Tuesday, January 5, 2010

டிப்ஸ் தருவது சரியல்ல - விவாதம்



நம்மில் பலர் உணகங்கள், விடுதிகள் மற்றும் சில இடங்களில் பணியாளர்களுக்கு டிப்ஸ் என்னும் அன்பளிப்பு தொகையை வழங்குவது வழக்கம். இது சரியான ஒன்றா?


பல வசதியானவர்களும், நடுத்தர வர்கத்தினரும் தரும் அன்பளிப்பால் அந்த பணியாளர்கள் சில ஏழைகளிடமும் டிப்ஸ் எதிர்பார்கிறார்கள்.

இங்கு டிப்ஸ் தருவது கௌரவமாக மாறிவிட்டது. சம்பளம் வாங்கும் பணியாளுக்கு நாம் தருவது ஒரு விதத்தில் லஞ்சம்தானே? இது தேவையா

இந்த கருத்து ஒரு வகையில் சரி என்றாலும் அவர்களுக்கு கொடுக்கபடும் ஊதியம் மிக குறைவு மேலும் அவர்கள் காலையில் இருந்து இரவுவரை வேலை செய்ய வேண்டும் அதனால் டிப்ஸ் என்பது ஒரு டானிக் மாதிரிதான்..

டிப்ஸ் கொடுப்பது சட்டப்படி தவறு!
மனிதாபிமானப்படி சரி!  

இப்படி பல கருத்துகள் உலவுகின்றன.


மனிதாபிமானப் படிச் சரியா? அடிப்படையேத் தவறு.

ஒரு உணவகம். நான்கு பேர் வருகின்றனர். முதலாமவர் கைநிறையச் சம்பாதிப்பவர். கைநிறைய டிப்ஸ் கொடுப்பவர்.

இன்னொருவர் கைநிறையச் சம்பாதிப்பவர், டிப்ஸ் தருவதில்லை என்ற எண்ணம் கொண்டவர்.

மூன்றாமவர் அளவாகச் சம்பாதிப்பவர். அளவாகச் சாப்பிட்டாலும் அளவாகச் டிப்ஸ் தருபவர்.

நான்காமவர் அளவாகச் சம்பாதிப்பவர். டிப்ஸ் தரும் அளவிற்கு வசதி இல்லாதவர்.

அனைவருக்கும் ஒரே விதமானச் சேவை கிடைக்குமா? கிடைக்கும் என்றால் மனிதாபிமானம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். கிடைக்காது என்றால் அது வெறும் வியாபாரம்தான். வியாபாரம் என்றாலும் நேர்மையான வியாபாரமா? இல்லை. ஏமாற்று வியாபாராம்.

எப்படி லஞ்சம் மனிதனைப் பாதித்ததோ அதேபோல் டிப்ஸூம் மனிதனைப் பாதிக்கிறது.

கடமையை மீற லஞ்சம் பெற்றவர்கள்.. கடமையைச் செய்ய லஞ்சம் பெற்றதைப் போல, இன்று அதிகப்படியான கவனிப்புக்கு டிப்ஸ் பெறுபவர்கள், டிப்ஸ் கிடைக்காதென்றால் சர்வீஸே கிடையாது என்று சொல்லும் காலம் வரும்.


அவனுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கக் காரணமே நீங்கள் டிப்ஸ் தருவதினால்தான் ஐயா! உழைத்தும், அதற்குரிய வருமானம் பெறாமல், பிச்சை எடுக்கின்ற கீழான நிலைக்குத் தள்ளுவது டிப்ஸின் உபயம். இது அவனது தன்மானத்தைக் குறைக்கும் செயல்.


ஏன், உரிமையாளரே இந்து 6 மேசைகள் உன் பொறுப்பு. இதில் எவ்வளவு பில் ஆகிறதோ அதில் இத்தனைச் சதவிகிதம் உனக்கு எனப் பிரித்து சதவிகிதக் கணக்கில் கொடுக்கலாமே! அப்படிக் கொடுத்தால் அதை வருமானத்தில் காட்ட வேண்டும். உணவகமும் வரி கட்ட வேண்டியது இருக்கும். சொல்லப் போனால் டிப்ஸ் முறையால் அரசுக்குச் செல்ல வேண்டிய வரியும் ஏய்க்கப் படுகிறது.

5 ரூபாய் டிப்ஸ்னால வருமான வரியா அப்படின்னு கேக்கறீங்களா? 5 ரூபாய்க்கு 1.60 காசு வரி செலுத்தத் தானே வேண்டும்..

விதிவிலக்குகள் விதிகளாவதில்லை. அவை சூழ்நிலைகள் மற்றும் அந்த நேரத்து நிலவரங்களினால் கொடுக்கப்படுபவை. ஒரு விதிவிலக்கு கொடுக்கப்பட்டால் அதை உதாரணம் காட்டியே ஆயிரக்கணக்கில் விதிவிலக்குகள் கொடுத்து விதிவிலக்குகள் மட்டுமே விதிகளாகும் நிலைகளை உருவாக்கும் சமுதாயம் இது.

ஆகவே சில சமயங்களில் கல்மனங்களாக இருக்க வேண்டியதும் தேவையாகிறது. டிப்ஸ் கொடுத்து உரிமைக்குப் போராடும் குணங்களை மழுங்கடிக்காமல் இருப்பதே நல்லதென நினைக்கிறேன். 

டிப்ஸ் கொடுப்பது வரிஏய்ப்பு எப்படித் தெரியுமா?

நீங்கள் பணமாய் கொடுக்கும் டிப்ஸ் எந்தக் கணக்கிலும் சேருவதில்லை. அன்னியன் பாஷையில் சொன்னால்

10 ரூபாய் டிப்ஸ் கொடுத்தால் 3.50 ரூபாய் அரசிற்கு வருமான வரி
1 கோடிபேர் 10 ரூபாய் டிப்ஸ் என்றால் மூணரை கோடி
1 கோடிபேர் 50 முறை டிப்ஸ் என்றால்? 175 கோடி அல்லவா?

தமிழ் நாட்டின் சத்துணவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடே இவ்வளவுதானே!

1 ரூபாய் 2 ரூபாய் இருந்த டிப்ஸ்கள் பில் தொகையில் 10 சதவிகிதம் 15 சதவிகிதம் என ஏறுவதற்குக் காரணம் கொடுப்பவர்களா வாங்குபவர்களா?

டிப்ஸ் ஒன்றும் கேட்டு வாங்கி உருவானதல்ல. அது கொடுத்துப் பழக்கப்படுத்தப்பட்டதுதான்.

நம்ம வீட்டு விஷேஷங்களில் கூட வண்ணான், நாவிதர், புரோகிதர் போன்று தொடர்ச்சியாக பணி செய்வோருக்கு தட்சணை, மரியாதை என புத்தாடைகள் பணம் கொடுப்போம் ஞாபகம் இருக்கிறதா! ஒரு விழாக்காலத்தில் தபால்காரர் போன்றோருக்கு இனாம் கொடுப்போம் ஞாபகம் இருக்கிறதா? இவையெல்லாம் சேவைக்குத் தரப்படும் டிப்ஸ்களே! இவை தொடர்ச்சியாக பணிபுரியும் மக்களுக்கு ஒரு ஊக்கத்தொகையாக, போனஸாக அமைந்தது.

அதையே டிரான்ஸேக்ஷன் பேஸிஸ் அதாவது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் என மாற்றி டிப்ஸாக மாற்றி இருக்கிறோம். இதனால் பணம் கொடுத்தால் சேவை என்ற நிலைக்குத் தள்ளப் படுகிறோம்.

பசியாய் இருந்த பொழுது அவித்த கடலை கொடுத்தவளுக்கு ஒரு ஊரையே பரிசளித்தாராம். மன்னர்..(பெந்த காளூர்- அதாவது அவித்தக் கடலையூர்- அவித்தக் கடலையைப் கொடுத்தவ்ளுக்குப் பரிசாக அளிக்கப் பட்ட ஊர்) அதன் அடிப்படைக் காரணம் என்ன? ஆளுமை.. கர்வம்.. அந்த உணர்வுதான் இந்த டிப்ஸ்களுக்கு அடிப்படைக் காரணம். அதே அரசர் அரண்மனைச் சமையல்காரருக்கு என்னச் சம்பளம் தந்திருப்பார் என்பது ஊரறிந்த உண்மை.

அந்த உணர்வுகளால் பிறக்கும் டிப்ஸ், அதே உணர்வுகளைப் பரப்புகிறது. டிப்ஸ் பெறுபவரும் கர்வம் பெறுகிறார்.. உழைத்துத் தன் காசில் நாலு இட்லி சாப்பிடுபவர் டிப்ஸ் கொடுக்க 1 ரூபாய் இல்லாத காரணத்தினால் ஏளனமாக, கேவலமாகப் பார்க்கப்படுவது இந்த டிப்ஸ் கலாச்சாரத்தினால் உருவாவதைத் தடுக்க முடியாது.

டிப்ஸ் உணவகத்தில் மட்டும் இல்லை,, தபால்காரரிடம் இன்னும் சேவைப்பணி சார்ந்த தொழிலாளிகளிடம் பரவுகிறது, சம்பளம் குறைச்சல் என்ற ஒரே பல்லவியைப் பாடிப் பிச்சை எடுப்பது பழக்கப்படுத்தப் படுகிறது. இருக்கிறது என்பதற்காக நம் சொந்தக் குழந்தைகளுக்கே அளவுக்கு அதிகமாக கொடுத்தல் அவர்களைக் கெடுக்கும், அப்படி இருக்கச் சமுதாயத்திற்குச் சொல்லவும் வேண்டுமா?

கடையில் வாங்கும் பொருள்களுக்கு எத்தனைபேர் ரசீது கேட்டு வாங்குகிறார்கள்? அதில் வீணாகாத வரியா, மனிதாபிமானத்தோடு தரப்படும் டிப்ஸில் வீணாகிறது? உழைக்காமல் உட்கார்ந்து பிச்சைக்கேட்பருக்கு கொடுக்கக்கூடாது என்பது மிகச் சரி. ஆனால், உழைத்தவருக்கு மனதாரக் கொடுப்பதில் தவறில்லை. கால்குலேஷன்கள் எடுபடாத இடம் மனிதாபிமானம்.


எதற்காக ஒப்பிடுகிறீர்கள்? இதுதான் அடிப்படைத் தவறு நம்மக்களிடத்திலேயே!

கடையில் ரசீது வாங்காதது மிகப் பெரிய தவறு.
டிப்ஸ் கொடுப்பது ஒரு தவறு..

பெரிய தவறு இருக்கிறது என்பதற்காக சின்னத் தவறை சரி என்று சொல்லலாமா? முன்னரே சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா? இரண்டையும் எதிர்ப்பதுதான் சரியே தவிர, முதலில் பெரியதைப் பார்ப்போம் அப்புற சின்ன விஷயங்களைப் பார்ப்போம் என்றுச் சொல்லுதல் சரியல்ல.

விதிவிலக்குகள் விதிகளாக்கப்படுவது என்பதுதான் இது.

உழைத்தவருக்கு மனதாரக் கொடுப்பது..
இங்கு மனது ஆறுகிறதா சிவா.ஜி?

ஒரு கடையில் இட்லி 2 ரூபாய்.. இன்னொரு கடையில் 4 ரூபாயில் இன்னொரு கடையில் 16 ரூபாய்.. இன்னொரு கடையிலோ 50 ரூபாய்..

எங்கு டிப்ஸ் அதிகம் கொடுக்கப்படுகிறது? கர்வமா இல்லை இளகிய மனமா எது டிப்ஸிற்கு அடிப்படைக் காரணி?

ஒரு வேறுபாட்டைப் பாருங்கள்..

ஒரு ஷூ பாலிஸ் செய்பவன் சுயதொழில் செய்கிறான்.. அவன் கேட்பது 5 ரூபாய் என்று கொள்வோம். நீங்கள் 6 ரூபாய் கொடுக்கிறீர்களா? அது தொழிலுக்கு கொடுக்கப்படும் மரியாதை...

ஆனால் அதன் பின் விளைவு என்ன? அவன் அனைவருக்கும் 6 ரூபாய் ஆக்குகிறான். சிலர் பேரம் பேசி 5 ரூபாய்க்கு பாலிஸ் செய்து கொள்கின்றனர். அதாவது 6 ரூபாய் கொடுக்க மனமுள்ளவர்கள் 6 ரூபாய் தடுகின்றனர். 5 ரூபாய் தர மனமுள்ளவர்கள் பேரம் பேசுகின்றனர். ஆனாலும் இந்த மாறுதலுக்குச் சின்ன வித்து நீங்கள் கொடுத்த ஒரு ரூபாய்.


பூக்காரர்கள் எங்கள் அடுக்குமாடி வீட்டுப்பக்கம் வருவதில்லை. காரணம் அருகில் உள்ள இன்னொரு குடியிருப்பில் அதிக விலைக்குப் பூக்களை வாங்கிக் கொள்கின்றனர். எங்கள் குடியிருப்ப்பில் பேரம் பேசுகின்றனர்.

காய்கறிக்கடைக்காரர்கள் இதே போல் பேரம் பேசும் மக்களை புழுக்களைப் போல் பார்க்கின்றனர். காரணம், சொன்ன விலைக்கு வாங்கிச் செல்ல மென்பொருள் வல்லுனர்கள் இருக்கின்றனர். ஆக நாம் அறிந்தோ அறியாமலோ கொடுக்கும் ஒரு ரூபாய் எத்தனை ஏழைகளை பாதிக்கிறது என்பதை அறியவேண்டும். பின்விளைவுகள் நம்மை அல்ல, வருமானம் குறைந்த மக்களையே பாதிக்கிறது.

ஒரே ஒரு காட்சியினை மட்டுமே பார்ப்பதால் உங்களுக்குச் சரியாகத் தோன்றுவது அதற்குப் பின்னால் ஏற்படும் பத்துப் பதினைந்து தொடர் நிகழ்ச்சியைக் காணும் பொழுது அதன் விளைவை அறியவைக்கும்.

தனிமனிதனுக்கு உதவுவதாய் எண்ணிக் கொண்டு சமுதாயத்திற்குக் கெடுதல் செய்யாதீர்கள்.

உணவகங்களில் பரிமாறுவோர், தங்கள் பணிக்கானச் சம்பளத்தை முதலாளியிடம் பெற்றுக் கொள்கின்றனர். நீங்கள் டிப்ஸ் கொடுப்பதை முதலாளியும் அறிகிறார். அவர் என்ன செய்கிறார்? அவனுக்குரிய சம்பளத்தைக் குறைக்கிறார் அல்லது சம்பள உயர்வைச் வழங்குவதில்லை, இதனால் உண்மையில் பணம் யாருக்குப் போய்ச் சேருகிறது? கடை முதலாளிக்குத்தான். பரிமாறுபவனுக்கு அல்ல.


நீங்கள் இறுதியாக அந்தப் பணம் எங்குச் சென்று சேர்ந்தது என யோசித்துப் பார்க்க மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.

மனிதாபிமானம் என்பதைப் பற்றி ஏற்கனவேச் சொன்னேன்

அனைவருக்கும் ஒரே விதமானச் சேவை கிடைக்குமா? கிடைக்கும் என்றால் மனிதாபிமானம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.

தன்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த சொற்பக் காசில் உணவருந்தும் இன்னொரு உழைப்பாளி டிப்ஸ் தராததால் ஏளனமாக நடத்தப்படும் சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருப்பது டிப்ஸ் கலாச்சாரம்.

ஒரு தொழிலாளிக்குப் கொடுக்கும் பணம் இன்னொரு தொழிலாளிக்கு மானப்பிரச்சனையை ஏற்படுத்துமானால் அதை எப்படி மனித அபிமானம் என்றுச் சொல்கிறீர்கள் புரியவில்லையே!

ஐந்தே வார்த்தைகளில் சொல்வதானால்

அபிமானம் - வெகுமானம் - வருமானம் - தன்மானம் - அடமானம்

டிப்ஸ் கொடுப்பது எவ்விதத்தில் பார்த்தாலும் தவறு என்கிறீர்கள்.. சரி அதனால் நான் டிப்ஸ் கொடுப்பதில்லை என்று நீங்கள் வாதிடுகிறீர்கள்...

அது அரசுக்கு போகிறது. அரசை நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்... சரிங்க... டிப்ஸ் விஷயத்தில் இவ்வளவு கறாராக இருக்கும் நீங்கள்.. லஞ்ச விஷயத்தில் எப்படி இருக்கிறீர்கள்?

நான் லஞ்சமே கொடுத்ததில்லை என்று சொல்லபோகிறீர்களா?

எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற ஆசைதான் லஞ்சத்தின் ஊற்றுக்கண். ஆதாரப்புள்ளி.

அன்றாட வாழ்க்கையில் லஞ்சம் குறுக்கிடும் அளவிற்கு வைத்துக் கொள்வதில்லை. ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதின் மூலம் பல இடங்களில் இலஞ்சம் கொடுக்காமல் தவிர்த்து வந்திருக்கிறேன்.

இயன்ற வரையில் தவிர்ப்பது என்பதுதான் நோக்கமே..

தவறு என்று உணரும் பட்சத்தில் இயன்ற வரை செய்யாமல் இருக்க முயற்சிக்கிறோம்.

இயலாமை காரணமாகச் சமரசத்திற்குப் ஆட்படுவதன் மூலம் விதிவிலக்குகளை விதிகளாக்குகிறோம் என்பதுதானே நடக்கிறது. அதை குறைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாதம்.

வீட்டில் 1 கோடி கொள்ளை போய்விட்டது என்பதற்காக 10000 ரூபாய் இருக்கும்பொழுது வீட்டைத் திறந்துபோடுவது தவறுதான். தவறுக்குத் தவறு பரிகாரமாகாது.

ஹோட்டலுக்குப் போனாக்கூட 10 சதவிகிதம் டிப்ஸ் கொடுக்க வேண்டி இருக்கிறது என இலஞ்சம் கேட்பவர்கள் தங்கள் ரேட்டை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கப் போகிறீர்களா? நீங்கள் இப்படிக் கேட்கும் பொழுது அதே இலஞ்சம் வாங்கும் சிலக் குழுவினர், ஹோட்டலுக்குப் போய் காசு கொடுத்துச் சாப்பிட்டாக் கூட 10 சதவிகித டிப்ஸ் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று அவர்களின் வசதிக்கு வளைத்துப் பேசுவார்களே! உயரதில்காரிகளின் அடாவடி ஆடம்பரங்களே தாங்கள் இலஞ்சம் வாங்குவதற்குக் காரணம் என்று ஊழியர்கள் சொல்வதைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


நான் சுத்தமானவன் என்பது என் வாதமல்ல. சுத்தமானவனாக இருக்க முயற்சிக்கிறேன். புது அழுக்குகள் சேராமல் இருக்கவும் அதே சமயம் பழைய அழுக்குகளைக் களையவும் முயற்சி செய்கிறேன். முயற்சி பலிக்கவில்லை என்றக் காரணத்தினால் நான் தோற்றுப் போவதில்லை. ஆனால் கொஞ்சமாவது பலித்தது.. என்பதே எனக்குப் போதும். இலஞ்சம் பெறுவது கடினம் என்ற சூழ்நிலையை உண்டாக்குவதே எனக்கு மிகப் பெரிய வெற்றிதான். ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றி விட முடியாது. ஆனால் கொள்கை அளவிலாவது நியாயங்கள் நியாயங்களாகவும் அநியாயங்கள் அநியாயங்களாகவும் இருந்து கொண்டே இருந்தால்தான் சாதகமானச் சூழல்களை உருவாக்க முடியும்.

இங்கு விவாதப் பொருள் டிப்ஸ் கொடுப்பது சரியா தவறா என்று. டிப்ஸ் கொடுக்காதவர்கள் இருக்கிறீர்களா என்று அல்ல. இயன்றவரை தவிர்ப்பது மிக நல்லது.

ஒவ்வொரு முறை இது நல்லது இது கெட்டது எனச் சொல்லும்பொழுது நீங்கள் செய்ததே இல்லையா என்றுக் கேள்வி எழுவது இங்கு வாடிக்கை. நான் செய்துவிட்டதால் அதை நான் நியாயம் என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது என்ன நியாயம்? தவறு செய்தால் ஆமாம் தவிர்க்க இயலாமல் தவறு செய்துவிட்டேன் வருந்துகிறேன். இனி இவ்வாறு தவறு ஏற்படாமல் எச்சரிக்கையாக இருப்பேன் எனத் தவறை உணர்ந்து ஒப்புக்கொண்டு தவறைத் தவறாகவே காண்பதுதான் நல்லது.

சில மாயையான எண்ணங்களைத் தகர்ப்பதே என் விவாதத்தின் நோக்கம். டிப்ஸ் சரி என்றீர்கள். என்ன அடிப்படையில் என்றதற்கு மனிதாபிமான அடிப்படையில் என்றீர்கள். அந்த அடிப்படையில் உள்ள குறைகளை எடுத்துச் சொன்னேன்.

இல்ஞ்சம் தவறு என்ற எண்ணம் அடிப்படையில் அடிமனசில் இருப்பதனால்தான் சாதாரணமக்கள் நாள்தோறும் அதைக் கையாள்வதில்லை. அதே போல் டிப்ஸ் தவறு என்ற அடிப்படை எண்ணம் மனதில் இருந்தால்தான் 10 சதவிகிதம் டிப்ஸ் தந்தால்தான் மரியாதை என்ற எண்ணத்திற்குப் பலியாகாமல் இருப்பீர்கள்.

டிப்ஸ் போன்றவைகள் சாதாரண உணவகத்தில் எதிர்பார்க்க முடியாது,. உயர்தர உணவகங்களில் இவ்வாறானவை நிறைந்து இருக்கிறது. அப்படியான உணவகங்களில் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்தினரும் மிகக் குறைந்த விகிதத்தில் ஏழைக்குடியானவர்களும் உண்ணச் செல்லுகிறார்கள். ஆக, யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்ற சிறு கணிப்பு பணியாளரிடம் இருக்கும் என்றாலும் டிப்ஸ் வழங்கப்படுவது உண்டு முடித்தபின் தானே? அதாவது பணியாளர் சேவை முடிந்த பின் தான் டிப்ஸ் வழங்கப்படுகிறது. முன்பே கணித்து வைத்த கணிப்பின் படி ஒரு பணியாளர் டிப்ஸ் கொடுப்பவருக்கு தாழ்ந்த சேவை வழங்குவாரா? அல்லது அப்படி வழங்கத்தான் அவருக்குத் தோன்றுமா?

ஒரே விதமான சேவையை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் டிப்ஸ் எதிர்நோக்கியோ, அல்லது நோக்காமலோ பெரும்பான்மையான பணியாளர்கள் தகுந்த சேவை வழங்குகிறார்கள் என்பதே உண்மை.

5 ரூபாய் டிப்ஸுக்கு வருமான வரி ஏய்ப்பு என்று சொல்லுவதெல்லாம் அதிகபட்ச ஆராய்வு. ஒவ்வொரு செயலுக்குப் பிற்பாடும் தகுந்த விதிகள் இருக்கிறதா என்று நம்மால் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. அப்படி தேவையுமில்லை. டிப்ஸ் என்பது அன்பளிப்பாக மட்டுமே தருவதாகக் கொள்வோம். அன்பளிப்புக்கு வரிகள் தேவையில்லை. சிலர் சேவைக்குத்தானே என்றும் சொல்வதுண்டு. ஒரு நல்ல சேவகன் சிறு பிழையால் ஏதாவது கொட்டிவிட்டோ, தவறிவிட்டோ, அல்லது உண்பவருக்கு மனதில் பிடிக்காமல் போனாலோ டிப்ஸ் தராவிடில் அது சேவைக்கான மதிப்பல்ல. மனது பிடித்திருந்தால் தருகிறார்கள். சேவைக்கு என்பது இரண்டாம் பட்சமே!


ஆறிப்போன இட்லி உங்களுக்கும் ஆவி பறக்கும் இட்லி அடுத்த மேசைக்கும் வருவதைக் கண்டிருக்கிறீர்களா?

இரக்கப்பட்டுத் தருவது - இதன் விளைவைத்தான் சொல்லி இருக்கிறேன் அல்லவா! இதன் பின் விளைவு நியாயமாகக் கிடைக்கும் சம்பள உயர்வுக்கு வெட்டு. டிப்ஸ் அதிகம் கிடைக்குது அந்த ஹோட்டலில் என்பதால் பணிக்கு போட்டி அதிகம். அதை வைத்துக் கொண்டு முதலாளி ஆடும் பொம்மலாட்டம்.

நியாயமானது என்றால் அதைச் சம்பளத்திலேயே சேர்த்துக் கொடுத்துவிட்டு பொருள்களின் விலைகளில் சேர்த்துக் கொள்ளலாமே! தரப்படுவது அவர்களுக்கு உரிய தொகை என்னும் பட்சத்தில் இனாமாகக் கொடுப்பது மிகப் பெரியத் தவறு. இல்லை இல்லை எனக்குக் கருணை மனது. அவர் கஷ்டப் படுகிறார் என்னாலானது என்று நீங்கள் தருகிறீர்களா? அப்படியானால் என்ன அர்த்தம்? அந்த தொகைக்கு அவர் சேவை உரியது அல்ல. ஏதோ பெரிய மனது பண்ணி நீங்கள் பிழைத்துக் கொள்ளட்டும் என பிச்சை போடுகிறீர்கள் என்று அர்த்தம். இதில் என்ன கருணை இருக்கிறது? அவரை அவமானப் படுத்துகிறீர்கள் அல்லவா?


பணக்காரன் டிப்ஸ் கொடுத்தான். நடுத்தர மக்கள் டிப்ஸ் கொடுத்தால்தான் கௌரவம் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டனர். ஏழைகள் டிப்ஸ் கொடுக்க காசு வேண்டுமென ஒரு இட்லி குறைவாக்ச் வேண்டியக் காலம் வரும் தூரம் அதிகமில்லை.

சம்பளம் என்பது பணியாளரின் உரிமை. டிப்ஸ் என்பது உரிமை இல்லாதது. சம்பளம் என்பது நான் இருப்பதற்கு, டிப்ஸ் என்பது என் பணிக்கு என்ற நிலை உருவாகாமல் தடுப்பது ஆரம்பத்திலேயே தவிர்ப்பதால் மட்டுமே நடக்கும்.

அன்பளிப்புக்கு வரி இல்லைதான். ஆனால் அதே டிப்ஸ் பில்தொகையில் இணைக்கப்பட்டால், சேவை வரி பன்னிரண்டு சதவிகிதம், அந்த ஊழியனின் வருமான வரி, மற்றும் அந்த ஹோட்டலின் தொழில் வரி என அரசுக்குச் சென்று சேரும்.

கொடுத்துப் பழக்கிவிட்டுப் பின்னால் ஒருநாள் வருத்தப்படுவது தவறு.

பணத்தையும் கருணையையும் (வேறு அர்த்தம் இருந்தாலும், இல்லை அதைச் சொல்லலை) இணைத்தால் பலசமயங்களில் ஆபத்துதான். அது ஒருமுறை செய்யும் விதிவிலக்கு. விதியல்ல என்பதுதான் என் வாதம். ரொம்பப் பசித்தவன் ஒருவனுக்கு ஒருமுறை உணவளிக்கலாம். தினமும் போட்டால் அவனைச் சோம்பேறியாக்கிய புண்ணியம் உங்களையேச் சேரும். 50 பைசா பிச்சைப் போட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும் மரியாதையை. வளர்த்து விட்டால் அதே கதிதான் உங்களுக்கு உணவகத்திலும். 

ஒரு பொருளின் அடக்க விலையில் சேவையின் விலை கூடத்தான் இருக்கிறது. சேவை சரியில்லை என்றால் அந்தக் கடைக்கு கூட்டம் வராது. வருமானம் வராது. ஆகவே சேவை நன்றாகச் செய்தார் என்று ஓவர் எமோஷனலாகத் தேவையில்லை. அந்தச் சேவையை மதித்துத்தான் மக்கள் கொஞ்சம் அதிக விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.


மனதுக்குப் பிடித்தால் தருகிறோம் என்றுதானே பல விஷயங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

டிப்ஸ் வாங்கும் சில பணியாளர்கள், பில் தொகையைக் குறைப்பது போன்றச் சில காரியங்களிலும் ஈடுபட்டு தங்கள் நிறுவனத்திற்கு எதிராகவும் செயல்படத் தயாராகிவிடுகிறார்கள் அல்லவா?

மாற்றப்பட வேண்டியது - முதலாளிகளை - அவர்கள் தரும் சம்பளத்தை உயர்த்தவேண்டியது. அப்படி உயர்த்தப்பட வேண்டுமானால் தரமும், தொழில்சுத்தமும், சேவையும் நல்ல அளவில் இருந்து இருந்தால் தொழில் பெருகும். . டிப்ஸ் கொடுப்பதால் ஒரு உணவகத் தொழிலாளியின் பசிக்கு (?) உணவளிக்கும் கருணை பெருமக்கள் என்பது கொஞ்சம் விபரீதமாக இல்லையா?


முதலில் 25 பைசாவில் ஆரம்பித்த டிப்ஸ். பின்னர் சில்லறைகள் என மாறி ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என வளர்ந்து சாதாராண உணவகங்களில் 5 ரூபாயாக வளர்ந்து நிற்கிறது. பெரிய உணவகங்களில் சதவிகிதக் கணக்கில் சென்று நிற்கிறது.

இருக்கிறது.. தருகிறேன் என்ற மனப்பான்மையில் நோக்கினால் டிப்ஸ் தவறாகப் படாது.

பாவம் ரொம்பக் கஷ்டப் படுகிறான் எனப் பார்த்தாலும் டிப்ஸ் தவறாகப் படாது..

நிறைய ஓடி ஓடிச் செய்கிறான் இவனுக்கு எதாவது கொடுக்கணும் என்றுப் பார்த்தாலும் டிப்ஸ் தவறாகத் தெரியாது.

ஆனால்

இப்படிக் கொடுத்துப் பழக்கியது கெடுத்துப் பாழாக்கியவற்றை எண்ணிப் பார்த்தால் டிப்ஸ் தவறாகப் படும். இலஞ்சமும் இப்படித்தான் ஆரம்பித்தது.


ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும் நாம் கணக்கு போட்டு நடாத்த முடியாது. இன்று டிப்ஸுக்கு வரி என்று நினைத்து டிப்ஸ் தராமல் செல்லும் நாமே, ஒரு பொருளின் மதிப்பைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து வாங்குகிறோமா இல்லையா? அது நம் கண்களுக்குத் தெரிந்தே நடக்கிறது.

பணியாளரின் ஒவ்வொரு செயலிலும் டிப்ஸுக்கான எதிர்பார்ப்பு இருப்பதில்லை. சிலர் கேட்டுப் பெறுகிறார்கள். சிலருக்குத் தானாகவே விழுகிறது. இது பிச்சை அல்ல. சேவைக்கான அன்பளிப்பு.

அதிக விலைகொடுத்து வாங்குகிற காரணத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன். உதாரணத்திற்குச் சொல்கிறேன்..

ஹென்கோ மேடிக், சர்ஃப் அல்ட்ரா மேடிக் மற்றும் ஏரியல் மேடிக் போன்ற சலவைப்பொடிகள் கிலோ 150 + ரூபாய்கள். 

இப்பொழுது ரின் கிலோ 70 ரூபாய்க்கு சலவைப் பொடியை அறிமுகப் படுத்தி இருக்கிறது. உடனே ரின் சலவைப் பொடி தரம் குறைந்தது என முடிவு செய்யாமல் உபயோகித்துப் பார்க்க வேண்டும். நல்ல விஷயங்கள் அதிகமாக இருந்தால் மாறித்தான் ஆகணும். இதனால் ரின் விலை உயரும். மற்றவர்களின் விலை குறையும் ஒரு சமன்பாட்டுக்கு வந்து விடுவார்கள்.

சந்தைப் பொருட்களின் ஒவ்வொன்றின் விலைமீதும் நம்மால் ஏற்படும் சின்னக் கட்டுப்பாடு உண்டு. ஒரு சமன்பாட்டில் அதன் விலை வந்து நிற்கும். அதில் சின்ன மாறுதல் ஏற்படுத்தினாலும் ஏற்றத் தாழ்வுகள் உருவாகி மறுபடியும் இன்னொரு சமன்பாட்டுக்கு வரும்வரை வேறுபாடுகள் அதிகம் இருக்கத்தான் செய்யும்.

ஒரு அளவிற்கு மேல் விலை செல்லும் பொழுது அதன் உபயோகத்தைக் குறைக்க ஆரம்பிக்கிறோம். அதற்கு மாற்றுப் பொருளோ அல்லது அது இல்லாமலோ வாழவோக் கற்றுக் கொள்கிறோம். பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலை உயர்ந்து கொண்டே போவதினால் இது நடக்கிறதல்லவா?


அன்பளிப்பு என்பது எதையும் எதிர்பாராமல் கொடுப்பது. அன்பினால் கொடுப்பது,.. ஆனால் நீங்கள் கொடுக்கும் டிப்ஸை சாப்பிடாமலேயே கொடுப்பீர்களா? அய்யா போன மாசம் உங்க ஹோட்டலில சாப்பிட்டேன். அன்பாக் கவனிச்சுகிட்டீங்க. தரணும் போலத் தோணுச்சி.. இந்தாங்க என ஒரு 5 ரூபாயைக் கொடுப்பிர்களா? இல்லைதானே. டிப்ஸ் என்பதே உண்ட அதே நேரத்தில் கொடுப்பதுதானே! அப்படி இருக்க அது எப்படி அன்பளிப்பு? அது சேவைக்கான கட்டணம் இல்லைதான். ஆனால் ஆகி விடும் ஆபத்து நிறைய இருக்கிறது.


அன்பளிப்பு என்கிறீகளே.. பக்கத்து மேசைக்கு பணி செய்பவருக்கு உன் பணி நேர்த்தியாக அழகாக இருந்தது என்றுக் கொடுத்துப் பாருங்களேன் ஒரு முறை. அன்பளிப்புதானே.. எதிர்பார்ப்பு இல்லாமல்தானே கொடுக்க வேண்டும். அன்பான உபசரிப்பைப் பாராட்டித்தானே!  இது முடியாதல்லவா? அதனால் அன்பளிப்பு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துவது தவறு. நன்றிக்கடன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.


சிலர் கேட்டுப் பெறுமளவிற்கு வளர்ந்தது என்பது என் கூற்றைச் சரியாக நிரூபிக்கிறது தென்றல். அடுத்த கட்டம் என்ன?. சிலர் என்பது இன்னும் சிலர்.. அப்புறம் பாதிப்பேர் அப்புறம் பெரும்பான்மையோர்.. இப்படி வளர்ந்து கொண்டேதான் செல்லும்.


டிப்ஸ் என்பது என்னதான் 5 ரூபாய் இரண்டு ரூபாய் என்று நாம் பேசிக்கொண்டாலும் கொடுப்பவரின் வளத்தைப் பொறுத்து ஆயிரம் இரண்டாயிரமாகக் கூட இருக்கிறதல்லவா?


மத்திய தர உணவகங்கள் கூட 100 ரூபாய் வரை டிப்ஸ் வாங்குமளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றன.


சேவைக் கட்டணம் என்றால் சேவைக்கு ஏற்ப பணம். இரண்டு மணி நேரம் பணி செய்தேன். அதற்குக் கட்டணம் இது என்று ரசீது கொடுங்கள்.சேவைக்கட்டணம் கட்டாதவர்கள் சுயசேவைப் பிரிவில் சாப்பிடட்டும். அது நேர்மையாக இருக்கும். (அப்ப அந்தப் பணம் பணியாளருக்கு எப்படிக் கிடைக்கும் எனக் கேட்பீர்கள்.. இப்பொழுது மட்டும் என்னவாம், முதலாளி மறைமுகமாக அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டுதானே இருக்கிறார். என்னவோ நாம் தான் மிகப்பெரிய தானம் செய்து புண்ணியம் செய்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம். )

நிர்ணயம் இல்லாமல் இயன்ற அளவு என்பதினால்தான் பணியில் ஏற்றதாழ்வுகள் வர அனுமதிக்கிறோம். இயன்ற அளவு என்பதை எப்பொழுதும் அதிகமாக்கிக் கொண்டே போவதுதான் மனிதமனம். டிப்ஸ் என்றுச் சொல்லுவதை விட சேவைக்கட்டணம் என்று நிர்ணயம் செய்து உரிமையுடன் பெற்றுக் கொள்வதுதான் நல்லது.

ஒரு உணவகம் நடக்கவும் நல்ல திருப்தி கிடைக்கவும் உழைப்பவர்கள் யார் யார்?

1. சமையல்தொழிலாளி
2. பரிமாறுபவர்
3. நீங்கள் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி சுத்தமாக்குபவர்
4. உங்கள் மேஜையை சுத்தமாக வைத்திருப்பவர்
5. உணவகத்தைச் சுத்தமாக வைத்திருப்பவர்.

இவர்களில் சம்பளக் குறைவு யார் யாருக்கு? நீங்கள் கொடுக்கும் பணம், உங்களை முகஸ்துதி செய்யும் சர்வருக்கு மட்டும்தானே! எப்படி வேலையிடங்களில் முகஸ்துதி செய்பவர்களை மட்டும் மேலாளர் கவனித்துக் கொள்கிறார் என்று நீங்கள் சொல்லுகிறீர்களோ அப்படித்தானே இங்கும்? ஒரு மேசை துடைப்பவனுக்கோ, தரையைச் சுத்தம் செய்பவனுக்கோ அதே கரிசனம் ஏன் காட்டுவதில்லை? மேசை சுத்தமாக இல்லாவிட்டால்? தரை சுத்தமாக இல்லாவிட்டால்? உணவு சுவையாக இல்லாவிட்டால்? அவர்களெல்லாம் சரியாகப் பணிசெய்தால் பாராட்டும் பரிசும் சர்வருக்கு.. எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?

2. ஹோட்டல் முதலாளிகள் டிப்ஸைக் காரணம் காட்டிச் சம்பளத்தைக் குறைப்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் சர்வருக்கு வருமானக் குறைவு வரக் காரணம் என்ன? 5000 கொடுக்க வேண்டிய இடத்தில் 2000 கொடுப்பது போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இல்லையென்றால் டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? பல பார் அண்ட் ரெஸ்டாரெண்டுகளை உதாரணமாய் சொல்ல முடியும். டிப்ஸ் மட்டுமே பெரிய வருமானம் அவர்களுக்கு. அது மட்டுமல்ல. ஈரோட்டிலேயே மிகப் பெரிய உணவகம் மற்றும் கேளிக்கை விடுதி என் நண்பருடையது. அவர் எப்படிச் சம்பளம் வழங்குகிறார் என்றும் அறிவேன். அதே போல் மத்தியத் தர உணவக உரிமையாளர் என்ன செய்கிறார் என்பதையும் அறிவேன். அதே போல் 20 மேசைகளுக்கு 2 பணியாளர்களைக் கொண்டுச் சமாளிக்கும் சிறு உணவகங்களையும் அறிவேன். அதனால் தான் முதலாளிகள் டிப்ஸை வருமானத்தில் கணக்கிடுகிறார்கள் என்பதையும் ஆணித்தரமாகச் சொல்கிறேன். அங்கே உள்ள பணியாளர்கள் இன்னும் அங்கேப் பணியாற்ற ஒரே காரணம் டிப்ஸ் வருமானம்தான்.


3. ஒரு வேலைக்கு அதற்குரியவரிடம் இருந்து மட்டுமே வருமானம் வரவேண்டும். ஒரு தொழிலாளி உரிமையாளரிடம் இருந்து மட்டுமே சம்பளம் பெறுவதுதான், அவனுக்கும், அந்த நிறுவனத்திற்கும், அந்த நாட்டுக்கும் நல்லது. இந்தப் பணியாளர் அன்பாகக் கவனித்துக் கொண்டார் என நாலு நல்ல வார்த்தைகளை முதலாளியிடம் சொல்லிவிட்டுப் போங்களேன். எதற்குப் பணம்?

4. எப்படி ஒவ்வொரு உணவகத்திற்கும் தரம் இருக்கிறதோ அப்படி தனித்தனி விலைப்பட்டியலும் இருக்கிறதல்லவா? அப்படி இருக்க டிப்ஸ் எதற்கு?

5. புகழ்ந்து பாடிய புலவனுக்கு பரிசுகளும் கிராமங்களும் தரும் அரச மனப்பான்மையைத்தான் டிப்ஸ் கொடுக்கும் கலாச்சாரத்தின் மூலம் காட்டிக் கொள்கிறோம் என்கிறேன். இல்லை என்கிறீர்களா?

6. ஒவ்வொரு உணவக முதலாளியும் தன் உணவகத்தின் சொத்தாகச் சில தொழிலாளிகளை மட்டும் அடையாளம் கண்டு வைத்திருக்கிறார். இவர்களுக்கு மட்டுமே உரிய சம்பளம் தரப்படுகிறது. முக்கியச் சமையல்காரர், முக்கியச் மேற்பார்வையாளர் என.. உதவிச் சமையல்காரர், சர்வர்கள், துடைப்பாளிகள் எல்லோரும் முடிந்த வரைக் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். சில உணவகங்களில் ஒட்டுமொத்த டிப்ஸ் தொகையை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். சிலவற்றில் இல்லை.

7. உழைப்பதற்குத் தான் சம்பளம் பெறுகிறாரே. உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்றால் கேட்டுப் பெறவேண்டும். முதலில் அன்பான உபசரிப்பிற்கு என்றீர்கள். அடுத்த டேபிள் என்றதும், அவன் எனக்கா உபசரணை செய்தான் என்கிறீர்கள். அதாவது உங்களுக்கு உபசரணை செய்பவனுக்கு ஒரு பாராட்டுத் தொகை. உங்களால் கொடுத்துப் பழக்கப்பட்டவன் அதை தன் உரிமைத் தொகையாகக் கருதினால் அடுத்தவரிடமும் எதிர்பார்ப்பான். அதாவது நீங்கள் கொடுத்ததினால் நானும் கொடுக்க வேண்டும் என அவனை எதிர்பார்க்க வைக்கிறீர்கள். அதாவது உங்கள் மனத்திருப்திக்காக அவனுக்கும் எனக்கும் இடையிலான ஒரு உணர்வில் நுழைகிறீர்கள். சரிதானே!

8. அப்பா குழந்தைக்கு சைக்கிள் வாங்கித் தருவதற்கும், முதலாளி போனஸ் கொடுப்பதற்கும் வேண்டுமானால் ஒப்பிடலாம். டிப்ஸிற்கு எப்படி ஒப்பிட முடியும்?

9. டிப்ஸ் போன்றவற்றை ஒதுக்கி வைப்பதின் மூலமே சமுதாய ஒழுக்கம் பேணப்படும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருப்பதைப் பரவலாக்கினால் மோசமான விளைவுகளே ஏற்படும். வெறும் இ-காசுகள்தான். அதற்கே சில பல கட்டுப்பாடுகளை நம் மன்றத்தில் வைத்திருக்கிறோம் அல்லவா? அப்படித்தான் இருக்க வேண்டும்.

10. கம்பெனிகளில் கூட விற்பனைப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை (இன்செண்டிவ்) மூலம் தான் பெரும்பான்மையானச் சம்பளம் அளிக்கப் படுகிறது. அது அவர்களின் திறமைக்குச் சவால். ஆனால் வெளியாட்களிடம் நன்கொடை பெறுவது தடுக்கப் படுகிறது, ஏனென்றால் அது நேர்மைக்கு விடப்படும் சவால். அதேதான் ஏற்படும் இங்கும்.


11. அம்மை வந்தால் கொப்புளத்தைக் கிள்ளிவிடக் கூடாது. அரிக்கத்தான் செய்யும். சுத்தமாக இருக்கத்தான் வேண்டும். உடல் என்னும் சமுதாயம் தானே எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொண்டு நோயை எதிர்த்துக் கொள்ளும். சின்னச் சின்ன காய்ச்சலுக்கு வைத்தியர்கள் மருந்து கொடுப்பதில்லை. ஏனெனில் அவை நோய்களின் அறிகுறிகள் மட்டுமே. சமுதாயம் எதிர்ப்புத் திறனை வளர்த்துக் கொண்டுச் சரியாகி விடும். நாம் மூக்கை நுழைக்க ஆரம்பித்தால் சமுதாயத்திற்கு நோய் எதிர்ப்புச் சக்தியே இருக்காது. டிப்ஸ் கொடுப்பதின் மூலம் ஹோட்டல் பணியாளர்களின் சம்பளம் உயராமல் இருக்க நீங்கள் தான் காரணமாக இருக்கிறீர்கள். அப்புறம் அதற்காகவே நீங்களே டிப்ஸ் கொடுக்கிறீர்கள். அப்புறம் முதலாளிகளை நீங்களே திட்டி விட்டு உங்களை நல்லவர் என்றுச் சொல்லிக் கொள்கிறீர்கள். இதில் எதுவுமே தேவையில்லை. கட்டுப்படியானால் தொழிலைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் முன்னேற்றத்திற்கான வழியைத் தேட வேண்டும். அப்படித்தான் ஒருவன் உயர முடியுமேத் தவிர டிப்ஸ்களினால் அல்ல. டிப்ஸ்கள் அந்த முன்னேற்றத்தைத் தடுக்கும்.

ஒரு செயலுக்கு ஒருவரிடம் இருந்து மட்டுமே ஊதியமோ அல்லது பரிசோ பெறுவதே நல்லது. இல்லையென்றால் நம்ம கிரிக்கெட் அணி மாதிரி ஆகிவிடும்.

ஒன்று முதலாளி ஊதியம் தரவேண்டும். அல்லத் வாடிக்கையாளர் டிப்ஸ் தரவேண்டும். இரு பக்கமும் என்பது பலபக்கங்களைத் தேடத் தூண்டி விடும்.

டிப்ஸ் கொடுத்துப் பழக்கப் படுத்தியாகி விட்டது பல இடங்களில். அது மெதுவாய் வளர்ந்து கௌரவப் பிரச்ச்னையாகி விடக் கூடாது என்பதுதான் கவலை. நான் சொல்லும் பின்விளைவுகள் டிப்ஸ் கலாச்சாரம் பரவினால், கண்டிப்பாய் ஏற்படும்.

சங்கக் காலத்திலேயே சொல்லி இருக்கின்றனர். கொடுத்துப் பழக்கப்படுத்தியவரையே நாடிக் கேட்டுப் பெறுகின்றனர் மக்கள்.

-------------------------------------------------------------------------------------------------

கழிவிரக்கம்.. ஒரு பெரிய கொடையாளியை நாடிச் செல்கிறான் புலவன். தன் வறுமை ஒழிந்ததென. ஆனால் புரவலனின் நிலைமையும் புலவனைப் போலவே வறியதாய். அவனால் கொடுக்க இயலவில்லை. புலவனின் புலம்பல் இதோ!

ஈயென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண்ணீர் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர்வேட் டோரே;

ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்,

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் - வாழியர், ஓரி; விசும்பின்
கருவி வானம் போல'
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

கொடுக்கப் பிறந்தவனே! நான் புறப்பட்டச் சகுனம் சரியில்லை. உன் மேல் ஒரு குற்றமுமில்லை. நான் உன்னை எதற்குத் திட்டப் போகிறேன். நீ வாழ்க. நீ மழை போல வஞ்சனை இல்லாமல் கொடுப்பவன். என் நேரம் சரியாயில்லை. நான் புறப்பட்ட போது குறுக்கேப் பறந்த காகம் எனக்கு ஒன்றும் கிட்டாதென்றுச் சொல்லியது. இருந்தும் வந்தேன். ஏன் தெரியுமா?

கொடு என்று கேட்டல் இழிந்தது - நான் கேட்டு விட்டேன்
கொடுக்க மாட்டேன் என்றுச் சொல்வது அதை விட இழிந்தது. கொடுக்காமல் நீ இருப்பது நல்லதல்ல
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தது. ஆனால் நான் வந்து கேட்டும் இன்னும் நீ கொடுக்கவில்லை.
கொள்ளேன் என்பது அதை விட உயர்ந்தது. அப்படி ஒருவேளை நீ உன் வறுமையை நிலை மறந்து அதிகமாகக்க் கொடுத்திருந்தால் நான் வேண்டாம் என்று மறுத்திருப்பேன்.

கொட்டிக் கிடக்கும் செல்வமிருந்தாலும் கொடுக்க மனமில்லாதவனிடம் புலவர்கள் செல்லமாட்டார்கள். கடல்போல் உலகையே மூழ்கடிக்கும் அளவிற்குச் செல்வமிருந்தாலும் மக்கள் செல்லமாட்டார்கள். ஆனால் குழம்பிய குட்டையென்றாலும் குடிக்க ஏற்றபடித் தெளிய வைக்க பலவகைகள் இருப்பதைப் போல, கொடுக்கும் எண்ணமுள்ளவனிடம் கறக்கும் வழிகள் பல உண்டு. 


இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தருவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அச்சாரமாய் இப்புகழாரத்தை வைத்துக் கொள்..

----------------------------------------------------------------------------------------------

ஒருபுலவன் நான் ஓரியிடம் சென்றேன் அவனிடம் கொடுக்க ஒன்றுமில்லை என பாடலெழுதி வைக்கிறான் என்றால்.. யோசிக்க வேண்டும். அதுவும் எப்படி.. விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளல்.. மழை பொய்ப்பதும் உண்டு என்ற உள்குத்து வைத்து. கொடுத்தா வெள்ளமா பணம் பாயும். இப்போ பஞ்ச காலம் மண்டை காஞ்சுடுச்சி..

என்னிக்கும் கொடுக்கிற கடங்காரி - இன்னிக்கு இல்லைன்னுட்டா, எப்பவும் குடுக்காத மகராசி இன்னிக்கு அள்ளிக் கொடுத்தா

இந்த வரிகள் மனதில் இருக்கட்டும். கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய ஓரிக்கே இந்த நிலைமை. 

சாத்திரங்கள் எழுதியவர்கள், மருத்துவ நூல் எழுதியவர்கள், இப்படிப் பாராட்டப் பட்டு பரிசில்கள் பெற்றதாய் படித்திருக்கிறோமா? இல்லை அல்லவா? முகஸ்துதி - பரிசு, பணிவான சேவை - டிப்ஸ் இரண்டும் ஒன்றுதானே!!!

ஔவையும் சொல்லி இருக்கிறார்

இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தார் என..

நான் செய்த வேலையை வெறும் முகவுரை மட்டும் தந்து பெயர் தட்டிச் செல்கிறார் இன்னொரு சக பணியாளர் என்று குமுறும் உள்ளத்துக்குச் சொந்தக்காரர்களில் இந்த மன்றத்தின் பெரிய தலைகள் சிலவும் உண்டு தெரியுமா தென்றல்? அதே நிலைதானே உணவகத்தின் மற்ற தொழிலாளிகளுக்கும்.

சிலருக்குச் சந்தோஷமும் சிலருக்கு மனவருத்தமும் கொடுக்கக் கூடிய செயல் மனிதபிமான வரிசையில் சேராது என ஒப்புக் கொண்டதற்கு நன்றி..

இன்னும் சில உண்மைக் கதைகள் உண்டு விளக்க.

பெங்களூரில் நந்தினி என்கிற ஆந்திரா வகை உணவகம் உண்டு. நான்கு வருடங்களுக்கு முன்பு அன்கு அடிக்கடிச் செல்லும் வாடிக்கையாளன் நான். அந்த உணவகத்திலும் சரி எப்பொழுதாவது ஒரு முறைச் செல்லும் உணவகமாக இருந்தாலும் சரி, முதன் முறையாகச் செல்லும் உணவகமாக இருந்தாலும் சரி, நல்ல உபசரிப்பை எனக்குப் பெற்றுத் தருவது அங்குள்ள ஊழியர்களுடன் கண்ணியமாகவும் பரிவாகவும் நடந்து கொள்வதினால் தான்.

அதுதான் மிக முக்கியமான ஒன்று. வசூல்ராஜா படத்தில் கமல் ஒரு மருத்துவ மனைத் தொழிலாளியிடம் செய்து காட்டும் கட்டிப்பிடி வைத்தியம் போல, அதுதான் அந்த தொழிலாளிக்குக் கிடைக்கும் மிகப் பெரிய மனநிறைவு. கன்னாபின்னாவென்று உதார் விட்டு விட்டு 100 ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் கனிவான பணி கிடைக்காது. சரிதானே!!!

என்னுடைய இன்னொரு நண்பர், டிப்ஸை ஒரேடியாக இறுதியில் தரமாட்டார். முதல் பார்வையிலேயே டிப்ஸ் தருவார். வாசலைத் திறந்துவிடுபவருக்கு. இதனால் உள்ளே இருக்கும் சர்வர்கள் அவரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள். கடைசியில் கொடுப்பது அடுத்த முறைக்கான அச்சாரம் என்பார். எனக்கு மட்டும் தனிக் கவனிப்புத் தேவை என்னும் எண்ணம் அது.

ஆனால் பக்கத்து சீட்டுக் காரரிடம் எரிந்து விழுந்து நம்மிடம் குழைபவரைக் கண்டால் எந்த அளவிற்கு நமக்குத் திருப்தி இருக்கும்? யோசித்துப் பாருங்கள்!

எதிலும் சரி தவறு என்பதற்கு இடையில் சரியல்ல , தவறல்ல என்ற இரு நிலைகளும் உண்டு. நீங்கள் சரி என்று வாதிடுவதை விட தவறல்ல என்ற நோக்கில் வாதிடுவதாகவே எனக்குப் படுகிறது.

குறுகிய கால நோக்கில் தவறல்ல எனப் மனதிற்குப்படும் டிப்ஸ் நீண்ட கால நோக்கில் சரியல்ல என மாறிவிடுகிறது. டிப்ஸ் மனிதரில் வளர்க்கும் குணங்களினால்.

ஒருபக்கம் மனிதாபிமானம் என்றீர்கள். இன்னொரு பக்கம் நல்ல சேவை கிடைக்கும் என்னும் சுயநலம் என்கிறீர்கள். அப்படியானால் இது சுயநலமனிதாபிமானம் அல்லவா! 

நீங்கள் டிப்ஸை சுயநலத்திற்காக உபயோகப்படுத்த டிப்ஸ் பெறுபவன் அப்போதைய தேவையை நிவர்த்திக்கிறான்..

அதே சமயம் எல்லோரும் உங்கள் அளவு பணம் கொடுத்தால் நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுக்க வேண்டியதிருக்கும். விலைவாசி போல ஏறிக்கொண்டே போகும்.

அமெரிக்காவில் 10 சதவிகித மினிமம் டிப்ஸ் என்பது எழுதப்படாத ஒரு விதியாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் வெட்டியவருக்குத் தனியே டிப்ஸ் அதுவும் ஏறத்தாழ 10 சதவிகிதம்தான். அதாவது டிப்ஸ் என்பது ஏறத்தாழ எழுதப்படாத கட்டணம். சரி அதிருப்தியை எப்படிக் காட்டுவார்கள்?

அதுவும் டிப்ஸ் கொடுத்துதான். அதவது ஒரு ஒற்றைப் பைசாவை டிப்ஸாக வைப்பார்கள். 1 பைசா என்பது ஏறத்தாழ செல்லாக்காசு. அதாவது டிப்ஸ் கொடுத்தே திட்டவும் செய்வார்கள்.

அப்படிக் கலாச்சாரத்துடன் இரண்டற டிப்ஸ் கலக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது இன்னொரு சுமையாய் மாறும்.. டிப்ஸ் கொடுக்காட்டி மரியாதை இல்லை என்ற எண்ணத்தை வளர்க்கும். ஏற்கனவே டேட்டிங் எனப் பிள்ளைகளின் செலவினால் பொத்தலாகிப் போகும் அப்பாக்களின் பாக்கெட்டுகள்தான் பாவம் இல்லையா?

ஆசை, பேராசை, நிராசை, கர்வம், தாழ்வுமனப்பான்மை, ஏமாற்றம் போன்ற உணர்வுகளுடன் விளையாடுவது டிப்ஸ் கலாச்சாரம்.

டிப்ஸ் கொடுத்துக் கொடுத்துப் பழகிய மனசிற்கு டிப்ஸ் வாங்கவும் ஆசை வரும் இல்லையா?

4 comments:

  1. ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ?

    ReplyDelete
  2. dubaiyil sevai vari (service tax)thadai seiyappattullathu.

    ReplyDelete
  3. நான் இந்த அளவுக்கு யோசிச்சதில்ல... ஆனா உங்க கருத்துக்கள் நியாயமானதாத்தன் படுது. வாக்கு வாதம் ஸ்டைல் அருமை.

    ReplyDelete
  4. 3 பாகம் இருக்கு... இரண்டாவது பாகம் படிச்சீங்களா?

    ReplyDelete