Tuesday, June 8, 2010

தாமரை பதில்கள் : 126

கேள்வி எண் 126:


கேட்டவர் : விக்ரம்


கேள்வி : கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை மூன்றையும் ஒருவர் தனது வாழ்வில் பயன்படுத்துவது எப்படி? 
கணவன் - மனைவி, குழந்தை - பெற்றோர், ஆசிரியர் - மாணவர் சம்பந்தப்படுத்தி, நெடிய பதிலாக கொடுத்தால் ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்

கடமை : நமக்கு தொடர்புறும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொன்றிற்கும் இடையே இணைப்பாக இருப்பது கடமை என்ற ஒன்றாகும். இது முற்றிலும் எழுதப்பட்ட விதி இல்லை என்றாலும், நமது அறிவிற்கேற்ப சரி என்பது என்ன என்பதைப் பற்றிய அனுமானமாகும்.

உதாரணத்திற்கு காற்று - நாம், நமக்கிடையில் ஒரு தொடர்பு இருக்கிறது, காற்றை நாம் சுவாசிப்பதால் உயிர்வாழ்கிறோம். அதே சமயம் காற்றில் பல பொருட்கள் கலக்கவும் நாம் காரணமாக இருக்கிறோம். நம்முடன் இப்படித் தொடர்புடைய காற்றை அசுத்தமாக்காமல் இருக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

கணவன் - மனைவி என்றால் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவேண்டும் என முடிவெடுத்தவர்கள். அப்படி இணைந்து வாழ்வதில் இருவரும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பது இறுதி முடிவு, அந்த மகிழ்ச்சிக்கு நம்மால் ஆன பங்கை ஆற்ற வேண்டும் என்பது கடமை. மனைவியை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வது கணவனின் கடமை. கணவனை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்வது மனைவியின் கடமை.

ஆசிரியர் மாணவர் என்றால் என்ன நோக்கம்? மாணவன் அறிவுடையவனாக ஆக்கப்பட வேண்டும். ஆசிரியன் மதிப்பும், வாழும் வகையும் பெறுதல் இதன் இறுதி விளைவு, கற்பித்தலை ஆசிரியனும், மதிப்புச் சேர்த்தல் மற்றும் ஆசிரியனுக்கு தகுந்த ஊதியம் சென்று சேர்தலை மாணவனும் செய்தல் வேண்டும்.. இவை கடமை..

எந்த ஒரு காரியமானலும், இருவர் ஈடுபடும்பொழுது ஒருவரின் தேவையை மற்றவர் தீர்த்தல் என்பது கடமை என எளிதில் சொல்லலாம். இருவர் என்பதைப் பலர் என மாற்றினாலும் இதே விதி பொருந்தும்.

கண்ணியம் என்பது கடமையைச் சுற்றிய ஒன்றாகும். கண்ணியம் என்பது கடமையைச் செய்யும் பொழுது கைக்கொள்ள வேண்டிய ஒன்று, கண்ணியம் என்பது அந்தக் காரியத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாதவரையும் கருத்தில் கொண்டதாகும். அக்காரியத்தினால் யாருக்கும் இடர் அதிகம் வராமல், கேடுதல் நிகழாமல் செய்வதாகும். கண்ணியத்துடன் கடமையைச் செய்தல் என்பது எப்படி என்றால், என் மகனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க அடுத்தவர் வாய்ப்பை தட்டிப் பறிக்காமல் இருப்பதாகும். அதாவது சம்பந்தப்படாத மற்றவரின் உள்ளமும் காயமாகமல், சம்பந்தப்பட்டவரின் நோக்கமும் நிறைவேறும் வகையில் செய்வது கண்ணியத்துடன் கடமையைச் செய்தலாகும். 

மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், எல்லையைத் தாண்டிவிட்டார்கள். எல்லையைக் காக்க வேண்டிய படையின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். இப்பொழுது அந்த மீனவர்களை அப்புறப்படுத்தல், தண்டித்தல் போன்ற பல வழிவகைகள் உண்டு. ஆனால் அதன் விளைவு எத்தனை மக்களை பாதிக்கிறது. அந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது அவசியமா என்ற கேள்விகள் உண்டு. ஆக கடமை எல்லைகளில் அன்னியர் நுழையாமல் காப்பது என்றாலும், அதை எப்படிச் செய்வது? எப்படிச் செய்தால் அதனால் பலருக்கும் மனவருத்தம் வராது, கடுமையான பின் விளைவுகள் வராது என்பதையும் உணர்ந்து 

முதன் முறை பிடிபட்டால அவர்களைப் பற்றி விவரங்கள் பெற்று எச்சரித்தல், மீனவர்களுக்கு எல்லைகளை அறிந்து கொள்ள உதவுதல், அண்டை நாட்டுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வுகளை விவாதித்தல் போன்ற வழிமுறைகளைக் கையாளுதல் மூலமாக கடமையைப் பலர் மனம் புண்படாமல், செய்தல்.. இதுதான் கண்ணியம். 

கட்டுப்பாடு என்பது அளவறிதல் ஆகும். எதையும் அளவிற்கு மீறிச் செய்தல் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இது பொது உண்மை. கட்டுப்பாடு என்பது பிறர் மீது ஆதிக்கம் செய்தல் அல்லது பிறருக்கு அடங்கி நடத்தல் அல்ல. அளவறிதல் ஆகும்.

உண்ணுதல் என்பது உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்று. உண்ணுதல் மூலம் நாம் அழிப்பதை உற்பத்தி மூலம் சரிசெய்கிறோம். உண்ணும் அளவிற்கே இதைச் செய்தல் வேண்டும். குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தல் பெற்றோரின் கடமைதான். விளையாட ஒரு பொம்மை கேட்டால் 100 பொம்மையா வாங்கிக் கொடுப்பது? உடுத்த நான்கு ஆடைகளும் விழாக்காலங்கள் போன்றவற்றில் அணிய சில உயர்தர ஆடைகளுமே போதுமானது. ஆயிரக்கணக்கில் குவித்தல் என்பது நல்லது அல்லவே,

ஆக செய்யவேண்டியதை, அதிகம் பேர் மனம் புண்படாமல் தேவையான அளவிற்கு மட்டுமே செய்யவேண்டும் என்பது "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" என்பதன் விளக்கம்.

கடமை என்பது இவ்வளவுதான் என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கடமை இருக்கிறது. மன்றம் என்றால் அதனுடனான நமது கடமை உண்டு, இணையம் என்றால் அதனுடனும் கடமை ஒன்று உண்டு. 

மூச்சு விடுதலில் இருந்து, மூச்சை ஒரேடியாய் விடுதல் வரை... ஒவ்வொன்றிலும் நமக்குக் கடமை இருக்கிறது. அதை இயன்ற வரை அடுத்தவர் மனம் நோகாமல், அளவாய் செய்தல் நல்லது.


இதுதான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு - என்பதை எப்படிக் கையாளுதல் என்பதின் அடிப்படையாகும். 
 

No comments:

Post a Comment

கூலி!