Wednesday, January 13, 2010

அங்கீகாரத்தாகம்!!! - விவாதக் கட்டுரை!!!

உலகத்தில அங்கீகாரத்தாகம் இல்லாதவங்க இருக்க முடியாது.

எல்லோருமே அங்கீகாரத்துக்கு ஏங்கறோம்.

குழந்தை கூட அம்மாவின் செல்லமான பேச்சு, ஒரு சின்ன தட்டல் இப்படி அங்கீகாரத்துக்கு ஏங்குது.

அங்கீகாரம்தான் உலகத்தின் பல மிகப் பெரிய பிரச்சனைகளுக்குக் காரணம் கூட.

அங்கீகாரத் தாகத்தைக் குறைச்சிகிட்டோம்னா பல பிரச்சனைகள் காணாம போயிடும்.

நம்மை அங்கீகாரம் பண்றவங்க மேல நல்ல அபிப்பிராயம் ஏற்றடுத்திக்கிறோம். அங்கீகரிப்பவங்களை உயர்வா பார்க்கிறோம்.

நம்மை அங்கீகாரம் பண்ணாதவங்களை விரோதியாவே பார்க்க ஆரம்பிக்கிறோம். அங்கீகாரம் பண்ணாதவங்களை தூசாப் பாக்குறோம்.



ஆனா பாருங்க

அங்கீகாரம் குடுத்தா, அங்கீகாரம் எளிதா கிடைக்கும்.

இந்த சூட்சமம் அறிந்த சில பேர் நல்லபேர் வாங்கிகிட்டு குறுக்கு வழியா சட்டுன்னு மேல போயிடறாங்க. அவங்க உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்குது.


ஆனா மனசு கொஞ்சம் விறைப்பா இருந்து அடுத்தவங்களை அங்கீகாரம் பண்ணாதவங்களுக்கு இந்த உயர்வு என்பது கடினமா போகுது.

இதைப் பற்றிய எண்ணங்களை ஆராய்வோம்!


அங்கீகாரம் ஒரு தேவை, Herzberg's theory of motivation மற்றும் மாஸ்லோவின் hierarchy of needs இது மனித வளர்ச்சியின் பாகம் என்பதை தெளிவாக விளக்கும்.

அளவுக்கு மீறும் போது அமிர்தமும் நஞ்சு அல்லவா... அப்போது அதை Histrionic Personality Disorder என்று பெயரிட்டு அதிலிருந்து வெளிவர செய்யவேண்டும்.


அங்கீகாரம் கிடைச்சுட்டா மனசு அமைதியாயிடுதா? அந்த அங்கீகாரத்திற்கு என்ன அங்கீகாரம் இருக்குன்னு அலச ஆரம்பிச்சிடுது இல்லையா?

அந்த அங்கீகாரத்தை எத்தனை பேர் மதிக்கிறாங்க, அதை ஒரு நல்ல அங்கீகாரமா யார் யார் அங்கீகரிக்கறாங்க. அவங்களுக்கு மக்கள் மத்தியில என்ன அங்கீகாரம் இருக்கு..

இப்படி படிப்படியா தண்ணி குடிக்க குடிக்க தாகம் அதிகமாகி நாக்கு வரண்டு போகுது.

அங்கீகாரத்தில் பின்னால் உள்ள காரத்தின் வேலையைக் காட்ட ஆரம்பிக்குது இல்லையா?

ஒருபக்கம் வாங்கிய அங்கீகாரங்கள் தலையில கனமா உட்கார்ந்திடுது

இன்னொரு பக்கம் வாங்கப்படாத அங்கீகாரங்கள் மனசில பாரமா உட்கார்ந்திடுது..

இப்படி இன்னொரு பக்கமும் இருக்கு. இன்னும் பல பக்கம் இருக்கு. அதையெல்லாம் கொஞ்சம் அலசிப் பார்த்து தெளியலாம்னுதான் இந்த அலசல்

எப்படி ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல அவனுடைய படைப்பை சிறந்ததாக, வித்தியாசமானதாக, விரும்பத்தக்கதாக, படைக்கும் பொறுப்பு அவனுடையதே. வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து எழுதவேண்டும். பெரிய எழுத்தாளர்களின் வெற்றியே அது தான். அதே போல தங்களை அப்டேட் செய்துக் கொண்டே இருப்பார்கள். எவ்வளவோ பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் எல்லாம் இப்பொழுது விலை போகாமல் தூங்குகிறது. காரணம் வாசகர்களின் ரசனை மாறுகிறது, மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஒரு படைப்பாளியை ஊக்கப்படுத்துவது ஒரு நல்ல வாசகனின் கடமை, பொறுப்பு. ஒரு நல்ல வாசகனிடம் இருந்து பின்னூட்டம் வாங்கிதருவது படைப்பாளியின் எழுத்து திறமை.

வாசகன் இல்லாமல் படைப்பாளி இல்லை, அதே போல படைப்பாளி இல்லாமல் வாசகனும் இல்லை.

ஒரு நல்ல படைப்பாளியை உருவாக்குவது ஒரு வாசகன் தான். அதே போல ஒரு கெட்ட வாசகனை உருவாக்குவதும் ஒரு படைப்பாளி தான்.

அகவே அங்கீகார தாகம் படைப்பாளிகளின் உரிமை, அதே போல பின்னூட்டம் போடாமல் போவது வாசகனின் உரிமை.


ஒரு வாசகனின் கடமை என ஒருத்தருக்கு கடமையைத் தருகிறோம். ஒரு எழுத்தாளனின் கடமை என இன்னொருத்தருக்கு கடமையைத் தருகிறோம்,


அவனுடைய படைப்பை சிறந்ததாக, வித்தியாசமானதாக, விரும்பத்தக்கதாக, படைக்கும் கடமை படைப்பாளியுடையது.

படைப்பாளியை ஊக்கப்படுத்துவது ஒரு நல்ல வாசகனின் கடமை


கடமை எனப்படும் பொழுது - பலனை எதிர்பாராதே என்கிறது தத்துவம்.



அங்கீகார தாகம் படைப்பாளிகளின் உரிமை, 
பின்னூட்டம் போடாமல் போவது வாசகனின் உரிமை.


கடமையை வரையறுத்து விட்டு அதற்குப் பின்னால் வரையறுத்து இருப்பது உரிமை.

கடமையும் உரிமையும் எதிரெதிர் திசையில் இழுக்கின்றன உங்கள் வரையறையில்.

கடமையைச் செய்யாமல் இருப்பது உரிமை என்றபின்

கடமைக்கு அங்கு என்ன மதிப்பு?

எல்லோருமே படைப்பாளிகள்தான்..
எல்லோருமே வாசகர்கள்தான்

என்னும் பொழுது உங்கள் கடமையையும் உரிமையையும் பிரிக்கவும் முடியாது.. சேர்க்கவும் முடியாது.

நல்ல படைப்புகளை படைக்கவேண்டும்
நல்ல படைப்பாளிகளை வளர்க்கவேண்டும்

இதைக் கடமை என்றுச் சொல்ல முடியாது தக்ஸ். இது ஒரு கொள்கை அவ்வளவுதான்,

கடமைக்கும் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் சட்டத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.

ஆக கடமை உரிமை எனக் குழப்பிக் கொள்வது கொஞ்சமும் உதவாது.

அங்கீகாரத்தாகம் எல்லோருக்குமே இருக்கிறது.

நல்ல எழுத்தாளனாக அங்கீகரிக்கப் படவேண்டும் என படைப்பவன் விரும்புவதைப் போல நல்ல விமர்சகனாக அங்கீகரிக்கப் படவேண்டும் என விமர்சகனும் விரும்பலாம் அல்லவா? ஆனால் அனைத்து தர விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றனவா என்ன?

ஒரு உதாரணம் சொல்கிறேன் ..

வீட்டுக்கு வரும் விருந்தினரை அவருடைய வீடு வரைச் சென்று விட்டு வருவது ஒரு பண்பாடு என்று வைத்துக் கொள்வோம்.

நான் உன் வீட்டுக்கு வந்தால் நீ என் வீடு வரை வந்து விட்டு வரவேண்டும். என் வீட்டுக்கு நீ வந்து விட்டதால் நான் உன் வீடு வரை வந்து வழியனுப்ப வேண்டும்., அதற்காக நான் உன் வீட்டிற்கு வந்ததால் நீ என் வீடுவரை வந்து விடவேண்டும்.. 

இப்படிச் சுற்றிக் கொண்டே இருப்பதா சரி?

விமர்சகனும் படைப்பாளியே.. எல்லாவற்றையும் விமர்சனம் மட்டுமே செய்துகொண்டிருந்தால் அவன் மனதில் இருப்பதை எப்போது எழுதுவது?


நாமே படைப்பாளியாகவும்.. நாமே விமர்சகனாகவும் இருக்கிறோம். நாம் எழுதியது நமக்கே திருப்தி தராத போது மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறுதானே,

அதே சமயம், நாம் எழுதியது நமக்குத் திருப்தி தருவதாக இருந்தால் அடுத்தவர் சொல்லி நாம் எழுதியதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை, அப்படி இருக்க அடுத்தவர் மாற்றுக் கருத்து சொன்னால் மனம் காயப்படுகிறது. ஆக படைப்பாளியாக நாம் விமர்சனத்திற்கு தயாராக இருந்தாலும் காயப்படுகிறோம்..


அதே போல் விமர்சகனையும் பார்க்கலாம். எழுதிய முறை நம்மைத் திருப்தி செய்வதாயின் நல்ல விமர்சனம் தருகிறோம். ஆனால் எழுதியது சரியா தவறா என அலச நிறைய சமயம் தேவைப்படுகிறது. ஆக இனிக்கும் விஷம் நல்ல அங்கீகாரம் பெறக்கூடும்.

அதே மாதிரி நமக்கு எழுத்துநடை பிடிக்காவிட்டால் அந்தக் கருத்தை அலச பல சமயங்களில் பிடிப்பதில்லை. அதற்கு என்ன தான் எழுதுவது? படிக்கப் பிடிக்கவில்லை அதனால் படிக்கவில்லை என உண்மையையா? படிக்க நேரமில்லை, சமயம் கிடைக்கும் போது பின்னூட்டம் போடுகிறேன் என்றா? இல்லை சூப்பர்.. அருமை அபாரம் என்றா?

படைப்பாளியாக சில நேரம், விமர்சகனாக சில நேரம் இருந்து நம்முடைய தாகத்தை நாம் தணித்துக் கொள்ள விழைகிறோம்.

இதனால் விமர்சனம் என்பது முகஸ்துதியாக மாறுகிறது, முகஸ்துதி கர்வம், ஆணவம் போன்றவற்றை வளர்க்கிறது. இவையெல்லாம் பக்கவிளைவுகள்,

ஆக இப்படிக் கடமைகளாக வரையறுப்பதால் தீமைகளே அதிகம்.

அங்கீகாரம் என்பதன் ஆரம்பமே மக்கள் தங்கள் கவனத்தை காட்டுதல் என்பதே ஆகும்.

நான் சொல்வதைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால்தான் அங்கீகாரம் இல்லை என்று பொருள். நாலு பேர் அதை எதிரிக்கிறார்கள் என்றாலே அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது என்றுதான் பொருள்.

கேள்வி வேள்விகளைத் தாண்டி வராத எதுவுமே சிறந்த படைப்பாகாது.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்திக்கிறதோ எத்தனை எதிர்ப்புகளைச் சமாளிக்கிறதோ அத்தனை உயர்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த, சரியென ஒத்துக் கொண்டதை சொல்வது சிறந்த படைப்பா, இல்லை மனங்களில் மாற்றங்களை உண்டாக்குவது சிறந்த படைப்பா?

அனைவரும் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதிலேதான் மிகப் பெரிய தவறு செய்கிறார்கள் அங்கீகாரத்தாகம் கொண்டவர்கள்.

குறிப்பாக  சிலர் சில கேள்விகளைக் கேட்கும் போது அது நேர்முகமாக எதிர்ப்பது போலத் தெரிந்தாலும் அதன் பிண்ணனியில் உள்ள எண்ணம் இன்னும் மேலும் மேலும் அதிகத் தகவல்களை வெளிக்கொண்ரும் யுக்தியே ஆகும். அடிப்படையில் உங்களுக்கு இன்னும் அதிகம் தெரியும் சொல்லுங்க என்ற பாணியே ஆகும். இந்த அடிப்படையை அங்கீகார தாகம் கொண்டோர் புரிந்து கொள்ளல் மிகவும் அவசியம். விமர்சனம் செய்வது எப்படி என்ற கட்டுரையில் சொன்னது போல நாலு பேர் நாம் சொல்வது என்ன என்று படிக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும்.

சிலரின் பக்கங்களைப் பார்த்தால் எழுதுபவரைத் தவிர வேறு யாரும் படிக்கக் கூட வரமாட்டார்கள். அப்படி வெகுசிலர் உண்டு. அவர்களுக்கு மாத்திரமே அங்கீகாரம் இல்லையென்று சொல்லலாம். இந்த நிலைக்கும் காரணம் அவர்களே.

அங்கீகாரம் நமக்கு என்றால் நாம் எழுதுவது படிக்கப் படுகிறது. அங்கீகாரம் நம் படைப்புக்கு என்றால் படைப்பு விவாதிக்கப்படுகிறது. வாசகன் திருப்தி அடையும்போது கொடுக்கும் பாராட்டுக்கும், வெறும் வாய்வார்த்தைக்காக கொடுக்கும் பாராட்டுக்கும் வெகுவான வித்தியாசம் உண்டு.

பாராட்டு மட்டுமே அங்கீகாரம் என்று பலர் தவறாகக் கருதிக் கொள்வதாலும்..

படைப்பாளிக்கான அங்கீகாரம் எது? படைப்புக்கான அங்கீகாரம் எது எனப் பிரித்தரிய பலருக்குத் தெரியவில்லை,


கமல் சினிமா என எதிர்பார்ப்புடன் போனேன் - படைப்பாளிக்கு அங்கீகாரம்.

படம் ஏமாத்திடுச்சி - படைப்புக்கான அங்கீகாரம்.


படைப்புகளின் தொடர் தரமும் அதன் விமர்சனங்களை படைப்பாளி எதிர்கொள்ளும் விதமும் தான் படைப்பாளிக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.

ஊக்கப் படுத்துதல் என்பது சில சமயம் போதை மருந்துகள் (ஊக்க மருந்துன்னு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க) போல மயக்கத்தை உண்டாக்கி எதிர் விமர்சனங்களைத் தாங்க முடியாத அளவிற்கு மனதை வலிமையற்றதாக்கி விடுகிறது. புகழ் போதை மேலும் புகழ் போதை என வெறியேறிப் போவதால், அவசர வேலையாகச் செல்வோரைக் கூட ஏன் வணக்கம் சொல்லலை, அந்த அளவுக்கு பெரிய ஆளா நீ என மமதையாகக் கேட்கும் மனப்பான்மையை வளர்க்கிறது. 

அங்கீகாரத் தாகம் ஆங்கிலத்தில் ஐடன்டிடி  கிரைசிஸ் என்று சொல்வார்கள். அதாவது நமது டென்சன் பிரச்சனை எல்லாம் ஐடன்டிடி கிரைசிஸ் என்ற எதிர்பார்ப்பு காரனமாகவே வருகிறது.

ஆன்மீகத்தில் ஒரு ப்ராக்டிஸ் உன்டு யார் நான் என்ற அடையாளத்தை உடைக்கிறானோ அவன் தான் முழு நிம்மதியாக இருக்கிறான். அவனே கடவுளை கானமுடியும். நான் என்ற அடையாயத்தை கறைக்க வேன்டும். அது தான் இந்த அங்கிகார பசியை தூண்டி விடுகிறது. தொடர் பிரச்சனைகளை மன உழைச்சனை தருகிறது
 

அங்கீகாரத்தாகம் என்பது ஐடெண்டிடி கிரைஸிஸ் - ஐ உருவாக்குகிறது. அது ஒரு பக்க விளைவு,

நான் யார், மற்றவர்கள் மனதில் எனக்கு என்ன இடம் என புரியாமல் தவிப்பவர்கள் இவர்கள். அதாவது அங்கீகாரத் தாகம் இவர்களின் மனம் வரண்டு போகச் செய்யும் பொழுது ஐடெண்டிடி கிரைஸிஸ் உருவாகிறது.

வருஷக்கணக்கா பழகறோம். நீங்க யாருன்னு நானோ நான் யாருன்னு நீங்களோ இதுவரைக்கும் கேட்டதுண்டா? உமக்கு அங்கீகாரத்தாகம் குறைச்சலா இருப்பதால் தானே இப்படி எழுதவும் முடியுது..

அங்கீகாரம் என்பது ஒத்துக் கொள்ளுதல், புகழ்தல் என்ற பாராட்டுதல் என்ற மாயப் பிரம்மைதான் பல இடையூறுகளுக்குக் காரணம்.

நான் பூமி உருண்டை இல்லைன்னு சொல்றேன்.

அதற்கு கிடைக்கும் முதல் அங்கீகாரம், எங்கே நிரூபியுங்க பார்க்கலாம்? என்பதுதான்.

முட்டாள் உளறுகிறான் என்று மனசுக்குள் நினைச்சுகிட்டே போகிறான் என்பது உதாசீனம் எனலாம்.

அதனால் கேள்வி கேட்கிறவங்க படைப்பை அங்கீகரீக்காமல் போனாலும், படைப்பாளியை அங்கீகரிச்சுட்டாங்க என்று புரிந்து கொள்ளணும்.

படைப்பாளியை அங்கீகரிக்காதவன் கேள்வியே கேட்கமாட்டான். இப்போ ஒருவர் கருத்துக்கு எதிர் கருத்தை இன்னொருவர் வைக்கிறார்னா, ஒருவர் இன்னொருவரை அங்கீகரிக்கிறார் அப்படின்னு அர்த்தம். வாத்தியாரை ஒரு சிந்தனையாளரா அங்கீகரிப்பதும், வாத்தியாரின் கருத்தை ஒத்துக் கொள்வதும் இரு வேறு தனிப்பட்ட விஷயங்கள்.

எதிர்ப்பால் பல விஷயங்கள் வளர்ந்திருக்கின்றன. அங்கீகாரமின்மையால் பல் விஷயங்கள் காணாமல் போயிருக்கின்றன.

ஆக எதிர்ப்பு என்பதே அங்கீகாரம்தான், ஆனா பாழாப்போன மனசுக்கு இது புரிய மாட்டேங்குது. .

நாம் சொல்வதை மத்தவங்க புரிஞ்சிகிட்டு, அதன் முழு பயனையும் உணர்ந்து பாராட்டுவது என்பது எப்பவாவது தான் கிடைக்கும். அது ரொம்ப ரொம்ப அரிதான விஷயம். ஆனா அதுக்காக ஏங்குவதிலேயே கிடைக்கும் அங்கீகாரத்தை கோட்டை விடுபவர்கள் பலபேர் உண்டு,

இதைப் படிக்கும் போது சில உதடுகள் நெளிஞ்சி புன்னகை செய்யும். அதை நான் பார்க்கப் போவதில்லை. எனக்குத் தெரியாத அந்த அங்கீகாரம் தான் என்னோட அடுத்தப் பதிவையும் தேடி வந்து அவர்களைப் படிக்கச் செய்யும். அந்த அங்கீகாரத்தை என்னால புரிஞ்சிக்க முடியாமல் போனா,

வாத்தியார் சொன்ன மாதிரி ஐடெண்டிடி கிரைஸிஸ் தான்.


அதாவது அங்கீகாரம் எங்கயுமே கிடைக்குது. ஆனால் அங்கீகாரம் என்னும் பெயரில் நாம் எதிர்பார்ப்பது புகழை, பாராட்டை...

அங்க தானுங்க பிரச்சனையே ஆரம்பம்.

அங்கீகாரம் என்பது இப்படியும் வருமா? உதாரணமாக ஒருவன் எனக்கு எதிரி என்றால் நான் அவனை எதிரியாக சித்தரிப்பது அங்கீகாரமா அல்லது நிர்ணயமா??? இல்லை இரண்டும் இல்லையா???

ஒருவனை எதிரியாக நான் அங்கீகரிப்பது சரியான சொற்பதங்களா???
 
உலகில் இருக்கும் மக்களை பலவகைகளாக பிரிக்கிறோம்

உறவினர்
நண்பர்கள்
எதிரிகள்
தெரிந்தவர்
கேள்விப்பட்டவர்
தெரியாதவர்

இவனெல்லாம் எனக்கு எதிரியா என நினைப்பது உதாசீனம்.

ஒருவரை எதிரி எனக் கருதும் பொழுது, அவரை அங்கீகரிக்கிறீர்கள். அவரின் நடத்தை, பேச்சு, எண்ணங்கள் இது போன்ற சிலவற்றை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள். விமர்சிக்கிறீர்கள். எதிர்க்கிறீர்கள்

இந்தத் தெளிவு இருந்தால் எதிரி என்ற பதமே இருக்காது.

எனக்கு கேடு நினைப்பவன் என் எதிரி.. என்கிறார்கள் சிலர்..
என் சமுதாயத்திற்கு கேடு நினைப்பவன் என் எதிரி என்கிறார்கள் சிலர்..

வெறும் பேச்சுகளாக எண்ணங்களாக எழுத்துக்களாக இருக்கும் வரை, எதிர்ப்பு என்பது இருக்கிறது.

அதுவே செயல்களாக மாறிவிடும்பொழுது, பாதிப்பை தடுக்க காப்பு நடவடிக்கைகளிலும், எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், பின்பு கடைசியாய் அழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறோம்.

ஆனால், நாம் சொன்னதைப் பாராட்டவில்லை என்பதால் ஒருவர் நமக்கு எதிரியாகக் கூடாது. நாம் சொன்னதைத் தவறு என்று சொல்வதால் ஒருவர் நமக்கு எதிரியாகக் கூடாது. அப்படி ஆகிறார் என்றால் தவறு நம் மீதுதான்.

விதண்டா வாதங்களை எதிர்ப்பதை விட உதாசீனம் செய்வதுதான் அதை அழிக்கும் வழி.

அவற்றின் அங்கீகாரம் என்பது அதை மனதில் ஏற்றுக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவது.

ஆக தெளிவோடு இருந்தால் எதிரிகளாக அங்கீகரிக்க அவசியமில்லை.
தெளிவில்லாமல் தான் எதிரிகளாக அங்கீகரிக்கிறோம். 

இது வேற...

ஒரு கட்டத்திற்கு மேலே, ரொம்பவும் எதிர்பார்க்க முடியவில்லை... ஏனெனில் தமிழ்மன்றத்தில் 'ஆதவா'வைத் தெரியும்... அவன் எழுதுவது எப்படியிருக்கும் என்று பலரும் ஒரு வட்டம் போட்டு வைத்திருப்பார்கள்... தாமரை அண்ணா போன்ற வெகு சிலர் அந்த வட்டம் கிழித்து ஒவ்வொரு முறையும் புதியதாக எழுதுவார்கள்.. ஆக, தமிழ்மன்றத்தில் எனக்கான உச்சம் நான் அடைந்துவிட்ட்டேன்.... இனி எதிர்பார்ப்பது தவறு... என்னைப் பொறுத்தமட்டில்.. நான் எதிர்பார்த்து எதுவும் எழுதுவதில்லை. சில நேரங்களில் ஏமாற்றம் மிஞ்சியிருக்கலாம்.. பெரும்பாலான நேரங்களில் எனக்கான அங்கீகாரம் மன்றத்தைப் பொறுத்தவரை பூர்த்தியாகிவிட்டதாக உணருகிறேன்...



ஃபீலிங் ஃபார் பிலாங்கிங்னஸ் என்று, அதாவது இந்த இடம் எனக்கு உரியது, இது என் இடம் என்னும் உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு வருவதற்கு நாம் ஒப்புக்கொள்ளப்பட்டோம் என்ற உணர்வு வரணும். அந்த உணர்வு வந்திடுச்சின்னா பாராட்டு எல்லாம் இரண்டாம் பட்சம்.

அந்த உணர்வு வர என்ன செய்யணும்?

நமக்கு அந்த உணர்வு தானா ஏற்படுமா? இல்லை மற்றவங்க அந்த உணர்வை நமக்கு ஏற்படுத்தனுமா?

ஒரு இடத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக்காக இன்னொரு இடத்திற்கு போகும்பொழுது இதுதான் இனி என் இடம் என்ற உரிமையுணர்வு வர இந்த பாராட்டு அங்கீகாரம் உதவுகிறதா?

இதனால்தான் கல்யாணம் ஆகி கணவன் வீட்டிற்கு வரும் மனைவிகள் கணவனிடம் சமையலுக்கும், உடையலங்காரத்திற்கும், வீட்டு நிர்வாகத்திற்கும், அழகிற்க்கும், சின்னச் சின்னச் செயலிற்கும் பாராட்டு எதிர்பார்க்கிறாங்களா?

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமுதாயம் இந்த அங்கீகாரம் கிடைத்தால் அடுத்த தலைமுறை தன் சொந்த ஊரை மறந்து வருகிறதா?


அங்கீகாரம் என்பது விமர்சனம் என்று கொள்வோம்.. விமர்சனங்களில் பாராட்டுக்களும் தவறுகளைச் சுட்டிக் காட்டுதலும் அடங்கியிருக்கிறது. ஒரு இளம் படைப்பாளிக்கு, தட்டித் தட்டி ஒரு நிலைக்கு வராத படைப்பாளிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அங்கீகாரம் அளிக்குமா? அந்த படைப்பு வேண்டுமானால் முன்னிருக்கலாம். ஆனால் படைப்பாளி சட்டென்று இறங்கிவிடக்கூடுமே!!!

அங்கீகாரம் அளிக்கப்படும் விதத்தில் படைப்புகள் முன்னின்று, படைப்பாளிகள் விமர்சனத்திற்கு உள்ளாகி பாதிக்கப்படக்கூடாதல்லவா...

இதற்கு என்ன செய்யலாம்???
 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

படைப்பாளிகளை விமர்சனம் செய்வது தவிர்க்கப்படல் மிகவும் நல்லது ஆதவா!.

விமர்சனம் செய்வது எப்படி என்ற திரியில் இதை விளக்கமாகவே சொல்லி இருக்கிறேன்.

முதலில் படைப்புகள் விமர்சனம் பெறுகின்றன, படைப்பாளிகள் யாரென்று தெரியாத பொழுது.

படைப்புகளினால் படைப்பாளிக்கு ஒரு உருவம் கொடுக்கப்படுகிறது.

பின்னால் படைப்பாளியினைப் பொறுத்து படைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்கப்படுகிறது.

இவருடைய எழுத்துக்களில் இதுதான் ஸ்பெசல் என ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை மட்டும் பார்க்கிறார்கள். ஒருவரின் பாணி, முத்திரை என நீ முதலில் சொல்வதைப் போல ஒரு உருவம் கொடுத்து விடுகிறார்கள்.

அந்த வரையறைகளைத் தாண்டி வெளிப்படுவது என்பது அவ்வளவு எளிதல்ல,

ஒரு வாசகன் ஆயிரக்கணக்கில் வாசிக்கலாம். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே ரசிகனாக இருக்க முடியும். வெகு சிலரை மட்டுமே ஆழமாக ரசிக்கவும் முடியும். நான்கு அறைகள் கொண்ட இதயத்தில் எத்தனை பேருக்குத்தான் அவனால் இடம் கொடுக்க முடியும்?

மனம் விரும்பிப் படிக்காமல் கடமைக்காகப் படித்து போலியாக பாராட்டி வாழ்வதனால் சலிப்பு கூட வரலாம்.

பலரின் பாராட்டுகளை பெறும் ஒருவருக்கு தன் படைப்பு ஆழமாக அலசப்படவில்லை. சும்மாவாச்சும் தான் பாராட்டி இருக்காங்க என்று புரியுமானால், அடுத்து தான் எழுதப் போகும் விஷயம் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி வரும்?

விமர்சனம் என்பது இப்போதெல்லாம் குறித்த விமர்சகரின் தனிப்பட்ட கருத்துக்களாக மாறிப்போகின்றனவே..

இது படைப்புக்கும்,படைப்பாளிக்கும் ஆரோக்கியம் அல்லவே..
 படைப்புகளும் சரி, விமர்சனங்களும் சரி தனிப்பட்ட மனிதர்களின் கருத்துக்கள்தான். அப்படி இல்லாமல் போனால்தான் அது ஆரோக்யமான விஷயம் அல்ல.

தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே வெளிப்படுத்தப் படுகின்றன, எனக்கு எது சரியெனப்படுகிறதோ அதை மட்டுமே நானும் எழுதுகிறேன்.

மன்றம் ஒரு கருத்து சொல்கிறது என்றாலும், அது பலரால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட கருத்து அவ்வளவுதான்.

அதனால்தான் கிடைக்கும் அங்கீகாரத்திற்கு என்ன அங்கீகாரம் இருக்கிறது என்று பார்க்கிறோம்.

அப்படியானால் விமர்சனம் என்பது தனி ஒருவரின் கருத்து தானா?
ஜனநாயகப் பண்புகளின் அம்சம் விமர்சனங்களுக்குள் பொருந்தாதா?

அப்படியாயின் ஒரு பொது ஊடகத்தின்,இதழின்,மன்றத்தின் கருத்தாக வெளிவரும் விமர்சனங்கள் எப்படி நடு நிலையாகவோ,ஒரு பக்கப் பார்வை இல்லாததாகவோ இருக்கும்?

 நடுநிலைமை என்றால் என்ன என்ற உங்கள் பார்வையை முதலில் நடுநிலைமையோடு சொல்லுங்க பார்ப்போம்.

1. நடுநிலைமை என்பது எல்லோருடைய எல்லாக் கருத்துக்களையும் ஒப்புக் கொள்வது?

2. நடுநிலைமை என்பது எல்லோருடைய எல்லாக் கருத்துக்களையும் எதிர்ப்பது?

3. நடுநிலைமை என்பது இது இரண்டையும் ஒப்புக் கொள்ளாமல் எதுசரியென்பதை நம் மனம், மற்றும் நமக்குத் தெரிந்த நியாயங்களைக் கொண்டு சொல்வது

4. நடு நிலைமை என்பது எதையுமே சொல்லாமல் அமைதியாயிருப்பது..

இப்படி ஆளாளுக்கு ஒரு நடுநிலைமையை வச்சிருக்காங்க.

ஏன்னா, நடுநிலைமை என்பதற்கு பலப்பல வரையறைகள் இருக்கின்றன.

நம்ம மன்றத்திலும் கூட இப்படித்தான். அவங்க வரையறையை மன்றம் மீறுவதில்லை என்றால் மன்றம் நடுநிலையில் செயல்படுகிறது அப்படின்னு சந்தோஷமா பலபேர் இருக்காங்க.

அவங்களோட சொந்த வரையறையை சிலர் மீறுவதா தெரிஞ்சா மன்றம் நடுநிலைமையோட செயல்படலைன்னு பலர் வருத்தப்படுவாங்க.

ஆனால் பலரால் சிபாரிசு செய்யப்படும் வரையறைகளை மன்றத்தின் விதிகளாக மாற்றி அதன்படி நடக்கமுயற்சிப்பதால் அதை நடுநிலை என்று சொல்லலாம்.

நடுநிலைக்கு முதல் தேவை அடுத்தவங்க சொல்வதைக் காது கொடுத்து கேட்க முயற்சிப்பது.

இரண்டாவது அவசியம், அதை ஒருமனிதனின் உண்மையான உணர்வாக அதற்கு மதிப்பளிப்பது.

நடுநிலைமை என்பதின் வரையறை என்ன என்பதை அவரவர் வரையறையில் பார்க்கலாம்.
1. பலரின் கோணத்தில் ஆராய்தல்
2. தன் தவறுகளை மறைக்காமல் ஒப்புக் கொள்ளுதல்
3. வெளிப்படையான கருத்துக்கள்
4. சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளால் பாதிக்கப்படாதது.
5. உணர்வுகளுக்கு இடமில்லை
6. நியாயம் மட்டுமே அளவுகோல்
7. பல்நோக்கு ஆய்வு
8. மனசாட்சியின் படியான செயல்பாடு
9. உறவுகள், பிணைப்புகள், சார்புகள் இல்லாத பொதுப்பார்வை. நண்பர், பகைவர், அறிந்தவர், உறவு, தெரியாதவர் என்ற பாகுபாடு காட்டாதிருப்பது
10. அறிந்த வரையில் உண்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
11. நீடித்த நன்மையை அளிக்கக் கூடியது
12. அமைதியை, சமாதானத்தை உண்டாக்கக் கூடியது. இயன்றவரை அனைவருக்கும் நன்மைதரக் கூடியது
13. ஒரே அடிப்படை நீதியைக் கொண்டது.

மேற்கண்டதெல்லாம் இதுவரை திரட்டிய நடுநிலையைப் பற்றிய கருத்துகள்.

நடுநிலைமை இயலாத ஒன்று என்பதற்கான வாதங்கள்


1. நடுநிலை நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுகிறது.

2. நடுநிலைமை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுகிறது,

3. நன்மை தீமை நல்லது கெட்டது என்பது பற்றிய கருத்துக்கள் மாறுபடுகிறது.

4. நடுநிலை என்பது மாயை. எப்பொழுதுமே எதோ ஒரு பக்கம் சாய்ந்தே ஆக வேண்டி இருக்கிறது.

5. நடுநிலைமை நோக்கி செல்வதால் வளர்ச்சி குறையும். பல மாறுபட்ட செயல்பாடுகள், கோணங்கள், பார்வைகள் இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.

சத்திய சோதனை என்பதன் அடிப்படை..
.
நாம் எது நன்று என்று நினைக்கிறோமோ அதன்படியான சோதனைக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டு தெளிவது, ஒரு முறை இருமுறை அல்ல.. இயன்ற வரை... ஒவ்வொரு பொழுதும்

நம் மனம் நினைப்பது சரிதானா என்பதை எப்படி அறிவது என்பதற்கு வழிகாட்டி அதுதான்.

நான் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது!
ஆனால் என் இதயத்திற்கும் கடவுளுக்கும் விசுவாசமாக, நான் எனக்கு உண்மை எனத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

இது வெறும் உண்மை.

ஆனால் நடுவு நிலைமைக்கு உண்மை மட்டும் போதாது.. அது அடிக்கடி சுய பரிசோதனைக்கு ஆளாக்கப்படவேண்டும். கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு ஏற்ப புடமிடப் படவேண்டும். தன்னை நிலைப் படுத்திக் கொள்ளாத ஒருவரால் நடுநிலையான எதையும் தரவும் இயலாது. செய்யவும் இயலாது.

இது தன் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனதுடன் இணைகிறது. 

நடுநிலைமையின் இன்னொரு அங்கம் பொறுப்பேற்றல்..

சொல்லும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் அதன் விளைவுகள் ஆகியவற்றில் தன் பொறுப்பினை மறுக்காமல் முழுமையாய் முடித்தல்.

ஏற்கனவே பார்த்த மாதிரி, மிகச்சரியான முடிவினை எடுத்துச் சொல்லி நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமான ஒன்று. அப்படி இருக்க மனப்பூர்வமாய் சரியானது என்று ஒன்றை எண்ணி அதைச் சொல்லி செயல்படுத்தும் பொழுதினில் ஏற்படும் பக்கவிளைவுகள் எதிர்விளைவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பும் ஏற்று, பூரணமாய், மனப்பூர்வமாய் தவறுகளை ஒப்புக் கொள்வது மட்டுமல்லாமல் அவற்றை திருத்தவும் தன்னைத் திருத்திக் கொள்ளவும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள்.

சத்திய சோதனையின் மறுபக்கம் இது. எதுவும் தவறாகலாம். ஆனால் தவறாகி விட்டது வருந்துகிறேன் என்பதோடு மட்டுமல்லாமல் அந்தத் தவறை சரி செய்யவும், இழப்புகளை ஈடுகட்டவும் தன்னுடைய செயல்களை முழுமையாக்கவும் உழைத்தல் இதுவாகும்.

இதுவும் நடுநிலைமைக்கு ஒரு முக்கியத் தேவையெனக் கருதுகிறேன். 

ஒவ்வொரு நிலையில் இருப்பவரின் அங்கீகாரத் தேவைகளும் வெவ்வேறு.. வெறும் பாராட்டுப் பின்னூட்டம் மட்டும் இல்லை அங்கீகாரம்..

பாராட்டல்
பரிசளித்தல் 
பட்டமளித்தல்
பொறுப்பளித்தல்

இப்படி பலவேறு முறைகளில் அங்கீகாரம் தரப்படலாம்.

மாஸ்லோவின் கூற்றுடன் இந்த கட்டுரையை முடிக்கிறேன்..



 இது மாஸ்லோவின் கூற்று. ஒவ்வொரு நிலையிலும் மனிதனின் தேவைகள் வேறு படுகின்றன.
முதலில் உணவு, உறக்கும் பிறகு பாதுகாப்பு, பிறகு பணம், பிறகு சமூக அந்தஸ்து என்று.

நாம் நல்ல அங்கீகாரங்களை பெற்று ஒரு நிலைக்கு வந்த பிறகு, நமக்கு மேலும் பதவி உயர்வோ, பெரிய மேசை, தனி அறை, பெரிய மகிழ்வுந்து என்றெல்லாம் தேவையில்லாமல் பணத்தின் அருமை மட்டும் உணர்ந்து, என்னை நீ இதே பதவியில் வைத்துக் கொள்ள, ஆனால் சம்பளம் மட்டும் ஏற்று என்று நாம் நிறுவனத்தின் நிர்வாகத்திடம் கூறலாம்.

அல்லது சமூகத்தில், நாம் பழகும் நபர்கள் பெரிய பெரிய பதவிகளை கொண்டிருந்தால் எனக்கு பெரிய பதவி கொடு, இதே சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை என்று கூறலாம்.

நம்முடைய அடிப்படை தேவைகள் நிறைவேறுகிறதா. அப்படி நிறைவேறிவிட்டால் என்ன கேட்பது என்பது அந்த தனிநபரை பொறுத்தது.


ஆக அங்கீகாரத் தாகம் எல்லோருக்கும் இருந்தாலும் அதை எதனால் தணிப்பது என்பது ஒன்று,

அங்கீகாரம் என்பது என்ன என்று தாகம் கொண்டவர்கள் புரிந்து கொண்டு அடுத்தவர் மேல் மனவருத்தம் கொள்ளாமல் இருப்பது இன்னொன்று.

இவை அனைத்தும் புரிந்தால் எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் இடையில் உண்டாகும் பந்தம் பிரிக்க முடியாதது.

3 comments:

  1. இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

    ReplyDelete
  2. என்ன ஒரே சைவமா இருக்கே...

    தலைக்குழம்பு, ஆட்டுக்கால் பாயா, சிக்கன் 65 வாழ்த்தெல்லாம் இல்லையா?

    ReplyDelete
  3. எத்தனை அருமையான கட்டுரை ஐயா. இன்று முழுவதும் உங்கள் பக்கங்களைத்தான் படித்துக்கொண்டிருந்தேன். தேவையான பகுதிகளை பயன்படுத்த அனுமதி வேண்டும்.

    ReplyDelete