சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து சின்மயமாம் நின்னடிக்கே
வந்தவர்க்கே இன்பநிலை வாய்க்கும் பராபரமே
தாயுமானவர்
சிந்தையை அவிழ்பது எப்படி? இப்படிக் கேட்டால் எதையாவது சொல்லலாம்.
சிந்தையில் முடிச்சுகள் இருக்கிறதா என்ன? எந்த வகை முடிச்சுகள் உள்ளன என்று எண்ணிப்பார்த்தால்.
சுயநலம் என்ற பெரிய சிக்கலான முதல் முடிச்சு உள்ளது, அவிழ்ப்பது சிக்கலானது.
ஆணவம் என்ற பெரிய சிக்கலான முடிச்சு உள்ளது, அதை அவிழ்ப்பதும் சிக்கலாகவே இருக்கிறது.
ஆசை என்ற முடிச்சு உள்ளது, பொறாமை என்ற முடிச்சு உள்ளது. இப்படிப் பலப்பல முடிச்சுகள் நம் சிந்தையிலே உள்ளன.
எதைச் சிந்தித்தாலும் அதில் என்ன நன்மை இருக்கிறது என்று கண்டு அதை மனதிலேயே வைத்துக் கொள்வது கூட ஒரு முடிச்சு தான்.
இப்படிச் சிந்தனையைக் கட்டும் ஒவ்வொரு முடிச்சையும் சிந்தித்து சிந்தித்து அவிழ்க்க வேண்டும்.
அப்பொழுதுதான் சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து வரும்.
இப்படிச் சிந்தையை அவிழ்ப்பதால் என்ன கிடைக்கிறது?
ஞானம் கிடைக்கிறது.
எதையும் விருப்பு வெறுப்பின்றி எந்த அவசர முடிவிற்கும் வராமல் பொறுமையாய் அலசக் கிடைப்பது அறிவு. ஞானம்.
அப்படியே சிந்தையை அவிழ்த்து அவிழ்த்து சிவனடியை ஆராய்ந்து ஆராய்ந்து
ஞானமயமானது அவன் அடி என அறிந்து அஞ்ஞானத்தை அறிந்து அஞ்ஞானத்தை அரிந்து
அவனடியை அடைவோர்க்கு மாத்திரமே ஞானனந்த மயமான பேரின்பம் பயக்கும் என்கிறார்
தாயுமானவர்..
அவனடியை அடைய என்னென்ன வழி உண்டு?
ஞான வழி, பக்தி வழி, கர்ம வழி..
மற்ற வழிகளில் அடைவோருக்கு அந்தப் பேரின்பம் கிட்டாதா?
ஞானம் என்பதே இவ்வழிகளை அறியவே உதவுகிறது அல்லவா?
இதில் எதில் ஈடுபட்டாலும் சிந்தை முடக்கப்படாமல் சுதந்திரமடைகிறது அல்லவா?
நம் சிந்தைக்குண்டாகும் கட்டுகள் அவிழ்க்கப்படுவது ஞானத்தினால் மட்டுமல்ல.
அப்படி இருந்திருந்தால் சின்மயத்தால் சிந்தை அவிழ்ந்து என்று சொல்லி
இருப்பார் தாயுமானவர்.
சிந்தை அவிழ்ந்து அவிழ்ந்து சின்மயமாம் நின்னடிக்கே என்று சொல்வதினால் மூவழிகளும் ஞானம் அருளும் என்பதே சரி..
இன்பம் எது என்பதை அதுவரை நாம் அறிவதில்லை..
அதனால் நம் அனுபவிப்பதற்கு நாம் கொடுத்த பேர் - இன்பம்
ஞானம் அடைந்த பின்னேதான் இன்ப நிலை.. அதாவது நிலைத்த இன்பம் வாய்க்கும்.
No comments:
Post a Comment