Monday, July 21, 2014

தோண்டர் விளையாட்டு





உண்டு உடுத்துப் பூண்டு இங்கு உலகத்தார் போல் திரியும்
தொண்டர் விளையாட்டே சுகம் காண் பராபரமே



தாயுமானவர்‬


தொண்டர்களில் தொண்டன் சிறுதொண்டன். அவனுக்கும் தொண்டன் சிவ தொண்டன்.

தொண்டர் என்னும் பொருள் அடியவர்களையும் குறிக்கும். அடி,  அவர்களையும் குறிக்கும்.

தொண்டர் விளையாட்டு என்பதை திருவிளையாடல் எனக் கொள்ளலாம். பிள்ளைக் கறி உண்ண வந்தவன், பிட்டுண்ண வந்தவன்.. மாங்கனி உண்ண வந்தவன், கஜாசுர தோலை உடுத்தியவன், தாருகாவனப் புலித்தோல் உடுத்தியவன். விறகு வெட்டியாக, மீனவனாக, புலவனாக இப்படிப் பல வேடங்கள் பூண்டவன்.. அவனின் திருவிளையாடல்கள் அத்தனையும் தொண்டருடனே இருந்தன. சாதாரண மனிதர்கள் போல தொண்டருடனே உலவி விளையாடுவான். அந்த விளையாட்டின் சுகமே தனி.

--------------------------------------------------------------------------------------------------

இதையே அடியவர்களாக எடுத்துக் கொள்ளும் பொழுது..

உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம் என்பது தமிழனின் எளிய வாழ்க்கை. அடியவர்களுக்கு உண்ணக் கிடைப்பதெல்லாம் சிவனின் அருட்பிரசாதம். மோட்ச வாழ்க்கையிலோ பசியில்லையே...

அவர்கள் உடுத்துவது அவனின் அன்பு, கருணையை.. ஆன்மாவுக்கு உடையேது?

பூணுவது அத்தனையுமே சிவச் சின்னங்கள். ஆக அவன் நினைவாக எதையும் செய்யலாம் சிவனடியவர்கள். ஆனால் மோட்சமடைந்த வாழ்வில் இவையெல்லாமே கிடைக்காமல் போகலாம்.

காரணம் இருக்கிறது, பற்பல தேவர்கள், கணங்கள், கர்வம் தலைக்கேறி சாபம் பெற்று உழன்றிருக்கிறார்கள்,

ஆனால் சிவனடியவர்களுக்கு மட்டுமே, தாயின் கனிவுடன் கூட அந்தச் செல்ல அதட்டல் கிடைக்கும். ஆகவே மோட்சம் பெறுவதை விட தொண்டராக வாழ்வதையே அடியவர்கள் விரும்புவார்கள் என்கிறாரோ தாயுமானவர்...

--------------------------------------------------------------------------------------------------

ஆனால் தொண்டர் விளையாட்டு என்று அவர் சொல்லும் பொழுது அதிலும் ஒரு விளையாட்டு இருக்குமோ என்றுத் தோன்றுகிறது..

ஏன் தொண்டர்களாக சிவனே பிறந்து வந்து விளையாட்டை நடத்தி மகிழ்வித்திருக்கக் கூடாது. தாயும் ஆனவனுக்கு சேவகன் ஆவதா கஷ்டம்?

அவன் உலகத்தார் போலவே வேடம் பூணுகிறான்,
அவர்களைப் போலவே உண்ணுகிறான், உடுக்கிறான்.
தொண்டர்களாக, நாவுக்கரசனாய், சம்பந்தனாய், சுந்தரனாய், மாணிக்க வாசகனாய், இன்னும் பலப் பலத் தொண்டர்களாக நம்மிடையே நடமாடுகிறான்.

அந்த விளையாட்டுகள் இருக்கிறதே அதன் சுகம் தனி.. இப்படியும் இருக்கலாமோ?


வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.


ஆதி என்னும் சொல்லுக்கு, அனைத்திற்கும் ஆதியான இறைவனை பொருளாய் கொள்வதினால் கடைந்து திரட்டிய வெண்ணெய் கிடைக்கப் பெறுகிறது.

வெண்டா மரைவெட்கிச் செந்தாமரை மலர

சம்பந்தன் இறை மயங்கிக் கைத்தாளமிட வெண்தாமரைக் கைகள் சிவந்து செந்தாமரையாக ( கண்டு பொற்றாளம் தந்தவர்..)

உண்டார் அமரர்தேன்

நாவுக்கரசனின் பாடல்களில் தேனருந்தி அமர்ந்தவர்..( வேதங்களினால் பூட்டப்பட்ட கதவை திறக்கச் சொல்லி அப்பர் பாட, அதன் சுவையினில் மகிழ்ந்து உண்டு அமர்ந்திருந்த இறைவன்)

உண்ணார் அமரரே

சுந்தரன் தமிழை இழக்க மண(ன)மின்றி தடுத்தாட்கொண்டவர் (அதுவரை சுந்தரன் பாடாதிருக்க, அவன் தமிழுண்ணா பெருமான், ஓடி வந்து பித்தா என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்து தமிழமுதுண்டாரே )

இவையெல்லாம் எதற்கு..?

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அடியார்களின் இதழ்கள் தமிழ் பாடி இனிமை தருவதற்கன்றோ, வண்டார் தேன்சுவை தமிழ் அவர் வாய்மொழி பொழிய

கண்டாரா திச்செந் தமிழ்

ஆதிசிவன் கண்டார் (படைத்தார்) செந்தமிழை!!!

தமிழ்ப் பாடல் சுவைத்துணர்ந்து மகிழும் ஆதிசிவன். தமிழினின் இனிமை உணர்ந்து தானே புலவன் வடிவம் தரித்து தமிழ் பாடி, புலவர்களுடன் விளையாடி ருசித்த தமிழ்...

தமிழில் கலந்திருக்கும் இனிமையே இறைவனல்லவா!!! அத்தமிழில் மட்டுமே அல்லவா இப்படி முப்பொருள் கொண்டும் பாடவியலும்?
சித்தம் தடுமாறி முப்பொருள் கண்டாலும் முப்புரம் எரித்தவன் நினைவுகள் இப்புறம் மூன்றையும் எரிப்பானோ?

அங்கும் புன்னகைதான். இங்கும் புன்னகைதான்...

இது தொண்டர் விளையாட்டு..

தொண்டர்கள் அவனிடம் விளையாடும் விளையாட்டு...

தொண்டர்களிடம் அவன் விளையாடும் விளையாட்டு..

தொண்டராகவே அவன் ஆடும் விளையாட்டு

அவற்றை உண்டு, உடுத்தி, அவற்றில் பொருளாய் அவனே உருவம் பூண்டு வருகிறான்.. உலகு அத்தார் போலவே நடமாடுகிறான்.. அத்தனே அத்தானாக இருப்பதும் என்ன பொருத்தம்.

தொண்டருக்கே தொண்டு செய்யும் மெய்ப்பொருள் நாயனார், சிறுதொண்டன், காரைக்கால் அம்மையார் இப்படிப் பலர் இருக்க இஞ்ஞானமும் ஒரு காரணமோ?

அதுதான் சிவஞானமோ இல்லை அவர்கள் ஞான சிவமோ?

இந்த விளையாட்டில் வரும் அந்தச் சுகமேத் தனிதானே!!!
என்பது சித்த உட்பொருள்.

No comments:

Post a Comment