வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ?
----- பட்டினத்தார் அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு
எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தாலே பாதித் தேடல் முடிந்த மாதிரிதான்.
இன்னதுதான் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடுவோரே நம்மில் பலர்.
என்ன தேடுகிறோம்? எதற்குத் தேடுகிறோம் என்றறிந்தால் கிட்டினால் கைக்கொள்வது எளிது..
என்ன தேடுகிறோம் என்று தெரியாவிட்டால் கிட்டினாலும் கிட்டாது.
எதற்குத் தேடுகிறோம் என்று தெரியாவிட்டால் கிட்டினாலும் பயனில்லை.
இங்கே பட்டினத்தார் தன்னுடைய அருட்புலம்பலில் முதலனிடம் முறையோட்டில் கன்னிவன நாதன் கால்பற்றி இதயம் கன்னி கேட்கிறார்.
வெட்டவெளி வேண்டும்.. தேறலும் வேண்டும்.
வெட்டவெளி எதற்கு - வெந்துயரைத் தீர்க்க
தேறல் எதற்கு - சிந்தையைத் தீர்க்க
மனதை வேகவைக்கும் துயர் யாருக்கு வந்தது? பட்டினத்தாருக்கா? ஆம் எனில் எப்படி?
வெட்டவெளி என்பது என்ன?
உயர் மரங்கள் இல்லாத தொடுவானம் முதல் அடிவானம் வரை எல்லாம் பார்க்க இயலும்
ஒன்று.. மனம் அப்படி வெட்ட வெளியாக இருக்க வேண்டும் என்கிறார்.
அப்படி இருந்தால் வெந்துயர் எப்படித் தீரும்?
அதைத்தானே தாயுமானவர் சொல்லி இருக்கிறார்
பொன்னைக் காய்ச்சி உருக்கி சுத்தமான பொற்கட்டி செய்வது போல..
சோதனைகளைத் தந்து நம்மையெல்லாம் காய்ச்சுகிறான் இறைவன்.
மனம் வெட்டவெளியாக இருந்தால் சோதனைகளின் ஆதியும் தெரியும்
அந்தமும் புரியும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
சோதனைகளின் மூலம் தெரிகிறது. அதன் முடிவும் தெரிகிறது என்றால் மனம் துயரில் உழல்வதில்லை. நின்மலமாய் இருக்கிறது.
பிறவாமை எப்படிக் கிடைக்குமென தாயுமானவர் சொன்னார். அதை எப்படி அடையலாம் எனப் பட்டினத்தார் காட்டுகிறார்.
வெட்ட்வெளியாய் மனம் வேண்டும்.. அப்புறம் அதென்ன சிந்தையைத் தீர்க்கும் தேறல்?
தேறல் என்பது ஒரு மதுவகை. தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால்
தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு
பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் என்கிறது புறநானூறு...
மனமாகிய வெட்டவெளியில் புதைக்கப்பட்டத் தேறல்...
தேறல் என்ற மது சிந்தையைத் தீர்க்குமாம்.
துயர் என்பது துன்பம். சிந்தை என்பது கவலை.
துன்பம் வெளியில் இருந்து வருகிறது..
கவலை உள்ளிருந்து வருகிறது.
மனம் வெட்டவெளியாய் இருந்தால் துன்பத்தின் எல்லைகள் தெரிகிறது. அதன்
பிரம்மாண்டம் குறைந்து எல்லைக்குள் அடங்கிப் போகிறது.. அதனால் அதன் கடுமை
குறைவாய்த் தோன்ற ஆரம்பிக்கிறது. வெம்மை குறைகிறது.
உள்ளத்தில் உண்டாகும் கவலைகளைத் தீர்ப்பது அதே உள்ளமெனும் வெளியில் புதைக்கப்பட்டத் தேறலாகிய ஞானம்.
மது எப்படி நாட்பட நாட்பட வீரியம் கூட்டிக்கொள்கிறதோ அப்படி ஞானம் அனுபவப்பட அனுபவப்பட வீரியம் கூடுகிறது.
அந்த ஞானம் வெளிப்பட்டால் கவலை தீர்ந்துவிடும்.
புத்தர் அப்படிப் பட்டத் தேறல் கண்டவர்களில் ஒருவர்.
எதைத் தேடுகிறார் எதற்குத் தேடுகிறார் என்று ஏன் அவர் சொல்ல வேண்டும்..?
நம்மையும் தேடச் சொல்லத்தான்.
தேடுவோமா?
No comments:
Post a Comment