Tuesday, July 22, 2014

உணர்வதும் உணர்த்துபவனும்!!!




உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி
இணக்குறுமென் ஏழைமைதான் என்னே பராபரமே


தாயுமானவர்


இணக்குறுதல் - இணங்கிப் போதல்..

ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொரு அனுபவம் கிட்டுகிறது. அந்த அனுபவங்களை உண்டாக்கித் தருபவன் அவன்.

அந்த அனுபவங்களை ஆழ அலசி ஆராய்ந்தால் அவை அவனை உணர்த்தும்.

அவனை உணர்த்த வென்றே அனுபவங்களைக் கொடுக்கிறான் இறைவன்.

உணர்த்தும் என்பதற்கு இதைப் போல இரண்டு அர்த்தமும் ஒன்றாகப் பொருந்தி வருகிறது.



அதாவது உணர்த்துபவனும் அவனே. அதில் அவன் உணர்த்துவதும் அவனையே...


அனுபவங்கள் உண்மையில் என்ன உணர்த்துகின்றன என ஆழமாக நாம் யோசிப்பதில்லை. மேலோட்டமாக ஒரு கோட்பாட்டை நாம் எடுத்துக் கொள்கிறோம்.

உணர்த்துகின்ற பொருளை எடுத்துக் கொள்ளாமல் வெறும் உணர்ச்சிகளை மட்டுமே அனுபவங்களில் இருந்து எடுத்துக் கொள்கிறோம். இது சந்தோசம் தரும், இது வலிதரும் என்று மேலோட்டமான அர்த்தங்களுக்கு இணங்கிப் போய், அனுபவம் அளிக்கும் வளமான செல்வத்தை விட்டு விட்டு ஏழைகளாகவே வாழ்கிறோம்.

உதாரணமாக பூச்சிக் கொல்லி கண்டு பிடித்தோம். பூச்சிகள் அழிந்தன. அதை மட்டும் எடுத்துக் கொண்டு பூச்சிக்கொல்லிகளை அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்தோம் அவை மனித ஆரோக்யத்தை பாதிக்க ஆரம்பித்தது.

உரமிட்டோம் பயிர் வளர்ந்தது. அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டோம். மண் வளமிழந்தது. இப்போது அதையே அனுபவமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

மண்ணையோ பயிர்களையோ புரிந்து கொள்ளும் எண்ணமே வராமல் நாம் இயற்கையிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஏழைகளாகத்தான் இருக்கிறோம்.

எதிலுமே மூழ்கி அலசி ஆராய வேண்டும். அப்பொழுது இயற்கையை புரிந்து கொள்ளலாம். இயற்கையை நாம் அறிந்து கொள்ளவே பல நிகழ்ச்சிகள் வாய்ப்பளிக்கின்றன. ஆனால் நாமோ அவற்றின் மூலம் பல மூட நம்பிக்கைகளை மட்டுமே வளர்த்து வைத்திருக்கிறோம்.

மேலோட்டமான இந்த மூட நம்பிக்கைகளுக்கு இணங்கிப் போவதால் இயற்கை நிகழ்வுகளால் நாம் பெறக்கூடிய இயற்கை பற்றிய அறிவினைப் பெறாமல் இயற்கையை அறியாமல் இன்னும் இயற்கைக்குப் பயந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயற்கையை அறிதல் இறைவனை அறிவதற்கு ஒப்பானதாகும்.

இப்பொழுது பாடலின் பொருள் :

தாயும் ஆன எல்லாவற்றிலும் பரந்து கிடக்கும் பரமனே!! உன்னை உணர்த்துவதற்காகத்தான் நீ பல அனுபவங்களை ஏற்படுத்தித் தருகிறாய்.. உணர்த்துவது நீ, அவை உணர்த்துவது உன்னை. ஆனாலோ, இந்தப் பாழும் மதி, என்னவெல்லாம் தனக்கு அந்த அனுபவங்களில் மேலோட்டமாகத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் மூட நம்பிக்கைகளாக வளர்த்து கண்ணெதிரில் அறிவுச்செல்வம் இருந்தும் அறியாமல் கடந்து சென்று அறியாமை என்னும் ஏழைமையில் உழலுகிறதே, என்ன செய்ய?

No comments:

Post a Comment