Saturday, June 12, 2010

எங்க ஊரு ஸ்நோ வைட் - மரகதவல்லி. -பாகம் 2



தள்ளாத பாட்டியாக வடிவம் எடுத்த பூதம் மெல்ல குச்சு வீட்டுக்குப் போனது. வேப்பிலை கட்டி இருந்ததால குச்சு வீட்டை நெருங்க முடியலை..

வெளிய இருந்துகிட்டே, எனக்கு தாகமா இருக்கே குடிக்கத் தண்ணி வேணுமே. என் உயிர் போயிடும் போல இருக்கே அப்படின்னு பூதப் பாட்டி புலம்ப ஆரம்பிச்சா,

மரகதவல்லி, ஜன்னலைத் திறந்து பார்த்தா. பாட்டியைப் பார்க்க பாவமா இருந்திச்சு. ஒரு சொம்புல தண்ணியை மொண்டு ஜன்னலோரம் வச்சு வந்து எடுத்துக்கப் பாட்டி என்று சொன்னா.

ஆனா பூதப்பாட்டியால தான் வீட்டை நெருங்க முடியலையே.. மரகதவல்லிக்கு புரிஞ்சு போச்சு.. இது பூதம்தான் என்று..

மரகதவல்லி கதவு ஜன்னல் எல்லாத்தையும் இறுக மூடி வச்சுட்டா.

பூதம் பொறுத்து பொறுத்துப் பார்த்தது,. மரகதவல்லி ஏமாறுகிற மாதிரி தெரியலை. பூதம் என்ன பண்ணிச்சு, தன்னோட கோரைப் பல் ஒண்ணை குச்சு வீட்டு வாசல்ல நட்டு வச்சுட்டு போயிடுச்சி.

சாயங்காலம் கிளிகள் வந்து கதவைத் திறக்கச் சொன்னப்ப தான் மரகதவல்லி கதவைத் திறந்தா.. கிளிகள் உள்ளே வந்ததும் நடந்ததை எல்லாம் சொன்னா. ஆஹா அது பூதம் தான். நல்ல காரியம் செஞ்ச.. இது மாதிரியே எப்பவும் பத்திரமா இரு அப்படின்னு சொல்லி கிளிகள் ஆறுதல் சொல்லிச்சாம்.

அடுத்த நாள் விடியற்காலையில மரகதவல்லி வீட்டு வாசல் பெருக்கி தெளிச்சு கோலம் போட வந்தா..

அப்போ அந்த விஷப் பல்லு நறுக்குன்னு காலில் குத்திருச்சி..

பூதத்தோட பல்லு குத்தினதும் மரகதவல்லி உடம்பெல்லாம் விஷம் ஏறிப் போச்சு. மரகதவல்லி உடம்பு நீலமாப் போக அப்படியே கீழ விழுந்து இறந்துட்டா.

கிளிகளுக்கு ஒண்ணுமே புரியலை. இறக்கைகளை படபடன்னு அடிச்சுகிட்டு அழுதிச்சுங்க. என்ன பண்ணியும் மரகதவல்லி அசையவே இல்லையே.

சாயங்காலம் வரை அழுத கிளிகள் ஒரு பெட்டியைத் தயார் பண்ணி, அதில் பட்டுமெத்தை தலையணை அப்புறம் தங்கள் கையில் இருந்த நகை நட்டு எல்லாம் மரகத வல்லிக்குப் போட்டு பெட்டியைத் தூக்கிகிட்டு கொண்டு போய் ஆற்றில் விட்டன.

ஆற்றில் பெட்டி போய்கிட்டே இருந்தது. பிரிய முடியாம கிளிகளும் கூடவே பறந்து போச்சு..


தொடரும்


.

No comments:

Post a Comment