கள் பெற்ற அறிவைத்தான்.


ஆக தன்னைச் சுற்றி உண்டாக்கப்பட்ட சூழலைப் பொறுத்து, 
தன் சூழலில் இருந்து பெற்ற அறிவைப் பயன்படுத்தி 
எந்த வாதம் வெற்றிப் பெறுகிறது என நடுவர் தீர்ப்பு அளிக்கப் போகிறார்.


ஆக நடுவர் தீர்ப்பு அளிப்பதே எங்கள் அணிக்கு வெற்றிதான் என்பதையும் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியே ஒரு ஸ்திரமான தீர்ப்பை அளிக்காவிட்டாலும் அதற்கும் காரணம் இப்பதிவுகள் ஏற்படுத்தியச் சூழலாகத்தான் இருக்க முடியும்..

எனவே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகுப்பது சூழலே என இன்னொரு முறை அழுத்தமாகக் கூறி என் வாதத்தை முடித்து,

நல்வாதம் வெல்ல நல்லதொரு சூழல் அமையப் பிரார்தித்து அமைகிறேன்.

நன்றி. வணக்கம்,

--------------------------------------------------------------------------------------------------

பின் குறிப்பு : என் வாதத்தின் சாராம்சம்.(சூழல் சூழல் என்ற வார்த்தை நடுவர் தலையைச் சுற்ற வைத்திருப்பதால் நடுவர் சரியாகப் புரிந்து கொள்ளும் சூழலை ஏற்படுத்தும் பொருட்டு..)


சூழலுக்கு தேவையில்லாத செயல் வெட்டிச் செயல்.

சூழலின் தேவையே மனிதனின் என்ன செய்யவேண்டும் என்பதை அடையளப்படுத்துகிறது.

தனிமனிதன் பொருத்தவரை அவன் ஒரு செயலை, ஒரு சூழலில் முயற்சித்து செய்கிறான் அவ்வளவுதான்.

அச்செயலின் வெற்றி தோல்வி என்பது சூழலால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.

சூழல் இல்லா விட்டால் அது வெறும் செயல்தான். காலத்தால் அது அழிந்துவிடும். 

சூழல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே வெற்றி என எண்ணியது தோல்வியும் ஆகலாம் தோல்வி என எண்ணியது வெற்றியும் ஆகலாம். சூழலில் காலம் தாண்டி வாழும் மாற்றத்தை விளைவிக்கும் செயல்களே நிலைக்கின்றன, மற்றவை அர்த்தமற்றவை ஆகின்றன.

எனவே வாழ்க்கையில் வெற்றி தோல்வி உண்டு. அவை முக்கியமும் கூட.

வெற்றி தோல்விக்கு சூழல்தான் மிக முக்கிய காரணம்..

No comments:

Post a Comment