Thursday, July 31, 2014

சீதனம்!

சீதனங்கோடு புயங்கைக் கொண்டார்தம் திருமருக
சீதனங்கோடு முடியாளர் சேய் தனக்கு ஏதுளதோ
சீதனங்கோடு இனிதரும் என்பார் தொழும் தேவிபெரும்
சீதனங்கோடு கொடிவேள் மயூரம் சிலையரசே

                                                                                     அருணகிரிநாதர்



சீதனம் - வெறும் ச்சீ தனம் அல்ல..

அதில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

தாய்மாமனின் அன்பு
பெற்றவர்களின் பாசம்
உடையவரின் பெருமை, உயர்வு

கொடுப்பவர்க்கும் பெறுபவர்க்கும் இவை பொருந்தும். இனி அவள் புதிய பெற்றவர்கள், புதிய மாமனைப் பெறப்போகிறாள்.

அவனின் பெற்றவர்கள் அவளுக்கு மாமன். அவனின் மாமன் அவளைப் பெற்றவளாகிறான். அதே போல அவளின் பெற்றவர்கள் அவனுக்கு மாமன். அவளின் மாமன் அவனைப் பெற்றவளாகிறான்.

ஒரு மருமகள் தான் கொண்டு வருகிற சீதனத்தில் இத்தனையும் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

ஏன் தாய்மாமன்? சிற்றப்பன் இல்லையா என்று கேட்கலாம். ஆனால் சிற்றப்பன் அப்பனில் அடக்கம்.

அம்மா, அத்தை? சீதனம் கொடுப்பதில் அவர்கள் தங்கள் துணைவர்களுடன் இணைந்து விடுகிறார்கள்.

திருமணத்தில் நலங்கு வைக்கும் உரிமை தாய்மாமனுக்கும், தாரை வார்க்கும் உரிமை தந்தைக்கும் இருப்பதை நுட்பமாக கவனித்தால் அறியலாம்.

சீதங்கோடு புயங்கைக் கொண்டார்தம் திருமருக
சீதங்கோடு முடியாளர் சேய் தனக்கு ஏதுளதோ
சீதங்கோடு இனிதரும் என்பார் தொழும் தேவிபெரும்
சீதங்கோடு கொடிவேள் மயூரம் சிலையரசே



முருகன், யாருக்கு மருகன்? அவரிடம் என்ன இருக்கிறது?

திருமால்.. சீ (ஸ்ரீ) எனப்படும் திருமகள் வசிக்கும் தளம் ஆகிய தாமரை மற்றும் கோடு எனப்படும் சங்கை அவர் தம் கையில் ஏந்தி புஜத்தின் மீது வைத்து ஓங்காரத்தை வெளிப்படுத்த தயாராகவே இருக்கிறார்.

அவனுடைய அப்பனாகிய சிவனோ, சீதளம் எனப்படும் குளிர்ச்சி பொருந்திய கோடு எனப்படும் பிறைச் சந்திரனை தன் முடியில் முடிந்திருகின்றான்..


அப்படிப்பட்ட முருகனுக்கு பெண்தர அவனிடம் என்ன செல்வம் உள்ளது என்று கேட்கலாகுமா?

ச்சீ என்று வெறுக்கப்படும் அறுவெறுக்கத்தக்க செல்வம்  கோடு எனப்படும் குற்றம் மற்றும் துன்பத்தைத் தரும் என்று சொல்லும் பற்றற்ற தளத்தில் அதாவது நிலையில் உள்ளோர் வணங்கும் வள்ளி நாயகி கொண்டு வந்த பெரும் சீதனங்கள் என்ன தெரியுமா?

சீதளம் - ஊது கொம்பு.
கோடு - மலை.. அவள் குறிஞ்சி நிலத்தவள் அல்லவா. மலைகள் எல்லாம் அவர்களுக்கே உரிமை உடைத்து அல்லவா? குன்று தோறாடும் குமரனாக்கினாள் அவனை.

கொடி- சேவல்கள்.. முருகனுக்கு உரித்தான கொடியில் அடையாளமாகிய சேவல்

வேன் - வேல். முருகனுக்கு அவன் அன்னை அளித்த சக்தி வேல்.

மாயூரம் - அவனது வாகனமாகிய மயில்கள்..

ஏன் இப்படிப் பட்ட சீதனங்கள்? இந்தச் சீதனங்கள் எதனால் சிறப்புடையவை ஆகின்றன?

ஊதுகொம்புகளின் ஓங்கார ஓசை உலகத்தோர் எல்லோருக்கும் பிரணவம் உணர்த்தும்.

முருகன் எங்கே எனத் தேடும் அடியார்களுக்குக் குன்று தோறும் குமரன் இருப்பான்.

அவன் கொடிகள் பெருகுவதால் உலகெங்கும் அவன் அருள் ஆட்சி என உற்சாகம் பொங்கும்

வேல்கள்.. அவன் பக்தர்களோ அதிகம். அவர்களின் துன்பங்களும் அனேகம். அத்தனை துன்பங்களைப் போக்க அவனுக்கு ஒரு வேல் போதுமா என்ன?

கோடானு கோடி பக்தர்களைக் காக்க அவன் விரைந்து செல்ல வேண்டி இருக்கிறது. முருகன் பலராய் மாறலாம். வாகனம்? அதனாலேயே பலப்பல மயில்கள்.

சீதனம் என்பதை எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்.

தான் வாழப்போகும் வீட்டில் அதில் வாழும் உறுப்பினர்களின் நன்மைக்கு எது எல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் சீதனமாகக் கொண்டு வருகிறாள் மருமகள்.

அந்த வீட்டில் காலெடுத்து வைக்கும் முன்னரே அந்தக் குடும்பத்தின் தாயாக அவள் மாறிவிடுகிறாள்.

ஒவ்வொரு மணமகனும் - மணமகளும் அத்தனை உறவுகளும் மனதில் கொள்ள வேண்டிய பக்குவம் இது..

இதை உணர்ந்து இல் வளர்த்து அறம் வளர்த்து வாழ்வது நன்று.

No comments:

Post a Comment