Tuesday, July 22, 2014

தேடல்!




தேடலின் தொடக்கமும்
தேடலின் எரிபொருளும்
தேடலின் வழித்துணையும்
தேடலின் இன்னும் அனைத்தும்
ஏக்கங்களில் இருந்தே
பிறப்பிக்கப்படுகின்றன..

ஏக்கத்திலிருந்து பல பாதைகள் தொடங்குகின்றன..
ஒவ்வொரு பாதையின் முடிவிலும்
இறைவன் காத்திருக்கிறான்..

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

ஏக்கத்தின் தாக்கம் தீருதல்
தேடல்களில் மாத்திரமே


தேடலுக்காகத்தான்
நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.

தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.

வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..

யதார்த்தங்கள் என்பவைகள்
எதோ அர்த்தங்கள் ஆகும்.

அந்த அர்த்தங்கள் புரியாமல்
இருக்கும் வரை
அவை யதார்த்தங்களாகவே
வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சித்தமும் யதார்த்தமும்
என்றுமே
யுத்தம் கொண்டதில்லை..

சித்தம்தான் யதார்த்தங்களாக
வேடம் பூண்டு வந்து கொண்டிருக்கிறது..

கழித்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுதல்

கூட்டிக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

பெருக்கிக் கொண்டே போய்
கட்வுளைத் தேடுவது

வகுத்துக் கொண்டே போய்
கடவுளைத் தேடுவது

எல்லாம் தெரிந்துதான்
பயணம் தொடங்க வேண்டும்
என்பது இல்லை.
இது இலக்கறியாப் பயணம்
பாதையிலே
பயணத்தை அறிந்து கொள்கிற
விசித்திரப் பயணம்

எவ்வழியில் சென்றாலும்
பூஜ்யமாகவும்
முடிவிலியாகவும்
எல்லாப் பக்கங்களிலும்
இறைவன் இருக்கிறான்
காத்துக் கொண்டு!!!

No comments:

Post a Comment