Thursday, July 31, 2014

தாயிடமே அம்மா விளையாட்டு...!!




கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலஎனக்
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே



தாயுமானவர்



இறைவனை தாய்க்கு மேலாக கருதி உருகிய பக்தர்கள் பலர் உண்டு


" தாயிற் பெரிதும் தயாவுடைய தம் பெருமான் "

" நாயிற் கடையாய் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே "..
.
" பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து " .....


தாயுமானவர் அதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார்..

அவர் வெறும் தாய் எனப் பாடவில்லை.

சேதா என்கிறார். அஃறிணையோ என்ற அசூயை இன்றி இருக்கும் ஒரே பட்டம் அம்மா.

அதிலும் இந்த ஆ எப்படிப் பட்ட ஆ? சேதா. சிறப்பான ஆ.

ஒரு மனிதத் தாய் தன் பிள்ளைக்குக் கொடுக்க ஊறும் அன்புப் பாலை அவ்வளவு எளிதில் இன்னொரு குழந்தையிடம் பகிர்ந்து கொள்ள மாட்டாள்.

ஆனால் இந்த சிறந்த தாயான பசு இருக்கிறதே, தன் மக்வுக்கும் கொடுத்து மேலும் மேலும் சுரந்து பலப்பல வளர்ந்த வளரும் குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறது.

சிவன் தன் பக்தனுக்கு மட்டுமல்ல.. பசி கொண்ட அனைவருக்குமே ஞானப்பால் அருளுகிறான். என் பிள்ளை உன் பிள்ளை என்று பேதமே பார்ப்பதில்லை.

மற்ற அடியாளர்களுக்குத் தோன்றாத இந்த உயர் பொருள் தாயுமானவனுக்கு எப்படித் தோன்றியது.. தாயும் ஆனவனை அடிபணிபவனுக்கு தாய்மையின் அருமை புரியாமல் இருக்குமா?

குழந்தைகளில் மூன்று வகை உண்டு..

1. சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்து ஆட்டம் காட்டி உண்பவர்கள்.

2. அம்மா பசிக்குது என்று தாயிடம் கேட்டு விரும்பி உண்ணுபவர்கள்.

3. அம்மா எல்லோருக்கும் கொடுத்தாதான் நான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்கள். அக்காவுக்கு ஒரு கவளம். அண்ணனுக்கு ஒரு கவளம், அத்தைக்கு ஒரு கவளம் என எல்லோருக்கும் கொடுத்து அம்மா ஊட்டுவாள்

தாயுமானவனின் அடியார் தாயும் ஆவதில் வியப்பு இருக்க முடியுமா? பசுவுக்கு கன்று பால் சுரந்தால் அது இன்னும் பல மனிதருக்கும் போய்ச் சேருமல்லவா? அப்படிப் பட்டக் கருணையைக் கொடு.. பசித்தோர் எல்லோருக்கும் பால் கொடு என்று உள்ளார வேண்டுவதில் அர்த்தமில்லாமல் போகுமா?



தாயிடமே அம்மா விளையாட்டு...

No comments:

Post a Comment