சதா சர்வ காலமும் பூசை நடந்து கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டும்?
சதாசர்வ காலமும் பூசை செய்வது இயலுகிற காரியமா? தூங்குவதற்கு நேரம் வேண்டாமா?
தூக்கத்தில் கனவு வரும், கனவில் பூசை செய்வேன் என்று சொல்ல முடியுமா?
உறக்கம் என்பது தன்னை மறந்த நிலை. அதில் எப்படி பூசை செய்ய முடியும்?
இயலும் என்கிறார் தாயுமானவர்..
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
பூசை என்பது இச்சை செயலாக இன்றி அனிச்சை செயலாக வேண்டும்.
நம் உடலில் சில காரியங்கள் மட்டும் நிற்பதே இல்லை.. இதயம் துடிப்பது. மூச்சு விடுவது..
உள்ளுறையில்... கோவிலில் கருவறை போல இறைவன் இருக்கும் கருவறை ஆக மனம் மாற வேண்டும்.
அவனுக்கு நாம் இழுத்து விடும் மூச்சே தூப தீபம் ஆக வேண்டும். ஆக மூச்சைச் சீராக்க வேண்டும்
ஓங்கும் அதி தூப தீபம். மூச்சுதான் தூப தீபமும். அனைத்து மூச்சும் ஒரே போல்
இருப்பதில்லை, சில சமயங்கள் ஆழ்ந்த மூச்சும், சில சமயம் சீரான மூச்சும்
சில சமயம் மெல்லிய சுவாசமும் இருக்கும். ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு வகை
ஆராதனை.. இறை ஆராதனையாக சுவாசம் மாறினால்.. அதை எவ்வளவு சுத்தமாக
வைத்திருக்க வேண்டும் என்று புரிகிறதல்லவா?
தூப தீபம் சரி. நைவேத்யம் என்ன?
படியளக்கிற பெருமானுக்கு அளந்தா கொடுக்கமுடியும். என்ன கொடுத்தாலும் அது
அவன் கொடுத்ததே அல்லவா? அவன் கொடுத்ததில் உயர்ந்த ஒன்றை அவனுக்கே படைத்தல்
வேண்டுமல்லவா?
அப்படிப்பட்ட ஒன்று நமது உயிர் மாத்திரமே.. நம் உயிரையே அவனுக்கு
நைவேத்யமாய் படைப்போம். அதன் பொருள் தற்கொலை செய்து கொள்ளுதல் அல்ல. நம்
உயிர் அவனுடையதாகும் பொழுது அவன் சேவை மாத்திரமே நம் கடமை ஆகிவிடுகிறது.
இப்படி அவனது சேவை மட்டுமே நம் கடமையாகக் கருதி, அவனை மனதில் இருத்தி,
முச்சுவிடுதலைக் கூட பூசையாகிக் கருதிச் செய்தோமானால் அதுதான் நித்திய /
சத்திய பூசை.
அதற்காக தம்மை ஒப்புவிக்கிறார் தாயுமானவர் பெருமான்.
மறுபடி யோசிப்போம்.
இப்படி ஒரு பூசை செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
மனம் வேறு எண்ணங்கள், வருத்தங்கள் ஆசைகள் இப்படி எதுவும் வந்து அடைந்து போகாமல் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
சுற்றுப் புறத் தூய்மையும் வேண்டும்.
நம்மையே நாம் அவனிடம் ஒப்புவித்து விட வேண்டும். வேண்டுதல் எதுவுமே இருக்கக் கூடாது...
மனம் என்ன சொல்கிறதோ அதை மறுபேச்சின்றி செய்தல் வேண்டும். இதுதான் இறைவனை நித்ய பூசை செய்யும் ஒரே வழி..
No comments:
Post a Comment