தமிழிலே உன், உந்தன் இரண்டிற்கும் என்ன வித்தியாசம்.
உன் என்று சொல்லும்போது சாதாரணமாக இது உன்னுடையது என்று நாம் மட்டுமே சொல்கிறோம். உந்தன் - உன் - தன் என்று சொல்லும்பொழுது நீ என்னுடைய என்று நினைக்கிற உன்னுடைய பொருள் என்று அர்த்தப்படும்.
எற்றைக்கும் - என்றும், ஏழேழ் பிறவிக்கும்.
இனிப்பிறவாமை வேண்டும் என்பதே பலரின் வேண்டுதலாய் இருக்கும்.
சிலர்
இனிப்பிறவாமை வேண்டும் அப்படிப் பிறந்தாலும் உன்னை மறவாமை வேண்டும் என வேண்டுவர்.
ஆனால் ஆண்டாளுக்கு அந்தச் சந்தேகமெல்லாம் இல்லை. உறுதியாகச் சொல்கிறாள்.
எத்தனை பிறவிகள் ஆனாலும் எத்தனைக் காலங்கள் ஆனாலும் நாங்களும் உன்னை மறக்க
மாட்டோம். நீயும் எங்களை மறக்க மாட்டாய் என்பதைத் தான் உந்தன் என்ற ஒரு
வார்த்தையில் சொல்லி விடுகிறார். தன்மேலும் நம்பிக்கை.. தன் ஆண்டவன் மீதும்
நம்பிக்கை, இரண்டையும் ஒன்றாக்கி ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்.
நாங்கள் உங்களுக்கு உற்றவர்கள், அதாவது சாதாரண உறவினர் அல்ல, பொருத்தமான,
உங்களுக்காகவே உள்ள உறவினர்கள்.. உங்களுக்கேற்ற உறவாக இருப்போம்..
யாரை நோக்கி இதைப் பாடுகிறாரோ அவரின் கல்யாண குணங்களுக்கு ஏற்றவராக
இருப்போம் என்றல்லவா பொருள். காக்கும் கடவுள், அரிதுயில் கொண்டவன் அவன்.
அவனுக்கு ஏற்றவராய் இருக்க வேண்டுமானால் காக்கும் எண்ணம் தனக்குள் இருக்க
வேண்டும் அல்லவா.
அதனால் அல்லவா தோழியரையும் உடனெழுப்பி கண்ணனை எழுப்பப் போகிறாள் ஆண்டாள்.
எனக்கு மட்டுமே இறைவன் என்ற சுயநலம் அவளிடம் இல்லை. பாவை நோம்பின்
மகிமையைத் தோழியற்குக் கூறுகிறாள். அனைவரையும் சேர்த்துக் கொள்கிறாள்.
அரவணைத்துச் செல்கிறாள். அப்படி இருப்பதால்தானோ என்னவோ அவருக்கு உற்றவள்
தான் என்று உறுதியாக அவள் சொல்கிறாள் நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
பெருமாளின் மனைவியான திருவோ பாரபட்சம் பார்க்கிறாள். சிலருக்கு
அருளுகிறாள், சிலரை அரட்டுகிறாள், சிலருக்கு எட்டவே மாட்டேன் என்கிறாள்.
ஆனால் ஆண்டாள் அப்படிப் பாரபட்சம் காட்டுவதில்லை, அதனாலேயே தானே காக்கும்
கடவுளுக்கு உற்றவள் என அவள் எண்ணுவதில் தவறேதும் உளதோ?
ஆக ஏழேழு பிறவி எடுத்தாலும் இப்படி எல்லோரையும் அரவணைத்து உமக்கு உற்றவளாய்
இருப்பேன் என்கிறார் ஆண்டாள். அப்பிறவிகளில் என்ன செய்வாளாம். அவருக்கு
ஆட்செய்வாளாம்.
ஆட்கொள்ளுதல் தெரியும். ஒன்றைத் தன் ஆளுமையின் கீழ் கொண்டுவருதல். ஆட்செய்தல் என்றால்?
அவனுக்கு பலரை தாமே வழிய வந்து ஆட்படுத்திக் கொள்ளச் செய்யுதல். அவன்
புகழைப் பாடிப் பரப்பி, அவனை அறியாதவரையும் அவனை எண்ண வைத்து வியக்க வைத்து
தம்மை அவனிடம் ஆட்படுத்திக் கொள்ளச் செய்வது..
தனக்காக மட்டும் பாராமல் இன்னும் பலருக்கும் அவன் அனுக்கிரகம் பெற்றுத்
தருவேன் பல பிறவிகள் எடுத்துழன்றும் இப்படிப் பலருக்கு நற்கதிப் பெற்றுத்
தருவேன் என்று சொல்லும் ஆண்டாள் அவனுக்கு உற்றவள்தானே..
பக்தியில் பலவகை உண்டு.. ஆண்டவனை எப்படி வேண்டுமானாலும் காணலாம். ஆனால்
அதில் ஒரு முழுமை வேண்டும். அம்முழுமையைப் பெற்ற ஒரு சிலரில் ஆண்டாளும்
ஒருத்தி..
முழுமையான அர்ப்பணிப்பு. முழுமையான நம்பிக்கை... இரண்டையும் காட்டும் இந்த வரிகள்.
ஆண்டாளை தரிசிக்கும் ஆவலைத் தூண்டிய இரு வரிகள்...
திருமகளைக் கவலை கொள்ள வைக்கலாம். அப்படியாவது அவள் பரந்தாமனுக்கு உரியவளாய் காக்கும் கடவுளின் உற்ற துணையாய் வாழ முயற்சிக்கட்டும்
No comments:
Post a Comment