Monday, June 7, 2010

தாமரை பதில்கள் : 125

கேள்வி எண் 125:


கேட்டவர் :சுகந்தப்ரீதன்


கடையேழு வள்ளல்களில் பாரி முல்லைக்கு தேர்கொடுத்தான்; அதியமான் ஔவைக்கு கனி கொடுத்தான்; பேகன் மயிலுக்கு போர்வை தந்தான்; மற்றபடி ஓரி, காரி, நள்ளி, ஆய் அண்டிரன் ஆகிய நால்வரும் யாருக்கு என்ன தந்து வள்ளல் பட்டத்தை வாங்குனாங்க...??




ஒரு சின்னக் கதை இந்தச் சிறப்புகளைச் சொல்ல......


இந்த ஊரில் எந்தக் குறையும் இல்லை. வேண்டியது எல்லாம் கிடைக்கிறது. அஞ்சியத்தை மகள் நாகையாரும் அண்டர் மகன் குறுவழுதியாரும் இந்த ஊரில் தான் வாழ்ந்து வருகிறார்கள். பாணர் குலத்தில் பிறந்த பாணரும் விறலியும் ஆனாலும் இது வரை எந்த மன்னரிடமும் சென்று பாடல் பாடி பரிசில் பெறவில்லை. இசையாலும் பாடல்களாலும் ஊராரை மகிழ்வித்து அவர்கள் தரும் பொருளைக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். சில நாட்களாக நாகையாருக்கு ஒரு பெரிய பொன்னால் ஆன கழுத்தணி வேண்டும் என்று ஆசை. ஊர்ப் பெரியவரின் மகள் அப்படி ஒரு நகையை அணிந்து ஊர்த்திருவிழாவிற்கு வந்திருந்தாள். அன்று முதல் அந்த நகை பல இரவுகள் நாகையாரின் கனவில் வந்து அவளைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. எந்த மன்னரிடம் சென்று கேட்டால் அப்படிப்பட்ட பரிசில் கிடைக்கும் என்று தெரியவில்லை. குறுவழுதியோ எந்த மன்னரைத் தேடியும் செல்லும் மனநிலையில் இல்லை. அதனால் தனக்குள்ளேயே அந்த ஆசையை வைத்துக் கொண்டு காலத்தைத் தள்ளி வருகிறாள் நாகையார். 

"அன்பர்களே. அன்பர்களே"

அழைக்கும் குரலைக் கேட்டு நாகையார் வெளியே வந்து பார்த்தாள். 

"ஐயா. தாங்கள் யார்? என்ன வேண்டும்?"

"அம்மையே. நான் ஒரு தமிழ்ப்புலவன். மதுரையிலிருந்து பாரி வேளின் மாளிகைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். என் பெயர் கபிலன். இன்று பகற்பொழுதை இங்கே கழிக்கலாமா என்று கேட்கவே அழைத்தேன்"

"ஐயா. தாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்குப் பெரும்பெருமை. இந்தப் பகற்பொழுதிற்கு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். உணவு அருந்திவிட்டீர்களா?"

"இல்லை அம்மா. இனிமேல் தான்"

"தேனும் தினைமாவும் இருக்கின்றன ஐயா. உண்கிறீர்களா?"

"ஆகட்டும் தாயே"

நாகையார் கொண்டு வந்து கொடுத்த தேனையும் தினைமாவையும் வயிறார உண்டு விட்டு நிழலாக இருக்கும் ஒரு திண்ணைக்கு வந்து அமர்ந்தார் கபிலர். சரியாக அதே நேரத்தில் . குறுவழுதியார் திரும்பி வந்தார்.

"ஐயா. இது என் வீடு தான். தங்களைப் பார்த்தால் புலவர் போல் தெரிகிறது. உணவு உண்டீர்களா?"

"ஆம் ஐயா. அம்மை உணவு தந்தாள். சுவையான உணவை இப்போது தான் உண்டு முடித்தேன். சற்று இளைப்பாறவே இங்கு அமர்ந்திருக்கிறேன்"

"மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் எழுதித் தரும் பாடல்களைப் பண்ணில் இசைத்துப் பாடுபவர்கள் நாங்கள்."

"ஓ. பாணரோ?"

"ஆம் ஐயா. என் மனைவியும் நன்கு பண்ணிசைத்துப் பாடுவாள்"

"அம்மையின் குரலும் நன்கு இனிமையாக இருக்கிறது"

"ஆம் ஐயா. எங்கள் வாழ்க்கைக்கு அடிப்படையான புலவர் பெருமக்கள் எங்கள் வீட்டிற்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்"

ஒரு செம்பில் குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து கபிலர் அருகில் வைத்துவிட்டு சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த தன் கணவர் அருகில் அமர்ந்தாள் நாகையார்.

"பாணரே. நீங்கள் பரிசில் வேண்டி எந்த ஊர்களுக்குச் சென்றுள்ளீர்கள்? அந்த ஊர்களின் சிறப்புகளைச் சொல்லுங்கள்."

"புலவர் பெருமானே. பரிசில் வேண்டிப் பலவூர் செல்லும் தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. இவ்வூர்ப் பெருமக்களே எங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். அதனால் நாங்கள் இதுவரை இந்த ஊரை விட்டு வேறு ஊர்களுக்குப் பரிசில் வேண்டிச் சென்றதில்லை"

"வியப்பிலும் வியப்பு பாணரே. பாணர்களும் புலவர்களும் பரிசில்களை வேண்டிப் புரவலர்களை நோக்கிச் செல்லுதல் தானே முறை. நம் மன்னர் பாரியை நோக்கிப் பல திசைகளில் இருந்தும் பரிசிலர்கள் வந்து கொண்டே இருக்க இந்த நாட்டில் வாழும் நீங்கள் அவனிடம் கூடவா பரிசில் வேண்டிப் பெற்றதில்லை?"

"ஐயா. அப்படியே பரிசில் வேண்டிச் செல்ல வேண்டும் என்றாலும் யார் யாரிடம் சென்றால் பரிசில் கிடைக்கும் என்று தெரியாது ஐயா. தங்களைப் போன்ற புலவர்கள் சொன்னால் அதனைக் கேட்டு அதன் படி நடப்போம்"

"அம்மையே. நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் எழுதிய சிறுபாணாற்றுப்படையில் வள்ளல்கள் ஏழு பேரைப் பற்றி சொல்லியிருக்கிறார். பாணர்களை வள்ளல்களிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த சிறுபாணாற்றுப்படையின் நோக்கம். அந்த நூலில் இருக்கும் செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். நத்தத்தனார் சொன்ன ஏழு வள்ளல்கள் பாரி, காரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி, ஓரி என்போர். 

சுரும்புகள் (வண்டுகள்) விரும்பி உண்ணும் படி தேனைத் துளிக்கும் பூக்களை உடைய மரங்கள் நிறைந்த காட்டு வழியில் சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடிக்கு அது தழுவி வளர்ந்து தழைப்பதற்குப் பெரிய அழகிய தேரினைக் கொடுத்த எல்லாத் திசைகளிலும் வெள்ளிய அருவிகள் விழும் பறம்பு மலைக்கு அதிபதியான வள்ளல் பாரி. 

சுரும்புண நறுவீ யுறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பிற் கோமான் பாரி

வாலாலேயே உலகத்தையெல்லாம் மருளச் செய்யும் புரவியுடைய, அன்புடன் கூடிய நல்ல சொற்களை இரவலர்களுக்குத் தந்த, நெருப்பு திகழ்ந்து விளங்கும் அச்சம் தரும் நெடிய வேலினையுடைய வீரக்கழலினையும் தொடியையும் அணிந்த நீண்ட கைகளையுடைய காரி

வால் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல் மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்
கழல் தொடித் தடக்கை காரி

மழை தவறாமல் பெய்வதால் உண்டான வளத்தை உடைய மலைப்பகுதிக் காட்டிடையே திரிந்து கொண்டிருந்த மயில் கூவியதை அது குளிரால் நடுங்கிக் கூவியது என்று கருதி அருள் மிகுதியால் போர்வையைக் கொடுத்த, அருமையான வலிமையையுடைய அழகிய வடிவினையுடைய ஆவியர் குடியில் பிறந்த பெருமகன், பெரிய மலைநாட்டையுடைய பேகன்

வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்

குளிர்ச்சி தரும் வகையில் கருநிற நாகம் கொடுத்த உடையை மனம் உவந்து ஆல மரத்தின் கீழ் அமர்ந்த இறைவற்குத் தந்த, வில்லைத் தாங்கிச் சந்தனம் பூசித் திகழும் வலிமையனா தோள்களைக் கொண்ட, அன்புடைய நன்மொழிகளை உடைய ஆய். 

நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்க
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவன் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன்மொழி ஆய்

பெருமையுடைய மலையில் கமழும் பூக்களையுடைய சாரலில் உள்ள நெல்லி மரத்தில் விளைந்த நீண்ட வாழ்நாளைத் தரும் அருமையான நெல்லிக்கனியை தான் உண்ணாது ஒளவைக்கு ஈந்த, சினம், நெருப்பு, ஒளி இவை மூன்றும் திகழும் நெடிய வேலினை உடைய, பெரும் அரவத்தை உண்டாக்கும் கடலினைப் போன்ற படையை உடைய அதியமான்

மால்வரைக் கமழ் பூஞ்சாரல் கவினிய நெல்லி 
அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல்
அரவம் கடல் தானை அதிகன்

தம் மனத்தில் உள்ளதை மறைக்காது கூறி நட்பு செய்தவர்கள் மகிழும் படி அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான பொருட்களை நாள் தோறும் தவறாது கொடுத்த, போர் முனையில் வெற்றி பெற்று விளங்கும் நீண்ட கைகளை உடைய, மழை தவறாது பொழியும் உயர்ச்சியால் காற்று செல்லும் இடம் வேறின்றித் தங்கும் பெரிய சிகரங்களை உடைய மலைநாட்டையுடைய நள்ளி 

கரவாது நட்டோர் உவப்ப நடை பரிகாரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு
நளி மலை நாடன் நள்ளி

தேன் நிரம்பிய மணம் கமழும் பூக்களை உடைய நாக மரங்கள் நிரம்பிய நல்ல நிலத்தை கோடியர்க்குத் தந்த, கரிய நிறக் குதிரையில் வலம் வரும் ஓரி

நளிசினை நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த 
ஓரிக் குதிரை ஓரி

இந்த ஏழு வள்ளல்களும் வருகின்ற பரிசிலர்களுக்கு எல்லாம் வேண்டியதெல்லாம் வேண்டிய அளவிற்குத் தருகிறார்கள். நீங்களும் இவர்களை நோக்கிச் சென்றால் வேண்டியதெல்லாம் பெறலாம்"

"ஐயா. ஏழு வள்ளல்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி. எனக்குப் பல நாட்களாக ஒரு பொன்னாலான நீண்ட கழுத்தணியை அடைய வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுவதற்கு யாரிடம் சென்று இரக்கலாம்?"

"என்ன கேள்வி இது அம்மையே. நம் மன்னவன் பாரியிடமே சென்று பெறலாமே"


--------------------------------------------------------

சிலர் அதியமான் நெடுமான் அஞ்சியை இடையேழு வள்ளல்களில் சேர்த்து எழினி என்ற அவர் மகனை கடையேழு வள்ளல்களில் ஒருவராய்ச் சொல்லுவர். ஆனால் அதியமான் நெடுமான் அஞ்சி என்பது தான் சரி. எழினியும் வள்ளல்தான்,


முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி,

பகைவருக்கு நெருப்பு, இரவலர்க்கு இனியவன் -காரி

மயிலுக்குப் போர்வைதந்த பேகன்

குளிர்ச்சி தரும் கருநாகச் சட்டையை ஆலமரத்தடி அமர்ந்த ஐயனுக்கு அணிவித்த ஆய்..(புத்தரா இல்லை தக்ஷிணா மூர்த்தியா?)

ஔவைக்கு நெல்லிக்கனி தந்த அதியன்

ஒருமுறைச் மனம்திறந்து கேட்டாலே வாழ்க்கை முழுதுக்குமான செல்வம் தரும் நள்ளி (நல்லி சில்கஸ் அல்ல )

போதும் போதுமென்று சொன்னாலும் வாரிவழங்கும், ஒரே அம்பினால் ஐந்து விலங்குகளை அடிக்கும் திறன்கொண்ட, கேட்காமலே வழங்கும் ஓரி..





(ஈயென்றிரத்தல் இழிந்தன்று - பாடல் நினைவு இல்லாவிடில் உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பது சரியா தவறா விவாதம் படிக்கவும்)


நன்றி : 






 

No comments:

Post a Comment