Thursday, July 31, 2014

முடிச்சவிழ்த்தல்!!!



சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து சின்மயமாம் நின்னடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே
 



தாயுமானவர்




சிந்தையை அவிழ்பது எப்படி? இப்படிக் கேட்டால் எதையாவது சொல்லலாம்.


சிந்தையில் முடிச்சுகள் இருக்கிறதா என்ன? எந்த வகை முடிச்சுகள் உள்ளன என்று எண்ணிப்பார்த்தால்.


சுயநலம் என்ற பெரிய சிக்கலான முதல் முடிச்சு உள்ளது, அவிழ்ப்பது சிக்கலானது.


ஆணவம் என்ற பெரிய சிக்கலான முடிச்சு உள்ளது, அதை அவிழ்ப்பதும் சிக்கலாகவே இருக்கிறது.


ஆசை என்ற முடிச்சு உள்ளது, பொறாமை என்ற முடிச்சு உள்ளது. இப்படிப் பலப்பல முடிச்சுகள் நம் சிந்தையிலே உள்ளன.


எதைச் சிந்தித்தாலும் அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கண்டு அதை மனதிலேயே வைத்துக் கொள்வது கூட ஒரு முடிச்சு தான்.


இப்படிச் சிந்தனையைக் கட்டும் ஒவ்வொரு முடிச்சையும் சிந்தித்து சிந்தித்து அவிழ்க்க வேண்டும்.


அப்பொழுதுதான் சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து வரும்.


இப்படிச் சிந்தையை அவிழ்ப்பதால் என்ன கிடைக்கிறது?


ஞானம் கிடைக்கிறது.


எதையும் விருப்பு வெறுப்பின்றி எந்த அவசர முடிவிற்கும் வராமல் பொறுமையாய் அலசக் கிடைப்பது அறிவு. ஞானம்.


அப்படியே சிந்தையை அவிழ்த்து அவிழ்த்து சிவனடியை ஆராய்ந்து ஆராய்ந்து ஞானமயமானது அவன் அடி என அறிந்து அஞ்ஞானத்தை அறிந்து அஞ்ஞானத்தை அரிந்து அவனடியை அடைவோர்க்கு மாத்திரமே ஞானனந்த மயமான பேரின்பம் பயக்கும் என்கிறார் தாயுமானவர்..


அவனடியை அடைய என்னென்ன வழி உண்டு?


ஞான வழி, பக்தி வழி, கர்ம வழி..


மற்ற வழிகளில் அடைவோருக்கு அந்தப் பேரின்பம் கிட்டாதா?


ஞானம் என்பதே இவ்வழிகளை அறியவே உதவுகிறது அல்லவா?


இதில் எதில் ஈடுபட்டாலும் சிந்தை முடக்கப்படாமல் சுதந்திரமடைகிறது அல்லவா?


நம் சிந்தைக்குண்டாகும் கட்டுகள் அவிழ்க்கப்படுவது ஞானத்தினால் மட்டுமல்ல. அப்படி இருந்திருந்தால் சின்மயத்தால் சிந்தை அவிழ்ந்து என்று சொல்லி இருப்பார் தாயுமானவர்.


சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து சின்மயமாம் நின்னடிக்கே என்று சொல்வதினால் மூவழிகளும் ஞானம் அருளும் என்பதே சரி..


இன்பம் எது என்பதை அதுவரை நாம் அறிவதில்லை..


அதனால் நம் அனுபவிப்பதற்கு நாம் கொடுத்த பேர் - இன்பம்


ஞானம் அடைந்த பின்னேதான் இன்ப நிலை.. அதாவது நிலைத்த இன்பம் வாய்க்கும்.

காண்! காண்!! காண்!!!




காட்சிக் கெளியான்காண் கண்டாலுங் காணான்காண்

மாட்சிமனம் வைத்தார்க்கு மாணிக்கத் துள்ளொளிகாண்




 பட்டினத்தார்



காட்சிக்கெளியவன்.

பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இறைவனை எதிலும் காணலாம். இறைவன் என்றால் எத்தனையோ கற்பனை வடிவங்கள் மனதில் இருக்கலாம். அப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று. ஆனால் அப்படியெல்லாம் அவன் தன்னை பிரித்து வைத்துக் கொள்வதில்லை. நாம் சாதாரணமாக காணும் வடிவங்களிலேயே அவன் இருக்கிறான்.


கண்டாலும் காணான்

அப்படி இறைவன் எல்லாவற்றிலும் இருந்தாலும் இன்னும் இறைவனைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். பார்ப்பதில்லை. ஒன்றிரண்டு வடிவங்களில் இறைவனை நாம் கண்டாலும் இன்னும் எத்தனையோ இடங்களில் உள்ள இறைவன் காட்சிக்கு எட்டாதவனாகவே இருக்கிறான்.


மாட்சி மனம் வைத்தார்க்கு..

இந்த அவனின் பெருமையை மனதில் உணர்ந்தவர்களுக்கு...


மாணிக்கத்துள்ளொளி

மாணிக்கத்தின் உள்ளே ஒளி கிடையாது. வெளியில் இருந்து புகும் ஒளியே மாணிக்கத்தால் முழு அக எதிரொளியாக மாணிக்கத்தின் உள் ஒளியாகத் தெரிகிறது. அப்படி இறைவனின் மாட்சியை மனதில் பெற்று முழு அகப் பிரதிபலிப்புக்கு உண்டாக்க மனம் இறைத்தன்மையில் ஒளிரும்.

காண், காண், காண் என மும்முறை சொல்வதில் ஒரு பொருள் உண்டு.




பார், உணர், புரிந்துகொள்....

ரிலெடிவிடி தியரி!




சொல்லால் மனதால் தொடராச்சம் பூரணத்தில்
நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ ?



தாயுமானவர்




பூரணம் என்றால் முழுமை. சம்பூரணம் என்றால் என்றால் நிறைவான முழுமை. பூரண நிலவை சம்பூர்ண நிலவு என்று ஏன் சொல்வதில்லை? காரணம் அதில் கறை இருக்கில்லையா? அதனால்தான் அதைச் சம்பூர்ண நிலவு என்று சொல்வது இல்லை.


அந்தச் சம்பூர்ணம் எப்படிப் பட்டச் சம்பூரணம்.. அதைச் சொல்லால் முழுமையாகச் சொல்ல முடியாது. மனதால் முழுதால் அறிந்து கொள்ளவும் முடியாது..


இவ்வளவுதான் என்று வரையறை செய்ய முடியாத அந்தச் சம்பூர்ணத்தை சொல்லாலோ அல்லது கற்பனையாலோ எட்ட முடிவதில்லை.


அதில் எப்படி நிற்க வேண்டும் என்று கேட்கிறார், நிலை நிற்பதென்னாளோ என்கிறார், நில்லா நிலையாய் நிலை நிற்க வேண்டுமாம்.


இந்தப் பேரண்டத்தில் எல்லாமே நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கின்றன. அப்படி சுழன்று கொண்டே இருக்கும் பேரண்டத்தில் நிலையாய் இருக்கணும் என்றால் நிற்கவே கூடாது.


நிலையாய் நின்றால் நிலை தவறிவிடும் என்பதுதான் இந்தப் பேரண்டத்தில் உண்மை. அண்டச் சுழற்சியின் வேகத்திற்கேற்ப நகர்ந்து கொண்டே இருப்பதுதான் நிலையாய் இருக்க ஒரே வழி. ஐன்ஸ்டீன் சொன்ன ரிலேடிவிட்டி தியரியை தாயுமானவர் எவ்வளவு அழகாக நான்கே வார்த்தைகளில் நறுக்கென்று சொல்லி விட்டார்.


நில்லா நிலையாய் நிலை நிற்பதென்னாளோ..


தாயுமானவனும் அப்படித்தான். ஆடிக் கொண்டே இருக்கும் நடராஜன், அந்த ஆட்டத்தில் அவனுள் நிலைநிற்க நாமும் நில்லாமல் இருக்கவேண்டியதாக இருக்கிறது..


சொல்லாலும் கற்பனையினாலும் அளக்க முடியா அந்தக் குறையில்லா பூரணத்தில் நிற்க அவன் ஆட்டுவிப்புக்கெல்லாம் ஆட வேண்டியதாக இருக்கிறது.

தாயிடமே அம்மா விளையாட்டு...!!




கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே



தாயுமானவர்



இறைவனை தாய்க்கு மேலாக கருதி உருகிய பக்தர்கள் பலர் உண்டு


" தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான் "

" நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே "..
.
" பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து " .....


தாயுமானவர் அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார்..

அவர் வெறும் தாய் எனப் பாடவில்லை.

சேதா என்கிறார். அஃறிணையோ என்ற அசூயை இன்றி இருக்கும் ஒரே பட்டம் அம்மா.

அதிலும் இந்த ஆ எப்படிப் பட்ட ஆ? சேதா. சிறப்பான ஆ.

ஒரு மனிதத் தாய் தன் பிள்ளைக்குக் கொடுக்க ஊறும் அன்புப் பாலை அவ்வளவு எளிதில் இன்னொரு குழந்தையிடம் பகிர்ந்து கொள்ள மாட்டாள்.

ஆனால் இந்த சிறந்த தாயான பசு இருக்கிறதே, தன் மக்வுக்கும் கொடுத்து மேலும் மேலும் சுரந்து பலப்பல வளர்ந்த வளரும் குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறது.

சிவன் தன் பக்தனுக்கு மட்டுமல்ல.. பசி கொண்ட அனைவருக்குமே ஞானப்பால் அருளுகிறான். என் பிள்ளை உன் பிள்ளை என்று பேதமே பார்ப்பதில்லை.

மற்ற அடியாளர்களுக்குத் தோன்றாத இந்த உயர் பொருள் தாயுமானவனுக்கு எப்படித் தோன்றியது.. தாயும் ஆனவனை அடிபணிபவனுக்கு தாய்மையின் அருமை புரியாமல் இருக்குமா?

குழந்தைகளில் மூன்று வகை உண்டு..

1. சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்து ஆட்டம் காட்டி உண்பவர்கள்.

2. அம்மா பசிக்குது என்று தாயிடம் கேட்டு விரும்பி உண்ணுபவர்கள்.

3. அம்மா எல்லோருக்கும் கொடுத்தாதான் நான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்கள். அக்காவுக்கு ஒரு கவளம். அண்ணனுக்கு ஒரு கவளம், அத்தைக்கு ஒரு கவளம் என எல்லோருக்கும் கொடுத்து அம்மா ஊட்டுவாள்

தாயுமானவனின் அடியார் தாயும் ஆவதில் வியப்பு இருக்க முடியுமா? பசுவுக்கு கன்று பால் சுரந்தால் அது இன்னும் பல மனிதருக்கும் போய்ச் சேருமல்லவா? அப்படிப் பட்டக் கருணையைக் கொடு.. பசித்தோர் எல்லோருக்கும் பால் கொடு என்று உள்ளார வேண்டுவதில் அர்த்தமில்லாமல் போகுமா?



தாயிடமே அம்மா விளையாட்டு...

சீதனம்!

சீதனங்கோடு புயங்கைக் கொண்டார்தம் திருமருக
சீதனங்கோடு முடியாளர் சேய் தனக்கு ஏதுளதோ
சீதனங்கோடு இனிதரும் என்பார் தொழும் தேவிபெரும்
சீதனங்கோடு கொடிவேள் மயூரம் சிலையரசே

                                                                                     அருணகிரிநாதர்



சீதனம் - வெறும் ச்சீ தனம் அல்ல..

அதில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

தாய்மாமனின் அன்பு
பெற்றவர்களின் பாசம்
உடையவரின் பெருமை, உயர்வு

கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் இவை பொருந்தும். இனி அவள் புதிய பெற்றவர்கள், புதிய மாமனைப் பெறப்போகிறாள்.

அவனின் பெற்றவர்கள் அவளுக்கு மாமன். அவனின் மாமன் அவளைப் பெற்றவளாகிறான். அதே போல அவளின் பெற்றவர்கள் அவனுக்கு மாமன். அவளின் மாமன் அவனைப் பெற்றவளாகிறான்.

ஒரு மருமகள் தான் கொண்டு வருகிற சீதனத்தில் இத்தனையும் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

ஏன் தாய்மாமன்? சிற்றப்பன் இல்லையா என்று கேட்கலாம். ஆனால் சிற்றப்பன் அப்பனில் அடக்கம்.

அம்மா, அத்தை? சீதனம் கொடுப்பதில் அவர்கள் தங்கள் துணைவர்களுடன் இணைந்து விடுகிறார்கள்.

திருமணத்தில் நலங்கு வைக்கும் உரிமை தாய்மாமனுக்கும், தாரை வார்க்கும் உரிமை தந்தைக்கும் இருப்பதை நுட்பமாக கவனித்தால் அறியலாம்.

சீதங்கோடு புயங்கைக் கொண்டார்தம் திருமருக
சீதங்கோடு முடியாளர் சேய் தனக்கு ஏதுளதோ
சீதங்கோடு இனிதரும் என்பார் தொழும் தேவிபெரும்
சீதங்கோடு கொடிவேள் மயூரம் சிலையரசே



முருகன், யாருக்கு மருகன்? அவரிடம் என்ன இருக்கிறது?

திருமால்.. சீ (ஸ்ரீ) எனப்படும் திருமகள் வசிக்கும் தளம் ஆகிய தாமரை மற்றும் கோடு எனப்படும் சங்கை அவர் தம் கையில் ஏந்தி புஜத்தின் மீது வைத்து ஓங்காரத்தை வெளிப்படுத்த தயாராகவே இருக்கிறார்.

அவனுடைய அப்பனாகிய சிவனோ, சீதளம் எனப்படும் குளிர்ச்சி பொருந்திய கோடு எனப்படும் பிறைச் சந்திரனை தன் முடியில் முடிந்திருகின்றான்..


அப்படிப்பட்ட முருகனுக்கு பெண்தர அவனிடம் என்ன செல்வம் உள்ளது என்று கேட்கலாகுமா?

ச்சீ என்று வெறுக்கப்படும் அறுவெறுக்கத்தக்க செல்வம்  கோடு எனப்படும் குற்றம் மற்றும் துன்பத்தைத் தரும் என்று சொல்லும் பற்றற்ற தளத்தில் அதாவது நிலையில் உள்ளோர் வணங்கும் வள்ளி நாயகி கொண்டு வந்த பெரும் சீதனங்கள் என்ன தெரியுமா?

சீதளம் - ஊது கொம்பு.
கோடு - மலை.. அவள் குறிஞ்சி நிலத்தவள் அல்லவா. மலைகள் எல்லாம் அவர்களுக்கே உரிமை உடைத்து அல்லவா? குன்று தோறாடும் குமரனாக்கினாள் அவனை.

கொடி- சேவல்கள்.. முருகனுக்கு உரித்தான கொடியில் அடையாளமாகிய சேவல்

வேன் - வேல். முருகனுக்கு அவன் அன்னை அளித்த சக்தி வேல்.

மாயூரம் - அவனது வாகனமாகிய மயில்கள்..

ஏன் இப்படிப் பட்ட சீதனங்கள்? இந்தச் சீதனங்கள் எதனால் சிறப்புடையவை ஆகின்றன?

ஊதுகொம்புகளின் ஓங்கார ஓசை உலகத்தோர் எல்லோருக்கும் பிரணவம் உணர்த்தும்.

முருகன் எங்கே எனத் தேடும் அடியார்களுக்குக் குன்று தோறும் குமரன் இருப்பான்.

அவன் கொடிகள் பெருகுவதால் உலகெங்கும் அவன் அருள் ஆட்சி என உற்சாகம் பொங்கும்

வேல்கள்.. அவன் பக்தர்களோ அதிகம். அவர்களின் துன்பங்களும் அனேகம். அத்தனை துன்பங்களைப் போக்க அவனுக்கு ஒரு வேல் போதுமா என்ன?

கோடானு கோடி பக்தர்களைக் காக்க அவன் விரைந்து செல்ல வேண்டி இருக்கிறது. முருகன் பலராய் மாறலாம். வாகனம்? அதனாலேயே பலப்பல மயில்கள்.

சீதனம் என்பதை எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்.

தான் வாழப்போகும் வீட்டில் அதில் வாழும் உறுப்பினர்களின் நன்மைக்கு எது எல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் சீதனமாகக் கொண்டு வருகிறாள் மருமகள்.

அந்த வீட்டில் காலெடுத்து வைக்கும் முன்னரே அந்தக் குடும்பத்தின் தாயாக அவள் மாறிவிடுகிறாள்.

ஒவ்வொரு மணமகனும் - மணமகளும் அத்தனை உறவுகளும் மனதில் கொள்ள வேண்டிய பக்குவம் இது..

இதை உணர்ந்து இல் வளர்த்து அறம் வளர்த்து வாழ்வது நன்று.

Thursday, July 24, 2014

வெட்டவெளித் தேறல்!



வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ?

            ----- பட்டினத்தார் அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு


எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தாலே பாதித் தேடல் முடிந்த மாதிரிதான்.

இன்னதுதான் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடுவோரே நம்மில் பலர்.

என்ன தேடுகிறோம்? எதற்குத் தேடுகிறோம் என்றறிந்தால் கிட்டினால் கைக்கொள்வது எளிது..

என்ன தேடுகிறோம் என்று தெரியாவிட்டால் கிட்டினாலும் கிட்டாது.
எதற்குத் தேடுகிறோம் என்று தெரியாவிட்டால் கிட்டினாலும் பயனில்லை.

இங்கே பட்டினத்தார் தன்னுடைய அருட்புலம்பலில் முதலனிடம் முறையோட்டில் கன்னிவன நாதன் கால்பற்றி இதயம் கன்னி கேட்கிறார்.

வெட்டவெளி வேண்டும்.. தேறலும் வேண்டும்.

வெட்டவெளி எதற்கு - வெந்துயரைத் தீர்க்க
தேறல் எதற்கு - சிந்தையைத் தீர்க்க

மனதை வேகவைக்கும் துயர் யாருக்கு வந்தது? பட்டினத்தாருக்கா? ஆம் எனில் எப்படி?

வெட்டவெளி என்பது என்ன?

உயர் மரங்கள் இல்லாத தொடுவானம் முதல் அடிவானம் வரை எல்லாம் பார்க்க இயலும் ஒன்று.. மனம் அப்படி வெட்ட வெளியாக இருக்க வேண்டும் என்கிறார்.

அப்படி இருந்தால் வெந்துயர் எப்படித் தீரும்?

அதைத்தானே தாயுமானவர் சொல்லி இருக்கிறார்


பொன்னைக் காய்ச்சி உருக்கி சுத்தமான பொற்கட்டி செய்வது போல..
சோதனைகளைத் தந்து நம்மையெல்லாம் காய்ச்சுகிறான் இறைவன்.


மனம் வெட்டவெளியாக இருந்தால் சோதனைகளின் ஆதியும் தெரியும்
அந்தமும் புரியும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

சோதனைகளின் மூலம் தெரிகிறது. அதன் முடிவும் தெரிகிறது என்றால் மனம் துயரில் உழல்வதில்லை. நின்மலமாய் இருக்கிறது.

பிறவாமை எப்படிக் கிடைக்குமென தாயுமானவர் சொன்னார். அதை எப்படி அடையலாம் எனப் பட்டினத்தார் காட்டுகிறார்.

வெட்ட்வெளியாய் மனம் வேண்டும்.. அப்புறம் அதென்ன சிந்தையைத் தீர்க்கும் தேறல்?

தேறல் என்பது ஒரு மதுவகை. தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் என்கிறது புறநானூறு...

மனமாகிய வெட்டவெளியில் புதைக்கப்பட்டத் தேறல்...

தேறல் என்ற மது சிந்தையைத் தீர்க்குமாம்.

துயர் என்பது துன்பம். சிந்தை என்பது கவலை.

துன்பம் வெளியில் இருந்து வருகிறது..
கவலை உள்ளிருந்து வருகிறது.

மனம் வெட்டவெளியாய் இருந்தால் துன்பத்தின் எல்லைகள் தெரிகிறது. அதன் பிரம்மாண்டம் குறைந்து எல்லைக்குள் அடங்கிப் போகிறது.. அதனால் அதன் கடுமை குறைவாய்த் தோன்ற ஆரம்பிக்கிறது. வெம்மை குறைகிறது.

உள்ளத்தில் உண்டாகும் கவலைகளைத் தீர்ப்பது அதே உள்ளமெனும் வெளியில் புதைக்கப்பட்டத் தேறலாகிய ஞானம்.

மது எப்படி நாட்பட நாட்பட வீரியம் கூட்டிக்கொள்கிறதோ அப்படி ஞானம் அனுபவப்பட அனுபவப்பட வீரியம் கூடுகிறது.

அந்த ஞானம் வெளிப்பட்டால் கவலை தீர்ந்துவிடும்.

புத்தர் அப்படிப் பட்டத் தேறல் கண்டவர்களில் ஒருவர்.

எதைத் தேடுகிறார் எதற்குத் தேடுகிறார் என்று ஏன் அவர் சொல்ல வேண்டும்..?

நம்மையும் தேடச் சொல்லத்தான்.

தேடுவோமா?

சுட்ட பொன்!

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்
பேச்சற் றவரே பிறவார் பராபரமே


தாயுமானவர்



சுட்டால் பொன் சிவக்கும் உண்மைதான். ஆனால் அடுத்து அவர் கொடுத்திருக்கும் உவமேயத்தில் குழப்பம் வரலாம்.

அதைப் புரிந்து கொள்ள அடுத்து அவர் சொல்லும் வார்த்தையைக் கவனிக்க வேண்டியது இருக்கிறது..

பிறவார் - பிறக்கவே மாட்டார்கள்.

யார் பிறக்க மாட்டார்கள்?  பேச்சற்றவர்கள்.

இதில் உள்ள பொற்கட்டி எது? காச்சுதல் எது?

காச்சுதல் - பேசுதல் ????
பொற்கட்டி - யோசிக்கப்படவேண்டும்

பொற்கட்டி காய்ச்சக் காய்ச்ச ஒளிபெறுகிறது..

அதே போல் சிவனைப் பற்றிப் பேசப் பேச ஒளிபெறுவது அவனது அடியார்களே.

நிர்மலம் என்றால் அப்பழுக்கற்ற என்று பொருள். மனதில் அப்பழுக்கின்றி மோனத்தில் ஆழ்ந்தவர்கள் பிறவாமையைப் பெற இயலும்.. என்கிறாரோ?

அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

ஆனால் உவமையையும் உவமேயத்தையும் இணைக்கும் ஒன்று விடுபட்டிருக்கிறது.

காச்சுதல்.

அது என்ன? மற்றவர்கள் நம்மைப் பற்றிப் பேசும் பேச்சுகளா? நமக்கு வரும் துன்பங்களா?

ஆமாம் அனைத்துமே காய்ச்சுதல்தான்.

திருவிளையாடலின் அடிப்படையே உரியவருக்கு உரிய இடம் தந்தான் ஈசன் என்று உலகிற்கு அறிவிக்கத்தானே? அவனின் அந்த விளையாடல்கள் அன்பருக்கன்றி வேறு யாருக்கும் கிட்டியதில்லையே.

காய்ச்சுதல் என்று சொன்னது மிக அழகான உபயோகம். சுடுதல் என்பது குத்திக் காட்டுதல் தண்டித்தல் என்று ஆகலாம். ஆனால் காய்ச்சுதல் என்பது பக்குவப் படுத்தல் என்று பொருள்தரும். காய்ச்சுவதால் எதுவும் அழிந்து போவதில்லை. தீமைகளைத் தவிர.

ஆக..

பிறவாமைக்கு அழகாக வழி சொல்லுகிறார் தாயுமானவர் இந்தப் பதிகத்தில்.

பொன்னைக் காய்ச்சி உருக்கி சுத்தமான பொற்கட்டி செய்வது போல, சோதனைகளைத் தந்து நம்மையெல்லாம் காய்ச்சுகிறான் இறைவன்.

அதில் குறையுள்ள அசுத்தங்கள் எல்லாம் விலக... அப்பழுக்கற்ற பொன் வெளிப்படுவது போல..

இறைவனை, பகைவனை, உறவினரை, இயற்கையை இப்படி எதையுமே குறைசொல்லாமல்

அனைத்தையும் தாங்கி எந்த வித மாசும் இல்லாமல் அமைதியாய் இருப்பவர்கள் பிறவாமை எய்துவார்கள். சுட்ட பொன்னாய் ஜொலிப்பார்கள்.

இதில் தாயுமானவர் சொல்லும் தத்துவம்.. என்ன துன்பம் வந்தாலும் யாரையும் பழிக்காதீர்கள். நிர்மலமாய் இருங்கள். அமைதியோடு துன்பங்களை எதிர் கொள்ளுங்கள். அவை உங்களை புடம்போடும்.

எல்லாம் அவன் விளையாட்டே என்றறிந்தால் கோபமும் வருமா என்ன?


பின்குறிப்பு : நானெல்லாம் பேசற பேச்சுக்கு இன்னும் எத்தனைக் கோடிப் பிறவிகள் இருக்கோ?

தேனிதயத் தலைவன்




எத்திக்கும் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேனே பராபரமே


தாயுமானவர்



எத்திக்கும் தானானவன் எப்படி முதலில் என் இதயமாகாமல் போனான் என்று முதலில் கேள்வி எழுந்து விடுகிறது..

என் இதயத்தில் தான் ஊறி எத்திக்கும் தானாகி என்று வரிசைப் படுத்தாமல் எத்திக்கும் தானாகி என்று வரிசைப்படுத்திய அழகில் புதைந்து இருக்கிறது ஞானம் எப்படி விளையுமென்று..

இறைவனைத் தேடுதல் புறத்தே தொடங்கி அகத்தே முடிகிறது..


தேடலுக்காகத்தான்

நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.

வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..




சிவனே உன் பண்புகளை எங்கெங்கெல்லாம் பதித்து வைத்திருக்கிறாய்..


உனை மறக்கும் பாவத்தில் இருந்து எனைத் தடுத்தாட்கொள்ள...!!!


இவை சொல்லும் சேதிகளும் இக்கண்ணி சொல்லும் சேதியும் ஒன்றுதானோ?

இறைப்பண்புகளை ஒவ்வொன்றாய் புறத்தே அறியத் தொடங்குகிறோம். போகப் போக எங்கும் இறைவன் எங்கும் இறைவன்..

மெல்ல இதயத்தில் ஆனந்தம் சுரக்கத் தொடங்குகிறது.. பெருகுகிறது இதயம் நிறைகிறது.

நம்முள் இறைவன் வியாபித்து இருப்பதை அப்பொழுது மாத்திரமே கண்டு கொள்ள முடிகிறது..

இறை அனுபவம் எப்படி உண்டாகிறது என்பதை இங்கே அனுபவித்துப் பாடி இருக்கிறார் தாயுமானவர்.

இறைவன் கல்லில் இருக்கிறார் என்கிறது ஆரம்ப வழிபாட்டு முறைகள்.

மெல்ல மெல்ல இறைத்தன்மை எங்கிங்கு இருக்கிறது என்ற ஞானம் உண்டாகிறது.

அதன் பின் எங்கெங்கு காணினும் இறைவனடா என்று தோன்றுகிறது..

இதயத்தில் ஆனந்தம் பொங்கத் தொடங்குகிறது. வெறுப்பு, கோபம், கேலி, இழிவு போன்ற பல குணங்கள் ஒழியத்தொடங்குகின்றன.

தேனில் குழைத்தால் எல்லாச் சுவையும் மறைந்து தேனின் சுவை மட்டுமே மேலோங்கி நிற்பது போல இறை ஆனந்தம் நெஞ்சை நிறைக்க ஆரம்பிக்கிறது.

அத்தனைக் குணங்களும் இறையானந்தத் தேன்சுவை பெற ஆரம்பித்து விடுகின்றன.

உண்மை ஞானம் அறிந்து கொள்ளும் சூத்திரமும் இதுதான். போலிகளை அடையாளம் காணும் வழியும் இதுதான்.

குணங்களைக் காண்பதே இறைவனைக் காண முதல் படியாம். (குணங்கள் என்பவை நற்பண்புகள் என்று பொருள்படும்..)

குறைகளை மறந்துக் குணங்களைக் காணக்காண இறைவன் மெல்ல மெல்ல தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். குறைகளிலும் குணங்கள் காணும் பக்குவம் கிடைக்கிறது.

இதனால் மனம் ஆனந்த நிலைக்குச் செல்கிறது. எல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம் தோன்றுகிறது. அப்பக்குவம் இறைவனை நம் உள்ளத்திலே வெளிப்படுத்துகிறது..

தியானத்திற்கு மிக உகந்தக் கண்ணி இது. இப்போதைக்கு எனக்கும் தேவையான தியானம் இது.!!!

Tuesday, July 22, 2014

முற்றுப் புள்ளி

ஆச்சர்யக்குறி (!)
குனிந்து பார்த்தது (?)
கால்களின் அடியில்
முற்றுப்புள்ளி (.)


--------------------------------------------------------------------------------------------------


இக்கவிதையில் நான் ஒளிய வைத்திருக்கும் கருத்தை விளக்கி விடுகிறேன்.

ஆச்சர்யக்குறி என்பது கர்வம் என்ற உணர்வைக் குறிக்கும். கர்வம் கொண்டவன் தலை உயர்த்தி நிற்கிறான்.

கேள்விக்குறியோ தேடலைக் குறிக்கும். தேடல் உள்ளவன் குனிந்து தேடுகிறான்.

முடிவு என்னும் முற்றுப் புள்ளி, ஆச்சர்யக் குறிக்கு கீழேயும், கேள்விக்குறிக்கு கீழேயும் இருக்கத்தான் செய்கிறது. அனைவரின் முடிவும் அவரவர் காலடிக்குக் கீழேயே இருக்கிறது..

தேடலில் இருக்கும், குனிய யோசிக்காத மனிதனுக்கு அந்த முடிவு தெரிகிறது. ஆனால் கர்வத்தில் தலை உயர்த்தி நிற்கும் மனிதனுக்கு தன் முடிவு தன் கால்களுக்கு அடியிலே இருப்பது தெரிவதில்லை.

முற்றுப் புள்ளி என்பதை மரணம், இறைவன் என்று எப்படி உருவகப்படுத்தினாலும் இந்தக் கவிதை பொருந்தும்.

இன்னொரு பார்வையில் சொல்லப் போனால்

உணர்வுகள் தேடினால் அதனிலேயே கிட்டும் தேடப்படும் பொருள்

தேடலும் தெய்வமும்!



இறைவன் ஆடும்
கண்ணா மூச்சி ஆட்டத்தில்
கண்கள் கட்டப்பட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன் அவனை

கையோ காலோ
சட்டையின் நுனியோ
எதையாவது ஒன்றைத் தொட்டு
அவனை அவுட் ஆக்க (வெளிப்படுத்த)
தேடிக் கொண்டிருக்கிறேன்..

ஐம்புலனும் கூர்மையாய்
அவனையே நோக்கி
ஆறாம் புலனில்
தேடிக் கொண்டிருக்கின்றன..

தேடிக் கொண்டிருப்பது தெரியும் மட்டும்
ஆட்டம் தெரிந்து கொண்டே இருந்தது..

சோர்ந்து போகும் பொழுது
அவன் ஓசையோ,
மணமோ அல்லது
கடந்து போகையில் உண்டாகும்
காற்றின் ஸ்பரிசமோ
அவன் அருகில்தான் இருக்கிறான்
 என்பதை உணர்த்தி
தேடலைத் தொடரச் சொல்லும்..

அந்த ஒரு துளிக் கணத்தில்
மனம் சோர்ந்து உட்கார்ந்த பொழுது
மூச்சிழுத்தேன்.. விட்டேன்
அவனின் மணம் சுவாசிக்கப் பட்டது

எதோ ஒரு புலனின்
பொத்தான் அழுத்தப்பட்டு
எங்கெங்கும் பிரகாசம் பரவியது..
மூச்சினால் அவனைத் தொட்டு விட்டேனென
மெல்லப் புரியத் தொடங்கியது..

எங்கும் இருப்பவனைத் தொட
எங்கேயும் செல்ல வேண்டாமே எனப்
புரியத் தொடங்கியது..

புலன்களைக் கூராக்கினேன்

சத்தியமா இது சாத்தியமா
கேள்விவியும் கேட்டது..

பதில் தேட அலையத் தோன்றவில்லை.
ஏனென்றால் புரிய ஆரம்பித்தது.
இரண்டும் அவனே.. !!

தேடல்!




தேடலின் தொடக்கமும்
தேடலின் எரிபொருளும்
தேடலின் வழித்துணையும்
தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன..

ஏக்கத்திலிருந்து பல பாதைகள் தொடங்குகின்றன..
ஒவ்வொரு பாதையின் முடிவிலும்
இறைவன் காத்திருக்கிறான்..

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

ஏக்கத்தின் தாக்கம் தீருதல்
தேடல்களில் மாத்திரமே


தேடலுக்காகத்தான்
நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.

வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..

யதார்த்தங்கள் என்பவைகள்
எதோ அர்த்தங்கள் ஆகும்.

அந்த அர்த்தங்கள் புரியாமல்
இருக்கும் வரை
அவை யதார்த்தங்களாகவே
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சித்தமும் யதார்த்தமும்
என்றுமே
யுத்தம் கொண்டதில்லை..

சித்தம்தான் யதார்த்தங்களாக
வேடம் பூண்டு வந்து கொண்டிருக்கிறது..

கழித்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுதல்

கூட்டிக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

பெருக்கிக் கொண்டே போய்
கட்வுளைத் தேடுவது

வகுத்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

எல்லாம் தெரிந்துதான்
பயணம் தொடங்க வேண்டும்
என்பது இல்லை.
இது இலக்கறியாப் பயணம்
பாதையிலே
பயணத்தை அறிந்து கொள்கிற
விசித்திரப் பயணம்

எவ்வழியில் சென்றாலும்
பூஜ்யமாகவும்
முடிவிலியாகவும்
எல்லாப் பக்கங்களிலும்
இறைவன் இருக்கிறான்
காத்துக் கொண்டு!!!

உணர்வதும் உணர்த்துபவனும்!!!




உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி
இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே


தாயுமானவர்


இணக்குறுதல் - இணங்கிப் போதல்..

ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு அனுபவம் கிட்டுகிறது. அந்த அனுபவங்களை உண்டாக்கித் தருபவன் அவன்.

அந்த அனுபவங்களை ஆழ அலசி ஆராய்ந்தால் அவை அவனை உணர்த்தும்.

அவனை உணர்த்த வென்றே அனுபவங்களைக் கொடுக்கிறான் இறைவன்.

உணர்த்தும் என்பதற்கு இதைப் போல இரண்டு அர்த்தமும் ஒன்றாகப் பொருந்தி வருகிறது.



அதாவது உணர்த்துபவனும் அவனே. அதில் அவன் உணர்த்துவதும் அவனையே...


அனுபவங்கள் உண்மையில் என்ன உணர்த்துகின்றன என ஆழமாக நாம் யோசிப்பதில்லை. மேலோட்டமாக ஒரு கோட்பாட்டை நாம் எடுத்துக் கொள்கிறோம்.

உணர்த்துகின்ற பொருளை எடுத்துக் கொள்ளாமல் வெறும் உணர்ச்சிகளை மட்டுமே அனுபவங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். இது சந்தோசம் தரும், இது வலிதரும் என்று மேலோட்டமான அர்த்தங்களுக்கு இணங்கிப் போய், அனுபவம் அளிக்கும் வளமான செல்வத்தை விட்டு விட்டு ஏழைகளாகவே வாழ்கிறோம்.

உதாரணமாக பூச்சிக் கொல்லி கண்டு பிடித்தோம். பூச்சிகள் அழிந்தன. அதை மட்டும் எடுத்துக் கொண்டு பூச்சிக்கொல்லிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்தோம் அவை மனித ஆரோக்யத்தை பாதிக்க ஆரம்பித்தது.

உரமிட்டோம் பயிர் வளர்ந்தது. அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டோம். மண் வளமிழந்தது. இப்போது அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மண்ணையோ பயிர்களையோ புரிந்து கொள்ளும் எண்ணமே வராமல் நாம் இயற்கையிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஏழைகளாகத்தான் இருக்கிறோம்.

எதிலுமே மூழ்கி அலசி ஆராய வேண்டும். அப்பொழுது இயற்கையை புரிந்து கொள்ளலாம். இயற்கையை நாம் அறிந்து கொள்ளவே பல நிகழ்ச்சிகள் வாய்ப்பளிக்கின்றன. ஆனால் நாமோ அவற்றின் மூலம் பல மூட நம்பிக்கைகளை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறோம்.

மேலோட்டமான இந்த மூட நம்பிக்கைகளுக்கு இணங்கிப் போவதால் இயற்கை நிகழ்வுகளால் நாம் பெறக்கூடிய இயற்கை பற்றிய அறிவினைப் பெறாமல் இயற்கையை அறியாமல் இன்னும் இயற்கைக்குப் பயந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயற்கையை அறிதல் இறைவனை அறிவதற்கு ஒப்பானதாகும்.

இப்பொழுது பாடலின் பொருள் :

தாயும் ஆன எல்லாவற்றிலும் பரந்து கிடக்கும் பரமனே!! உன்னை உணர்த்துவதற்காகத்தான் நீ பல அனுபவங்களை ஏற்படுத்தித் தருகிறாய்.. உணர்த்துவது நீ, அவை உணர்த்துவது உன்னை. ஆனாலோ, இந்தப் பாழும் மதி, என்னவெல்லாம் தனக்கு அந்த அனுபவங்களில் மேலோட்டமாகத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்த்து கண்ணெதிரில் அறிவுச்செல்வம் இருந்தும் அறியாமல் கடந்து சென்று அறியாமை என்னும் ஏழைமையில் உழலுகிறதே, என்ன செய்ய?

உற்றவள்!!!




எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்


ஆண்டாள்


தமிழிலே உன், உந்தன் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.

உன் என்று சொல்லும்போது சாதாரணமாக இது உன்னுடையது என்று நாம் மட்டுமே சொல்கிறோம். உந்தன் - உன் - தன் என்று சொல்லும்பொழுது நீ என்னுடைய என்று நினைக்கிற உன்னுடைய பொருள் என்று அர்த்தப்படும்.



எற்றைக்கும் - என்றும், ஏழேழ் பிறவிக்கும்.

இனிப்பிறவாமை வேண்டும் என்பதே பலரின் வேண்டுதலாய் இருக்கும்.
சிலர் இனிப்பிறவாமை வேண்டும் அப்படிப் பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என வேண்டுவர்.

ஆனால் ஆண்டாளுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. உறுதியாகச் சொல்கிறாள்.

எத்தனை பிறவிகள் ஆனாலும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் நாங்களும் உன்னை மறக்க மாட்டோம். நீயும் எங்களை மறக்க மாட்டாய் என்பதைத் தான் உந்தன் என்ற ஒரு வார்த்தையில் சொல்லி விடுகிறார். தன்மேலும் நம்பிக்கை.. தன் ஆண்டவன் மீதும் நம்பிக்கை, இரண்டையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்.

நாங்கள் உங்களுக்கு உற்றவர்கள், அதாவது சாதாரண உறவினர் அல்ல, பொருத்தமான, உங்களுக்காகவே உள்ள உறவினர்கள்.. உங்களுக்கேற்ற உறவாக இருப்போம்..

யாரை நோக்கி இதைப் பாடுகிறாரோ அவரின் கல்யாண குணங்களுக்கு ஏற்றவராக இருப்போம் என்றல்லவா பொருள். காக்கும் கடவுள், அரிதுயில் கொண்டவன் அவன். அவனுக்கு ஏற்றவராய் இருக்க வேண்டுமானால் காக்கும் எண்ணம் தனக்குள் இருக்க வேண்டும் அல்லவா.

அதனால் அல்லவா தோழியரையும் உடனெழுப்பி கண்ணனை எழுப்பப் போகிறாள் ஆண்டாள். எனக்கு மட்டுமே இறைவன் என்ற சுயநலம் அவளிடம் இல்லை. பாவை நோம்பின் மகிமையைத் தோழியற்குக் கூறுகிறாள். அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள். அரவணைத்துச் செல்கிறாள். அப்படி இருப்பதால்தானோ என்னவோ அவருக்கு உற்றவள் தான் என்று உறுதியாக அவள் சொல்கிறாள் நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

பெருமாளின் மனைவியான திருவோ பாரபட்சம் பார்க்கிறாள். சிலருக்கு அருளுகிறாள், சிலரை அரட்டுகிறாள், சிலருக்கு எட்டவே மாட்டேன் என்கிறாள். ஆனால் ஆண்டாள் அப்படிப் பாரபட்சம் காட்டுவதில்லை, அதனாலேயே தானே காக்கும் கடவுளுக்கு உற்றவள் என அவள் எண்ணுவதில் தவறேதும் உளதோ?

ஆக ஏழேழு பிறவி எடுத்தாலும் இப்படி எல்லோரையும் அரவணைத்து உமக்கு உற்றவளாய் இருப்பேன் என்கிறார் ஆண்டாள். அப்பிறவிகளில் என்ன செய்வாளாம். அவருக்கு ஆட்செய்வாளாம்.

ஆட்கொள்ளுதல் தெரியும். ஒன்றைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருதல். ஆட்செய்தல் என்றால்?

அவனுக்கு பலரை தாமே வழிய வந்து ஆட்படுத்திக் கொள்ளச் செய்யுதல். அவன் புகழைப் பாடிப் பரப்பி, அவனை அறியாதவரையும் அவனை எண்ண வைத்து வியக்க வைத்து தம்மை அவனிடம் ஆட்படுத்திக் கொள்ளச் செய்வது..

தனக்காக மட்டும் பாராமல் இன்னும் பலருக்கும் அவன் அனுக்கிரகம் பெற்றுத் தருவேன் பல பிறவிகள் எடுத்துழன்றும் இப்படிப் பலருக்கு நற்கதிப் பெற்றுத் தருவேன் என்று சொல்லும் ஆண்டாள் அவனுக்கு உற்றவள்தானே..


பக்தியில் பலவகை உண்டு.. ஆண்டவனை எப்படி வேண்டுமானாலும் காணலாம். ஆனால் அதில் ஒரு முழுமை வேண்டும். அம்முழுமையைப் பெற்ற ஒரு சிலரில் ஆண்டாளும் ஒருத்தி..

முழுமையான அர்ப்பணிப்பு. முழுமையான நம்பிக்கை... இரண்டையும் காட்டும் இந்த வரிகள்.

ஆண்டாளை தரிசிக்கும் ஆவலைத் தூண்டிய இரு வரிகள்...

திருமகளைக் கவலை கொள்ள வைக்கலாம். அப்படியாவது அவள் பரந்தாமனுக்கு உரியவளாய் காக்கும் கடவுளின் உற்ற துணையாய் வாழ முயற்சிக்கட்டும்

நித்திய பூஜை!!!




உள்ளுறையில் என்னாவி நைவேத்யம் ப்ராணன் ஓங்குமதி தூபதீபம்
ஒருகாலமன்றிது சதாகால பூசையாய் ஒப்புவித்தேன் பராபரமே

தாயுமானவர்


சதா சர்வ காலமும் பூசை நடந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?

சதாசர்வ காலமும் பூசை செய்வது இயலுகிற காரியமா? தூங்குவதற்கு நேரம் வேண்டாமா?

தூக்கத்தில் கனவு வரும், கனவில் பூசை செய்வேன் என்று சொல்ல முடியுமா?

உறக்கம் என்பது தன்னை மறந்த நிலை. அதில் எப்படி பூசை செய்ய முடியும்?

இயலும் என்கிறார் தாயுமானவர்..

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பூசை என்பது இச்சை செயலாக இன்றி அனிச்சை செயலாக வேண்டும்.

நம் உடலில் சில காரியங்கள் மட்டும் நிற்பதே இல்லை.. இதயம் துடிப்பது. மூச்சு விடுவது..

உள்ளுறையில்... கோவிலில் கருவறை போல இறைவன் இருக்கும் கருவறை ஆக மனம் மாற வேண்டும்.

அவனுக்கு நாம் இழுத்து விடும் மூச்சே தூப தீபம் ஆக வேண்டும். ஆக மூச்சைச் சீராக்க வேண்டும்


ஓங்கும் அதி தூப தீபம். மூச்சுதான் தூப தீபமும். அனைத்து மூச்சும் ஒரே போல் இருப்பதில்லை, சில சமயங்கள் ஆழ்ந்த மூச்சும், சில சமயம் சீரான மூச்சும் சில சமயம் மெல்லிய சுவாசமும் இருக்கும். ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு வகை ஆராதனை.. இறை ஆராதனையாக சுவாசம் மாறினால்.. அதை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று புரிகிறதல்லவா?

தூப தீபம் சரி. நைவேத்யம் என்ன?

படியளக்கிற பெருமானுக்கு அளந்தா கொடுக்கமுடியும். என்ன கொடுத்தாலும் அது அவன் கொடுத்ததே அல்லவா? அவன் கொடுத்ததில் உயர்ந்த ஒன்றை அவனுக்கே படைத்தல் வேண்டுமல்லவா?

அப்படிப்பட்ட ஒன்று நமது உயிர் மாத்திரமே.. நம் உயிரையே அவனுக்கு நைவேத்யமாய் படைப்போம். அதன் பொருள் தற்கொலை செய்து கொள்ளுதல் அல்ல. நம் உயிர் அவனுடையதாகும் பொழுது அவன் சேவை மாத்திரமே நம் கடமை ஆகிவிடுகிறது.

இப்படி அவனது சேவை மட்டுமே நம் கடமையாகக் கருதி, அவனை மனதில் இருத்தி, முச்சுவிடுதலைக் கூட பூசையாகிக் கருதிச் செய்தோமானால் அதுதான் நித்திய / சத்திய பூசை.

அதற்காக தம்மை ஒப்புவிக்கிறார் தாயுமானவர் பெருமான்.

மறுபடி யோசிப்போம்.

இப்படி ஒரு பூசை செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

மனம் வேறு எண்ணங்கள், வருத்தங்கள் ஆசைகள் இப்படி எதுவும் வந்து அடைந்து போகாமல் சுத்தமாக இருத்தல் வேண்டும்.

சுற்றுப் புறத் தூய்மையும் வேண்டும்.

நம்மையே நாம் அவனிடம் ஒப்புவித்து விட வேண்டும். வேண்டுதல் எதுவுமே இருக்கக் கூடாது...

மனம் என்ன சொல்கிறதோ அதை மறுபேச்சின்றி செய்தல் வேண்டும். இதுதான் இறைவனை நித்ய பூசை செய்யும் ஒரே வழி..

பொய்யும் பலன் தரும்..!!!




யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே


மாணிக்க வாசகர்                  


யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் என்று சொல்பவர் யார் என்று தேடுகிறேன். தன்னை வினை என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார் அவர்.

வினையேன் அழுதால் உனைப் பெறலாமே..


பொய்யான பூஜைகள்

பொய்யான உபதேசங்கள்
பொய்யான பக்தி

இப்படிப் பொய்யாய்ச் செய்யும் வினைகள் எத்தனையோ இருக்கின்றன. இப்பொய்களும் கூட இறைவனைச் சிலசமயம் அடைந்து விடுகின்றது. எப்பொழுது தெரியுமா? மனம் வருந்தி அழும்பொழுது...



அதாவது இத்தனைக் காலம் பொய்யாய் எத்தனையோ வினைகளைப் புரிந்திருக்கலாம். ஆனால் அவற்றிற்காக வருந்தி அழுதால் அவை மெய்யான வினைகள் செய்த பலனைக் கொடுத்து அவன் அருளையும் அன்பையும் பெற்றுத்தரும்.

மன்னிப்பது கடவுள் குணம். எந்த ஒரு வினாடியிலும் திருந்துவதற்கு கடவுள் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறார்.

பொய்களுக்கும் அருளும் மெய்ப்பொருள் தாயும் ஆனவனாக இன்றி யாராக இருக்க முடியும்

அந்நாள்!



முக்குணத்தைச் சீவனெனும் மூடத்தை விட்டருளால்
அக்கணமே எம்மை அறிந்துகொள்வ தெந்நாளோ ?

தாயுமானவர்


சாத்வ, ரஜா, தாமஸ என்னும் குணங்களும் உயிர் உடல் உலகம் பசி துன்பம் இன்பம் வலி போதை எல்லாமே மாயை என்பதும் அறிவுக்குத் தெரிகிறது.

ஆனால் அந்த அறிவு அதை ஏற்பதாயில்லை.. ஆயிரமாயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது..

அது எப்படி? இது என்ன? எது உண்மை? எது பொய்?

தீராத தேடலில் ஆன்மாக்களை சீவன்களில் நுழைத்துத் தள்ளிவிடுகிறது.

ஒவ்வொரு யுகங்களிலும் தேடலின் திசை மாறிக் கொண்டே இருக்கிறது.

தேடலின் திசை தொலைந்து போகும்பொழுதெல்லாம் ஊழியென்று  எழுதியதை அழித்து மீண்டும் எழுதத் தொடங்குகிறான் இறைவன்.

எத்தனையோ யுகங்கள்,எத்தனையோ கல்பங்கள், எத்தனையோ பிரம்மங்கள் கழிந்துபோயின..

இன்னும் பொருட்கள் குணங்கள் என்று தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்த மூடத்தனங்கள் எல்லாம் ஒழிந்து, மாயை மறந்து சீவன் ஒழிந்து எல்லாம் சிவன் ஆவது அருளால் மாத்திரமே சாத்தியம் என்று தோன்றுகிறது. அது நடக்க ஒரு கணம்தான் ஆகும். கணநேரத்தில் எல்லாம் புரிந்து விடும். ஆனால் அப்படி ஆகும் நாள் எப்பொழுது வருமோ?

நினைவும் செயலும்!



சித்த நினைவும் செய்யும் செயலும் நீ யென வாழ்
உத்தமர்க்கான உறவே பராபரமே



தாயுமானவர்



சித்த நினைவு, சித்தர்களெல்லாம் சித்தனாகிய முதல் சித்தன் சிவனின் நினைவு.. மாறாத ஒரே திட நினைவு. கைவசமாகும் என்ற நம்பிக்கையும் உறுதியும் கொண்டு நீங்காத மாறாத நினைவு.


சென்ற பராபரக் கண்ணியின் விளக்கத்தை இங்குக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.


அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே.


சென்ற கண்ணியில் அறிவாகி நின்றவன் என்று சொன்ன தாயுமானவர். இப்பொழுது சொல்கிறார். அறிவாகி நின்றவன் இறைவன். அந்த அறிவிலிருந்து நல் திட சிந்தனையாகவும் நற்செய்ல்களாகும் வெளிப்படுகிறான்.


உறுதியான எண்ணமும், அதே போன்ற உறுதியான செயலும்... இறைவனை நோக்கியே இருக்கும். மற்றவை மாறிக் கொண்டே இருக்கும்.


செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். 


இவை மட்டுமே உத்தமர்களின் உறவுகள். உத்தமர்கள் என்றுமே இவற்றைப் பேணி இவற்றுடனே வாழ்வார்கள்.


அறிவும், சிந்தனையும் செயலும் இறைவனே!!! உத்தமர்க்கு அவனே உறவு!!!

அறிவாகி நின்றவர்!




அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே
சொல்லும் பொருளும் சுமைகாண் பராபரமே


தாயுமானவர் 


அல்லும் பகலும் அறிவாகி நிற்பவன் அந்தத் தாயுமானவனன்றி வேறு யாராக இருக்க முடியும்.

அறிதல், அனுபவம் எல்லாமே இறைவனன்றோ. அப்படியெனில் நம்முள் அறிவாகி நிற்பவனும் இறைவனே.. எதையறிந்தாலும் அதன் மூலம் நாம் அறிவது இறைவனை அன்றி வேறொன்றில்லையே..

ஒன்றை பல கோணங்களில் காண்கிறீர்களே எப்படி என்று அவ்வப்பொழுது  நண்பர்கள் கேட்பதுண்டு. இன்று இப்பராபரக் கண்ணியைக் கண்ட பொழுது நான் கண்டது அதுதான்.

ஒன்றைத்தான் நாம் எப்பொழுதுமே பல கோணங்களில் கண்டு கொண்டிருக்கிறோம். எல்லாம் இறைவன் என்னும் பொழுது, நாம் எங்கு எதை எப்போது எப்படிக் காணினும் அந்த அறிதல் என்ற அறிவாகி இருப்பவன் இறைவனே..

அப்படிப் பட்ட அறிவினை எந்தச் சொல்லால் பாடுவது, எந்தப் பொருளை அதற்கு அர்ப்பணிப்பது? சொல்லும் பொருளுமே இப்பொழுது சுமையாகிப் போகின்றன. அறிவினை அமைதியாய் தியானித்து அனுபவித்தலே இஷ்டமாகிப் போகிறது,

அப்படி ஆழ்ந்து அனுபவித்தலை தியானம் என்கிறோம்..

தெய்வம் நமக்குள் அறிவாக, உணர்வாக இருத்தலினால் வார்த்தைகள் பொருட்கள் ஆகியவை இறைவனை அறிதலில் சுமையாகி விடுகின்றன. (அந்தச் சுமையை நான் கொஞ்சம் அதிகமாகவே சுமக்கிறேன் போல.. )

தியானம் பழகிப் பார்க்கணும் போல..

பழகுகிறேன்.!!! 

Monday, July 21, 2014

தோண்டர் விளையாட்டு





உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும்
தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே



தாயுமானவர்‬


தொண்டர்களில் தொண்டன் சிறுதொண்டன். அவனுக்கும் தொண்டன் சிவ தொண்டன்.

தொண்டர் என்னும் பொருள் அடியவர்களையும் குறிக்கும். அடி,  அவர்களையும் குறிக்கும்.

தொண்டர் விளையாட்டு என்பதை திருவிளையாடல் எனக் கொள்ளலாம். பிள்ளைக் கறி உண்ண வந்தவன், பிட்டுண்ண வந்தவன்.. மாங்கனி உண்ண வந்தவன், கஜாசுர தோலை உடுத்தியவன், தாருகாவனப் புலித்தோல் உடுத்தியவன். விறகு வெட்டியாக, மீனவனாக, புலவனாக இப்படிப் பல வேடங்கள் பூண்டவன்.. அவனின் திருவிளையாடல்கள் அத்தனையும் தொண்டருடனே இருந்தன. சாதாரண மனிதர்கள் போல தொண்டருடனே உலவி விளையாடுவான். அந்த விளையாட்டின் சுகமே தனி.

--------------------------------------------------------------------------------------------------

இதையே அடியவர்களாக எடுத்துக் கொள்ளும் பொழுது..

உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம் என்பது தமிழனின் எளிய வாழ்க்கை. அடியவர்களுக்கு உண்ணக் கிடைப்பதெல்லாம் சிவனின் அருட்பிரசாதம். மோட்ச வாழ்க்கையிலோ பசியில்லையே...

அவர்கள் உடுத்துவது அவனின் அன்பு, கருணையை.. ஆன்மாவுக்கு உடையேது?

பூணுவது அத்தனையுமே சிவச் சின்னங்கள். ஆக அவன் நினைவாக எதையும் செய்யலாம் சிவனடியவர்கள். ஆனால் மோட்சமடைந்த வாழ்வில் இவையெல்லாமே கிடைக்காமல் போகலாம்.

காரணம் இருக்கிறது, பற்பல தேவர்கள், கணங்கள், கர்வம் தலைக்கேறி சாபம் பெற்று உழன்றிருக்கிறார்கள்,

ஆனால் சிவனடியவர்களுக்கு மட்டுமே, தாயின் கனிவுடன் கூட அந்தச் செல்ல அதட்டல் கிடைக்கும். ஆகவே மோட்சம் பெறுவதை விட தொண்டராக வாழ்வதையே அடியவர்கள் விரும்புவார்கள் என்கிறாரோ தாயுமானவர்...

--------------------------------------------------------------------------------------------------

ஆனால் தொண்டர் விளையாட்டு என்று அவர் சொல்லும் பொழுது அதிலும் ஒரு விளையாட்டு இருக்குமோ என்றுத் தோன்றுகிறது..

ஏன் தொண்டர்களாக சிவனே பிறந்து வந்து விளையாட்டை நடத்தி மகிழ்வித்திருக்கக் கூடாது. தாயும் ஆனவனுக்கு சேவகன் ஆவதா கஷ்டம்?

அவன் உலகத்தார் போலவே வேடம் பூணுகிறான்,
அவர்களைப் போலவே உண்ணுகிறான், உடுக்கிறான்.
தொண்டர்களாக, நாவுக்கரசனாய், சம்பந்தனாய், சுந்தரனாய், மாணிக்க வாசகனாய், இன்னும் பலப் பலத் தொண்டர்களாக நம்மிடையே நடமாடுகிறான்.

அந்த விளையாட்டுகள் இருக்கிறதே அதன் சுகம் தனி.. இப்படியும் இருக்கலாமோ?


வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.


ஆதி என்னும் சொல்லுக்கு, அனைத்திற்கும் ஆதியான இறைவனை பொருளாய் கொள்வதினால் கடைந்து திரட்டிய வெண்ணெய் கிடைக்கப் பெறுகிறது.

வெண்டா மரைவெட்கிச் செந்தாமரை மலர

சம்பந்தன் இறை மயங்கிக் கைத்தாளமிட வெண்தாமரைக் கைகள் சிவந்து செந்தாமரையாக ( கண்டு பொற்றாளம் தந்தவர்..)

உண்டார் அமரர்தேன்

நாவுக்கரசனின் பாடல்களில் தேனருந்தி அமர்ந்தவர்..( வேதங்களினால் பூட்டப்பட்ட கதவை திறக்கச் சொல்லி அப்பர் பாட, அதன் சுவையினில் மகிழ்ந்து உண்டு அமர்ந்திருந்த இறைவன்)

உண்ணார் அமரரே

சுந்தரன் தமிழை இழக்க மண(ன)மின்றி தடுத்தாட்கொண்டவர் (அதுவரை சுந்தரன் பாடாதிருக்க, அவன் தமிழுண்ணா பெருமான், ஓடி வந்து பித்தா என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்து தமிழமுதுண்டாரே )

இவையெல்லாம் எதற்கு..?

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அடியார்களின் இதழ்கள் தமிழ் பாடி இனிமை தருவதற்கன்றோ, வண்டார் தேன்சுவை தமிழ் அவர் வாய்மொழி பொழிய

கண்டாரா திச்செந் தமிழ்

ஆதிசிவன் கண்டார் (படைத்தார்) செந்தமிழை!!!

தமிழ்ப் பாடல் சுவைத்துணர்ந்து மகிழும் ஆதிசிவன். தமிழினின் இனிமை உணர்ந்து தானே புலவன் வடிவம் தரித்து தமிழ் பாடி, புலவர்களுடன் விளையாடி ருசித்த தமிழ்...

தமிழில் கலந்திருக்கும் இனிமையே இறைவனல்லவா!!! அத்தமிழில் மட்டுமே அல்லவா இப்படி முப்பொருள் கொண்டும் பாடவியலும்?
சித்தம் தடுமாறி முப்பொருள் கண்டாலும் முப்புரம் எரித்தவன் நினைவுகள் இப்புறம் மூன்றையும் எரிப்பானோ?

அங்கும் புன்னகைதான். இங்கும் புன்னகைதான்...

இது தொண்டர் விளையாட்டு..

தொண்டர்கள் அவனிடம் விளையாடும் விளையாட்டு...

தொண்டர்களிடம் அவன் விளையாடும் விளையாட்டு..

தொண்டராகவே அவன் ஆடும் விளையாட்டு

அவற்றை உண்டு, உடுத்தி, அவற்றில் பொருளாய் அவனே உருவம் பூண்டு வருகிறான்.. உலகு அத்தார் போலவே நடமாடுகிறான்.. அத்தனே அத்தானாக இருப்பதும் என்ன பொருத்தம்.

தொண்டருக்கே தொண்டு செய்யும் மெய்ப்பொருள் நாயனார், சிறுதொண்டன், காரைக்கால் அம்மையார் இப்படிப் பலர் இருக்க இஞ்ஞானமும் ஒரு காரணமோ?

அதுதான் சிவஞானமோ இல்லை அவர்கள் ஞான சிவமோ?

இந்த விளையாட்டில் வரும் அந்தச் சுகமேத் தனிதானே!!!
என்பது சித்த உட்பொருள்.

Saturday, July 19, 2014

தாமரை பதில்கள் - 171

கேள்வி எண் : 171
கேட்டவர் : சரண்யா


ஆத்திரம் அடையும் போது தவிர்க்க என்ன செய்வது?
ஏன் நம்மையே கட்டுபடுத்த முடியாமல் போகிறது.....
அதீத கோபத்தால் வருவது தான் ஆத்திரமா? 
எடுத்தெரிந்து பேசுவது தான் ஆத்திரமா?
தனக்கு ஏதும் நடக்கவில்லை என்பதால் வருவது பொறாமையா? ஆத்திரமா?


கோபத்தின் அடிப்படைக் காரணம் இயலாமை. இதை மனதிற்குள் அடிக்கடிச் சொல்லிப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். கோபம் வருவது குறையும்.

கோபம் வரும்பொழுது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பயம் அளவு மீறிப்போய் அட்ரினலும் எக்கச்சக்கமாய் சுரக்கிறது. இதனால் ஒரு போதை கூடிய நிலைக்குப் போய் விடுகிறோம். மூளைக்கு இரத்தம் செல்வது குறைந்து போகிறது. இதனால் சிந்தனை மழுங்கி விடுகிறது. நமது கட்டுப்பாட்டை இழந்து விடுகிறோம். அனிச்சை செயல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனால் உண்டாகும் பின்விளைவு தான் ஆத்திரம். திட்டுதல், அடித்தல் இன்னபிற கோபத்தின் வெளிப்பாடாகிய ஆத்திரம்.. எல்லாவற்றிற்கும் அடிப்படை இயலாமை என்ற தாழ்வு மனப்பான்மைதான்.

ஆளுமை மனப்பான்மை கொண்டவருக்கும் தாழ்வு மனப்பான்மை உண்டு.. அதைத்தான் அவர்களின் கோபமும் காட்டுகிறது. எப்போதெல்லாம் நான் என்ற அகந்தைக்குச் சவால் வருகிறதோ அதை எதிர்கொள்ள இயலாத போது அவர்களுக்குக் கோபம் வரும்.
 



இங்கே கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லி இருக்கிறேன்..

தனக்கு எதுவுமே நடக்கவில்லை என்பதால் முதலில் எழுவது ஏமாற்றம். ஏமாற்றங்கள் அதிகரிக்கும் போது இயலாமை மேலோங்கி கோபமாகிறது.

தாமரை பதில்கள் - 170

கேள்வி எண் : 170
கேட்டவர் : அமரன்



இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மதம்சார்ந்த சில சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் பிரான்சு போன்ற சில நாடுகளில் எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம்தான். எந்தவிதமான நெகிழ்வுக்கும் இடமில்லை. இவற்றுள் சனநாயகத்துக்கு எற்புடையது அல்லது சரியானது எது?

சட்டங்களில் இருவகை உண்டு,

1. குடியியல் சட்டங்கள் (சிவில்)
2. குற்றவியல் சட்டங்கள் (கிரிமினல்)

குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் ஒரே அளவுகோலைக் கொண்டதாக அமைய வேண்டும். அதுதான் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது. 

குடியியல் சட்டங்கள் என்பது மட்டும் இந்தியா போன்ற நாடுகளில் மாறுபாடு உடையதாக இருக்கிறது.. 

எல்லோருக்கும் ஒரே குடியியல் சட்டம் என்பது மதசார்பற்ற அரசு. அவரவர் மதப்படி அவரவர் குடியியல் சட்டம் என்பது சமத்துவ அரசு. இரண்டும் ஜனநாயகமே. மக்கள் விருப்பப் படியே இவ்வழிகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன.

மதசார்பற்ற அரசாக இருத்தல் எளிது, மக்களுக்கு தெளிவும், சமத்துவமும் கிடைக்கும். அதே சமயம் மக்களுக்கு நாடா? மதமா? என ஒரு கேள்வி எழும். அதை சரியான வகையில் அணுகுவது முக்கியம். அதாவது சட்டம் அமைப்பவர்கள், மதங்களை ஆராய்ந்து உணர்வுப் பூர்வமாக யாரையும் புண்படுத்தாத சட்டங்கள் அமைத்தல் முக்கியம்.

அனைத்து மதங்களுக்கும் மதிப்பு அளித்து அவற்றின் வாழ்வியல் கோட்பாடுகளை குடியியல் சட்டத்தில் அமைத்து வழிநடத்துவதற்கு மிகவும் மேம்பட்ட சமுதாயச் சூழல் தேவை. ஒருவர் நம்பிக்கையை இன்னொருவர் மீது திணித்தல் இல்லாமல், பிறரின் நம்பிக்கைகளை மதிக்கும் சமுதாயம் தேவை. 

பெரும்பான்மை சமூகத்தினருக்கு சிறுபான்மை மக்கள் சற்று அளவுக்கு அதிகமாகவே உரிமைகள் பெறுவதாக இதில் தோன்றும். இதனால் மக்களுக்குள் போட்டிப் பொறாமைகள் உண்டாகி விடுகிறது. இங்கு சட்டம் அமைப்பது எளிது. ஆனால் சமுதாயக் குழுக்களுக்கு உண்டாகும் மன உளைச்சல்களை கட்டுப்படுத்தல் கடினம்.

ஒரே நாடகவே இருந்த நாட்டிற்கு பொதுச்சட்டம் நல்லது.

பல நாடுகளாக இருந்து ஒன்றாகிய இந்தியா போன்ற நாட்டிற்கு இரண்டாவது வகை நல்லது... 

மற்றபடி ஜனநாயகத்திற்கு எது ஏற்புடையது என அறியவேண்டுமானால் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை அமல்படுத்த வேண்டும்.

ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பொதுமக்கள் தங்கள் சுயகருத்தை பிரதிபலிக்க அறியாமல் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருக்கிறார்கள். எனவே வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

தாமரை பதில்கள் - 169

கேள்வி எண் : 169
கேட்டவர் : நேசம்



இந்தோனேசியாவில் அட்டிக்கடி பூகம்பம் ஏன் ஏற்படுகிறது.ஏதாவது சம்பந்தம் உண்டா...



இந்தோனேசியா பகுதியில் எரிமலைகள் அதிகம். இந்தோனேசியப் பகுதி யூரேசியன் பிளேட், பசிபிக் பிளேட், இந்தோ ஆஸ்திரேலியன் பிளேட், பிலிப்பைன்ஸ் பிளேட் என நான்கு பூமியின் மேலடுக்குத் தகடுகள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது.



இந்தோ-ஆஸ்திரேலியத் தகடு யூரேசியன் தகடுகளுக்கு கீழே அழுத்தப்படுகிறது, இந்த எல்லையில் பல எரிமலைகள் உண்டாகின்றன. அதே போல பசிபிக் தடும் யூரேசியன் தகடுக்கு கீழே அழுத்தப்படுகிறது. 

இப்படி மேலேட்டுத் தகடுகளின் எல்லையில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் அதிகமாக நிலநடுக்கம் உண்டாகிறது. இதனால் மேலோடுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இங்கு பல எரிமலைகள் உள்ளன.


இங்கு உள்ள டோபா என்னும் எரிமலையை சூப்பர் எரிமலை என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.. 75000 ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்த போது மனித இனம் அழிவின் விளிம்பிற்கே சென்று வந்ததாக சொல்கிறார்கள். இது வெடித்தால் இராட்சச சுனாமி அலைகளும், 2800 கிமீ கன அளவு கொண்ட சாம்பலும் வெளிப்படும் என கணக்கிட்டு இருக்கிறார்கள்.



இந்தோனேசியப் பகுதியில் அதிக பூகம்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று இப்போது விளங்கி இருக்குமே!

தாமரை பதில்கள் - 168

கேள்வி எண் : 168
கேட்டவர் : அன்புரசிகன்

அவுஸ்திரேலியாவிலிருந்து கனடா செல்வதென்றால் ஏன் ஆசியாவூடாக விமானம் பறக்கிறது. உலகம் உருண்டை ஆகவே பக்கத்திலிருப்பதற்கு ஏன் சுற்றிச்செல்கிறார்கள்???




ஆஸ்திரேலியாவிலிருந்து தினம் கனடாவிற்கு எத்தனை பேர் செல்கிறார்கள் எனபதைப் பொறுத்தது அல்லவா அது..

நியூசிலாந்திலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கும், சான்ஃபிரான்சிஸ்கோவிற்கும் செல்லும் நேரடி விமானம் நீங்கள் எதிர்பார்க்கும் வழியில் பயணிக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து ஆசியா ஐரோப்பாவிற்குச் செல்பவர்களே அதிகம் என்பதால், போக்குவரத்து அடர்த்தி காரணமாக அனைத்து விமானங்களும் ஆசியா ஐரோப்பா வழியாக பயணிக்கின்றன. அப்படி இல்லாவிட்டால் விமானக்கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கும்.

வேண்டுமானால் ஹாங்காங், சிங்கப்பூர் டோக்கியோ இடை நிறுத்தமாகக் கொண்டு பிறகு கிழக்கு முகமாக அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு பயணிக்கலாம்.

மற்றபடி விஷேச காரணம் எதுவும் இல்லை.

தாமரை பதில்கள் - 167

கேள்வி எண் : 167



கேட்டவர் : கீதம்


ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகளில் போனவாரத்திலிருந்து மிகப்பெரிய அளவில் புழுதிப்புயல் (dust storm)உருவாகி பார்க்குமிடங்களெல்லாம் செக்கச்செவேலென்று பனிமூட்டம் போல் காட்சிதருகின்றன. அடிக்கடி இது போன்ற புழுதிப்புயல் வீசி மையப்பகுதியிலுள்ள பாலைநில மண்ணைக் (top soil) கொண்டுவந்து ஊரெங்கும் தூவிச்செல்வது உண்டு என்றும் இந்தமுறை மிக அதிகம் என்றும் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 14 மில்லியன் டன் மண்ணாம். இந்த அளவு மண் என்று எப்படி அளவிடுகிறார்கள்? இந்த புழுதிப்புயல் ஏன் உண்டாகிறது?




காற்றழுத்த வித்தியாசங்கள்தான் சாதாரணப் புயலுக்கும் சரி, புழுதிப்புயலுக்கும் காரணம்..


கோடையில் காற்று மிகவும் சூடாகி மேலே செல்லும். இதனால் அந்தப் பகுதியில். காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் உண்டாகும். இதைச் சரி செய்ய குளிர்ச்சியான பகுதியில் இருக்கும் காற்றானது இந்த தாழ்வு மண்டலத்தை நோக்கி வேகமாக வீசும்..

கடலின் மீது இப்படிக் காற்று வீசும் போது அது புயலாக மாறுகிறது. மழையைக் கொண்டு வருகிறது..

ஆனால் ஈரப்ப்சை இல்லாத பாலைவனங்களில் பயணிக்கும் இப்புயல், அல்லது தனது ஈரப்பசை மழையாகப் பெய்துவிட்டுப் பயணிக்கும் காற்று கற்களையும், மணற் கட்டிகளையும் அரித்து மெல்லியத் தூசுகளாக்குகிறது. இந்த தூசுக்கள் காற்றின் வேகத்தினால் அதிர்வதால் எதிர்மின்னூட்டம் பெற்று அரிப்பை இருமடங்காக்கிக் காற்றில் பரவுகின்றன். 

இதனால்தான் புழுதிப்புயல் உண்டாகிறது. அதன் அளவை எப்படி அளக்கிறார்கள் என்பது நல்ல கேள்வி..

காற்றில் உள்ள புழுதியின் அடர்த்தி, காற்றின் வேகம், பரப்பளவு மற்றும் காற்று வீசிய கால அளவு .. இவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு எவ்வளவு எடை மணல் துகள்கள் என்பதைக் கணக்கிடுகிறார்கள்.

இவற்றை அளப்பதற்காக அளவை மையங்களை அங்கங்கு நிறுவி இருக்கிறார்கள். 

மழை அளவை நம் அளப்பது போல இதுவும் சராசரி அளவுதான்...

தாமரை பதில்கள் - 166

கேள்வி எண் : 166


கேட்டவர் : இரஞ்சிதம்


பிடிவாதகுணம் ஏன் உண்டாகிறது? தவிர்க்கவழி உண்டா?


பொதுவாக ஒவ்விரு குணமும் எப்படி உண்டாகிறதோ அப்படித்தான் பிடிவாத குணமும் உண்டாகிறது.

அதாவது, சூழல். பிடிவாதம் அழுதால் பால்கிடைக்கும் என்று தெரிந்த குழந்தை பருவத்திலேயே இது ஆரம்பம்.

அதைத் தவிர்க்க வழி இல்லை, பிடிவாதம் செய்கிறோம் என்று நன்கு தெரிந்தவர்களால் கூட அதை தவிர்க்க இயல்வதில்லை. உதாரணம் காந்தி.

உழைப்பால் மட்டுமே எதையும் பெற இயலும். என்பதை குழந்தைப் பருவத்தில் இருந்து உணர்த்தினால் அர்த்தமற்ற பிடிவாதங்கள் குறையும். கொடுப்பதைக் குறைத்து அவர்களை எதையாவது செய்து சம்பாத்தியம் என்பதின் அர்த்தத்தை உணர வையுங்கள்.

அதாவது எதற்கு அடம் பிடிக்கிறார்களோ அது தீமை பயப்பது என்றால் அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லி வாருங்கள்...

தீமை தராதது என்றால் அவர்கள் அதை பெற உழைக்க வேண்டும். சில காரியங்களைச் செய்ய வேண்டும் எனச் சொல்லி சில ஆக்க பூர்வமான வேலைகளைக் கொடுங்கள். உழைத்துப் பெறும் பழக்கம் வந்துவிட்டால் போதும் அடம் பிடிப்பது நல்லதாகும்

தாமரை பதில்கள் - 165

கேள்வி எண் : 165


கேட்டவர் : நேசம்


மாநில சுயாட்சி கிடைத்தால் அந்தந்த மாநிலங்கள் முன்னேறுமா.... (அதற்கு முன்பு மாநில சுயாட்சியை பற்றி கொஞ்சம் விளக்கம்)


அப்பா செலவுக்கு பாக்கெட் மணி கொடுக்கணும். ஆனால் கணக்கு கேட்ககூடாது. அவ்வளவுதாங்க மாநில சுயாட்சி. 

அதாவது இராணுவச் செலவு போன்ற அத்தியாவசியச் செலவு போக போக மிச்சமிருக்கும் தேசிய வருமானத்தை மாநில அரசுகளுக்குப் பிரிச்சு கொடுத்திடணும். அவங்க மத்ததைப் பார்த்துக்குவாங்க..

மத்திய அரசு ஐ.நா சபை மாதிரி ஆயிடும். அவ்வளவுதான்.

மாநிலங்கள் முன்னேற்றத்தில் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இருக்காது. சொல்லப்போன மாநிலங்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகள் பெரிசு பெரிசா வெடிக்கும்.

தாமரை பதில்கள் - 164

கேள்வி எண் : 164


கேட்டவர் : செல்வா


எல்லாக் கலாச்சாரங்களுமே மாறிவிட்ட (மாறிக்கொண்டிருக்கும்) இந்த காலத்திலும் நமது கலாச்சாரம் பண்பாடு என்று பேசுவது , வாதிடுவது சரியா? உங்கள் கருத்து என்ன? 



கலாச்சாரம், பண்பாடு என்பது நமது முன்னோர்கள் செய்தது மட்டும்தான் என்பது சரியான அர்த்தமல்ல. 

சமூக அமைப்பில் மக்கள் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும், உற்சாகத்துடனும் வாழ சில நல்ல வழிமுறைகளைக் கையாள்கிறோம். இவையே பண்பாடு ஆகும்.

இன்சொல் கூறுதல், இயலாதோரைக் காத்தல், விருந்தோம்பல், அனைவர்க்கும் நன்மை செய்தல், புறங்கூறாமை, சுயநலம் பாராமை, பகிர்ந்துண்ணுதல், நல்லவற்றை மனமாற ஏற்றல், பெரியாரைப் பணிதல், இப்படிப் பல நல்ல விஷயங்கள் நமது பண்பாட்டில் உள்ளன. உடை அணிதல் மட்டும்தான் பண்பாடு என நடுத்தெருவில் விளக்குமாறு சகிதம் கூச்சலிடுதல் அல்ல பண்பாடு. 

பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றை சுட்டி நிற்க்கின்றது. 

கலாச்சாரம் என்பது பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.

மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.இவை கலாச்சாரம் என அறியப்படுகின்றன. இது காலத்திற்கு ஏற்றபடி மாறுகிறது. மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரத்தின் வளர்ச்சி, மாறாட்டி அது செத்துப் போச்சுன்னு அர்த்தம். 

மொழின்னா வளரணும், உணவில் புது ருசிகள் வந்துகிட்டே இருக்கணும், இசையில் பல புதிய பரிமாணங்கள் வரணும். சமயம் மனதை மேலும் மேலும் தெளிவாக்கிகிட்டே போகணும். இப்படி மாறிகிட்டே இருப்பதுதான் கலாச்சாரம். 

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வழுவினானே..

என்று 2000 ஆண்டுக்கு முன்பே மாறுதலுக்கு உட்பட்டவையே எல்லாம் என்று நாமே சொல்லியிருக்கோம். இப்ப மாற மாட்டோம்னு அடம்பிடிச்சா பண்பாட்டை காக்கிறோமா இல்லை மாய்க்கிறோமா?

சிலமுறை நானே சொன்னதுதான், நல்ல விஷயங்கள் மறந்து போய் சடங்குகளை மட்டுமே இப்போது கட்டி அழுதுகிட்டு இருக்கோம்.

நம்ம பண்பாடு நம்ம கலாச்சாரம் என்னன்னே நமக்குத் தெரியலை என்பதுதான் உண்மை. முதல்ல அதை முழுசா புரிஞ்சிக்குவோம். போராடுவதெல்லாம் அப்புறம்.

நமது சமூகத்தின் அறிவு விசாலப்படும்பொழுதெல்லாம் பண்பாடு மாறுகிறது. அறிவு குறுகிப் போகும் போதும் பண்பாடு மாறுகிறது.

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே அப்படின்னோம். இன்னிக்கு யானகளை காப்பாத்த வேண்டியச் சூழ்நிலை. இப்ப போய் நம்ம பண்பாட்டின் படி யானகளைக் கொல்லணும் என்று சொல்லமுடியுமா என்ன? 


இந்தப் பண்பாடு, கலாச்சார மாறுதல்களை எதிர்க்கும் போராட்டங்களில் 90 சதவிகிதம் ஆதிக்கப் போராட்டம்தான். அது நம்ம பண்பாடே இல்லைன்னு கூட அவங்களுக்குத் தெரியாது..


அதனால் வாதங்களில் உண்மையிலேயே நல்ல எண்ணம் இருக்கு என்று ஆணித்தரமாக தெரியற வரைக்கும் உணர்ச்சி வசப்படவே கூடாது..

சும்மா காப்பியடிப்பது பண்பாட்டு வளர்ச்சி அல்ல. உணர்ந்து புரிந்து ஏற்றுக் கொள்ளுதல் தான் பண்பாட்டு வளர்ச்சி. இதை இன்னொரு சாராரும் புரிஞ்சிக்கணும்.

தாமரை பதில்கள் - 163

கேள்வி எண் : 163


கேட்டவர் : சுகந்தப்ரீதன்


தேசிய நலனில் அக்கறை கொண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ள முயலும் ராகுல்காந்தி, "தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை" எதிர்ப்பது குறித்து...?!



சில கோணங்களில் இராகுல்காந்தி செய்தது சரி...


1. ஒரு மாநிலம் கூட தன்னுள் இருக்கும் நதிகளை இணைத்து தண்ணீரைச் சேமிக்கத் திட்டம் போடவில்லை. இதுவரை நடந்திருக்கிற ஒரு நதி இணைப்பு திட்டம்னா பெரியாறு அணை மூலம் முல்லை ஆற்றுக்கு தண்ணீரைத் திருப்பி, வைகையில் இணைக்கிறதுதான். இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் செய்தது. மத்தபடி ஏரிகளை பக்கத்தில் உள்ள ஆற்றுடன் இணைத்து கூட கால்வாய் கட்ட மாட்டங்கறாங்க. கரிகால் சோழன் காலத்தில் அவர் செய்தது கூட இப்போது இல்லை. கிருஷ்ணா குடிநீர் திட்டம் எந்த அளவு உபயோகமா இருக்கு? அப்படி இருக்க மத்திய அரசுதான் இதைச் செய்யணும்னு கூச்சல் போடலாமா?

இந்திரா காந்தி கால்வாயை பஞ்சாபிலிருந்து (சட்லெஜ்-பியாஸ் நதிகளில் சங்கமத்திற்கு சற்று தொலைவில் இருந்து ) இராஜஸ்தானின் ஜெய்சல்மீர் நகரம் வரை கட்டியது நேரு அரசு. இது 650 கிலோ மீட்டர். பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் இதனால் பாசனம் பெறுகின்றன. அதுக்குப் பின்னால்?

2. மாநிலங்களின் தண்ணீர் தாவா பிரச்சனை இப்ப இருக்கற ஆறுகளாலேயே எக்கச் சக்கமா இருக்கு. இதில ஆறுகளை இணைச்சா உத்திராஞ்சல் மாநிலத்துக்கெதிரா, பீகாருக்கு எதிரா, மத்திய பிரதேசத்துக்கு எதிரா இப்படி எத்தனை வழக்குதான் போட்டு வாதாடுவது?

3. ஆதரவா பேசினவங்க எதுவுமே செய்யலை, ஒருத்தர் எதிர்ப்பதிலாவது மத்தவங்க ஒண்ணுகூடி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கட்டுமே. 

4. அவர் சொல்வது சுற்றுப்புற சூழ்நிலையை இது பயங்கரமாக பாதிக்கும் என்பது. இது சரியா தவறா எனப் பார்க்க வேண்டிய ஒன்று, நீ சொன்னது தப்புன்னு எதிர்கட்சிகள் நிரூபிக்கனுமே தவிர எப்படி இதைச் சொல்லலாம்னு கேட்கக் கூடாது. இதை எதிர்த்து எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தால் இதை நிறைவேற்ற அடியெடுத்தே ஆகவேண்டும். ராகுல் காந்தி இதைச் சொன்னதன் மூலம் நதிநீர் இணைப்பு என்பதை மக்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் இதை நிறைவேற்றட்டுமே. இரண்டு நதிகளை மட்டுமாவது இணைக்கட்டுமே. 

5. வெறும் தேர்தல் அறிக்கையா இருக்கும் ஒரு திட்டத்தை ஆதரிப்பதை விட எதிர்ப்பதுதான் அதை நிறைவேற்ற எளிய வழி. 

ஆகவே, நான் கெட்டவன் ஆனாலும் பரவாயில்லை, நாட்டுக்கு நன்மை நடக்கட்டும் என்று சொல்லியிருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்