எத்திக்கும் தானானவன் எப்படி முதலில் என் இதயமாகாமல் போனான் என்று முதலில் கேள்வி எழுந்து விடுகிறது..
என் இதயத்தில் தான் ஊறி எத்திக்கும் தானாகி என்று வரிசைப் படுத்தாமல்
எத்திக்கும் தானாகி என்று வரிசைப்படுத்திய அழகில் புதைந்து இருக்கிறது
ஞானம் எப்படி விளையுமென்று..
இறைவனைத் தேடுதல் புறத்தே தொடங்கி அகத்தே முடிகிறது..
தேடலுக்காகத்தான்
நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்.
தேடல்கள் உள்ளேயும் இருக்கலாம்
தேடல்கள் வெளியேயும் இருக்கலாம்.
வெளியே தேடும் பொழுது என்ன என்ன காண்கிறோமோ
அதையே உள்ளே தேடும் பொழுதும் காண்கிறோம்
உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதே ஒன்று
நம்மில் நாமாக இருப்பதை அறியும் வரை
ஏக்கத்தின் தாக்கமும் தேடலும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்..
சிவனே உன் பண்புகளை எங்கெங்கெல்லாம் பதித்து வைத்திருக்கிறாய்..
உனை மறக்கும் பாவத்தில் இருந்து எனைத் தடுத்தாட்கொள்ள...!!!
இவை சொல்லும் சேதிகளும் இக்கண்ணி சொல்லும் சேதியும் ஒன்றுதானோ?
இறைப்பண்புகளை ஒவ்வொன்றாய் புறத்தே அறியத் தொடங்குகிறோம். போகப் போக எங்கும் இறைவன் எங்கும் இறைவன்..
மெல்ல இதயத்தில் ஆனந்தம் சுரக்கத் தொடங்குகிறது.. பெருகுகிறது இதயம் நிறைகிறது.
நம்முள் இறைவன் வியாபித்து இருப்பதை அப்பொழுது மாத்திரமே கண்டு கொள்ள முடிகிறது..
இறை அனுபவம் எப்படி உண்டாகிறது என்பதை இங்கே அனுபவித்துப் பாடி இருக்கிறார் தாயுமானவர்.
இறைவன் கல்லில் இருக்கிறார் என்கிறது ஆரம்ப வழிபாட்டு முறைகள்.
மெல்ல மெல்ல இறைத்தன்மை எங்கிங்கு இருக்கிறது என்ற ஞானம் உண்டாகிறது.
அதன் பின் எங்கெங்கு காணினும் இறைவனடா என்று தோன்றுகிறது..
இதயத்தில் ஆனந்தம் பொங்கத் தொடங்குகிறது. வெறுப்பு, கோபம், கேலி, இழிவு போன்ற பல குணங்கள் ஒழியத்தொடங்குகின்றன.
தேனில் குழைத்தால் எல்லாச் சுவையும் மறைந்து தேனின் சுவை மட்டுமே மேலோங்கி நிற்பது போல இறை ஆனந்தம் நெஞ்சை நிறைக்க ஆரம்பிக்கிறது.
அத்தனைக் குணங்களும் இறையானந்தத் தேன்சுவை பெற ஆரம்பித்து விடுகின்றன.
உண்மை ஞானம் அறிந்து கொள்ளும் சூத்திரமும் இதுதான். போலிகளை அடையாளம் காணும் வழியும் இதுதான்.
குணங்களைக் காண்பதே இறைவனைக் காண முதல் படியாம். (குணங்கள் என்பவை நற்பண்புகள் என்று பொருள்படும்..)
குறைகளை மறந்துக் குணங்களைக் காணக்காண இறைவன் மெல்ல மெல்ல தன்னை
வெளிப்படுத்திக் கொள்கிறான். குறைகளிலும் குணங்கள் காணும் பக்குவம்
கிடைக்கிறது.
இதனால் மனம் ஆனந்த நிலைக்குச் செல்கிறது. எல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம்
தோன்றுகிறது. அப்பக்குவம் இறைவனை நம் உள்ளத்திலே வெளிப்படுத்துகிறது..
தியானத்திற்கு மிக உகந்தக் கண்ணி இது. இப்போதைக்கு எனக்கும் தேவையான தியானம் இது.!!!
No comments:
Post a Comment