இறைவன் ஆடும்
கண்ணா மூச்சி ஆட்டத்தில்
கண்கள் கட்டப்பட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன் அவனை
கையோ காலோ
சட்டையின் நுனியோ
எதையாவது ஒன்றைத் தொட்டு
அவனை அவுட் ஆக்க (வெளிப்படுத்த)
தேடிக் கொண்டிருக்கிறேன்..
ஐம்புலனும் கூர்மையாய்
அவனையே நோக்கி
ஆறாம் புலனில்
தேடிக் கொண்டிருக்கின்றன..
தேடிக் கொண்டிருப்பது தெரியும் மட்டும்
ஆட்டம் தெரிந்து கொண்டே இருந்தது..
சோர்ந்து போகும் பொழுது
அவன் ஓசையோ,
மணமோ அல்லது
கடந்து போகையில் உண்டாகும்
காற்றின் ஸ்பரிசமோ
அவன் அருகில்தான் இருக்கிறான்
என்பதை உணர்த்தி
தேடலைத் தொடரச் சொல்லும்..
அந்த ஒரு துளிக் கணத்தில்
மனம் சோர்ந்து உட்கார்ந்த பொழுது
மூச்சிழுத்தேன்.. விட்டேன்
அவனின் மணம் சுவாசிக்கப் பட்டது
எதோ ஒரு புலனின்
பொத்தான் அழுத்தப்பட்டு
எங்கெங்கும் பிரகாசம் பரவியது..
மூச்சினால் அவனைத் தொட்டு விட்டேனென
மெல்லப் புரியத் தொடங்கியது..
எங்கும் இருப்பவனைத் தொட
எங்கேயும் செல்ல வேண்டாமே எனப்
புரியத் தொடங்கியது..
புலன்களைக் கூராக்கினேன்
சத்தியமா இது சாத்தியமா
கேள்விவியும் கேட்டது..
பதில் தேட அலையத் தோன்றவில்லை.
ஏனென்றால் புரிய ஆரம்பித்தது.
இரண்டும் அவனே.. !!
No comments:
Post a Comment